Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரச ஓடுக்குமுறையும் ஆயுத எதிர்ப்புமுறையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரச ஓடுக்குமுறையும் ஆயுத எதிர்ப்புமுறையும்

Thesiyath-Thalaivar.jpg

குறிப்பு: 1984 ஆம் ஆண்டு மே மாதம், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமிழீழ மக்களுக்கு விடுத்த அறிக்கை. சிங்கள இனவாத அரசின் ஒடுக்குமுறைபற்றியும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வரித்துள்ள ஆயுத எதிர்ப்புமுறைபற்றியும், இந்த அறிக்கையில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தெளிவான விளக்கங்களை அளிக்கிறார். ஒன்றுபட்ட போராட்டத்தை வலியுறுத்தி, ஏனைய தமிழ் அமைப்புகளுக்கு அவர் விடுத்துள்ள செய்தியும், இதில் அடங்குகிறது. ஒட்டுமொத்தத்தில் இந்த அறிக்கை அன்றைய போர்ச் சூழ்நிலைபற்றியும், இயக்கத்தின் போராட்ட குறிக்கோள்கள் பற்றியும் விரிவான விளக்கத்தைக் கொடுக்கிறது.

எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே!

எமது அரசியல் வரலாற்றிலேயே மிகவும் இக்கட்டான, மிகவும் நெருக்கடியான, மிகவும் வேதனையான காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இனவெறி பிடித்த இராணுவ ஓநாய்கள் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்து, முற்றுகையிட்டு, எம்மீது தாங்கொணாக் கொடுமைகளை விளைவித்து வருகின்றன. மிகவும் கொடுங்கோன்மையான இராணுவ சர்வாதிகார ஆட்சி எம்மீது திணிக்கப்பட்டிருக்கிறது. எமது சொந்தமண்ணில், நாம் பிறந்து வாழ்ந்து சுதந்திரமாக உலாவிய மண்ணில், எமது புனித மண்ணில், நாம் சிறைக்கைதிகளாக, அடிமைகளாக அல்லல்படுகிறோம். உயிரழிவும் பொருளழிவுமாக, இரத்தமும் கண்ணீருமாக, பசியும் பட்டினியுமாக, பயமும் பதட்டமுமாக எமது நாளாந்த வாழ்க்கை நரகமாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்தச் சிங்கள அரச பயங்கரவாத வெறியாட்டத்தின் நோக்கம்தான் என்ன?

இனவாரியாக எமது கழுத்தைத் திருகி எம்மைத் துன்பத்தின் எல்லைக்குத் தள்ளி, எமது உறுதிப்பாட்டை உடைத்து, எமது சுதந்திர வேட்கையைக் கொன்று, எம்மை மண்டியிடச்செய்வது தான் எதிரியின் பிரதான நோக்கம், தமிழ் இனத்தின் தேசிய ஆன்மாவை ஆயுத பலாத்காரத்தின்மூலம் அடிமைகொள்வதே எதிரியின் திட்டம். ஒடுக்குமுறையாளன் தனது ஆற்றாத்தன்மையால், தனது கையாலாகாத்தனத்தால், தனது பலவீனத்தால் வெகுசனத்திற்கு எதிராகத் தனது அடக்குமுறையை முடுக்கி விடுகிறான். இது உலகளாவிய வரலாற்று உண்மை. முதிர்ச்சி பெற்று முன்னேற்றம் கண்டு வரும் எந்தவொரு விடுதலைப் போராட்டத்திலும், எதிரியானவன் தனது இயலாத் தன்மையால் வெகுசனம் மீது மூர்க்கமாகப் பழிதீர்த்துக்கொள்ளத் தயங்குவதில்லை. விடுதலைப் போராட்டத்திற்கு வெகுசன ஆதரவும் பங்களிப்பும் பெருகும் போது, வெகுசனத்திலிருந்து விடுதலைப் போராளிகளை இனங்காண முடியாதபோது, ஒடுக்குமுறையாளன் வெகுசனத்திற்கு எதிராகத் திரும்புகின்றான். சிங்கள இனவாத அரசும் இந்த இறுதிக்கட்டத்திற்குத் தள்ளப்பட்டதால் தான், அப்பாவிகளாகிய உங்கள் மீது அதர்ம யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. சிங்கள அரசின் இராணுவ பயங்கரவாத அட்டூழியத்திற்கு நேரடி இலக்காகி நசுக்கப்பட்டு வருவது, தமிழ் இளம் சமூகத்தினரே. இவர்கள் உங்களது இளவல்கள். நீங்கள் பெற்றெடுத்த பிள்ளைகள், இவர்கள் தான் இன்று ஆயுதப் போராளிகளாக, விடுதலை மறவர்களாக மாறியிருக்கிறார்கள்.

