Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிக ஆற்றல் கொண்ட கரோனா தடுப்பூசி எது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிக ஆற்றல் கொண்ட கரோனா தடுப்பூசி எது?

corona-vaccine  

புத்தாண்டில் வரவிருக்கும் கரோனா தடுப்பூசிகளுக்கு 50 சதவீதம் பலன் கிடைத்தாலே போதும் என்று அமெரிக்காவின் ‘எஃப்.டி.ஏ.’வும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் அறிவித்துள்ளன. ஆனால், தடுப்பாற்றலியல் வல்லுநர்கள், ‘எந்தத் தடுப்பூசி 90 சதவீதம் நோய்த் தடுப்பாற்றல் தருகிறது; கிருமியின் எல்லாத் துணை இனங்களுக்கும் (Variants) பலன் அளிக்கக்கூடியது, நீண்டகாலப் பாதுகாப்பு தருகிறது, மோசமான பக்கவிளைவுகள் ஏற்படுத்தவில்லை, பாதுகாப்பு - பராமரிப்புப் பிரச்சினைகள் இல்லை, விரைந்து தயாரிக்கக் கூடியது, விலை மலிவு என ஆய்வு முடிவுகள் உறுதி செய்கின்றனவோ, அதை அதிக ஆற்றலுள்ள தடுப்பூசியாக ஏற்றுக்கொள்ளலாம்’ என்கின்றனர்.

தற்போதைய போட்டியில் முந்திவரும் கரோனா தடுப்பூசிகளுக்கு இந்த அம்சங்கள் முழுவதுமாகப் பொருந்தவில்லை என்றாலும், முக்கியமான மூன்று விஷயங்கள் நமக்கு நற்செய்தியாக அமைந்துள்ளன. தங்கள் தடுப்பூசிகள் 90 சதவீதத்துக்கு அதிகமாக ஆற்றல் உடையவை என பைசரும் கமாலியாவும் அறிவித்துள்ளன

தனது தடுப்பூசி 100 சதவீதம் ஆற்றல் உடையது என மாடர்னா அறிவித்துள்ளது. மேலும் தங்கள் தடுப்பூசிகளுக்குப் பக்கவிளைவுகள் இல்லை என அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இங்கிலாந்து அரசு பைசர் தடுப்பூசிக்கு ‘அவசரகாலப் பயன்பாட்டுக்கு' அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் தயாராகும் கோவிஷீல்டு தடுப்பூசி 70 சதவீதம் பலன் தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரியில் வரவிருக்கும் ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசியின் விலையும் ஏப்ரலில் வரவிருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையும் மலிவாக உள்ளன.

ஆற்றலை அறிவது எப்படி?

ஆய்விலுள்ள தடுப்பூசிகளின் ஆற்றலைக் கணிக்கும் அளவு கோல்களுள் முக்கியமான ஒன்று, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், விளைவில்லா மருந்து (Placebo) போடப்பட்டவர்கள் ஆகியோரில் எத்தனை பேருக்குக் குறிப்பிட்ட ஆய்வுக் கட்டத்தில் கரோனா தொற்று ஏற்படவில்லை எனும் விகிதத்தைப் பொறுத்து அந்தத் தடுப்பூசியின் ஆற்றல் (Efficacy) அறிவிக்கப்படுகிறது. இந்த அளவு தற்காலிகமானது; ஒவ்வொரு ஆய்வுக் கட்டத்திலும் மாறக்கூடியது; நீண்டகாலப் பாதுகாப்புக்கு உறுதி தராதது. இதை முழுவதுமாக நம்ப வேண்டுமானால், குறைந்தது ஓராண்டுக்காவது தொடர்ந்து அவர்களைக் கண்காணிக்க வேண்டும். அப்படியானால் தடுப்பூசி வருவதற்குத் தாமதமாகும். இந்தச் சூழலைத் தவிர்க்க ஒரு மாற்றுவழி தேவைப்படுகிறது என்கின்றனர் வல்லுநர்கள்.

