Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாபெரும் தாய் –அகரமுதல்வன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

மாபெரும் தாய் –அகரமுதல்வன்

01

வானிலை அற்புதமாக இருந்தது. குளிரில் குழையும் காற்று புன்முறுவல் பொங்கி வீசியது. அந்தியின் வாசனை உறக்கத்திலிருக்கும் ஆச்சியின் கனிந்த உடல் மீது எறும்புகளாய் ஊரத்தொடங்கியது. ஒதிய மரத்தின் பழுத்த இலைகள் உதிர்ந்து ஆச்சியைத்  தீண்டின. உறக்கம் அந்தரங்கத்தின் பெருமழை. மின்னல் ஒளியும் பேய் இடியும் பிறந்து கொண்டேயிருக்கும் இந்த உறக்கம் ஆச்சியின் உடலை அத்துணை துல்லியமாக வந்தடைந்திருந்தது. புராதனக் கலத்தைப்போல அசைவின்றியிருந்த ஆச்சி கீர்த்திமிக்க வரலாற்றைப் போல சாந்தம் வழிய புரண்டு படுத்தாள். கிளித்தட்டு விளையாடி முடித்து வீடுகளுக்குத் திரும்பும்  இக்கிராமத்தின் இளந்தாரிகள் ஒதியமரத்தைக் கடந்து போகையில் “ஆச்சி எழும்பன,உன்ர மந்திரக்கத்தியை எடுத்துக்கொண்டு ஆரோ ஓடுறாங்கள்” என குரல் கொடுத்தனர். ஆச்சி பதைபதைப்போடு  கண்களைத் திறந்தாள். கொட்டிலுக்குள் ஓடி மந்திரக்கத்தியைப் பார்த்தாள். கண்கள் நிலமாகி கண்ணீர் மழையாய் படர்ந்தேறி நிற்கையில் மந்திரக்கத்தியின் பொன்னிறம் பளிச்சிட்டு நீடித்து மின்னியது. ஆச்சி கம்பீரமாய் களிபொங்கிச் சிரித்தாள். வெளியே இரவு முளைத்தெழுந்து பூமியில் விரிந்தது.

பயபக்தியிலும் தூய்மையிலும் கடுமையான இறுக்கத்தைக் கடைப்பிடிக்கும் இக்கிராமம் வன்னியிலுள்ளது. தொன்மை உறைக்குள் செருகப்பட்ட மிகநீண்ட கருப்புநிற வாள்களாய் திசையெங்கும் பனைகள் உடல் நீட்டி நின்றன. காம்பினில் அகாலமுடைத்து இதழ்விரிக்கும் நித்திய கல்யாணியின் நறுமணம் சூரியத்தழலின் நரம்புகளையும் மயக்கியதைப் போல காலை வெயிலில் சுகம் சுழலும். காட்டின் கனல் நிமிர்ந்து சீறுகையில் வியர்த்தவுடலில் எரியும் தாகம் தீ போல் பிளந்தாடும். வேட்டை நாய்களின் கண்களில் பதுங்கியிருக்கும் மூச்சிரைப்போடும், பனங்கள்ளின் அற்புதத் திளைப்போடும் தனது அன்றாடங்களை உதிர்க்கும் இக்கிராமத்து ஆன்மா மந்திரக்கத்தி ஆச்சியிடமிருக்கிறது.

எரிந்த திரியின் நுனிக்கரியை விரல்களால் நசித்து நெற்றியில் அப்பிக்கொண்டு கூந்தலை விரித்து நின்று இன்மையூறும் திசைநோக்கி உச்சாடனம் செய்யும் அவள் மந்திரங்களோ பிறருக்கும் கேட்காது. அவள் பாடும் பாடல்களின் அர்த்தம் மொழிக்கும் தெரியாது. மந்திரங்களும் மர்மங்களும் ஆச்சியின் விலா எலும்புகளால் இக்கிராமத்தின் குருதியிலேயே எழுதப்பட்டதென்பாள் என்னுடைய அம்மா. வருஷத்தில் ஒரேயொரு நாள் ஆச்சியின் மந்திரக்கத்தியை முந்நீர் காளிகோயில் மடைத்திருவிழாவில் வைத்து பூசைசெய்யும் வழக்கமிருந்தது.