புனித இலட்சியம்

குடும்பத்தைத் துறந்து, கல்வியைத் துறந்து, இளமையின் இன்பங்களைத் துறந்து, சுதந்திரம் என்ற இலட்சியத்திற்காக தமது உயிரையும் துச்சமாக மதித்து, போராட்ட களத்தில் குதித்திருக்கிறார்கள். இவர்களை ஆயுதப் போராட்டப்பாதைக்குத் தள்ளியது சிங்கள அரச பயங்கரவாதமேயன்றி, வேறொன்றுமல்ல. அநீதியான-அதர்மமான கொடுங்கோன்மை ஆட்சியை இவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. சிறை, சித்திரவதை, உயிர்வதையாகத் தம் மீது திணிக்கப்பட்ட கொடூரமான வாழ்வை இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆகவேதான் அடிமைகளாக வாழ்வதைவிட சுதந்திரத்திற்காகச் சாவதே மேல் என்ற புனித இலட்சியத்தை, இவர்கள் வரித்துக்கொண்டார்கள். இந்தப் புனித இலட்சியத்திற்காக இரத்தம் சிந்துகிறார்கள்; கண்ணீர் வடிக்கிறார்கள்; உயிரையும் அர்ப்பணித்துத் தியாக வீரர்களாக வீர வரலாறுகளைப் படைக்கிறார்கள். ஆனால் இனவெறி பிடித்த சிங்கள அரசின் குருட்டுத்தனமான பார்வையில் இவர்கள் பயங்கரவாதிகள், வன்முறைவாதிகள், அராஜகவாதிகள்; இவர்களது உன்னதமான இலட்சியப் போராட்டம் பயங்கரவாதம், பொதுமக்களாகிய உங்களுக்கு உண்மை நிலைமை நன்கு தெரியும். உங்கள் குழந்தைகள் மீது குத்தப்படும் அரசியல் முத்திரைகள் அர்த்தமற்றது, அநியாயமானது என்பதும், உங்களுக்குத் தெரியும்.

நாம் தர்மத்திற்காக, தன்மானத்திற்காக, சுதந்திரத்திற்காக ஆயுதம் ஏந்தியிருக்கிறோம். எமது இலட்சியப் பயணமும் அதற்காக நாம் புரிந்துவரும் உன்னத தியாகங்களும் உங்களுக்குப் புரியும். ஆதலால் தான் நீங்கள் எம்மை அரவணைத்துக்கொள்கிறீர்கள். ஆதரவு அளிக்கிறீர்கள். எமக்குப் புகலிடம் தருகிறீர்கள். நாம் மக்கள் சமுத்திரத்தில் சங்கமமாகியுள்ளோம். இதனால் பொதுமக்களாகிய உங்களிடமிருந்து எம்மைப் பிரித்துவைக்கும், தந்திரோபாயங்கள் எதுவும் பயனளிக்கவில்லை. இதனால் விரக்தியுற்று ஆத்திரங்கொண்ட சிங்கள இனவாத அரசு, வெகுசனம்மீது போர்தொடுத்திருக்கிறது. ஆயுத பலாத்கார அட்டூழியங்களைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. உங்களது பிள்ளைகளை நீங்கள் காட்டிக்கொடுக்கவில்லை என்பதற்காக, உங்களைத் தாங்கொணாத் துன்பத்தின் எல்லைக்குத்தள்ளி, உங்கள் மீது பழிதீர்த்துக்கொள்ள முனைகிறது. எமது சுதந்திரப் போராட்டம் நீண்ட துன்பகரமான வரலாற்றைக் கொண்டது.

பழைய தலைமை

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக படிப்படியாக எமது உரிமைகள் பறிக்கப்பட்டு, எமது உடைமைகள் அழிக்கப்பட்டு, எமது உயிர்கள் இழக்கப்பட்டு, இன்று நாம் எமது சொந்தமண்ணில் சிறைக்கைதிகளாக அடிமைகளாக வாழும் அபாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றோம். எமது எதிரியோ நாகரீகமற்றவன், மனிதாபிமானமற்றவன், மிருகத்தனமானவன். அவனுக்குத் தர்மம் என்பதோ தார்மீகம் என்பதோ மனிதம் என்பதோ கிடையாது. இனவாதப் பித்துப் பிடித்து தமிழனின் இரத்தம் குடிக்கும் வெறிகொண்ட மிருகமாகிய ஒரு எதிரியிடம், நாம் நீதி கேட்க முடியாது; நியாயம் கேட்க முடியாது. பழைய பாராளுமன்றத் தலைமை, எதிரியைப் புரிந்து கொள்ளும் ஆற்றலும் அரசியல் ஞானமும் அற்றதாக இருந்ததால் தான், எமக்கு இந்தத் துர்க்கதி ஏற்பட்டது. சப்பாணி கட்டி, மண்டியிருந்து, சலுகைகளுக்காகத் தவமிருந்து, நம்பி நம்பி ஏமாந்து, ஒரு பரம்பரையின் காலத்தை இவர்கள் வீணடித்தனர். இவர்களது விவேகமற்ற அரசியல் போக்கால் எமது விடுதலைப் போராட்டம் பல்லாண்டு காலம் பின்தள்ளப்பட்டது. கடந்த முப்பது ஆண்டு காலத்திற்கு மேலாக, படிப்படியாகத் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒடுக்குமுறையானது, இன ஒழிப்பை இலக்காகக்கொண்ட ஒரு நாசகாரத் திட்டமென்பதைத் தமிழ்ப் பாராளுமன்ற அரசியல்வாதிகள் தீர்க்க தரிசனத்துடன் புரிந்து கொள்ளவில்லை. அரச பயங்கரவாதம் கூர்மையடைந்து சிங்கள இனவாதப் பூதம் தமிழ் இனத்தைப் பூண்டோடு அழிக்கக் கிளம்பிய போதும் கூட இவர்கள், பாராளுமன்ற ஆசனங்களையும் பதவிகளையும் கட்டிப்பிடித்தபடி சிங்களத் தலைவர்களுக்குத் துதி பாடிக்கொண்டிருந்தார்கள். கூட்டணித் தலைவர்கள் புரிந்த மாபெரும் தவறு என்னவென்றால், தமிழ்ப் புரட்சிவாத இளைஞர் பரம்பரையை அந்நியப்படுத்தி வந்தமையாகும்.

