Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேஜர் சுமி

Commander-Mejor-Sumi.jpg

வரலாற்று நாயகி மேஜர் சுமி / இசையரசி

நாடு இருளுமுன்பே காடு இருட்டிவிட்டது; ஆளையாள் தெரியாத கும் இருட்டில் தான் அந்த இடத்திற்கு சுமி அக்காவுடன் நானும் மதிப்பிரியாவும் களமருத்துவப் பொருட்களுடன் போய்ச்சேர்ந்தோம். வழமையாக களமருத்துவத்தில், உபமெடிசின் (sub medicine) நிலையை அமைப்பதென்றால் அந்தப்பகுதி பொறுப்பாளர்களுடனும் ஏனைய கொம்பனிப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான இடத்தை தெரிவு செய்து, சண்டைப்படையணிகள் நிலையெடுக்கும் நேரத்திற்குள் எமக்கான மருத்துவ நிலைகளையும் அமைத்து விடுவோம். ஆனால் இன்று அப்படிச் செய்ய காலம் இடம் தரவில்லை.

வவுனியாவிலிருந்து புறப்பட்ட வெற்றி நிச்சயம் நடவடிக்கைப் படையினர் யாழ் கண்டி நெடுஞ்சாலையில் 60 நாட்கள் முயன்றும் 20 KM தூரத்தை பிடிக்கமுடியாமல் முடங்கிக் கிடந்தனர் என்பது வரலாறு.

அந்த அவமானத்தை திசை திருப்பும் நோக்குடன் புளியங்குளத்தை பலமான தளமாக அமைத்து வைத்திருந்த புலிகளின் படையணிகளுடன் நேருக்கு நேர் மோத முடியாத இலங்கை அரசு தமது இராணுவ பலத்தை பக்கவாட்டாக பரப்பியது.

“இராணுவ பலத்தில் எதிரி மலையாகவும் நாம் மடு “வாகவும் நின்று வெற்றி கொண்ட சமர் என்று தமிழீழ தேசியத் தலைவர் போராளிகளின் மனவுறுதியைப்பற்றி பெருமையாக கூறும் தாக்குதல் களம் அது.

அந்தத் தாக்குதலை முறியடிக்க புலிகளின் படையணிகளும் வியூகம் அமைத்தனர்.

மாலதி படையணியின் அணி ஒன்று ஆனந்தி அக்காவுடன் முன்னரங்கிற்கு செல்ல அவர்களிற்கான submedicine நிலை ஒன்றை அமைப்பதற்காக புளியங்குளம் பிரதான மருத்துவமனையில் நின்றவர்களில் நாம் இருவரும் தெரிவு செய்யப்பட்டு சுமி அக்காவுடன் களமருத்துவ பொறுப்பாளர் மேஜர் எஸ்தர் அக்கா வால் அனுப்பப்பட்டோம்.

நாளை அல்லது மறுநாள் இராணுவம் முன்னேறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முன்னரே அந்த இடத்தில் வேறு தேவைக்காக பயன்படுத்திய பதுங்குகுழி ஒன்றிருந்தது. அதனைச் செப்பமிட்டு மருத்துவப் பொருட்களை சிறு வெளிச்சம் கூட இன்றி ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தோம். எங்களிற்கு மிக அருகில் எறிகணைகள் தொடர்ச்சியாக விழுந்து வெடிக்கத் தொடங்கியது. அரை குறையாக வெட்டிய அந்த பதுங்கு குழியில் எங்களை தலைதெரியாமல் புதைந்து கொள்ளச்சொல்லி ஒரு தாய்ப் பறவையாய் அந்தரித்துப் போகின்றாள் .”எனக்கெண்டா இந்த இடம் மெடிசினுக்கு சரி வராது போல” என்று கூறிக்கொண்டு மெல்ல இருளில் எழும்பி ஊலாவுகின்றாள். ஆரம்பப் பயிற்சியை மாணலாற்று காட்டிற்குள் பயின்றவளுக்கு காடு மிகவும் பழக்கப்பட்டிருக்க வேண்டும்.காட்டின் அசைவுகளை இலகுவில் இனம் கண்டுவிடுகிறாள். எங்கு நிற்கின்றோம் எப்படி வந்தோம் என்றே திசையை கணிக்க முடியவில்லை, அப்படியிருக்க மேஜர் திவாகரின் குரல் வோக்கி டோக்கியில் ஒலிக்கிறது . சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியும் வலது புறம் பக்கவாட்டாக நகர்வதால் எங்களிலிருந்து 300 மீற்றர் தூரத்தில் களமருத்துவ போராளிகளான சங்கரும், ஈழமும் நிற்கும் இடம் இரு பகுதிக்கும் பொருத்தமாக அமையும் அங்கு செல்லுமாறு பணிக்கின்றார் மீண்டும் பொருட்களை எடுத்துக் கொண்டு நடக்கின்றோம் சுமி அக்கா மெதுவாக குசுகுசுக்கிறா “என்னை தொட்டுக்கொண்டு “பின்னால் வாங்கோ….. செல் அடிச்சா விழுந்துபடுக்கவேணும் சாகிறதுக்கு எங்களுக்கு பயமில்லைதான் ஆனால் எங்கள நம்பி முன்னுக்கு நிக்கிற ஆக்களை காப்பாற்ற வேண்டும் அது தான் எங்களுக்கு தரப்பட்ட பணி” என்று மீண்டும் நினைவுபடுத்தினாள். நட்சத்திரங்கள் அற்ற வானத்துடன் காட்டு மரங்களை ஊடறுத்து பயணம் தொடர்ந்தது .

