Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலி மேஜர் ஆதித்தன்

Black-Tiger-Mejor-Aathiththan.jpg

நிதானித்துக் கொள்வதற்கிடையில் அந்த நிகழ்வு அவர்களை நிலைகுலையச் செய்துவிட்டது.

கைகளால் தொடுகின்ற தூரத்திற்குள் கடுமையான துப்பாக்கிச் சூடுகளை எதிர்பார்த்தது தான்; என்றாலும் இவ்வளவு சீக்கிரத்தில் நடக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. இராணுவ முகாம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்த போது முகாமிற்கு அருகே பதுங்கியிருந்த இராணுவம் தான் தாக்குதலை ஆரம்பித்தது அந்தத் தாக்குதல். இமைப்பொழுதில் அவனோடு கூடவந்தவர்களைப் பிரித்துவிட அவன் தனித்தவனானான்.

எங்கும் கடும் இருட்டு, இருளிற்குள் இருந்து பெரிய உருவம் ஒன்று பாய்ந்து அவனைக் கட்டிப்பிடித்தது. அவனைவிட பெரிய உருவம் அது இரண்டு கைகளாலும் அவனை நசுக்கி விடுவது போல் அழுத்திப் பிடித்தது.

மின்னல் வேகத் தாக்குதல், என்றாலும் நிதானித்துக் கொண்டான் பறிக்க முயற்சித்தான். முடியவில்லை. மூச்சுத்திணறியது. அவனைப் பிடித்திருப்பது இராணுவ வீரன். அவன் பெருங்குரல் கொண்டு உதவிக்கு ஆட்களை அழைத்தான்.

“சிறீல்ல்ல்….. சிறீல்ல்ல்…..” நிலமை மோசமாவது தெரிந்தது. புயல் வேகத்தில் தனது காலால் அந்த ஆக்கிரமிப்பானின் காலைப் பலமாய் உதைத்தான். சிறிய தளர்வு. அதை சாதகமாக்கி கைகளின் பிடிக்குள் இருந்து விலகிக்கொண்டான். அவன் வைத்திருந்த ஆயுதம் 203 (டொங்கான்) குறுகிய தூரத்திற்குள் சுடமுடியாது. எட்ட நின்று சுடுவதற்கு நேர அவகாசமில்லை. எதிரி நிதானிக்க முன் தனது ஆயுதத்தால் ஓங்கி ஓர் அடி போட்டான்.

எதிரி சற்று நிதானமிழந்து நின்றான். மீண்டும் முகத்தில் பலமான அடி. கடைசியாய் தனது பலம் முழுவதையும் கைகளில் திரட்டி கன்னத்தில் போட்டான் ஒரு போடு அதற்கு பின் ஆமிக்காரன் நிமிர்ந்து நிற்கவேயில்லை.

“அம்மே” என்று அடிவயிற்றில் அலறியபடி நிலத்தில் தொப்பென்று சாய்ந்தான். அவனுக்கு முகமெல்லாம் வியர்த்து உடல் தொப்பமாய் நனைந்துவிட்டது. நின்று பார்க்க நேரமில்லை. கத்திய சத்தம் கேட்ட திசைக்கு இராணுவம் தேடிவரும் சப்பாத்துச் சத்தங்கள் கேட்டது. கீழே விழுந்துவிட்ட ‘ஷெல்’லினை எடுத்துக்கொண்டு மறைவான இடத்திற்கு ஓடினான். நேரங்கழித்து அந்த இடமெல்லாம் இராணுவ நடமாட்டங்கள் அடங்கிப்போனது. அவன் தனித்த ஒருவனாக நின்றாலும் தோழர்களின் நினைவு நெஞ்சைக் கனமாக்கியது.

‘காயப்பட்டு வீழ்ந்து கிடப்பார்களோ இல்லை வீரச்சாவடைந்திருப்பார்களோ’ தனக்குள் எண்ணியபடி அவன் அந்த இடமெங்கும் தேடத் தொடங்கினான். சுற்றுப் புறமெங்கும் தேடினான். ஒவ்வொரு பற்றை மறைவுகளையும் தேடினான். எங்குமே காணவில்லை. காலை விடியப்போகின்றது என்பதால் முகாமில் இருந்து சற்றுத் தள்ளிவந்து நிலையெடுத்தான்.

விடிந்த பின்பு தான் தோழர்களோடு சேர்ந்துகொண்டான். எவருக்குமே ஒருவித இழப்புகளும் இல்லை.

