Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாஜக தமிழ்நாட்டில் தேர்தலுக்குப் பிறகு தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும்: எச்.ராஜா சிறப்பு பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
9 மணி நேரங்களுக்கு முன்னர்
எச். ராஜா

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா.

வரவிருக்கும் தேர்தலை பா.ஜ.க எந்த பிரச்னையை முன்வைத்து சந்திக்கப் போகிறது? வேல் யாத்திரை வெற்றியா? ரஜினியின் வருகை பா.ஜ.கவின் வாக்கு வங்கியை பாதிக்குமா? தேசிய செயலர் பதவியை இழந்ததால் வருத்தமா? என்பது குறித்தெல்லாம் பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் எச். ராஜா. பேட்டியிலிருந்து.

கே: தேர்தல் அறிக்கை குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எந்தெந்தப் பிரச்னைகளை முன்வைத்து பா.ஜ.க. சந்திக்கவிருக்கிறது?

ப. நான் ஆறாவது முறையாக இந்த தேர்தல் அறிக்கைக் குழு தலைவராக இருக்கிறேன். 1991, 1996, 2001, 2006, 2011, 2016 என ஆறு முறை நான் இருந்திருக்கிறேன்.

முக்கியமாக விவசாயிகள் பிரச்சனை இருக்கிறது. நான் அடிப்படையில் ஒரு விவசாயி. இப்போதும் விவசாயம் செய்துகொண்டிருக்கும் விவசாயி. இந்தக் கோவிட் - 19 பிரச்சனையால் விவசாயம், சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. நாட்டில் நிறைய பேர் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். நாம் விவசாயத்தில், இடுபொருட்களுக்கான விஷயங்களை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். நதிகள் இணைப்பில் கவனம் செலுத்த வேண்டும். விவசாயம் தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்த சட்டங்கள் சரியாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

அடுத்ததாக, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கோவில்களின் எண்ணிக்கை அதிகம். இந்தக் கோவில்களுக்கு இருப்பது போன்ற சொத்து உலகத்திலேயே வேறு எங்கும் கிடையாது. 5,25,000 ஏக்கர் நிலம் இருந்ததை, இந்த திராவிட இயக்கங்கள் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சூறையாடியிருக்கிறார்கள்.

அரசு வெளியிட்ட சமீபத்திய கொள்கை விளக்க குறிப்பில், 4,76,000 ஏக்கர் நிலம்தான் இருப்பதாக சொல்கிறார்கள். எம்.ஜி.ஆர். இருக்கும்போது குன்றக்குடி அடிகளார் தலைமையில் ஒரு கமிட்டி போடப்பட்டது. அதில் கிருஷ்ணசாமி ரெட்டியார் போன்ற சட்ட வல்லுநர்கள் இருந்தார்கள். அந்தக் குழு அளித்த அறிக்கை சட்டமன்றத்தில் ஏற்கப்பட்டது. அந்த அறிக்கையில், கோவில்களை இந்து ஆன்றோர், சான்றோர் அடங்கிய தனித்தியங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

அடுத்ததாக கல்வி. இதற்கு முன்பாக பிற மாநிலங்களில் அந்த மாநில மொழி, ஆங்கிலம், இந்தி ஆகியவற்றைக் கற்பிக்க வேண்டுமென இருந்தது. ஆனால், இப்போது மத்திய அரசு நாட்டின் பன்முகத் தன்மையைப் பாதுகாக்க, தாய்மொழி, ஆங்கிலம், ஏதாவது ஒரு இந்திய மொழியை கற்பிக்க வேண்டும் என்கிறது. தமிழ்நாட்டில் 38 சதவீதம் மொழிச் சிறுபான்மையினர் இருக்கிறார்கள்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் தெலுங்கு பேசுபவர்கள். உதாரணமாக, வைகோவின் பேரக் குழந்தை ஏன் தெலுங்கு படிக்கக்கூடாது? கன்னடம் படிக்க வேண்டுமென்றால் கன்னடம் படிக்கலாம். மலையாளம் வேண்டும் என்றால் அதைப் படிக்கலாம். ஆகவே, புதிய மத்திய கல்வி கொள்கையை செயல்படுத்துவோம்.

