Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வீடே முதற் பள்ளிக்கூடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

வீடே முதற் பள்ளிக்கூடம்

by vithaiAugust 9, 2021057
cov.jpg

கொரோனா நிலமைகள் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேல் மிகக் குறைவான நாட்களே பள்ளிக் கூடங்கள் இயங்கின. நீண்ட லொக்டவுனுக்குப் பின் பாடசாலை வந்த மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்கொண்ட சிக்கல்கள் கவனப்படுத்தப்பட வேண்டியவை. ஆரம்ப வகுப்பு மாணவர்களை எடுத்துக் கொண்டால் முதலாம் வகுப்புப் படிக்க வேண்டிய ஒரு மாணவர் நேரடியான பள்ளி அனுபவம் குறைந்து இரண்டாம் வகுப்பிற்குச் செல்கிறார். புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் ஐந்தாம் வகுப்பிற்கான முழுமையான கற்பித்தல் இன்றியே பரீட்சை எழுதியிருக்கிறார்கள். சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் கிராம மட்ட மற்றும் சிறுநகர பாடசாலைகளின் சித்திவீதம் மற்றும் தரவரிசை முன்னிலையாகிருக்கிறது என்பதான கருத்தும் சமூகத்தில் நிலவுகின்றது. மாணவர்களை பரீட்சை மையப்படுத்தி சிந்திக்கும் ஒரு கல்விச் சமூகம் அப்படித் தான் தனது கல்வியின் தரத்தை மதிப்பிட்டுக் கொள்ளும். நடைமுறையில் உள்ள கல்வியமைப்பையும் பரீட்சைகளையும் முழுதாக நிராகரித்து நாம் உரையாடலை வளர்த்தெடுக்க முடியாது. அதனால் கல்வியின் சாரமான நோக்கங்கள் குறித்தும் சில பண்புகள் பற்றியும் சில அவதானங்களை முன் வைக்கிறேன். நடைமுறையில் உள்ள கல்வியமைப்பையும் பரீட்சைகளையும் முழுதாக நிராகரித்து நாம் உரையாடலை வளர்த்தெடுக்க முடியாது. அதன் தன்மைகளை விளங்கிக் கொள்வதும் அவற்றை எப்படி மேம்படுத்துவது மாற்றியமைப்பது என்பது பற்றியுமே இக் குறிப்பு கவனம் கொள்கிறது. அதனால் கல்வியின் சாரமான நோக்கங்கள் குறித்தும் சில பண்புகள் பற்றியும் சில அவதானங்களை முன் வைக்கிறேன்.

கல்வியானது பரீட்சை மைய நோக்கிலானதா என்றால் ‘இல்லை’ என்பதே பதில். கல்வி வாழக் கற்றுக்கொடுக்கும் அறிதலை நோக்கிய செயல். அது ஒரு கூட்டு உரையாடல். ஆசிரியர்களும் மாணவர்களும் சமூகமும் தனது சந்ததிகளுக்கு அவர்களின் வாழ்க்கையை வாழத் தேவையான அறிதலைப் பகிர்தலே கல்வியின் செயல் நோக்கம். ஆகவே லொக்டவுன்களை நினைத்து கலவரமடையாமல், மாணவர்கள் கல்வியை இழக்காமல் செய்ய என்ன வழியென்பதையே நாம் சிந்திக்க வேண்டும். முக்கியமான அடைவுப் பரீடசைகளில் பரீட்சை நோக்கியதாக வகுப்புகளை எடுப்பதும் ஆலோசனைகளை வழங்குவதும் நடைமுறையில் முக்கியமானது. குறிப்பாக சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கு மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கலாம். மற்ற மாணவர்கள் அவர்களுக்கான அடிப்படைத் தேர்ச்சிகளைக் கற்றுக்கொள்ளச் செய்வதே இப்போதைக்கு போதுமானதும் சாத்தியமானதும்.

