Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணையவழி: கற்றலும் கற்பித்தலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இணையவழி: கற்றலும் கற்பித்தலும்

லோகமாதேவி
Gessen-DistanceLearning-spot.jpg?resize=

 

ஆன்லைன் வகுப்புக்கள் துவங்கி பல மாதங்கள் ஆகிவிட்டதென்றாலும் இன்னும் அதில் எனக்கு நல்ல பரிச்சயமும் பிரியமும் ஏற்பட்டுவிடவில்லை. கரும்பலகையில் எழுதி வருஷக்கணக்காகப் பழகிய கையும் மனமும் இதற்குப் பழகாமல், ஒத்துழைக்காமல் சண்டி பண்ணுகின்றது. மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களின் கண்களைப் பார்த்தபடி கற்பித்தலில் இருக்கும் மகிழ்வையும் நிறைவையும் 1998’லிருந்து அனுபவித்துக் கொண்டிருப்பவளாதலால், இப்படி கணினி முன்பாக அமர்ந்துகொண்டு தட்டச்சிய கட்டுரைகளையும் குறும்படங்களையும் காண்பித்துக் கற்பிப்பதில் இருக்கும் பொருளின்மையையும் நிறைவின்மையையும் ஒவ்வொரு நாளும் உணர்கிறேன்.

என்னைப் போன்ற ஆசிரியர்களுக்கே இப்படியென்றால் நல்ல காலத்திலேயே வகுப்பறைக்கு வந்து கற்றுக்கொள்ளச் சுணங்கும் மாணவர்களுக்குக் கேட்க வேண்டுமா என்ன?

இனிமேல் இணையவழி கற்றல்தான் என்று அறிவிப்பு வந்தபோது அத்தனை பயமாக இல்லை. கணினி உபயோகிக்கத் தெரியும் என்றாலும் அதன் வழியே கற்றுக்கொடுப்பது குறித்து அதுவரை சிந்தித்ததில்லை என்பதால் பெரிதாக ஒன்றும் நினைத்துக்கொள்ளவில்லை மேலும் அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது, இதோ எல்லாம் சரியாகிவிடும், வழக்கம்போல கல்லூரிக்குச் சென்று வகுப்பில் பாடம் எடுக்கப்போகிறோம் என்று மனம் நம்பிக்கொண்டிருந்ததும் காரணமாக இருக்கலாம்

ஆனால் நாள்கள் செல்லச்செல்ல வைரஸ் தொற்று உலகளாவிய பெரும் ஆபத்தாகி, லட்சக்கணக்கானோர் இறந்ததும் மிகப்பெரிய ஆளுமைகளும் செல்வந்தர்களும், பிரபலங்களும்கூட தொற்றுக்கு ஆளாகி அவர்களில் சிலர் உயிரிழந்ததுமாக வயிற்றில் உப்பு, புளி, காரம் எல்லாம் சேர்த்துக் கரைத்ததுபோலக் கலவரமானது.

பின்னர் ஒருநாளில் ஆன்லைனில் கற்பிப்பதை மறுநாளே துவங்க (கல்லுரி) முதல்வரிடமிருந்து தகவல் வந்தே வந்துவிட்டது.

வீட்டில் மகன்களுக்கும் அப்படியே!

தட்டச்சுவதை எப்படியோ முன்பின்னாகச் செய்து பழகியிருந்தாலும் கணினியை எனக்கு அவ்வளவாகத் தெரியாது, கணினிக்கும் என்னை அத்தனை தெரியாது பாவம்.

இனி நாங்கள் இருவருமாக நேர்ந்து கலந்து சேர்ந்து வேலை செய்வதன் சாத்தியங்கள் எனக்கு மிகத் தொலைதூரத்தில்தான் தெரிந்தது.

மகன்களிடம் முதலில் இணையவழி கற்பித்தலின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டேன். கூகிள் மீட், ஜூம் மீட் எல்லாம் போய் டெஸ்ட் மீட் நடத்தி ஆ்ன்லைன் வகுப்புக்களைக் கொஞ்சம் பரிச்சயப்படுத்திக்கொண்டேன் . ஆனால் முதல்நாள் உண்மையாகவே கண்ணைக்கட்டி கம்ப்யூட்டர் முன்னால் விட்டது போலத்தான் இருந்தது.