அடுத்தாக, பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பல மருத்துவமனைகளில் செயல்படுத்துவதில்லை. அதை கடுமையாக செயலாக்குவதற்கான நடவடிக்கைகளைச் செய்வோம்.

இது போன்ற அம்சங்கள் இந்த அறிக்கையில் இடம்பெறும். பத்து பேர் இந்த தேர்தல் அறிக்கைக் குழுவில் இருக்கிறோம். வரும் 23ஆம் தேதி முதல் முறையாக அந்தக் குழு சந்திக்கும். எந்தெந்த விஷயங்கள் குறித்துப் பேச வேண்டும் என விவாதிப்போம். அது தவிர, விவசாய அமைப்புகள், வர்த்தக அமைப்புகள், பல்வேறு சமூக அமைப்புகள் ஆகியவற்றோடு கலந்தாலோசிப்போம்.

கே: கடந்த சில நாட்களுக்கு முன்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தபோது, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தொடருமென மேடையிலேயே அறிவித்தார் துணை முதல்வர். முதல்வரும் அதே வழிமொழிந்தார். ஆனால், பா.ஜ.கவிடமிருந்து அதை ஏற்பது போன்ற சமிக்ஞைகள் ஏதும் வரவில்லையே?

ப. பா.ஜ.கவையும் அ.தி.மு.கவையும் நீங்கள் ஒப்பிடக்கூடாது. அ.தி.மு.கவின் உச்சகட்ட தலைமை ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி கே. பழனிசாமியும்தான். ஆனால், எங்களுக்கு முடிவெடுக்கும் அமைப்பு பார்லிமென்ட் போர்டுதான். கூட்டணி விஷயத்தை அவர்கள்தான் அறிவிக்க வேண்டுமென்பதால், இங்கே யாரும் அதைப் பற்றிப் பேசவில்லை.

அ.தி.மு.க எல்லா மசோதாக்களிலும் ஆதரவளித்திருக்கிறார்கள். இணக்கமாக செயல்படும் கூட்டணி இது. ஆனால், கூட்டணி குறித்து தலைமைதான் அறிவிக்க வேண்டும்.

எச். ராஜா

கே: அங்கிருந்த உள்துறை அமைச்சர்கூட இதற்குப் பதிலளிக்கவில்லையே..

ப. பார்லிமென்ட் போர்டுதான் முடிவெடுக்க வேண்டுமென்பதால், அது குறித்துப் பேசுவதை அவரும் தவிர்த்திருக்கலாம்.

கே: அப்படி கூட்டணி தொடரும் பட்சத்தில், அ.தி.மு.க.வுடன் நீங்கள் போட்டியிட்டால், ஆளும் கட்சிக்கு எதிரான உணர்வு இருக்கும். அது உங்கள் வாய்ப்புகளையும் பாதிக்கும். அதனை நீங்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

ப. சமீபத்தில் நடந்த பிகார் மாநிலத் தேர்தலில் நான்காவது முறையாக முதல்வராக தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். மூன்று முறை முதல்வராக இருந்ததால் ஏற்பட்டிருக்கும் அதிருப்தி உணர்வை நாங்கள் தோற்கடித்திருக்கிறோம். ஆளும் கட்சிக்கு ஆதரவான உணர்வாக மாற்றியிருக்கிறோம். பா.ஜ.க. இருந்தாலே, அந்த ஆட்சி இருக்க வேண்டுமென நினைக்கிறார்கள். அதேபோல, இங்கேயும் செய்ய முடியுமென நம்புகிறோம்.

