Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய இனத் தாயக அழிப்பில் புதிய வேளாண் சட்டங்கள்! பெ. மணியரசன் தலைவர் – தமிழ்த் தேசியப் பேரியக்கம். ஒருங்கிணைப்பாளர் – காவிரி உரிமை மீட்புக் குழு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய இனத் தாயக அழிப்பில் புதிய வேளாண் சட்டங்கள்! பெ. மணியரசன் தலைவர் – தமிழ்த் தேசியப் பேரியக்கம். ஒருங்கிணைப்பாளர் – காவிரி உரிமை மீட்புக் குழு

 
farmers-696x416.jpg
 119 Views

நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் அழிப்பு சட்டங்களுக்கு எதிராக, புதுதில்லியில் வரலாறு காணாத போராட்டம் நடந்து வருகிறது. மிகக்கடும் குளிரிலும், பனியிலும் சீக்கிய உழவர்களும் வடநாட்டுப் பொதுமக்களும் தொடர்ந்து 23 நாட்களைக் கடந்து தில்லியை முற்றுகையிட்டுப் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாடெங்கும் உழவர்களின் போராட்டங்கள் ஆங்காங்கு நடந்து வருகிறது.

இந்திய நாட்டின் உழவர்களை ஒட்டுமொத்தமாக நிலத்தை விட்டு வெளியேற்றிவிட்டு, நிலம், வேளாண்மை, வேளாண் விளைபொருள் வணிகம் மூன்றையும் பன்னாட்டு மற்றும் வடநாட்டு ஆரிய வைசியப் பெருங்குழும நிறுவனங்களிடம் (கார்ப்பரேட்டுகளிடம்) ஒப்படைக்கும் தொலை நோக்குடன்தான் ஆரிய வைசியரான மோடி அரசு இந்த மூன்று வேளாண் அழிப்புச் சட்டங்களை கொண்டு வந்துள்ளது.

இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடு! ஆனால், அதை ஒற்றைத் தேசமாகக் கட்டமைக்க வேண்டுமென ஆரிய பிராமணிய இந்தியத்தேசிய ஆதிக்கவாதிகள் தொடர்ந்து திட்டமிடுகின்றனர். தற்போது இந்தியாவை ஆளும் பா.ச.க. அரசு, ஒரே தேசம், ஒரே பண்பாடு, ஒரே மதம், பாரதீயன் என்ற ஒரே இனம், ஒரே தலைமை – என்ற ஆரிய பிராமணர்கள் மற்றும் வைசியர்களின் இலட்சியத்தை நிறைவேற்றி, தேசிய இனங்களையும், அதன் மொழி – இனத் தாயகங்களையும் அழிக்க முயன்று வருகிறது.

இந்தியாவின் பல்வேறு தேசிய இனங்களும் மொழிகளும் தங்களின் ஆணிவேரைக் கொண்டுள்ள இடங்களாக கிராமங்கள் விளங்குகின்றன. கிராமங்களின் அடித்தளம் உழவர்கள் – உழவுத் தொழிலாளர்கள். இவர்களின் தாய்மடி வேளாண் நிலங்கள்! நம் மண்ணோடு பிணைக்கப்பட்ட வாழ்வு, மரபுப் பெருமை, வரலாற்றுக் பெருமை, தாய்மொழிப் பிணைப்பு, சமூகப் பாசம் அனைத்தும் கிராமங்களோடு இணைந்துள்ளன.

எனவே, கிராமங்களில் உள்ள வேளாண் நிலங்களைப் பறித்து, தேசிய இனங்களின் சிதைவுக்குத் திட்டமிடவே இந்த மூன்று வேளாண் அழிப்பு சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது மோடி அரசு!

செழித்து வளர்ந்திருந்த காடுகளை அழித்துவிட்டு, அங்கெல்லாம் கோப்பி – தேயிலைத் தோட்டங்களை உருவாக்கி, அந்தத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளிகளாக பழங்குடியின மக்களை மாற்றினார்கள் ஆங்கிலேயர்கள்! இப்போது, ஆரிய வைசியரான மோடி, தமிழ்நாட்டின் கிராமங்களையெல்லாம் அம்பானி – அதானிகளின் ஒப்பந்தப் பண்ணைகளாக்கி, அதில் வேலை பார்க்கும் கூலிகளாக மட்டுமே உழவர்களை வைத்துக் கொள்ளத் திட்டமிடுகிறது. அதிலும், நம் உழவர்கள் அங்கு இருக்க மாட்டார்கள் என்பது அடுத்த ஆபத்து!