அன்றைக்கிரவு தன்னுடைய வேட்டைநாய்களோடு காட்டுக்குள் நுழையும் ஆச்சி துரவொன்றிற்குள் இறங்கி நீருக்குள் வாயை வைத்து ஒலி எழுப்பத்தொடங்குவாள். அப்போது வேட்டை நாய்கள் தங்களுடைய முன்னங்கால்களால் துரவுத்தண்ணீரை எத்தி எத்தி வானத்தைப் பார்த்து குரைக்கத்தொடங்கும். ஆச்சியின் கூந்தல் பூமியிலிருந்து வான்நோக்கி எழுந்துபோய் நிசியைப்போல நீண்டதும் பூமியை அறையும்படி மழையின் கனம் பொழியத்தொடங்கும்.

அக்கணத்தில் காட்டிலிருந்து காளி கோயில் நோக்கி ஓடத்தொடங்கும் வேட்டைநாயின் கால்கள் இரவின் நகங்களை பிடுங்கி எறிந்தபடி விரையும். கற்றாழைச் செடிகள் நிறைந்திருந்த கோயில் குளத்தின் மரப்பொந்துக்குள் வழிபட்டு முடிந்த மந்திரக்கத்தி தனித்திருக்கும். சுவடு பிடித்த வேட்டைநாய் ஒரு இரையைக் கவ்வும் வேகத்தோடு மந்திரக்கத்தியை பற்றிக்கொண்டு மீண்டும் காடு நோக்கி பாயும்.

பெருமழையின் துளிகள் நீரின் கண்களைப் போல திறந்து மூடும். துரவுக்குள் நின்றுகொண்டிருந்த ஆச்சி ஒலியெழுப்பி நிர்வாணம் கொண்டு தனது இரண்டு கால்களையும் அகலமாக விரித்து நீருக்குள் அமர்ந்திருப்பாள். அவள் ஆதிக்குகையில் இருந்து வெளிக்கிளம்பிய சினக்குருதியின் தீஞ்சுடரை வேட்டைநாய்கள் வணங்கிநிற்கும். மழையில் நனைந்த காடு ஒருகணத்தில் உலர்ந்து வணங்கும். அந்தத் தீஞ்சுடர் ஏந்தியிருந்த வெளிச்சத்தில் முதல் நெருப்பின் நரம்புகள் விளையும்.

மந்திரக்கத்தியோடு வந்தடைந்த  வேட்டை நாய் நீருக்குள் இறங்கி ஆச்சிக்கு அருகில் சென்று தீஞ்சுடர் உருகிவழியும் ஆதிக்குகையில் மந்திரக்கத்தியை வைத்ததும் விரிந்திருந்த ஆச்சியின் கால்கள் ஒடுங்கும். பின்னர் தீஞ்சுடர்க் குகை மூடும். துரவு நீர் குருதித் திரள்களால் அசையாது நிற்கும். ஆச்சி மந்திரத்தின் மீதேறி தனது முலைகளால் நிலத்துக்கு பாலூட்டியதும் இருள்புகை கலையும். 

02

எனக்கு அப்போது பத்து வயது. என்னுடைய மாமாவின் மகள் கோபிதா   கிளித்தட்டு விளையாடிக்கொண்டிருந்த போதில் மயக்கம் போட்டு கீழே விழுந்தாள். முகத்தில் தண்ணீர் தெளித்து கொஞ்சநேரம் விசுக்கிவிட்டதும் கண்களைத் திறந்தாள். கோபிதாவுக்கு அப்போது பதினாறு வயசு. கிராமத்தின் பல இளந்தாரிகளுக்கு கிளர்ச்சி தரவல்ல சரீரம் அவளிடமிருந்தது. பருவத்தின் விதைகள் அவளிடம் தாராளமாய் விளைந்திருந்தன. கோபிதா மயங்கி விழுந்த அடுத்தடுத்த நாட்கள் அவள் கிளித்தட்டு மைதானத்திற்கே வரவில்லை. வீட்டிற்குள்ளேயே இருந்தாள். செந்தளிப்பற்ற வீட்டின் முற்றம் போலாகியிருந்தது கோபிதாவின் முகம். அவளுடலில் தோன்றியோடும் நோவினால் துடித்தாள். என்னவென்று சொல்லமுடியாதபடி பயந்தாள். திடுமென ஒரு நிழலைப்போல தன்னை மறைத்துக்கொள்ள எத்தனித்தாள். மாதவிடாய் வந்து பத்து நாட்களுக்கு மேலாகியும் நீடித்த குருதிப்போக்கு கோபிதாவின் உடலைத் திருகி வெளிறப்பண்ணியது. மருத்துவத்தை நம்பாத மாமா கோபிதாவை அழைத்துவந்து ஆச்சி முன் நின்றழுதார். கோபிதாவின் கண்களில் ஊன்றி நிற்கும் இருட்டைக் கண்டதும் ஆச்சி தனக்கருகில் அவளை அழைத்தாள். கோபிதா வர மறுத்தாள். ஆச்சி ஒரு சுருட்டைப் பற்றவைத்து அவளருகே வந்துநின்று “என்னடி மோளே செய்யுதுனக்கு, ஏன் பயந்து போயிருக்கிறாய்” என்று கேட்டதும் மனதைப் பிசையும் ஒரு குரலாய் ஒடுங்கி நடுங்கினாள்.