வகுப்பில் யாரையும் பார்த்துப் பேச முடியாது என்னும் விஷயமே அப்போதுதான் உரைத்தது. அப்படி ஒரு கற்பித்தலைக் குறித்து சிந்தித்ததே இல்லையாதலால் அடுத்து என்னால் முன்னேறவே முடியவில்லை. 50 / 60 மாணவர்களின் மத்தியில் உயரமான மர மேடையில் நின்றபடியும் அவ்வப்போது இறங்கி அவர்கள் அமர்ந்திருக்கும் வரிசைகளுக்குள் நடந்தும் சின்னச் சின்னக் கேள்விகளைக் கேட்டுப் பதில் பெற்றுக்கொண்டும் பல வண்ண உடைகளில் கிளர்ந்து ஒளிரும் இளமையுடன் இருக்கும் மாணவர்களைக் கண்ணுக்கு கண் சந்தித்துப் பாடமெடுத்ததற்கும் மாற்றாக, நான் யாரை நோக்கிப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதே தெரியாமல், நான் பேசிக்கொண்டிருப்பதை யாரேனும் கவனிக்கிறார்களா இல்லையா என்றும் தெரியாமல் 40 / 50 நிமிடங்கள் பேசுவதென்பது பெரிய கொடுமையாக இருந்தது. வருகையைப் பதிந்துவிட்டு சில விஷயங்களை மட்டும் தெரிவித்துவிட்டு முதல் நாள் வகுப்பைச் சுருக்கமாக முடித்தேன்.

பின்னர் வந்த நாள்களில் மெல்லமெல்ல இம்முறைக்குப் பழகினேன். ஆனால் முன்புபோல பாடம் கற்பித்தலில் இருக்கும் ஆர்வமும் நிறைவும் எள்ளளவும் இல்லை என்பதை உணர்ந்தேன். இனி அப்படியான நிறைவு ஏற்படவும் போவதில்லை என்னும் உண்மையும் புரிந்தது. குறிப்பாகத் தாவரங்களின் சித்திரங்களை வரைந்து, கற்றுக் கொடுப்பதற்கான சாத்தியமே இல்லையாதலால், ஒருநாள்கூட நிறைவுடன் வகுப்பை முடித்த உணர்வு வரவேயில்லை.

கல்லுரிக்கு அலைபேசியைக் கொண்டுவந்ததற்காக முந்தின மாதங்களில் கண்டித்த அதே ஆசிரியர்கள் அலைபேசியிலும் கணினியிலும் பாடம் நடத்தி அதை மாணவர்கள் அலைபேசியில் கவனிக்கவேண்டி வந்தது துர்லபம்தான்.

அளிக்கப்பட்ட எல்லா வாய்ப்புக்களிலும் சந்து பொந்துகளைக் கண்டுபிடித்துத் தப்பிக்க முயலும் மாணவர்கள் இந்த இணைய வழியேயான கற்பித்தலிலும் குறுக்கு வழிகளைக் கண்டறிந்து விட்டிருந்தார்கள். வருகையை உறுதிசெய்த மறுகணம் அலைபேசி அல்லது மடிக்கணினியில் நான் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் திரையைக் கீழிறக்கிவிட்டு வேறேதும் படங்களைப் பார்ப்பது, மாணவர்கள் மைக்கை அணைத்து வைத்திருக்க வேண்டுமென்பதால் பாட்டுக் கேட்பது, ஃபோனில் நண்பர்களுடன் உரையாடுவது அல்லது போனை அங்கேயே விட்டுவிட்டு வேறெங்காவது போவது என்று ஏராளமான வழிகளில் அவர்களுக்கு முக்கியமென்று தோன்றுபவற்றை, இளமைக்கே உரிய அறியாமையுடன் செய்ய அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டார்கள். வழக்கமான சின்சியர் சிகாமணிகள் மட்டும் வகுப்பைக் (?) கவனித்துக்கொண்டிருப்பார்கள்.