வீடே பெரும்பாலான குழந்தைகளின் முதற் பள்ளிக்கூடம். குழந்தைகள் அங்கிருந்து தான் தனது ஐந்து வயது வரையான அடிப்படைத் தேர்ச்சிகளைக் கற்றுக் கொள்கிறார்கள். அதற்கான ஆசிரியர்களாக அப்பா, அம்மா மற்றும் சமூகமும் செயற்படுகின்றனர். குழந்தைகளின் ஐந்து வயது வரையான காலகட்டம் மிகவும் முக்கியமானது. குழந்தைகளுக்கு பூமி பற்றிய முதல் அறிதல்கள் வீட்டுச் சூழலியே கிடைக்கின்றன. புலன்களின் வழி உலகை அறிதல், பொருட்களை, சம்பவங்களை நினைவில் வைத்துக் கொள்ளுதல், பயவுணர்ச்சி, அழகுணர்ச்சி பற்றிய அறிமுகம். மொழி, விளையாட்டு என்று அவர்களின் அகம் தனது அடிப்படையான இயல்புகளை அவ்வயதிலேயே தொகுத்துக்கொள்ள கொள்ள ஆரம்பிக்கின்றனர். அனுபவழிக் கற்றலே முதலாவதான கற்றல் வழிமுறை. முயன்று தவறிக் கற்கும் அனுபவம் வழியான கற்றல் அது.

அதன் பின் வடிவமைக்கப்பட்ட கற்றல் பொறிமுறை ஒன்றினூடாக அனைவரும் கல்வியளிக்கப்படுகிறார்கள். அவர்களிற்கு கல்வியளிக்கும் மையமே பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களும். நாம் எத்தகைய மனிதரை உண்டாக்குவதற்கான கல்வி நோக்கத்தைக் கொண்டிருக்கிறோம்? சுதந்திரமான மனிதராக ஒருவருக்கு வாழ உரிமையிருக்கிறது என்றால் அவர் அடிப்படையில் இந்த அமைப்பை கேள்வி கேட்கும் உரிமையுள்ளவர். சமூக அமைப்பில் உள்ள பிற்போக்குத்தனங்களைக் களைந்து சமத்துவமும் சுயமரியாதையையும் கொண்ட சமூகத்தினை உருவாக்கவே நாம் கல்வியை அளிக்க வேண்டும். இன்று அப்படியான நோக்கத்தை மனதில் கொண்டா கற்றலை நிகழ்த்துகின்றோம், இல்லை. பரீட்சை மையக் கல்வி மனப்பாடக் கல்வியாக இருப்பதனால் பெரும்பாலான குழந்தைகள் கற்பனைத் திறனை விரைவில் இழந்து விடுகிறார்கள். எளிமையாகச் சொன்னால் சுயநலவாதிகளை உற்பத்தி செய்கின்றோம். அவர்கள் இருக்கின்ற அமைப்பை மீறத் தயங்குகிறார்கள். இந்த சமூகத்தின் அசமத்துவமான மற்றும் ஒடுக்குமுறை வடிவங்களைக் கூட இயல்பு / இயற்கையானது என்று குழந்தைகள் நம்பத் தொடங்குகிறார்கள். உதாரணத்திற்கு ஒரு பெண் குழந்தை வீட்டு வேலைகள் செய்தல், சமையல் பழகுதல் போன்றன இயல்பானது. அவை ஆண் குழந்தைகளுக்கான வேலைகள் இல்லை என்பது பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் மூளையில் இருக்கும் கருத்து. ஆனால் நாம் கற்றலின் போது சமத்துவமாய் வேலைகளைப் பகிர்வது பற்றியே கவனம் கொள்ள வேண்டும். இது போன்ற பல உதாரணமான அன்றாட வாழ்க்கை விசயங்களில் குழந்தைகளை நாம் கற்பிக்கும் எண்ணக்கருக்கள் மூலம் சுயநலவாதிகளாக மற்றவர்களின் நிலமைகளையும் நெருக்கடிகளின் தன்மையையும் விளங்க முடியாதவர்களாக ஆக்குகிறோம். இந்த சமூகத்தின் அசமத்துவமான மற்றும் ஒடுக்குமுறை வடிவங்களைக் கூட இயல்பு / இயற்கையானது என்று குழந்தைகள் நம்பத் தொடங்குகிறார்கள்.