காலையில் அவனைக் கண்டதும் போராளிகள் ஆச்சரியப்பட்டுக் கொண்டார்கள். அவனின் ஆயுதத்தில் சின்ன தசைத்துண்டு ஒன்று ஒட்டிக்கொண்டிருந்தது. எவருக்கும் அது புரியவில்லை; புருவங்களை உயர்த்தினார்கள். ஆனால் அவனுக்குத் தெரியும். அவன் சிரித்தான்.

“இதுதான் இராத்திரி என்னை உயிரோட பிடிக்க வந்தவன்ர கன்னம்” இதற்குப் பின் தான் எல்லோரும் சிரித்தார்கள். அவர்களின் விழி அவனின் வீரத்தைப் பாராட்டியது.

ஆதித்தன் அவனுடைய வீட்டு வாழ்க்கை, சோகங்களை தனக்கு சொந்தங்களாக்கிக் கொண்ட பயணம். அவன் தன்ர வாழ்க்கையைச் சொல்ல ஆரம்பித்தால் வார்த்தைகளே ஈரமாகும்.

அவனது உறவின் வட்டம் மிகச்சிறியது. எலும்பும் தோலுமாய்ப் போனாலும் உடலில் இருந்து பிரியத்துடிக்கின்ற உயிரைப் பிள்ளைகளின் வாழ்க்கைக்காக இழுத்து வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் அவனின் அம்மா. தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கி வீட்டில் இருந்து பிரிந்துபோன மூத்த அண்ணன் ஒருவன் அதைவிட அவனுக்கு சின்ன அண்ணன் என்றொரு உறவு. அவ்வளவு தான். சின்ன வயதிலேயே அப்பாவை மரணத்திடம் பறிகொடுத்துவிட்டான். எஸ்ரேட் வாழ்க்கை, அம்மாவின் இயந்திரத்தனமான உழைப்பு இவையெல்லாம் சின்ன வயதிலிருந்து அவனுக்கு மனக்காயங்களை ஏற்படுத்திய விடயங்கள். காலையில் பனிப்புகார் கலைய முதல் எழுந்து, பள்ளிக்கூடம் போகின்ற பிள்ளைகளுக்காக ரொட்டி சுட்டு வைத்துவிட்டு அழைப்பு விசில் ஊத அவசரம் அவசரமாகக் கூடையைத் தூக்கிக்கொண்டு தோட்டம் போகின்ற அம்மா சாயந்தாரம்தான் வீடு வருவாள். வீட்டை வருகின்ற நேரம் அட்டை கடித்துக் காலெல்லாம் இரத்தம் கசிந்துகொண்டிருக்கும். ஆனாலும் அம்மா சொல்லுவாள் “நீங்கள் வளர்ந்து பெரிய மனுசன்களாய் எங்கயாச்சும் நல்லா இருக்கனும்” அதுக்காகத் தானே அவள் இவ்வளவு கஸ்ரங்களையும் அனுபவித்து அந்த வாழ்க்கையை சுமந்து கொண்டிருக்கின்றாள். அன்றொருநாள் காலையில் அழைப்பு விசில் முதல்முறை ஊதி இரண்டாம் முறை ஊதிய பின்பும் அம்மா பாயைவிட்டு எழுந்திருக்கவில்லை. அன்று அவளை நோய் பாயிலியே சிறை வைத்தது. அன்றிலிருந்து அவள் எழுந்து நடமாடக்கூட முடியாதவளாகி விட்டாள்.

“சின்னண்ணா டேய் அம்மாவுக்கு வருத்தமடா மருந்தெடுக்கிறதெண்டா ஆயிரம் ரூபா காசு தேவை” சின்ன வயதிலேயே அம்மாவை மரணத்திடம் பறிகொடுத்துவிடாது காப்பாற்றி விடவேண்டும் என்ற துடிப்பு அவனுக்குள் ஊறிக்கொண்டது. அம்மாவைக் காப்பாற்றுவது என்றால் பணம் தேவை. பணத்திற்கு என்ன செய்வது! இரண்டு பேருக்குமே வழி தெரியவில்லை. அவர்களுக்குத் தெரிந்தது ஒரே ஒரு வழிதான். படிப்பை நிறுத்தி எங்கையாவது வேலையில் சேர்ந்து கொள்ளுவது. அண்ணன் எங்கோபோய் ஒரு வேளையில் சேர்ந்துகொண்டான். இவனையும் இவனது உறவுக்காரர் கொழும்பில் ஒரு பலசரக்குக் கடையில் சேர்த்து விட்டார்.

