Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா வைரஸ் கதையாடல்-1: இன்னொரு பெருந்தொற்றைத் தவிர்க்க இயலுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் கதையாடல்-1: இன்னொரு பெருந்தொற்றைத் தவிர்க்க இயலுமா?

 

-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ  

கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையிலான ஊசலாட்டத்தின் நடுவே, மனிதகுலம் முக்கியமான புள்ளியொன்றில் நிற்கின்றது.   

ஒருபுறம், கொவிட்-19 நோய்த் தொற்றுத் தொடங்கி, ஓராண்டாகி விட்டது. மறுபுறம், இந்தப் பெருந்தொற்றுக்கான தடுப்பு மருந்து, பரிசோதனைகளின் பின்னர், பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, இந்தப் பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பணியை, தடுப்பு மருந்தின் மீது போட்டுவிட்டு, உலகம் அப்பால் நகர்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. உலக நாடுகளின் தலைவர்கள், அமைப்புகள் அந்தத் தொனியிலேயே பேசிப் பரிகசித்துவிட்டு, அப்பால் நகர்வது நடக்கிறது.  

 ஆனால், நம் பிள்ளைகளின், பேரக்குழந்தைகளின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. இவை, பல சமயங்களில் அதிர்ச்சி தரும்; அச்சமடைய வைக்கும். முக்கியமாக,  மனிதகுலம் இன்னொரு பெருந்தொற்றைக் கையாளுவதற்குத் தயாராக இருக்கிறதா,  இன்னும் சரியாகச் சொல்வதானால், இன்னொரு பெருந்தொற்றை, எம்மால் தவிர்க்க இயலுமா?   

இந்தப் பெருந்தொற்றையே எம்மால் கட்டுப்படுத்தவோ, கையாளவோ இயலவில்லை. தொற்றுகளையோ அதன் மோசமான வடிவமாகிய பெருந்தொற்றுகளையோ, எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருந்ததில்லை.  

கடந்த 20 ஆண்டுகளில், ‘சார்ஸ்’, ‘மேர்ஸ்’, ‘ஏபோலா’, ‘சீகா’ போன்ற தொற்றுகளைக் கண்டிருக்கின்றோம். ‘ஏபோலா’ ஆபிரிக்காவை மய்யமாகக் கொண்டிருந்தது. ‘சார்ஸ்’ ஆசியாவை மய்யப்படுத்தியது. ‘சீகா வைரஸ்’ இலத்தீன் அமெரிக்காவை மய்யமாகக் கொண்டிருந்தது. இந்தத் தொற்று நோய்கள், மேற்குலகில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. இதனால், தொற்றுகள் குறித்த அக்கறையும் ஆய்வும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்து வந்திருக்கின்றன.   

மனிதகுலத்தின் அலட்சியத்தையும் அவதானம் இன்மையையும் இந்தக் கொவிட்-19 நோய், வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது. அதேவேளை, இதை அரசாங்கங்கள் கையாண்ட விதம், மனிதர்களை விட இலாபமே முக்கியம் என்பதை, மக்களுக்கு மீண்டுமொருமுறை உரைத்தது.   

ஐக்கிய நாடுகள் சபையின் Intergovernmental Science-Policy Platform on Biodiversity and Ecosystem Services (IPBES) அமைப்பு, ‘நோய்த் தொற்றுச் சகாப்தத்தில் இருந்து தப்பித்தல்’ (Escaping the Era of Pandemics) என்று தலைப்பிட்டு, அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையை, உலகின் முக்கியமான 22 விஞ்ஞானிகள் இணைந்து எழுதியுள்ளார்கள். 108 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை, அச்சம் தருவதாய் உள்ள அதேவேளை, மனிதகுலத்தின் செயற்பாடுகள் குறித்த பல முக்கிய கேள்விகளையும் எழுப்புகிறது.  

இந்த அறிக்கை சுட்டுகிற சில முக்கியமான விடயமாக, உலகின் ஏற்படுகின்ற தொற்றுகள் அனைத்தும், இயற்கையில் உள்ள நுண்ணுயிர்களின் பல்வகைமையால் ஏற்படுகின்றன. இதில் 70% மான தொற்றுகளின் மூலங்கள் விலங்குகளாகும். விலங்குகளுடன் மனிதர்களுக்கு ஏற்படுகின்ற தொடர்புகள் மூலம், தொற்று நுண்ணுயிர்கள் மனிதர்களுக்குக் கடத்தப்படுகின்றன.   

உலகில் தற்போதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டாத 1.7 மில்லியன் வைரஸ்கள் இருக்கின்றன. இவை பாலூட்டிகளிலும் பறவைகளிலும் உயிர்வாழ்கின்றன. இதில் 450,000 - 850,000 வரையானவை, மனிதர்களுக்குப் பரவக்கூடியவை. இந்த வைரஸ் காவிகளில் பிரதானமானவை, மனிதர்களுடன் நெருங்கிய ஊடாட்டத்தில் உள்ளன.   

ஆண்டுதோறும் ஐந்துக்கும் மேற்பட்ட புதிய நோய்கள், மனிதர்களைத் தாக்குகின்றன. இவை ஒவ்வொன்றும், தொற்றாகவோ பெருந்தொற்றாகவோ மாறும் ஆபத்துடையவை. இதற்கான வாய்ப்புகளை மனிதகுலம்சார் (anthropogenic) மாற்றங்கள் அதிகரித்துள்ளன. தொற்றுகளுக்கு, விலங்குகளைப் பழிசொல்வது தவறானது. மனிதர்களின் செயல்களே, இந்தத் தொற்றுகள் ஏற்படுவதற்குக் காரணமாகின்றன. குறிப்பாக, மனிதனது செயல்கள், சுற்றுச்சூழலுக்கு விளைவித்த கேடு முதன்மையானது.   

நின்றுநிலைக்காத வகையில், இயற்கையைச் சுரண்டுவதானது, இயற்கையின் இயல்பான இருப்பையும் செயற்பாடுகளையும் பாதித்துள்ளன. குறிப்பாக, நிலப்பாவனை, விவசாய விரிவாக்கம், விலங்கு வர்த்தகம், செறிவாக வளர்க்கப்படும் கால்நடைகள் போன்ற நடவடிக்கைகளின் விளைவால், கிருமிக்காவி விலங்குகள், கால்நடைகளுடனும் மனிதர்களுடனும் உறவாட நேர்கிறது. இந்த மாற்றமே, அனைத்து வகையான தொற்றுகளுக்கும் காரணமாகி உள்ளது.   

காலநிலை மாற்றம் தொற்று உருவாக்கத்திலும் பரவுகையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை, ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறிப்பாக, மக்களின் இடம்பெயருகை, காட்டுவிலங்குகள் புதிய இடங்களுக்குப் போதல், புதிய விலங்குகளோடு சேர்ந்து வாழுதல் போன்ற விளைவுகளால், நோய்க்கிருமிகளின் பரம்பலுக்கும் கடத்தலுக்கும் வாய்ப்பாக அமைகின்றன.   

அதேபோலவே, உயிர்ப்பல்வகைமையின் இழப்பு, இயற்கையின் நிலஞ்சார் அமைப்புகளை நிலைமாற்றம் செய்கின்றது. இதன் விளைவால், சில உயிரினங்கள் மனிதருடன், மாற்றங்களை உள்வாங்கி வாழ இயல்பூக்கமடைகின்றன. இவை, தம்முள் நோய்க்கிருமிகளை வைத்திருந்து, மனிதர்களுக்குக் கடத்தவல்லன.  

இன்னொருபுறம் மனிதர்கள், கால்நடைகள், வனவிலங்குகள் ஆகியவற்றில் உள்ள நோய்க்கிருமிகள், உயிர்ப்பல்வகைமையைப் பாதித்து, மாற்றத்தை ஏற்படுத்தும் செயல்களும் நடக்கின்றன.   

1960ஆம் ஆண்டுமுதல், நோய்த்தொற்றுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சொல்கின்ற பிரதான செய்தி யாதெனில், 1960ஆம் ஆண்டு முதல், அறிக்கையிடப்பட்ட நோய்த்தொற்றுகளில் 30%க்குக் காரணம், நிலப்பயன்பாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் ஆகும். இவற்றில், காடழிப்பு, வனவிலங்குகள் வாழ்ந்த பகுதிகளில் மனிதக் குடியிருப்புகள், பயிர்கள், கால்நடை உற்பத்தியின் அபரிமிதமான அதிகரிப்பு, நகரமயமாதல் ஆகியவை பிரதானமானவை ஆகும்.  

