Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த்வந்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

த்வந்தம்

நெய்யாற்றங்கரை பாலத்தின்மீது ரயிலின் வேகம் படிப்படியாகக் குறைந்து கொண்டிருந்தது. அதிகாலை இருட்டிற்குள் தென்னந்தோப்புகளின் பச்சையான மெழுகு வெளிச்சங்கள். திறந்து விடப்பட்ட எனது சட்டை படபடக்க காற்று வழுவி விலகியது. தென்னந்தோப்பிற்குள் சிறியதொரு கோவிலில் மாட விளக்கு பொருத்தப்பட்டிருக்க, சாம்பலான இருளுக்குள் அது அம்மாவின் நெற்றியைப் போல இளவெளிச்சம் கொண்டிருந்தது. சிகரட்டை வெளியே சுண்டினேன். 

ஊதிய புகை ஒருகணம் எதிர்காற்றில் திகைத்து பிறகு நெஞ்சில் பனியைப்போல் பரவி சட்டென மறைந்தது. தூங்காமலிருக்கப் பழகிவிட்டிருந்த எனது கண்களில் எழுந்த எரிச்சலைக் கசக்கி நீவியபடி, உள்ளே பார்த்தேன். ஜன்னலோரம் முன்சிகைப் பிசிறுகள் முகத்தில் துடிக்க லீலா உறங்கிக் கொண்டிருந்தாள். லேசாகப் பிரிந்திருந்த அவளது உதடுகளுக்குள் சீரான பல்வரிசையின் வெண்மை. சதை போடாத நெடிய கழுத்தில் ஆபரண முகப்பைப் போல சங்கு தாழ்ந்தெழும்பியது. மிகச் சாதாரணமான ஒரு சேலை அவள் சுற்றிக் கொண்டிருக்கும்போது எங்ஙனம் அசாதாரணமாகி விடுகிறதென எப்போதும் நான் யோசிப்பதுண்டு. தூங்கும்போது பொதுவாக எல்லா முகங்களிலும் வந்துவிடுகிற சவக்களை கூட அவள் முகத்தில் வருவதில்லை. மெல்லிய துணியால் மூடப்பட்ட பழங்களைப் போல உறக்கத்தால் கூட நீக்க முடியாத ததும்பலும் பிரகாசமும் கூடியவள். இப்போது கூட எனதிந்தப் பார்வை நடந்து செல்கின்ற அவளது முகத்தில் நீர்பூச்சி செல்வதைப் போல மெல்லிய சலனச் சுருக்கங்களை உண்டுபண்ணுகிறாள்.

இளஞ்சாரல் முகத்திலடித்தது. நான் புன்னகைத்தபடி இன்னொரு சிகரட்டை எடுத்தேன். மீண்டும் அவளைப் பார்ப்பதற்காக நிமிர்ந்தபோது அவளது மடியிலிருந்த சசிதரன் வாயில் எச்சில் வடிய என்னைப்பார்த்துச் சிரித்தான். ஆட்டிஸத்தில் நிர்மலமாகிவிட்ட முகங்களுக்கேயுரிய, எவ்வித குறிப்புகளோ, சுமைகளோ அற்ற சிரிப்பு. பத்துவயதாகிவிட்ட சசிதரனை மடியில் உட்கார வைத்தபடி உறங்கும் லீலாவின் முகத்தில் இதுவரை இல்லாத துயரங்களின் இருட்டையெல்லாம் மனது சட்டென நிறைத்துக் கொண்டது. வினாடிக்கும் குறைவான நேரத்தில் அவள் சற்று வயோதிகம் கொண்டவளாகிப் போனாள். அவர்களுக்கருகே எப்போதும்போல பயந்தவனாக தீபன் லீலாவின் தோளில் தலைசாய்த்து உறங்கியபடி இருந்தான்.

சட்டைப் பாக்கெட்டில் சரியாக வைக்காத ரூபாய்த்தாள் எதிர்காற்றில் படபடத்தபடி இருந்தது. இப்படி அசிரத்தையாகக் கையாளப்படும் எந்த விஷயத்தைப் பார்க்கும்போதும் எனக்குள் பரவி விடுகிற பதட்டமும் கோபமும் இப்போதும் வந்தது. அவனருகே சென்று அதனைச் சரியாகத் திணித்து வைத்தேன். அவனிடம் சிறு சலனம்கூட இல்லை. எனக்குள் பெருமூச்செழுந்தது. மிகச்சிறிய வயதில் முதன்முதலாக நான் பணத்தைத் தொலைத்துவிட்டு வந்த தினத்தன்று அப்பா என்னைத் திட்டவில்லை, அடிக்கவுமில்லை. மாறாக, ராமநாதபுரத்தின் கொடூர வெயில் விளைந்து கிடக்கிற நிலங்களின் மீது அவரோடு சைக்கிளில் வியாபாரம் செய்ய அழைத்துச் சென்றார். சற்றே சிறிய பலசரக்கு பைகள் கொண்ட எனது சைக்கிளின் மீது, மூச்சில் கங்குகள் தெறிக்கின்றபோதெழும் உஷ்ணமெழ, நாங்கள் எதிர்காற்றுடன் போராடிக் கொண்டிருந்தோம். ஒரு நாணயத்தை சம்பாதிக்க எவ்வளவு தூரம் சைக்கிள் மிதிக்க வேண்டும் என்கிற கணக்கு எனக்குத் தெரிய வந்தபோது, நான் சட்டைப் பையின் குறுக்கே ஊக்கு குத்திக் கொள்பவனாகியிருந்தேன். தீபன் இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தான். செழிப்பான குடும்பப் பின்னணி கொண்ட அப்பாவிகளுக்கேயுரிய முகச்சாயல். சசிதரன் இப்போதும் என்னைப் பார்த்து சிரித்தபடியிருந்தான். அவன் சாய்ந்திருக்கும் லீலாவின் வெம்மையும் குழைவுமான நெஞ்சுப் பிதுங்கல்கள். ஏனோ, தீபன் அருகிலிருக்கும்போது எனக்கு லீலாவிடம் வழக்கமாக எழுகிற இச்சை துளிகூடக் கிளர்வதே இல்லை. இத்தனைக்கும் அவனை ஒரே விநாடியில் சரித்துவிட்டு முன்னேறிச் செல்கிற சூத்திரங்கள் தெரியாதவனல்ல நான். ஆனால் அந்த அப்பாவித்தனம் மிக்க முகம், அது என்னை எங்கோ தடை செய்கிறது. சசிதரனைப் பார்த்து லேசாகச் சிரித்துவிட்டு திரும்பவும் ரயில் வாசலருகே சென்று பார்வையை வெளியே கரைத்தேன். தோப்புகளின் விளிம்புகளிலும் எங்கெங்கும் தேங்கிக் கிடக்கும் நீர்மைகளிலும் அதிகாலை வெளிச்சம் சுடராகப் பற்றிக் கொண்டிருந்தது.