ஆச்சி தன்னுடைய கைகளால் அவளின் தலையைத் தொட்டு யாருக்கும் கேட்காத சக்தியுடைய மந்திரத்தை சொல்லத்தொடங்கினாள். திடுமென நிலத்தில் வீழ்ந்த கோபிதாவின் கண்களிலிருந்து வெகுண்டெழுந்தது அந்தப் பொழுது. மாமா  கூப்பியிருந்த கைகளை இன்னும் இறுக்கமாக்கிக் கொண்டிருந்தார். 

கோபிதாவின்  உடலிலிருந்து காட்டு மரம் எரிவதைப் போன்ற வெக்கை எழுந்தது. ஆச்சி கோபிதாவின் முகத்தில் நீராளடித்தாள். கண்களைத் திறந்த கோபிதாவின் முகம் இப்போது தெளிந்திருந்தது. நெற்றியிலும் இரண்டு பாதங்களிலும் நீறள்ளிப்பூசியதும் போகலாமென்று கையசைத்தாள். மாமா கும்பிட்டு முடித்து கோபிதாவோடு வெளியேறினார்.

அவர்கள் போன கையோடு ஆச்சி தன்னுடைய கூந்தல் முடியை பிடுங்கி மூன்று முடிச்சுப்போட்டு கூரையின் மீது வீசினாள். பின்னர் தன்னுடைய உடைகளை நீக்கியபடி பனைமரத்தின் கீழே குளிக்கப்போனாள். யாரிடமும் பகிர்ந்தளிக்க விருப்பமற்ற ஒரு ஆழ்ந்த உறக்கத்தை நெடுநாட்களுக்கு பிறகு கோபிதா சந்தித்தாள். ஆச்சி ஒரு ரகசியத்தை விதைக்கும் நாளைப்போல வெறிக்கும் பார்வையுடன் விழித்திருந்தாள். ஒதியமரத்தின் உச்சிக்கிளையில் அவள் கண்கள் குத்தி நின்றன. ஆச்சியின் மந்திரங்களை அணிந்து கொண்டு ஒதிய மரம் அசையத் தொடங்கிற்று. கோபிதாவின் உறக்கத்தில் இன்னுமின்னும் அமைதியே இழைந்தது.

முற்றத்திற்கு ஒரு சுளகை எடுத்துவந்த ஆச்சி வீட்டிற்குள் போனாள். கையில் ஒரு பிடி பச்சையரிசியை எடுத்து வந்து சுளகில் உருவம் வரைந்தாள். அப்போது ஒதிய மரத்திலிருந்து எழுந்த ஒலி இரவின் கபாலத்தில் அமிழ்ந்து தெறித்தது. அரிசியால் வரையப்பட்ட அந்த உருவத்தின் தலைக்கு மேலும் பாதத்தின் கீழும் தேசிக்காய்களை வைத்துவிட்டு ஆச்சி மந்திரங்களை முணுமுணுக்கத் தொடங்கினாள். இரவு தவிக்க ஆரம்பித்திருந்தது.

ஒதிய மரத்தின் கிளைகள் குறுங்காற்றில் திசை முழுதும் மூச்செறிந்து அசைந்தது. ஆச்சி சுளகில் கிடந்த உருவத்தில் எச்சிலால் உமிழ்ந்து விளக்குமாற்றால் அடித்தாள். பின்னர் எழுந்து நின்று இரண்டு கால்களையும் அகட்டி அதன் மீது மூத்திரம் பெய்தாள். அப்போது படுக்கையிலேயே சிறுநீர் கழன்ற கோபிதா உறக்கம் கலைந்து திடுமென விழித்தாள். அவளது முகத்தில் பரிசுத்தம் பிடிப்பிடியாய் மிதந்தது.

