Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொட்டு அம்மானும் - இந்திய படைகளும்! | பாகம் 01

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Pottu%2BAmman.jpg

பொட்டு அம்மானும் - இந்திய படைகளும்! | பாகம் 01

படுகாயமடைந்த பொட்டு அம்மானும் - கிட்டு அம்மாவும்!

தமிழீழத்தை இந்தியப் படையினர் ஆக்கிரமித்து நின்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த முக்கிய தளபதிகள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கவேண்டி நேர்ந்தது. பின்னய நாட்களில் விடுதலைப்புலிகள் அமைப்பிலும் உலக அரங்கிலும் அதிகம் பிரசித்தி பெற்றுத்திகழ்ந்த சிலர், இந்தியப்படை ஆக்கிரமிப்பு காலத்தில் எப்படியான துன்பங்களை, சவால்களை அனுபவிக்க நோந்தது என்று மீட்டுப்பார்ப்பது காலத்தின் தேவையாகின்றது. இன்றைய பதிவில் தமிழீழத்தின் புலனாய்த்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் பற்றி விரிவாக பார்ப்போம்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படையினருக்கும் இடையில் யுத்தம் ஆரம்பமானதைத் தொடர்ந்து களத்தில் முதலாவது காயமடைந்த போராளி பொட்டுஅம்மாண் என்று கூறலாம். ஒக்டோபர் 10ம் திகதி யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மைதானத்தில் இந்தியப் படையினர் விமானங்களில் இருந்த தரையிறங்கமுயன்றபோது, அவர்களது தரையிறக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கைக்கு பொட்டுஅம்மான் அவர்கள் தலைமைதாங்கியிருந்தார்.

தரையிறங்க ஆரம்பித்த இந்தியப் படையினருக்கும், மைதாணத்தைச் சுற்றிவழைத்திருந்த விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சண்டைகள் ஆரம்பமானபோது முதன்முதலில் காயமடைந்தவர் பொட்டுஅம்மான் அவர்களே. வயிற்றிலும், கமர்கட்டிலும் பாரிய காயங்களுக்கு உள்ளானார். துப்பாக்கி சூடு பட்டு முட்புரித் தசைநார்கள் கிழிந்து போயிருந்தன. காலிலும் பாதங்களிலும் கூட பயங்கரக் காயம். நிறைய இரத்தம் வெளியேறிவிட்டிருந்தது. காயமடைந்த பொட்டம்மாணை மற்றய போராளிகள் உடனடியாகவே களத்தைவிட்டு நகர்த்தி சிகிட்சைக்காக போராளிகளால் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு சென்றார்கள். உயிர் பிரிந்துவிடும் நிலையில் ஒரு ஆபத்தான கட்டத்தில் பொட்டம்மான் இருந்தார்.

யாழ் குடாவை இந்தியப் படையினர் கைப்பற்றும் அபாயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பொட்டு அம்மானையும், அவருடன் காயமடைந்து சிகிட்சை பெற்றுக்கொண்டிருந்த மற்றைய சில போராளிகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தவேண்டி ஏற்பட்டது. இந்தியப் படையினர் சகட்டுமேனிக்கு செல் தாக்குதல்களை மேற்கொண்டபடி இருந்தார்கள். வல்வெட்டித்துறையில் புலிகளின் மூத்த தளபதிகளுள் ஒருவரான கிட்டுவின் தாயார் காயமடைந்த போராளிகளுக்கு அபயம் அளிக்கும் ஒரு நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருந்தார்.

பொதுவாகவே அக்காலப்பகுதியில் வல்வெட்டித்துறைப் பிரதேசம் புலிகளின் ஒரு கோட்டையாகவே இருந்தது. தமிழ் தேசியத்தின் வாஞ்சையை அப்பகுதி மக்கள் மிகவும் உறுதியுடன் வெளிப்படுத்தி வந்தார்கள். இந்தியப் படையினருடன் யுத்தம் மூண்டதைத் தொடர்ந்து காயமடைந்த போராளிகளுக்கு உறைவிடமாகவும், பாதுகாப்பு அரனாகவும் வல்வெட்டித்துறைப் பிரதேசம் அமைந்திருந்தது. கிட்டு அம்மா என்று போராளிகளால் மிகவும் அன்புடன் அழைக்கப்பட்ட அந்த மூதாட்டியின் கவணிப்பில் பொட்டு அம்மான் ஒப்படைக்கப்பட்டார்.

