Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமான தலைவரா அம்பேத்கர்? – கொளத்தூர் மணி – பகுதி – 1

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமான தலைவரா அம்பேத்கர்? – கொளத்தூர் மணி – பகுதி – 1

 
image-5-696x392.png
 72 Views

கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி  புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாள். பிறந்தநாள் நினைவாக எமது மின்னிதழில் வெளியாகிய கட்டுரையின் முதல் பகுதி

புரட்சியாளர் அம்பேத்கரை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? நாம் ஏன் அவரை மற்றவர்களிடம் இருந்து பிரித்து – வேறுபடுத்தி தனித்துவமாக பார்க்கிறோம் என்பதில்தான் அம்பேத்கருக்கு பிறாந்த நாள் எடுப்பதன் பலனாக இருக்கும்.

புரட்சியாளார் அம்பேத்கர் பல சிறப்புகளை கொண்டவர். அவர் ஓர் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தாலும், வெளிநாடுகளுக்கு சென்று படிக்கின்ற வாய்ப்பினை பெற்றார். அங்குபோய் ஆய்வு பட்டங்களையும், பல உயர் பட்டங்களையும் பெற்றார். தத்துவ துறையில், பொருளியல் துறையில், சட்டத்துறையில் பட்டங்களை பெற்று திரும்பி வந்தார் என்றால் பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதற்காக அல்ல.

இந்த இந்திய சமுதாதாயத்தை திருத்த பலர் வந்தார்கள். இந்த சமுதாயத்தில் இருக்கிற கேடுகளை நீக்க வேண்டும் என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால் இந்த சமுதாயத்தை மிகச்சரியாக புரிந்து கொண்டவர்கள் சிலர் மட்டுமே.

ஜோதிபா புலே அவர்கள் தொடக்கி வைத்த புரட்சியை, சரியான பார்வையை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் போன்றவர்கள்தான் எடுத்துச் சென்றார்கள். மற்றவர்கள் எல்லாம் இருந்ததை மெல்ல சீர்திருத்தி, கொஞ்சம் மாற்றி, அதற்கு புதிய வண்ணத்தை பூசிவிட்டு செல்வதாக இருந்த காலத்தில், அடிப்படையையே மாற்றியாக வேண்டும் என்று எண்ணிய தலைவர், அதற்காக தனது முழு அறிவை, உழைப்பை எல்லாவற்றையும் பயன்படுத்திய தலைவர், தத்துவத் துறையில் ஆய்வு செய்யப் போனவர்,

ஆய்வு மாணவராக இருந்த காலத்தில் ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதுகிறார். இந்திய சாதியினுடைய தோற்றம், அதன் செயல்பாடு ஆகியவற்றை ஆய்வுசெய்து மாந்தவியல் துறையில் அந்த அறிக்கையை தருகிறார். இந்தியாவில் ஜாதி என்பது, அவருடைய இருபத்தி ஐந்தாம் வயதில், அவர் ஆற்றிய ஆய்வுரை. இன்றைக்கு வரைக்கும் எல்லா விதத்திலும் அதை நாம் புரட்டிப் பார்க்கிற பொழுது, இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஆற்றப்பட்ட உரை. இந்த சமுதாயத்தின் கேடுகளாக, இந்த சமுதாயத்தின் நோயை தீர்ப்பதற்கான வழியாக அவர் சொன்னதைத்தான் நாம் மீள் ஆய்வு செய்து பார்க்கவேண்டும்.

அவர் மகத் மாநாட்டில் பேசினார், பல இடங்களில் பல செய்திகளை பதிவு செய்தார். என்றாலும், லாகூர் மாநாட்டில் அவர் ஆற்ற இருந்த உரை [ஆற்றிய உரை அல்ல] ஜாதி ஒழிப்பு சங்கத்தார் என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் இவரை தலைமை தாங்கி, தலைமை உரை ஆற்ற அழைக்கிறார்கள். இவர் உரையை எழுதி அனுப்புகிறார். அதை படித்துப் பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்து விடுகிறார்கள்.

