Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலைக் குறித்துச் சிந்திப்பது எப்படி? - ராஜன் குறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

தேர்தலைக் குறித்துச் சிந்திப்பது எப்படி? - ராஜன் குறை

March 28, 2021

தமிழகம் தேர்தல் பிரச்சார அனலில் மூழ்கியிருக்கும்போது, மார்ச் 2021 இறுதி வாரத்தில் இந்தக் கட்டுரையைத் தமிழினிக்காக எழுதுகிறேன். ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல். இதில் என்னுடைய அரசியல் சார்புகள் குறித்தும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும் எழுதப்போவதில்லை. அவற்றை மின்னம்பலம் வலைத்தளத்தில் வாராவாரம் திங்களன்று எழுதி வருகிறேன். அவற்றில் பல கட்டுரைகளை தி.மு.க நாளேடான முரசொலி மறுபிரசுரம் செய்து என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. அதனால் என் தேர்வினைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு கட்டுரைக்குள் சென்றுவிடுகிறேன். இந்தியத் தேசம் பார்ப்பனீய இந்து அடையாளத்தின் பேரில் கட்டமைக்கப்படுவதை நான் எதிர்க்கிறேன். இந்திய ஒன்றியம் என்பது வலுவான மாகாண அரசுகளின் கூட்டாட்சியாக இராணுவம், வெளியுறவு மற்றும் செலாவணி ஆகிய மூன்று மட்டுமே ஒன்றிய அரசின் பொறுப்பில் இருப்பதாக வடிவம்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் இந்தக் கருத்துகளுக்கு எதிரான பாஜக-வை எதிர்ப்பதும், இந்தக் கருத்துகளை முன்னெடுக்கும் தி.மு.க-வை ஆதரிப்பதும் என்னுடைய இன்றியமையாத நிலைப்பாடு. ஆனால் என்னுடைய இந்த நிலைப்பாட்டை விளக்கி நான் இந்தக் கட்டுரையை எழுதப்போவதில்லை. மாறாக மூன்று மாறுபட்ட கோணங்களில் தேர்தல் எப்படி பார்க்கப்படுகிறது என்பதைக் கூறி, நாம் தேர்தலைக் குறித்து எப்படிச் சிந்திக்கலாம் என்பதையே விவாதிக்கப் போகிறேன்.

அந்த மூன்று கோணங்கள்:

  • நுண்ணுணர்வாளர் கோணத்தில் தேர்தல்
  • சாமானிய வாக்காளர் கோணத்தில் தேர்தல்
  • கட்சிக்காரரின் கோணத்தில் தேர்தல்

இந்த மூன்று வகையினரையும் பொதுமைப்படுத்த விரும்பவில்லை. இவர்களுள் பல மாதிரிகளும், பிரிவுகளும் இருக்கலாம். இருந்தாலும், கோணங்களாக இந்த மூன்று வகையினரின் பார்வைகளைத் தொகுத்துக்கொள்வது ஒரு சிந்தனை வசதிக்காகத்தான். விடுபடல்களைப் பொருட்படுத்தாமல் இந்த வகை மாதிரிகளைப் பரிசீலிக்கவும். மேலும் இந்த மூன்று கோணங்களைத் தனித்தனியாக விவாதிப்பதன் காரணம், இவற்றையெல்லாம் இணைத்துப் பார்த்தால் தேர்தல் என்பது என்ன என்று விளங்கிவிடும் என்பதால் அல்ல. மாறாக கோட்பாட்டு அளவிலும், நடைமுறை அளவிலும் தேர்தல் என்பது எவ்வளவு சிக்கலான, பிரம்மாண்டமான ஒரு மானுடவியல் நடவடிக்கை என்பதைக் குறித்த சிந்தனைகளைத் தொகுத்துக்கொள்வதே. ஆங்கிலத்தில் ‘Thinking on your feet’ என்பார்கள். அது போல எழுத எழுத சிந்தித்த வண்ணம் எழுதப்போகிறேன்.

பகுதி 1: நுண்ணுணர்வாளர் கோணத்தில் தேர்தல்

நுண்ணுணர்வாளர் என்று யாரைக் குறிப்பிடுகிறேன் என்றால் நான் தமிழ்ச் சிறுபத்திரிகை வெளியில் எண்பதுகளின் துவக்கத்திலிருந்து சந்தித்த கலை, இலக்கிய இரசனையாளர்கள், படைப்பாளிகளைக் குறிப்பிடுகிறேன். இந்தக் கட்டுரையை தமிழினி வலைத்தளத்தில் எழுதுவதால் அதன் பெரும்பாலான வாசகர்கள் இந்த அடைப்புக்குறிக்குள் வருவார்கள் என்று நினைக்கிறேன். இதில் சிலர் ‘கோட்பாட்டுச் சிந்தனைகளில்’ ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் பெரும்பாலும் வாசிப்பதை முழுமையாகத் தொகுத்துக்கொள்ள ஆர்வமில்லாதவர்களாக இருப்பார்கள். கலை, இலக்கிய ஈடுபாட்டின் பகுதியாக கொஞ்சம் விமர்சனத்தில் ஆர்வமும், அதையொட்டி கோட்பாட்டுச் சிந்தனைகளில் சற்றே ஆர்வமும் வரும். ஒரு சிலர் அதெல்லாம் ஏட்டுச் சுரைக்காய், அகடமிக் என்று இகழ்ந்துரைப்பார்கள். முக்கியமாக ஒருவரை உணர்வு ரீதியாகக் கவரும் அல்லது கவராத ஒரு படைப்பை யாராவது கோட்பாட்டின் துணைகொண்டு ஆராய்ந்தால் இந்த விலக்கம் உருவாகிவிடும். இவர்களது ஆதாரமான விசை என்பது நுண்ணுர்வின் தளம். அதை நான் மிகவும் உயர்வாகவே மதிப்பிடுகிறேன். நானும் கல்விப்புலம் செல்லும் முன்பாக இருபதாண்டு காலம் இந்தக் குழுவில்தான் சிந்தனை பயின்றேன் என்பதால் எனக்கு இப்பிரிவினரின் மேல் மிகுந்த பற்று உண்டு.

https://i0.wp.com/akm-img-a-in.tosshub.com/indiatoday/images/story/202103/WhatsApp_Image_2021-03-06_at_1_1200x768.jpeg?resize=891%2C501&ssl=1