நாமே போராடி விடுதலை பெறவேண்டும்

தேசிய சுதந்திரத்திற்காக நாம் வரித்துக்கொண்ட புரட்சிகர ஆயுதப் போராட்டத்தின் வரலாற்றுக் கட்டாயத்தையும் அதன் அரசியல் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளாமல், எமது போருபாய வடிவத்தினைக் கண்டித்து வந்தனர். எம்மைப் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என வர்ணித்தனர். ஆனால் நாம் பயங்கரவாதிகளுமல்லர், பலாத்காரத்தில் பற்றுடையவர்களுமல்லர். எம்மீது திணிக்கப்பட்டுள்ள பலாத்காரத்திலிருந்து விடுபடவே நாம் பலாத்காரப் பாதையில் இறங்கினோம். வன்முறையை மென்முறையால் வென்று கொள்ளமுடியாதென்பதை உணர்ந்து கொண்டதால் தான், நாம் வன்முறைப் போராட்டத்தைத் தழுவிக்கொண்டோம். நாம் ஆயுதத்தை ஏந்தியது எமது அரசியல் விடுதலைக்காகவேயன்றி வேறொன்றிற்காகவுமல்ல. நாம் போராட்ட காலத்தில் இரத்தம் சிந்தியபோது, எமது இளம் வீரர்கள் உயிர்த்தியாகங்கள் புரிந்து வந்தபோது, தமிழ் இளம் சமூகம் தாங்கொணா ஒடுக்குமுறைக்கு இலக்காகியபோது, போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு கூட்டணித்தலைவர்கள் எதனையும் உருப்படியாகச் செய்யவில்லை. இவர்கள் செய்ததெல்லாம் எமது ஆயுதப் போராட்டத்தை ஒரு அரசியல் அழுத்தமாகப் பிரயோகித்து, சலுகைகள் வேண்டி சிங்கள அரசுடன் சமரசப்பேச்சுக்களை நடாத்தி வந்ததுதான். இன்று சிங்கள அரசால் தூக்கியெறியப்பட்டு அரசியல் அரங்கில் இருந்து அந்நியமாக்கப்பட்டிருக்கும் இந்த வேளையில் தான், புரட்சிகர விடுதலை அமைப்புக்களை நாடவேண்டிய ஞானோதயம் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையிலும்கூட நாமே போராடி எமது மக்களின் விடுதலையை நாமே பெற்றெடுக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை, இவர்களிடம் இல்லை. இதனால் தான் இந்திய இராணுவப் படையெடுப்பிற்கு இவர்கள் அழைப்புகளை விடுகிறார்கள்.

மிகப்பெரிய தவறு

எமக்கு இந்தியாவின் உதவி அவசியம். இந்தியாவின் ஆதரவு அவசியம். இந்தியாவின் நல்லெண்ணம் அவசியம். நாம் முதலில் இந்தியாவிடம் எமது தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவு பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்; எமது மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறு வலியுறுத்தவேண்டும். தமிழீழத் தனியரசே எமது பிரச்சினைக்கு இறுதியான தீர்வு என்பதைத் திட்டவட்டமாக எடுத்துரைக்கவேண்டும். எமது கோரிக்கையைத் தெட்டத் தெளிவாக எடுத்துக்கூறி இந்தியாவின் நல்லாதரவைப் பெறுவதை விட்டு, எமது பிரச்சினையைத் தீர்த்துவைக்குமாறு இந்தியாவிடம் கைநீட்டி நிற்பது, அரசியல் சாமர்த்தியமாகாது. கூட்டணித் தலைமை புரிந்த மிகப் பெரிய இராஜதந்திர அரசியல் தவறு இதுவாகும். ஆரம்பத்திலிருந்தே தமிழீழத் தனியரசுக் கோரிக்கையில் ஒரு தெளிவான, உறுதியான, தீவிரமான நிலைப்பாட்டை மேற்கொண்டு இந்திய அரசுக்கு அதை இடித்துரைத்திருந்தால், எமது பிரச்சினை இந்த மோசமான கட்டத்தை அடைந்திராது.