அதானி – அம்பானி பெருங்குழும நிறுவனங்களின் ஒப்பந்தப் பண்ணைகளில் தானியங்கி எந்திரங்கள் மூலம் வேளாண்மை நடைபெறும். அப்போது தேவைப்படும் மிகக்குறைந்த தொழிலாளிகளையும் வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டில் இறக்குமதி செய்வார்கள். பண்ணை அதிகாரிகள் – ஊழியர்கள் தமிழ் தெரியாத வடநாட்டினராக இருப்பர். ஒப்பந்தப் பண்ணையில் சேர்ந்து வேளாண்மை செய்யும் உழவர்கள், தங்கள் நிலங்களில் வேலை செய்வதற்குரிய தொழிலாளிகளை பண்ணை நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதியும் இருக்கிறது. அந்தத் தொழிலாளிகள் “தொழில் திறன்மிக்கவர்கள்” என்று அந்த விதி கூறுகிறது.

வடநாட்டிலோ நிலத்தையும் உழவுத் தொழிலையும் இழந்த மக்கள் பிழைப்புத் தேடி அயல் மாநிலங்களுக்கு அதிகமாகப் புலம் பெயர்வார்கள். வடமாநிலங்களிலிருந்து புலம் பெயர்வோர் தங்கள் தாயகத்தை – இனமரபை இழப்பர். அவர்கள் தமிழ்நாட்டில் குவிவதால், தமிழ்நாடு தனது இனக்கட்டுக்கோப்பையும், தமிழ் மொழி ஆளுமையையும் இழக்கும்.

அடுத்த இனத்தை வேட்டையாடுவது, அடிமைகளை வைத்துக் கொள்வது, தன்னல நுகர்வு வெறிக்கு மற்ற இனத்தாரைப் பலியிடுவது, மிகை நுகர்வு போன்ற “பண்புகள்” ஐரோப்பியர்களுக்கும் இந்திய ஆரியர்களுக்கும் பொதுவானவை! எனவே, இருதரப்பாரின் பொருளியல் கொள்கை பொருந்திப் போவதில் வியப்பில்லை.

இன்னொருபுறத்தில், இன்றியமையாப் பண்டங்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்திலிருந்து நெல், கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை நீக்கும் சட்டத்தைக் கொண்டு வந்து, இந்தியா முழுவதையும் ஒரே வேளாண் வணிக மண்டலமாக்கத் திட்டமிடுகிறது.

farm-bill-protest-36-jpeg.jpg

உணவுப் பொருட்களை இன்றியமையாப் பண்டங்கள் கட்டுப்பாட்டிலிருந்து நீக்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைத்தவர்கள் யார்? உழவர்களோ, உழவர் சங்கங்களோ இக்கோரிக்கை வைக்கவில்லை. உலக வணிக நிறுவனமும் (WTO), பெருங்குழும வணிகத் திமிங்கிலங்களும் தாம் இந்தக் கோரிக்கையை வைத்தன.

அதேபோல், நிலங்களைப் பெருங்குழுமங்களிடம் ஒப்பந்தப் பண்ணையத்தின் கீழ் ஒப்படைத்து அவற்றின் அதிகாரத்தின் கீழ் வேளாண்மை செய்ய வேண்டும் என்று எந்த உழவரும், உழவர் அமைப்பும் கோரிக்கை வைக்கவில்லை. இதுவும் மேற்படி பன்னாட்டு – உள்நாட்டு வணிகத் திமிங்கிலங்களின் கோரிக்கையே.

தேசிய இனங்களை அழிப்பதோடு, வடநாட்டு வணிகப் பெருங்குழுமங்களின் இலாப வேட்டைக்காகவும் உழவர்களைப் பலியிட இந்தச் சட்டங்கள் மோடி அரசுக்கு உதவுகின்றன.