வீட்டில் அனைவரும் எப்போதுமே இருந்து கொண்டிருப்பதால் சமையல் உள்ளிட்ட வழக்கமான வீட்டு வேலைகள் பல மடங்கு அதிகரித்துவிட்டிருக்கிறது. பாடங்களை முன்புபோல மனதிலிருந்தும் நினைவிலிருந்தும் எடுத்துக் கரும்பலகையில் எழுதி, வரைந்து கற்றுத்தர வாய்ப்பில்லாததால் பக்கம் பக்கமாகத் தட்டச்சு செய்யும் வேலையும் சேர்ந்து உடல் ஓய்ந்துபோனது.

முன்பைக் காட்டிலும் அதிகாலையில் எழுந்து பின்னிரவுவரை விழித்திருந்து, குடும்பத்தில் அனைவருமாகச் சேர்ந்து பேசுவதென்ன ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதும்கூட இல்லாமல்போய் அவரவர்க்கு இடைவேளை இருக்கையில் தனித்தனியே அமர்ந்து சாப்பிடுவதும் ஒரே வீட்டில் தனித்தனித் தீவுகளாகப் படுக்கையறையில், வாசல் திண்ணையில் , கூடத்தில் என்று தனித்தனியே அமர்ந்து கணினியைக் கட்டிக்கொள்வதுமாக நாள்கள் நகருகின்றன.

யெஸ் சார், யெஸ் மேம், ஏம் ஐ ஆடிபிள்? ஸ்கீரீன் தெரியுதா போன்ற வார்த்தைகளால் வீடு நிறையத் துவங்கிவிட்டிருந்தது. இப்படி இரண்டாம் வருடம் மூன்றாம் வருடம் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பெடுப்பதைக் குறித்து வருந்திக்கொண்டிருப்பதெல்லாம் வெறும் டிரைய்லர்தான், மெயின் பிக்சர் இனிமேல்தான் என்பதுபோல இரண்டு மாதங்கள் கழித்து வந்து சேர்ந்தார்கள் கல்லூரிப் படிப்பென்பது கருப்பா சிவப்பாவென்றுகூட தெரிந்திருக்காத, பள்ளி வாசனை அப்படியே மீதமிருக்கும் முதலாம் ஆண்டு மாணவர்கள்.

கல்லூரி வாழ்வே மிகப்புதிது, கணினியிலும் அலைபேசியிலும் ஆசிரியர்களைச் சந்திப்பதும் அதிலேயே கற்றுக்கொள்ளுவதும் மிகமிகப் புதியது. பொள்ளாச்சி போன்ற 18 பட்டிகளால் சூழப்பட்டிருக்கும் கிராமும் இல்லாத நகரமும் இல்லாத ஒரு கலவையான ஊரில், பெரும்பாலான மாணவர்கள் தமிழ்வழிக் கற்றலில் பள்ளிப் படிப்பை முடித்து ஆங்கில வழிக்கற்றல் குறித்த அச்சமும் பிரமிப்புமாக வந்திருக்கும் வேளையில் இணைய வழிக்கற்றல் இருதரப்புக்கும் ஏகப்பட்ட சேதாரங்களை உண்டாக்கியது.

வழக்கமாக முதலாம் ஆண்டு மாணவர்கள் வகுப்புக்கு முதல்நாளே சென்று ஒவ்வொருவராகக் கைகுலுக்கிப் பெயர் கேட்டு, அவர்களைப் புகழ்ந்தும் அணுக்கமாகவும் பேசித் துவக்க நாள்களிலேயே அவர்களுக்கு மிக நெருக்கமான சொந்தமெனும் உணர்வை அளிக்கும், எதையும் பகிர்ந்து கொள்ளலாமென்று நம்பிக்கை அளிக்கும் ஒருத்தியாக மாறிவிட்டிருப்பேன். பின்னர் மூன்று வருடங்களும் என் பின்னால் அன்புடன் சுற்றிக்கொண்டிருப்பார்கள். எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது கொரோனா.