எங்களை சிங்கி விற்பவர்களெனக் கூறுவதுண்டு. சோடாபாட்டிலின் விளிம்புகளைக் கவ்வியிருக்கும் மூடிகளை, அவை உபயோகிக்கப்பட்டு நெளிந்து கிடக்கின்ற வீதிகளில் குப்பை அள்ளுபவர்களிடம் சல்லிசான விலைக்கு பொறுக்கி வாங்கிக் கொள்வோம். பிறகு, தீப்பெட்டி ஒட்டும் பெண்களிடம் சுத்தி தட்டித் தரச்சொல்லி வாங்கிக்கொண்டு, பின் தங்கிய கிராமப்பகுதியில் ஒரு சிலிண்டரும் பழைய வில்ஸன் கேஸ் அடிக்கும் பெட்டியுமாக சோடா கலர் சுற்றி விற்கின்ற சைக்கிள் வியாபாரிகளை இலக்காக்கிச் செல்வோம். நடப்பு விலைக்கு கால்பங்கு விலையான இந்தச் சிங்கிகளை வாங்கிக் கொண்டு எங்களுக்கு கருவாட்டுக் குழம்பும் சோறும் போட்டு இரவுகளில் அவர்களது வீட்டு வராண்டாவில் தங்க வைத்து விடிகாலை முதல் பஸ்ஸில் அனுப்பி வைப்பார்கள். வெறுங்காற்றிலிருந்து பட்டு நூலை உருவி எடுக்கின்ற வேலை. ஆனால் ஒரு சிங்கிக்காரன் வெறுமனே மஞ்சள் பையில் சிங்கிகளைச் சுமந்து செல்பவனல்ல. உதிரி உதிரியாகக் கிடைக்கின்ற செய்திகளைத் திரட்டித் திரட்டி, பழைய சிங்கிகளைச் செப்பனிட்டு மின்னச் செய்யும் நுணுக்கத்துடன் எங்களுக்குள் தொகுத்துக் கொள்வோம். மனம் முழுக்க க்ளிப் இடப்பட்ட தகவல் துணுக்குகளைக் கொண்டு, அழுக்கு வேட்டிசட்டையும் பழைய மஞ்சப்பையுமாக திரிகின்ற சிங்கிக்காரன் ஒரு நம்பகமான செய்தித்தாளாக மாறவேண்டும். சிம்மக்கல்லில் ரீபட்டன் அடிக்கின்ற டயர்களை கேரளாவின் எந்தப்பகுதி அரசு அலுவலக ஜீப்புகளுக்கு புது டயர் என கணக்குக் காட்டி வாங்கிக் கொள்வார்கள்; சாதாரணமான டார்ச் பேட்டரியை மொத்தமாகக் கொண்டு சென்றால் கீழக்கரையில் எந்த ஓட்டு வீட்டிலிருக்கும் சாய்பு ரெண்டு மடங்கு விலை கொடுத்து வாங்குவார்; பொள்ளாச்சியின் வெள்ளிமலையில் அதிகாலை பழலோடு ஏற்றிக்கொண்டு மலையிறங்கும் மெட்டடர் வேன்களில் லைசன்ஸ் இல்லாத காப்பிக் கொட்டைகளை எந்த டிரைவர் ரெட்டை கூலிக்கு பழக்கூடைக்குள் ஒளித்து ஏற்றிவரச் சம்மதிப்பான் என்பது வரை, இன்னும் சொல்லப்போனால் ஏற்றவே மாட்டேன் என திமிர் பிடிக்கும் அரசாங்க பஸ் கண்டக்டரை எந்தக் கண்ணியில் ‘சார்’ என விளித்து சாமர்த்தியமாக லக்கேஜை ஏற்றி வருவது என்பது வரை. வெளிப்பார்வைக்கு இவை ஏதோ மூணாம் நம்பர் மோசடி வேலைகளைப் போல் தெரியும். ஆனால் மனிதன் தனது கீழ்மைகளை வெளிப்படுத்தும் போதுதான் இன்னொரு ஆன்மாவுடன் நெருக்கமாகப் பிணைகிறான். இப்படி துண்டு துண்டான மனித மனங்களை, அவற்றுக்குள் நுழைவதற்கான ரகசிய வழிகளை ஒரு சிங்கிக்காரன் சேகரித்துக் கொண்டே இருப்பான். ஏனெனில் வெறுங்காற்றில் பட்டு நூலை இழுப்பதற்கு எவ்வளவோ உபவிஷயங்கள் தேவை. குறிப்பாக, காற்று மயங்கி நிற்க, நெகிழ்ந்து இசைய இந்தச் சிறிய கண்ணிகள் தேவை.