கிட்டு அம்மாவின் வீடு ஒரு தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டிருந்தது. காயமடைந்த பல போராளிகளுக்கு அங்கு சிகிட்சை அளிக்கப்பட்டுவந்தது. புலிகளின் மருத்துவக் குழு போராளிகளுக்கு மும்முரமாகச் சிகிட்சை அளித்துக்கொண்டிருந்தது. ஆப்பிரதேசவாசிகள் சந்தர்ப்பவசத்தால் வைத்தியர்களாகவும், தாதிகளாகவும் மாறி போராளிகளின் சிகிட்சைகளுக்கு உதவிக்கொண்டிருந்தார்கள். தமிழீழத்தின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அவர்களின் மனைவி அடேல் பாலசிங்கம் அவர்கள் பொட்டம்மானுக்கு சிகிட்சை அளிக்கும் பொறுப்பை ஏற்று சிறிது காலம் செயற்பட்டார்.

பொட்டம்மானுக்கு தான் சிகிட்சை அளித்தது பற்றி திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள், தான் எழுதிய சுதந்திர வேட்கை என்னும் நூலில் இவ்வாறு விபரித்திருந்தார்:

நான் ஒரு மருத்துவத் தாதியாக இருந்த காரணத்தால் எனது உதவி மருத்துவப் போராளிகளின் சுமையை ஓரளவு குறைத்தது. பொட்டுஅம்மாணையும் வேறு சில போராளிகளையும் பராமரிக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். பொட்டு அம்மானின் வயிற்றுப்புண் நன்றாகக் குணமடைந்தது. ஆனால் கையில் ஏற்பட்ட காயம் மட்டும் மாறுவதாக இல்லை. பெரிய கட்டுப் போடவேண்டி இருந்தது. ஆனால் ஊணீர் கசிந்துகொண்டிருந்தது. பெரிய புண்: பயங்கர வலி. உள்ளூர் மருத்துவமனையில் மயக்க மருந்து எடுத்து, அதன் பின்னரே காயங்களைத் துப்பரவுசெய்யவேண்டி இருந்தது. பொட்டு அம்மான் உட்பட கடுங்காயம் அடைந்த போராளிகளை பருத்தித்துறை மந்திகை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது, நானும் உடன் சென்றுவந்தேன்.

வடமாராட்சிப் பிரதேசத்தில் வரவர விமானப்படை நடவடிக்கைகள் அதிகரிக்க ஆரம்பித்தன. வடமாராட்சி எல்லைகளில் இந்திய காலாட் படையினரின் காவல் உலா அணிகளும், வேவு முயற்சிகளில் ஈடுபட்டுவருவதை அவதாணிக்கமுடிந்தது. இந்திய இராணுவத் தலைமைப்பீடம் தனது கவனத்தை விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் மீது திருப்ப ஆரம்பித்துவிட்டன என்பதையே அவை உணர்த்திற்று. விரைவில் அந்தப் பகுதியில் இந்தியப் படையின் நடவடிக்கைகள் அதிகரிக்கப்போகின்றது என்பது தெளிவாகியது. யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பிரதான வீதி வழியாக இந்தியக் காவல் உலாப் பிரிவு மெதுவாக நகர ஆரம்பித்திருப்பதாக எமது போராளிகள் மோப்பம் பிடித்து அறிவித்திருந்தார்கள். நாம் பாதுகாப்பாகத் தங்கியிருந்த அந்தப் பிரதேசத்தை விட்டு நகரவேண்டிய வேளையும், தேவையும் உருவாகிவிட்டதாக உணர்ந்தோம்.”– இவ்வாறு திருமதி அடேல் பாலசிங்கம் தனது நூலில் விபரித்திருந்தார்.

வல்வெட்டீத்துறை இந்தியப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டதைத் தொடர்ந்து காயமடைந்த போராளிகளையும், படுகாயம் அடைந்திருந்த பொட்டம்மானையும் கரவெட்டிக்குக் கொண்டு சென்றார்கள்.

வடமாராட்சியின் இதயப் புகுதியான கரவெட்டிக்கு அப்பொழுது இந்தியப் படையினர் வந்து சேரவில்லை. விடுதலைப் புலிகளின் கரவெட்டிப் பிரதேசப் பொறுப்பாளரான மூத்த உறுப்பினர் சுக்ளா கரவெட்டியின் கலட்டி பகுதியில் ஒரு பெரிய வீட்டை ஏற்பாடு செய்திருந்தார். பொட்டு அம்மான் உட்பட காயமடைந்த பல போராளிகளை இந்த விட்டில் தங்கவைத்து சிகிட்சை அளித்தார்கள்.