சிறுவயதில் இருந்தே அவர்களின் கேள்விகள் அவமதிக்கப்பட்டே வரும் பொழுது அவர்கள் கேள்வி கேட்கும் ஆர்வத்தை இழக்கிறார்கள், எப்படி சரியான மற்றும் ஆழமான கேள்விகளைக் கேட்கலாம் என்ற பயிற்சியையும் இழக்கின்றனர். இதனால் மெல்ல மெல்ல பகுத்தறியும் தன்மையை இழக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒரு குழந்தை சிறுவயது முதல் மதத்தையும் விஞ்ஞானத்தையும் ஒன்றாகவே கற்கிறார். ஆனால் இரண்டும் அடிப்படையில் உலக உருவாக்கத்தைப் பற்றியும் நம்பிக்கைகள் சார்ந்தும் வேறு பாடப்பரப்புகள். இதில் ஏதோ ஒன்று தான் உண்மையாக இருக்க வேண்டும். உலக உருவாக்கத்தைப் பற்றி ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு மாதிரிச் சொல்லும், விஞ்ஞானமும் வேறு வேறு கருத்துகள் நிறைந்தது. குறைந்த பட்சம் விஞ்ஞானத்திற்கும் மத நம்பிக்கைகளுக்கும் இடையிலான உரையாடலுக்கான வாய்ப்பு மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறதா, பெரும்பாலும் இல்லை. இவ்வளவு நாள் பட்டிமன்றம் நடத்துகிறார்கள், கடவுள் நம்பிக்கை எதிர் பகுத்தறிவு என்று எத்தனை பட்டிமன்றம் பேசியிருக்கிறார்கள். இங்கு பகுத்தறிவு என்பதை நாத்திகமாகச் சுருக்கக் கூடாது. பகுத்தறிவென்பது ஆன்மீகத்தின் பல்வேறு வழிமுறைகள் பற்றிய உரையாடல்களைக் கொண்ட தொகுப்பு.

இந்த உதாரணத்தின் பின்னணியில் நாம் மாணவர்களின் கேள்வி கேட்கும் பகுத்தறியும் அடிப்படை அறிதல் முறையை மறுத்து, மதத்தில் சொன்னதைப் பாடமாக்கி பரீட்சையில் எழுது, விஞ்ஞானத்தைப் பாடமாக்கி அதையும் எழுது என்றே வழிப்படுத்துகிறோமே தவிர, இரண்டையும் ஆராய்ந்து பார்க்க தற்போதுள்ள கல்வி முறையில் இடமுண்டா? அதற்கான வாய்ப்பு எல்லா இடங்களிலும் உள்ள குழந்தைகளுக்கும் கிடைக்காது. ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு சுற்றாடல் பாடத்தில் ஒரு கேள்வியிருக்கிறது, சாப்பிடும் முன் என்ன செய்ய வேண்டும் என்று. அதற்கான விடைகள், இடத்தை சுத்தமாக்க வேண்டும், கை கழுவ வேண்டும், நீர் எடுத்து வைக்க வேண்டும் என்பதாக நீளும் இடையில் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும் சொல்வார்கள். கடவுளுக்கு நன்றி செலுத்துவதில் பிரச்சினையொன்றுமில்லை. ஆனால் அந்த உணவை ஆக்கி அளிக்கும் விவசாயிகளுக்கோ சமைத்துத் தரும் தாய் தந்தையருக்கோ நன்றி சொல்லலாம் என்பது சொல்லப்படுவதில்லை. பிறகெப்படி குழந்தை தன் வாழ்வை யாரெல்லாம் சமைக்கிறார்கள் என்பதை அறிவார்? விவசாயிகளின் மீது எப்படி அக்கறை தோன்றும். எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்ளுவார். நாம் உண்டு நம் வேலையுண்டு என்று இருப்போம் என்று தானே சிந்திக்கத் தொடங்குவார்கள்.

ஆகவே இருக்கின்ற அமைப்பு முறையில் நாம் மெலிதாகச் செய்யும் முன்னேற்றங்கள் குழந்தைகளின் வாய்ப்பை பலமடங்கு பெருக்கும். மாணவர்களின் நலன் விரும்பும் பலநூறு ஆசிரியர்களையும் அதிபர்களையும் நாம் பார்த்திருக்கிறோம். ஒருவரின் அக்கறை, குழந்தைகள் மீதான அன்பு என்பவற்றை தாண்டி ஆசிரியர்கள் தம்மை புத்தாக்க திறன்மிக்கவர்களாக மாற்றக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இணையவழிக் கல்வியின் சாதக பாதகங்களை பற்றி நாம் உரையாட வேண்டும், ஆனால் அதனைத் தவிர்க்க முடியாது. இப்போதென்றில்லை, எப்பொழுதுமே இந்த நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான கல்வி முறை இருக்கிறதே தவிர சமமான வாய்ப்புகள் இருந்ததில்லை. இப்பொழுதும் இல்லை. நூலகங்கள் இல்லாத பள்ளிக்கூடங்கள் உண்டு. இணைய வசதியற்ற பள்ளிகள் உண்டு. அடிப்படை வசதிகளற்ற பள்ளிக்கூடங்கள் ஏராளமுள்ள நாடு இது. இந்தப் பின்னணியில் இணைய வழி என்பது கற்பித்தலுக்கான ஒரு சாத்தியம் மட்டுமே. இன்று பலரும் இலவச இணைய வழி வகுப்புகள் நடத்துகிறார்கள். அதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். அதே நேரம் இந்த வாய்ப்புகளற்று, அல்லது இணையவெளியில் கல்வி கற்பதில் ஆர்வமற்ற ஆயிரக்கணக்கான மாணவர்களும் இருக்கிறார்கள். இதனை எப்படி கையாள்வது என்பது தான் முக்கியமான பிரச்சினை.