வேறெதோ காரியமாக போகலூர் வந்து, அங்கிருந்து திரும்பும்போது வெகு எதேச்சையாக பார்த்திபனூரில் நசிந்து கொண்டிருந்த மண்டியில் தீபனை நான் சந்தித்திருந்தேன். மானாவாரிக் காடுகள் சூழ்ந்த கிராமங்களுக்கேயான ஒற்றை கமிஷன் மண்டி. தனிக்காட்டுச் சிங்கமாக வளர்ந்திருக்க வேண்டிய மண்டியை தீபனால் எழச்செய்ய முடியாததற்குப் பல காரணங்கள் இருந்தன. ஒன்று அவனது மண்டி அவனது தாத்தாவின் காலத்தில் துவங்கப்பட்டு துளித்துளியாக பேராறாக மாறிய ஒன்று. இரண்டாவது காரணம் நீண்ட காலம் படிக்கச் சென்று விட்ட தீபன் அதனுள் நுழையும்போது அவனை அந்த ஸ்தாபனத்திற்கு ஆகிருதி மிக்கவனாகவும் வெகு சீக்கிரம் அதிலேயே புழங்கிய பழைய முகமாகவும் மாற்றுவதற்காக விரும்பிக் காத்திருந்த தீபனின் அப்பா எதிர்பாராமல் இறந்தது. இந்த இடைவெளியில் குறு, சிறு மண்டிகள் நிறைய முளைத்திருந்தன.

”நெல்ல குதிருக்குள்ள வச்சாதான் பழசாக பழசாக தங்கம். அரிசியைக் கொட்டி வைச்சா புழுதான வைக்கும்.”

பெருங்கலமொன்றை நடுக்கடலில் செலுத்தும் சிறுவனைப் போல தத்தித் திணறி தீபன் மண்டியில் தோற்கும் போதெல்லாம் இதனை முகத்திற்கு நேராகவே கூறத் துவங்கியிருந்தார்கள். சுத்தமான வியாபாரிக்கு இந்த வார்த்தைகள் நூறு செருப்படிக்குச் சமம். ஆனால் தீபன் இயல்பிலேயே மென்மையும் அதன் வழியான மெல்லிய பயந்த சுபாவமும் கொண்டவன். நான் அவனைச் சந்தித்த முதல் தினத்தன்று இப்படி யாரிடமோ தோற்றுவிட்டு நின்றிருந்தான். பணத்தை எண்ணியபடி, அவனது முட்டாள்தனத்தை அடியில் கசிகின்ற கேலியை மேவிய பரிதாப வார்த்தைகளாக உருமாற்றிச் சொல்லிக் கொண்டிருந்த நாகலாபுரத்து ஏஜண்ட் ஒருவனை நான் அவன் கசியவிட்ட அதே புன்னகையை அவனுக்குத் திரும்பத் தந்தபடி, ”சரிங்க சார், அடுத்த சீசன்ல சரி பண்ணிக்கறோம்” என்றேன். சார் என்ற வார்த்தையைக் கேட்ட பொழுதில் அவனுக்குள் விழுந்த சாட்டையடியைக் கண்கூடாகப் பார்த்தேன். ’சார்’ அவ்வளவு மோசமான கெட்ட வார்த்தை வணிக மண்டிகளில்.

தவறான காலத்தில் தவறான விலைக்குக் கொள்முதல் செய்யப்பட்ட நவதானிய மூடைகள் தகப்பனைச் சூழ்ந்திருக்கும் மக்குப் பிள்ளைகளைப் போல பம்மிக் கிடக்க தீபன் அதன் நடுவே அபத்தமான புன்னகையோடு நின்றிருந்தான்.

ஒரு சிங்கிக்காரனாக எந்த இடத்திலும் வெகு வேகமாக அங்கிருக்கும் பழைய பொருட்களுக்குள் ஒன்றாக உருமாறி விடுகின்ற தன்மை எனக்குக் கை கொடுத்தது. நவதானிய வணிகம் எனக்கு அவ்வளவு சம்பந்தமில்லாதது. ஆனால் ரெண்டு ரூபாய் வைத்தால் மூன்று ரூபாயாய் வருகின்ற எல்லா இடத்திற்கும் அடிப்படையான வணிக அறிவு ஒன்றுதான். ஒப்புநோக்க தீபனை விட லீலா சற்று துணிச்சலான பெண்ணாக இருந்தாள். தினசரி அவனுக்கு மதியச்சாப்பாடு கொண்டு வருபவளை மேலும் சற்று நேரம் கல்லாவில் உட்காரும்படி சொன்னேன். பெரும்பாலும் பெண்களை வருடம் ஒருமுறை புதுக்கணக்கிற்கு மட்டும் விடியும் முன் அழைத்து வந்து வெளிச்சம் பரவுவதற்குள் வீட்டிற்கு அனுப்பி விடுகிற மண்டிகளில் லீலா கல்லாவில் உட்கார்ந்திருக்கும் சித்திரம் அளித்த சிறிய மின்னதிர்ச்சி இன்னமும் நினைவில் நிற்கிறது. அதில் இரண்டு லாபங்கள் இருந்தன. முதல் விஷயம் தீபனது அறியாமையை எவ்வித சங்கோஜமுமின்றி வெட்டி வெட்டித் தின்று ருசிகண்டிருந்த வியாபாரிகள், லீலா இயல்பாக, ஆனால் கவனத்துடன் கேட்கின்ற “ஏன்?” என்கின்ற ஒரு கேள்வியில் சட்டெனக் கூசி நின்றார்கள். யானையைப் பெருங்குழிக்குள் தள்ளிவிட்டிருந்த காலத்தில் லீலாவின் வணிகம் சார்ந்த தலையீடுகளில் தென்பட்ட புதிய நம்பிக்கை அந்தப் படுகுழிக்குள் சிறிய பாதையை சக வணிகர்களிடம் தோற்றுவித்திருந்தது. அவள் பெரிய மாயமொன்றையும் அதற்குள் நிகழ்த்தியிருக்கவில்லை என்றாலும் எதைக்கேட்டாலும் சிரித்தபடி தந்துவிடுகிற தீபனுக்கும் ஒருமுறை யோசித்துச் சொல்வதாக அனுப்பி விடுகிற லீலாவுக்கும் இடையே உள்ள நிதானத்தின் வழியே அந்த நம்பிக்கையைத் திரட்டத் துவங்கியிருந்தாள். அந்த இடத்தில் நான் செய்த செயல்கள் பெருவிசையுடன் மோத வருகிற விலங்குகளிடமிருந்து சற்றே விலகி வழிவிட்டு அந்த விசையின் ஒரு துளியை இந்த குழியானைக்கு தைலமாகத் தடவித்தடவி நடக்க வைத்ததுதான்.