காலங்கடந்த ஞானோதயத்தில் இன்று தமிழீழம் பற்றி இவர்கள் சூளுரை விடுவதெல்லாம், மக்கள் மத்தியில் தாம் இழந்த செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டி புரட்சிகர இளைஞர்களைக் கவர்ந்திழுப்பதற்கேயன்றி, வேறொன்றிற்குமல்ல. இவர்களின் சந்தர்ப்பவாத அரசியல்மீதும் இவர்களது வர்க்க நலன்கள் மீதும், புரட்சிகர இளைஞர் சமுதாயம் விழிப்பாக இருக்கவேண்டும். இன அழிவில் இருந்து எமது மக்களைப் பாதுகாத்து தேசிய சுதந்திரத்தை முன்னெடுப்பதாயின், எமது தாய்ப்பூமியை ஆக்கிரமித்திருக்கும் எதிரிப் படைகளை விரட்டியடிக்கவேண்டும். இந்தக் கைங்கரியமானது தீர்க்கமான, திட்டமிடப்பட்ட ஆயுதப் போராட்டத்திலும் எமது மக்களின் ஏகோபித்த பங்களிப்பிலும் தங்கியிருக்கிறது என்பதை, யாரும் மறுக்கப் போவதில்லை. இந்த இலக்கின் அடிப்படையிலேயே எமது விடுதலை இயக்கம் ஆயுதப் போரை முன்னெடுத்து வந்திருக்கிறது. தமிழீழ மண்ணில் ஆயுதப் புரட்சி இயக்கத்திற்கு அத்திவாரமிட்டவர்கள் நாம். தமிழனின் வீரமரபைச் சித்திரிக்கும் சின்னமாக உதித்த எமது இயக்கம், வீர வரலாறு படைக்கும் புரட்சிகர விடுதலைச்சக்தியாக விரிவடைந்து வளர்ந்திருக்கிறது.

ஒற்றுமையை ஏற்படுத்துவது எப்படி?

கடந்த பத்து ஆண்டு காலமாக நாம் தொடர்ச்சியாக, தீர்க்கமாக, மூர்க்கமாக எதிரியோடு போராடி வருகிறோம். சமீபகாலமாக எமது போராட்டத்தைத் தீவிரப்படுத்தி எதிரிக்குப் பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருகிறோம். தொடர்ந்தும் ஆயுதப் போராட்டத்தை விஸ்தரித்து தீவிரப்படுத்த எமது படையணிகள் தயாராகி வருகின்றன. தனித்து நின்று போராடி தமிழீழம் காணவேண்டும் என்ற இறுமாப்போடு நாம் இயங்கவில்லை. ஆயுதப் போராட்டப்பாதையை வரித்துக்கொண்ட சகல விடுதலை அமைப்புக்களும் எமது பொது எதிரியை எதிர்கொண்டு போராட வேண்டும் என்பதே எமது ஆவல். ஒன்றுபட்டுப் போராடுவதே எமது பலத்தைப் பன்மடங்கு பெருக்கும். ஆகவே நாம் ஒற்றுமையை வரவேற்கவே செய்கிறோம். ஒற்றுமையின் தேவையை உணர்கிறோம். ஆனால் இந்த ஒற்றுமையானது தமிழீழப் புரட்சி இயக்கத்திற்கு அப்பாற்பட்ட அந்நிய சக்திகளின் அழுத்தங்கள் காரணமாகவோ அன்றிப் பிற்போக்குச் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளின் நெருக்குதல் காரணமாகவோ அவசரப்பட்டுச் சமைத்த சாம்பாறு ஒற்றுமையாக அமைவதை, நாம் விரும்பவில்லை. அப்படியான தளர்ந்த, உறுதியற்ற, சந்தர்ப்பவாத இணைப்புக்கள் நிரந்தரமான ஒற்றுமையை, உண்மையான ஒற்றுமையை, உருப்படியான ஒற்றுமையை உருவாக்கப் போவதில்லை என்பதே, எமது கருத்து. இப்படிச் சொல்வதால் நாம் ஒற்றுமையை விரும்பவில்லை என்று எவரும் தவறாகக் கருதிவிடக்கூடாது. நாம் விரும்புவது உண்மையான, நிரந்தரமான ஒருமைப்பாட்டையே. இந்த ஒற்றுமையானது பாட்டாளி வர்க்கத் தலைமையைக் கட்டியெழுப்பும் இலக்கில், வரலாற்றுப்போக்கினை உணர்ந்து கொண்ட தெளிவில், புரட்சிகர இலட்சியங்களில் இருந்து வழுவாத உறுதிப்பாட்டில், ஆழமான சகோதரத்துவப் புரிந்துணர்வில், புரட்சிகர சக்திகளின் மத்தியில் ஏற்பட வேண்டிய ஒன்றாகும்.