புதிய இடத்தில் எமக்கான இடங்களை ஒழுங்கு படுத்தி முடித்தபோது காற்று பலமாக வீசியது, மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசிய சத்தத்தை மேவி யுத்த ராங்கிகளின் கொடூரமான இரைச்சல் காதைப் பிய்த்தது.

நள்ளிரவை தாண்டியிருக்க வேண்டும் “நான் முதல் சென்றி பார்க்கிறன் நீங்கள் கொஞ்சம் படுங்கோ “ என்று எங்களை அனுப்பிய போதே அவளுக்குத் தெரியும் தான் இன்று தூங்கப்போவதில்லை என்று, அவ்வாறே ஒரு மணித்தியாலம் கழிவதற்குள் எங்களை வந்து எழுப்பி “காயம் வரப்போகுது ஆயத்தப்படுத்துங்கள்” என்றவுடன் காவு தடியை எடுத்து ஆயத்தமானோம்.

பாதையே காணமுடியாத பற்றைக்காட்டுப் பகுதிக்குள் பாதையெடுத்து மிக வேகத்தில் காயமடைந்தவர்களை மருத்துவ அணியிடம் சேர்க்கும் பொறுப்பு வாகனப் பகுதி போராளிகளினது. களமுனையில் காயமடைந்து காக்கப்படும் ஒவ்வொரு உயிர் மீட்புப் பணியிலும் வாகனப்பகுதி போராளிகளின் அர்ப்பணிப்பும் தியாகமும் அதி உன்னதமானது, அவர்களது வேகமான செயற்பாட்டால் பாரிய காயமடைந்தவர்களின் உயிர்களும் காப்பாற்றப்பட்டிருக்கின்றன.

அன்றும் அப்படித்தான் கண்மூடித்தனமான எறிகணைவீச்சால் பாதைகளை மூடி விழுந்து கிடக்கும் காட்டுமரங்களின் ஊடாகவும், கந்தகப்புகைக்குள் விழுந்து வெடிக்கும் எறிகணைச் சிதறல்களை ஊடறுத்தும் வாகனப்பகுதி லிண்டன் அண்ணா வின் மொட்டை ஜீப் வந்து நின்றது . “உடன இறக்குங்கோ தங்கச்சி வயிற்றுக் காயம்,,,,, என்று எம்மை விரைவு படுத்தினார். அவள் வேவு அணிப்போராளி உடனடி சிகிச்சை அளித்து பிரதான மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தோம்.

அப்போது சுமி அக்கா “லிண்டனும் ,வன்னியனும் போர்களத்தில் வாகனம் ஓடுவதில் பேய் கெட்டிக்காரர், சூரியக்கதிர் சண்டை மூட்டம் நாங்கள் அவயளுக்கு காயக்காறர்களை இடமாற்றம் செய்யும் போது எந்த காயத்திற்கு எந்த நிலையில் படுக்கவைத்திருக்கவேண்டும் அதனால் நன்மை, தீமை என்றெல்லாம் படிப்பித்திருக்கின்றோம் அவர்களும் ஆர்வமாக கேட்டுதெரிந்துவைச்சிருக்கினம் அதனால் வடிவா கொண்டு போய்ச்சேர்திடுவான்” என்றாள் நம்பிக்கையுடன் முன்னரங்கில் உக்கிர சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதுவரை தூரத்தே கேட்ட இயந்திரங்களின் உறுமலும் துப்பாக்கி வேட்டுக்களும் மிக நெருக்கமாக கேட்கத்தொடங்கியது.

எல்லாக் களமுனைகளைப்போலவும் ஜெயசிக்குறு களத்தில் முன்னுக்கு காவலரணில் போராளிகளின் அணி நிக்கின்றது என்று நாம் அசண்டயீனமாக மருத்துவப் பணியைமட்டும் செய்ய முடியாது.