கே: தேர்தல் அறிக்கையில் விவசாயம், கல்வி போன்றவற்றைப் பேசினாலும், போராட்டத்திற்கு கையில் எடுக்கும்போது மதம் சார்ந்த விஷயங்களையே கையில் எடுக்கிறீர்கள். உதாரணமாக, வேல் யாத்திரை விவகாரம்...

ப. தமிழ்நாட்டில் அரசியலில் மதத்தைப் புகுத்தியதே திராவிட தீய சக்திகளும் ஈ.வெ.ராவும்தான். பிள்ளையார் சிலையை உடைப்பீர்கள், மீனாட்சியை இழிவாகப் பேசுவீர்கள்.. அதற்கு எதிர்வினை ஆற்றமாட்டார்களா? பா.ஜ.கவை மட்டும் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள். தி.மு.க, தி.க.விடம் இந்தக் கேள்வியைக் கேளுங்கள். அவர்கள் செய்ததை மறந்துவிட வேண்டுமா?

அடுத்ததாக கருப்பர் கூட்டம். கந்த சஷ்டி கவசத்தைப் பற்றி அவர்கள் இழிவாக யு ட்யூபில் போட்டார்களா இல்லையா? தி.மு.க. ஆட்சியின்போது பப்ளிக் ப்ராசிக்யூட்டராக இருந்தவர், அவர்களுக்கு வழக்கறிஞராக இருக்கிறாரா இல்லையா? திட்டமிட்டு ஸ்டாலின் இதைச் செய்கிறார் என்கிறேன். மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். ஒரு பக்கம், அவர் மனைவியை கோவிலுக்கு அனுப்புகிறார். மற்றொரு பக்கம் இந்து மதத்தை இழிவு செய்பவர்களுக்கு ஆதரவளிக்கிறார். முத்துராமலிங்கத் தேவரை அவமானப்படுத்தியிருக்கிறார். அவரை யார் சமாதிக்கு வரச் சொன்னது.

 

எந்த மதத்தையும் பின்பற்றாதவரை நான் வரவேற்கிறேன். ஆனால், கஞ்சி குடிக்கும்போது குல்லா போடுகிறாரா இல்லையா? ஆனால், இங்கே ஏன் விபூதியை அழிக்கிறார்? அதைப் போன்ற திட்டமிட்ட மத உணர்வுகளைக் காயப்படுத்தும் செயல் இருக்க முடியுமா? அதைக் கேட்க மாட்டீர்கள், வேல் யாத்திரையைக் கேட்கிறீர்கள். நீங்களும் இந்து விரோதி ஆகிவிட்டீர்களா?

கே:கருப்பர் கூட்டத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது..

ப. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? முப்பதுக்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருக்கின்றன. கிரிமினல் சட்டப்படி ஒவ்வொரு குற்றத்தையும் தனித்தனியாகக் கருதவேண்டும். ஆனால், ஒரே ஒரு வழக்கில் நான்கு பேரையும் கைது செய்திருக்கிறார்கள். ஒருவர் ஈ.வெ.ரா சிலை மீது காவி பூசியதற்கு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப் போட்டார்களே.. இங்கே ஏன் அதைச் செய்யவில்லை? அதனால், கருப்பர் கூட்டம் விவகாரத்தில் இந்துக்களுக்கு நியாயம் செய்யப்படவில்லை. அதனால், வேல் யாத்திரைக்கு அவசியம் ஏற்பட்டது.

கே: வேல் யாத்திரையைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் ஒரு பரபரப்பு இருந்தது. ஆனால், பிறகு அப்படியில்லையே.. அந்த யாத்திரையை வெற்றி என்று சொல்வீர்களா?

ப. சந்தேகமில்லாமல். யாத்திரை துவங்கி சில நாட்களுக்குப் பிறகு கடுமையான மழை பெய்ய ஆரம்பித்தது. புயல் வந்தது. அதனால், சில நிகழ்ச்சிகளை ரத்துசெய்துவிட்டு, கடைசியாக ஒரு நிகழ்ச்சி நடத்த முடிவுசெய்தோம்.