நிலப்பயன்பாட்டில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், ஒரு தொடர்சங்கிலியாக அனைத்தையும் பாதிக்கின்றன. குறிப்பாக, நிலப்பயன்பாட்டு மாற்றம், காலநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணமாகிறது (காடழிப்பு, வெப்பம் அதிகரித்தல்). அதேபோல, உயிர்பல்வகைமையின் இழப்புக்கும் காரணமாகிறது.   

உயிர்ப்பல்வகைமையை அழித்து, அவ்விடங்களை அபகரிப்பதானது, தொற்றுகள் இலகுவில் மனிதர்களுக்குக் கடத்தப்படுவதற்கு, வாய்ப்புகளை அதிகரிப்பதோடு, தொற்றின் வீரியத்தையும் அதிகரிக்கின்றது.  

இதேபோல, வனவிலங்கு வர்த்தகம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். உலகில் உள்ள வனவிலங்குகளில் 24%மானவை, ஆண்டுதோறும் வர்த்தகம் செய்யப்படுகின்றன. அமெரிக்காவில் மட்டும், ஆண்டொன்றுக்கு சராசரியாக 20 மில்லியன் வனவிலங்குகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவை பெரும்பாலும், செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுவதற்கானவை ஆகும். 2015ஆம் ஆண்டு மாதமொன்றுக்கு 2,000 கப்பல் பெட்டிகளில் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இப்போது மாதமொன்றுக்கு 13,000 கப்பல் பெட்டிகளாக அதிகரித்துள்ளது.  

இதேவேளை, காட்டுவிலங்குகளைப் பண்ணைகளில் வளர்க்கும் தன்மையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சீனாவில் இத்தொழிலில் 14 மில்லியன் மக்கள் ஈடுபட்டுள்ளார்கள். இவை உணவுக்காக மட்டுமன்றி, மருந்துகள், வாசனைத் திரவியங்கள், தோல் ஆகியவற்றுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இவ்வாறு, சட்டவிரோதமான வனவிலங்கு வர்த்தகமும் நோய்க்காவியில் பெரும்பங்காற்றுகிறது. ஆனால், இது பேசப்படும் பொருளல்ல.  

இதன் பின்னணியில், கொவிட்-19 நோய்க்கு, உலகம் எவ்வாறு முகங்கொடுக்கிறது என்று நோக்கினால், இப்போதுள்ள தொற்றுத்தடுப்புச் செயல்முறைகள், தொற்று ஏற்பட்ட பின்னர் அதைத் தடுப்பது தொடர்பானவை ஆகும். தோற்றுத் தடுப்பு முன்தயாரிப்புகளும் அம்முறையையே பின்பற்றுகின்றன. உதாரணமாக, நோய்த்தடுப்புக்கான மருந்துகளும் இன்ன பிற நடவடிக்கைகளும், இயற்கையையே தங்கள் தேவைகளுக்காகப் பயன்படுத்துகின்றன. எனவே, இது உயிர்ப்பல்வகைமையைப் பாதிக்கும்.   

இங்கு கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், இந்த நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கும் அவை பெருந்தொற்றாக மாறுவதற்கும் மனிதர்களே காரணம். இப்போது தேவைப்படுவது, தொற்றுக்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான கொள்கைகளும் திட்டமிடலும் பொறுப்புணர்வும் செயலாற்றலும் ஆகும்.  

கடந்தகால அனுபவங்களில் இருந்து பாடங்கற்று, எதிர்காலம் குறித்துச் சிந்திக்காமல், இறந்தகாலம் பற்றிய கனவில் பலர் இருக்கிறார்கள். மனித மனம் விந்தையானது. ‘தொட்டில் பழக்கம், சுடுகாட்டு மட்டும்’ என்பார்கள். ஆனால், சுடுகாடு போவதற்கான வழியையே, மனிதகுலம் இலாபத்தின் பெயரால் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.   

இன்னொரு பெருந்தொற்றிலிருந்து எம்மைக் காக்க வேண்டுமாயின், நாம் அனைவரும் பங்களிக்க வேண்டும்; அரசுகளைப் பொறுப்பாக்க வேண்டும். பிளாஸ்டிக் பாவனையைக் குறைத்தல்; மீள்சுழற்சி செய்தல்; காடுகளைப் பாதுகாத்தல் போன்ற, சின்னச் சின்ன விடயங்களைச் செய்வோம். பெரிய விடயங்களைப் பூமிப்பந்து பார்த்துக் கொள்ளும்.இந்தப் பூவுலகையா எங்கள் பேரக்குழந்தைகளுக்குப் பரிசளிக்கப் போகிறோம் என்ற கேள்வியை, அடிக்கடி நாம் ஒவ்வொருவரும் கேட்டாக வேண்டும்.  

நவீன தொழில்நுட்பம், அறிவியல், முதலாளித்துவம், ஜனநாயகம் என எல்லாம் தோற்ற ஓரிடம் கொவிட்-19 ஆகும். மனிதனது பேராசையும் இலாபவெறியும் அதிகார ஆசையும் இன்னொரு பெருந்தொற்றில் இருந்து, எம்மைக் காப்பாற்றும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? 

(அடுத்த வாரம் தொடரும்)   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொரோனா-வைரஸ்-கதையாடல்-1-இன்னொரு-பெருந்தொற்றைத்-தவிர்க்க-இயலுமா/91-261016

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கொவிட் கதையாடல்-2: பெருந்தொற்றின் பின் உள்ளூராட்சிகளின் எதிர்காலம்

-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

இந்தப் பெருந்தொற்று, இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களைக் காவு கொண்டிருக்கிறது.  

இந்நோய்த்தொற்று பரவத் தொடங்கியது முதல், இதைத் தடுப்பதற்கு பாடுபட்டவர்கள், மிகவும் சாதாரண பணிகளில் ஈடுபட்டிருக்கும் மக்களாவர். மருத்துவர்கள், தாதியர், மருத்துவத் துறை சார் பணியாளர்கள் என்போர் முக்கியமானவர்கள். இன்றும் நாம் பத்திரமாக இருப்பதற்கு காரணம் அவர்களைப் போலவே இன்னும் எத்தனையோ துறைகள் தொடர்ச்சியாக இடைவிடாது பணியாற்றியமையாகும்.

நமது குப்பைகளை அன்றாடம் சேகரிப்போர், வடிகான்களைச் சுத்திகரிப்போர், குடிநீர் வசதிகளை உறுதிப்படுத்துவோர், பொதுச் சுகாதாரத்தை பாதுகாப்போர் என இன்றுவரை கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டிருப்போர் ஏராளம்; இது வருந்தத்தக்கது. 

அரசுகள் கொள்கை அளவில், என்ன முடிவுகளை எடுத்தாலும், என்ன திட்டங்களை வைத்தாலும், அவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதிலேயே, அதன் வெற்றி-தோல்வி தங்கியுள்ளது. இந்தப் பெருந்தொற்றை, வெற்றிகரமாகக் கையாண்ட நாடுகளில் வெற்றி, இன்றுவரை கவனம் பெறாமல் போயிருக்கின்ற மிக எளிமையான மனிதர்களின் கடுமையான பணியின் விளைவானது. 

கொண்டாடப்படாத இந்த எளிய மனிதர்கள், அவர் தம் பணிகளை நாம் நோக்குவது அவசியமானது. இவ்விடத்தில் தான், உள்ளூராட்சி அமைப்புகளின் தேவையும் பயனும் முக்கியத்துவமும் கணிப்பில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது. 

ஒரு நகரமோ, கிராமமோ அதன் அடிப்படை சேவை வழங்குநர்களாக உள்ளூராட்சி அமைப்புகளே இயங்குகின்றன. உலகின் பல நாடுகளில் கொவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில், வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக உள்ளூராட்சி அமைப்புகள் மாறி இருக்கின்றன. 

இது தொடர்பில், இம்மாதம் 10ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான ஐந்து நாள்கள் இடம்பெற்ற, சர்வதேச ஆய்வரங்கில் கலந்துகொள்ளக் கிடைத்தது. ‘கொவிட்-19 நோய்த் தொற்றுக்குப் பின்னரான உலகில், உள்ளூராட்சிகளின் எதிர்காலத்தை மீள்சிந்தித்தல்’ (Rethinking the Role of Local Governments in a Post Covid-19 World) என்ற தலைப்பில் அமைந்த இந்த ஆய்வரங்கை, கேரள மத்திய பல்கலைக்கழகமும்  கேரள கிராமிய முகாமைத்துவ மய்யமும் இணைந்து ஒழுங்குபடுத்தி இருந்தன. 