அமெரிக்காவின் கிறீன்பரே சிறப்பு அணியினரால் களத்தில் நின்றே பயிற்றுவிக்கப்பட்ட இலங்கை இராணுவ கொமொண்டோ அணிகள் காடுமுழுவதும் பரப்பிவிடப்பட்டிருந்து .எங்கு இடைவெளி கிடக்கின்றதோ அதனூடாக புகுந்து பின் தளப்பகுதியிலும் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது எனவே மருத்துவப் பையுடன் துப்பாக்கிகளும் உசார்நிலையில் தான் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நாட்களில் தான் சுமி அக்காவுடன் பழகும் சந்தர்ப்பம் எனக்கு அமைந்தது. வயதிற்கும் அனுபவத்திற்கும் ஏற்ற ஆளுமைக் குணங்கள் அவளிடம் கொட்டிக்கிடந்தது.

எப்போதும் போராட்டத்தை வழிநடத்திச் செல்லும் தமிழீழத் தேசியத்தலைவரைத்தான் தன் நேரடி வழிகாட்டியாக எண்ணுபவள்.

தனக்கு மேலானவர்கள் பிழைவிடும் நேரத்தில் கூட அதனை தட்டிக்கேட்டு விடும் துணிச்சல் காரி என்று சொல்லாம். இயல்பாகவே அமைந்துவிட்ட நற்குணங்கள் எளிதில் அனைவருக்கும் அவளை பிடித்து விடும். இயக்க விதிமுறைகளை மீறி எந்த ஒரு சிறு அசைவையும் செய்யமாட்டாள்.

“நான் அண்ணாக்கு தூரோகம் செய்யமாட்டன்” என்ற வார்த்தையில் தன்னை தானே வழிநடத்திக் கொள்வாள். எப்போதெல்லாம் நேரம் கிடைக்கின்றதோ அப்போ தெல்லாம் கதை கதையாய் சொல்லுவாள். அவளது சொந்தக் கள மருத்துவ அனுபவங்களைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போயிருக்கின்றேன். அவள் இந்த மண்ணில் வீழும் வரை நடந்த அநேக போர்க்களங்களிற்கு மருத்துவப்போராளியாக உயிர்காக்கும் பணிக்காகச் சென்றிருக்கின்றாள்.

அவளது தந்தை கந்தையா மாஸ்ரர் முப்பத்தி ஒன்பது ஆண்டுகளாக ஆசிரியப்பணியில் சேவைசெய்தவர். தெல்லிப்பளை மகாஜனாகல்லூரியில் அதிபராகவும் இருந்து ஊர்போற்றும் பல கல்விமான்களையும் நற்பிரஜைகளையும் உருவாக்கிவிட்டவர்.வலிகாம இடப்பெயர்வின் பின் வன்னி மண்ணிற்கு வந்து தன் ஆசிரியர் சேவையை காந்தறூபன் அறிவுச்சோலை மாணவர்களிற்கு வழங்கினார் ஆங்கில ஆசானாகவும் சிறந்த அதிபராகவும் இருந்து அம் மாணவர்களின் வளர்ச்சியில் விசேட கவனம் செலுத்தினார். அந்ந நற் சேவையின் பயனாக தமிழீழத் தேசியத்தலைவரின் நன் மதிப்பையும் பெற்றிருந்தார். அத்துடன் போராட்டத்தின் விரிவாக்கம் பெருகப்பெருக பாரிய தொழில்நுட்பத் திறனையும் போராளிகளிடம் வளர்க்க வேண்டியிருந்ததால் ஏனைய துறை பொறுப்பாளர்களும் கந்தையா மாஸ்ரரின் சிறந்த ஆங்கில வளத்தை போராளிகள் கற்பதற்காக பயன்படுத்த தொடங்கினர். இவ்வாறு பல பிரிவுப் போராளிகளிற்கும் ஆங்கில கல்வியை ஊட்டினார்.

ஒரு நாள் சூரியன் உச்சத்தை தொட்டுக்கொண்டிருந்த பகற்பொழுதில் மல்லாவி வடகாடு என்னும் இடத்தில் இருந்த அவளது தற்காலிக வீட்டிற்கு சுமி அக்காவுடன் செல்லும் சந்தர்ப்பம் அமைந்தது. சுமி அக்காவின் தந்தைதான் குளிர் நீரில் தோடம்பழம் கரைத்து கொண்டு வந்து தந்தார். தாயினதும் அவளது மூத்த சகோதரனதும் படங்கள் மாலையுடன் தொங்கின; என் கண்கள் பதிந்த திசையைவிட்டு அகலாது விக்கித்து நின்றது.