முதலாமாண்டு மாணவர்களுக்குக் கல்லூரியில் உண்டாக்கிக் கொடுத்திருக்கும் வாட்ஸப் குழுமத்தில் இணையத் தெரிந்திருந்தது அவ்வளவே. நான் அதில் கொடுக்கும் வகுப்பிற்கான இணைப்பைத் திறந்து வகுப்பில் இணையத் தெரியவில்லை பலருக்கு. பகீரதப் பிரயத்தனம் எல்லாம் செய்து அவர்களுக்குப் புரியவைத்து ஒருவழியாக இணைந்தபின்னர் என்ன செய்வதென்று தெரியாமல், எனக்குப் பதிலாக present பொத்தானை அழுத்தி share the screen என்று வந்தபின்னால் நான் எதுவும் ஸ்லைட் போடமுடியாமலாகி அவர்களைக் கெஞ்சிக்கூத்தாடி அதை நிறுத்தச் சொல்லவேண்டி இருக்கும்.

இன்னும் சிலருக்கு அவரவர் ஊர்களில் வீடுகளில் இணையவேகம் இருக்காது. எனவே’’வந்து வந்து’’ போய்க்கொண்டிருப்பார்கள். வந்தாலும் ஆடியோவை உயிர்ப்பிக்கத் தெரியாமல் சைகை மொழியில் எனக்குப் பதில் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

படாத பாடுபட்டு unmute செய்யச் சொல்லிக்கொடுத்தால் அது பெரும் ஆபத்தில் கொண்டுபோய்விடும். அவரவர் வீட்டுப் பின்னணி ஓசைகள் பலவிதமாயிருக்கும், கலவரமாகவுமிருக்கும். தொலைக்காட்சி ஓசை, சமையலறை ஓசை, விடாமல் நாய் குரைப்பதெல்லாம் ஆடியோ குறுக்கீடுகளென்றால் அவ்வப்போது வந்து கேமிராவில் குட்டித் தங்கை அல்லது தம்பி என்று குஞ்சு குளுவான்கள் எட்டிபார்ப்பார்கள், அல்லது யாரேனும் திறந்த முதுகுடன் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு காமிராவைக் கடந்து செல்வார்கள்.

ஒருவழியாக 10 நாள்களில் அவர்கள் வகுப்பில் இணைவதைக் கற்றுக்கொண்டாலும் அவரவர் பெயர்களில் அலைபேசி வழியே யாருமே இணைந்திருக்காததால் ஒவ்வொருவரின் பெயர்களை எழுதிக்கொள்ள மேலும் சில நாள்கள் ஆகியது.

சொந்தப் பெயரைத்தவிர எல்லாவிதமான பெயரகளிலும் மாணவர்கள் நுழைகையில் எனக்குத் திகிலாக இருக்கும். மெர்சல் வெற்றி, தல ரசிகன், தளபதி வெறியன், proud Brahmin, ஹிந்து வெறியன், தலை தளபதி ரசிகன் என மாணவர்கள் ஒருபுறம் கொலைவெறிப் பெயர்களுடன் வருகையில், மாணவிகள் வாயாடி, வாயாடி பெத்தபுள்ளை, அப்பா செல்லம் புஜ்ஜிம்மா, தேனு, உனக்காவே நான் போன்ற பெயர்களில் வருவார்கள். ஓருத்தி வெத்திலைக் கொடியென்று பெயர் வைத்துக்கொண்டிருக்கிறாள். இன்னொருத்தனோ ’முடிஞ்சா கண்டுபிடி’ என்ற பெயரில்.

சரி பெயர்கள்தான் இப்படி, புகைப்படங்களாவது அவரவருடையதை வைத்துக்கொள்ளலாமல்லவா? நேரில்தான் பார்க்க முடியவில்லை, தோற்றம் எப்படியிருக்குமென்று தெரிந்து கொள்ளலாமென்றால், பெரும்பாலான மாணவர்கள் விஜய் அல்லது அஜித் புகைப்படங்களையே வைத்திருக்கிறார்கள். எனக்கு விஜய்க்கும் அஜீத்துக்கும் விஜய் சேதுபதிக்கும் தாவரவியல் கற்றுக்கொடுக்கத் தயக்கமாக இருந்தது. எங்கள் கல்லூரி பாலக்காட்டுச் சாலையில் இருப்பதாலும் கேரளா அரை மணி நேரப் பயணத்தில் வந்துவிடுமென்பதாலும் நிறைய கேரள மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து படிப்பார்கள். ஒருநாள் வகுப்பில் லாலேட்டன் காத்திருந்தார். எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. லாலேட்டனின் பெயர் வினீத்.