இந்த ஆய்வரங்கு, பெருந்தொற்றுக்குப் பின்னரான காலப்பகுதியில், உள்ளூராட்சிகளின் எதிர்காலம் குறித்த பல கேள்விகளை எழுப்பியது. ஆசிய, ஆபிரிக்க, அமெரிக்க, ஐரோப்பிய அனுபவங்களைப் பல ஆய்வாளர்கள் பகிர்ந்து கொண்டார்கள். பெருந்தொற்றுப் போன்ற பேரிடர்களைக் கையாள்வதற்கு, உள்ளூராட்சி மன்றங்களின் தேவையை, ஆய்வு ரீதியில் முன்னிறுத்திப் பேசப்பட்ட சில முக்கிய விடயங்கள், நமது சூழலுக்கும் பொருந்துவன. 

ஆட்சி அதிகாரம் என்பது, எப்போதும் மேலிருந்து கீழ் நோக்கியதாகவே இருந்து வந்திருக்கிறது. சாதாரண மக்கள், வாக்களிப்பது என்ற ஒரு ஜனநாயகக் கடமைக்கு அப்பால் அரசியலில், ஆட்சியில், திட்டமிடலில், கொள்கை வகுப்பில், நடைமுறைப்படுத்தலில் என எதிலும் பங்குபற்றுவது இல்லை. இதனால், அரசியலுக்கும் சாதாரண குடிமகனுக்கும் இடையிலான இடைவெளி மிகவும் அதிகம். 

இந்தவகையில், ஒரு குடிமகன், தான் வாழும் பகுதியில், தன்னைச் சூழ்ந்துள்ள மக்களின் பயனுள்ள எதிர்காலம் குறித்த இடையீடுகளைச் செய்வதற்கு, வாய்ப்பாக அமையப்பெற்ற அமைப்பே உள்ளூராட்சி மன்றங்கள் ஆகும். 

இம்மன்றங்களின் தன்மையும் அதிகாரமும் செயற்பாடும், நாட்டுக்கு நாடு வேறுபடும். குறிப்பாக, ஒற்றையாட்சி நாடுகளில் அவை இயங்கும் தன்மைக்கும் சமஷ்டி ஆட்சி நாடுகளில் அவை இயங்கும் தன்மைக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. இருப்பினும், ஒற்றையாட்சி முறையில், குறைந்தபட்ச அதிகாரத்தைக் கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் உணர்வதற்கு, இந்த உள்ளூராட்சி மன்றங்கள் பயனுள்ளவை. 

இந்தப் பெரும் தொற்றுக் காலத்திலும், முன்னிலையில் நின்று, முதல் பதிலளிப்பாளர்களாக உள்ளூராட்சி மன்றங்களின் பணி முக்கியமானது. இது அதிகாரப் பன்முகப்படுத்தலின் அவசியத்தை, உணர்த்தி நிற்கின்றது. 

அதிகாரப் பன்முகப்படுத்தல் சரிவர நடைபெற்ற இடங்களில், வலுவான உள்ளூராட்சிகள் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், பயனுள்ளதும் உயிர்காக்கும் பணியைச் செய்துள்ளன. 

அவ்வகையில், இல்லாதவர்களின் நலன்களைக் காப்பது யார் என்ற கேள்வி எழுகிறது. அதை முந்திக்கொண்டு, இல்லாதவர்களின் நலன்கள் என்ன என்ற கேள்வி முன்னெழுகிறது. இவ்விரு கேள்விகளும் உள்ளூராட்சிகளின் தேவையை உணர்த்தி நிற்கின்றன. 

இந்தக் கேள்விகளின் அடிப்படை ஒன்றுதான். உலகளாவிய ரீதியில் பண்பட்ட எண்ணக்கருவாக வளர்ச்சியடைந்துள்ள ஜனநாயகம், சாதாரண மக்களுக்கு உரித்துடையதாகி உள்ளதா, அதை அவர்களுக்கு உரித்துடையதாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எவை, அதில் உள்ளூராட்சிகளின் பங்கு என்ன?

உலகளாவிய நாடுகளில் கொவிட்-19 நோயை எதிர்கொள்வதன் பெயரால், உள்ளூராட்சிகளின் செயற்பாட்டுக்கு அவசியமான பன்முகப்படுத்தல், எவ்வாறு பங்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பில், ஐந்து முக்கிய போக்குகளை அவதானிக்க முடியும்.

முதலாவது, கட்சி சார்ந்த உள்ளூராட்சிச் செயற்பாடுகள்: குறிப்பாக, ஆட்சியதிகாரத்தில் இருக்கும் கட்சி, தான் ஆட்சி செய்கின்ற உள்ளூராட்சிகளின் செயற்பாடுகளையும் கட்சி சார்ப்பாக மாற்றி, சேவை வழங்குதலும் கட்சி நடவடிக்கையாக மாற்றம் பெறுகின்றது. கிழக்காசிய நாடுகளும் சில ஆபிரிக்க நாடுகளும், இதற்கு நல்ல எடுத்துக் காட்டுகள் ஆகின்றன. 

இரண்டாவது, பன்முகப்படுத்தல் என்பதன் பெயரால் உள்ளூராட்சிகளுக்கான அதிகாரத்தை, தனியாரின் கைகளின் வழங்குவதன் ஊடு, பொதுச்சேவைப் பயன்பாடு, தனியார்மயமாக்கப்படுவது பல மேற்குலக நாடுகளில் நடந்தது. வயோதிப இல்லங்களில் இடம்பெற்ற அளவுகடந்த கொவிட்-19  நோய்த் தொற்று மரணங்கள், இந்த முறையின் தோல்வியைக் காட்டியுள்ளன. அதேவேளை, இவ்வாறான பன்முகப்படுத்தல்கள், உள்ளூர் ஜனநாயகம் என்பதன் பெயரால், பொதுச்சேவைகளைத் தனியார்மயப்படுத்தலுக்கு வாய்ப்பாக்குகின்றன. சுவீடன், பிரித்தானிய என்பன, இதற்குச் சிறந்த உதாரண நாடுகளாகும். 

மூன்றாவது, பன்முகப்படுத்தலின் பெயரால் ஆட்சியதிகாரம் சிலரின் கைகளில் குவிந்திருக்கின்றது. இது, ஆட்சிச் சட்டகத்தின் கீழே இருக்கின்ற அதிகாரமும் மேலுள்ள அதிகாரமும் இணைந்து, குறுங்குழுவாக ஆட்சியையும் அதிகாரத்தையும் கட்டற்ற ஊழலையும் ஜனநாயகத்தின் பெயரால் அனுமதிக்கிறது. இது பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் ஒரு வடிவிலும், மத்திய கிழக்கிலும் வடஆபிரிக்காவில் இன்னொரு வடிவிலும் அரங்கேறுகின்றன.  

நான்காவது, பன்முகப்படுத்தலைப் பெருந்தேசியவாதம் ஆட்கொண்டிருக்கிறது. பெருந்தேசியவாதத்தின் குணங்குறிகள், உள்ளூராட்சிகளைப் பாதிக்கின்றன; அவற்றின் செயற்பாடுகளுக்கு ஊறு விளைவிக்கின்றன. இந்தியாவில் நடந்தேறும் சம்பவங்கள் இதற்கு நல்லதொரு சான்றாகின்றன.

ஐந்தாவது, பெருந்தொற்றைக் கட்டுப்படுவதன் பெயரால், மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டிலான செயற்பாடுகள், உள்ளூராட்சிகளை செயலற்றனவாக ஆக்கிவிட்டன. இதற்கு இலங்கை ஓர் உதாரணமாகும்.

இவற்றை மய்யப்படுத்தி, உள்ளூராட்சிகளின் எதிர்காலம் குறித்து ஆராயத் தொடங்க வேண்டும். அவ்வாறு, ஆராய்வதாயின் அதன் தொடக்கப் புள்ளியாக, ‘உள்ளூர் ஜனநாயகம்’ அமைதல் வேண்டும். 

இவ்விடத்தில், ‘ஜனநாயகம்’ என்பதால் குறிக்கப்படுவது, என்ன என்பது பற்றிய தெளிவான பார்வை முக்கியமானது. ஜனநாயகம் என்ற கருத்தியல், எம்மை எவ்வாறு வந்தடைந்தது என்று நோக்குவோமாயின், எமது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் கருத்தியலே ஜனநாயகம் பற்றிய எமது புரிதலை வடிவமைப்பதுடன், ஜனநயாகம் என்பதை முதலாளிய ஜனநாயகத்திலிருந்து சமூகபண்பாட்டு முறையிலும் வரலாற்று வழியாகவும் உருத்திரிந்த ஒன்றாகவே காணவேண்டியுள்ளது.