இலங்கைத்தீவின் யாழ்குடாநாட்டிலுள்ள நகரங்களில் ஒன்று சுண்ணாகம் இங்கு வேளாண் உற்பத்திச்சந்தை பிரதான அம்சமாகும். இதன் மேற்கே அமைந்துள்ள கந்தரோடையானது யாழ்பாண இராச்சியத்தில் பழமை வாய்ந்தது என்று அகழ்வாராய்ச்சி தகவல்களும் நிறுவியுள்ளன. அதைவிட காலணித்துவ ஆட்சியில் தமிழ்மொழி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட குமாரசாமி புலவரின் பூட்டபிள்ளையாகிய மனோன்மணிக்கும் கந்தையாவுக்கும் 12.07.1968 மூண்றாவது பெண் பிள்ளையாக பிறந்தவள்தான் உமாவல்லி என்ற இயற்பெயர் கொண்ட மேஜர் சுமி.

ஒரே அண்ணனுடன் இரு அக்காக்களும் இரு தங்கையுடன் சிறந்த ஒரு குடும்பம் பல்கலைகழகம் என்ற கூற்றை மெய்ப்பிப்பதைபோல் பாசப்பினைப்பில் வளர்ந்து வந்தார்கள். தந்தையான கந்தையா, அதிபராக தெல்லிப்பளை மகாஜனாகல்லூரியில் கற்பித்ததால் பிள்ளைகளையும் அங்கேயே படிக்கவைத்தார். யாரும் குறை சொல்லமுடியாதவாறு பிள்ளைகள் கல்வியிலும் நல்லொழுக்கத்திலும் சிறந்து மிளிர்ந்தனர். செல்வச்செழிப்புடன் வாழ்ந்த அவர்களிற்கு வீட்டில் கஷ்ரம் என்று எதுவும் இருக்கவில்லை.

ஆனாலும் தமிழ்மக்களிற்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இலங்கை அரசின் வஞ்சனைப் போக்கை கண்டு உள்ளுக்குள் கொதித்துப்போன அண்ணன் வேலாயுதகுமரன் அரசிற்கு எதிராக்கத் தீவீர எதிர்பை மாணவர்அமைப்புடன் இணைந்து வெளிப்படுத்தினான். பின்நாளில் விடுதலைப் புலிகளின் முழு ஆதரவாளனாகி முழுமூச்சாக செயற்பட்டான்.

1984 ஆண்டு காலப்பகுதியில் உயர்தரத்தில் கணிதப்பிரிவில் கற்றுக்கொண்டிருந்தும் பரீட்சை எழுதமுடியவில்லை. அதே நேரத்தில் தன் அண்ணனைப் போலவே உமாவல்லியும் அடக்கு முறைக்கு எதிராக கொதித்தெழுந்தாள் சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப்பெற்று வர்த்தகப் பிரிவை தேர்ந்தெடுத்து படித்துக்கொண்டே மாணவர் அமைப்பில் இணைந்து பணியாற்றினாள் .

அண்ணாவும் தங்கையுமாய் பல பொது வேலைகளில் ஒன்றாகவே ஈடுபட்டனர். கூட்டங்களிற்கும் இருவரும் ஒன்றாகவே சென்று வந்தனர். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த தந்தை பிள்ளைகள் கல்வியை குழப்புவதாக எண்ணி வருந்தினார் . “அப்பா நாங்கள் படிச்ச படிப்பு எங்களிற்கு பயன்படவேண்டும் என்றால் இலங்கை அரசின் அடக்கு முறையில் இருந்து விடுபடவேண்டும்” என்று தந்தைக்கு இருவரும் சேர்ந்தே விளக்க உரை நடத்தினார்கள். யதார்த்தங்களை புரிந்து கொண்ட தந்தை அவர்களின் சேவைகளிற்கு பெரும் கட்டுப்பாடு விதிக்கவில்லை.

பின்பான நாட்களில் எமது சமூக அமைப்பில் புரைபோடப்பட்டிருந்த பிற்போக்கான பழமைவாத சிந்தனைகளை உடைத்தெறிந்து திலீபன் அண்ணாவால் நடத்தப்பட்ட சுதந்திரப் பறவைகள் அமைப்புடன் ஒன்றித்து யாழ்பாண சமூகத்தில் ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்திய பெண்கள் வரிசையில் உமாவல்லியும் இவ் அமைப்பில் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டாள்.

இவர்களிற்கு யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் முதலுதவிக் கல்வி வழங்கப்பட்டது. அதன் பின் கிராமம்தோறும் சமூக விழிப்புணர்வுக் கூட்டங்களிற்கும் அடிக்கடி சென்றுவந்தாள்.

