Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாவம் பழனிச்சாமி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

சிறப்புக் கட்டுரை: பாவம் பழனிச்சாமி!

ராஜன் குறை

 

spacer.png

தோல்வியில் பல சமயம் கெளரவம் இருக்கும். புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், பல களம் கண்ட படைத்தலைவர்கள் தோல்வியடைவார்கள். ஆனால் அது மிகவும் கெளரவமான தோல்வியாக இருக்கும்; அவர்கள் புகழ் அதனால் என்றும் மங்காது. இதற்கு மாறாக வெற்றியில் அவமானகரமான வெற்றி என்பது ரசிக்கத்தக்கதாக இருக்காது. அது அந்த வெற்றியின் தருணத்திலேயே கூசிக் குறுகச்செய்யும்.

எடப்பாடி பழனிச்சாமி ஓ.பி.எஸ்-ஸை கட்சிக்குள் ஓரம் கட்டி பெரும்பான்மை ஆதரவைக்காட்டி ஓ.பி.எஸ்-ஸை வைத்தே தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வைத்த தருணம் ஒரு விதத்தில் வெற்றிதான். ஆனால் தொடர்ந்து பாரதீய ஜனதா விசுவாசத்தில் ஓ.பி.எஸ்-ஸுடன் போட்டி போட முடியாமல் தவித்து நிற்பதுதான் பரிதாபம். Skating on thin ice என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். நீரின் மீது உருவான ஐஸ் பரப்பு கனமாக இல்லாதபோது ஸ்கேட்டிங் விளையாடினால் அந்த ஐஸ் தரை உடைந்து உள்ளே பனிநீரில் மூழ்க வேண்டியதுதான். எடப்பாடியின் நிலை அப்படித்தான் இருக்கிறது.

அமித் ஷா வரும்போது என்ன சொல்வாரோ, ஜே.பி.நட்டா வந்தால் என்ன சொல்வாரோ என்று அஞ்சி வாழும் நிலை. தமிழ்நாட்டில் நோட்டாவுடன் மட்டுமே போட்டியிட முடியும் என்ற நிலையில் இருக்கும் பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் முருகன், அ.இ.அ.தி.மு.க கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள்தான் தீர்மானிப்போம் என்று சொல்கிற நிலையில்தான் இருக்கிறது எடப்பாடியின் தலைமை.

எந்த நேரத்தில் ஓ.பி.எஸ் கலகம் செய்வார், அவருக்கு ஆதரவு எப்படி இருக்கும், சசிகலா சிறையிலிருந்து வந்தால் என்ன செய்வார், அவர் பின்னால் எத்தனை பேர் செல்வார்கள், பாரதீய ஜனதா என்னதான் ஸ்கெட்ச் போடுகிறது, ரஜினி, கமல் என்று எத்தனை பேர் எம்.ஜி.ஆர் வாக்குகளுக்கு சொந்தம் கொண்டாடப் போகிறார்கள் என்று எதுவும் நிச்சயம் இல்லாமல் அரசாங்க பணத்தில் கிடைக்கும் விளம்பரத்தையும், எத்தனை அடித்தாலும் தாங்கும் வடிவேலுவின் தத்துவத்தையும் வைத்துக்கொண்டு தான் களவாடிய தலைமையை தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்று தத்தளிக்கும் எடப்பாடியின் நிலை பரிதாபத்திற்குரியது.

எந்த தகுதியால் முதல்வரானார் எடப்பாடி?

இந்தியா குடியரசாகி வயது வந்தோர் அனைவரும் வாக்களிக்கும் தேர்தல்கள் நடைபெறத் துவங்கிய பிறகு தமிழக முதல்வர்களாகவும், ஆற்றல் மிக்க தலைவர்களாகவும் விளங்கியவர்கள் ஏழுபேர். ராஜாஜி, காமராஜ், பக்தவத்சலம் ஆகியோர் காங்கிரஸ்காரர்கள். அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் திராவிட கட்சிகளை சார்ந்தவர்கள். இவர்கள் அனைவருமே அரசியல் முக்கியத்துவம் உடையவர்கள். (குறுகியகால, இடைக்கால முதல்வர்கள் முக்கியத்துவமற்றவர்கள்).

அரசியலில் முக்கியத்துவம், தலைமைப் பதவிகளை பெறுவது என்பது இரண்டு விதங்களில் நடக்கலாம். ஒன்று செல்வாக்கு மிக்க சமூகப் பின்னணியும், கல்வியும் திறமையும் பெற்றதால் கட்சியிலும், ஆட்சியிலும் முக்கியத்துவம் பெறுவது. மற்றொன்று கட்சிப் பணியில் திறம்பட ஈடுபட்டு வேர்மட்டத்திலிருந்து முன்னேறி வெகுஜன தலைவர் ஆவது. முன்னதற்கு உதாரணம் ராஜாஜி, பக்தவத்சலம். பின்னதற்கு உதாரணம் காமராஜ்.