இன்று எமக்குப் போதிக்கப்படுகின்ற ஜனநாயகம், முதலாளித்துவ சிந்தனையைத் தனது அடிநாதமாகக் கொண்டுள்ள திறந்த சந்தை, கட்டற்ற வர்த்தகம், அரசுகளின் சுருங்கிய வகிபாகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

இன்று அடித்தள மக்களுக்கானதாக உருவாக்கப்பட்ட உள்ளூராட்சி முறைமையும் அதுசார் அமைப்புகளும், தோல்வியடைவதற்கும் செயற்படாமைக்கும் காரணம் அவை ‘முதலாளித்துவ ஜனநாயகக்’ கட்டமைப்பின் வழி உருவாக்கப்பட்டதால் ஆகும். 

இன்று எழுந்துள்ள நெருக்கடிக்கான எதிர்வினையை, வினைதிறனுள்ள வகையில் ஆற்றிய உள்ளூராட்சிகளில், ‘மக்கள் ஜனநாயகக்’ கூறுகள் உட்பொதிந்திருத்ததை அவதானிக்கலாம். சமூக நீதிக்காகவும் நீதியும் சமத்துவமும் கொண்ட சமுதாயம் ஒன்றுக்காகவும் போராடுபவர்களுக்கு, ஜனநாயகம் என்பது குறிப்பான அர்த்தத்தைக் கொண்டது. அந்தச் ஜனநாயகத்தை, மக்கள் ஜனநாயகம் என்று அழைப்பது தகும்.

(அடுத்த வாரம் தொடரும்)
 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொவிட்-கதையாடல்-2-பெருந்தொற்றின்-பின்-உள்ளூராட்சிகளின்-எதிர்காலம்/91-261595

  • கருத்துக்கள உறவுகள்

கொவிட் வைரஸ் கதையாடல்-3: 2020 பெருந்தொற்றின் ஆண்டு

-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

ஒவ்வோர் ஆண்டைப் போலவும் இவ்வாண்டும் கடந்து போகிறது என்று சொல்லிவிட முடியாத வகையில், 2020இல் நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. 

2020 ஆண்டு, எமக்குக் கற்றுத்தந்த பாடங்கள் எவை என்பதை நாம் சிந்தித்தாக வேண்டும். மனிதகுலம் தனது தவறுகளில் இருந்து, தன்னைத் திருத்திக் கொண்டதன் விளைவாலே முன்னேறியிருக்கிறது. அவ்வகையில், இந்தப் பெருந்தொற்றும் அதனோடு இணைந்த செயல்களும் மனிதர்களுக்கு சில முக்கியமான பாடங்களை விட்டுச் செல்கின்றன. அது குறித்து, ஆழமாகச் சிந்திப்பது எதிர்காலம் குறித்த முடிவுகளுக்குப் பயனுள்ளது. 

இவ்வாண்டு, எமக்கு விட்டுச்செல்லும் முதலாவதும் பிரதானதுமான பாடம் யாதெனில், அரசுகளுக்கு மக்களா அல்லது, அதிகாரவர்க்கத்தின் நலன்களா என்ற கேள்வி எழும்போது, மக்கள் என்றுமே முன்னிலை பெறுவதில்லை. 

இப்பெருந்தொற்றைக் கையாளுவதில் அரசுகளின் நடத்தை, இதையே உறுதி செய்துள்ளது. இது, அரசுகள் யாருக்கானவை என்று தொடர்ந்து கேட்கப்பட்டு வந்த வினாவுக்கான விடையைப் பகர்ந்துள்ளது. அனைத்து நாடுகளும், இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த இயலாமல் திணறுகின்றன. இது பாரிய சமூகப் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்துகின்ற போதும், நாடுகள் மீண்டும் முழுமையான முடக்கத்தை நடைமுறைப்படுத்தத் தயங்கின. அவை வர்த்தகத்தைப் பாதிக்கும் என்பது, அதற்கான பிரதான காரணியாக இருந்தது; இன்னமும் இருக்கிறது. அரசுகளும் சரி, அரசியலும் சரி மக்களை மையப்படுத்தியதாக இயங்கவில்லை. 

இரண்டாவது பாடம், அரசுகள் இந்தப் பெருந்தொற்றை மட்டுமல்ல, இனிவரும் எந்தவொரு பெருந்தொற்றையும் கையாளுவதற்குத் தயாராக இல்லை. இந்தப் பெருந்தொற்று ஏற்பட்டது முதல், அரசுகளினதும் சர்வதேச அமைப்புகளினதும் நடத்தை, இதை எடுத்துக் காட்டியுள்ளது. தடுப்பூசியே இதைத் தடுப்பதற்கான வழி என்று முடிவுசெய்யப்பட்டே, கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால் இந்தவார நிகழ்வுகள், தடுப்பூசி மட்டுமே தீர்வாகாது என்பதை உணர்த்தி நிற்கின்றன. 

மூன்றாவது, ஜனநாயகம் மிகுந்த சவாலுக்கு உட்பட்டுள்ளது. இன்னும் சரியாகச் சொல்வதானால், ஜனநாயகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தல் என்பது, அனைத்திலும் பிரதானமானதாக அமைந்துவிட்ட நிலையில், ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்கள் கூடப் புறக்கணிக்கப்பட்டன; மீறப்பட்டன. பெருந்தொற்றுப் போன்ற பாரிய நெருக்கடிகள், ஜனநாயகத்துக்கு மிகவும் சவாலானவை. 

இவ்விடயத்தில், இரண்டாம் உலகப் போரையடுத்து நடைபெற்ற மாற்றங்களை, இங்கு நினைவுபடுத்தல் தகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய காலத்தில் உருவான ஆட்சிகள்,  ஜனநாயக ஆட்சிகளாக மாறவில்லை. மாறாக, ஆட்சி மாற்றங்களில் 75%மானவை சர்வாதிகாரத்தன்மையான ஆட்சிகளாகவே உருவாக்கின. இவ்வாறு உருவான புதிய சர்வாதிகார ஆட்சிகள் நிலைபெற்றன. 

மாறாக, தோன்றிய ஜனநாயக ஆட்சிகள் நீண்டகாலம் நிலைக்கவில்லை. அதேபோல, பெரும் நெருக்கடிகளுக்குப் பிந்திய ஆட்சி மாற்றங்களில் ஜனநாயகப் பண்புடைய ஆட்சிகள் நீண்டகாலம் நிலைக்கவில்லை. அதேவேளை, சர்வாதிகாரமாக உருவான ஆட்சிகள், நீண்டகாலம் நிலைத்துள்ளன. இந்தப் பெருந்தொற்றும், அதேவகையிலான ஒரு பாதையை நோக்கி நகர்வதை, எம்மால் இனங்காண முடிகிறது. 

நான்காவது, சமூக அசைவியக்கத்தின் அடையாளமாக இந்தப் பெருந்தொற்று மாறியுள்ளது. இந்நிலையில், இதை மையப்படுத்தி நடைபெறும் அரசியல் கதையாடல்கள் சிக்கலானவையாயுள்ளன. இப்பெருந்தொற்றை அடிப்படையாகவும் வாய்ப்பாகவும் கொண்ட அடையாள அரசியல் ஒருபுறம், ஆதிக்க சக்திகளை வலுப்படுத்துவதற்கு உதவுவதைக் காண்கிறோம். 

மறுபுறம், இது  குறிப்பிட்ட அடையாளங்களுக்குள் தன்னைச் சுருக்கி, சமூக விடுதலைக்கும் சமூக நீதிக்கும் ஊறு விளைவிப்பதையும் காணலாம். மொத்தத்தில், பெருந்தொற்றை மையப்படுத்திய அரசியல் தன்னைத் தனிமைப்படுத்தியுள்ளது. 

இந்த நான்கின் அடிப்படையிலும், நாம் விளங்கிக் கொள்வது யாதெனில், தேசியவாதமும் இனவாதமும் மதவாதமும், பெருந்தொற்றைக் கையாள இயலாத அரசுகளுக்கான, என்றும் பயனுள்ள கருவிகளாகும். 