வல்வெட்டித்துறையில் இருந்து சுமார் 4 மைல்கள் தொலைவில் இந்த இடம் அமைந்திருந்தது. அக்காலகட்டத்தில் இந்தியப் படையினரின் நடமாட்டம் பெரும்பாலும் பிரதான வீதிகள் வழியாகவே இருந்ததால், கலட்டி பகுதியில் பொட்டம்மானின் இருப்பிடம் அமைந்திருந்த பிரதேசம் ஓரளவு பாதுகாப்பான பிரதேசமாகவே இருந்தது. மருத்துவ சிகிட்சைக்காக பொட்டம்மான் அடிக்கடி மந்திகை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கரவெட்டியில் இவர்கள் தங்கவைக்கப்பட்ட இடத்திலிருந்து உள் வீதி வழியாக மந்திகைக்கு சென்றுவருவது ஓரளவு பாதுகாப்பானதாக இருந்தது.

படிப்படியான பொட்டம்மானின் காயங்கள் குணமடைய ஆரம்பித்த வேளையில் மற்றொரு ஆபத்து அவரை நோக்கி நகர ஆரம்பித்தது. பொட்டம்மானும், மற்றய போராளிகளும், புலிகளின் முக்கியஸ்தர்களும் கரவெட்டியில் மறைந்திருக்கும் செய்தி இந்தியப் படையினரின் காதுகளை எட்டியது. அவர்கள் மறைந்திருக்கும் வீடும் வரைபடங்களுடன் இந்தியப் படை அதிகாரிகளின் கைகளுக்கு வந்து சேர்ந்தது.

ஆந்த வீட்டில் தங்கியிருக்கும் அத்தனை பேரையும் பூண்டோடு அழித்தொழிக்கும் நோக்கத்தில் இந்தியப் படை ஹெலிக்காப்டர்கள் இரண்டு அவசரஅவசரமாகப் புறப்பட்டன. இந்தியக் காலாட் படைப்பிரிவொன்றும் கரவெட்டியைக் குறிவைத்து மிக மூர்க்கமாக முன்னேற ஆரம்பித்தது...

தொடரும்...

ஈழம் புகழ் மாறன்.

 

#################    ##############    #####################

 

pottu%2Bamman.jpg

பொட்டு அம்மானும் - இந்திய படைகளும்! | பாகம் 02

மண்ணுக்காக வலிகள் சுமந்த அம்மான்!

இன்றும் உலக வல்லாதிக்க சக்திகளால் பயத்துடனும் அதேவேளை அதிசயத்தைடனும் பார்க்கும் பெயர் பொட்டு அம்மான். அவர் தமிழீழ மன்னுக்காக, மக்களுக்காக இந்திய இரானுவத்தின் கால கட்டத்தில் அனுபவித்த துன்பங்களைத்தான் இந்த பதிவில் பார்த்து வருகின்றோம்.

கரவெட்டி, களட்டியில் பொட்டுஅம்மான், காயமடைந்த போராளிகள், தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் போன்றவர்கள் ஒரு வீட்டில் பாதுகாப்பாக தங்கியிருக்கும் செய்தி இந்தியப் படையினர் காதுகளை வந்தடைந்தது. அவர்கள் தங்கியிருந்த வீட்டைக் குறிவைத்து இரண்டு ஹெலிக்காப்டர்கள் பறந்து வந்தன. போர் தொடங்கிய காலத்திலிருந்தே யாழ் குடா முழுவதும் இந்தியப் படை விமானங்களின் நடமாட்டங்கள் அதிகமகவே இருந்து வந்தன. பொருட்களையும், படையினரையும் ஏற்றி இறக்குவதற்கும், வானில் இருந்து தாக்குதல் நடத்துவதற்கென்றும் இந்தியப் படை விமானங்கள் யாழ் குடா முழுவதும் ஆரவாரப்பட்டுத் திரிந்தன. விமானங்களின் நடமாட்டம் தெரிந்தால் உடனே பாதுகாப்பு நிலை எடுப்பதற்கு மக்கள் பல காலமாகவே பழகியிருந்தார்கள்.

பொட்டம்மான் உட்பட மற்றய முக்கிய தளபதிகள் தங்கியிருந்த பிரதேசத்திலும் அடிக்கடி விமானங்கள் பறந்தபடிதான் இருந்தன. ஆனால் குறிப்பிட்ட அந்த தினத்தன்று அப்பகுதியில் பறந்து வந்த உலங்கு வானூர்த்திகள் தமது வழக்கமான பயனப்பாதையை திடீரென்று மாற்றி பொட்டம்மான் தங்கியிருந்த வீட்டை நோக்கி விரைந்து வர ஆரம்பித்தன.