அறிஞர் அண்ணாவும், கலைஞரும் வெகுஜன அரசியலில் புதிய சகாப்தத்தை படைத்த வரலாற்று நாயகர்கள். உலக அளவில் வேர்மட்ட த்திலிருந்து வெகுஜன அரசியலை வளர்த்தெடுத்து வரலாறு படைப்பதற்கு உதாரணமானவர்கள். எம்.ஜி.ஆர் அவர்கள் இருவர் நிழலில், திராவிட முன்னேற்ற கழகத்தின் வளர்ச்சியோடு தன் திரைவாழ்வை பிணைத்துக் கொண்டு நட்சத்திர நடிகரானவர். அதனால் பெரும் வெகுஜன ஈர்ப்பைப் பெற்றவர். அவருடன் திரைப்படங்களில் நடித்திருந்த புகழ்மிக்க நட்சத்திரமாக இருந்ததாலும், அவரால் வாரிசாக கட்சியில் சூசகமாக சுட்டிக்காட்டப்பட்டதாலும் தனக்கிருந்த கல்வியையும், ஆளுமையையும் கொண்டு எம்.ஜி.ஆரின் வாரிசாக, வெகுஜன ஈர்ப்புள்ள தலைவராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் ஜெயலலிதா.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானவுடன் பலரும் கேட்ட முதல் கேள்வியே “யார் அவர்?” என்பதுதான். பழனிச்சாமி 1989-ஆம் ஆண்டிலிருந்து தேர்தல் அரசியலில் பங்கேற்றவர். இருமுறை எடப்பாடி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று (1989,1991) பின்னர் இருமுறை தோற்றவர் (1996,2006). அதன் பிறகு 1998-ஆம் ஆண்டு திருச்செங்கோடு பாராளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்று அதிலும் பின்னர் இருமுறை தோற்றவர் (1999,2004). எனவே 2011-ஆம் ஆண்டிலும், 2016-ஆம் ஆண்டிலும் அவர் எடப்பாடியில் மீண்டும் வெற்றிபெற்றதோ ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றதோ யார் கவனத்தையும் ஈர்க்கவில்லை; ஈர்க்கும்படி எதுவும் அவர் எதுவும் செய்ததாகவும் தெரியவில்லை. அ.இ.அ.தி.மு.க-வை பொறுத்தவரை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தவிர எல்லோருமே ஜீரோ என்று கூறிக்கொள்வதுதான் மரபு என்றாலும் அந்த ஜீரோக்களில் கூட மதுசூதனன், செங்கோட்டையன், தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வம் என சில ஜீரோக்களின் பெயர்கள் பொதுக்களத்தில் அடிபடும். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி என்ற பெயரைக்கூட கூவாத்தூரில் சசிகலா அறிவிக்கும்வரை யாரும் கவனித்ததில்லை.

கட்சிப்பணியாற்றியதாலோ, கட்சிக்குள் செல்வாக்கை வளர்த்துக்கொண்டு தன்னுடைய அரசியல் ஆளுமையை வெளிப்படுத்தியதாலோ அவர் முதலமைச்சர் ஆகவில்லை. எந்த போராட்டத்திற்கும் தலைமை தாங்கியதாலோ, தன் எழுத்தாலோ, பேச்சாலோ முதலமைச்சர் ஆகவில்லை. உண்மையில் அதுபோன்ற தனித்துவம் எதுவும் இல்லாததால் தங்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பார் என்ற நம்பிக்கையில் சசிகலா, தினகரன் ஆகியோரால் முதல்வராக்கப்பட்டவர் என்றுதான் கூறவேண்டும். அதனால்தான் தவழ்ந்துபோய், சசிகலா தாழ் பணிந்து பதவியேற்றுக்கொண்டார் பழனிச்சாமி

கட்சி தலைமையை களவாட முடியுமா?