மாணவிகள் ரோஜாப்பூ, நஸ்ரியா அல்லது தலைமுடி காற்றில் பறக்கும் அழகு போஸில் அவரவர் புகைப்படம் . இது கொஞ்சம் தேவலையாக இருந்தது.

துவக்க நாள்களில் எல்லா மாணவர்களின் மைக்கையும் உயிர்பித்து வைக்கச்சொல்லி அவர்களிடம் பேசியபடியே பாடம் நடத்திக்கொண்டிருந்தேன். சில நாள்களிலேயே அவ்வழக்கத்தை நிறுத்தவேண்டி வந்துவிட்டது. மும்முரமாகப் பூஞ்சைக் காளானின் உணவு முறைகளையோ அல்லது பேக்டீரியாவில் எப்படிப் பாலினப் பெருக்கம் நடைபெறுகின்றது என்றோ மாய்ந்து மாய்ந்து விளக்குகையில் பின்னணியில் கேட்கும் ’’பிளாஸ்டிக் குடம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம், கடை கீரேய்’’, போன்ற கூவல்களும் ’’உறைக்கு செல்விக்காட்ட தயிர் வாங்கிட்டு வர’ச்சொல்லும் சிற்றேவல்களும் ’’டேய், மல்லித் தழைய மார்கெட்டுக்குக் கொண்டுபோகாம ஃபோனை நோண்டிகிட்டு இருக்கியா’’ போன்ற அதட்டல்கள் மட்டுமல்லாது, ’’இந்தம்மா என்னடா 9 மணிக்கு வகுப்புக்கு எட்டே முக்காலுக்கே வந்துருது’’ என்று எனக்கான கண்டனங்களும் வந்துகொண்டிருந்ததால் ஒரு நாளைக்குச் சிலரை மட்டும் மைக்கை உயிர்ப்பிக்கச் சொல்லிவிடுவேன் அவர்களிடமும் வீட்டில் பின்னணிச் சத்தம் இருந்தால் அணைத்துவிடும்படி முன்கூட்டியே வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்வேன்.

அதற்கும் ஆபத்து வந்தது. ஒருநாள், ரேபிஸ் வைரஸுக்கும் ஹெச் ஐ வி வைரஸுக்குமான தோற்ற ஒற்றுமைகளைக் குறித்து விளக்கிக்கொண்டிருக்கையில், திடீரென ஒரு மாணவனிடமிருந்து ’’கதை வுடாதே அதெல்லாம் ஒண்ணும் கிடையாது’’ என்று சத்தமாக எதிர்வினை வந்ததும் திகைத்துப்போனேன். ஆனால் வீடியோவில் என்னை 48 மாணவர்கள் பார்த்துக்கொண்டிருப்பதால் புன்னைகை தவழும் முகத்துடன், ‘’தமிழ்ச்செல்வன் மைக்கை அணைக்கறிங்களா ‘’ என்று ஆங்கிலத்தில் மென்மையாக கேட்டதும் அங்கிருப்பது சீமானோ என்று சந்தேகம் வரும்படியாக ’’வாய்பில்லை ராஜா, வாய்ப்பே இல்லை’’ என்று பதில் வந்தது. என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு வகுப்பு ரெப்ரஸெண்ட்டேட்டிவை ‘’ செல்வம்’’ என்று ஒரு அதட்டல் போட்டதும் அவன் இவனைக் கூப்பிட்டுச் சொல்லியிருப்பான்போல, சற்று நேரத்தில் தமிழ்ச்செல்வன் லெஃப்ட் த மீட்டிங்!