03

நெருப்புச் சுவாலை கவிழ்ந்தெரிவதைப் போல வெயில். படையெடுத்து வளவுகளுக்குள்ளால்  போகும் சிறுவான் குரங்குகளை குரைத்து விரட்டுகின்றன நாய்கள். ஆச்சி சமைத்துக்கொண்டிருந்தாள். சின்னஞ்சிறிய அடுப்படியில் மூன்று மண்சட்டிகளோடும் ஒரு உலைப்பானையோடும் அவள் சீவியம் தொடர்ந்தது. தாகத்திற்கு பனங்கள்ளும் சுருட்டும் அவளுக்கு சுதியாயிருந்தது. மத்தியான வெயிலில் ஒதியமரத்தின் நிழலில் உறக்கம் கொள்வது அவளது நித்திய கருமம். ஆச்சியைக் கண்ட இளசுகள் அவளைத்தாண்டும் வரை எதுவும் கதைக்கமாட்டார்கள். ஆச்சி உறக்கத்திலிருக்கையிலும் அவளை கையெடுத்துக் கும்பிடும் என்னுடைய அம்மாவிடம் ஒருநாள் கேட்டேன்.

ஆச்சிக்கு இப்ப எத்தின வயசு வரும்?

“ஆச்சிக்கு வயசில்ல, மூப்பில்ல. பிறக்கும் போதே இப்பிடித்தான் பிறந்தவா”

நான் அம்மாவிடம் மேற்கொண்டு எதுவும் கதைக்கவில்லை. நேராக முந்நீர் காளி கோயிலுக்கு போகலாமென்று தோன்றியது. யாருமற்ற நடுமதியக் காற்றின் அரங்கத்தில் நான் மட்டுமே தனித்திருந்தேன். கோயில் குளத்தடியில் பல சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருந்தன. பழிதீர்க்கும் மனுஷவொலியின் ஆக்ரோஷ இரைச்சல் செவிப்பறையை கருகச்செய்யுமளவுக்கு கேட்டதும் எனக்குள் ஆர்வம் பிறந்திற்று. கற்றாழைச் செடிகளுக்கு நடுவேயிருக்கும் அந்த மரம் பொல்லாத காளியின் உறைவிடமென அம்மா சொல்லியிருக்கிறாள். எதையும் பொருட்படுத்தாமல் மரத்தை நோக்கி நகர்ந்தேன். கற்றாழைச் செடிகளுக்குள் பாம்புகள் இருக்குமென்ற நினைப்புக் கூட வரவில்லை. மரத்தின் பொந்துக்குள் ஒரு நீலமலர் மட்டும் தனித்திருந்தது. பொந்தின் உள்ளே வரையப்பட்டிருந்த ஓவியத்தின் கோடுகளைக் கண்டதும் என் தண்டுவடத்தின் ரத்தவாசம் மூக்கைத் தீட்டியது.

கால்களை அகல விரித்திருக்கும் பெண்ணின் ஆதிவாசலில் தீயின் கனி சுடர்ந்துகொண்டிருந்தது. கண்ணுக்கும் காட்சிக்கும் நடுவில் விழுங்கித் துப்பும் சிலிர்ப்பும் அச்சமும் என்னை கிலிகொள்ளச்செய்தது. நான் அங்கிருந்து மீண்டுவிட்டால் போதுமெனத் தோன்றியது. ஓவியமாய்  கால்களை அகல விரித்திருக்கும் அந்தப் பெண்ணின் தலையில் ஒரு மரம் சடைத்து நிற்கிறது. அந்த மரத்தின் கிளைகளில் நீண்ட வால் கொண்ட நாய்கள் அமர்ந்திருக்கின்றன. தீயின் கனி திடீரென நெகிழ்ந்து அலைந்தது. நான் அம்மாவென்று கத்திக்கொண்டு கற்றாழைச்செடிகளைக் கடந்து கிராமத்தை அடைந்தேன். ஒதிய மரத்தடியிலிருந்து சுருட்டுப்பிடித்துக் கொண்டிருந்த ஆச்சி என்னைக் கண்டதும் “மோனே என்னத்தைப் பார்த்து பயந்தோடி வாறாய்” என்று கேட்டாள். எதுவும் கதையாமல் நின்றேன். சிரித்துக்கொண்டு “அதொண்டுமில்லை. நீ பயப்பிடாத”  என்று சொன்ன ஆச்சியின் புன்முறுவலில் எத்தனையோ மர்மங்கள் புகுந்து கரையேறுவதைப் போலிருந்தது.