நான் தனியாக விழுப்புரம், கிருஷ்ணகிரி போன்ற சில மாவட்டங்களுக்குச் சென்றிருந்தேன். அங்கு பா.ஜ.க கூட்டத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்குக் கூட்டம் வந்தது. இளைஞர்களும் பெண்களும் திரண்டார்கள். ராம ஜென்ம பூமிக்கான ரத யாத்திரையை அத்வானி நடத்தினார். அது மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதற்குக் காரணம், அவமானப்படுத்தப்பட்ட உணர்வுக்கு மருந்தாக அந்த யாத்திரை அமைந்தது. அதுபோலத்தான் இதுவும்.

வேல் யாத்திரை

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

வேல் யாத்திரையில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்

கே: பா.ஜ.க தமிழ்நாட்டில் மிக முக்கியமான அரசியல் சக்தியாக வருவதற்கு தொடர்ந்து முயல்கிறது. அந்தப் பின்னணியில் இந்தத் தேர்தல் எவ்வளவு முக்கியம்?

ப. நான் யதார்த்தவாதி. என்னைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலுக்குப் பிறகு, பா.ஜ.க. தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக உருப்பெறும். தவிர்க்கமுடியாத சக்தி என்றால் என்ன மாதிரி என சந்தேகம் வரலாம்.

உதாரணத்திற்குச் சொல்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத்திற்குத் தேர்தல் வந்தது. அதில் 87 இடங்களில் 44க்கு அதிகமான இடங்களை பெற வேண்டுமென நினைத்தோம். 27 இடங்களைப் பிடித்தோம்.

தமிழ்நாட்டைப் போலத்தான், அங்கேயும் பா.ஜ.க. கால் ஊன்றாது, கை ஊன்றாது என்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால், தேர்தலுக்குப் பிறகு மெகபூபா முஃப்தியாக இருந்தாலும் ஒமர் அப்துல்லாவாக இருந்தாலும் பா.ஜ.க ஆதரவின்றி ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. ஆகவேதான் மெகபூபா முஃப்தி பா.ஜ.கவுடன் இணைந்து ஆட்சி அமைத்தார்.

அப்படி ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வர வேண்டுமென்பதே இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை எங்கள் குறிக்கோள்.

கே: அப்படியானால், அ.தி.மு.க. ஆட்சியமைத்தால், பா.ஜ.கவுடனான கூட்டணி ஆட்சியாக இருக்கும் என்கிறீர்களா..

ப. நான் அதற்கு மேல் உள்ளே செல்ல விரும்பவில்லை. பா.ஜ.க. தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும்.

கே: ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்...

ப. எந்த ஒரு குடிமகனுக்கும் 18 வயதைக் கடந்தால் கட்சி துவங்கும் உரிமை உள்ளது. ஆகவே அவருக்கும் அந்த உரிமை உள்ளது. அவருக்கு வாழ்த்தும் தெரிவித்திருக்கிறேன்.

கே: ரஜினியின் கட்சி, பா.ஜ.கவின் B team என்ற விமர்சனம் இருக்கிறது...

ப. தங்க தமிழ்ச் செல்வன் தி.மு.கவை கடுமையாக எதிர்த்தார். இப்போது தி.மு.கவில் இருக்கிறார். டிடிவி தினகரன்தான் தங்க தமிழ்ச்செல்வனை தி.மு.கவிற்கு அனுப்பினார்?