பள்ளி வயதிலேயே அம்மாவைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகக் கடையிலேயே வேலை செய்யத் தொடங்கினான். முதலில் கடையில் வேலை செய்பவர்களுக்கு தேனீர், சாப்பாடு வேண்டிக் கொடுக்கின்ற வேலை, பின், சரை கட்டுவது, பொருட்கள் நிறுப்பது, கொள்வனவுப் பொதிகள் எடுத்து வருவது, அதற்குப்பின் கணக்கெழுதுவது, வங்கியில் காசோலை வைப்புச் செய்வது என்று திறமையின் அடிப்படையில் முன்னேறி வந்தான். கொழும்பில் கடையில் நின்றபோது, பதுளையின் வாழ்க்கையைச் சற்று நினையாது இருந்தாலும் விடுமுறையில் அம்மாவைப் பார்க்க வருகின்றபோது நினைவுகள் சூடாகும்.

1983ம் ஆண்டு இனக்கலவரம் நடந்தவேளை இரண்டு பிள்ளைகளையும் இழுத்துக் கொண்டு அம்மா ஓடிவந்து ஒளிஞ்சிருந்த சின்ன மரவள்ளித் தோட்டம் இதுதான். இதற்குள் அம்மா அழுத அழுகை இப்போதும் காதுகளில் பிசுபிசுத்தது. “என்ற உயிர் போனாலும் பரவாயில்லை நீங்கள் எங்காச்சும் ஓடித்தப்பியிருங்கோ” இந்த இடத்தில் வைத்துத்தான் அவனின் கண் முன்னால் அப்பாவை அடித்து ரக்கில இழுத்து ஏத்திக்கொண்டு போனவங்கள். இப்படி ஒவ்வொரு இடமும் அவனுக்குள் இனம்புரியாத கொதிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் அவனுக்கு வழிகள் எதுவும் புரியவில்லை. அதெல்லாம் அவனுக்குள்ளேயே அடங்கிப்போனது கடைசியில் மொத்தமாக பொருட் கொள்வனவு நடக்கின்ற நாட்களில் இரவு பகல் பாராது வேலை நடக்கும். அல்லது நேரத்தோடேயே கடைக்கதவு சாத்தப்பட்டுவிடும். அன்றும் நேரத்துடன் வேலைகளெல்லாம் முடிந்து விட்டது. எல்லோரும் கூடி இருந்து வானொலி கேட்டுக் கொண்டிருந்தார்கள் அது ஓர் எதிர்பாராத நிகழ்வு.

வானொலியில் பி.பி.சி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் ஒலிபரப்புச் சேவை ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. வானொலியை யாரும் கேட்பதாக இல்லை. வேலை அசதி தீருவதற்காக எல்லோரும் சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். திடீர் என அவனின் குரல் அவர்களிடமிருந்து பிரிந்து மௌனமாகிக் கொண்டது. வானொலி நிகழ்ச்சி அவனது செவிகளை ஈர்த்துக் கொண்டது.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனை செய்தியாளர் ஆனந்தி அவர்கள் செவ்வி கண்டது ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அந்தத் தலைவன் உச்சரித்த ஒவ்வொரு வரிகளையும் கேட்டுக் கேட்டுப் பிரமித்துப் போனான். அன்று தான் அவனுக்கு தமிழர்களுக்கென்றோர் தலைவன் இருப்பதும், இப்படிப் பெரியளவில் போராட்டம் நடப்பதும் தெரிய வந்தது. அவனின் நெஞ்சுக்குள் நம்பிக்கைப் புயலொன்று மையங்கொள்ளத் தொடங்கியது. தலைவரின் பேட்டியைக் கேட்டதிலிருந்து தனது பயணத்தின் ஒரு விடிவெள்ளியைக் கண்டுவிட்ட திருப்தி அவனுக்கு. முகம் தெரியாத அந்த தலைவன் மீது அளவு கடந்த நம்பிக்கையும், பாசமும் வைத்தான். மௌனமாய் அவனது மனதிற்குள் எத்தனையோ கோடியாண்டின் மழைவெள்ளம் ஒன்றுசேர்ந்து கரைபுரண்டது. போராட்ட ஆதரவாளர்களை அவன் கண்டுகொள்கின்ற போதிலெல்லாம் போராட்டம் பற்றியும், போராட்டத்தில் எவ்வாறு இணைந்துகொள்வது பற்றியும் கேட்டு அறிந்துவைக்கத் தொடங்கினான்.