கோபிதாவுக்கு என்ன நிகழ்கிறதென வீட்டிலுள்ளவர்கள் குழம்பியிருந்தனர். இரண்டு நாட்களாக ரத்தம் ரத்தமாக சத்தியெடுத்தபடியிருந்தாள். அவளுடைய சிறுநீரில் வெளிக்கிளம்பும் நாற்றம் வீட்டை அவித்தது. கூந்தலை அவிழ்த்து வாய்க்குள் வைத்து தின்னத்தொடங்கியிருந்தாள். விழிகள் வெளித்தள்ள நாக்கை நீட்டிக்கொண்டு நிலத்தில் கிடந்து துடித்தாள். வர மறுத்த காற்றைப்போலிருக்கும் அவளுடைய உறைந்த சரீரத்தின் சஞ்சலமும் உத்தரிப்பும் தத்தளிப்பும் பார்க்கிறவர்களை அழுகைக்கு பரிமாற்றும். அரூபக்கனவின் இறுதிக்காட்சிகள் போல வார்த்தைகளற்ற நெடுந்துக்கமும் பதற்றமும் எம்மைச் சூழ்ந்து விடும். சற்றுநேரத்தில் கோபிதா உதிர்ந்து போன பழுத்த இலையென எந்த அசைவுமின்றி தரையில் மயங்கிப் போவாள்.

அன்றிரவு ஆச்சியின் வீட்டிற்கு கோபிதாவை கூட்டிச்சென்றனர். பெண்களைத் தவிர யாரும் வரவேண்டாமென ஆச்சி சொல்லியிருந்தாள். கோபிதாவின் தாயாரும் என்னுடைய அம்மாவும் ஆச்சிக்கு ஒத்தாசையாக இருந்தனர். கோபிதாவுக்கு பேய் பிடித்துவிட்டதென ஊருக்குள் கதை கிளம்பிற்று. இது செய்வினை என ஊகம் சொல்லினர். இன்னுஞ்சிலர் ஊத்தைக் காளியோட வேலையிது என்றனர்.

ஆச்சிக்கு முன்னால் இருத்திவைக்கப்பட்டிருந்த கோபிதாவின் கண்கள் சோர்வுற்றிருந்தன. குஞ்சு பொரிக்கும் பருவத்திலிருந்த மூன்று அடைக்கோழி முட்டைகளையும், தேசிக்காய் ஐந்துமென ஆச்சி எல்லா அடுக்கணிகளையும் எடுத்துவைத்தாள். ஆச்சியின் பொருட்கள் எவற்றிலும் தொட்டுவிடக்கூடாதென அம்மாவுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. இயல்பற்ற ஒரு புன்னகையோடு கோபிதா ஆச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். தன்னுடைய கால்களை வீசி எறிந்து நீட்டியபடி பற்களை உறுமி சத்தம் எழுப்பினாள். ஆச்சி எதையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய காரியங்களில் மூழ்கியிருந்தாள். அம்மா கோபிதாவை இறுக்கிப்பிடித்துக் கொண்டிருந்தாள். அடைக்கோழி முட்டையின் மேலே குங்குமத்தைப் பூசி வேப்பிலையால் கோபிதாவை அடிக்கத்தொடங்கிய ஆச்சி நின்றுகொண்டிருப்பவர்களை வெளியே போகுமாறு கட்டளையிட்டாள். அம்மாவும் கோபிதாவின் தாயாரும் ஒதிய மரத்தின் கீழே போயிருந்தனர். வானிலை இரவைச் சீண்டிப்பார்த்தது.

மூச்சிளைக்கும் கோபிதாவின் குரல் குளிரும் பொழுதை உலரச்செய்தது. திசைகளை மோதும் இடியுடனும் மின்னலுடனும் எழுந்த அந்தக்குரலின் திரள்களில் குற்றத்தின் சீற்றம் இமைகளை விரித்தது. ஒதிய மரம் வேரிலிருந்து கிளைவரை அசையுமாறு ஆடியது. அதன் இரைச்சல் ஓசை ஒரு கொடுங்கனவின் தீராத அழுத்தமாய் நீண்டது.