இந்த ஜாதி ஒழிப்புக்காக அவர் சொல்லுகிற வழிமுறைகளைப் பார்த்து அதிர்ச்சி அடைய காரணம்… “இந்து சாஸ்திரங்களின் அதிகாரங்கள் தகர்க்கப்பட வேண்டும், அகமண முறை ஒழிக்கப்பட வேண்டும், இந்து மதம் தகர்ந்தாக வேண்டும், அர்ச்சகர் ஆகும் உரிமையை, உரிய பட்டயம் பெற்றால், அனைத்து ஜாதியினருக்கும் அளிக்க வேண்டும்” என்பதையெல்லாம் வழிமுறையாக சொல்கிறார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் கொஞ்சம் மாற்றிக் கொள்ள சொல்லி கேட்கிறார்கள். “அதில் ஒரு கால் புள்ளியை மாற்றவும் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன், வேண்டாம் என்றால் திருப்பி அனுப்பிவிடுங்கள்” என்று அம்பேத்கர் கேட்கிறார். மாநாட்டையே ஒத்திவைத்து விடுகிறார்கள்.

நாம் புரட்சியாளர் அம்பேத்கரை, அவரின் கொள்கைகளை புரிந்துகொள்ள வேண்டுமானால், ஓவ்வொருவரும் படிக்க வேண்டியது அந்த நூல். அவர் ஆற்ற இருந்த உரையை நூலாக வெளியிட்டார். நூல் வெளி வந்த இரண்டாம் மாதத்தில், அம்பேத்கரின் அனுமதியோடு தமிழில் பெரியார் வெளியிட்டார். அந்த நூல் தாங்கியிருந்த சிந்தனையைதான் பெரியாரும் கொண்டிருந்தார்.

அரசியல் நிலைப்பாடுகளில் இருவருக்கும் சிறுசிறு மாறங்கள் இருந்திருக்கலாம். அம்பேத்கர் ஒன்றுபட்ட இந்தியாவை விரும்பினார், பெரியார் தனித்தமிழ்நாடு பேசினார். இந்தி ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார், பெரியார் இந்தி கூடாது என்று சொன்னார். அரசியல் நிலைகளில் அவரவர்களுக்கு இருந்த கருத்தின் அடிப்பையில் சொன்னார்கள்.

தாழ்த்தப்பட்டோரின் குடியிருப்பை பிற ஜாதியினர் வாழும் பகுதிகளில் நிறுவவேண்டும் என்பது பெரியாரின் கருத்தாக இருந்தது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிக்கிணறு வெட்ட காங்கிரஸ் நிதி அனுப்பியது, காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெரியார் வந்த நாற்பத்தி எட்டாயிரம் ரூபாயை திருப்பி அனுப்பினார். பொதுக் கிணற்றில் நீர் எடுக்க போராட வேண்டுமே தவிர தனிக்கிணறு கூடாது என்பது பெரியர் கருத்து.

இன்னொரு பக்கம் அம்பேத்கர் தனிக்குடியிருப்பு வேண்டும் என போராட்டம் நடத்தினார். இப்படி பார்த்தால் அவர்களின் கோரிக்கைகளில் வேறுபாடுகள் போல தெரியும் ஆனால் அடி நீரோட்டமாய் இருவர் கருத்தும் ஜாதி ஒழிப்பே சமூக விடுதலை என்பதாகதான் இருந்தது.

பலபேர் படிக்கிறார்கள், பட்டம் பெறுகிறார்கள் தனிமனித வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் ஆனால் புரட்சியாளர் அம்பேத்கர் தான் பெற்ற அறிவை, கல்வியை, பதவியை அனைத்தையும் சமூக மேம்பாட்டிற்காக, சமூக மாற்றத்திற்காக பயன்படுத்திய தலைவர்.