”இந்த வருஷம் ஆமணக்கு வேணாம் தீபன். விடு, காங்கேயத்துக்காரன் நேரா வந்து எடுத்துட்டு போகட்டும்.”

“அண்ணே, அப்பா காலத்திலருந்து அந்தத் தாலுகா நம்ம கொள்முதல்ண்ணே”

”விடு விடு. இந்த ஒருவாட்டி அவனுக கொள்முதல் பண்றப்ப வைக்கிற சூட்டில அடிவாங்கட்டும். சம்சாரிக அடுத்து எப்பவும் வெளிமார்க்கட் நிலவரத்தச் சொல்லி நம்மளக் காய்ச்ச மாட்டானுக. நம்ம மாட்டுக்கு நாமளே வச்சா அது சூடு. வெளி ஆளு வந்து வைச்சா அது வைத்தியம். பேசாம இரு.”

தீபன் கொஞ்சம் வருத்தமாகத்தான் கேட்பான். ஆனால் கல்லாப் பெட்டியின் இரும்பு கைப்பிடியைப் பிடித்தபடி கேட்கின்ற லீலாவின் கண்களுக்குள் இந்தப் பேச்சின் போதையை விரும்புகிற கிறக்கம் தெரியும். பராமரிமிப்பிலில்லாத தெய்வமொன்று புதிய குருதி வாசனையை நுகர்ந்தபடி கண்களில் ஒளிபடர ஒரு எட்டு முன்னால் எடுத்து வைத்து வருகின்ற கிறக்கம்.

லீலா தொடர்ந்து வெகு ஆர்வமாக மண்டிக்கு வர ஆரம்பித்தாள். வீட்டிலிருக்கும் சசிதரனைப் பராமரிக்க கிராமத்திலிருந்து வயதான பெண்ணை வீட்டோடு நியமித்துக் கொண்டாள். மண்டியின் மாடியறையிலேயே தங்கிக் கொண்டு ஒப்புக்கு சுற்றியிருக்கும் சில கிராமங்களுக்கு சிங்கிகளை விற்கச் செல்பவனாக; அப்படிப் போகும் போதும் வரும்போதும் நவதானியம் சார்ந்த சிறுசிறு தகவல்களைக் கூட களிமண்ணுக்குள் புதைந்திருக்கும் சிறிய நாணயத்தைக் கழுவிக் கழுவிக் கண்டடைவதைப் போல, தகவல்களை நாணயங்களாக உருமாற்றி லீலா வசம் ஒப்படைப்பவனாக நான் மாறியிருந்தேன். இந்த மிகக்குறுகிய காலத்தில் ஓர் அறுவடைக்காலம் முடிந்திருந்தது. முதன்முதலாக நட்டக்கணக்கு எழுதாத பேரேட்டை தீபன் எழுதியிருந்தான். லாபமுமில்லை, நட்டமுமில்லை. பெரிய கொள்முதல்களில் ஈடுபடாமல் அதனால் கௌரவத்திற்கென்று எதிர்கொள்கின்ற நஷ்டங்களைச் சந்திக்காமல் வேடிக்கை பார்க்கின்ற மனிதனைப்போல மண்டி இந்த அறுவடைக்காலத்தைக் கடந்திருந்தது. ஒருவகையில் இது வெற்றியும் கூட. இன்னொரு விதத்தில், வேடிக்கை பார்க்கின்ற மனிதன் அவனது முறை வரும்போது அடுத்து நிகழ்த்தப் போகின்ற செயலின்மீது இயல்பாகவே எல்லோருக்கும் ஏற்படுகின்ற எதிர்பார்ப்பு. லீலா எனது முகத்தை அடிக்கடி நோக்கியிருந்த அந்நாட்களில் வெளியூர் நபர்கள் செய்கின்ற கொள்முதலில் சம்சாரிகள் அடைந்த உள்ளூர் இழப்புகளைப் பற்றி வெளிப்படையாகப் பேச்சுகள் எழுந்து வந்தன. நான் புன்னகையோடு மாடி ஜன்னல் வழியாக, தீபனது மண்டியை நோக்கி அப்பாவிகளைப் போல முகத்தை வைத்து வருகின்ற சம்சாரிகளை புகை கசியப் பார்த்தேன்.

புதிய முகவரிகளோடு புதிய சாக்குக் கட்டுகள் மண்டிக்கு வரத் துவங்கியிருந்தன. சுற்றியிருக்கும் கிராமங்களின் சரக்குகளை தங்களது சார்பாகக் கொள்முதல் செய்து அனுப்பும்படியான கோரிக்கைகளோடு; அதற்கான முன்வைப்புத் தொகைகளை வங்கியில் செலுத்தியிருப்பதற்கான நகல்களோடு.

மீண்டு கொண்டிருப்பதற்கான மகிழ்ச்சிகள் மண்டியில், தீபனிடத்தில், லீலாவின் உற்சாகத்தில் வெளிப்படையாகத் தெரியத் துவங்கியிருந்தன. ஆனால் எனக்குள்ளே எதுவோ ஒரு சிறிய உடைப்பு நிகழ்ந்திருப்பதாக உணர்ந்தேன். அதை என்ன என்னவெனத் துருவித் துருவி லீலா என்கிற பதிலை வந்தடைந்தேன். ஆம், லீலா. அந்த உற்சாகமான சிரிப்பிற்குப் பின்னிருக்கும் தைரியம் என்னுடையது. அதனை எண்ணும்போது கிளர்ச்சியான புல்லரிப்பை உணர்ந்தேன். மருந்திடும்போது கண்களைப் பார்க்கக்கூடாது என்பார்கள். அந்தக் கணத்தில் எதைக் கேட்டாலும் தந்துவிடுவதாகத் தவிக்கின்ற அந்தக் கண்கள், மருந்திடுபவனை முடமாக்கி அமரச் செய்வது; அலையச் செய்வதுவும் கூட. ஆனால் மருந்திட்டபடி, கலங்கித் தவித்த கண்களை நான் ரகசியமாகப் பார்த்திருந்தேன்.