ஒன்றிணைந்து போராடுவோம்

இந்த ஒற்றுமையானது எந்தவொரு கட்டாயத்தின் பேரிலேயோ, அழுத்தத்தின் பேரிலேயோ, பலவந்தமாகத் திணிக்கப்படுவதல்ல. நாம் இந்த வரலாற்றில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நிற்கிறோம். தமிழீழத்தில் கோரத்தாண்டவமாடிவரும் அரசபயங்கரவாத அட்டூழியங்களால் எமது மக்கள் மிகவும் இக்கட்டான ஆபத்தான நிலையை எதிர்நோக்கியுள்ளனர். எமது மக்கள் சிங்கள இனவாத அரக்கர்களால் கொன்று குவிக்கப்படும் போது முழு உலகமுமே கவலை கொள்ளலாம். கண்டனங்கள் தெரிவிக்கலாம், கண்ணீர் வடிக்கலாம். ஆயினும் எமது மக்களைப் பாதுகாத்து அவர்களது சுதந்திரத்தை வென்றெடுக்கும் மாபெரும் பொறுப்பு விடுதலைப் போராளிகளாகிய எம்முடையது என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். இந்த மாபெரும் வரலாற்றைச் சுமந்து கொண்டிருக்கும் நாம் எம் மத்தியிலுள்ள வேற்றுமைகளை, வெறுப்புக்களைக் களைந்து எமது மக்களின் விடிவுக்காக ஒன்றிணைந்து போராடும் காலம் அண்மித்து விட்டதென்றே கருதுகிறேன். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இதனையே எமது மக்களும் எதிர்பார்க்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாததல்ல. ஒற்றுமைக்கு முதற்படியாக ஒற்றுமைக்கான நல்லெண்ணச் சூழ்நிலையை நாம் உருவாக்கிக் கொள்வது அவசியம். இதற்கு வழியாக ஒருவரையொருவர் விசமத்தனமாக தாக்கி விமர்சிப்பதை நாம் நிறுத்திக் கொள்ளவேண்டும். துரதிர்ஷ்டவசமாக எமது மத்தியில் வேரூன்றிய வேறுபாடுகள், வெறுப்புணர்வுகளைக் களைந்துவிட வேண்டும். சொல்லளவில் ஒற்றுமை வேதாந்தம் பேசிக் கொண்டு செயலளவில் சகோதரத்துவ யுத்தம் நடத்தும் விடுதலை அமைப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. இந்தச் சகோதர விரோத செயற்பாடுகள் நிறுத்தப்படாமல், ஒற்றுமைக்கான நல்லெண்ணச் சூழ்நிலையை எப்படி உருவாக்குவது? ஒற்றுமை என்ற உயரிய நோக்கினை மக்களை ஏமாற்றும் வெறும் பிரச்சார சாதனமாக கையாள்வது மிகவும் கீழ்த்தரமான அரசியல் சந்தர்ப்பவாதமாகும். ஒற்றுமைக்கு அழைப்புக்கள் விடுத்துக்கொண்டு, புரிந்துணர்வுகளுக்குக் கோரிக்கைகள் விடுத்துக் கொண்டு, எமது விடுதலை இயக்கம் மீது விசமத்தனமான பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

கெரில்லாப் போர்முறை

முதலாவதாக, நாம் தேர்ந்தெடுத்துள்ள ஆயுதப்போராட்ட வடிவமான கெரில்லாப்போர் முறையைச் சில அமைப்புக்கள் கண்டித்து விமர்சனம் செய்கின்றன. கெரில்லாப்போர்முறை வேறு, மக்கள் யுத்தம் வேறு என்றும், மக்களைத் தயார்ப்படுத்தி தகுந்த காலம் கனிந்து வரும்போது வெகுசன யுத்தம் நடாத்த வேண்டும் என்ற ரீதியில் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலைப்பாட்டை நாங்கள் ஆக்கபூர்வமான, ஆரோக்கியமான விமர்சனமாகக் கொள்ளவில்லை. கெரில்லாப்போர் முறையானது ஒரு வெகுசனப் போராட்டவடிவம் என்பது உலகானுபவம் பகரும் உண்மை. கெரில்லாப் போராட்டத்தை மக்கள் மத்தியில் படிப்படியாக நிலைப்படுத்தி மக்களின் பங்களிப்போடு விரிவுபடுத்தி வெகுசனயுத்தமாக பரிணாமம் பெறச்செய்யும் கொள்கைத் திட்டத்தின் அடிப்படையிலேயே நாம் இந்தப் போராட்ட வடிவத்தை முன்னெடுத்து வருகிறோம். இன்னொரு வகையில் சொல்லப்போனால் எமது இலக்கு வெகுசன ஆயுதப் போராட்டமே. அடுத்ததாக கெரில்லா வடிவ ஆயுதப் போராட்டமே, எமது பிரத்தியேகச் சூழ்நிலைக்குப் பொருத்தமானது என்பதை எவராலும் மறுக்க முடியாது. பலம் வாய்ந்த ஒரு எதிரியைப் படிப்படியாகப் பலவீனப்படுத்தி அவனது மனோ உறுதியை உடைத்தெறிந்து அவனது ஆயுத பலத்தை அழிப்பதற்குக் கெரில்லாப்பாணியிலான போர்முறையே தலைசிறந்த யுத்த தந்திரோபாயமாகும். இப்போராட்ட முறைக்கு வெகுசன ஆதரவு இருந்து வருவதால் எதிரியானவன் எத்தனையோ நாசகார யுக்திகளைக் கையாண்டும் எம்மை நசுக்கிவிட முடியவில்லை. பதிலாக எமது இயக்கம்பரந்த அளவில் வளர்ந்து இருக்கிறது. எமக்கு வியப்பைக் கொடுக்கும் விடயம் என்னவென்றால் கெரில்லா யுத்தத்தைக் கண்டிக்கும் அமைப்புக்கள் இதே யுத்த தந்திரோபாயங்களையே அன்றும் இன்றும் கையாண்டு வருவது தான். சித்தாந்தத்திற்கும் செயற்பாட்டிற்கும் இவ்வித முரண்பாடுகள் இருப்பதால் சில போர் நடவடிக்கைகள் உரிமை கோரப்படாமலேயே விட்டுவிடப்படுகின்றன என்பதும் எமக்குத் தெரியாததல்ல. ஆகவே எமது போராட்ட முறைக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்கள் விசமத்தனமானதென்றே நாம் கருதுகிறோம்.