1935 இல் மராட்டியத்தில், பம்பாய் மாகாணத்தில் சட்டமன்றத்திற்கு உறுப்பினராக நியமிக்கிறார்கள். நியமனம் பெற்று அவர் ஆற்றிய முதல் உரையிலேயே, அங்கிருந்த நில உடைமையாளர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து பேசுகிறார். ஆங்கில அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்த துரோகங்கள் பற்றி பேசுகிறார். அவர் ஒரு நியமன உறுப்பினாராக இருந்தும், நியமித்தவர்களையே விமர்சித்து பேசுகிறார். அவர் பதவி முக்கியம் எனக் கருதவில்லை.

அவர் சமஸ்கிருதம் படித்தார், வேதங்களை படித்தார், புராணங்களை படித்தார், சாஸ்திரங்களை படித்தார் எதற்கு பயன்படுத்தினார்? இந்திய சமுதயத்தில் ஜாதிய பிடியில் இருந்து மக்களை எப்படி காப்பாற்றுவது என்று அறிவதற்கு படித்தார். மனுதர்மத்தைப் பற்றி அவர் செய்த ஆய்வு, யாருடனும் ஒப்பிட முடியாத அளவிற்குரிய ஆய்வாகும்.

மனுதர்ம சாஸ்திரத்திற்கு முன்னால் இருந்த காலத்தில் அனைவருக்கும் இருந்த உரிமைகளை எடுத்துக் காட்டினார். அவர் ஓவ்வொரு நாட்டின் சரித்திரங்களை படித்து, அடிமைத் தனத்தைவிட கொடுமையானது தீண்டாமைதான் என்பதை பல அடிமைதனத்தோடு ஒப்பிட்டு எழுதினார்.

அம்பேத்கர் அவர்கள், வைஸ்ராய் கவுன்சில் உறுப்பினாராக [இன்றைய மத்திய அமைச்சருக்கு இணையான பதவி] தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவி ஏற்பதற்கு முன்னால் நாக்பூரில் ஒரு மாநாட்டை கூட்டினார். ‘கற்பி’, ‘போராடு’, ‘ஒன்றுசேர்’ என்ற வாசகங்களை பேசியது அந்த மாநாட்டில்தான். பெண்கள் உரிமைக்காக தனியாக ஒரு மாநாடு, சமத்துவ தொண்டர் படை என்ற ஒரு மாநாடு.

காந்தியோடு பலவாறு முரண்பட்டிருந்த அம்பேத்கர், இம்சைக்கு எதிரான சொல்தான் அகிம்சை என்று விளக்கம் சொன்னார். உன்னை ஒருவன் அடித்தால் இம்சை, அவனை நீ திருப்பி அடித்தால் அது அகிம்சை. ஜாதியவாதிகளால் தாக்கப்பட்டால் திருப்பித் தாக்கலாம் என்பதை தனது தொண்டர்களுக்கு சொன்னார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளி என விளம்பரம் செய்து அம்பேத்கரை தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராக சுருக்கி விட்டார்கள். தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளி என்றோ அரசியல் சட்டத்தை எழுதியவர் என்றோ சொல்வது அவருக்கு பெருமை அல்ல.

அவர் சொன்னார்…. “இந்து சமுதாயத்திற்கு வேதங்கள் தேவைப்பட்டது. தாழ்த்தப்பட்ட வியாசனை வைத்துகொண்டார்கள். அவர்களுக்கு இதிகாசம்  தேவைப்பட்டது. தாழ்த்தப்பட்ட வால்மீகியை வைத்து எழுதிக் கொண்டார்கள். இவர்களுக்கு அரசியல் சட்டம் தேவைப்பட்டது. என்னைப் பயன்படுத்திக் கொண்டார்கள்”. அப்படிதான் சொன்னார்.