சாயங்காலமாக தமிழ்ச்செல்வன் என்னை அழைத்து மைக் ஆன் செய்திருப்பதை மறந்து நண்பனிடம் அன்று நடக்கவிருந்த IPL போட்டியைக் குறித்துப் பேசியதற்காக மன்னிப்புத் தெரிவித்தான். (பெயர்கள் மாற்றபட்டிருக்கின்றது)

கேள்வி கேட்டால் என்னையே ம்யூட் செய்வது, வேண்டுமென்றே எதிரொலி கேட்பதுபோல மைக்கை வாய்க்கு மிக அருகே கொண்டுபோய்ப் பேசிவிட்டு, ’’டவர் சரியில்லை மேம்’’ என்பதை மட்டும் தெள்ளத்தெளிவாகச் சொல்லுவது போன்ற வில்லத்தனங்களும் நடக்கின்றது.

என்னவென்று சொல்லுவது, எப்படித்தான் கண்டிப்பது? எனக்கே இத்தனை அசெளகரியங்கள் இருக்கையில், நல்ல நாளில் வகுப்பறைக்கு வரும்போதே கற்றலின் அவசியத்தைச் சரிவர உணராத இளம் பருவத்தினரை, அவர்களைக் கவரும் ஆயிரக்கணக்கான கேளிக்கைகள் சூழ்ந்திருக்கையில், கவர்ந்திழுக்கையில் இணைய வழிக்கற்றலின் வழிக்குத் திருப்புவது அத்தனை எளிதல்லவே!

ஓய்வும் நிறைவும் இல்லாமல் இப்படியே நாள்கள் செல்வது துயரளிக்கிறது. தேர்வுகளில் ஒரு சிலரைத்தவிர அனேகமாக அனைவருமே போனில் இணையத்தைப் பயன்படுத்திக் கேள்விகளைத் தட்டச்சிப் பதிலைக் காப்பியடிப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தும் திருத்தி மதிப்பெண்கள் தரவேண்டி இருக்கிறது. நேரான பாதையில் செல்லும் தெளிவும் குறுக்கு வழிகளில் செல்லக்கூடாதென்னும் அறிவும் சுய-ஒழுக்கமும் தானாய் எல்லாருக்கும் வராத இளம் வயதில் இவர்களைச் சொல்லுவதிலும் குற்றமில்லை. விடைத் தாள்களை ஸ்கேன் செய்து ஆசிரியர்களுக்கு அனுப்பும் அவசரத்தில் ஒரு மாணவன் அவன் காபி அடித்த புத்தகப் பக்கத்தையும் அப்படியே ஸ்கேன் பண்ணி எனக்கு அனுப்பி இருந்தான். நொந்துகொண்டு அவனைக் கூப்பிட்டுக் கண்டித்தேன். அவன் செய்த தவறுக்குத் தண்டனை தரும் காலமன்று இது, என்றாலும் ஒரு ஆசிரியையாக அவன் தவறு செய்தது எனக்குத் தெரிந்திருக்கிறது என்பதயாவது அவனுக்குத் தெரிவிக்க வேண்டுமல்லவா?

இந்த இணையவழிக் கற்றலில் ஆசிரியைகள் இல்பேணுவதும் கல்லூரி பள்ளி கற்பித்தலைச் சரியாக நேரத்துக்குச் செய்வதும், வீட்டிலேயே இருக்கும் குழந்தைகளைக் கவனிப்பதுமாக ஓய்வின்றி உழைப்பதையும் மிகுந்த மன அழுத்தத்திலும், உடல் சோர்விலும் இருப்பதையும் பார்க்கின்றேன்.

கல்லூரியில் படிக்கும் மகனின் இளம் ஆசிரியை ஒருவர் காலை 8.45க்குக் கலைந்த தலையும் சோர்ந்த கண்களுமாக நைட்டியிலேயே பாடம் சொல்லிக்கொடுக்கத் துவங்கியதைக் கரிசனத்துடன்தான் பார்த்தேன். இன்னொரு ஆசிரியை பாடம் நடத்திக்கொண்டிருக்கையில் பச்சிளம் குழந்தையின் வீறிடல் கேட்டதும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு வீடியோவை அணைத்துவிட்டுச் சில நிமிடங்களில் மீண்டும் வந்தமர்ந்தார். அவர் கண்களில் தெரிந்த சோர்வும் குழப்பமும் தூக்கமின்மையும் அலுப்பும் ஓர் அன்னையாக எனக்குத் துயரளித்தது.