அதேவேளை, பெருந்தொற்றின் இரண்டாவது அலை, தவிர்க்கவியலாமல் பாசிச நகர்வுகளை நோக்கி, அரசுகளைத் தள்ளுகின்றன; இன்னமும் தள்ளும். மதம்சார்ந்த தேசியமும் தேச அடையாளமும் தேசப்பற்றும், அத்தேசிய அடையாளமற்ற சக சமூகத்தினரைப் பகையாகக் காட்டலும், பெருந்தொற்றின் பின்னரான பாசிசத்தின் தேவைகளாயுள்ளன. இதைத் திசைதிருப்பல்கள் ஊடாக, அரசுகள் மெதுமெதுவாகச் சாதிக்கின்றன. 

கடந்துபோகும் இவ்வாண்டைத் திரும்பிப் பார்க்கையில், இரண்டு பிரதான கேள்விகளை இங்கு எழுப்புதல் தகும். இவை இரண்டும், நேரடியாகவும் மறைமுகமாகவும் பெருந்தொற்றோடு தொடர்புடையவை. 

1. அமெரிக்காவில் ஒரு கொலையுடன் தொடங்கி, உலகெங்கும் பரந்து விரிந்த Black Lives Matter போராட்டங்கள், இன்று எந்தக் கட்டத்தில் நிற்கின்றன. கறுப்பின மக்களின் வாழ்வில், குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா? 

2. இவ்வாண்டு தொடக்கத்தில், அவுஸ்‌ரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் மூன்று மில்லியன் விலங்குகள் இறந்தன. ஊலகெங்கும் வரட்சி அதிகரித்துள்ளது.

முன்னெப்போதும் இல்லாதளவு காலநிலைசார் அனர்த்தங்களை இவ்வாண்டு உலகம் சந்தித்தது. ஆனால், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தக் காத்திரமான நடவடிக்கைகளை மனிதகுலம் எடுத்துள்ளதா?

இவ்விரு கேள்விகளும் கொவிட்-19 நோயின் பெருந்தொற்றும், மனிதகுலத்தின் நடத்தைசார் கோலங்களைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளன. ஜனநாயகத்தின் நெருக்கடி, பொருளாதாரப் பின்னடைவுகள், ஆட்சியியல் சவால்கள் என, அரசுகள் பல முனைகளில் சிக்கலில் உள்ளன. 

கண்ணுக்குத் தெரியாத எதிரியைக் கைகாட்ட இயலாததால், கண்ணுக்குத் தெரிந்த எதிரியை உருவாக்கும் முனைப்பில் பல அரசாங்கங்கள் இறங்கியுள்ளன. 

இன்று தேசியவாதம், நிறவெறி, இனஒதுக்கல் என்பன முதன்மையான அரசியல் ஆயுதங்களாகி உள்ளதன் பின்னணி இதுவே. ஒவ்வொரு நாடும் நாட்டுக்குள்ளே உள்ள எதிரிகளைச் சமாளிக்க இயலாமல், திசைதிருப்பலில் ஈடுபட்டுள்ளன. ஒரு கோட்டைச் சிறிய கோடாகக் காட்ட வேண்டுமாயின், அதற்கருகில் அதனிலும் பெரிய கோட்டைக் கீறுவது போதுமானது. அனேகமான நாடுகளின் அரசியல் தலைமைகள், இதையே செய்து கொண்டிருக்கின்றன.

நிச்சயமின்மையின் நிச்சயம், அரசியல் வெளியைத் தாண்டி, சமூகக் பண்பாட்டுப் பொருளாதார வெளிகளிலும் செல்வாக்குச் செலுத்துகின்றன. இன்னொரு புறம், அரசியல் ரீதியான வங்குரோத்து நிலையைச் சமாளிக்க, இப்பெருந்தொற்று வாய்ப்பாயுள்ளது. கருத்துச் சுதந்திரம், உரிமைகள் ஆகியன காவுகொடுக்கப்பட்டுள்ளன. 

இனி என்ன செய்வது என்ற கேள்வி எம் அனைவரிடம் உண்டு. இதற்கான விடையையும் கடந்து போகும் இவ்வாண்டையும் கவிஞர் சி. சிவசேகரத்தின் ‘ஊடரங்கு’ என்ற கவிதை அழகாகச் சொல்கிறது.  

உங்கள் நன்மைக்காகவே யாதையுஞ் செய்வதாக

ஒவ்வொரு அரசாங்கமுஞ் சொல்கிறது.

கொள்கையும் நடைமுறையும் தம்முள் முரண்படினும்

அரசாங்கங்கள் மாறிக் கொள்கையும் நடைமுறையும் மாறினும் எவர் உம்மை ஆளினும்

அவர் உமக்கு எதைச் செய்யினும்

அரசாங்கம் அதை உங்கள் நன்மைக்காகவே

செய்வதென எல்லா மொழிகளிலும் எல்லாச்

செய்தியேடுகளும் சொல்வன.

வானொலியும் அதையே

தொலைக்காட்சியும் அதையே

இணையத் தளங்களும் அதையே தவறாமற் சொல்வன.

அந்நியரிடமிருந்து உம்மைக் காக்கவும்

பயங்கரவாதிகளிடமிருந்தும்

பிரிவினைவாதிகளிடமிருந்தும்

ஆர்ப்ப்பாட்டக்காரரிடமிருந்தும்

உம்மைக் காக்கவும்

அரசாங்கம் ஊரடங்கைப் பிறப்பிக்கிறது.

இம்முறை உம்மிடமிருந்து உம்மைக் காக்க

அரசாங்கம் ஊரடங்கைப் பிறப்பித்தது.

நடுநடுவே உம்மைச் சிறை நீக்கி அவிழ்த்து

விடுகையில் வாயையும் மூக்கையும் மூடி உரையாடவும்

ஒவ்வொரு கதவையும் தாண்டுகையில்

மறுப்பின்றிச் சவர்க்காரத்திலும் சனிற்றைசரிலும் கைகளை

நனைக்கவும் தவறாது உடல் வெப்பத்தைச் சோதிக்கவும்

பயின்றுள்ளீர்.

தடுக்கி விழுந்தாலும் பிறர் மேல் முட்டாமல்

ஆறடி இடைவெளி விலகி நிற்கவும் நடக்கவும்

நன்றே பழகியுள்ளீர்.

வைரஸ் தொற்று நாட்டை நீங்கினும்

வைரஸ் அச்சம் நீங்காமல்

செய்தியேடுகளும் வானொலியும்

தொலைக்காட்சியும்

இணையத் தளங்களும் சேர்ந்து கவனிப்பன.

வேலை நிறுத்தங்களையும்ஆர்ப்பாட்டங்களையும்

சாலை மறியல்களையும் சத்தியாக்கிரகத்தையும்

நிறுத்த இனித் துப்பாக்கி தேவையில்லை

வைரஸும் தேவையில்லை

வைரஸ் அச்சம் போதும்.

கொரோனா தொற்றின் பயனாக மரிப்போர் பலரல்ல

எனவும் தொற்றின் பெயரால் நடப்பன தொற்றினுங்

கொடியன எனவும் நன்கறிவீர். எனினும்

சுற்றாடல் பற்றி அரசியல் உரிமைகள் பற்றி

குறைந்தபட்ச ஊதியம் பற்றி

ஏறும் விலைவாசிகளும் வாழ்க்கைச் செலவும் பற்றி

நீவிர் உரத்துப் பேசின்

இவ் வைரஸினுங் கொடிய இன்னொன்று வரலாம்.

அது வைரஸாக இருக்கத் தேவையில்லை.

எனவே ோனங் காப்பீராயின்

உம்மைத் தற்காத்தோர் ஆவீர்.

ஊரடங்கு சாதித்தது ஏதெனக் கேளாதீர்.

அதன் நன்மையை அனுபவித்தோர்

அதை விரும்பார்.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொவிட்-வைரஸ்-கதையாடல்-3-2020-பெருந்தொற்றின்-ஆண்டு/91-262124

 

  • கருத்துக்கள உறவுகள்

கொவிட்-19 கதையாடல்-4: தடுப்பூசி என்ற மந்திரச் சொல்

-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

எப்போதும் எதிர்பார்ப்புகளோடுதான் வருடங்கள் தொடங்குகின்றன. ஆனால், இம்முறை எதிர்பார்ப்பு என்பது, இந்தப் ‘பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டுவருதல்’ என்பதை, அடிநாதமாகக் கொண்டிருப்பது வியப்பல்ல. 

கொரோனா வைரஸ் பரவலே, இந்த வருடத்தைத் தீர்மானிக்கும் என்பதை மட்டும் எதிர்வுகூறலாம். இவ்வாண்டின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரம், இந்தப் பெருந்தொற்றுக்கான தடுப்பூசியாகும். 