உள்ளே எந்த எண்ணமுமில்லாமல் தன் மார் மீது எதேச்சையாக இடித்து விடுகின்ற முழங்கைக்கும், உள்ளே தீயாகக் கொதித்து அவளை எண்ணியபடி அவளைத் தீண்டாமலே விடுகின்ற மூச்சுக்காற்றிலிருக்கும் வேட்கையின் வாசனைக்கும் பெண்கள் எளிதாக வித்தியாசம் கண்டு விடுவார்கள். நடுத்தர வயது தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் இப்படி அலைந்து ருசி கண்டுவிட்ட எனக்கு, லீலா நாடோடிக்குக் கிடைக்கின்ற சிறிய இறைச்சித் துண்டு. எனது இந்த மாற்றத்தை, இந்த நோக்கத்தை லீலா துல்லியமாகக் கண்டு விட்டிருந்தாள். என்னிடமிருந்து அவள் கற்றுக் கொள்வதற்கான நுட்பங்களை முன்னிலும் இரண்டு மடங்கு வேகத்தில் மிகப்பதட்டமாக எடுக்கத் துவங்கினாள். அதற்கு இணையாக அவள் மீதான எனது இச்சைகளை நானும் அவ்வப்போது அவளறிய பகிரங்கப்படுத்தினேன்.

அதுவரை பிரதிபலன் எதிர்பார்க்காத எனது இருப்பில், லீலாவை வைத்தவுடன், இயல்பாக அந்த மண்டியில் பரந்துபட்ட தன்மையுடன் சுறுசுறுப்பாகவும் சுதந்திரமாகவும் இயங்கிய சிங்கிக்காரனை நான் உள்ளூர இழக்கத் துவங்கியிருந்தேன். தீபனே ஆச்சர்யப்படுமளவிற்கு வியாபாரக் கணிப்பில் எனது சில தடுமாற்றங்கள் இருந்தன. அவனது அதிகப்படியான திடுக்கிடுதலே ஆச்சர்யம்தான். ஆனால் லீலாவிற்கு இது குரூரமான அறைகூவலாகப் பட்டது.  சரிந்து கொண்டே இருந்ததற்கு நடுவே இந்தச் சிறிய ஆசுவாசம் தந்திருந்த நம்பிக்கையை ருசிக்கப் பழகியிருந்த அவளுக்கு கடந்த காலத்தை மறுபடி வாழத் துணிவேயில்லை. ஆனால் அவளுக்குத் தெரிந்திருந்தது, என்னை இப்போது சிதையச் செய்திருக்கிற இந்த நெருப்பிற்கு எண்ணெய் வார்ப்பது எல்லாவற்றையும் அழித்து முன்னேறுமே தவிர அணையாது என்று.

நான் ஓரமாக அமர்ந்திருக்க, தீபனோடு இணைந்து சில கொள்முதல்களை லீலா நேரடியாக முயன்று சில இடங்களில் சறுக்கினாள். சில இடங்களில் மிதமான வெற்றியைக் கண்டாள். மிக அபத்தமாக அவள் தோல்வியடைந்த இடங்களிலெல்லாம் நான் சிரித்துக் கொண்டேன். ஒரு சிங்கிக்காரனாக அத்தகைய சிரிப்புகளை ஒருபோதும் விரும்புபவனல்ல நான். ஆனால் எனக்குள் அவிழ்த்தறிய முடியாத கால்கட்டு எதுவோ நேர்ந்து விட்டிருக்கிறது. ஒரு மோசமான சுமை. என்னையும் சேர்த்து மூழ்கடிக்கிற சுமை.

தனது வியாபாரத்தில் லீலாவின் துணையோடு தீபன் கொள்கின்ற ஒவ்வொரு எளிய வெற்றிகளின் போதும் நான் சீண்டப்பட்டேன். லீலாவிடம் மெல்ல மெல்ல ஒளிர்கின்ற ஆளுமையின் வெளிச்சத்தில் நான் வெறியூட்டப்பட்ட கிளர்ச்சி அடைந்தேன். கொம்புகள் பின்னி இருக்க, உடைத்து தெறித்துவிடும்படி இரண்டு ஆடுகள் சண்டையிடுவதைப்போல நானும் லீலாவும் அறிவால் மோதிக் கொண்டோம். வெகு சீக்கிரம் கோடை அறுவடைச் சரக்குகள் மண்டிக்கு வரவிருக்கின்ற சூழலில் லீலா எத்தகைய ஆபத்தோடு விளையாடுகிறாளென ஒருகணம் பரிதாபம் தோன்றி மறைந்தது. இந்தச்சமயத்தில் சசிதரன் மேலும் நோயுற்று வீட்டில் மயக்கமாகி அவளைப் பதறச்செய்தான். வீட்டிற்கும் கடைக்குமாக அவள் அலைந்தபடி இருக்க, தீபன் திருவனந்தபுரம் கோயிலுக்கருகேயுள்ள வாத நீக்கம் செய்கின்ற ஆயுர்வேத  மருத்துவமனையைப் பற்றி என்னிடம் விசாரித்துச் சொல்லச் சொன்னான்.