ஆனாலும் இலங்கை இந்திய இராணுவம் தமிழ்ப் பிரதேசங்களில் மேற்கொண்ட கொடூரமான செயல்களில் இருந்து மக்களைக் காப்பாற்ற தனது இந்த பணி காணாது, ஆயுதப்பயிற்சி எடுக்கவேண்டும் என்று திடமான முடிவுடன் 1989 ம் ஆண்டு தை மாதம் பாசறை நோக்கிப் புறப்பட்டு சுமி என்ற வரலாற்று நாமத்தை தனதாக்கிக் கொண்டாள்.

தமிழீழத்தின் இதயபூமி என அழைக்கப்படும் மணலாற்றின் காட்டில் பெண்களிற்கான 4 ஆவது பயிற்சி முகாமில் 59 பெண்போராளிற்கு தலைமை பயிற்சி ஆசிரியர் சுகி மற்றும் டெல்ரா, ஜெசி, அவர்களின் பொறுப்பில் தன்சாணியா முகாமில் படையியல் பயிற்சிகள் நடைபெற்றது அருகில் தமிழிழத்தேசியத்தலைவரின் முகாமும் இருந்தால் அவரது நேரடி கண்காணிப்பும் கருத்துரைகளிற்கும் பஞ்சமிருக்கவில்லை .அது மட்டுமன்றி கிட்டு அண்ணாவின் அரசியல் வகுப்பும் பூரணதெளிவை அவர்களிற்குள் விதைத்தது. கடின பயிற்சியையும் மன உறுதியையும் அள்ளிக் கொடுக்கும் அந்த காட்டுப்பாசறை சிறந்த போராளியாக சுமியையும் இனம் காட்டியது.

மூத்த மருத்துவப்போராளி மேஜர் சோதியா அக்கா தான் பயிற்சி பாசறையின் மருத்துவ கடமையில் இருந்தாள். அவளின் சிறந்த தேடலிற்குள் சுமியும் சிக்கிவிட அவளை ஒரு மருத்துவப் போராளியாக்கிவிட எண்ணினாள் தூரநோக்கான சிந்தனையில் புதிய பெண் மருத்துவ போராளிகளை உருவாக்கும் திட்டத்தில் 4 ஆவது பாசறையில் இருந்து பிரிகேடியர் துர்க்கா மேஜர் சுமி மற்றும் கெங்கா ,மைதிலி போன்றோருடன் வேறு பெண்போராளிகளுமாய் பத்து பேர் ஆரம்ப மருத்துவ கற்கையை வைத்தியர் அஜந்தனிடம் மணலாற்று காட்டிலே கற்றனர். பரம்பரையாகவே சைவ உணவு உண்ணும் குடும்பத்தில் இருந்து வந்தமையால் அசைவ உணவை உண்ணப் பழகிவிடுவது மேஜர்சுமிக்கு இலகுவாக அமையவில்லை. மணலாற்று காட்டிற்குள் சாதாரண உணவிற்கும் நீருக்குமே பல மைல்கள் நடக்க வேண்டும். ஒரு விடுதலைப் போராளி கிடைக்கும் உணவை உண்ணப் பழகவேண்டும் என்று அடிக்கடி நினைத்தாலும் ஆரம்பத்தில் முயற்கொம்பாய் அமைந்துவிட வெறும் சோற்றை உண்டேனும் பசியாறிக்கொள்வாள்.ஆனால் அவள் கொண்ட கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