இராணுவ பயங்கரவாதம்

இரண்டாவதாக தமிழீழத்தில் தலைவிரித்தாடும் இராணுவ பயங்கரவாதத்திற்கு எமது போர் நடவடிக்கைகளே காரணம் என்ற வகையில் கண்டனங்கள் முன்வைக்கப்படுகின்றன. திட்டமிடப்படாத போராட்டம், தாக்கிவிட்டுத் தலைமறைவாகும் தந்திரம், என்றெல்லாம் வீம்புத்தனமான விமர்சனங்கள் செய்யப்படுகின்றன. அப்பாவி மக்களைப் பயமுறுத்தி எமது எதிரியானவன் எமக்கு எதிராக எதை எமது மக்களுக்கு எடுத்துரைக்க விழைகிறானோ; அதே பிரச்சாரத்தை சில அமைப்புக்கள் முன்வைத்து விடுகின்றன. இதனால் இயக்கங்கள் மத்தியில் முரண்பாட்டையும், மக்கள் மத்தியில் கோழைத்தனத்தையும் ஏற்படுத்திவிடும் எதிரியின் யுத்த தந்திரத்திற்கு நாமே இடமளித்துக்கொள்வதாக முடிந்து விடுகிறது. ஈழத்தமிழர்களுக்கு எதிராகச் செய்த இனக் கொலைத்திட்டமும், அதன் வெளிப்பாடான அரச பயங்கரவாத அட்டூழியங்களும் எமது விடுதலை இயக்கம் தோற்றம் கொள்வதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னதாகவே தலைதூக்கியது என்பதனை யாவரும் அறிவார்கள். மென்முறை தழுவிய சமாதான, சாத்வீகப் போராட்டங்களை எமது மக்கள் நடத்தியபோதும் அவர்கள் மீது இராணுவ பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்படவில்லையா? எத்தனையோ இனப்பூகம்பங்கள் வெடித்து எமது மக்கள் ஆயிரக்கணக்கில் ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கப்படவில்லையா? எவ்விதமான ஆக்கிரமிப்புச்செயலும் நடைபெறாத போதும் அப்பாவி மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டும் அவர்களது உடமைகள் அழிக்கப்பட்டும், கொடுமைகள் நடக்கத்தானே செய்தன. அரச அடக்குமுறையானது அன்றும் இருந்திருக்கின்றது. இன்றும் இருந்து வருகிறது. ஆனால் இன்று அரச பயங்கரவாத ஒடுக்குமுறை கூர்மை அடைந்திருக்கிறது. அதன் வலிமை மிகவும் மோசமான மக்கள் ஒழிப்பு வன்முறையாக மாற்றம் பெற்றிருக்கிறது. சிங்கள இனவாத இராணுவமானது தனது கையாலாகாத்தனத்தால், கோழைத்தனத்தால் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி நீட்டுகிறது. போராளிகளை எதிர்கொள்ள திராணியற்றுப் பொதுமக்களை வஞ்சம் தீர்த்துக்கொள்கிறது. அப்பாவி இளைஞர்களை வேட்டையாடி வதை செய்கிறது. இவ்விதம் நாகரீக உலகமே வெறுக்கத்தக்க மனித விரோத யுக்திகளைக் கையாளுகிறது சிங்கள இராணுவம். இன்னொரு விதத்தில் சொல்லப்போனால் சிங்கள அரசானது பயங்கரவாத ஒழிப்பு என்ற போர்வையில் எமது மக்கள் மீது ஒரு யுத்தத்தை ஆரம்பித்திருக்கிறது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் நாம் எதைத்தான் செய்வது? அப்பாவி மக்கள் அநியாயமாகக் கொல்லப்படுகிறார்கள் என்பதற்காக நாம் ஆயுதப்போராட்டத்தைக் கைவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவதா? எதிரியான வன் ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்தி வெறியாட்டம் ஆடும்போது நாம் கைகட்டிப்பார்த்துக்கொண்டிருப்பதா? எமது இனம் படிப்படியாக அழிந்து கொண்டிக்கும் அபாயநிலையைக்கண்டும் தக்க தருணம் வரட்டும் மக்களைத் தயார்ப்படுத்திப் போராடுவோம் என்று சும்மா இருந்து விடுவதா? அல்லது அயல் நாட்டுப்படைகள் வந்து எமக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தரும் என்ற கற்பனையில் நாம் காலத்தைக் கழிப்பதா?