தமிழின் தொன்மையான சிந்தனையில் அகம், புறம் என்ற பகுப்பு இருந்தது. நவீன சுதந்திரவாதச் சிந்தனையில் அந்தரங்க வாழ்க்கை, பொது வாழ்க்கை என்ற பாகுபாடு இருக்கிறது. இந்த அக வாழ்க்கை, அந்தரங்க வாழ்க்கை என்பது ஒரு மனிதரின் மன உலகம் என்பதைத் தவிர, அவரது அன்றாட வாழ்க்கை உறவுகள், தொடர்புகள், அதில் செயல்படும் ஒத்திசைவு, முரண்கள் எல்லாம் கொண்டது. புறம் அல்லது பொது வாழ்க்கை என்பது மனிதர்கள் ஒரு தொகுப்பாக இணைந்து செயல்படுவது, அமைப்புகளை உருவாக்குவது, அதிகாரத்தைக் குவிப்பது, பகிர்வது எனப் பல செயல்பாடுகளால் உருவாவது. சமூக அடையாளங்கள், தேசம், அரசு எனப் பல வடிவங்களை எடுக்கும் மனிதத் தொகுதிகளும் மனிதர்களால்தான் உருவாக்கப்படுகின்றன. இதற்கு முக்கியமான கருவியாக இருப்பது மொழி. அதன் மூலம் உருவாக்கப்படும் கதையாடல்கள், சொல்லாடல்களைப் பகிர்ந்துதான் பெரிய மானுடத் தொகுதிகள் கட்டமைக்கப்படுகின்றன. அமைப்புகள் உருவாகின்றன. மொழி என்பதை இந்த இடத்தில் குறியியக்கத்தின் ஒரு முக்கிய அங்கமாகப் பார்க்கவேண்டும். ஆனால் மனிதத் தொகுதிகளை உருவாக்குவதில் மொழியுடன் சேர்ந்து மொழி அல்லாத குறிகளும் முக்கியப் பங்காற்றுகின்றன. சிக்மண்ட் ஃபிராய்டு குலக்குறியும் விலக்கும் (Totem and Taboo) என்ற முக்கியக் கோட்பாட்டு நூலை எழுதினார். இதில் வரும் குலக்குறி (Totem) என்பது முக்கியமான குறியியக்க விசை. தமிழகத்தில் கோபுரம் என்பது முக்கியமான ஒரு குறி. தமிழக அரசின் முத்திரை அதுதான். அரவிந்தனின் சிதம்பரம்திரைப்படத்தின் இறுதிக்காட்சியும் அதுதான். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலின் முக்கியமான குறியீடும் அதுதான். பல்வேறு திசைகளில் இயங்கக்கூடிய ஆற்றல்மிக்க குறி என்று கோபுரத்தைக் குறிப்பிடலாம். சமகாலத்தில் எப்படி மொத்தத்துவத் தொகுப்புச் செயல்முறைகள் (totalizing procedures) குறியியக்கத்தின் துணைகொண்டு நடக்கின்றனவோ, அதே தளத்தில்தான் தனிமைப்படுத்தும் தொழில்நுட்பமும் (individuating techniques) உருவாகின்றது என்பதை ஃபூக்கோவின் பார்வையையொட்டி குறிப்பிடலாம். (பார்க்க: Subject and Power என்ற கட்டுரை- ரவிக்குமாரின் மொழியாக்கத்தில் தன்னிலையும், அதிகாரமும்).

இப்படியாக குறியியக்கத்தின் துணைகொண்டு உருவாக்கப்படும் மானுடத் தொகுதிகளின் அரசியல் ஏற்பாடுகள் மீது தமிழின் நுண்ணர்வாளர்கள் பெரியதொரு ஈடுபாடு கொள்வதில்லை. அவர்கள் நுண்ணுணர்வின் முக்கியக் களம் அக உலகம்தான் என்று நினைக்கிறார்கள். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்கிறார் வள்ளலார். ஆத்மாநாம் கவிதையொன்றில் தையலகத்தில் வேலை செய்யும் பெண்ணின் கையில் ஊசி குத்திவிடும். மேலதிகாரி கடிந்துகொள்வான். “சிகிச்சைக்கு வேண்டிய அன்புகூடவா இல்லை?” என்பார் ஆத்மாநாம். “ஊசி ஏறிய அவள் கைவிரலில் /  ரத்தம் கசிகிறது /  துண்டித்த ஊசி துடித்துக்கொண்டிருக்கிறது /  மேலாளன் வருகிறான் அவன் /  வணிகப் பேச்சோடு / சிகிச்சைக்கு வேண்டிய அன்புகூடவா இல்லை” (நன்றி பெருமாள் முருகன் வலைத்தளம்.) நான் நுண்ணர்வாளனாக மட்டும் இருந்தபோது நிறைய சிகரெட்டுகளைப் புகைக்க வைத்த கவிதை இது. நுண்ணுணர்வாளர்கள் அரசியலில் ஈடுபாடு கொள்வதில்லை என்றால் முற்றாக ஈடுபாடு கொள்வதில்லை என்பது கிடையாது. சில கட்சிகளை, இயக்கங்களை ஆதரிப்பார்கள், சிலவற்றை எதிர்ப்பார்கள். பொதுவாக இலக்கியத்தைக் குறித்து பேசும்போது அந்த எழுத்தாளரின் தனிப்பட்ட கருத்தியல், அரசியல் சார்புகளை மனதில் கொள்ளாமல் படைப்பை மட்டும் கவனத்தில் இருத்திப் பேச வேண்டும் என்பது பண்பாடு, அறிவுலக நியதி. நானும் அதைக் கடைபிடிப்பவன் என்பதால்தான் அசோகமித்திரனின் படைப்பெழுத்தை மிகவும் சிறந்ததாக மதிக்கிறேன். (அவருடைய இன்று நாவல் குறித்த என் விமர்சனத்தைக் காண்க). அசோகமித்திரனுக்கு பாஜக-வின் மீது சார்பும், திராவிட இயக்கப் பார்ப்பனீய எதிர்ப்பின் மீது ஒவ்வாமையும் இருந்தது. ஜெயலலிதா அ.இ.அ.தி.மு.க-வில் கொள்கைப் பரப்புச் செயலாளரான போது, ‘ஜெயலலிதாவும் அரசியலுக்கு வந்துவிட்டார். நீ என்ன மூலையில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருக்கிறாய் என்று யாரேனும் கேட்கக்கூடும்’ என்று தொனிக்கும் ஒரு வரியை அவர் கணையாழியில் எழுதியது நினைவிருக்கிறது. அதன்பின் அடுத்த முப்பதாண்டுகளில் ஏதேதோ நிகழ்ந்துவிட்டது. மற்றொருபுறம் நுண்ணுணர்வாளர்களால் முக்கியமான கவிஞர் என்று அங்கீகரிக்கப்பட்ட மனுஷ்ய புத்திரன் தி.மு.க-வில் சேர்ந்து அதன் செய்தித் தொடர்பாளராகிவிட்டார்.