மாலை மங்கத்தொடங்கும் நேரம். சாதாரணமாகவே இப்படியான ஒரு நேரத்தில் உலங்குவானூர்த்திகள் தாக்குதல் நடவடிக்கைகளில் இறங்குவது கிடையாது. இலக்குகளை துல்லியமாகத் தாக்கமுடியாது என்ற காரணத்தால் பெரும்பாலும் மாலை நேரங்களில் தாக்குதல்களை ஆரம்பிப்பது கிடையாது. ஆனால் பொட்டு அம்மான் தங்கியிருந்த வீட்டை நோக்கி விரைந்த வானூர்த்திகள் வீட்டை ஓரிருதடவைகள் சுற்றிவந்தன. 

பழுத்த அனுபவம் கொண்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் நிலமையைப் புரிந்துகொண்டார்கள். நிலையெடுத்துக்கொண்டார்கள். கட்டிடங்களின் பின் மறைந்து கொண்டார்கள். காயமடைந்த நிலையில்இருந்த பொட்டு அம்மான் மற்றும் போராளிகளை ஒரு கொங்கிறீட்ட கூரையின் கீழ் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். திடீரென்று ஹெலிக்காப்டர்கள் தாக்க ஆரம்பித்தன. சகட்டுமேனிக்குத் தாக்குதலை நடாத்தின. பொட்டு அம்மான் குழுவினருடன் தங்கியிருந்த அன்டன் பாலசிங்கம் மற்றும் அவருடைய மனைவி போன்றோர் வெளியே வளவின் மத்தியில் இருந்த தண்ணீர் தொட்டியின் சீமெந்து தூணுக்கு பின்னே மறைந்துகொண்டார்கள்

சுற்றிச் சுற்றிவந்து தாக்குதல் நடாத்திய ஹெலியின் பார்வையில் இருந்து தப்புவதற்கு அவர்களும் தூனில் முதுகை ஒட்டியபடி தூணை சுற்றிச்சுற்றி அரக்கினார்கள். தாம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் குறைந்தது முப்பது புலிகளாவது கொல்லப்பட்டிருப்பார்கள் என்று இந்திய விமானப் படையினர் நம்பினார்கள். தளத்தில் இருந்த தமது மேலதிகாரிகளுக்கு அதனை அறிவிக்கவும் செய்தார்கள். திருப்தியுடன் அவர்கள் தமது விமானங்களை தளத்திற்குத் திருப்பினார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் அன்றைய அந்தத் தாக்குதல் நடவடிக்கையில் எந்த ஒரு போராளிக்கோ அல்லது பொதுமக்களுக்கோ ஒரு சிறு காயம் கூட ஏற்படவில்லை. வீடுகள் கூரைகள் சேதமாகினவே தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை.

பொட்டு அம்மான், அன்டன் பாலசிங்கம் மற்றும் காயமடைந்த போராளிகள் தங்கியிருந்த வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து இரண்டு விடயங்கள் போராளிகளுக்கு நன்றாகப் புரிந்தது. ஒன்று, இந்தியப் படையினருக்கு தமது இருப்பிடம் பற்றிய செய்திகள் துல்லியமாகச் சென்றுகொண்டிருக்கின்றன. அடுத்தது மறுநாள் தரைவழியான முற்றுகை ஒன்று நிச்சயம் அப்பகுதியில் இடம்பெறும் என்பது. உடனடியாகவே தமது இருப்பிடத்தை மாற்றிக்கொள்ள அவர்கள் தீர்மாணித்தார்கள். அப்பகுதியில் இருந்து தகவல்கள் கசிய ஆரம்பித்திருந்தது அவர்களுக்கு புதிய சிக்கல்கலை ஏற்படுத்தியிருந்தது.