ஒரு மழை நாளில் ஓய்வாகவிருந்து தோழிகளுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தவளிடம் மழைநீரோடு அவளது கண்ணீரும் கலந்து விடப்போகும் இந்த சோகச் செய்தியை சொல்லத் திராணியற்று விக்கித்து நின்றார்கள் மூத்த பெண் போராளிகள். அந்த நாளில் வெளிவரும் களத்தில் பேப்பரும் இந்த செய்தி பிரசுரமாகியிருந்தது. அந்த கரிய நாள்… யூலை 23, 1989 அவளது ஆசை அண்ணாவை நீண்ட நாட்களாக குறிவைத்து தேடிய இந்திய இராணுவம் யாழ் பல்கலைக்கழக வீதியில் சுற்றிவளைத்துப் பிடித்து கைதாக்கி சித்திரவதை செய்தது. செய்தி அறிந்து தந்தை அவ்விடம் செல்வதற்கு முன்னரே கொடூரமாக கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவில் வீதியில் வைத்தே சுட்டுகொன்றது. இந்தச் செய்தி பேரிடியாய் இறங்கியது, ஐந்து பெண்பிள்ளைகளின் ஒரே ஆண் மகன் அவன். ஒன்றாக வாழ்ந்த இறந்த காலத்தின் இனிய நினைவுகள் தீயாய்சுட்டது. மரணச்சடங்கிலும் தன்னால் கலந்து கொள்ளமுடியவில்லை என்பதை விட தாய், தந்தை, சகோதரிகள் எப்படித் தாங்கிக்கொள்ளப் போகின்றார்கள் என்ற துயர் நெஞ்சை பிழிந்தது. இறப்பின் துக்கத்தை கூட உறவினர்கள், ஊரார் சேர்ந்து வெளிப்படுத்த முடியாத காலம் அது. இந்திய இராணுவத்துடனான சண்டைக் களங்களிற்கு செல்ல கால்கள் எத்தணித்தன நெஞ்சில் புதுவீரம் குடைந்தது, வேதனையில் உதடுகள் துடித்தது அந்த நாளை எண்ணிக்காத்திருந்தாள் சுமி. அந்த நாட்களில் விடுதலைப் புலிகளை இலகுவில் அழித்து விடலாம் என்று கற்பனையில் மிதந்திருந்த இந்தியப்படை தமது தோல்விகளை மறைக்க மக்களை கொடூரப்படுத்தி, படுகொலைகளையும் கூட நடத்தியது . அப்படித்தான் விடுதலைப்புலிகளிற்கு மருத்துவம் செய்தார் என்று குற்றம் சாட்டி இந்திய இராணுவத்தால் துன்புறுத்தப்பட்ட வைத்தியர் பத்மலோஜினி நாட்டைவிட்டு வெளியேறி தமிழ் நாட்டில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டார். அந்த நாட்களில் மேலதிக மருத்துவ சிகிச்சை க்கா போராளிகள் தமிழகம் அனுப்பபடுவது வழமை .

அப்படித்தான் ஒரு நாள் ஒரு போராளி நோயாளியுடன் சுமியும் அங்கு சென்றடைந்தவள் தமிழீழத் தேசியத் தலைவரின் பணிப்புக்கு அமைய மருத்துவர் பத்மலோஜினி அவரிற்கு உதவியாக சேலத்தில் தங்கிவிடுகின்றாள்.

அங்கிருந்த போது மேலதிக மருத்துவக் கற்கைகளையும் சுமி ஆர்வத்துடன் கற்றாள். பின்னர் சில மாதங்களில் இந்தியா இராணுவம் நாட்டை விட்டு வெளியேறியவுடன் பத்மலோஜினி அன்ரியுடன் மீண்டும் 1990 ஏப்பிரல் ஈழத்தில் கால் பதித்தார். அவருடனே சிறிது காலம் தன் சேவையைத் தொடர்ந்தாள். அந்த காலப்பகுதியில் மாவட்டரீதியான மருத்துவ வீடுகள் அமைத்து காயமடைந்த போராளிகள் பராமரிக்கப்பட்டனர் அவர்களை சென்று பார்ப்பது காயங்களிற்கு மருந்து கட்டுவது போன்ற பணிகளை தொடர்ந்து கொண்டு மருத்துவத்தின் மேலதிக கற்கையும் கற்றுக்கொண்டிருந்தாள்.

1990 களில் யாழ்பாண வீதிகளில் சீருடையணிந்த பெண் போராளிகள் அணி அணியாக வலம் வருவதைக்கண்ட பொது மக்களின் மனங்களில் புது தெம்பும் ஒரு வித தன்னம்பிக்கையையும், வீரமும் எழுந்தது; சமூகத்தில் பெரும் மாற்றம் நடைபெற்று வருவதை கண்ணூடு கண்டார்கள் . அந்த மாற்றத்தை ஏற்படுத்திய பெண்களில் சுமியும் ஒருத்தி தான்.

இந்திய இராணுவம் ஈழப்பகுதிகளை விட்டு வெளியேறிய பின் சில மாதங்கள் போரின்றி இருந்தது தமிழர்பகுதி. ஆனிமாதம் சிங்களப்படைகளுக்கும் புலிகளுக்குமிடையில் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியது; 21.11.1990 அன்று மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடங்கப்பட்டு 23.11.1990 அன்று அப்படைத்தளம் தமிழர் சேனையால் வெற்றிகொள்ளப்பட்டது. இந்த சமர்க்களத்திற்கு களமருத்துவப் போராளியாகச் சென்று பல நூறு போராளிகளின் உயிரை காப்பாற்றினாள். இதுவே இவரது முதல் மருத்துவக் களமுமாகி வலுச் சேர்த்தது. அதனைத்தொடர்ந்து “ஆகாயக் கடல் வெளி” தாக்குதல் என களங்கள் நீண்டன. அடுத்து இன்னோர் இடி சுமியின் குடும்பத்தில் விழுகின்றது. ஒரே மகனை சுட்டுப் போட்டதை எந்த தாய் தான் ஏற்பாள்… அது ஒருபுறம் மகளின் பிரிவு மறு புறமென மாறி மாறி வந்த கவலைகளால் சுமியின் தாய் நோயாளியாகி பாயிலே விழுந்தாள். எத்தனை முயன்றும் காப்பாற்ற முடியாமல் 1991 ஆண்டு அன்பு தாயார் இறைவனடி சேர்ந்தார்.

விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களிற்கு பெயர் சொல்லித் தெரியும் அளவு நெருக்கமானவராக கந்தையா மாஸ்ரர் இருந்ததால் தாயின் மரணச்செய்தி பற்றி தலைவருக்கு கடிதம் அனுப்பினார் அடுத்த நாளே ஒரு மாதவிடுமுறையில் அனுப்பப்படுகின்றார் சுமி; ஆறுதல் சொல்ல வழியின்றி நின்ற குடும்பத்தை ஆற்றுப்படுத்தி, விடுமுறை கழித்து பாசறை திரும்புகின்றாள். அதன்பின்னான பணிகள் மருத்துவம் சார்ந்தே வழங்கப்பட்டது. துடிப்பான போராளியாக உற்சாகத்துடன் இயங்கிக்கொண்டிருப்பாள். 1992ம் ஆண்டு போராளி மருத்துவப் பட்டதாரிகளை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கு தெரிவாகின்றாள். சிறந்த ஆங்கில அறிவும், நிர்வாகத்திறமையும், பக்குவமும் கொண்ட சுமி அந்த கல்லூரியில் படிப்பதற்காக மட்டுமல்ல சமநேரத்தில் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் பெண்கள் அணிக்கு பொறுப்பாளராகவும் தமிழீழ தேசியத்தலைவரால் நியமிக்கப்படுகின்றாள். நல்லொழுக்கத்துடனும் தலைமைத்துவப் பண்புடனும் தனக்கு வழங்கப்பட்ட பணியை திறம்படச் செய்துகொண்டிருந்தாள். பல புதிய போராளிகளை பல்முகத் திறமையானவர்களாக வளர்த்தெடுக்கவேண்டும் என்பதில் ஆர்வமாகவே இருந்தாள்.

அந்தக் கல்லூரியின் பயின்ற போராளிகளின் மூத்த சகோதரியாகவும் எல்லோராலும் விரும்பப்பட்டாள் தங்களது பிரச்சனைகளை மனம் விட்டு அவளுடன் பேசித்தீர்த்தார்கள். அன்பும் கருணையும் அவள் கண்களில் வழிந்தாலும், இயக்க கட்டுப்பாடுகளில் கடுமையான நடைமுறைகளை விதிப்பவளாகத்தான் எல்லோராலும் பார்க்கப்பட்டாள். அந்தக் கல்லூரியில் படிப்பவர்களில் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகவும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருந்ததால் பின்னொரு நாளில் பெண் வைத்தியர்கள் பற்றாக்குறை வந்துவிடக்கூடாது என்பதற்காக பெண் தளபதிகளிடம் தானாகவே கேட்டு படிப்பதற்கு தகுதியான போராளிகளை உள்வாங்கி எண்ணிக்கையை சமநிலைப் படுத்தினாள்.

அவளது சிந்தனையோட்டம் எப்போதுமே நீண்டதாகவே இருக்கும்; அங்கு எல்லோரும் படிப்பதில் மட்டும் கவனம் செலுத்திக்கொண்டிருக்க இவளுக்கு நிர்வாக வேலைகள் இருந்தும் படிப்பதில் எந்த தடங்கலும் இன்றி தனக்கு வழங்கப்பட்ட பணிகளை நேர்த்தியாக செய்துகாட்டினாள். கல்லூரியில் நடைபெறும் கலைநிகழ்வுகளில் மற்றவர்களையும் ஈடுபடுத்தி தானும் விருப்புடன் பங்கு பற்றுவாள். அப்படியான நிகழ்வுகளிற்கான தயார்படுத்தல்களிற்கு வெளியில் இருந்து துறைசார்ந்த வர்களை அழைத்துவருவாள் . ஒரு போது ஆங்கில பேச்சுகளை பயிற்று விப்பதற்காக தன் தந்தையும் மருத்துவகல்லூரி வரை அழைத்து வந்ததாக ஒன்றாக பயின்றவர்கள் கூறினார்கள். மருத்துவ கல்லூரி ஆரம்பித்தபோது பலர் மருத்துவத் துறைக்கு புதியவராகவே சேர்ந்திருந்தனர். சுமி களமருத்துவ அனுபவம் வாய்ந்த போராளியாக இருந்ததால் படித்துக் கொண்டிருக்கும் போதே சமர்க்களங்களிற்கு மருத்துவ அணியுடன் செல்லும் பாக்கியம் பெற்றிருந்தாள்.