1992ம் ஆண்டு அறிந்த அறிந்த தலைவனை 1994ம் ஆண்டுவரை யாருக்கும் தெரியாது நெஞ்சுக்குள் பூட்டிவைத்து நேசித்தான். 1994ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்து கொள்வது என்ற முடிவோடு கொழும்பிலிருந்து புறப்படத் தயாரானான். பதுளைக்குச் சென்று அம்மாவைப் பார்த்தான். “கொழும்பில் அடிக்கடி பிடிக்கிறாங்கள் தெரிஞ்சவை யாழ்ப்பாணம் போகினம் அவையோட போய் இருக்கப்போறன்” என்றான். மகன் தன்னைவிட்டு நீண்டதூரம் போகிறானே என்ற ஏக்கம் அவள் கண்களைப் பெருக்கெடுக்க வைத்தது. “எங்கேயெண்டாலும் நல்லாயிருந்தாச்சரி” அந்த விடைகொடுப்பிற்குப் பின் என்றுமே அவன் அம்மாவைப் பார்த்ததில்லை. அவன் நினைத்து வந்தது போலவே யாழ்ப்பாணம் வந்ததும் இயக்கத்தில் இணைந்து கொண்டான். தலைநகர் படையணிதான் அவனை உள்வாங்கிக் கொண்டது. தலைநகர் சென்று அங்கே பல சண்டைகளிலும் பங்கெடுத்தான். பின் வன்னிக்கு வந்து ‘ஜயசிக்குறு’ நடவடிக்கை எதிர்ச்சமரிலும் களம் இறங்கினான். ஆனாலும், அவனது மனம் திருப்திப்படவில்லை. இந்த தேச விடுதலைக்காக அதிஉயர்வான பங்களிப்பைச் செய்ய வேண்டுமென்ற உணர்வில் தலைவருக்கு கடிதம் வரைந்தான். “நான் கரும்புலியாகப் போவதற்கு அனுமதி தாருங்கள்” கடிதம் வரைந்து விட்டுக் காத்திருந்தான். பதில்க் கடிதம் வருவதற்கு முன் வீட்டில் இருந்தும் கடிதம் வந்திருந்தது. அம்மா அழுதழுது காகிதத்தை நனைத்திருந்தாள். “பக்கத்து ஊட்டுக்காரங்க மக எங்க, மக எங்க எண்டு கேட்டு ஒரே தொல்லையாய் இருக்கு. ஒன பார்த்து கனநாளாய்ப் போச்சு ஒருக்கா வந்திட்டுப்போ மக” அம்மாவின் கடிதம் வந்த அதேதினம் தான் தலைவரிடமிருந்தும் பதில்க் கடிதம் வந்திருந்தது.

அன்றைய நாள் அவனுடைய வாழ்க்கையின் சந்திரகிரகணம் அம்மா …. போராட்டம் … அவன் எடுத்துக்கொண்ட முடிவு?! அம்மாவின் கடிதத்தை மனசோடு வைத்துவிட்டு அவன் தனது பணிகளைத் தொடர்ந்தான். கரும்புலிகள் அணியில் இணைந்து கொண்டு இலக்குக் கிடைக்கும்வரை காத்திருந்தான். அவன் கரும்புலிகள் அணியில் இணைந்து கொள்வதற்கு முதலே எந்த நிமிசத்திலும் போராட்டத்திற்காகத் தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்துக்கொள்ள துணிந்தவனாகவேயிருந்தான். அப்படியான நாளொன்றில் மாங்குளப் பகுதியில் ‘ஜயசிக்குறுய்’ இராணுவ நடவடிக்கையை மறித்துப்போடப்பட்ட பாதுகாப்பு அரணில் நின்றிருந்தான். அன்று காலை விடியுமுன்னே காடு கண்விழித்துக் கொண்டது. விடிகின்ற ஓசையே வெடிச் சத்தமாய்த்தானிருந்தது. முன்பக்கம் ‘டாங்கி’களின் இரைச்சல், பின்பக்கம் துப்பாக்கிகளின் சடசடப்பு; சுற்றிலுமே குண்டுவெடிப்பின் அதிர்வுகள்; எல்லா வழிகளிலும் அடைக்கப்பட்ட ஒரு முற்றுகைக்குள் அவர்கள் முடக்கப்பட்டிருப்பது விடிந்த பின்புதான் தெரியவந்தது. ஆனால் அது இரவே நடந்தேறிவிட்டது. இப்போது எல்லா முனைகளிலும் வெடியதிர்வுகள் அவனின் நிலையை நெருக்கிவருவது தெரிந்தது. அவனின் பொறுப்பின் கீழ் இருந்த ஒரு 82மி.மீ மோட்டரும் ஏழு போராளிகளும், இறுக்கமான அந்த முற்றுகையை உடைத்து வெளியேவர முடியாது என்று தெட்டத்தெளிவாக தெரிந்த பின்னும், அவன் பதட்டம் அடையவில்லை. “இருக்கிற ஷெல் முழுவதையும் அடிப்பம்” என்று கூறி நின்ற போராளிகளைத் திடப்படுத்தி வைத்திருந்தான். இறுதிவரையும் எதிரிக்கு இழப்பு ஏற்படுவதிலேயே அவன் குறியாக இருந்தான்.