இப்படிப்பட்ட தொடர்புகள், சார்புகள், மனப்பதிவுகள் கடந்து நுண்ணுணர்வாளர்கள் தேர்தல் குறித்து அதிக ஈடுபாடு கொள்ள மாட்டார்கள் என்பதே என் எண்ணம். அவர்களுக்கு தேர்தல் கிட்டத்தட்ட ஒரு அபத்த நாடகம் போலத் தொனிக்கலாம். அவர்களுடைய முக்கியமான பிரச்சினையாக நான் யூகிப்பது அவர்கள் வெகுஜன அரசியல் கட்சிகளிடையே பெரியதொரு வேறுபாட்டைக் காண்பதில்லை என்பதுதான். தமிழகத்தில் தி.மு.க-வும், அ.இ.அ.தி.மு.க-வும் ஒன்றுதான் என்றே பெரும்பாலானோர் கருதுவார்கள். காங்கிரஸிற்கும் பாஜக-விற்கும் சில வேறுபாடுகள் இருப்பதாகத் தோன்றினாலும் இரண்டும் அடிப்படையில் ஒன்றுதான் என நினைப்பார்கள். இப்படிக் கருதுவதை ஒரு நுட்பமான பார்வை எனவும் நினைப்பார்கள். அதற்கான காரணங்களும் வெளிப்படையாகத்தான் இருக்கின்றன. தேர்தல் என்பது கட்சிகளின் உச்சகட்டமான பரஸ்பரத் தாக்குதலாக இருக்கிறது. மக்களை எப்படியாவது கவர்ந்து ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். போட்டி போட்டுக்கொண்டு “இலவசங்களை” அறிவிக்கிறார்கள். மக்களுக்கு காசு கொடுக்கிறார்கள். தேர்தலின் போது வாக்காளர்களின் காலில் விழும் வேட்பாளர்கள் அதன் பிறகு ஐந்தாண்டு காலம் அவர்களைத் திரும்பிப் பார்ப்பதே இல்லை. வேட்பாளர்கள், அரசியல்வாதிகள் பலருக்கு முறையான கல்வியோ, வாசிப்போ இல்லை. குற்றப் பின்னணி கொண்டவர்கள் வேட்பாளர்கள் ஆகிறார்கள். சினிமா நடிகர்கள் அவர்கள் மீதான மக்களின் ஈர்ப்பை பயன்படுத்தி தலைவர்கள் ஆகிறார்கள். மக்களாட்சி என்பது கருத்தாக்கம் என்ற அளவில் உன்னதமானது என்றாலும், அது நடைமுறையில் அபத்தமானதாக, பொருளற்றதாக இருக்கிறது என்ற அளவிலேயே இதைக் குறித்து நுண்ணுணர்வாளர்கள் உணர்கிறார்கள். பிரச்சினை பெரும்பாலும் மக்களின் அறியாமையே என்றும்கூட பெரும்பாலானோர் நினைக்கிறார்கள்.

நுண்ணர்வாளர்களின் மன விலக்கத்திற்கும், சரியான விமர்சனப் புரிதலற்ற சார்பு நிலைகளுக்கும் முக்கியமான காரணம் என நான் நினைப்பது அவர்களுக்கு வரலாற்றுப் பார்வையோ, ஒப்பீட்டுப் பார்வையோ இருப்பதில்லை என்பதுதான். வரலாற்றுப் பார்வை என்றால் திப்பு சுல்தானிடம் எத்தனை குதிரைகள் இருந்தன என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்வதோ, ராணா பிரதாப் சிங்கின் குதிரையின் பெயர் என்ன என்பதை அறிவதோ அல்ல. நான் கூறும் வரலாற்றுப் பார்வை எப்படி மானுடம் மன்னராட்சி என்ற வடிவத்திலிருந்து மக்களாட்சி என்ற வடிவத்திற்கு நகர்ந்தது, அதன் உட்பொருள் என்ன என்பதைக் குறித்து சிந்திப்பதுதான். இதை மானுடவியல் பார்வை என்றும் கூறலாம். சரியான பொருளில் மானுடவியல் பார்வையின் தவிர்க்கவியலாத அம்சம்தான் நான் கூறும் வரலாற்றுப் பார்வை. அப்படி மன்னராட்சி வடிவத்திலிருந்து முழுமையாக மக்களாட்சி வடிவத்திற்கு வந்துவிட்டதா என்பதையும் நாம் தீவிரமாகப் பரிசீலிப்பதில்லை. உதாரணமாக, நம்மை நூறாண்டுகள் மறைமுகமாகவும், தொண்ணூறு ஆண்டுகள் நேரடியாகவும் ஆட்சிசெய்த பிரிட்டன், தன்னை யுனைடட் கிங்டம் என்றுதான் அழைத்துக்கொள்கிறது. அங்கே இப்போதும் மன்னர், அதாவது பேரரசி இருக்கிறார். அவர்தான் நாட்டின் குறியீட்டு ரீதியான தலைவர். மக்களாட்சித் தத்துவம் கடந்த ஐநூறு ஆண்டுகளில் உருவாகப் பெரியதொரு பங்களிப்பு செய்த பிரிட்டன், இன்னமும் அரசியல் நிர்ணயச் சட்டத்திற்கு உட்பட்ட சுதந்திரவாத மக்களாட்சி அரசு நிர்வகிக்கும் வம்சாவழி மன்னராட்சியாகத்தான் இருக்கிறது. அப்படி அதிகாரமே இல்லாமல்கூட எதற்கு ஒரு அரசுப் பரம்பரை தேவைப்படுகிறது? இது இப்படியிருக்க இந்தியாவில் ஒரு கட்சித் தலைவரின் மகனை அந்தக் கட்சி அடுத்த தலைவராக தேர்ந்தெடுத்தால் அது மக்களாட்சிக்கு எதிரானது என்று எழுதுகிறார்கள். உண்மையிலேயே இதனால் என்ன தீமை என்பதைச் சிந்திப்பதில்லை. யார் தலைவர் என்பதுதான் முக்கியமா? மொத்த அதிகாரமும் தலைவரிடம் குவிக்கப்பட்டு விடுகிறதா? வம்சாவழித் தலைவரிடம் அப்படி குவிக்கப்படுகிறதா அல்லது தற்செயலாக தலைவரானவரிடமும் அப்படி குவிக்கப்படுகிறதா? அதிகாரம் குவிக்கப்படுதல் அல்லது அதிகாரப் பரவல் என்பதற்கும் வம்சாவழித் தலைமைக்கும் உள்ள தொடர்பு என்ன? இது குறித்தெல்லாம் விரிவாகப் பரிசீலிக்க வேண்டும் என நுண்ணுர்வாளர்கள் நினைப்பதில்லை.

https://www.thehindubusinessline.com/news/national/1bf059/article26568727.ece/alternates/FREE_615/DMK-AIADMK

இங்கேதான் நான் கூறும் மற்றொரு பிரச்சினையான ஒப்பீட்டியல் நோக்கு முக்கியமானதாகிறது. நுண்ணுணர்வாளர்கள் பிற நாடுகளில் மக்களாட்சி எப்படி நடக்கிறது என்பதைக் குறித்து யோசிப்பதில்லை. இத்தாலி, ஜப்பான், ஃபிரான்ஸ், அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள், பிரேசில், பிரிட்டன் ஆகிய நாடுகளிலெல்லாம் எந்த வகையான அரசியல் கட்சிகள் இருக்கின்றன, அங்கே தேர்தல்கள் எப்படி நடக்கின்றன என்பதைக் குறித்தெல்லாம் தகவல்களை நாடுவதில்லை. உதாரணமாக, நோபல் பரிசுபெற்றவரும் பெரு நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளருமான மரியா வார்கஸ் யோசா (Mario Vargas Llosa) அதிபர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்றார். அவருடைய அனுபவங்களை ‘தண்ணீரில் மீன்’ (Fish in the Water) என்ற தலைப்பில் எழுதியுள்ளார். இதைப் படித்தால்கூட தேர்தல்கள் பிற நாடுகளில் எப்படி நடைபெறுகின்றன என்பதற்கு உதாரணம் கிடைக்கும்.