இவர்கள் எங்கு போனாலும் தாழ்த்தப்பட்ட மக்களை பயன்படுத்திதான் தங்கள் உயர்வை நிறுவிக் கொண்டார்கள் என்று சொன்னார். நான் இந்த சட்டத்திற்கு கட்டுப்பட்டவன்; ஆனால் மதிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னவர் அவர்தான், அவர் எழுதிய சட்டத்தைப் பற்றி நான் வாடகை குதிரையாக பயன்படுத்தப்பட்டேன், என்னுடைய விருப்பத்திற்கு எதிராக பலவற்றை எழுதினேன் என்று சொன்னார்.

பேனாவை பிடித்தது மட்டும்தான் என் கை, அதை ஆட்டிவித்தவர்கள் பார்ப்பனர்கள் என்றும் சொன்னார். ஆந்திர பிரிவினை விவாதத்தின்போது பேசினார்கள் “நீங்கள் தானே சட்டத்தை எழுதினீர்கள்” என்று. அவர் சொன்னார்…. “ஆம் நான் தான் எழுதினேன், அதை எரிக்கும் முதல் ஆளாகவும்  நான்தான் இருக்கப்போகிறேன்” என்று. அரசியல் வரைவு குழுவிற்குள் நுழைந்தபோது, என்னுடைய மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை தவிர, எனக்கு வேறு எந்த ஆசையும் இருக்கவில்லை என்று சொன்னார்.

‘தீண்டாமை’ ஒழிக்கப்பட்டு விட்டது, அதை எந்த வடிவில் பின்பற்றுவதும் தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் இருக்கிறது. சில இடங்களில் பின்பற்றலாம் என்பதற்கான சிறப்பு பொருளில்தான், தீண்டாமை என்ற சொல்லிற்கு போடப்பட்டிருக்கும் மேற்கோள் குறி என்று விளக்கம் சொன்னது உச்சநீதி மன்றம்.

“பெட்டி திருட்டு போனாலும் சாவி என்னிடம் இருக்கிறது என்றானாம் நாயர்” என்று மலையாள பழமொழி ஒன்று இருக்கிறது. அதுபோல அரசியல் சட்டத்திற்கு விளக்கம் சொல்பவர்கள் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள். ஆனால் எழுதப்பட்ட அரசியல் சட்டங்களில் பலவற்றை அம்பேத்கர் செய்தார். எட்டு மணிநேர வேலை என்பதை வலியுறுத்தி, பிரன்ச் இந்தியாவில் பாண்டிச்சேரியில் மட்டும் ஒரு போராட்டம் நடந்திருக்கிறது. பிரிட்டிஸ் இந்தியாவில் யாரும் போராடவில்லை.

அம்பேத்கர் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்தபோது அதற்கான சட்டத்தை கொண்டுவந்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் செய்ததா அது? பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கவேண்டும் என்பதை கொண்டுவந்தவர் புரட்சியாளர் அம்பேத்கர்தான்.

அரசியல் சட்டம் எழுதப்பட்டபோது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் தான் அம்பேத்கர் இட ஒதுக்கீட்டை வைத்தார், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வைக்கவில்லை என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.

தொடரும்….

 

 

https://www.ilakku.org/?p=47759

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமான தலைவரா அம்பேத்கர்? – பகுதி – 2 – கொளத்தூர் மணி

 
image-5-696x392.png
 68 Views

கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி  புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகின்றது. (சென்றவார தொடர்ச்சி)

இதில் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், அப்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் தான் பட்டியல் இருந்தது, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பட்டியல் இல்லை. 1935 ஆம் ஆண்டு சட்டத்திற்கு முன்னாலேயே இரண்டு பட்டியலை தயாரித்திருந்தார்கள். ஒன்று தீண்டாமைக்கு உட்பட்ட மக்கள், மற்றொன்று பொதுச் சமுதாயத்தில் இருந்து விலகி, தனித்து வாழும் மக்கள். மக்களை பட்டியல் இன மக்கள் என தனியாக செய்தார்கள். இந்த பட்டியலில் இருந்தவர்களுக்கான இடத்தை ஒதுக்கி அவரால் எழுத முடிந்தது.