தி.மு.கவிலிருந்து பல பொறுப்புகளில் இருந்தவர்கள் - வி.பி. துரைசாமி, கே.பி. ராமலிங்கம் போன்றவர்கள் பா.ஜ.கவுக்கு வந்திருக்கிறார்கள். அதற்காக பா.ஜ.க, தி.மு.கவின் பி டீமா? அல்லது தி.மு.க., பா.ஜ.கவின் பி டீமா? ரஜினிகாந்த் நல்ல முதிர்ச்சியுள்ள, பிரபலமான ஆளுமை. அவர் பா.ஜ.க. சொல்லி செய்கிறார், பா.ஜ.கவின் பி டீம் என்றெல்லாம் சொல்வது, அவரது மரியாதையைக் குறைக்கும் செயல். அது ஏற்புடையதல்ல.

கே: ரஜினி ஆன்மீக அரசியல் என்ற கோஷத்தை முன்வைக்கிறார். பா.ஜ.கவும் அதுபோலத்தான் பேசுகிறது. ஆகவே அவரது வருகை பா.ஜ.கவின் வாக்குகளைப் பிரிக்குமா?

ப. பா.ஜ.க. 1980ல் துவங்கப்பட்டது. 1984ல் வெறும் இரண்டு பேர்தான் ஜெயித்தார்கள். வாஜ்பேயி, அத்வானியே தோற்றுப்போனார்கள். ஜெயித்த இரண்டு பேரும் முகமற்றோர். பெரிய பொறுப்புகளில் இருந்தவர்களில் இல்லை. ஆனால், அந்த பா.ஜ.கவுக்கு இப்போதுவரை தொடர்ச்சியாக ஒரு வரலாற்றைக் கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அதிமுக இணக்கமாக செயல்படும் கூட்டணிக் கட்சி என்கிறார் எச்.ராஜா.

ஆன்மிக அரசியல் என்றால், நாத்திக அரசியல் இல்லை என்று அர்த்தம். இந்த ஆன்மீக அரசியலில் தொடர்ச்சியாக ஒரு வரலாறு பா.ஜ.கவுக்கு உண்டு. முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படக்கூடாது என முத்தலாக் சட்டம் கொண்டுவந்தது கூட ஆன்மிகம்தான். அதேபோல, வங்கதேசம், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் தங்கள் மதத்தைப் பின்பற்ற முடியாமல் வரும் கிறிஸ்தவர்கள், பார்சிகள் போன்றவருக்கு குடியுரிமை தருவதாகச் சொன்னோம். அது கேரளா போன்ற மாநிலங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒவ்வொரு பா.ஜ.க. தொண்டன் கையிலும் இரண்டு ஆயுதங்கள் இருக்கின்றன. ஒன்று, சித்தாந்தம். மற்றொன்று, எங்களது சாதனைகள். இந்த இரண்டின் அடிப்படையிலானது எங்கள் வாக்கு வங்கி. ஆகவே இதற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

கே: கடந்த சில நாட்களாக நீங்கள் வருத்தமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக தேசிய செயலர் பதவி இல்லாமல் போனதிலிருந்து...

ப. நான் ஆறு ஆண்டுகளாக, இரண்டு முறை தொடர்ச்சியாக அந்தப் பதவியில் இருந்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை, பொறுப்பு என்பது ஒரு வாய்ப்பு. இப்போதுகூட நான் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவராக இருக்கிறேன். முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த மையக் குழுவிலும் இருக்கிறேன்.

தவிர, இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அரசியல் மூலமாகவும் மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்பதால் பா.ஜ.கவில் இருக்கிறேன். ஆனால், நான் என்னுடைய ஏழு வயதில் 1964ல் ஆர்எஸ்எஸில் இணைந்தவன். 56 ஆண்டுகளாக இதே கொள்கைக்காக பயணித்திருப்பவன். 1978ல் காரைக்குடியில் நான்காவது வார்டு தலைவராக துவங்கி, அகில இந்திய செயலராகியிருக்கிறேன். ஆகவே, கட்சி என்னை வருத்தப்படும்படி வைத்துக்கொள்ளவில்லை.

பாஜக தமிழ்நாட்டில் தேர்தலுக்குப் பிறகு தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும்: எச்.ராஜா சிறப்பு பேட்டி - BBC News தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.