நான் இதுவரை எழுதிவந்ததை படித்துப் பார்த்தால் எனக்கே ஏதோ புலம்புவதைப் போல, பட்டியல் போட்டு குற்றம்சாட்டுவது போலத் தோன்றுகிறது. என் நோக்கம் அதுவல்ல. ஏன் நுண்ணுணர்வின் தளம் மக்கள் தொகுதி உருவாக்கம் என்ற வரலாற்றுச் செயல்பாட்டிலிருந்து அறிவார்ந்த விலக்கம் கொள்கிறது என்பதே என் கேள்வியாக இருக்கிறது. நான் எல்லோரும் கோட்பாட்டு நூல்களைப் பயில வேண்டும் என்று சொல்லவில்லை. உதாரணமாக, சிறந்த தத்துவவாதிகள், கோட்பாட்டாளர்கள் எழுதிய Democracy in What State? (Columbia University Press, 2012) என்ற சிறிய கட்டுரைகள் அடங்கிய நூல் ஒன்று இருக்கிறது. அகெம்பன், பாதியூ, வெண்டி பிரெளன், ழான்-லுக் நான்ஸி, ஜாக் ரான்ஸியேர் உள்ளிட்ட பலர் எழுதியுள்ள கட்டுரைகளை மொழியாக்கம் செய்து கொடுத்தால் நிச்சயம் சிறுபத்திரிகைகள், இணைய தளங்கள் பிரசுரிக்கும். ஆனால் இதனால் பிரச்சினை தீராது. இந்தக் கட்டுரைகளை எழுதியவர்கள் நல்ல சிந்தனையாளர்கள். ஆனாலும் அவர்களுக்குத் தமிழகம் தெரியாது. இங்கே நூறாண்டுகளாக என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது புரியாது. அதனால் நம் சமூகத்தில் தேர்தல் குறித்து நுண்ணுணர்வின் தளத்திலிருந்தே சிந்திக்கும் ஆற்றல் உருவாக வேண்டும். புனைவெழுத்து மட்டும் போதாது. விரிவான, ஆழமான சிந்தனையும் பிறக்க வேண்டும். அதற்கு அடிப்படையான தேவை மக்கள் மீதான பேரன்பு மட்டுமே. மனிதர்கள் எதைப் பற்றிக்கொண்டு வாழ்வார்கள்? எப்படி தங்கள் வாழ்க்கையைத் தகவமைத்துக்கொள்வார்கள் என்ற கேள்விகள் நம்மைப் பீடிக்க வேண்டும். மக்கள் மீது பரிவும், அன்பும் இருந்தால் நிச்சயம் தேர்தல் என்ற நடைமுறையை வரலாற்று நோக்கிலும், ஒப்பீட்டு நோக்கிலும் அறிந்துகொண்டு அதைக் குறித்து சிந்திக்கத் தோன்றும். இந்த அன்பு உள்ளத்தில் பெருக முதலில் நான் விதிசமைப்பவன் என்பது போன்ற எண்ணங்கள் தோன்றக்கூடாது. இந்தக் கட்டுரை எழுதும் நான் குறியியக்க வலைப்பின்னலின் சிறு கண்ணி. நான் காணும் ஒவ்வொரு மனிதரும் அதுவேதான். இங்கே யாரும் எதையும் சமைப்பதில்லை. எல்லோரையும் குறியியக்கமே சமைக்கிறது.

சமீபத்தில் நிகழ்ந்த சுவாரசியமான நிகழ்ச்சி ஒன்றைக்கூறி இந்தப் பகுதியை நிறைவுசெய்கிறேன். எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்ய அகாடமி பரிசு கிடைத்தது. அவர் அதற்குத் தகுதியானவர் என்பதை யாரும் கேள்வி கேட்கவில்லை. ஆனால் வேறொரு வினோதமான சர்ச்சையை முகநூலில் காண முடிந்தது. இமையம், தான் பெற்ற விருதை “தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, கலைஞர்” ஆகிய நால்வருக்கும் சமர்ப்பிப்பதாகச் சொன்னார். அதற்கு முன்னால் கடந்த இருபதாண்டுகளில் பல்வேறு நேர்காணல்களில் பல விமர்சகர்கள், இலக்கியவாதிகளுக்குத் தன்னுடைய உருவாக்கத்தில் உள்ள பங்கினைக் கூறி நன்றி தெரிவித்துள்ளார். இந்தத் தருணத்தில் அவருக்கு விருது கிடைத்தபோது பள்ளிப் பருவத்திலிருந்தே அவரை ஈர்த்த இந்தத் தலைவர்களுக்குச் சமர்ப்பிப்பதாகக் கூறியுள்ளார். இது நுண்ணுர்வாளர்களைத் தொந்திரவு செய்துள்ளது. சில பேர் கண்டித்துள்ளார்கள், பெருந்தேவி ஆதங்கம் தெரிவித்துள்ளார். அக உலகை, அன்றாட வாழ்வை நுட்பமாக உருவாக்கும் மொழிச்செயல்பாட்டிற்கும், பெரிய மனிதத் தொகுதிகளை உருவாக்கும் மொழிச் செயல்பாட்டிற்குமான இடைவெளி எப்படி மனதில் கொள்ளப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டும் நிகழ்வாகவே நான் இதைப் பார்க்கிறேன். இமையம் தன்னை தி.மு.க கட்சிக்காரன் என்று அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஒரு அருமையான கட்டுரையை இந்து தமிழ்த் திசை வெளியிட்ட ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ தொகுப்பில் எழுதியிருந்தார். அதில் எப்படி கட்சி என்பது அவர் உலகை, அவர் பார்வைகளை, சமூகம், மொழி குறித்த அவர் உணர்வை விரிவாக்கியது என்பதைக் கூறி, அவர் எழுத்தாளராக மாறியதற்கு அதுவே முக்கியமான அடிப்படை என்பதையும் கூறியிருந்தார். அதன் பொருட்டே தன்னைத் திராவிட இயக்க எழுத்தாளர் என்றும் கூறிக்கொள்கிறார். நுண்ணுணர்வுத் தளத்தில் உள்ளவர்கள் அவர் அந்தரங்க உணர்வை மதிக்க வேண்டும் அல்லவா? அவர்கள் ஏன் அவரது நுண்ணுர்வுத் தளம் பொது வாழ்க்கையிலிருந்து அந்நியமானது என்று நினைக்கவேண்டும்?

பகுதி 2: சாமானியர்களின் கோணத்தில் தேர்தல்

தமிழகத் தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆறு கோடியே இருபத்தேழு இலட்சம். சென்ற 2016 தேர்தலில் வாக்களித்தவர்கள் நான்கு கோடியே முப்பத்திரண்டு இலட்சம். இது மிகப்பெரிய எண்ணிக்கை. உதாரணமாக, நுண்ணுணர்வாளர்களின் நூல் ஐயாயிரம் பிரதிகள் விற்றால் அது மாபெரும் நிகழ்வு என்றுதான் கருத வேண்டும். என்னுடைய நூல் ஐநூறு பிரதிகள் விற்றாலே நான் பெரிதும் வியப்படைவேன். அதனால் நான்கு கோடி, ஐந்து கோடி என்பதெல்லாம் மிகப்பெரிய தொகுப்பு என்றுதான் கூறவேண்டும். இந்த வேறுபாட்டை உள்வட்டம், வெளிவட்டம், சிறுபான்மை, பெரும்பான்மை என்றெல்லாம் வர்ணிப்பது பிழையானது என்பதே என் எண்ணம். இது குறியியக்க அடர்த்தி சார்ந்த ஒரு வியக்தி என்றுதான் கூறுவேன். வெகுஜன அளவில் குறியியக்கத்தின் நீர்மை அடர்த்தி குறைந்ததாக இருக்கும். நுண்ணுணர்வுத் தளர்த்தில் அடர்த்தி கூடும். கோட்பாட்டுச் சிந்தனை, தத்துவார்த்த சிந்தனை என்று வரும்போது அடர்த்தி மேலும் கூடும். ஆனால் மொழியில் ஒரு ஊடாட்டம் நிகழ்ந்தபடிதான் இருக்கும். ஆனால் அடர்த்தி மிக்க இடத்திலிருந்து அடர்த்தி குறைந்த இடத்தில் உள்ள குறியியக்கத்தைப் புரிந்துகொள்வது கடினம். கவனிக்கவும், நான் வழமையான கருத்திற்கு மறுதலையாகக் கூறுகிறேன்.