பட்டியலில் இல்லாத பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசியல் சட்டத்தில் 340 என்ற ஒரு பிரிவை எழுதினார். அரசு ஒரு ஆணையத்தை அமைத்து, சமுதாயத்திலும், கல்வியிலும் பின் தங்கியிருக்கும் மக்களின் பட்டியலை தயாரித்து, அவர்களின் மேம்பாட்டிற்கு செயல்பட வேண்டும் என்பதுதான் அந்த 340 ஆவது பிரிவு. எழுதியதோடு நிற்கவில்லை, அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் அவர் பதவியில் இருந்து விலகினார்.

பதவியில் இருந்து விலகுவதற்கு சில காரணங்களை கடிதத்தில் எழுதியிருந்தார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு  ஆணையம் அமைத்து, அவர்களின் மேம்பாட்டிற்கு செயல்பட வேண்டும் என்று சட்டம் இயற்றி ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், அதற்கான ஆணையம்கூட அமைக்கவில்லை என்பது, அவர் பதவி விலக எழுதிய காரணங்களில் ஒன்று. இப்படிப்பட்டவரைதான் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர் என்று சொல்கிறார்கள்.

இந்துமத புதிர்கள் என்று எழுதினார். இட ஒதுக்கீடு என்பதைகூட, பதவிபெறும் நோக்கத்திற்காக அவர் சொல்லவில்லை. அனைத்து சமுதாய மக்களுக்கும் ஆட்சியிலும், அதிகாரங்களிலும் பங்கு இருக்கவேண்டும் என்பதுதான் அதற்கு அவர் கொண்ட பொருள். அவர் சொன்ன முறையும், அவருக்கு பின்னால் வந்தவர்கள் அதை எடுத்துகொண்ட முறையும் வெவ்வேறாக இருக்கிறது.

நவீனத்துவத்தின் எதிரியாக இருந்தவர் காந்தி. அவருக்கு எதிர்ப்பை காட்டுவதற்கான அடையாளமாக, மிடுக்கான உடையோடும், பெருமித தோற்றத்தோடும் அம்பேத்கர் இருந்தார், அது அவர் விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல. ஆனால் அவருக்கு பின்னால் வந்த தலைவர்கள் அவரை போல் உடைகளை, காலணிகளை அணிவதுதான் அம்பேத்கரியம் என்று கருதி கொண்டார்கள். அவர் ஆட்சி அதிகாரத்தை, அரசியல் அதிகாரத்தை சமூக விடுதலைக்கு ஒரு வழியாக மட்டும் வைத்திருந்தார்.

இப்போது இவர்கள் அதை முடிந்த முடிவாக, ஒரே இலட்சியமாக எடுத்துக் கொண்டு விட்டார்கள். சமுதாயத்தின் மீது அவர் வைத்த பார்வை என்னவாக இருந்தது என்பதில் இருந்துதான் அம்பேத்கரை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய நாட்டின் விடுதலை பற்றி பேசுகிற போது, இந்திய விடுதலைக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டு பெரியார் மீதும், அம்பேத்கர் மீதும் உண்டு.

காங்கிரஸை எப்போதும் எதிர்த்து வந்த அம்பேத்கர், காந்தியும், காங்கிரசும் தீண்டத் தகாதவர்களுக்கு செய்தது என்ன? என்று ஒரு புத்தகமாக எழுதி, இந்த மக்களுக்கு காந்தியும், காங்கிரசும் செய்த துரோகங்களை பட்டியலிடுகிறார்.