300 மீ… 275 மீ…. 250 மீ…. 225 மீ எதிரிக்கேற்ப தூரவீச்சு மிகவேகமாக குறைந்துகொண்டு போகப்போக அவர்களது முற்றுகை இறுகுவது தெரிந்தது. முன்புறம் நான்கு ‘ராங்கி’கள் நெருக்கமாக வந்து விட்டது என்பதை அவற்றின் ஓசைகளில் இருந்து பிரித்து அறியக் கூடியதாக இருந்தது. வைத்திருந்த ஷெல்களெல்லாம் அடித்து முடிக்கின்ற நிலை வந்தபோது “இரண்டு ஷெல்லை எடுத்துவை ஆமிக்காரன் கிட்டவந்தா வெடிக்கவைச்சு மோட்டரையும் எங்களையும் அழிப்பம்” எதுவித கலக்கமும் இல்லாது கூறிவிட்டு பின்வாங்குவதற்காக மரத்திலே கட்டியிருந்த ‘குறோசை’ ஏறி அவிழ்த்தான். “ஆயுதங்களை மட்டும் எடுத்துக்கொண்டு பின்வாங்கக் கூடியமாதிரி இருங்கோ” என்று கூறிவிட்டு வெளியில் நிலமையைக் கவனித்தான். இராணுவம் மிகவும் நெருக்கமாக வந்துவிட்டது. ஒவ்வொரு இராணுவ வீரனையும் கண்டுகொள்ளக் கூடியதாக இருந்தது. இராணுவத்தின் செறிவு எங்கு குறைவாக உள்ளதோ அந்தப் பகுதியை கவனித்து அந்தப் பகுதியூடாக, இருந்த துப்பாக்கிகளை வைத்து தாக்குதலை நடத்தி பின்வாங்கினான். அவனுடன் நின்றவர்களுக்கோ அல்லது ஆயுதத்திற்கோ சேதம் இல்லை என்றாலும் பெரும் சிரமத்தின் பின்தான் எமது தற்காலிக நிலையை வந்தடைந்தனர். அதற்குப்பின்தான் அவன் கரும்புலியாய் இணைந்து அவனுக்கு அவனுக்கு முதலில் கிடைத்த இலக்கு மணலாற்றுப் பகுதியில் இருந்தது. அந்த இலக்கை அழிக்க பயிற்சி எடுத்து ஓய்வாக தேனீரோ உலருணவோ உண்ணுகின்ற வேளை இப்படித்தான் சொல்லுவான். “நான் காயப்பட்டாலும் நினைவு இழக்கிறவரை தவண்டு தவண்டெண்டாலும் என்ர பணியை நிறைவேற்றுவன்”

அந்த தாக்குதலுக்கு அவன் PK இயந்திரத் துப்பாக்கிதான் கொண்டு போகவிருந்தான்.