நுண்ணுணர்வாளர்களைவிட வரலாற்று உணர்விற்கு அன்னியமானவர்கள் சாமானியர்கள். அன்றாட வாழ்விலும், உடனடிச் சூழலிலும் அமிழ்ந்தவர்கள். நினைவுகொள்வதைவிட, மறப்பதை அதிகம் வாழ்வின் துணையாகக் கொண்டவர்கள். அவர்களால் பொதுவான மானுடத் தொகுப்புகளின் வரலாறாக இருக்கும் அரசியல் வரலாறைப் பெரிய அளவில் மனம் கொள்ள முடியாது. நெருக்கடி நிலை என்றால் என்ன, அதன் பாதிப்புகள் என்ன, கரசேவை எப்போது துவங்கியது, பாபர் மசூதி இடிப்பு என்றால் என்ன என்பதையெல்லாம் பெரும்பாலானோரால் துல்லியமாக நினைவுகொள்ள முடியாது. அதே போல எம்.ஜி.ஆர் ஆட்சியில் நிகழ்ந்த சம்பவங்கள் என்ன, பால் கமிஷன் அறிக்கை என்றால் என்ன, கலைஞரின் நீதி கேட்டு நெடும்பயணம் எப்போது நடந்தது என்றெல்லாம் கேட்டால் சரியாகப் பதில் கூறக்கூடியவர்கள் வெகு சிலரே இருப்பார்கள். கொள்கை முடிவுகள், ஆட்சியாளர்களின் சாதனைகள் இதையெல்லாம் எப்படி தொகுத்துப் பார்க்க வேண்டும், சீர்தூக்கி அலச வேண்டும் என்பதெல்லாம் அவர்களுக்குச் சாத்தியமில்லை. அதனால் அவர்கள் தேர்தலில் வாக்களிப்பதை அவர்கள் அன்றாட வாழ்வு சார்ந்த பிரச்சினைகளிலிருந்தே தீர்மானிக்கிறார்கள்.

https://i1.wp.com/images.newindianexpress.com/uploads/user/imagelibrary/2019/12/28/original/TNLBP1_.jpg?resize=890%2C546&ssl=1

ஆனால் மக்களுக்கு அவர்களுடைய வாக்கின் மதிப்பு புரிந்துவிட்டது. நாம் அளிக்கும் வாக்குதான் ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கிறது என்றும் புரிகிறது. அதனால் பொதுவாக தங்களால் ஆட்சியை மாற்ற முடியும் என்பதைக் காட்டுவதற்கு விரும்புகிறார்கள். அதற்குப் போதுமான காரணங்கள் எப்போதும் இருக்கின்றன. ஆனால், தான் வாக்களிக்கும்படியே அனைவரும் வாக்களிப்பார்களா என்று அவர்களுக்குத் தெரியாது. அதனால் பொதுவாக எப்படி ஒரு பேச்சு உருவாகிறது என்பதைக் கவனிக்கிறார்கள். சமீபகாலமாக ஊடகங்கள், குறிப்பாக செல்பேசி சார்ந்த தகவல் பரிமாற்றங்கள் முக்கிய இடம்பிடிக்கத் துவங்கியுள்ளன.

ஆனால் இது மட்டுமே ஒரே உளவியல் அல்ல. கணிசமானோர் தாங்கள் தொடர்ந்து ஒரே கட்சிக்கு வாக்களிப்பதை ஒரு அடையாளமாகக் கொள்ள விரும்புகிறார்கள். ‘காமராஜர் எங்கள் வீட்டில் தாத்தா கொடுத்த நீர்மோரை வாங்கிக் குடித்துள்ளார், நாங்கள் காங்கிரஸிற்குத்தான் எப்போதும் வாக்களிப்போம்’ என்று ஒரு கிராமத்து நபர் சொன்னால் வியக்கவேண்டிய தேவை இல்லை அல்லது ‘எங்களது நிலத்திற்கு எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான் பட்டா கொடுத்தார்கள். அதனால் எப்போதும் இரட்டை இலைக்குத்தான் வாக்களிப்போம்’ என்று ஒருவர் சொல்லலாம். இப்படிப்பட்ட நிலைத்தேர்வுகள் கூறப்படும். உண்மையில் வாக்குகளும்கூட அப்படி அளிக்கப்படலாம்.

இதுபோன்ற மாறும் வாக்குகள், நிலைத்த வாக்குகள் ஆகியவற்றையெல்லாம்விட முக்கியமான ஒரு பரிமாணம் இருக்கிறது. ஒருவர் வாக்களிக்கும் தருணம்தான் அது. அதில் தனி நபராக தடுப்புக்குப் பின்னால் சென்று குறிப்பிட்ட பெயருக்கு, சின்னத்திற்கு அருகில் உள்ள பொத்தானை அழுத்துகிறார். அந்த நேரத்தில் அவர் தன்னுடைய முழுமையான சுதந்திரத்தை உணர்கிறார். சில தருணங்களில் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு அந்த வாக்குச்சாவடியில் ஒரு வாக்கும் விழவில்லை என்ற தகவல் தெரிந்தால் இவரது தேர்வும் அது அல்ல என்று அம்பலமாகலாம். ஆனாலும் பெரும்பாலும் ஒருவரது வாக்கு இரகசியமாகவே விளங்குகிறது. அதனால் அவர் வாக்களிக்கும் தருணத்தை தன்னுடைய இறையாண்மைத் தருணமாக (sovereign moment) உணர்கிறார் என்றால் மிகையல்ல. நகர்ப்புறத்திலுள்ள படித்தவர்கள், உயர்வர்க்கத்தினரைவிட கிராமப்புறத்திலுள்ள எளிய மனிதர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கத் திரள்வது அதைத்தான் குறிக்கிறது. இப்படி தங்கள் வாக்கின் முக்கியத்துவத்தை உணரும்போது அதற்காக கட்சிக்காரர்கள் தங்களுக்குப் பணம் கொடுப்பதை அவர்கள் தவறாக உணர்வதில்லை. ஆனால் பணம் கொடுத்தவர்களுக்குத்தான் அல்லது அதிக பணம் கொடுத்தவர்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்ற எளிய நன்றிக்கடன் உணர்ச்சியிலும் மக்கள் வாழ்வதாகத் தெரியவில்லை. இதில் நடக்கும் பேரத்தை மக்கள் புரிந்துகொள்வது வேறு வகையிலானது. அவர்கள் தங்கள் அன்றாட வாழ்வின் தளத்திலிருந்து, வரலாறை உருவாக்கிக்கொள்பவர்கள் தங்களுக்குக் கடன்பட்டிருப்பதாகவே நினைக்கிறார்கள்.