நடைமுறையில், கரோனா வைரஸ் தொற்றியவர்களுக்கு உருவாகும் தடுப்பாற்றல் அணுக்கள்/எதிரணுக்கள் (Antibodies) மூன்று மாதங்களில் மறைந்துவிடுவதால், தடுப்பூசி வழியாக உருவாகும் தடுப்பாற்றல் அணுக்கள் நீண்டகாலப் பாதுகாப்பு தர வேண்டியது முக்கியம் என்று வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தப் பின்னணியில், இப்போது ஆய்வில் உள்ள தடுப்பூசிகள் நாள்பட்ட பாதுகாப்புக்கு உறுதி தருமா என்பதை அறியவும் சோதனைகள் நடத்தப்பட வேண்டும். தடுப்பூசி உருவாக்கத்தில் ஏற்பட்டிருக்கும் அடுத்தகட்ட நகர்வு என்று இதைச் சொல்லலாம். இதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள, உடலில் நிகழும் தடுப்பாற்றல் செயல்முறையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தடுப்பாற்றல் செயல்முறை என்ன?

ஒருவருடைய உடலில் கரோனா கிருமி நுழைகிறது என்று வைத்துக்கொள்வோம். முதலில், அவரிடம் இருக்கும் ‘இயற்கைத் தடுப்பாற்றல்’ (Innate immunity) அதைத் தடுக்கும். இது, ஒரு கலவரத்தை ‘உள்ளூர் காவல்துறை’ சமாளிப்பதைப் போன்றது. கரோனா தொற்றாளர்களுக்கு இருமல், தும்மல் வருகிறதல்லவா? அவை கிருமி நுழைவதைத் தடுக்கும் முயற்சிகள்தாம். ஆனால், கரோனா வைரஸ் சுமை அதிகமாக இருந்தால், ‘காவல்படை’யால் சமாளிக்க முடியாது.

அப்போது ‘செயற்கைத் தடுப்பாற்றல்’ (Adaptive immunity) களத்துக்கு வரும். கரோனா கிருமி உடலுக்குள் நுழைந்த காரணத்தால் அல்லது அந்தக் கிருமிக்கான தடுப்பூசியைச் செலுத்தியதால் பெறப்படும் தடுப்பாற்றல் இது; ஆயுதப்படைக்கு ஒப்பானது. இந்தப் படையில் அந்தக் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ‘ஐஜிஎம்’ (IgM), ‘ஐஜிஜி’ (IgG) அணுக்கள் இருக்கும். அவற்றுக்கு ‘நண்ணிலை எதிரணுக்கள்’ (Neutralising antibodies) என்று பெயர். அவை கரோனா கிருமிகளைச் சுற்றிச் சூழ்ந்து சிறைப்பிடித்துவிடும். ஆனால், அவை குறுகிய காலத்தில் மறைந்துவிடுவதால், நாள்பட்ட பாதுகாப்புக்கு உறுதி தராது.

எப்படி நாட்டில் கலவரத்தை அடக்க ஆயுதப்படையால் முடியவில்லை என்றால் ராணுவம் தயாராக இருக்கிறதோ, அப்படி நம் தடுப்பாற்றல் மண்டலத்தில் ‘நிண அணுக்கள்’ (Lymphocytes) எனும் ராணுவம் இருக்கிறது. அதில் ‘பி செல்’கள் (B Cells), ‘டி செல்’கள் (T Cells) எனும் தளபதிகள் இருக்கின்றனர். ‘பி செல்’ தளபதியிடம் ‘எதிரணுக்கள்’, ‘நினைவு செல்கள்’ (Memory Cells) எனும் சிப்பாய்ப் படைகள் இருக்கின்றன. ‘டி செல்’ தளபதியிடம் ‘உதவும் செல்கள்’ (Helper Cells/CD4 Cells), ‘கொல்லும் செல்கள்’ (Killer Cells/CD8 Cells), ‘துப்புரவுச் செல்கள்’ (Scavenger Cells), ‘நெறிப்படுத்தும் செல்கள்’ (Regulatory Cells) எனப் பலதரப்பட்ட சிப்பாய்ப் படைகள் இருக்கின்றன.