குங்குமம் தடவப்பட்ட அடைக்கோழி முட்டைகள் மூன்றும் தரையில் சுழன்று கொண்டிருந்தன. ஆச்சி மந்திரத்தை முணுமுணுத்துக் கொண்டே சுளகில் உருவம் வரைந்தாள். கோபிதா நாக்கை வெளித்தள்ளி இரண்டு கால்களையும் தரையில் அடித்துக்கொண்டிருந்தாள். அவளின் கண்கள் வெறித்துச் சிவந்திருந்தன. ஒரு லயத்தோடு சத்தமெழுப்பி கூவல் செய்தாள். ஆச்சி மந்திரத்தை முணுமுணுத்தபடி சுழன்று கொண்டிருந்த ஒரு முட்டையை வரைந்த உருவத்தின் அடிவயிற்றின்  மீது எறிந்து உடைக்கையில் கோரமானதோர் சத்தம் அவளது உடலைப் பிய்த்துக் கொண்டு வெளியேறியது.

ஆச்சியைப் பார்த்து அவள் பச்சைத் தூஷணங்களால் ஏசத்தொடங்கினாள். அவளது முகம் அழுகிய காட்டுப்பன்றியின் முகத்தைப் போல விகாரமாகியிருந்தது. திடீரென நீளம்பெரிதான நாக்கின் மீது புண்கள் பெருகி ஊன் வழிந்தது. சுழன்று கொண்டிருந்த இரண்டாவது முட்டையை வரைந்த உருவத்தின் மார்பினில் உடைத்த ஆச்சி தனக்கு முன்னாலிருப்பவளிடம் கேட்டாள்.

ஆர் நீ? ஏன் இந்தக் குமர்ல ஏறி நிக்கிறாய்?

அது எதுவும் பதில் சொல்லாமல் தன்னை கட்டுகளில் இருந்து விடுவிக்க திமிறியது. அதுதன்னை யாரெனச் சொல்லமறுப்பது ஆச்சிக்கு கோபத்தை தந்தது. ஆச்சி மூன்றாவது முட்டையையும் வரைந்த உருவத்தில் உடைக்கையில் சிறிய கோழிச்குஞ்சு சுளகில் நின்றது. அந்தக் கருநிறக் கோழிக்குஞ்சை ஆச்சி தன்னுடைய கைகளில் ஏற்றி வைத்து மந்திரங்களால் முணுமுணுக்க எதிரே இருந்தது எழும்பத் துடித்து விழுந்தது. ஆச்சி கோழிக்குஞ்சின் கழுத்தை இறுகத்திருகி “நீ ஆரெண்டு எனக்குத் தெரியும், இந்தக் குமர்ல இருந்து இறங்கு, உன்னை நான் விடுறன்” என்றாள்.

கோழிக்குஞ்சை சுளகில் இறக்கி வைத்துவிட்டு ஆச்சி தன்னுடைய ஆடைகளை அவிழ்த்து அந்த உருவத்தின் முன்னால் கால்களை அகலவிரித்தபடி அமர்ந்திருந்தாள். அவளுடைய ஆதிக்குகையில் மந்திரக்கத்தியை சொருகியபடி வெளிக்கிளம்பிய ரத்தத்தால் தன்னெதிரே இருக்கும் உருவத்தின் உடலைத் துடைத்தாள். அந்தவுடல் சிலிர்த்து கனம் குன்றியது. கோழிக்குஞ்சு சுளகில் சரிந்தது. அதன் மூச்சிளைப்பில் அதீதமாய் இரைச்சல் மேய்ந்தது. அப்போது அழுகிய காட்டுப்பன்றியின் முகம் நீங்கிய கோபிதா வியர்த்து தரையில் கிடந்தாள்.

சுளகில் மேய்ந்து கொண்டிருந்த கோழிக்குஞ்சை இரண்டாகப் பிய்த்து வீட்டுக்கூரையில் வீசி எறிந்த ஆச்சி ஒதியமரத்தின் கீழே அமர்ந்திருந்த இருவரையும் வீட்டிற்குள் அழைத்தாள். கொஞ்சநேரம் கழிச்சு பிள்ளையை வீட்ட கூட்டிக்கொண்டு போங்கோ, எல்லாம் போயிற்று என்றாள். அம்மா ஓமென்று தலையாட்டி “ஆரேனும்  ஏதும் செய்துவிட்டிருக்கினமோ ஆச்சி” என்று கேட்டாள். ஆச்சி பதில் சொல்லவில்லை. கோபிதா விழித்தெழும்பியதும் அவளுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்து ஆச்சி வழியனுப்பி வைத்தாள்.