இந்தக் கொரோனாக் காலத்தில் இந்தியத் தொழில் உற்பத்தித் துறையும் வணிகத் துறையும் வீழ்ச்சியடைந்து, அவற்றில் ஈடுபட்டிருந்த பல கோடி மக்களைக் கொடிய வறுமையிலும் வேலையின்மையிலும் வீழ்த்திவிட்டன. இந்த நிலையில் இன்று இந்திய மக்களைத் தாங்கிப் பிடித்துப் பாதுகாப்பது வேளாண்மைத் துறை மட்டுமே! உழவர்களும் உழவுத் தொழிலாளிகளும் மட்டுமே!

தொழில் உற்பத்தித் துறையில் இன்றும் வல்லரசு நாடுகளைச் சார்ந்திருக்கிறது இந்தியா. ஆனால் வேளாண் உற்பத்தித் துறையில் இந்தியா உபரி உற்பத்தி நாடாக உள்ளது. இதை வீழ்த்தி வேளாண் துறையிலும் தங்களை அண்டி வாழும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்ற உத்தியுடன் உலக வணிக நிறுவனத்தின் மூலம் வல்லரசு நாடுகள் – இந்தியாவின் வேளாண்மையைக் கைப்பற்றத் திட்டம் தீட்டிச் செயல்படுகின்றன. அந்த வல்லரசுகளின் நம்பிக்கைக்குரிய நண்பராகச் செயல்பட்டு நரேந்திர மோடி சொந்த நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்கிறார்.

vikatan_2020-09_6051444f-dfae-443a-97b1-

வேளாண் உற்பத்திப் பொருட்களை இந்தியா முழுவதும் கொண்டு போய்த் தாராளமாக விற்கும் வாய்ப்புக் கிடைக்கப் போகிறது. அதனால் பேரம் பேசி அதிக விலைக்கு விற்று அதிக இலாபம் அடையலாம் என்று உழவர்களுக்கு ஆசை வார்த்தை கூறுகிறது மோடி அரசு.

அவ்வாறு இந்தியா முழுவதும் சென்று விற்கும் வசதியும் வாய்ப்பும் உழவர்களுக்கு இல்லை. தாங்கள் உற்பத்தி செய்த வேளாண் பொருட்களை தங்கள் பொறுப்பில் சேமித்து வைக்கும் வாய்ப்புகூட இல்லை. பெருங்குழும நிறுவனங்களுக்கே அவ்வாய்ப்புகள் உள்ளன. எனவே அந்நிறுவனங்கள் வேளாண் விளை பொருட்களை எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் குவித்து, பதுக்கி, செயற்கையாகக் கட்டுப்பாட்டை உண்டாக்கி பின்னர் அதிக விலைக்கு விற்பதற்காகக் கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது.

வேளாண் விளைபொருட்களை விற்பதற்கு இப்போதுள்ள வேளாண் விளைபொருள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் என்ற தற்சார்பு அமைப்பை நடைமுறையில் செயலற்றதாக முடக்கப் போகிறது மோடி அரசு! அதற்காகவே, இன்றியமையாப் பண்டங்களிலிருந்து இப்பொருட்களை நீக்கி, எவ்வளவு வேண்டுமானாலும் தனிநபர் குவித்துக் கொள்ளலாம் என்று திறந்துவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் பெருங்குழுமங்கள் வேளாண் விளைபொருட்களை குவித்து வைத்துக் கொள்வதற்கும், விற்பதற்கும் அனுமதி வழங்கியுள்ளது இப்புதிய சட்டம்!

இதற்கேற்ப ஒப்பந்தப் பண்ணையச் சட்டத்தையும் கொண்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான உழவர்களின் நிலங்களைப் பெருங்குழுமத்திடம் உழவர்கள் ஒப்பந்தம் செய்து வேளாண்மை செய்ய வேண்டும் என்கிறது இத்திட்டம். அந்த ஒப்பந்தப் பெரு நிறுவனம் சொல்கின்ற பயிரைத்தான் தனிநபராய் உள்ள உழவர்கள் சாகுபடி செய்ய வேண்டும். அப்பெருநிறுவனத்துடன், சாதாரண உழவர்கள் பேரம் பேசி விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்கிறது மோடி அரசு. அது முடியவே முடியாது! பெருநிறுவனங்கள் அடிமாட்டு விலையை நிர்ணயிக்கும்.

குறைந்தபட்ச ஆதரவு விலை என்று இப்போது அரசு நிர்ணயித்து வழங்கும் விலை இனி வேளாண் உற்பத்திப் பொருட்களுக்குக் கிடையாது. ஒப்பந்த நிறுவனங்கள் கடைபிடிப்பதற்குக் குறைந்தபட்ச விலைத் திட்டம் எதையும் இப்புதிய சட்டம் கூறவில்லை.