“இதுதான் அண்ணை எதிர்பார்க்கிறதைச் செய்து முடிக்கப்போறது” என்று அன்பாக தூசி துடைத்து மூடிவைப்பான் தனது ஆயுதத்தை. ஆனால் அந்த இலக்குத் திட்டத்தின்படி தாக்க வேண்டிய தேவை இல்லாமையினால் அவன் வேறு வேலைத்திட்டமாக அதே பிரதேசத்திற்குள் அனுப்பப்பட்டான். அதை நிறைவேற்ற வந்தவனிற்கு யாழ். மாவட்டத்திற்குள் ஓர் இலக்கு வந்தது. அதை அழிக்கச் சென்ற வேளைதான் இராணுவத்திடம் பிடிபட நேர்ந்தது. கையால் அடித்துவிட்டுத் தப்பி வந்திருந்தான். என்றாலும் அங்கே அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்த பணிகள் அனைத்தையுமே செய்து முடித்திருந்தான். “அண்ணை நிறைய எதிர்பார்க்கிறார் அண்ணையின்ர எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்”

என்றுதான் எப்போதும் அவன் உதடுகள் உச்சரிக்கும். ஆனையிறவுக்குள் தாக்குதல் நடாத்துவதற்காக அணிகள் பிரிக்கப்பட்டபோது இவனை அந்த அணிகளுடன் சேர்த்துக்கொள்ளவில்லை. அந்த அணிகளோடு தானும் போகவேணும் என்று எவ்வளவு பாடுபட்டுக் கேட்டான். என்றாலும், அவன் அந்தத் தாக்குதலுக்கு அனுமதிக்கப்படவில்லை. சரியான மனக்கவலையோடு காத்திருந்தான். அதுக்கான சந்தர்ப்பம் மிக விரைவிலேயே கிடைத்தது. வேறுமுனையொன்றில் தாக்குதல் தொடுக்க வேண்டியிருந்ததினால் அவசரமாக கரும்புலிகள் அணி தயார்படுத்தப்பட்டபோது அந்த அணிகளோடு ஆதித்தனும் சேர்த்துக் கொள்ளப்பட்டான்.

அணிகள் புறப்படுவதற்கு தயாராக நின்ற இறுதிக்கணம், சிரித்துச் சிரித்து கையசைத்து எல்லோருக்கும் விடைகொடுத்துக் கொண்டிருந்தான். போகின்ற நேரம் இதைத்தான் சொல்லிவிட்டுப் போனான். “அண்ணை எங்களுக்கு போகச்சொல்லி விடைகொடுத்த நேரம், அண்ணயின்ர முகம் வாடிப்போய் இருந்திச்சுது நினைக்க இப்பவும் மனசுக்க வேதனையாக் கிடக்குது. மிக விரைவிலேயே அண்ணையின்ர காலத்திலேயே தமிழீழம் மலரும் அதைப் பார்த்து அண்ணை சிரிக்கேக்கை தான் என்ற மனம் ஆறுதலடையும்” சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

போனவர்கள் என்ன செய்தி சொல்லுவார்கள் என காத்திருந்தவர்களுக்கு வந்த செய்தியோ இதயங்களிற்குள் இடியைச் சொருகியது. வானம் தலையைத் தொட்டுவிட்டது போன்ற உணர்வு. ஓயாத அலைகள் மூன்றிற்கு இந்தத் தேசம் கொடுத்த பெருவிலைகளுள் ஒன்றாய் ஆதித்தனும் போய்விட்டான். என்றாலும் என்றைக்கும் அவன் நினைவினைச் சுமந்தபடியே இந்த தேசம் சுவாசித்துக் கொள்ளும்.

வீரப் போரிற்கு ஆதித்தன் தோள்கொடுத்த களங்கள்:-

  • 27.03.1997ல் புல்மோட்டைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பதுங்கித் தாக்குதல்.
  • 05.11.1997ல் மொறவேவா பொலிஸ் நிலையம் மீதான தாக்குதல்.
  • 09.08.1997 குச்சவெளி பகுதியில் இராணுவ ரோந்து அணிமீதான தாக்குதல்.
  • 11.10.1997 பரந்தனிற்கும் கரடிப்போக்குச் சந்திக்கும் இடையில் இராணுவ அணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட மோட்டார் தாக்குதல்.
  • 09.01.1997 ஆனையிறவு, பரந்தன் இராணுவ தளங்கள் மீதான அழித்தொழிப்புத் தாக்குதல்.
  • 1997 – 1998ல் கரும்புலிகள் அணியிற்கு வரும்வரை ஜயசிக்குறுய் எதிர்ச்சமரில் 82.M.M மோட்டாராளனாக தாக்குதலில் ஈடுபட்டது.
  • கரும்புலிகள்அணியில் இணைந்தபின் ஓயாதஅலைகள் – 03ல்…,
  • மணலாற்றுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கை.
  • யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கை.

நினைவுப்பகிர்வு: துளசிச் செல்வன்.
நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (தை – மாசி 2000).

 

https://thesakkatru.com/black-tigers-mejor-aathithan/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.