பல வீடுகளின் முன்னால் நாய்கள் இருக்கிறது எச்சரிக்கை என்ற பொருளில் ‘பிவேர் ஆப் டோக்ஸ்’ [Beware of Dogs] என்று எழுதியிருப்பதைப் போல், அந்த புத்தகத்தின் இறுதி அத்தியாத்திற்கு முந்தைய அத்தியாத்தில் ‘பிவேர் ஆப் காந்தி’ என்ற தலைப்பை அம்பேத்கர் எழுதியுள்ளார். தாழ்த்தப்பட்டவர் முன்னேற்றத்திற்காக பல முயற்சிகள் எடுத்ததில் ஒன்றாகதான், 1930 ஆம் ஆண்டு வட்டமேசை மாநாட்டிற்கு சென்று பல செய்திகளை எடுத்து வைத்தார்.

கங்கிரஸ் அப்போது கலந்து கொள்ளவில்லை. 1931 ஆம் ஆண்டு தான் காந்தி – இர்வின் ஒப்பந்தத்தின்படி வட்டமேசை மாநாட்டில்  காந்தி கலந்து கொள்கிறார். [உப்பு சத்யாக்கிரக போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி, இனி போராட்டம் நடத்தமாட்டோம் என்றும், வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்கிறேன் என்றும் போடபட்டது தான் ‘காந்தி – இர்வின் ஒப்பந்தம்’.]

1930 ஆம் ஆண்டு வட்டமேசை மாநாட்டிற்கு செல்வதற்கு முன்னால் காந்தியை சந்தித்து பல விவாதங்களை செய்து, நீங்கள் ஏன் எப்போதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகமே செய்கிறீர்கள் என்று கேட்டு விட்டுதான் அம்பேத்கர் மாநாட்டிற்கு போனார். அந்த மாநாட்டில் அம்பேத்கர் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதமர், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இரட்டை வாக்குரிமை, தனித்தொகுதி உண்டு என அறிவித்தார். அப்படி கூடாது என்று போராடினார் காந்தி.

இஸ்லாமியர்களுக்கும், சீக்கியர்களுக்கும் தனித் தொகுதியை ஏற்றுகொண்ட காந்தி, தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்குவது, இந்துக்களை பிரிக்கும் சூழ்ச்சி என்றார். அம்பேத்கர் கேட்டார்….. “இது வந்து தானா இந்துகளை பிரிக்க போகிறது? நீங்கள் என்ன இணைத்தா வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? எப்போதும் எங்களை அரவணைத்துக் கொண்டா இருக்கிறீர்கள்? எப்போதும் பிரிந்திருக்கிற நாங்கள், இப்போதும் பிரிந்திருந்து நாங்கள் பெறப்போகும் மேம்பாட்டை ஏன் தடுக்கிறீர்கள்? என்று”

சாகும் வரை உண்ணாவிரதம் என்று அறிவித்த காந்தியை பார்த்து அம்பேத்கர் கேட்டார்…. “நீங்கள் எப்போதாதவது உங்களின் உச்சபட்ச கோரிக்கையான இந்திய நாட்டின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்திருக்கிறீர்களா? எங்கள் உரிமையை பறிப்பதற்காக உண்ணாவிரதம் இருக்கிறீர்களே” என்று.

 “ஏழு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை விட, ஒரு காந்தியின் உயிர் பெரிதல்ல, உறுதியாக நில்லுங்கள்” என்று, அப்போது வெளிநாட்டில் இருந்த பெரியார் அம்பேத்கருக்கு தந்தி கொடுத்தார். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் உரிமைகளை விட்டு கொடுக்க நேர்ந்தது. தொடர்ச்சியாக காந்தியின் சூதான போக்கினை எதிர்த்து நின்ற தலைவர்கள் பெரியாரும், அம்பேத்கரும்.

இந்த சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள மக்களின் உரிமையைப் பற்றி, அவர்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை ஆய்வு செய்வதற்காக வந்ததுதான்  சைமன் கமிசன். அதை வரவேற்றவர்கள் இந்தியா முழுவதும் இரண்டே தலைவர்கள் பெரியாரும் அம்பேத்கரும் தான். எல்லோரும் எதிர்த்தார்கள், பெரியார் ஆதரித்து வந்த நீதிக்கட்சியும் எதிர்த்தது.