ஜங்ஷனிலிருந்து ஆட்டோ வைத்து இங்கே அழைத்து வந்தேன். வழிநெடுக சசிதரன் வாந்தி எடுத்தபடியே வந்தான். ஒரு பழைய பங்களாவை மருத்துவமனையின் கிளை அலுவலகமாக மாற்றியிருந்தார்கள். இருளும், கசப்பான பச்சை மருந்தின் நெடியுமாக அந்தப் பங்களா மேலும் எரிச்சலூட்டும் இடமாக இருந்தது. வாசலில் இருந்த கொன்றை மரத்திற்குக் கீழே உறங்கிய மலையாளி ஒருவன் குடிபோதைக்கிடையே ”பாண்டி, தூ..தூ..”வெனத் துப்பிக்கொண்டே இருந்தான். சசிதரனுக்கு சில துவக்க நிலை சிகிச்சைகள் ஆரம்பித்திருக்க, மயக்கத்திலிருந்தான். தீபனும் லீலாவும் உள்ளே அவனுடன் அமர்ந்திருக்க சிகரட்டைத் துழாவியபடி வெளியே வந்தமர்ந்தேன். கொன்றையிலிருந்து வெட்கத்துடன் மலர்கள் உதிர்ந்தபடி இருந்தன.

மதியத்திற்கு மேலாகவே, சசிதரன் நான்கு நாட்கள் அங்கே தொடர்ந்து இருக்க வேண்டுமெனக் கூறிவிட்டார்கள். நாங்கள் இதனை எதிர்பார்க்கவில்லை. இன்னும் இரண்டு நாளில் புதுவெள்ளாமையின் முதல் அறுவடைச் சரக்குகள் மண்டிகளுக்கு வருகின்ற சமயம். நம்பி முன்பணம் கட்டியுள்ள வெளியூர் வியாபாரிகளுக்கு அதனை நின்று ஏலம் எடுத்து ஏற்றிவிட வேண்டிய பொறுப்பு தகித்தது. அதிலும் நீண்ட காலங்களுக்குப் பிறகு, என்ன செய்கிறார்களெனப் பார்க்கலாம் என சிறிய மீனைப் போடுவது போல ஒரு வாய்ப்பைத் தந்து வேடிக்கை பார்க்கிற வெளியூர் மண்டிகள். ரொம்ப நேரம் யோசிக்காமலே தீபன் தான் இருந்து கொள்வதாகச் சொல்லி விட்டான். வழக்கம்போல உள்ளே பயந்துவிட்டு அதை வெளியே தயக்கமில்லாமல் தர்மசங்கடமாக வெளிப்படுத்துகிற புன்னகை அவன் முகத்தில். லீலா சசிதரன் மீதான பதைப்போடும் தீபன் மீதான சோர்ந்துவிட்ட நம்பிக்கையோடும் தளர்ந்துபோய் மதியச் சாப்பாட்டைப் புறக்கணித்து அமைதியாக இருந்தாள். இதற்கிடையே மண்டியிலிருக்கும் பணியாட்கள் இடையிடையே அவளை அழைத்து அங்கொன்றும் இங்கொன்றுமாக மாட்டு வண்டிகளில் கட்டி வரப்படுகிற தவசங்களின்* வருகையைச் சொல்லி அவளைப் பதற வைத்தனர். அவை பேராற்றின் வருகைக்கு முன்பான சமிக்ஞை. இந்தச்சிறிய துவக்கத்திலிருந்து வெள்ளாமை முடிவது வரை எந்த மண்டியிலும் குண்டு பல்பு கூட அணைக்கப்பட்டு ஓய்வெடுக்க முடியாது. எனக்குள், மகா சந்தர்ப்பம் கனிந்து வந்ததாக மனம் பொங்கியபடியிருந்தது.

சாயங்கால எக்ஸ்பிரஸ்ஸிற்கு டிக்கெட் எடுத்திருந்தேன். லீலா சசிதரனுக்கும் தீபனுக்குமான அடிப்படைத் தேவைகளை திரும்பத் திரும்பச் சரிபார்த்து திருப்திப்பட்டுக் கொண்டே இருந்தாள். ஃப்ளாஸ்க், ஸ்வெட்டர், சசிதரனுக்கு வைக்கிற பேட், இருவருக்குமான ஒவ்வொரு வேளை உணவு, கையிருப்பில் இருக்கின்ற தொகை, தீபனிடம் இருக்கின்ற சசிதரனின் மருத்துவக் குறிப்புகளை எப்போது எந்த டாக்டரிடம் காட்ட வேண்டுமென்பதற்கான திட்டமிடல், அதனை தீபனுக்குத் திரும்பத் திரும்பக் கூறிப் புரியவைப்பது என எல்லாமும்.

கையில் சிறிய பை ஒன்றுடன் கொன்றை மரத்திற்குக் கீழே தீபனிடம் அவள் விடைபெற்றுக் கொண்டிருந்தாள். நான் கூட்டி வந்திருந்த ஆட்டோ வெளியே சுண்டிக் கொண்டிருந்தது. சீக்கிரமே இருள் கவியத் துவங்கிவிட்ட வானத்திற்குக் கீழே கொன்றை மரம் கிளையெங்கும் கங்குகளென மலர்ந்திருக்கும் பூக்களோடு நின்றிருந்தது.

மெல்லிய வெளிச்சங்கள், பொங்கி வெளியேறும் காற்று என எக்ஸ்பிரஸ் இரவுக்குள் போய்க்கொண்டிருந்தது. இரவின் அழகிய பக்கங்களிலொன்று இரயிலுக்குள் இருக்கிறது. அலைபாய்ந்த முடிக்கற்றைகளை ஒதுக்கிவிட்டபடி பொறுமையாக இரவுணவை உண்டு கொண்டிருந்தாள் லீலா. முகத்தில் மிருதுவான உலர்ந்த தன்மையும் லேசாகி விட்டவளைப் போன்ற விடுதலையுணர்வும் வந்திருந்தது. சாப்பிட்டு முடித்துவிட்டு, வாசலருகே புகைபிடித்தபடி இருளில் நகர்கின்ற டியூப்லைட் சித்திர கிராமங்களைப் பார்த்துக் கொண்டிருந்த என்னைப் பார்வையாலே அழைத்தாள். சாதாரண ஒரு தினத்தில் வெகு சாதாரண அழைப்பு அது. ஆனால் இப்போது அவளது அசைவுகள், பார்வைகள் ஒவ்வொன்றிலும் கூர்மையான பளபளப்பை உணர்த்தினாள். தலைமுடியை, சட்டை பொத்தான்களை லேசாகச் சரிசெய்தபடி அவளருகே சென்றமர்ந்தேன். சிறிய நோட்டை விரித்து வைத்து எழுதியபடி கேட்டாள்,

 “தவசத்துக்கு பெரிசா எழுத்து வர்லயே. கொள்முதல் செஞ்சா அடிவிழுமா?”