‘பி செல்’ தளபதிகள் ‘எலும்பு மஜ்ஜை அகாடமி’யில் பயிற்சிபெற்றவர்கள்; உடனடிப் பாதுகாப்புக்கு (Antibody Mediated Immunity-AMI) உறுதிகொடுப்ப வர்கள். ‘டி செல்’ தளபதிகள் ‘தைமஸ் அகாடமி’யில் பயிற்சிபெற்றவர்கள்; நீண்டகாலப் பாதுகாப்பை (Cell Mediated Immunity-CMI) உறுதிசெய்பவர்கள். இதுவே இந்தக் கட்டுரையின் பேசுபொருள். ‘டி செல்’களை அதிகமாக உற்பத்தி செய்யும் கரோனா தடுப்பூசிக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுவதற்கான காரணம் இதுவே.

‘டி செல்’ தளபதிகள் செய்யும் தடுப்புப்பணி எப்படிப்பட்டது?

உடலுக்குள் நுழைந்த கரோனா கிருமிகளைக் கட்டுப்படுத்த எதிரணுக்களால் முடியவில்லை எனும் தகவல் ‘டி செல்’ தளபதிகளுக்குச் சென்றதும், தங்கள் சிப்பாய்களைக் கிருமி உள்ள இடத்துக்கு அனுப்பி, ‘தாக்குதலைத் தொடங்கலாம்’ என ஆணையிட, அங்கே ஒரு போர்க்களம் உருவாகும். ‘உதவும்’ சிப்பாய்கள், கரோனா கிருமியைச் சூழ்ந்து அதன் ‘கூர்ப்புரத’ (Spike protein) ஆயுதங்களைப் பறிப்பார்கள். உடல் செல்களுக்குள் ஒளிந்திருக்கும் கரோனா கிருமிகளைக் ‘கொலைகார’ சிப்பாய்கள் கொன்றுவிடுவார்கள்.

கொல்லப்பட்ட கிருமிகளை அப்படியே விழுங்கி அந்த இடத்தைச் சுத்தம்செய்பவர்கள் ‘துப்புரவு’ சிப்பாய்கள். இவ்வளவு பணிகளையும் ஒழுங்குபடுத்துவது ‘நெறிப்படுத்தும்’ சிப்பாய்கள். அதிக ஆற்றலுள்ள கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் உடலில் கரோனா வைரஸ் எப்போது நுழைந் தாலும் இந்த ‘அதிரடித் தாக்குதல்’ தொடங்கிவிடும். இதைச் சமாளிக்க முடியாத கரோனா கிருமிகள் அவர்கள் உடலைவிட்டு விலகிவிடும். கோவிட்-19 நோய் தடுக்கப்படும்.

16071417642006.jpg

தற்போது கரோனா தொற்றாளர் களுக்குப் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்கிறார்களே, அவற்றால் ‘டி செல்’களைப் பரிசோதிக்க முடியுமா?

முடியாது.

‘ஆர்.டி. - பி.சி.ஆர்.’ பரிசோதனை எதற்குச் செய்யப்படுகிறது?

மூக்கு, தொண்டை, நுரையீரலிலி ருந்து சளியை எடுத்துப் பரிசோதிக்கும் ‘ஆர்.டி.– பி.சி.ஆர்.’ (RT-PCR Test) ஒரு மரபணுப் பரிசோதனை. ஒருவருக்கு கரோனா வைரஸ் இருப்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. ‘பாசிடிவ்’ அல்லது ‘அறியப்பட்டது’ (Detected) என்று இதன் முடிவு வந்தால், உடலில் வைரஸ் உள்ளது என்று பொருள். இதை இப்படிப் புரிந்துகொள்ளலாம்: வீட்டுக்கு ‘விருந்தாளி’ வந்திருக்கிறார் என்பதை அறிவிக்கும் பரிசோதனை. கரோனாவுக்கான சிகிச்சையைத் தொடங்க இது உதவுகிறது. இதன் முடிவு தெரிய 24 மணி நேரம் ஆகும். இப்போது இதற்கு மாற்றாக ‘ஃபெலுடா’ (Feluda), ‘ஆர்.டி.– எல்.ஏ.எம்.பி.’ (RT-LAMP Test) ஆகிய எளிய, விரைவுப் பரிசோதனைகள் வந்துள்ளன.