அரசுகள், அதன் கொள்கைகள், திட்டங்கள் அனைத்தும், இந்தத் தடுப்பூசியை மையப்படுத்தியே இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தடுப்பூசி, இந்தப் பெருந்தொற்றைத் தடுப்பதற்கான தீர்வாகுமா? 

முதலில், கடந்த ஆண்டிலிருந்து நாம் கற்ற, ஐந்து பிரதான பாடங்கள் என்ன என்று சிந்திப்பது தகும். 

1. மனிதகுலம் அறிவியல் ரீதியாக முன்னேறியிருந்தாலும், ஒரு பெருந்தொற்றைக் கையாளுமளவுக்கு வலிமையானதல்ல என்ற உண்மை, எமக்கு உறைத்தது. 

2. உலகளாவிய ரீதியில், அரசாங்கங்களின் பிரதான அக்கறை, மக்கள் பற்றியதல்ல; மாறாக, தனியார் நிறுவனங்களின் இலாபமும் அவர்களைத் திருப்திப்படுத்துவதும் அவர்களைக் காப்பதுமே என்பதை, கண்கூடாகக் கண்டோம். 

3. அறிவியலுக்கும் அரசியலுக்கும் இடையிலான போட்டியில், அறிவியல் மிக மோசமான தோல்வியைக் கண்டது. 

4. அரசியல் முடிவுகள், அறிவியல் ரீதியானதாக அமையாததோடு, அவை அறிவியலைக் கேலிக்கூத்தாக்கின.

5. பெருந்தொற்று ஏற்படுத்திய நெருக்கடி, தேசியவாத, சர்வாதிகாரப் போக்குகளுக்கும் அவற்றைக் கேள்வியின்றி மக்கள் ஏற்றுக்கொள்ளவும் வழி செய்தன.   

இந்த ஐந்து பாடங்களின் அடிப்படையில், மேற்சொன்ன வினாவை நோக்க வேண்டும்.  கொவிட்-19 இன் விளைவான பொருளாதார முடக்கம், பொருளாதார மந்தத்தின் விளைவுகளிலும்  பாரியதாயுள்ளது. அதன் மிகவும் மோசமான பக்கங்களை, 2021இல் எதிர்பார்க்கலாம்.

அனேகமாக எல்லா நாடுகளும், பொருளாதார வளர்ச்சிக்கு மாறாக, சரிவையே கண்டுள்ளன. இத்தொற்று அடங்கினாலும், பொருளாதாரம் மீண்டும் வளரத் தொடங்க ஓரீர் ஆண்டுகளாகலாம். இப்பொருளாதாரப் பாதிப்பின் சுமை, உழைக்கின்ற மக்களின் மீதே முழுதாக ஏறும். 

2008ஆம் ஆண்டு, உலகப் பொருளாதார நெருக்கடிக்கு, வங்கிகளினதும் கடன் முகவரகங்களினதும் பேராசையே காரணமான போதும், அரசாங்கங்கள் பொருளாதார மீட்சியின் பெயரில், அதே நிறுவனங்களுக்குக் கைகொடுத்தன. அதுபோல இப்போதும், கொவிட்-19இன் பயனாக அதிகம் பாதிக்கப்பட்டோர்,

‘அன்றாடம் காய்ச்சி’களான நாள்கூலி, சுயதொழில், ஒப்பந்தக் கூலி உழைப்பாளர்களேயாவர். வேலையின்மை அவர்களை வாட்டுகிறது. அரசாங்கங்கள், அவர்களது வாழ்வாதாரத்தை மீட்கவோ, பொருளாதார இன்னல்களைப் போக்கவோ, அதிகம் செய்யாமல், மாறாகப் பெருமுதலாளித்துவ  நிறுவனங்கள் கவிழாமல் கைகொடுப்பதிலேயே கவனம் செலுத்துகின்றன. 

தடுப்பூசிகள் பற்றிப் பேசும்போது, தடுப்பூசிகள் மூலம் மனிதகுலம் தன்னைப் பல கொடிய நோய்களினின்று காத்துள்ளது. ஆனால், இன்று காலம் மாறிவிட்டது;  மருத்துவமும் மாறிவிட்டது; அதனுடன் இணைந்திருந்த சமூக நோக்கங்களும் மாறிவிட்டன. 

மருத்துவம், மனித நாகரிக வரலாற்றின் பெரும் பகுதிக்கு, ஒரு சமூக சேவையாயிருந்தது. முதலாளித்துவம், முதலில் அதை ஒரு தொழிலாக்கியது. பின்பு, அதை ஒரு வணிகமாக்கியது. இப்போது அதை, மனிதரைச் சூறையாடுவதற்கான ஒரு கொள்ளையடிப்பாக மாற்றியுள்ளது. இதன் புதிய போக்கே, கொவிட்-19 நோய்க்கான தடுப்பூசியும் அதைச் சுற்றி நடக்கும் விடயங்களும் ஆகும். 

இப்போது, அரசாங்கங்கள் நம்பிக்கை வைத்துள்ள தடுப்பூசியின் நிலை என்ன? அமெரிக்கா, கலிபோர்னியாவைச் சேர்ந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட தாதியொருவர், தடுப்பூசியைப் பெற்ற சில நாள்களில், கொவிட்-19  நோயால் பீடிக்கப்பட்டார். அதேவேளை, இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட பலர், வேறுபல மருத்துவரீதியான சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளார்கள். இது குறித்த தகவல்கள், அடக்கி வாசிக்கப்படுகின்றன. 

அதேவேளை, இந்தத் தடுப்பூசிகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்துக்கின்றன என்பதை, பல மருத்துவர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால், முன்வைக்கப்படும் வாதம் யாதெனில், ‘கொவிட்-19 நோய்த்தொற்று ஏற்படுத்தும் பாதிப்பை விட, தடுப்பூசி ஏற்படுத்தும் பாதிப்புக் குறைவு’ என்பதாகும். இந்த வாதமே, தடுப்பூசியின் சிக்கல்களின் பரிமாணங்களை விளக்கப் போதுமானது. 

இன்னொருபுறம், கொவிட்-19 நோயை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ், இப்போது மாற்றமடைந்து, புதிய வடிவில் வெளிப்படுகின்றது என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முன்னையதை விட, வேகமாகப் பரவக் கூடியது என்பதை, கடந்த ஓரிருவார நிகழ்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. 

இத்துறைசார் ஆய்வாளர்களின் கருத்துப்படி, இந்தப் புதிய வடிவில் வெளிப்படுகின்ற வைரஸைக் கையாளுவதற்கு, நடைமுறைக்கு வந்துள்ள தடுப்பூசியால் இயலாது. மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களைச் செலவுசெய்து, கொள்வளவு செய்துள்ள தடுப்பூசிகளை, பல நாடுகள் என்ன செய்யப்போகின்றன  என்ற கேள்விக்கு பதில்இல்லை. இதனாலேயே இச்செய்திகள், திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன. 

இங்கு கேள்விக்கு உட்படுத்துவது அறிவியலை அல்ல; அறிவியலின் பேரால் உட்பொதிந்திருக்கும் இலாபவெறியையும் மனிதகுலம் மீதான அக்கறை இன்மையையுமே ஆகும். 

 நோய்த்தொற்றுகளினதும் தடுப்பூசிகளினதும் வரலாற்றை நோக்கினால், மனிதகுலம் சில கடும் நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாப்பை,  இயல்பாகவே தம்முள் எதிர்ப்பாற்றலைப் பெற்றுக் கடந்துள்ளது. வேறு சிலவற்றின் கடுமையால், உடல் ஊனமாவதும் கடுமையான பாதிப்புகளும் ஏற்பட்டன. அவ்வகையான நோய்களுக்குத் தடுப்பூசிகள் மூலம் தீர்வு தேடப்பட்டன. முக்கியமான சில, கடும் முயற்சியின் விளைவால் இல்லாமல் செய்யப்பட்டன. இவை சாத்தியமாகியதன் பின்னணியில், சமூக நோக்கும் பொதுமக்கள் மீதான அக்கறையும் பிரதானமானவை.