போராட்டத்தை தீவிரமாக்குவோம்

நாம் ஒன்றை மட்டும் தெட்டத்தெளிவாக கூற விரும்புகிறோம். எந்தச் சூழ்நிலையிலும் நாம் போராட்டத்தை ஒத்திப்போட முடியாது. போராட்டத்திலிருந்து ஒதுங்கி, காலம் கனியும் என்று காத்திருக்கவும் முடியாது, நாம் தொடர்ந்து போராடியே தீருவோம். போராட்டத்தைத் தொடர்ந்து தீவிரமாக்குவோம். எதிரி இராணுவத்திற்குத் தகுந்த பதில் அடி கொடுத்து அதன் முதுகெலும்பை முறித்துவிடுவதைத் தவிர இந்தச் சூழ்நிலையில் எமக்கு வேறெந்த வழியுமில்லை. எதிரியை எமது மண்ணிலிருந்து விரட்டியடித்து எமது மக்களின் சுதந்திரத்தை வென்றெடுப்பதாயின் நாம் போராடியே தீரவேண்டும். ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தில் சகல புரட்சிகர விடுதலை அமைப்புகளுக்கும் நாம் விடுக்கும் வேண்டுகோள் இதுதான்.

போர்க்களத்தில் குதியுங்கள். எமது பொது எதிரிக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம். களத்தில் எதிரியை சந்திக்கும்போது எம்மத்தியில் பரஸ்பர ஒத்துழைப்பும் நல்லெண்ணமும் பிறக்கும் என்பது திண்ணம். அதே சமயம் உண்மையான ஒருமைப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான முயற்சிகளையும் மேற்கொள்வோம். நாம் தோளோடு தோள் நின்று போராடும் போது எமது மக்களும் எம்மோடு அணிதிரள்வார்கள். முழுத்தேசமுமே எமக்குப் பக்கபலமாக நிற்கும். எமது ஒன்று திரண்ட பலத்தைக்கண்டு எதிரி நடுக்கம் கொள்வான். நாம் களத்தில் ஒன்றிணைந்து போராடினால் எதிரியை எமது தாய்நாட்டிலிருந்து விரட்டியடித்து சுதந்திரத்தமிழீழம் காண்பது வெகுதூரத்தில் இராது.

எமது அன்பான தமிழ் மக்களே! விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல் பாதை. கல்லும் முள்ளும் நிறைந்த கடினமான பாதை. வியர்வை சிந்தி கண்ணீர் சிந்தி இரத்தம் சிந்தி தாங்கொணாத்துன்பத்தின் பரிசாகப் பெறுவது தான் சுதந்திரம். சுதந்திரம் இல்லாமல் மனித வாழ்வில் அர்த்தமே இல்லை. நாகரீகம் தோன்றிய காலம் தொட்டு இன்று வரை சுதந்திரம் என்ற உன்னத இலட்சியத்திற்காக ஒடுக்கப்பட்ட மனித சமூகங்கள் போராட்டங்களை நடாத்தி வருகிறது; யுத்தங்கள் புரிந்து இருக்கிறது. புரட்சிகள் செய்து இருக்கிறது. சுதந்திரப் போராட்டங்களாகவே மனித வரலாறு அசைகிறது. இந்த சுதந்திரத்தை வென்றெடுக்காது போனால் நாம் நிம்மதியாக வாழ முடியாது. சமாதானமாக வாழ முடியாது. சந்தோசமாக வாழ முடியாது. சுதந்திரத்தை வென்றெடுக்காது போனால் நாம் அடிமைகளாக வாழ வேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழ வேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழ வேண்டும். படிப்படியாக அழிந்து போகவேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவும் இல்லை.