.பி.ஆர்.எல்.எப், டெலோ, .என்.டி.எல்.எப்., புளொட் உட்பட மற்றய இயக்க உறுப்பினர்களின் குடும்பத்தினரும் யாழ்குடா முழுவதும் வசித்து வந்ததால், தகவல் கசிவைத் தடுப்பது கடினம் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். அதேவேளை, மக்களோடு மக்களாகக் கலந்திருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியும் அப்பொழுது இருக்கவில்லை. எனவே ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். ஒரே பெரிய குழுவாக இருந்து அனைவருமே அகப்பட்டுக்கொள்வதை விட சிறிய சிறிய குழுக்களாகப்; பிரிந்து சென்று தங்கியிருப்பது என்று முடிவுசெய்தார்கள். பொட்டு அம்மான் கரவெட்டியில் இருந்து சில மைல்கள் தூரத்திலுள்ள நவிண்டில் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டார். அன்டன் பாலசிங்கம் குழுவினர் கரவெட்டியிலேயே வேறு ஒரு பகுதியில் தங்கவைக்கப்பட்டார்கள்.

பொட்டு அம்மானின் காயங்கள்; மிகவும் மோசமாக ஆரம்பித்தன. சரியாக சிகிட்சை அளிக்கப்படாமை, தொடர்ச்சியான நகர்வுகள், தேவையான ஓய்வின்மை போன்ற காரணங்களினால் மேலும் மோசமான நிலையை நோக்கி அவரது உடல் நிலை சென்றுகொண்டிருந்தது. அவரது கமர்கட்டு காயத்தால் ஊனம் வடிய ஆரம்பித்தது. வெப்ப அவியலான நிலையில் அவரது காயங்கள் சீழ் பிடிக்க ஆரம்பித்திருந்தன. அவரது வயிற்றுக் காயத்திலும் புதிய சிக்கல். விட்டு விட்டு வலிக்கத் தொடங்கின. காரணத்தைக் கண்டுபிடிக்க கருவிகள் எதுவும் இல்லை. மருந்துகள் கைவசம் இல்லை. வலியினால் மிகவும் வேதனைப்பட்டார். தொடர்ந்து முனகியபடியே கஷ்டப்பட்டார். அவரது முனகல் அவர்களது மறைவிடத்தை காட்டிக்கொடுத்துவிடுமோ என்று மற்றப் போராளிகள் அஞ்சினார்கள்.

அவர்கள் வீட்டினுள் மறைந்திருக்கும் விடயம் அயலவர்களுக்கு தெரிந்து அவர்கள் மூலமாக இந்தியப் படையினரின் காதுகளைச் சென்றடைந்துவிடும் என்ற பயம் ஒரு பக்கம்: இரவில் வீதி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுத்திரியும் இந்தியப் படையினர் காதுகளில் முனகல் சத்தம் விழுந்துவிட்டாலும் நிலமை ஆபத்திற்கு இட்டுச் சென்றுவிடும். மிகவும் அச்சமான, ஆபத்தான சூழ்நிலையில் அன்று பொட்டம்மானும், அவரது குழுவினரும் தங்கியிருந்தார்கள். இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டிருப்பதே தப்பிப்பதற்கு சிறந்த வழியாக இருந்தது.

பொட்டு அம்மானின் காயங்கள் அவரைக் காட்டிக்கொடுத்துவிடும் நிலையை ஏற்படுத்தியிருந்தது. அவரால் நீண்ட தூரம் நடக்கமுடியாத நிலையும் காணப்பட்டது. அவரை ஒரு சாய்மானைக் கதிரையில் இருத்தி போராளிகள் தமது தோள்களில் சுமந்தே நகர்வுகளை மேற்கொள்ளவேண்டி இருந்தது.

நவிண்டில் பகுதியில் காயமடைந்த போராளிகள் தங்கியிருந்த விடையம் அப்பிரதேச மக்கள் மத்தியில் போதுமான அளவு கசிய ஆரம்பித்ததைத் தொடர்ந்து, பொட்டம்மானும், மற்றவர்களும் நெல்லியடியை நோக்கி நகர ஆரம்பித்தார்கள். நெல்லியடியில் புராதன வீடொன்றில் அனைவரும் தங்கவைக்கப்பட்டார்கள். அப்பிரதேசவாழ் மக்களும், அந்த போராளிகளுக்கு பல வழிகளிலும் உதவிகள், ஒத்தாசைகள் புரிந்தார்கள். நெல்லியடியில் ஓரளவு அசுவாசப்பட்டுக்கொள்ள அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.

தொடரும்...

ஈழம் புகழ் மாறன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

pottu%2Bamman%2B.jpg

பொட்டு அம்மானும் - இந்திய படைகளின் காலமும்! - பாகம் 03

இந்தியப்படை தமிழின துரோகிகளின் கூட்டுச் சதியும் - அம்மானின் வியூகமும்!