கட்டுப்படியில்லாத விலைக்குத் தங்கள் உற்பத்திப் பொருளை விற்கும் கட்டாயத்தை இந்தச் சட்டம் உருவாக்குகிறது. காலப்போக்கில் உழவர்கள் ஓட்டாண்டிகளாகி, அந்தந்த நிறுவனங்களிடம் நிலத்தை விற்றுவிட்டு ஓட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் இலக்கு!

இந்தச் சட்டங்கள் உழவர்களை மட்டும் பாதிக்கும் என்று மக்கள் கருதக் கூடாது.

unnamed-4.jpg

ஒப்பந்தப் பண்ணையம், பெருங்குழும வணிகம் என்று வந்து விட்டால் அதன்பிறகு நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுவிடும். இந்திய உணவுக் கழகத்தை (FCI) மூட வேண்டும் என்று உலக வணிக நிறுவனம் (WTO) தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மோடி அரசு 2015இல் அமைத்த சாந்தகுமார் குழு, படிப்படியாக இந்திய உணவுக் கழகச் செயல்பாட்டைக் குறைத்து மூடிவிட வேண்டும் என்று பரிந்துரை வழங்கியுள்ளது.

ஒட்டுமொத்த உழவர்களுக்கும் மக்களுக்கும் எதிரான மோடி அரசின் பெருங்குழும வேட்டைச் சட்டங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரிப்பதன் மூலம் சொந்த மக்களுக்குத் துரோகம் செய்து விட்டார். தம்மை விவசாயி என்று கூறிக் கொள்ள எடப்பாடி வெட்கப்பட வேண்டும்!

மாநில அரசு கொள்முதல் நிலையங்களை மூடாது எனக் கூறுகிறார், எடப்பாடியார். ஆனால், இப்போதுகூட மாநில அரசு சொந்தமாகக் கொள்முதல் செய்யவில்லையே? இந்திய அரசின் உணவுக் கழகத்திற்காகத் தானே கொள்முதல் செய்து கொண்டுள்ளது? உணவுக் கழகத்தையே மூட இந்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், எடப்பாடியார் யாருக்காகக் கொள்முதல் செய்வார்?

நெல் கொள்முதல், வேளாண் விளைபொருள் கொள்முதல் ஆகியவை இல்லையென்றால் நியாய விலைக் கடைகளும் மூடப்படும்!

நிலம், வேளாண்மை, வேளாண் விளைபொருள் விற்பனை ஆகியவை அரசமைப்புச் சட்டத்தில் மாநில அதிகாரப் பட்டியலில் இருக்கின்றன. தனது அரசின் அதிகாரங்கள் பறிபோவதைப் பற்றிக் கூட கவலைப்படாமல், இச்சட்டங்களை ஆதரிக்கிறார்.

மாநில அதிகாரப் பட்டியலில் உள்ள வேளாண்மையை, இச்சட்டங்களின் வழியே தனது முற்றுமுழுதான அதிகாரத்தின் கீழ் கொண்டு செல்கிறது மோடி அரசு. மிகப்பெரும் போராட்டங்களின் விளைவாக ஐட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக எடப்பாடி அரசு தடைச்சட்டம் கொண்டு வந்துள்ளதல்லவா, அந்தச் சட்டங்களையெல்லாம் இந்த புதிய வேளாண் சட்டங்கள் உடைத்தெறிந்துவிடும். இதுகுறித்தெல்லாம் எடப்பாடியாருக்கு ஒரு கவலையும் இல்லை!

இந்த மூன்று வேளாண் அழிப்புச் சட்டங்களும் ஒட்டுமொத்த இந்திய மக்களைப் பெருங்குழுமங்கள் வேட்டையாடி, வறுமையிலும் பட்டினிச் சாவிலும் வீழ்த்தும் தன்மை கொண்டவை. தேசிய இனத் தாயகங்களை சிதைக்கக்கூடியவை. எனவே, இதனை முறியடிக்கும் போராட்டங்களை இன்னும் வீச்சுடன் விரிவுபடுத்த வேண்டியதே காலத்தின் தேவை!

 

https://www.ilakku.org/?p=37727

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.