மாணவர்களின் சிறப்பம்சங்கள் என்ன என்று அறிந்துகொள்ள முடியவில்லை. சோர்வுடன், பசியுடன், கவனச் சிதறலுடன் இருப்பவர்களைக் கண்டு வேண்டியதைச் செய்து அவர்களை ஊக்கப்படுத்திக் கற்றலைத் தொடரச்செய்ய முடியவில்லை.

மொத்தத்தில் இப்போது நடந்துகொண்டிருப்பது ஆளுமை உருவாக்கக் கல்வி அன்று என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை. இப்படியெல்லாம் இயந்திரங்களுடன் வாழ்வை இணைக்க வேண்டியிருக்கும் என்று தெரியாமல் சாதாரணச் சோர்வுகளுக்கும் பணிச்சுமைகளுக்கெல்லாம்கூட ’’இயந்திரத்தனமான வாழ்க்கை’’ என்று முன்பு சொல்லிக்கொண்டிருந்ததை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது.

மாற்றுக் கல்வி, சோற்றுக் கல்வி, புதிய கல்வி, கலைக் கல்வி ,அறிவியல் கல்வி சமச்சீர்க் கல்வி என்று பலவற்றைப் பார்த்தோம். இனி இந்த இணையக் கல்வியையும் உலகம் பழகிக்கொண்டு நிரந்தரமாகக் கல்வி முறையே இதற்குத் தக்கபடி மாறிவிடுமா அல்லது கொரோனாவைப் போலவே இதற்கு முன்பும் லட்சக்கணக்கானோர் இறப்புக்குக் காரணமாயிருந்த பிளேக். அம்மை போலியோ போன்ற கொள்ளை நோய்களைப்போல இதுவும் வந்த சுவடை ஆழப்பதித்துவிட்டுக் காணாமல் போனபின்பு வழக்கம்போல கல்லூரிக்குப் பருத்திப் புடவையும் கண்ணாடியுமாகப் போய் வகுப்பு எடுத்துக்கொண்டு, தாமதமாக வருபவர்களின், அரதப் பழசான ’’பஸ் லேட் மேம்’’ போன்ற பொய்களைச் சகித்துக்கொண்டு, செல்லமாகக் கண்டித்து உள்ளே அனுமதித்துக்கொண்டு வகுப்பெடுக்கும் நாள்களும் விரைவில் வந்துவிடுமா? பிந்தையதின் சாத்தியங்களையே மனம் மிகவும் நம்புகின்றது.

ஒரு கூடுகையின் பொருட்டுக் கல்லூரிக்குச் சென்ற வாரம் முறையான பாதுகாப்புடன் சென்றிருக்கையில் அடைக்கப்பட்டிருந்த வகுப்பறைகளும் என்னை மறந்துவிட்டு யார் என்று வினவிய காவலாளியும் தூசு படிந்திருந்த என் இருக்கையும் கண்ணை நிறைத்தது.

ஆசிரியமென்பது ஒரு பணியன்று, அது ஒரு வாழ்வு முறை. இந்தப் புதிய வாழ்வு முறைக்குள் என்னால் என்னை முழுமையாக பொருத்திக்கொள்ளவே முடியவில்லை எனினும், இதுவரையிலும் எங்கு பிடுங்கி நடப்பட்டாலும் வேர்பிடித்து வளரும் இயல்புடையவளாகவே இருந்திருக்கிறேன். விரைவில் இதற்கும் பழகிக்கொள்ளுவேன் என்றே நினைக்கிறேன்.

Once a teacher always a learner. எனவே கற்றுக்கொண்டே இருக்கவேண்டுமல்லவா, கடைசிக் கணம் வரைக்கும்.

 

 

https://solvanam.com/2020/12/27/இணையவழி-கற்றலும்-கற்பித/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.