 

பொட்டு அம்மான் இந்த நாமம் இலங்கை படைகளாக இருக்கட்டும் அல்லது இந்திய வல்லாதிக்க சக்திகளாகள இருக்கட்டும் இவர்களின் செவியோரோம் ஒலிக்கும்போது இவர்களின் அடிவயிறு கலக்குமென ஆய்வுகள் சுட்டி காட்டுகின்றன அப்பெரு வீரன் இந்திய படைகளின் காலகட்டத்தில் தமிழ் மக்களுக்காக எதிர்கொண்ட இன்னல்களையும் அனுபவித்த வலிகளையுமே இத்தொடரில் பார்த்து வருகின்றோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான பொட்டம்மான், தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம், பிரிகேடியர் நடேசன் போன்றவர்கள் உட்பட காயமடைந்த சில போராளிகள், புலிகளின் மருத்துவப் பிரிவினர், மேலும் சில போராளிகள் என்று பலர் நெல்லியடியிலுள்ள அந்த வீட்டில் தங்கியிருந்தார்கள். இந்தியப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சண்டைகள் மூண்ட போது வல்வெட்டித்துறையில் தங்கியிருந்த இவர்கள், இந்திய இராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக கரவெட்டிக்கும், பின்னர் நவிண்டிலிற்கும் இடம் யெர்ந்து கடைசியில் நெல்லியடிக்கு வந்திருந்தார்கள். படுகாயம் அடைந்திருந்த பொட்டு அம்மானின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்திருந்தது. சாய்மானக் கதிரையில் அவரை வைத்துச் சுமந்தபடிதான் எங்குமே நகரவேண்டியிருந்தது.

நெல்லியடியில் அவர்கள் வந்து தங்கியிருந்த இடம் சற்று பாதுகாப்பான இடம்போன்றுதான் தென்பட்டது. அனைவரும் தங்கக்கூடிய அளவிற்கு சற்று விசாலமானதும் கூட. மிகவும் புராதனமான அந்த வீடு, அப்பிரதேசத்தின் உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய மார்க்கண்டு என்பவருக்குச் சொந்தமானது. மார்க்கண்டு அவர்கள் விடுதலைப் போராட்டத்தின் ஒரு தீவிர ஆதரவாளர். தனது ஒரு புதல்வனை அவர் போராட்டத்திற்கு ஒப்படைத்திருந்தார் (அவரது மகனின் பெயர் விஜயன்). பிரதேசப் பொறுப்பாளர் சுக்ளாவின் ஏற்பாட்டின்படி அவர் இந்த வீட்டினை விடுதலைப் புலி முக்கியஸ்தர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். அயலவர்கள் அங்கு தங்கியிருந்த போராளிகளுக்கு பிரதான காவல் அரன்களாக நின்றுகொண்டிருந்தார்கள். உணவு முதல் அனைத்து ஆதரவுகளையும் அவர்கள் வழங்கிக்கொண்டிருந்தார்கள்.

பொழுது சாயும்நேரம்தான் அந்தச் சம்பவம் இடம்பெற்றது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த சில சிறுவர்கள் மூச்சிறைக்க ஓடிவந்து அந்தச் செய்தியை போராளிகளிடம் தெரிவித்தார்கள். காவல் உலா வந்துகொண்டிருந்த ஒரு தொகுதி இந்திய இராணுவத்தினர் போராளிகள் தங்கியிருந்த அந்த வீட்டை நோக்கி இரகசியமாக நகர்ந்துகொண்டிருப்பதாக அந்த சிறுவர்கள் செய்திகொண்டு வந்திருந்தார்கள். சிறுவர்களைத் தொடர்ந்து அங்கு வந்த அப்பிரதேசவாசிகள் சிலரும் இந்தியப் படையினர் அப்பகுதியைக் குறிவைத்து நகர்ந்துகொண்டிருப்பதாகச் தகவல் தெரிவித்தார்கள். துவிச்சக்கர வண்டிகளில் தலைதெறிக்க விரைந்துவந்த ஒரு பெரியவரும் மூச்சிறைக்க இந்தியப் படையினரின் நகர்வுபற்றி தகவல் வழங்கிவிட்டுச் சென்றார்.