மக்களின் பங்களிப்பு

இளைஞர்கள் இருக்கிறார்கள், அவர்கள் போராடித் தமிழீழம் பெறுவார்கள், அல்லாவிடில் இந்தியா இருக்கிறது. எமக்கு சுதந்திர தனியரசு பெற்றுத்தரும் என்ற வகையில் நாம் சும்மா இருந்து விட்டால் எமக்குச் சுதந்திரம் கிடைக்கப்போவதில்லை. பொதுமக்களாகிய உங்களின் நேரடிப்பங்களிப்பின்றி எமது தேசிய சுதந்திரப் போராட்டம் வெற்றியளிக்கப் போவதில்லை. சுதந்திரப் போராட்டம் என்பதே மக்கள் போராட்டம். பரந்துபட்ட வெகுசனங்கள் ஒன்று திரண்டு ஒரு ஐக்கிய தேசமாக எழுச்சி கொண்டு போராட்டத்தில் பங்களித்தால் தான் எமக்கு வெற்றி நிச்சயம். எமது எதிரியோ தனது ஆயுதப் படைகளை எமக்கு எதிராக ஏவிவிட்டதுமன்றி சிங்கள வெகுசனத்தையும் தமிழருக்கு எதிராக அணிதிரட்டுகிறான். சிங்கள மக்களுக்கு இனவெறியூட்டி, போர் வெறியூட்டி ஆயுதம் தரித்த ஒரு இன யுத்தத்திற்கு தயார்ப்படுத்துகின்றான். இந்த அதர்ம யுத்தத்திற்கு சிங்கள மக்களிடம் இருந்து நிதி திரட்டுகிறான். சிங்கள மக்களும் கோடிக்கணக்கில் பாதுகாப்பு நிதியென்று வாரி வழங்குகிறார்கள். முழுச் சிங்கள தேசமுமே ஒரு இன யுத்தத்திற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழராகிய எமது நிலைதான் என்ன?

அடிமையாக வீழாமல் போராடி வாழ்வோம்.

இன ஒழிப்பின் விளிம்பில் நாம் தள்ளப்பட்டும் எமக்கு இன்னும் விடுதலைக்கான விழிப்புணர்ச்சியோ, வீராவேச உணர்ச்சியோ தோன்றவில்லை. பசியும் பஞ்சமுமாக தாங்கொணாத் துன்பங்கள் ஏற்பட்டும் நாம் இன்னும் போராடத் தயாராகவில்லை. இனியும் நாம் பயந்து பயந்து, ஒழிந்து ஒழிந்து, செத்துக்கொண்டிருப்பதில் அர்த்தமே இல்லை. ஏதோ எங்கிருந்தோ எமக்குப் புறம்பான சக்திகள் கைகொடுத்து உதவும் என்று காத்துக் கொண்டிருப்பது அசட்டுத்தனம். நாம் போருக்குத் தயாராக வேண்டும். அடிமைகளாக வீழ்வதை விடப் போராடி வாழ்வதே மேன்மையானது என்ற இலட்சிய உணர்வோடு நாம் ஆயுதம் ஏந்தத் தயாராக வேண்டும். ஈழத்தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் விடுதலை வேங்கைகளாக, வீரப்புலிகளாக மாறவேண்டும். தாழ்ந்து போன தமிழ் இனம் வீரப்புலி இனமாக மாற வேண்டும். விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு. இந்த நெருக்கடியான காலகட்டத்தில், முழுச்சமுதாயமுமே பேரழிவை எதிர்நோக்கிய இச்சூழ்நிலையில், எம்மத்தியில் சுயநல உணர்வுகள் களையப் பெற்று சமூக உணர்வும் பிறக்க வேண்டும். பணத்தை முடக்காமல், உணவுப்பண்டங்களைப் பதுக்காமல், தான் வாழ்ந்தால் போதும் என்ற தன்னலங்கருதாமல் வசதி படைத்தோர் வசதியற்றோருக்கு உதவவேண்டும். பணம் படைத்தோர் பட்டினி கிடப்பவர்களுக்கு உதவ வேண்டும். இது ஒரு தேசிய நெருக்கடி. இந்நெருக்கடியால் பிறக்கும் துன்பத்தை முழுத்தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ள வேண்டும்.

தேசிய பாதுகாப்பு நிதி

இந்தத் தேசிய சுமையைச் சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்துக்குப் புரியும் துரோகம் என்றே சொல்ல வேண்டும். நாம் ஒரு தேசிய விடுதலை இராணுவத்தைக் கட்டியெழுப்பி வருகிறோம். ஆயிரக்கணக்கில் இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்தல், ஆயுதம் தரித்தல், கெரில்லாப் படையணிகளைப் பராமரித்தல் போன்ற எமது பாரிய போர்த்திட்டத்திற்குப் பெருமளவில் நிதி அவசியம் என்பதை நான் விளக்கத் தேவையில்லை. இந்த நோக்கில் தான் தேசிய பாதுகாப்பு நிதித்திட்டம் ஒன்றை நாம் உருவாக்கினோம். இந்நிதி தமிழீழத்திலும், வெளிநாடுகளிலும் திரட்டப்படும். இந்நிதிக்கு குறிப்பாக வெளிநாடுகளில் வதியும் தமிழ் ஈழத்தேசாபிமானிகள் தம்மாலான உதவியினைச் செய்யுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். உறுதியாக ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். தமிழீழம் என்றோ ஒரு நாள் உதயமாவது திண்ணம். எமது மக்களாகிய நீங்கள் விடிவு பெறுவது திண்ணம். சமதர்ம சமூகமாக எமது நாடு வளங்கொளிப்பது திண்ணம். இந் நம்பிக்கையில் ஆன்ம உறுதி தளராது விடுதலைப் பாதையை நோக்கி வீறுநடை போடுவோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

நன்றி: எனது மக்களின் விடுதலைக்காக நூல்.

 

https://thesakkatru.com/sri-lankan-state-repression-and-armed-resistance/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.