எனக்குள் சட்டென ஒரு ஒழுங்கு நுழைந்துவிட்டதைப் போல கண்ணைச் சுருக்கி நோட்டில் அவள் எழுதுகிற, தவசம் கொண்டுவருவதாகச் சொன்ன சம்சாரிகளின் பெயர்களைப் படித்துப் பார்த்தேன்.

இந்த அளவிற்கு முன் கொள்முதலில் உடனே விற்காத சரக்கை வாங்கி வைத்தால் நிச்சயம் அடி விழும். அந்தப் பட்டியலில் எந்தெந்த சம்சாரிகளின் பெயர்களை நீக்குவதென யோசித்தபடியே உன்னித்தேன். ஆனால் ஒவ்வொரு விளைநிலப் பகுதிக்கும் ஏதாவதொரு பொருள் பிள்ளையார் சுழி போல முதல் குழந்தையாக மண்டிக்கு வரும். அது முடமோ அவலட்சணமோ அதை மனதார அள்ளி எந்த வியாபாரி அணைத்துக் கொள்கிறானோ அல்லது மகிழ்வதாகப் பாவனை செய்கிறானோ அவனது மண்டிக்கு அடுத்தடுத்து பொன்னும் பொருளும் பயிர்களாக, தானியங்களாக வந்து குவியும். அது ஒரு பலி கொடுக்கும் கொள்முதல். ஆனால் இப்போதுதான் எழுந்து கொண்டிருக்கும் மண்டியில், ஒவ்வொரு தானியத்தையும் உடனடி பொன்னாக்கிக் காட்டவேண்டியிருக்கின்ற இந்த நேரத்தில் எந்தவொரு முதலீட்டிலும் அநாவசிய தேக்கம் நேர்ந்துவிடக்கூடாது. நான் சில சம்சாரிகளின் பெயர்களைச் சுட்டினேன். லீலா அவளது அனுபவத்திலிருந்து சிலரைக் குறிப்பிட்டாள். பிறகு, நான் குறிப்பிட்ட சம்சாரிகளுக்குள் ஒன்றிரண்டு பெயரைச் சுட்டி, “இவங்களைத் தவிர்க்க வேணாம்னு தோணுது” என்றாள். ”கோடை அறுவடைச் சரக்குல எந்தத் தள்ளுபடியும் போட முடியாது. மழை சிதைக்காம ஒவ்வொண்ணும் முத்து முத்தா வந்து நிக்கும். இதுல இருக்க சம்சாரிக எல்லாம் பெருங்கொண்டவனுக; ஆனா எடை போட்டவுடனே காச நீட்டணும். தவசம் இப்ப சீசனுமில்ல.”

லீலா குனிந்தபடி எதையோ கூட்டி எழுதினாள். பிறகு,

“லாபத்துல நட்டம் விழும். அப்படி நட்டம் விழும்ங்கறது இந்த சம்சாரிகளுக்கும் தெரியும். தெரிஞ்சேதான் இந்த நட்டத்தை சுமக்கறோம்ங்கறத அவங்களுக்கு உப்பு ஒறப்பா புரிய வைக்கணும். ஏன்னா நாகலாபுரத்துலருந்து விளாத்திகுளம் வரைக்கும் அடுத்தடுத்து வரப்போற மல்லிக்கும் வத்தலுக்கும் இப்ப இவங்ககிட்ட நம்மபேர்ல உண்டாக்குற கரிசனந்தான் தூண்டில் புழு. ஒருவகையில இது நட்டம் கூட கிடையாது. அந்த கரிசனத்துக்கான முதலீடு.”

லேசாக மின்னதிர்ச்சி பட்டவனாக நான் திகைத்து விட்டிருந்தேன். பக்கத்து பெர்த்தில் விளக்கை அணைத்து தூங்கப்போன நபர் ஒரு மந்திரக்காரி போல முகம் காட்டாமல் சீராகப் பேசிய லீலாவின் குரலால் சுவிட்சில் கைவைத்தவராக தன்னை மறந்து வாய் பார்த்துக் கொண்டிருந்தார்.

கரிசனத்திற்கான முதலீடு என்னும் வார்த்தையில் நான் எதையெதையோ பொருத்திப் பார்த்துக் கொண்டே சென்றேன். விடை சரியாக, படு துல்லியமாக வந்தபடியிருந்தது. வணிகத்தின் மீதான லீலாவின் விருப்பங்கள் அவளுக்குள் வேட்கையாக இளகிக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் இவை. மதிப்பிட முடியாத உணர்வுகளுக்கு விலை வைப்பது. ஒரு வலுவான வியாபாரிக்கு இவை கடைவாய்ப் பற்கள் போல; இதில் அரைபட்டுக் கூழாகாத மனிதர்களே கிடையாது. குனிந்தபடி எழுதிக் கொண்டிருக்கும்போது இயல்பாகவே கையசைவிற்கேற்ப விம்முகின்ற அவளது முலை மேடுகளின் வசீகரத்தின் மீது லேசான அச்சம் எழுந்தது. நான் மேலும் கவனமாக அவளது குறிப்புகளைத் தொடர்ந்தேன். சின்னச் சின்ன முன் திட்டமிடல்கள். ஆனால் வெகு ஸ்திரமானவை. சிறிய சூறாவளி போல மண்டியில் வந்திறங்கும் எல்லாச் சரக்குகளையும் ஏலம் கேட்க முடியாதென்றாலும் ஒரு ஆளாக வலுவாகப் போய் நிற்கலாம் என்கிற அளவிற்கான  தைரியத்தைத் தருகின்ற முன்திட்டமிடல்கள்.