வேறு திசையில் இருந்து மற்றொரு படை நகர்வொன்று இடம்பெறுவதாகவே அவர் தகவல் தந்திருந்தார். இதைக்கேட்டதும் பொட்டு அம்மான் எழுந்து உட்கார்ந்தார். விழிப்படைந்தார். சுற்றிவழைப்புக்களில் இருந்து எதிரியைத் தினறடித்து வெளியேறுவதில் அவருக்கு பல ஆண்டுகள் அனுபவங்கள் உண்டு. மட்டக்களப்பில் இருந்த போது அவரது காட்டு முகாம்களை; சுற்றிவழைத்த ஸ்ரீலங்காப் படையினரின் முற்றுகைகளை ஒரு பகுதியால் உடைத்துக்கொண்டு வெளியேறிய அனுபவங்கள் பல அவருக்கு உண்டு.

இராணுவ நடமாட்டம் பற்றிய விபரம் கிடைக்கும் போது, எந்தக் கட்டத்தில் அதைப்பற்றி கவலைப்படவேண்டும் என்பதை அவர் அனுபவத்தால் உணர்ந்திருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் மற்றொரு திசையில் இருந்து இந்தியப் படையினர் அவர்கள் தங்கியிருந்த பகுதியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த செய்தியை வேவுப் புலிகள் கொண்டு வந்தார்கள்.விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களும், காயமடைந்த போராளிகளும் தங்கியிருந்த அந்த நெல்லியடி வீடு இந்தியப் படையினரின் ஒரு மிகப் பெரிய முற்றுகைக்கு உள்ளாகப் போன்றது என்கின்ற உண்மை அங்கியிருந்த அனைவருக்கும் விளங்கியது

பல திசைகளிலில் இருந்தும் பெரும் பலத்துடன் முன்னேறி, புலிகள் தங்கியிருந்த வீட்டிற்கான அனைத்துப்பாதைகளையும் துண்டிக்கும் இந்தியப் படையினரின் திட்டம் அங்கு தங்கியிருந்த பொட்டம்மானுக்கு புரிந்தது. அவரது மூளை மிகவும் துரிதமாக வேலை செய்தது. எந்த ஒரு பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும் என்பது அவருக்குத் தெரியும். அவரது ஆராய்ச்சிக் கண்கள் அந்தப் பலவீனத்தைத் தேடின. அவரது பணிப்பின் பெயரில் சகல சிசைகளிலும் விரைந்த போராளிகள் இந்தியப் படை நகர்வுகள் பற்றிய அனைத்து விபரங்களையும் கொண்டு வந்தார்கள்.

இந்தியப் படையினர் அந்த இல்லத்தில் தங்கியிருந்த அத்தனைபெயரையும் உயிருடன் பிடிக்கும் நோக்கத்தோடு நிதானமாக தமது நகர்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் கடைப்பிடித்த அந்த நிதானம் புலிகள் தமது வேகத்தை கடைப்பிடிக்க உதவியாக இருந்தது. ஒரு பகுதியால் முன்னேறிக்கொண்டிருந்த இந்தியப் படையினர் தமது நிலைகளைப் பலப்படுத்திக்கொண்டு மூன்னேற சற்றுத் தாமதமேற்பட்டது. அவர்கள் முன்னேறிக்கொண்டிருந்த பிரதேசத்தில் இருந்த வீடுகளைச் சோதனையிட்டபடி அவர்கள் நகர்ந்துகொண்டிருந்தார்கள் அப்பிரதேச கட்டமைப்பு, அதிகமான ஒழுங்கைகள், குறுக்குத் தெருக்கள், பனங்காணிகள் என்பனவும் அவர்களது நகர்வின் வேகத்தைச் சற்றுத் தாமதப்படுத்தியது.

இந்த தாமதத்தை சரியாகக் கணிப்பிட்டு புலிகள் பயன்படுத்திக்கொண்டார்கள். சாய்மானைக் கதிரையில் இருந்து துள்ளிக்குதித்தெழுந்த பொட்டம்மான், தனது அபாயகரமான காயங்களையும், அதனால் ஏற்பட்ட தாங்கமுடியாத உடல் உபாதையையும் பொறுட்படுத்தாமல், ஒரு போராளியின் தோளைப் பிடித்தபடி அந்த வீட்டை விட்டு வெளியேறினார். ஆப்பிரதேசத்தின் மூலைமுடுக்குகள் அனைத்தும் அத்துப்படியான உள்ளூர் போராளியான கந்தையாவிடம், போராளிகளுக்கு வழிகாண்பிக்கும் பொறுப்பை ஒப்படைத்திருந்தார். எந்தவிதச் சேதமும் இல்லாமல், ஒரு துப்பாக்கிவேட்டைக் கூடத் தீர்க்காமல் அத்தனை முக்கியஸ்தர்களும், போராளிகளும் அந்த இடத்தை விட்டு இரகசியமாக, பாதுகாப்பாக வெளியேறினார்கள். இதையறியாத இந்தியப் படையினர், புலிகள் தங்கியிருந்த அந்த வீட்டை நாலாபுறமும் சுற்றிவழைத்தார்கள். பாதுகாப்பாக நிலையெடுத்து முற்றுகையிட்டார்கள்.