 ஆனால், 1970கள் தொட்டு முன்னிலைக்கு வந்த முதலாளித்துவம், அனைத்தையும் இலாபம் சார்ந்ததாக மாற்றியது. இதைத் தொடர்ந்து, நோய்களும் தொற்றுகளும் மருத்துவ வணிகத்தின் தவிர்க்கவியலாத பகுதிகளாகின. எலியால் பரவிய ‘பிளேக்’ நோயை, முழுமையாகக் கட்டுப்படுத்த முடிந்த எம்மால், ஏன் இன்றுவரை நுளம்பால் பரவும் ‘டெங்கு’வைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 

இப்போது சந்தைக்கு வந்துள்ள Pfizer/BioNTech தடுப்பூசி ஒன்றின் விலை 25 அமெரிக்க டொலர்கள். இவை -70 செல்சியஸில் பேணப்பட வேண்டும். அதைச் சேமித்து வைக்க, அதற்கெனப் பிரத்தியேகமாக குளிர்சாதனங்கள் தேவை. எனவே, இதைக் கொள்வனவு செய்வதென்பது, வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்குச் சாத்தியமற்றது. 

முதன்முதலில் கொவிட்-19 நோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்தது ரஷ்யா. ஆனால், இதை மேற்குலக நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து, சீனா தடுப்பூசியைப் பரிசோதனை செய்துகொண்டிருந்த நிலையில், Pfizer/BioNTech தடுப்பூசி வெற்றிகரமான தடுப்பூசியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதுசார் அரசியலை, இன்னொருமுறை பார்க்கலாம். 

சில தினங்களுக்கு முன், பிரித்தானிய அரசாங்கம் பிரித்தானியத் தயாரிப்பான Oxford/AstraZeneca தடுப்பூசியை அங்கிகரித்தது. ஆனால், இதற்கு அனுமதியளிக்க அமெரிக்கா மறுத்து வருகிறது. Oxford/AstraZeneca தடுப்பூசியின் விலை மூன்று அமெரிக்க டொலர்கள். அவை, Pfizer/BioNTech தடுப்பூசி போல மிகவும் குளிரான வெப்பநிலையில் பேணப்பட வேண்டியவையல்ல. இது தடுப்பூசியின் அரசியலைச் சுருங்கச் சொல்லும் ஒரு நிகழ்வு மட்டுமே. 

இன்று எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வாக, கொவிட்-19 தடுப்பூசி என்ற மந்திரச் சொல்லே உச்சரிக்கப்படுகிறது. ஆனால், இவை வழமையான சோதனைகளை முழுமையாகச் செய்யாமல், அவசர கதியில் புழக்கத்துக்கு வந்துள்ளன. இதற்கான காரணம், மனிதகுலத்தின் மீது அக்கறையற்ற தன்மையாகும். 

அதேவேளை, இந்தத் தடுப்பூசியின் விலை அனைவருக்கும் கிடைக்கக்கூடியதல்ல என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. கொவிட்-19 சோதனைகளையே, இலவசமாகச் செய்ய இயலாமல் மக்கள் தவிக்கையில், சாதாரண மக்களுக்கு இந்தத் தடுப்பூசி எப்போது கிட்டும்? அதேவேளை, இந்தத் தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளும் மருத்துவ வணிகத்துக்கு மேலதிக இலாபத்தையே ஏற்படுத்தும். எனவே, இலாப வெறிக்கு எல்லோரும் பலியாகின்றோம். 

இந்த ஆண்டை நம்பிக்கையோடு எதிர்கொள்வோம். உலகம் கொவிட்-19 தொற்றை விடப் பயங்கரமான பல தொற்றுகளைக் கண்டுள்ளது. எவ்வளவோ, பின்தங்கிய தொழில்நுட்பத்துடனும் தொடர்பாடல் வசதிகளுடனும் மனிதகுலம் அவற்றிலிருந்து மீண்டெழுந்துள்ளது. அது, எவ்வாறு சாத்தியமானது என்பதை, நாம் சிந்திக்க வேண்டும். 

நெருக்கடிகளைக் கையாள்வதில், சக மனிதன் மீதான அக்கறையும் மனிதர்கள் ஒரு சமூகமாகச் செயற்பட்டமையும் முக்கிய பங்களித்தன. இதை நாம் மீட்டெடுப்போம். 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொவிட்-19-கதையாடல்-4-தடுப்பூசி-என்ற-மந்திரச்-சொல்/91-262578

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்


 

கொவிட்-19 கதையாடல்-5: சடலங்களில் அரசியல்

பெருந்தொற்று எம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தாலும் இலங்கையில் அதைவிடப் பெரிய பிரச்சினை, இறந்தவர்களைத் தகனம் செய்வதா, அடக்கம் செய்வதா பற்றியது. கொவிட்-19 முழு உலகுக்கும் பரவியுள்ளது. இந்நிலையில், இலங்கையில் மட்டும் இந்தப் பெருந்தொற்றால் இறந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பில், பாரிய பிரச்சினை எழுந்துள்ளது. இலங்கையின் அரசியல் வரலாற்றில், சடலங்களை வைத்துச் செய்யப்படும் அரசியல் நீண்டது. அது பாரிய அழிவுகளையும் இனப்பகையையும் உருவாக்கியிருக்கிறது. 

கொவிட்-19 நோய்த் தொற்றுக்குள்ளாகி, மரணித்தோரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு, அரசாங்கம் அனுமதி மறுத்து வருகிறது. இதற்கான அறிவியல் காரணங்களுக்கு அப்பால், அரசியல் காரணங்களே பிரதானமானவை. 

இந்தப் பெருந்தொற்று அரசியல், அறிவியலை எவ்வளவு தூரம் மலினப்படுத்தி, கேலிக்கு உள்ளாக்கியுள்ளது என்பதை, நாம் அறிவோம். அறிவியலை மையப்படுத்தியதாக, இந்தப் பெருந்தொற்றுக்கான பதிலளிப்புகள் இருந்திருக்குமாயின், இவ்வுலகம் இன்னமும் பாதுகாப்பாக இருந்திருக்கும். ஆனால், அறிவியலை அரசியல் மிஞ்சிநிற்கிறது. முடிவுகளை அரசியல்வாதிகளே எடுக்கிறார்கள். அதன் பலனையே, நாமெல்லோரும் அனுபவிக்கிறோம். 

முதலில், இதன் அறிவியல் சார்ந்த விடயங்களுக்கு வருவோம். கொவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளாகி, உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது, உலகில் பல நாடுகளில் வழமையாக இருக்கிறது. உலக சுகாதார நிறுவனம், இவ்வாறு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது, பாதுகாப்பானது என்று அறிவித்திருக்கிறது.

அதேவேளை, அதற்குரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு அவை அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் சொல்கிறது. குறிப்பாக, இறந்தவர்களது உடல்கள் பாதுகாப்பான உடற்பைகளில் இடப்பட்டு, அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று சொல்கிறது. அதேவேளை, புதைப்பதால் நிலத்தடி நீர் மாசடையாது என்பதையும் சொல்லியிருக்கிறது. 

இங்கு எழுகின்ற முதலாவது கேள்வி, இறந்தவர்களின் உடலில் இருந்து, கொரோனா வைரஸ் இன்னொருவருக்குத் தொற்றுமா என்பதாகும்? இது தொடர்பில் விளக்கமளித்துள்ள உலக சுகாதார நிறுவனம், ‘பொதுவாக, கொரோனா வைரஸ் தொற்றால் இறந்த உடலில் இருந்து, இன்னொருவருக்கு வைரஸ் தொற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், வாய்ப்புகள் இல்லாமல் இல்லை’ என்று தெரிவிக்கிறது. இதனாலேயே, இறந்த உடல்கள் கவனமாகக் கையாளப்பட வேண்டும் என்று கோருகிறது. 

தகனம் செய்வதானாலும் கூட, அச்செயன்முறை வரை உயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதே நடைமுறையே அடக்கம் செய்யும் போதும் மேற்கொள்ளப்பட வேண்டும். இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட நிலையிலேயே, அதிகளவான மக்களைக் காவு கொண்ட நாடுகளில், உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. 

இது எழுப்புகின்ற இரண்டாவது கேள்வி, அடக்கம் செய்வதால் நிலத்தடி நீரின் ஊடாக, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுமா என்பதாகும். இறந்த உடல்களால் தொற்றுப் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளமையால், உலக சுகாதார நிறுவனம் அடக்கம் செய்வதற்கு உடற்பைகளைப் பயன்படுத்த வலியுறுத்துகிறது. அவை, இறந்த உடலில் இருந்து எதுவும் வெளியேறாமல் பார்த்துக் கொள்கின்றன. எனவே, நிலத்தடி நீரில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. இவை அறிவியல் சார்ந்த விடயங்கள். 