அப்போது பெரியார் எழுதினார்.. “சைமன் கமிசனில்  இந்தியர்கள் யாரையும் நியமிக்கவில்லை என்ற காரணத்தைச் சொன்னார்கள். மிண்டோ மார்லிக், மாண்டேகு சேம்ஸ்போர்டு,  வந்தபோதெல்லாம் கேட்காமல் இப்போதுமட்டும் ஏன் கேட்கிறாய்? ரெளலட் சட்டத்தை ரெளலட் மட்டுமா எழுதினான்? குமாரசாமி சாஸ்திரியும் சேர்ந்துதானே எழுதினான்.

அதனால் என்ன பலன் கிடைத்தது? அவன் வீட்ல நான்கு பேருக்கு வேலை கிடைத்தது. நல்லது வந்தா மட்டும் நீ ஏற்றுகொள்கிறாய், கெட்டது வந்தா வாயை மூடிகொள்கிறாயே. நல்லவேளையாக இந்தியர்கள் யாரையும் நியமிக்கவில்லை, நியமித்திருந்தால் பார்ப்பானைதான் நியமித்திருப்பான், அவன் எங்களுக்கு எதிராகத்தான் இருந்திருப்பான், எனவே இதை நான் வரவேற்கிறேன்” என்று எழுதினார்.

இரண்டாம் உலகப்போரில், இந்தியப் படையை ஆங்கில அரசு போரில் ஈடுபடுத்தியது. இதனால் இந்தியர்களுக்கு என்ன லாபம் என்று கண்டித்து காந்தி அறிக்கை விட்டார். எப்போதும் காந்தியை எதிர்க்கும் அம்பேத்கர் அப்போது வரவேற்றார். காந்தியார் கேட்ட கேள்வியில் நியாயம் இருக்கிறது வரவேற்கிறேன், அதே சமயத்தில் காந்தியாரிடம் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது, இந்திய விடுதலைப் போரில் தாழ்த்தப்பட்டவர்களை ஈடுபடுத்துகிறீர்களே! அதனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன லாபம் இருக்கிறது என்று கேட்டார்.

அதைதான் இன்றும் சொல்கிறோம், தமிழ்தேசியம் பேசுகிற பலபேர் சிக்கல் இல்லாத பிரச்சினை என்பதற்காக பேசிகொண்டிருக்கிறார்கள். ஜாதி இல்லை என்று பேசினால் தான் சிக்கல்வரும், தமிழ்தேசியம் என்று சொன்னால் எந்த சிக்கல்களும் இல்லை. இந்திய நாட்டு விடுதலையின் போது அம்பேத்கர் கேட்டார். தமிழ்நாட்டிற்கு விடுதலை விரும்புகிற நாம் கேட்கிறோம், ஜாதி ஒழிப்பு இல்லாத தமிழ்நாட்டு விடுதலையில் நமக்கென்ன இருக்கிறது?

ஜாதி ஒழிப்பை இலக்காக கொண்ட, அதை நோக்கமாகாக கொண்ட, அதை போராட்டத்தோடு இணைத்துக் கொண்ட தமிழ்நாட்டு விடுதலைக்கு நாம் போராடுவோம். பெரியார் கேட்ட தனித்தமிழ்நாடு, ஜாதி ஒழிந்த, பாலியல், பொருளியல் பேதம் ஒழிந்த – பொது உரிமை கொண்ட பொதுவுடைமை சமத்துவ சமுதாயத்தைப் படைக்க – தடையாக விளங்கும் பார்ப்பன, பனியா கும்பலிடம் இருந்து பிரிந்து, வடவர் சுரண்டலற்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே ஜாதி ஒழிப்பே உண்மை விடுதலை என்பதை ஏற்றுக் கொள்வோம் .

முற்றும்.

 

https://www.ilakku.org/?p=48261

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.