https://i2.wp.com/akm-img-a-in.tosshub.com/sites/btmt/images/stories/voting-660_111816115211.jpg?resize=852%2C581&ssl=1

வாக்களிப்பதைத் தங்கள் இறையாண்மைத் தருணமாக நினைப்பவர்கள் அதைப் பல்வேறு விதமாக பயன்படுத்தலாம். தன்னை மிகவும் துன்புறுத்தும் கணவன் ஒரு கட்சியை ஆதரிப்பதால் மனைவி அதன் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கலாம். ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்பவர்கள் அவர்கள் முதலாளி ஒரு கட்சியை ஆதரிப்பதால், அவர் மீதுள்ள கோபத்தில் அதற்கு எதிரான கட்சிக்கு வாக்களித்துவிட்டு அவரிடம் பொய் சொல்லி ஊக்கத்தொகையும் பெறலாம். இப்படியாக வாக்களிக்கும் தருணம் என்பது சாமானிய மனிதருக்கு தங்கள் இறையாண்மையை உணரும் அந்தரங்கத் தருணமாகிறது. இதன் காரணமாகவே பல சமயங்களில் அது சமூகத் தொகுப்பு உருவாக்கும் இறையாண்மையுடன் இணைந்திருக்க வேண்டும் என்றுகூட நினைக்கலாம். அதனால்தான் வெற்றிபெறும் கட்சிக்குப் போடாமல் தோல்வியடைந்த கட்சிக்கு வாக்களித்தவர்களை வாக்கை வீணாக்கிவிட்டாயே என்று மற்றவர்கள் கூறுவார்கள். அதாவது ஆட்சியதிகாரத்தைத் தீர்மானித்த வாக்காக தங்கள் வாக்கு இருக்கும்போது அது தனிப்பட்ட இறையாண்மைத் தருணத்தை தொகுப்பின் இறையாண்மைத் தருணத்துடன் இணைக்கிறது.

இப்படி பல்வேறு உளவியல், இருத்தலியல் காரணிகளால் வாக்களித்து தங்கள் இறையாண்மைத் தருணத்தை மக்கள் அனுபவித்தாலும், தனிப்பட்ட முறையில் அவர்களால் பொதுவில் உருவாகும் தொகுப்பின் வரலாற்று விசையைப் பின்தொடர முடியாது. ஆனாலும், கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் மக்கள் தங்கள் இறையாண்மைத் தருணத்தின் ஆற்றலை அன்றாட வாழ்விலும் பயன்படுத்துவதை என்னுடைய கள ஆய்வுகளில் பார்க்க முடிந்தது.

பகுதி 3: கட்சிக்காரரின் கோணத்தில் தேர்தல்

மிகவும் குறைவாகப் புரிந்துகொள்ளப்பட்ட மக்களாட்சியின் அச்சாணி கட்சிக்காரர்தான். ஒன்று, தலைவர்களால் ஏமாற்றப்படும் அப்பாவித் தொண்டர்களாக இவர்களைப் புரிந்துகொள்கிறார்கள் அல்லது ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து தவறாகப் பணம் ஈட்டுபவர்களாகப் பார்க்கிறார்கள். பா.ராகவன், கட்சிக்காரனாக வளரும் சைதாப்பேட்டை இளைஞனைக் குறித்த தொடர்கதை ஒன்றை கல்கியில் எழுதினார். நான் படித்த சில அத்தியாயங்கள் எனக்குப் பிடித்திருந்தன. ஆனால் அந்த நாவலை முழுவதுமாக படிக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. இமையம் சமீபத்தில் எழுதிய “வாழ்க! வாழ்க!” முக்கியமான அரசியல் தருணத்தைச் சிறப்பாகப் படம் பிடித்திருந்தாலும் அதில் இடம்பெறுகின்ற
கட்சிக்காரரும் ஒட்டுண்ணியாகவே இருக்கிறார்.

கோட்பாட்டு அளவில் சொன்னால் மானுடத் தொகுப்பின் மொத்தத்துவ வடிவமாகிய அரசிற்கும், தனி நபர்களான மக்களுக்கும் இடையில் பாலமாக, இணைப்புக் கண்ணியாக விளங்குவது கட்சிக்காரர்தான். ரேஷன் கார்டு வாங்கித்தருவது, ரேஷன் கடையில் பொருள்கள் கிடைக்க வகைசெய்வது, முதியோர் உதவித்தொகை வாங்கித்தருவது என்பது போன்ற எண்ணற்ற சேவைகளைச் சாத்தியமாக்குவது கட்சிக்காரர்கள்தான். அது மட்டுமல்ல, எளிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் காவல்துறை பெரும் ஆதிக்கம் செலுத்தவல்லது. அதனிடமிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பும் கட்சிக்காரர்களுக்கு உண்டு.

https://i2.wp.com/images.newindianexpress.com/uploads/user/imagelibrary/2021/3/6/w900X450/AIADMK.jpg?resize=887%2C444&ssl=1

இதற்கெல்லாம் அடுத்த நிலையில் ஒரு மிகப்பெரிய பிரச்சினை இருக்கிறது. நம் மக்கள் தொகையின் பரிமாணத்திற்குத் தேவையான அளவு நீதித்துறையை விரிவாக்க முடியாது. நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்த்துக்கொள்வது என்று வரும்போது பிரச்சினைகளுக்கு ஏற்றபடி பலவித அமைப்புகள் தேவைப்படும். சும்மா பேசித் தீர்ப்பது என்பது ஒன்று. பேசியதற்குத் தக்கபடி நடக்காவிட்டால் தண்டிக்கும் வலிமையும் தேவைப்படும். இங்கேதான் பஞ்சாயத்து- கட்டைப் பஞ்சாயத்து ஆகிறது. முதலீட்டிய வளர்ச்சி அதிகரிக்கும்போது முரண்களும் அதிகரிக்கின்றன. நகரத்திற்கு வெளியே கேட்பாரற்றுக் கிடந்த நிலங்களெல்லாம் திடீரென பெரும் சொத்துகளாக மாறுகின்றன. இந்தச் சூழ்நிலையில் ஏற்படும் பிரச்சினைகளையெல்லாம் சட்டத்தால் மட்டும் தீர்க்க முடியாது. அதே சமயம் சட்ட அமைப்பு இல்லாமலும் தீர்வுக்கான வழிமுறைகளை உருவாக்க முடியாது. அதனால் வக்கீல்கள், தாதாக்கள், கட்சிக்காரர்கள் எனப் பலரும் சேர்ந்து பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டி வரலாம். நான் அறிந்த பல சம்பவங்களை யோசிக்கும்போது சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதெல்லாம் நீதியும் அல்ல, சட்டத்திற்கு வெளியே நடப்பதெல்லாம் அநீதியும் அல்ல என்றுதான் தோன்றுகிறது.