‘எதிரணுக்கள் பரிசோதனை’ என்பது என்ன?

கரோனா வைரஸ் ஒருவருக்குத் தொற்றியிருக்குமா என்பதை அறிய உதவும் பரிசோதனைகளுள் அதிகம் பயன்படுத்தப்படுவது ‘எதிரணுக்கள் ரத்தப் பரிசோதனை’ (Antibody Test/Serology Test). மிதமான அறிகுறிகளுடனோ, அறிகுறிகள் இல்லாமலோ பலருக்கு கரோனா தொற்றியிருக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டதை இது உறுதிசெய்கிறது. அரை மணி நேரத்தில் இதன் முடிவு தெரிந்துவிடும். ஒருவருக்கு கரோனா தொற்றி யிருந்தால், அவருடைய ரத்தத்தில் ‘ஐஜிஎம்’, ‘ஐஜிஜி’ நண்ணிலை எதிரணுக்கள் உருவாகியிருக்கும். இவற்றில் ‘ஐஜிஎம்’ எதிரணுக்கள் தொற்று ஏற்பட்ட ஐந்திலிருந்து ஏழு நாள்கள் வரைதான் இருக்கும்.

அதற்குப் பிறகு மறைந்துவிடும். ‘ஐஜிஜி’ எதிரணுக்கள் தொற்று ஏற்பட்ட எட்டாம் நாளில் தோன்றும்; மூன்று மாதங்கள்வரை ரத்தத்தில் இருக்கும். இதை, விருந்தாளி விட்டுச் சென்ற அடையாளங்களைத் தெரிவிக்கும் பரிசோதனை என்று புரிந்துகொள்வது எளிது! எடுத்துக்காட்டாக, விருந்தாளி இனிப்பு கொண்டு வந்திருப்பார். அதைச் சில நாள்களில் உண்டுவிடுவோம், ‘ஐஜிஎம்’ எதிரணுக்கள் மாதிரி. விருந்தாளி பரிசு கொடுத்திருப்பார். அதைப் பாதுகாத்திருப்போம், ‘ஐஜிஜி’ எதிரணுக்கள் மாதிரி.

‘டி செல்’களை அளக்க என்ன பரிசோதனை உள்ளது?

‘டி-ஸ்பாட்’ பரிசோதனை (T-SPOT Test) உள்ளது. இங்கிலாந்திலுள்ள கார்டிஃப் பல்கலைக்கழக (Cardiff University) ஆய்வாளர்கள் கரோனாவுக்காக இதைக் கண்டுபிடித்துள்ளனர். பயனாளியின் விரல் நுனியில் ஒரு சொட்டு ரத்தம் எடுத்து, வெள்ளையணுக்களைத் தனியாகப் பிரித்து, கரோனா கிருமியின் கூர்ப்புரதங்களையும் இன்டெர்ஃபெரான் காமா கதிர்களையும் பயன்படுத்தி, அவற்றில் உள்ள ‘டி செல்’களை அளக்கும் நவீன பரிசோதனை இது.

இதன் முக்கியத்துவம் என்ன?

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ‘டி செல்’களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இவை கரோனாக் கிருமிகளை நீண்ட காலம் நினைவில் வைத்திருக்கும். எப்போது கரோனாத் தொற்று ஏற்பட்டாலும் அதை அடையாளம் கண்டு அழித்துவிடும். இவ்வாறு கரோனாவை வீழ்த்தும் வல்லமை ‘டி செல்’களுக்கு நீண்ட காலம் இருப்பதால், அவற்றைத் தூண்டும் கரோனாத் தடுப்பூசிகள்தாம் இப்போது அதிகம் தேவைப்படுகின்றன.