“சீக்கிரம் பழசாகணும்னு அடிக்கடி சொல்லுவீங்க. அது நல்ல பாயிண்ட்; நான் கவனிச்சிருக்கேன். எனக்கெல்லாம் இன்னும் நாளாகும். இல்ல?”

கெட்டியான கொய்யாக்காயைப் போன்ற புடைத்த நெற்றியின் நடுவே ஒரு மின்னல் நரம்பு ஓட சிரித்தபடி கேட்டாள் லீலா. தன்னுடைய சுதந்திரத்தை முழுமையாக உள்வாங்கியபடி, அதன் சாத்தியங்களை கனவு காண்கின்ற பெண்ணின் கண் முன்னே ஆண் எவ்வளவு அற்பமாகி விடுகிறான். ஆர்வமும் சுறுசுறுப்பும் மிக்க முகத்தில் லேசாக இறங்கத் துவங்கியிருக்கின்ற வணிகத்தின் குரூரம் அற்புதக் கலவையாக மாறி பெரும்போதையை மிளிரச் செய்தது.

“ஆனா சீக்கிரம் பழசாகிடுவேன். நல்லா பழைய கருங்கல் சிலையாட்டம்.”

நான் என்னையறியாமலேயே ஆமாமெனத் தலையாட்டினேன். பெரும்பகுதி விளக்கணைக்கப்பட்ட கம்பார்ட்மெண்டில் லீலாவின் முகத்தில் சிறிய சிறிய துண்டுகளாக வெளிச்சம் படிந்து விலகியபடியிருந்தது. நான் உறங்கும் முன்னாக பைகளை கவனமாகப் பத்திரப்படுத்தத் துவங்கினேன்.

”ரொம்ப சீக்கிரமே நீங்க சொல்லிக் குடுத்தீங்க. அதான் விஷயமே” எனச் சொல்லிவிட்டு குழந்தையைப் போல சிரித்தாள்.  நெற்றியில் முத்தம் கொடுத்திருந்தால் கூட ஒன்றும் சொல்லியிருக்க மாட்டாளெனத் தோன்றியது.

ஆனால் கரிசனத்திற்கான முதலீடு என்கிற வார்த்தை எங்கோ மிக மோசமாக அவள் மீதான எனது வேட்கைகளை அவமானப்படுத்தி வீழ்த்திக் கொண்டிருந்தது.

“நீங்க தந்த தைரியமும் கூட. எதனாலேயும் வெல்ல முடியாத மனிதன் கிட்ட நிக்கறப்ப வர்ற தைரியம். அதை உங்ககிட்ட தீபனும் நானும் உணர்ந்தோம்.”

எனக்குள் எங்கெங்கோ வெகுவேகமான கணிதப் பிழைகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அவள் மேலும் சற்று நேரம் அமைதியாக வெளியே பார்த்தாள். இருளுக்குள் அமிழ்ந்த அவளது முகத்தின் கூரான விளிம்புகளில் ஒரு சொட்டு வெளிச்சம் பால் போல் தேங்கியிருந்தது. அவளது கையை அப்போது பற்றியிருந்தால் புன்னகையோடு இசைந்திருக்கக்கூடச் செய்வாள். ஆனால் அதனைத் தீண்டுவதற்கான தகுதிக்கு வெளியே என்னை பிரம்மாண்டமாக நிறுத்தி விட்டிருந்தாள். அப்படி உணர்ந்து ஏதோ ஆசுவாசம் அடைந்த கணமே, கரிசனத்திற்கான முதலீட்டை உச்சரித்த போது மின்னிய அந்தக் கண்கள் என்னை மீச்சிறு மனிதனாக வெளியேற்றி விட்டதாகத் தோன்றியது.

தனது கைப்பையில் குறிப்பு நோட்டையும் பேனாவையும் வைத்துவிட்டு அமைதியாக ஜன்னலில் சாய்ந்தபடி உறங்கத் துவங்கினாள். வாசலில் நின்று எண்ணற்ற சிகரட்டுகளை நான் புகைத்தபடியிருந்தேன்.

க்ராஸிங்கிற்காக நள்ளிரவில் ஏதோ ஒரு குக்கிராம ஜங்ஷனில் ரயில் நின்ற வினாடி நேர அவகாசத்தில் எனது சிறிய பையோடு நான் இறங்கி விட்டிருந்தேன். நான் பார்க்கப் பார்க்க ஜன்னல் கம்பியில் உறங்குகிற லீலாவின் முகம் மெதுவாக நகர்ந்து போகத் துவங்கியிருந்தது. விடிவதற்கு இன்னும் நேரம் மிச்சமிருக்க ரயில் சென்றுவிட்ட தண்டவாளங்களில் எழுகின்ற இரும்பின் வாசனையை நுகர்ந்தபடி சிமிண்ட் இருக்கையில் தளர்ந்து அமர்ந்தேன். லீலா கண் விழிக்கும்போது அடைகின்ற அதிர்ச்சியும் அந்த அதிர்ச்சியைத் தொடர்ந்து வருகின்ற நிதானமும் இருளுக்குள்ளே புகைப்படமாய்த் தோன்றின. தூர கிராமத்திற்குச் செல்வதற்கான சாலையின் தடம் இருளுக்குள் மெல்ல மெல்லத் தெளிந்து வந்தது.

*****

*தவசம் – கம்பு வகைகளில் ஒன்று. குறிப்பான பெயர்: நாட்டுக்கம்பு அல்லது புல்லுக்கம்பு.

https://vallinam.com.my/version2/?p=7681

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல உணர்வுபூர்வமான கதை......ஒருத்தரிடம் முகத்துக்கு நேரே சொல்லாமல் உனக்குரிய இடம் அதுவரைதான் என்பதை குறிப்பால் உணர்த்தும் தந்திரத்தையும் லீலா கற்றுக்கொண்டாள் ......நன்றி கிருபன்......!   🤔

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.