 

ஜெயலலிதா அரசியல் வாழ்வில் அவருடன் கூடவே வாழ்ந்து அவரையும், கட்சியையும் சேர்ந்து நிர்வகித்தவர் சசிகலா. பார்ப்பன சக்திகளுக்கு அவர்களில் ஒருவரான ஜெயலலிதா, முக்குலத்தோரான சசிகலாவின் பிடியில் இருந்தது சகிக்க முடிந்ததேயில்லை. அதனால் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு சசிகலாவின் பிடியிலிருந்து கட்சியை விடுவிக்க வேண்டும் என முடிவு செய்து மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாவின் துணையை நாடினர். மக்களிடையேயும் ஒரு பகுதியினரிடமும் ஜெயலலிதா நல்லவர், சசிகலாதான் நிழல் அரசாங்கம் நட த்தும் தீய சக்தி என்பது போன்ற பாமரக் கற்பனை நிலவத்தான் செய்தது. அதனால் ஜெயலலிதா மரணத் தருவாயில் முதல்வர் பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலாவிற்கு எதிராக கலகம் செய்யத் தூண்டியது பாரதீய ஜனதா கட்சி. ஆனால் சசிகலா, தினகரன் கூவாத்தூரில் சட்ட மன்ற உறுப்பினர்களை கூட்டி வைத்து ஓ.பி.எஸ் சதியை முறியடித்தனர். சசிகலா முதல்வராகியிருப்பார்.

அப்போது திடீரென்று உச்ச நீதிமன்றத்தில் உறங்கிக்கிடந்த சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு மந்திரக் கோலில் உயிர்பெற்றதால் சசிகலா முதல்வராக முடியவில்லை. ஓராண்டுக்கு முன்னரே எழுதப்பட்ட இந்த தீர்ப்பு 2016 தேர்தலுக்கு முன்னால் வழங்கப்பட்டிருந்தால் ஜெயலலிதா ஆட்சிக்கே வந்திருக்க முடியாது.அக்யூஸ்டு நம்பர் ஒன் ஜெயலலிதா மரணத்தால் தண்டனையிலிருந்து தப்பிக்க, அக்யூஸ்டு நம்பர் டூ சசிகலாவும், பிறரும் தண்டனை பெற்றனர். அதனால் எடப்பாடி சசிகலா சார்பாக முதல்வரானார்.

அது ஒரு தாற்காலிக ஏற்பாடுதான். ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டு வெற்றிபெற்றால் அவர் முதல்வராகியிருப்பார். அதை விரும்பாத சக்திகள் முயற்சியில் ஆர்.கே.நகர் தேர்தல் ஏப்ரல், 2017-இல் நடக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. ஆறுமாதம் கழித்து மீண்டும் டிசம்பர் 2017-இல் அந்த தேர்தல் நடந்த போது காட்சிகள் முற்றிலும் மாறியிருந்தன. அந்த ஆறு மாதத்தில் பாரதீய ஜனதா கட்சியிடம் சரண்டர் ஆகி கட்சி தலைமையை களவாடினார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் எடப்பாடியின் திடீர் விசுவாசத்தை ஏற்காமல் ஓ.பி.எஸ்-ஸை ஒட்டவைத்தது பாரதீய ஜனதா கட்சி. இன்றளவும் அந்த காலில் கட்டிய சங்கிலியுடன்தான் அலைகிறார் பழனிச்சாமி.

ஜெயலலிதா வாரிசு யார்?

ஒரு தலைவர் மறைந்த பிறகு, மற்றொருவர் பொறுப்புக்கு வரும்போது, கட்சியில் வேறொருவர் அதிருப்தியடைந்து நானே உண்மையான வாரிசு என பிரிவது சகஜம். சில சமயம் நிலைத்து நிற்பார்கள்; சில சமயம் உதிர்ந்து போவார்கள். அண்ணா மறைந்த பிறகு கலைஞர் , கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டு தலைவரானார். அதன் பின் நடந்த 1971 தேர்தலிலும் மகத்தான வெற்றி பெற்றார். ஆனாலும் எம்.ஜி.ஆர் நானே அண்ணாவின் வாரிசு என அவர் பெயரால் அண்ணா தி.மு.க என்று கட்சி துவங்கினார். தமிழக அரசியல் காலப்போக்கில் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க என்று இருமுனை அரசியலாக மாறியது. எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு அவரது வலது கரம் ஆர்.எம்.வீரப்பன் ஜெயலலிதாவை வாரிசாக ஏற்கவில்லை. எம்.ஜி.ஆர் மனைவி வி.என்.ஜானகியை முதல்வராக்கினார். ஜெ-அணி, ஜா-அணி என்று பிரிந்து போட்டியிட்டதில் மக்கள் ஜெயலலிதா அணிக்கே ஆதரவளித்தார்கள். ஜானகி தன் பிரிவை ஜெயலலிதா பிரிவுடன் இணைத்தார். ஆர்.எம்.வீரப்பனும் ஜெயலலிதா தலைமையை ஏற்றார். இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்டது.