இங்கிலாந்தில் தயாராகும் கரோனா தடுப்பூசிகளை ஆய்வுக்காகப் போட்டுக்கொண்டவர்களுக்கு இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். உலகில் தற்போது ஆய்வில் இருக்கும் எல்லா கரோனா தடுப்பூசிப் பயனாளிகளுக்கும் இந்தப் பரிசோதனையை மேற்கொண்டால், எந்தத் தடுப்பூசியில் ‘டி செல்’களின் அளவு கூடுதல் என்பது தெரிந்துவிடும். அதையே அதிக ஆற்றலுள்ள தடுப்பூசியாக உலக சுகாதார நிறுவனம் அறிவிக்க முடியும். வல்லுநர்களின் இந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

கரோனாவால் இறப்பது ஏன்?

ராணுவ பலம் குறைந்த நாடு போரில் தோல்வி அடைவதுபோல், கரோனா தொற்றாளரிடம் ‘நிண அணுக்கள்’ எனும் ராணுவம் குறைவாக இருந்தால், வலுவான வைரஸ் சுமையைச் சமாளிக்க முடியாமல் இறப்பு நேரிடுகிறது.

16071417032006.jpg

அடுத்து தொற்றாளரிடம் நீரிழிவு, உடற்பருமன், இதயப் பிரச்சினை, சிறுநீரகப் பிரச்சினை போன்ற துணை நோய்கள் இருந்தால், உடலில் இருக்கும் ‘சிப்பாய்க’ளுக்கு இவற்றைச் சமாளிப்பதே பெரும்பாடாகி விடும். கரோனாவை வீழ்த்த ‘சிப்பாய்கள்’ இல்லாமல் இறப்பு நேரும்.

அடுத்து, ‘சைட்டோகைன் புயல்’ (Cytokine storm) எனும் தடுப்பாற்றல் மிகைச் செயல்பாடு காரணமாகவும் கரோனா நோயாளிகள் இறக்கிறார்கள். இது, நாட்டைக் காக்க வேண்டிய ராணுவமே நாட்டின் அதிகாரத்துக்கு எதிராகப் போராடும்போது அந்த நாடு போரில் தோல்வி அடைவதற்கு ஒப்பானது.

‘சிபிநாட்’ (CB-NAAT) பரிசோதனை:

காசநோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் சளிப் பரிசோதனைமுறைக்கு ‘சிபிநாட்’ (CB-NAAT) பரிசோதனை’ (Cartridge Based Nucleic Acid Amplification Test - CBNAAT) என்று பெயர். இந்தக் கருவியில் சில துணைக் கருவிகளை மாற்றினால் கரோனா சளி மாதிரிகளையும் பரிசோதிக்கலாம். இதன் செயல்முறை ‘ஆர்.டி.–பி.சி.ஆர்.’ பரிசோதனைக்கு மேற்கொள்ளப்படும் முதல் இரண்டு படிநிலைகளைப் போன்றதே.

16071416812006.jpg

அடுத்த படிநிலை மட்டும் மாறும். சி.டி.என்.ஏ.க்களைக்கொண்ட திரவக் கலவையை ஒரு ‘மைக்ரோ சிப்’பில் விடுகிறார்கள். அதை இந்தப் பரிசோதனைக்கென மேம்படுத்தப்பட்ட கருவியில் நுழைக்கிறார்கள். இது கரோனா வைரஸ் மரபணு இருக்கிறதா இல்லையா என்பதை அதன் மரபணு வரிசையோடு ஒப்பிட்டுப் பார்த்துத் தெரிவித்து விடுகிறது.

இதன் முடிவு ஒரு மணி நேரத்தில் தெரிந்துவிடும். செலவு குறைந்த, விரைவுப் பரிசோதனை இது. இந்தியாவில் இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளதால் ஆய்வுக்கூடத் தனிப்பயிற்சியாளர்கள் இதற்குத் தேவையில்லை. கரோனா தொற்றை எளிதாக அறியலாம். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இந்தப் பரிசோதனைக்கும் அனுமதி அளித்துள்ளது.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com

 

https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/608448-corona-vaccine-6.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.