சமூகத்தின் பல்வேறு தளங்களில், களங்களில் கட்சிக்காரர்களின் வலைப்பின்னல் செயல்படுகிறது. சமூக இயக்கத்தின் இன்றியமையாத அங்கம் இது. அரசியல் கோட்பாட்டில் சிவில் சமூகம், அரசியல் சமூகம் என இரண்டு இருக்கிறது. எளிமையாகச் சொன்னால், முழுவதும் சட்டத்திற்கு உட்பட்டு வாழும் சமூகம் சிவில் சமூகம். சட்டத்தின் விளிம்பில் வாழும் சமூகமும் பட்டா இல்லாத நிலத்தில் வாழ்வதும் அரசியல் சமூகம். அவர்களை அப்புறப்படுத்த நினைப்பவர்களும், அவர்களுக்குப் பட்டா வாங்கிக்கொடுக்க முனைபவர்களும் மோதுவது அரசியல் சமூகம். இந்தியாவில் அரசியல் சமூகத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து எழுதப்பட்ட முக்கியமான கோட்பாட்டு நூல் ஒன்றைச் சொல்லவேண்டுமென்றால் என் ஆசிரியர்களில் ஒருவரான பார்த்தா சாட்டர்ஜியின் ‘Politics of the Governed: Reflections on Popular Politics in most of the world’ என்ற நூலைச் சொல்லலாம்.

இந்த ‘பொலிட்டிகல் சொசைட்டி’யின் முக்கியமான பரிமாணம் நண்பர்கள், விரோதிகள் என்ற பிரிவு. அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை என்று சொல்வது பிரபலமான வாசகம். அதன் முக்கியமான உள்ளர்த்தம் எப்போதுமே யாரோ நண்பன், யாரோ எதிரி என்பதுதான். இந்த முரணின் பரிமாணங்களும் பலதரப்பட்டதாக இருக்கும். பல திரைப்படங்களில் காண்பிப்பது போல வன்முறையாகவும் இருக்கும்- பெரும்பாலும் மென் வன்முறையாகவும் இருக்கும். இந்த யுத்தங்களின் விதிமுறைகள் மாறிக்கொண்டே இருப்பவை.

https://i0.wp.com/img.etimg.com/thumb/width-1200,height-900,imgsize-897883,resizemode-1,msid-69478669/dmk-triumphs-aiadmk-retains-power-in-tamil-nadu.jpg?resize=894%2C671&ssl=1

தேர்தல் என்பது இந்தக் கட்சிக்காரர்களின், அரசியல் சமூகத்தின் உலகில் மிக முக்கியமான நிகழ்வு. அவர்கள் தொடர்ந்து சமூகத்தில் விதைத்த உறவுகளை அறுவடை செய்யவேண்டிய தருணம். தேர்தலின் வெற்றி தோல்விகள் அவர்களுக்கிடையிலான சமன்பாட்டை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மாற்றிவிடத் தக்கவை. எனவே அவர்கள் தங்கள் முழு வலிமையையும் காட்டி தேர்தல் களத்தில் போராடி வெல்ல வேண்டும். அரசியல் கட்சியின் தலைவர்கள் என்பவர்கள் சிவில் சமூகத்திற்கும், அரசியல் சமூகத்திற்கும் பொதுவாக இருப்பவர்கள். அவர்கள் மூலமாகவே இவர்கள் சட்டத்துடனும், அரசு இயந்திரத்துடனும் பேரம் நிகழ்த்த முடியும். எனவே தேர்தல்களில் அவர்களை வெற்றி பெறச்செய்வது முக்கியம்.

ஒரு வகையில் பார்த்தால் நம் காலத்தின் சாமுராய்கள் இவர்கள்தான். இவர்களின் சிறப்பம்சங்கள் இன்னமும் கலை இலக்கியத்தில் சரியாகப் பதிவாகவில்லை என்றே நினைக்கிறேன். குறைந்தபட்சம் எதிர்மறையாகப் பதிவான அளவு நேர்மறையாகப் பதிவாகவில்லை. இவர்கள் அப்பாவித் தொண்டர்களான பலிகடாக்களும் இல்லை, ‘பொருளை’ வைத்துக்கொண்டு அடுத்து யாரைப் ‘போடனும்’ என்று கேட்டுக்கொண்டு இருப்பவர்களும் இல்லை. அந்த இரண்டு நிலைகளுக்கும் இடையில் பல்வேறு வண்ணங்கள் உள்ளன. அவர்கள் சமூகத்தின் அங்கம். எல்லா மனிதர்களையும் போல ஆசாபாசங்களும் விருப்பு வெறுப்புகளும் கொண்டவர்கள்.  மக்களாட்சி இயந்திரத்தின் லூப்ரிகேஷன் ஆயிலான இவர்கள் இல்லையென்றால் இந்த இயந்திரம் நின்றுவிடும் எனலாம். தேர்தல் இவர்களின் போர்க்களம். இவர்கள் இருப்பின் ஆதாரமான தருணம் என்றால் மிகையாகாது.

தேர்தலைக் குறித்துச் சிந்திப்பது எப்படி?

அருவமான பெருந்தொகுப்பு ஒன்று அரசியல் நிர்ணயச் சட்டமாக, அரசு இயந்திரமாகத் தன்னை நிறுவிக்கொள்கிறது. அந்தப் பெருந்தொகுப்பின் அலகுகளான குடி நபர்களோ எண்ணற்ற நிலைகளில் தனி நபர்களாக வாழ்கிறார்கள். அவர்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அவர்கள் மூலமாக தங்களைத் தாங்களே ஆண்டுகொள்கிறார்கள் என்பது கற்பிதம். அப்படியொரு பிரதிநிதித்துவம் சாத்தியமில்லை. ஆனால் அது முற்றிலும் சாராம்சமற்றதும் அல்ல. பிரதிநிதிகள் இல்லாமல் மக்கள் அனைவரும் சேர்ந்து கலந்து பேசி தங்களை ஆண்டுகொள்ள முடியாது. அதனால் இந்தப் பிரதிநிதித்துவத்தை ஒரு “நிகழ்கலை பிரதிநிதித்துவம்” எனலாம். மக்கள் பிரதிநிதி ஒருவகை பிரதிநிதித்துவத்தை நிகழ்த்துகிறார். நிகழ்கலை கோட்பாட்டில் நிகழ்பவை நடிப்பா, நடப்பா என்று பிரிப்பது கடினம். நடப்பில் நடிப்பும், நடிப்பில் நடப்பும் கலந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்துதான் நிகழ்கலை ஆய்வு (performance studies) என்ற மிக முக்கியமான சமகால அறிவுத்துறை பிறக்கிறது.