ஜெயலலிதாவின் இணைபிரியாத துணயாக, உடன்பிறவா சகோதரியாக மாறிய சசிகலா கட்சியையும், ஆட்சியையும் நடத்துவதில் பங்குதாரராகவே விளங்கினார். அவருடைய அக்கா மகன் சுதாகரனை ஜெயலலிதா தன் வளர்ப்பு மகனாக அறிவித்தார். ஆடம்பர திருமணம் செய்வித்தார். பின்னர் பதவியிழந்தபிறகு சுதாகரன் உறவை துண்டித்துக்கொண்டார். சசிகலா குடும்பத்தினரை அவர் அரவணைப்புதும் விலக்குவதாகவும் இருந்தாலும் சசிகலா இல்லாமல் வாழ முடியாதவராகவே இருந்தார். சின்னம்மா என்று அழைக்கப்பட்ட சசிகலாவை தன் வாரிசாக அறிவிக்காவிட்டாலும், தன்னுடைய பங்குதாரராகவே நடத்தினார். அதனால் ஜெயலலிதாவிற்குப் பிறகு சசிகலா கட்சிக்கும், ஆட்சிக்கும் பொறுப்பேற்பது என்பது இயல்பானதுதான்.

முதல்வர் பொறுப்பேற்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் பாஜக தூண்டுதலில் சசிகலாவை அரசியல் வாரிசாக ஏற்கமாட்டேன் என்றும், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றும் அறிவித்ததால் கட்சி பிளவுபட்டது. ஏப்ரல் மாதம் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரண்டு பிரிவிற்கும் இரட்டை இலை சின்னம் கொடுக்கப்படவில்லை. பன்னீர்செல்வம் பிரிவின் சார்பாக மதுசூதனன் வேட்பாளராக நின்றார். அவருக்கு இரட்டை விளக்குக் கம்பம் சின்னமாக அளிக்கப்பட்ட து. சசிகலா அணியின் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் அளிக்கப்பட்டது. தேர்தலில் சசிகலா அணி பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

சசிகலாவா, ஓ.பன்னீர்செல்வமா யார் வாரிசு என்று இருந்த கேள்வியில் சசிகலா சிறை சென்ற பிறகு அவர் பினாமியாக தினகரனுடன் இணைந்திருந்த எடப்பாடி பழனிச்சாமி, பாரதீய ஜனதா கட்சியின் அழுத்தம் தாங்காமல் அதனிடம் சரணடைந்தார். ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து சசிகலா-தினகரனை விலக்கினார். கொல்லைப்புற வழியில், மக்கள் தீர்ப்பை சந்திக்காமலேயே இரட்டை இலை கிடைத்தது. இப்போது ஓ.பன்னீர்செல்வமும் இல்லை, சசிகலாவும் இல்லை நானே ஜெயலலிதா வாரிசு, அ.இ.அ.தி.மு.க-வின் தலைமை என்னுடையதே என்று கூறுகிறார். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா இருவருடைய ஆதரவாளர்களும் இவருடைய சந்தர்ப்பவாத துரோக அரசியலை ஏற்பது கடினம். இப்படி தலைமையை களவாடியவர் ஓ.பன்னீர்செல்வத்தையும், பாரதீய ஜனதா கட்சியையும் தொடர்ந்து அனுசரிக்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறார். தைரியமாக அவர்களை பகைத்துக்கொள்ள முடியாது.

பாரதீய ஜனதா அதிக தொகுதிகள் கேட்டு கழுத்தில் கத்தி வைத்தால் என்ன செய்வது என்ற பிரச்சினை வேறு. தான் விற்று சம்பாதித்த பணத்தையெல்லாம் எடுத்துச்செல்லும் வியாபாரியிடம் வழிப்பறித் திருடன் கழுத்தில் கத்தி வைத்து உனக்கு பணம் வேண்டுமா, உயிர் வேண்டுமா என்று கேட்டால் என்ன செய்ய முடியும். பணம் போனால் உயிர் இருந்தும் பலனில்லை. உயிர் போனால் பணம் இருந்தும் பலனில்லை. அது போல, ஜே.பி. நட்டா எப்போது வருவாரோ என்று நடுங்க வேண்டிய நிலையில் இருக்கிறார் பழனிச்சாமி.

இத்தனைக்கும் நடுவில் தான் ஒரு விவசாயி என்ற ஒரு பிம்பத்தை பழனிச்சாமி அரசு விளம்பரத் துறை உதவியுடன் கட்டமைத்தார். விட்டதா பாஜக? வேளாண் சட்டங்களை கொண்டுவந்தது. அவற்றை விசுவாசத்துடன் ஆதரித்து பேசினார். இன்று நாடெங்கும் விவசாயிகள் கொந்தளித்து எழுந்துள்ளார்கள். இப்படித்தான் உப்பு விற்கப்போனால் மழைவந்த கதையாக முடிகிறது. பாவம் பழனிச்சாமி!

கட்டுரையாளர் குறிப்பு:

 

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.

https://minnambalam.com/politics/2020/12/21/14/story-about-cm-edapady-palanisami

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.