.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர் ஒருவர்தான் இந்தியப் படையினருக்கு வழி காண்பித்து அவர்களை அங்கு அழைத்து வந்திருந்தார். வீட்டை சுற்றி வியூகம் அமைத்த இந்தியப் படையினர் உள்ளிருப்பவர்களைக் குறி வைத்து நிலை எடுத்தார்கள். ஏராளமான இந்தியப் படையினர் சுற்றிவளைத்து நிலையெடுத்து சுடுவதற்கு தயார் நிலையில் இருக்க, ஒரு இந்தியப் படை அதிகாரி உள்ளிருப்பவர்களை வெளியே வருமாறு அறிவித்தலை விடுத்தார். உள்ளிருந்து எவரும் வெளிவரவில்லை. மறுபடியும் மறுபடியும் அந்த அதிகாரி ஹிந்தியில் உரக்க கத்தினார். அருகில் காட்டிக்கொடுக்கும் பணிக்கென்று வந்திருந்த .பி.ஆர்.எல்.எப். உறுப்பினரை அழைத்து அவரையும் தமிழில் கத்தும்படி உத்தரவிட்டார். அந்த உறுப்பினரும் தொண்டை கிழியக் கத்தினார். எந்தப் பலனும் இல்லை. வீட்டில் இருந்து எவரும் வெளியில் வரவில்லை. எந்த சத்தமும் உள்ளிருந்து வெளிவரவில்லை. அதிகாரிக்கு கோபம் உச்சத்திற்கு ஏறியது. சுடும்படி உத்தரவு பிறப்பித்தார்.

வீட்டைச் சுற்றிவழைத்த இந்தியப் படையினர் சகட்டுமேனிக்குச் சுட்டுத்தீர்த்தார்கள். உள்ளிருந்து எந்தச் சஞ்சலமும் இல்லை. துணைக்கு வந்த .பி.ஆர்.எல். உறுப்பினரை வீட்டிற்குச் சென்று சோதனையிடும்படி அந்த இந்திய அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். பயத்துடனும் அதேவேளை தனது எஜமான் விசுவாசத்தைக் காண்பிக்கும் நாயைப் போலவும் விரைந்த அந்த உறுப்பினர் உள்ளே எவரும் இல்லை என்ற விடையத்தை கூறினார்.

இந்திய அதிகாரிக்கு கோபம் ஒருபக்கம், வெட்கம் ஒரு பக்கம். அந்த வீட்டின் சொந்தக்காரரை பிடித்துவர உத்தரவிட்டுவிட்டு, அயல் வீட்டார் சிலரையும் நையப்புடைத்துவிட்டு முகாம் திரும்பினார்.

நெல்லியடி வீட்டில் இருந்து மயிரிழையில் தப்பிய பொட்டு அம்மானின் உடல் நிலை மேலும் மோசமானது. அவர் உயிர் பிழைப்பாரா என்கின்ற சந்தேகம் மற்றப் போராளிகளுக்கு ஏற்பட்டது. இதுபோன்ற சுற்றிவழைப்புகள், தேடுதல்கள் இனிவரும் காலத்தில் யாழ்குடா எங்கிலும் தொடர்ந்து நடைபெறும் என்பதால், இந்த நிலையில் பொட்டம்மானை அங்கு பாதுகாப்பது மிகவும் கஷ்டம் என்பதை மற்றய போராளிகள் உணர்ந்தார்கள். அவர் உயிர் பிழைக்கவேண்டுமானால் , அவர் யாழ்குடாவை விட்டு வெளியேறி, மருத்துவப் பராமரிப்பும், ஓய்வும் பெறுவது அவசியம் என்று பொறுப்பாளர்களுக்குப் புரிந்தது. பொட்டம்மானின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவரை கடல்கடந்து தமிழ் நாட்டிற்குக் கொண்டு செல்வது என்று தீர்மாணித்தார்கள். ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அவரை மருத்துவ சிகிட்சைக்காகக் கொண்டுசெல்லவும் செய்தார்கள்...

(முற்றும்!)

ஈழம் புகழ் மாறன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.