தமிழ் பேசும்படத்தின் துவக்க ஆண்டுகளில் ராமாயணம் திரைப்படத்தை எடுத்தபோது சீதையாக தொழில்முறை நடிகைகள் நடித்தால் அது களையாக இல்லை என்று ஒரு பார்ப்பன குடும்பப் பெண்ணை நடிக்கச் சொன்னார்கள். மேக் அப் முடிந்து செட்டிற்குள் வந்த அந்தப் பெண்ணை ராமனாக நடித்தவர் அருகில் உட்காரச் சொன்னபோது அவர் ‘அதெல்லாம் முடியாது’ என்று சொல்லிவிட்டார். ‘சீதையின் வசனத்தை வேண்டுமானால் பேசுகிறேன். அந்நிய ஆடவரின் அருகில் உட்கார முடியாது’ எனச் சொல்லியிருக்கிறார். அவரைச் சமாதானம் செய்து நல்ல இடைவெளியுடன் அமரச்செய்து அந்தக் காட்சியை எடுத்ததாக சாண்டில்யன் தன்னுடைய நினைவுக்குறிப்புகளில் எழுதியுள்ளார். தமிழ் சினிமாவின் கதை நூலில் அறந்தை நாராயணனும் அதைக் குறிப்பிட்டுள்ளார். அப்படி இரண்டு நடிகர்கள் நெருங்கி அமர்ந்து நடித்தால் அங்கு நெருங்குவது கதாபாத்திரங்களின் உடல்களா அல்லது நடிகர்களின் உடல்களா? இப்போதுகூட கதைக்குத் தேவைப்பட்டால் முத்தக் காட்சியில் நடிப்பேன், நெருக்கமான காட்சிகளில் நடிப்பேன் என நடிகர்கள் சொல்வதைக் கேட்கலாம். கதைக்குத் தேவைப்பட்டு செய்தால் அது அவர்கள் உடல் இல்லையா? நடிக்கும்போது தாங்கள் தங்கள் வசமில்லை, நடிப்பு என்பது நடப்பு அல்ல என்றால் ஆமாம் அந்த உடலும் அவர்களது இல்லை. மாறாக, நடிப்பது என்பதும் நடப்புதான் என்றால் நிச்சயம் அவர்கள் உடல்கள்தான்.

media-handler.php_.png?resize=859%2C644&

சமகால அரசியல் சிந்தனையின் மூலப் பிடகங்களில் ஒன்று ரூசோ எழுதிய Social Contract. சென்ற முறை நான் தமிழினியில் எழுதிய ‘இரைச்சலாக மாறும் சிந்தனை’ கட்டுரையில் ரூஸோவின் எழுத்தில் செயல்படும் பிரசன்னத்தின் மீமெய்யியல் (metaphysics of presence) குறித்து தெரிதா நிர்நிர்மாணம் (deconstruct) செய்து விவாதிப்பதைக் குறிப்பிட்டிருந்தேன். அதன் முக்கியப் புள்ளி ரூஸோவிற்குள்ள பிரதிநிதித்துவம் மேலான அவநம்பிக்கைதான். பிரதிநிதித்துவம் அற்ற நேரடி சுயபிரசன்னத்தை அவர் விழைவதையே தெரிதா விமர்சிக்கிறார். பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்துவந்த தமிழ் மொழியை நான் அர்த்த இராத்திரியில் எழுதும் இந்தத் தருணத்தில் என்னுடன் எத்தனை மூதாதையரின் ஆவிகள் உள்ளன! ரூஸோவின் ஆவியும், தெரிதாவின் ஆவியும் உள்ளன. அவற்றின் இன்மை இங்கே பிரசன்னமாயிருக்கிறது. இன்மை இல்லாத பிரசன்னம் இல்லை. அதுதான் தெரிதா கூறும் absent-present.

மக்களின் பிரதிநிதித்துவம், மக்களாட்சி எல்லாமே இன்மை-இருப்புகள்தான். ஆட்சியதிகாரத்தில் தங்களுடைய இன்மையை வரைவதன் மூலம் தங்களை நோக்கி ஆட்சியை மக்கள் திருப்புகிறார்கள். அவர்கள் வாக்களிக்கும் தருணம்தான் அந்த இன்மையை வரையும் தருணம். அதனால் ஆட்சி அவர்களுக்கு கடமைப்பட்டதாகிறது. அடுத்த ஐந்தாண்டுகள் கழித்து ஆட்சிசெய்ய நினைக்கும் கட்சிக்காரர்கள் மீண்டும் அவர்களிடம் வரத்தான் வேண்டும். இந்தப் பிரம்மாண்டமான நாடகத்தில் ஆயிரக்கணக்கான காட்சிகள் அரங்கேறும். அவற்றின் நிகழ்கலை பரிமாணம் புரிந்து அவற்றை இரசிக்க, கொண்டாட நுண்ணுணர்வாளர்கள் முன்வர வேண்டும். நடப்பு என்பது உண்மை, நடிப்பு என்பது போலி என்பது சிறுபிள்ளைத்தனம். நடிப்பில்லாத நடப்புமில்லை, நடப்பில்லாத நடிப்புமில்லை. “All the world’s a stage, and all the men and women merely players” என்ற ஷேக்ஸ்பியர் வரிகளை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். நாடகமாக இல்லாவிட்டால் மானுட வாழ்க்கைக்கு மகத்துவமில்லை. புல், பூண்டு, மரம், மட்டை போலத்தான். மானுட நாடகங்களில் மகத்தானது மக்களாட்சியும், தேர்தல்களும். ஒவ்வொரு தேர்தலிலும் மொத்தத்துவப் பேரதிகாரத்தின் கண்களைச் சாமானிய மனிதன் உற்று நோக்குகிறான். பேரதிகாரம் கண்ணைத் தாழ்த்திக்கொள்கிறது. சரியென்று தலையசைக்கிறது.

 

https://tamizhini.in/2021/03/28/தேர்தலைக்-குறித்துச்-சிந/

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

அதனால் என் தேர்வினைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு கட்டுரைக்குள் சென்றுவிடுகிறேன். இந்தியத் தேசம் பார்ப்பனீய இந்து அடையாளத்தின் பேரில் கட்டமைக்கப்படுவதை நான் எதிர்க்கிறேன். இந்திய ஒன்றியம் என்பது வலுவான மாகாண அரசுகளின் கூட்டாட்சியாக இராணுவம், வெளியுறவு மற்றும் செலாவணி ஆகிய மூன்று மட்டுமே ஒன்றிய அரசின் பொறுப்பில் இருப்பதாக வடிவம்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் இந்தக் கருத்துகளுக்கு எதிரான பாஜக-வை எதிர்ப்பதும், இந்தக் கருத்துகளை முன்னெடுக்கும் தி.மு.க-வை ஆதரிப்பதும் என்னுடைய இன்றியமையாத நிலைப்பாடு.

ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதே?
பாஜகவை எதிர்க்கிறார்.ஆனால் பாஜகவை திமுக எதிர்ப்பதால் திமுகவை ஆதரிக்கிறேன் என்கிறார்.
பாஜகவை முதலில் தமிழகத்தில் காலூன்ற விட்டதே திமுக தானே.

இப்போதும் திமுக இயக்குனர் இதுவரை பாஜகவை இயக்கிய இயக்குனர்.
அதுவும் 300 கோடி கொடுத்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதே?
பாஜகவை எதிர்க்கிறார்.ஆனால் பாஜகவை திமுக எதிர்ப்பதால் திமுகவை ஆதரிக்கிறேன் என்கிறார்.

அவர் கட்சிக்காக ஆதரிப்பதும் எதிர்ப்பதும் என்று சொல்லவில்லையே. கொள்கைகளின் அடிப்படையில்தான் ஆதரவும் எதிர்ப்பும் என்று சொல்கின்றாரே.

பி.கு. நான் 45 நிமிடம் மெனக்கெட்டு படித்ததை நீங்கள் பத்தே நிமிடத்தில் படித்துள்ளீர்கள். இந்த வேகத்தில் என்னால் படிக்கமுடியாது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.