04

நீண்ட வால் கொண்ட ஒரு வேட்டை நாயாகிய நான் ஆச்சியின் பின்னால் போய்க்கொண்டிருக்கிறேன். நள்ளிரா வேளையில் ஆச்சியின் கால்கள் காடுகளை அளைந்து கொண்டிருந்தன. மந்திரக்கத்தியைப் பற்றியபடியிருக்கும் அவள் வலது கரத்தின் தினவு பிளிறுற்று. ஆச்சியின் கூந்தல் அவிழ்ந்து காட்டை அதிரச்செய்கிறது. முந்நீர் காளி கோயிலுக்கு அந்தப்பக்கத்தில் இருக்கும் கடலை அடைந்ததும் பேரண்ட ரீங்காரமாய் ஆச்சி மந்திரங்களை உச்சரித்தபடி உப்பு நீருக்குள் இறங்கினாள். அவளின் மந்திரக்கத்தியை நீருக்குள் தோய்த்தெடுத்தாள். பின்னர் கடலுக்குள் முங்கிய ஆச்சி மீளாது மாயமானாள்.

பீதியின் கோடாரியால் வெட்டுண்ட வீறல் எனக்குள் எழுந்தது. நீண்ட வால் கொண்ட நாயாகிய நான் கடலை நோக்கி அழுதபடி, கடலுக்குள் இறங்க அஞ்சி ஊருக்குள் ஓடிவந்தேன். புலன்கள் அதிர பாயுமென் கால்களை தாக்கியது வேட்டொலி. ஊழிக்காற்றின் ஓல அலைகளில் துடுப்பைத் தொலைத்த திகைப்புடன் ஊரழிந்து போகுமோர் ஊளையை எழுப்பினேன். அழுந்திக் குறட்டை இழுக்கும் ஊர்மனை மூச்சின் நரம்பதிர்ந்து துயில் துறந்தது.

கனவில் அமிழ்ந்திருந்த என்னை அம்மா தட்டியெழுப்பினாள்.

“என் கனவில் நிகழ்ந்தவை யாவும் இரத்தங்களின் கூப்பிடல்கள் அம்மா. எழுந்து படரும் அந்த இருள் திக்கில் ஆச்சி கடலுக்குள் கரைந்து போனாள். அவளின் மந்திரக்கத்தியை அலையெறிந்து உதைந்தாடுகிறது. எங்களைச் சுற்றி துக்கித்தலின் இரைவட்டம் விரியப்போகிறதோவென எனக்கு பயமாய் இருக்கிறது அம்மா” என்றேன். அவள் என்னை அணைத்துக்கொண்டு “நீயொண்டுக்கும் பயப்பிடாத, ஆச்சியென்ன சக்கரையா கரைஞ்சு போக, நீ படடா என்றாள்.

அடுத்தநாள் காலையில் குளித்ததும் முந்நீர் காளி கோயிலுக்கு போனேன். பூசாரி தீபங்களை புளிபோட்டு மினுக்கிக் கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக வேலைகள் செய்தேன். பூசை முடிந்தபின்னர் குளத்தடி மரத்துக்கு போனேன். அன்றைக்கு நடந்த என்னுடைய தடங்கள் அப்படியே இருந்தன. மரப்பொந்தினுள்ளே இருக்கும் உருவத்தின் முன்னால் இன்று மஞ்சள் மலர் இருந்தது. உருவத்தின் மேற்பகுதியிலிருக்கும் மரத்தின் கிளைகளில் வால் நீண்ட நாய்கள் அமர்ந்திருந்தன. அகன்ற கால்களுக்கிடையிலிருந்து வெளிக்கிளம்பிய சுடர்ச்செடியில் உயிர்த்தணலாய் ஒரு மலர். அதை எடுத்து நுகர்ந்து பார்த்தால் மூண்டெழும் நெருப்பின் முதல் ஊன்றல் வாசம். என்னுடைய பின்புறத்தே நீண்ட வால் முளைத்து அசைந்து கொண்டிருப்பதைப் போலொரு உணர்வு.

பொந்திற்குள்ளிருக்கும் அந்த உருவம் என்னை மிக நெருக்கமாய் அழைத்தது. எனக்குள் அமிழ்தம் இனிதாய் ஊறுகிறது. நெய்க்குடத்தின் குளிர் அடிவயிற்றில் ஓச்சம் கொண்டது. உருவத்திலிருந்து கைகள் முளைத்து என்னைத் தடவ “மகனே” என்றது ஒரு தொல்குரல். கனன்றதென் குருதி மரபு.