உலக நாடுகளில் பெரும்பாலானவை, கொவிட்-19 நோய்த் தொற்றில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்கின்றன. இதனால், தொற்று ஏற்பட்டதற்கான சான்றுகள் இல்லை. இதை அறிவியல் நோக்கில் அணுகல் அவசியமானது. 

இந்தப் பிரச்சினை தொடர்பில், ஆராய்வதற்கு சுகாதார அமைச்சரால் நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட நிபுணர் குழு வழங்கியுள்ள நான்கு பக்க அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் முக்கியமானவை. அவ்வறிக்கை ‘கொவிட்-19 நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் உடல்களை, அடக்கம் செய்வதும் தகனம் செய்வது போன்றே பாதுகாப்பானது’ என்ற வரிகளுடன் தொடங்குகிறது. மேலும்:

1. இறந்த உடலில் இருந்து, கொரோனா வைரஸ் பெருக்கமடையாது. தொற்றுக்கு உள்ளாகிய ஒருவர் இறந்ததும், அவ்வுடலில் உள்ள வைரஸ்களும் சில காலத்தில் அழிந்துவிடும். காரணம், இறந்தவர்களின் உடலில் வைரஸூகளை வாழவைக்கும் உயிருள்ள கலன்கள் இருக்காது. 

2. கொவிட்-19 நோய், நீரால் பரவும் நோயல்ல. இறந்த உடலில் இருந்து வைரஸ் வெளியாகி, மண்ணின் ஊடாக நிலத்தடி நீரைச் சென்று, அதை மாசுபடுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதேவேளை, அவ்வாறு ஒரு வேளை நீரில் கலந்தாலும்,  நீரில் கலக்கின்ற வைரஸ், வலுவிழந்து இல்லாமல் போய்விடும்.   

நிபுணர்குழு அறிக்கை, இதுவரை காலமும் பேசுபொருளாயுள்ள பல வினாக்களுக்கான விடையை அளித்துள்ளது. இது அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்களைக் கொண்ட குழு வழங்கியுள்ள அறிக்கையின் பரிந்துரைகளாகும். இதை அரசாங்கம் ஏற்றாக வேண்டும். இதை அரசாங்கம் ஏற்க மறுப்பானது, அறிவியல் சார்ந்ததல்ல; அரசியல் சார்ந்தது. 

கடந்த இரு வாரங்களாக, அடக்கம் செய்வதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட இன்னொரு வாதம், டென்மார்க்கில் புதைக்கப்பட்ட ‘மிங்’ விலங்குகள், மீளத்தோண்டப்பட்டு எரிக்கப்பட்ட நிகழ்வாகும்.

கடந்த டிசெம்பர் மாதம், டென்மார்க்கில் மாற்றமடைந்த கொரோனா வைரஸ், ‘மிங்’ விலங்குகளின் ஊடாக, மனிதர்களுக்குக் கடத்தப்பட்டது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அங்கு பண்ணைகளில் வளர்க்கப்பட்ட 17 மில்லியன் ‘மிங்’குகள் கொல்லப்பட்டன. ‘மிங்’கின் மயிரில் இருந்து, குளிரைத் தாங்கும் போர்வைகளும் ஆடைகளும் செய்யப்படுகின்றன. இவ்வாறு கொல்லப்பட்டவற்றின் ஒரு தொகுதி, இராணுவதுக்குச் சொந்தமான இடத்தில் புதைக்கப்பட்டன. அவை ஆழமாகப் புதைக்கப்படாமல், மேலோட்டமாகப் புதைக்கப்பட்டன. அதனால், சில நாள்களில் அவற்றில் சில வெளியே வந்தன. இப்பகுதியைச் சூழ வாழும் மக்கள், அவை அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று கோரினர். இதையடுத்து, அவை அங்கிருந்து தோண்டப்பட்டு எரிக்கப்பட்டன. இந்தக்கதை, இலங்கையில் இறந்தவர்களைத் தகனம் செய்வதற்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. 

ஆனால், இங்கு சொல்லாத செய்தி ஒன்றுண்டு. ‘மிங்’குகள் விசவாயுவை விசிறியேதான் கொல்லப்பட்டன. அவ்வாறு கொல்லப்பட்ட மிங்குகள், ஆழமில்லாத குழிகளில் இடப்பட்டு, அவற்றின் மேல் மண்போட்டு மூடப்பட்டது. வாயு செலுத்தி கொல்லப்பட்ட மிங்குகளின் உக்கும் செயற்பாட்டில், அவை விரிவடையும். இதனால் இறந்த மிங்குகளில் ஒரு தொகுதி புதைக்கப்பட்ட கிடங்குகளில் இருந்து வெளித்தெரிய ஆரம்பித்தன. இதனாலேயே அவற்றைத் தோண்டியெடுத்து எரிப்பதற்குப் டென்மார்க் அரசாங்கம் தீர்மானித்தது. இது வேறுவகையில் இங்கு விளக்கப்படுகிறது. 

மரணங்கள் இயல்பானவை. மரணங்களின் பின்னரான நடைமுறைகள் காலத்துடன் மாறி வந்துள்ளன. ஆனால், மரணித்தோருக்கான மரியாதை எப்போதும் தொடர்ந்துள்ளது. இனியும் தொடர வேண்டும். 

ஒரு பெருந்தொற்று, மனிதத்தின் மாண்பையோ, மரணித்தோரின் மரியாதையையோ அழித்துவிடுவதை எந்தவொரு சமூகமும் அனுமதிக்கக்கூடாது. தம் சமூக வாழ்வின் அங்கமாக மாறிய நிலையில், தகனம் செய்வதும் அடக்கம் செய்வதும் அவரவர் நம்பிக்கை சார்ந்த விடயங்களாகி விட்டன. 

எரிப்பதை வழமையாகக் கொண்டோரும், குழந்தைகள் இறந்தால் எரிப்பதை விடுத்து அடக்கம் செய்வதையே வழமையாகக் கொண்டுள்ளனர். அதேவேளை, பல சமூகங்கள் காலமாற்றத்தால் எரிப்பதை முன்னிறுத்துகின்றன. இடப்பற்றாக்குறை, நகரமயமாக்கல் போன்ற காரணிகள் இதை உந்தித் தள்ளியுள்ளன. ஆனால், இன்றும் உலகெங்கும் கல்லறைகளுக்கான இடம் தனியானது. தாஜ்மகால் முதல் பிரமிட் வரை அனைத்தும் கல்லறைகளே.

இன்று, இலங்கையில் சடலங்களின் பெயரால் வன்மம் அரங்கேறுகிறது. உடலை அடக்கம் செய்வதைப் புனிதமாகக் கருதுகின்ற மக்கள் குறிவைக்கப்படுகிறார்கள்.

இது அரசியல் நோக்குடையது. அதற்குப் போலி அறிவியலைத் துணைக்கழைக்கிறார்கள். இறந்த ஒருவருக்கு, அவருக்கான இறுதி மரியாதையும் அவர் விரும்பியபடி அடக்கம் செய்வதோ, எரிப்பதோ என்பது நடந்தாக வேண்டும்.

அந்த உரிமையை யாரும் பறிக்க முடியாது. இன்று உயிரற்ற உடல்களில் இருந்து பறிக்கப்படும் உரிமைகள், நாளை உயிர்களிடமிருந்து பறிக்கப்படுவது மட்டுமன்றி உயிர்களும் பறிக்கப்பட வாய்ப்பாகும். வரலாறு கற்றுத்தந்த பாடமது. 

நிறைவாக, மூன்று விடயங்களை கேள்விக்கு உட்படுத்த விரும்புகிறேன். முதலாவது, அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளையே அரசு ஏற்க மறுப்பது என்ன வகை. ஒருவேளை ‘நாட்டாமை தீர்ப்பை மாற்று’ வகையோ. இரண்டாவது, இறந்த முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கு அனுமதி அளித்திருப்பது, வெட்கக்கேடானது. இது இலங்கை முஸ்லிம்களுக்கு நிகழ்ந்த அவமரியாதையாகும். மூன்றாவது மதத்தின் பேரால் அனைத்தையும் பார்க்கும், பேசும் சமயத் தலைவர்களினதும் மத்திய கிழக்கின் மதக் காவலர்களதும் குரல்கள் எங்கே போயின. சடலங்களின் மேல் நடக்கும் அரசியல், இலங்கையில் சிறுபான்மையினரின் மீதான அடக்குமுறையின் ஒருபகுதி என்பதை நாம் எவரும் மறக்காமல் இருப்பது நல்லது.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொவிட்-19-கதையாடல்-5-சடலங்களில்-அரசியல்/91-263230

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.