ஈரூடக தாக்குதல் என்று வர்ணிக்கப்பட்ட பூநகரி தவளைத்தாக்குதல் மற்றும் 1995.07.28 அன்று கொக்குத்தொடுவாயில் நடைபெற்ற தாக்குதலிலும், சூரியக்கதிர், புலிப்பாய்ச்சல், இடிமுழக்கம் என்று ஒவ்வொரு களங்களிலும் உயிர்த்தோழர் உயிர்காக்க ஓடி யோடி உழைத்தாள் எங்கள் சுமி. பின்னர் யாழ் இடப்பெயர்வின் பின் எல்லாத்திசைகளிலும் போர்க்களங்கள் விரிய விடுதலைப்புலிகளின் மருத்துவத்துறை தனியான மருத்துவமனைகளையும் சத்திரசிகிச்சைக் கூடங்களையும் களமுனைக்கு ஏற்ப பல இடங்களிற்கு பரவலாக்கியது. மருத்துவக் கல்லூரியின் கல்வி நடவடிக்கையும் சில காலம் தடைப்பட்டு பின்னர் அந்தந்த இடங்களில் நடைபெற்றது; எப்போதும் சமர்களிலே தாய்ச்சமர் என வர்ணிக்கப்பட்ட ஜெயசிக்குறு, சத்ஜெய போன்ற களமுனைகளில் மருத்துவராகவும் பின்னணி சத்திரசிகிச்சைக் கூடங்களிலும் செயற்படத் தொடங்கினாள். ஆனால், அதன் பின்னரான நாட்களில்… அவள் தனது பாசறைத் தோழியாக இருந்து பெரும் படையணியை வழிநடத்தும் சோதியா படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த பிரிகேடியர் துர்க்கா அக்கா அவர்களால் அந்த படையணிக்குள் உள் வாங்கப்பட்டு தன் கடமையைத் தொடர்ந்தாள். அங்கு மருத்துவம் மட்டுமன்றி சிறப்பு தளபதியின் நம்பிக்கைக்கு உரியவராக அவரது உதவியாளராக பல வேலைகளை செய்தாள்.

உலகின் கவனத்தை ஈர்த்து விடுதலைப்புலிகளின் உச்சகட்ட போரிடும் ஆற்றலை வெளிப்படுத்தியது இத்தாவில் சமர்களம். இத்தாக்குதலுக்காக கடல்வழியாக தரையிறங்கிய புலிகளின் படையணிகள் இராணுவ வலயத்தை ஊடுருவித் தமது நிலைகளை அமைத்திருந்தன. தொடர்ந்து முப்பத்து நான்கு நாட்கள் கடுஞ்சமரின் பின் ஆனையிறவுப் படைத்தளம் விடுதலைப்புலிகளால் கைப்பற்பட்டது.

இந்த வரலாற்றுச் சமரில் சோதியா படையணி சிறப்புத் தளபதி பிரிகேடியர் துர்கா அவர்களின் பிரதான உதவியாளராக சுமியும் உடனிருக்கின்றாள். எல்லாத் திசைகளிலும் இருந்து உக்கிரமாக தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது ஆட்லறி தாக்குதல்கள் மழையாய் பொழிந்தன. அந்த வீரம் செறிந்த சமர்க் களத்தில் 2000.04.11 அன்று இந்த வெற்றிச் சமருக்கு வித்திட்ட வேங்கைகளின் வரிசையில் மேஜர் சுமியும் வரலாற்று நாயகி என்ற வீரம் நிறைந்த பெண்புலிகளின் காவியத்தில் புகுந்துகொள்கின்றாள்.

விழுப்புண்ணடைந்த ஆயிரம் ஆயிரம் வீரர்களை காப்பாற்ற உழைத்த அவளது கரங்கள் அன்று அமைதியாய் கிடந்தன; விடுதலைப் பாதைக்கு உரம் இட்டவர்களின் வரிசையில் மேஜர் சுமியும் இணைந்து கொண்டாள். இந்த சரித்திர நாயகர்களின் உடல் பிரிந்தாலும் அவர்களின் தியாகங்களை இன்றும், என்றும் பேசிக்கொண்டேயிருப்போம்..

நினைவுப்பகிர்வு: மிதயா கானவி.

 

https://thesakkatru.com/mejor-sumi/

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.