05

இந்தக் கிராமத்தை விட்டு வெளியேறவேண்டுமென போர் எங்களைப் பணித்தது. சனங்கள் மூட்டைமுடிச்சுக்களோடு வேறு ஊர்களுக்கு போகத் தயாராயினர். ஒட்டுமொத்தமாக முந்நீர் காளிகோயிலில் இருந்து சனங்கள் திசைகளில் பிரிந்தனர். ஆச்சி ஊரை விட்டுவர மறுத்தாள். யாரும் எதிர்த்து கதைக்கவில்லை. சனங்கள் ஊரை விட்டு வெளியேறினர். அம்மா “ஆச்சிக்கு ஒண்டும் நடக்காது, நீ கெதியா நட” என்று என்னை கூட்டிக்கொண்டு போனாள். பிய்த்துக்குதறும் பீரங்கிக் குண்டுகள் வீழ்ந்து வெடிப்பதற்கு முன்னர் தூரத்தைக் கடந்துவிடும் வேகத்தோடு நடந்தபடியிருந்த சனங்களுக்கு மத்தியில் நானும் கோபிதாவும் ஆச்சியை நினைத்துக் கலங்கிக்கொண்டிருந்தோம். அன்றைக்கிரவு நாங்கள் இடைத்தங்கலாக இருந்த ஊருக்கும் எங்களுடைய ஊருக்கும் தூரம் அதிகமாயிருந்தது. நான் நித்திரையற்று ஆச்சியையும் கூட்டிக் கொண்டு வந்திருக்கலாம் என்று அழுதுகொண்டிருந்தேன். அப்போது பீரங்கிக் குண்டுகள் விழுந்து வெடிக்கத் தொடங்கின. அம்மா ஆச்சி ஆச்சி என்று கும்பிட்டபடியிருந்தாள். அவளின் பிரார்த்தனையையும் மீறி கோரங்கள் எழுந்தன.

நிலவற்ற வானம் மகத்துவமான இருளை நிலமெங்கும் வீழ்த்தியிருந்தது. காற்றில் கரைந்த கற்பூரமாய் ஊர் தடயமற்று ஆகிப்போயிருந்தது. வெண்சோற்றுக் கவளத்தினுள்ளே மிஞ்சியிருக்கும் சிறுபருக்கையைப் போல மின்மினிப் பூச்சியொன்று தனித்துப் பறந்து திரிந்தது. ஒதிய மரத்தின் கிளைகளில் அமர்ந்திருந்த வால் நீண்ட நாய்கள் கீழே இறங்கின. ஆச்சி தன்னுடைய மந்திரக்கத்தியை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் நிர்வாணமாய் இறங்கினாள். வேட்டை நாய்கள் ஆச்சியை சூழ்ந்து நடந்தன. முந்நீர் காளி கோயில் குளத்தடி மரத்தில் வால் நீண்ட நாய்கள் ஏறிக்கொண்டன. ஆச்சி மரப்பொந்துக்குள் போய் கால்களை அகற்றி அமர்ந்தாள். மந்திரங்களை முணுமுணுத்தபடி விரிந்திருந்த ஆதிக்குகையில் மந்திரக்கத்தியைச் செருகினாள். நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்கு சமுத்திரத்தை நிரப்பும் குருதி ஆச்சியின் ஆதிக்குகையில் இருந்து பீறிட்டது.

“அம்மா ஆச்சி தனிய இருந்து ஷெல் விழுந்து செத்துப்போனால்...ஆச்சி  பாவமல்லே!

“ஆச்சி சாகமாட்டா, நீ பயப்பிடாத”

“இவ்வளவு உறுதியாய் எப்பிடியம்மா சொல்லுறியள்?” 

“அவாவோட மூச்சுத் தான் எங்கட மண்ணில நடக்கிற போர், ஆச்சியே எங்களின் அங்கையற்கன்னி. அவளே விடுதலையின் பீடத்தில் ஓர் நிமிர்வு”

அம்மா, ஆச்சி ஆர்?

மகனே! அவளை நாம் இந்த மண்ணுக்குள் இருந்தே கண்டெடுத்தோம்.  அவள்தான் எங்களின் “மாபெரும் தாய்”.

(அந்திமழை மே21 இதழில் வெளியான சிறுகதை. ஓவியங்கள்: பி ஆர்.ராஜன்)

 

http://andhimazhai.com/news/view/maperum-thai-short-story-by-akaramudhalvan-andhimazhai.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.