பெற்றோர்களை மீண்டும் ஆசிரியர்களாக ஆக்குவது இந்தப் பிரச்சினையைக் கையாள ஒரு வழி. ஏற்கனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நடக்க, கதைக்க, உணவருந்த, அடிப்படை எண்கள் என்று பல விடயங்களைச் சொல்லிக் கொடுத்தவர்கள். கைக் குழந்தையாக இருக்கும் போது இரவிரவாக கண் முழித்துத் தூக்கமின்றி பிள்ளைகளைக் கவனிக்கும் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் நம்மத்தியில் உண்டு. பிறகு குழந்தைகள் வளர ஆரம்பித்ததும் அவர்களுக்கு கற்பித்தலுக்கான தமது எல்லை முடிந்து விட்டதாகக் கருதுகிறார்கள். பிறகு ஆசிரியர்களிடமும் பள்ளிக்கூடத்திடமும் அந்தப் பொறுப்பினைக் கையளிக்கிறார்கள். குறைந்த பட்சம் ஒவ்வொரு நாளும் ஒரு மணித்தியாலம் சிறு வயதில் என்ன அக்கறையுடனும் கவனத்துடனும் குழந்தைகளைப் பராமரித்தார்களோ, அப்படி அவர்களுடன் இருந்து உரையாட வேண்டும். அதில் கொஞ்சம் கல்வி, பெற்றோரின் சிறுவயது அனுபவங்கள், அவர்களது வேலைகள், அதன் அனுபவங்கள், வீட்டு வேலைகளை பகிர்வது எப்படி, என்று எதை வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் உள்ளார்ந்து மிக அக்கறையுடனும் அவர்கள் வயதிற்கு இறங்கி நட்புடன் பேச வேண்டும், இந்த லொக்டவுன் காலத்திலும் அதன் பிறகும் கூட இதனை இன்னும் சிறப்பாகச் செய்யலாம். எல்லோருக்கும் அதற்கான நேரமிருக்கிறது. அந்த ஒரு மணி நேர உரையாடல் சத்து மிக்கதாகவும் உள்ளன்புடன் நடப்பதாகவும் இருந்தால் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் கல்வி மீதான அக்கறையும் அறிதலும் வேகமாக அதிகரிக்கும்.

உதாரணத்திற்கு ஒரு விடயத்தை பார்ப்போம். வீட்டு வேலைகளைக் கற்றுக் கொடுத்தல் என்ற பரப்பை எடுத்தால் பெண் – ஆண் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் சமையலறை தொடக்கம் வீடு துப்பரவாக்குதல், உடுப்பை ஒழுங்காக மடித்தல், தமது சுய வேலைகளை தாமே செய்யக் கற்றுக்கொடுத்தல் என்பதாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். பெண் குழந்தையென்றால் வீட்டுக்குள் தும்புத்தடி பிடி, ஆண் குழந்தையென்றால் வெளியில் விளக்குமாறு என்பதாக அவர்களை பயிற்றுவிப்பது சிறுவயது முதலே அவர்களை சமத்துவத்திற்கு எதிரானவர்களாக மாற்றும், பெண் குழந்தைகளை மட்டும் சமையலறை வேலை, உடுப்பு மடித்தல், வீட்டை அழகுபடுத்துதல் போன்றவற்றில் பயிற்சியளித்தல் மிக மோசமானது. ஆண் குழந்தைகளுக்கும் சமமாகவே எல்லாம் கற்பிக்கப்பட வேண்டும். ஆம்பிளை பிள்ளை அவனுக்கெதுக்கு அடுப்படியில் வேலையென்ற கதையெல்லாம் படு பிற்போக்கானது. சமூக அக்கறையும் பொறுப்பும் வாய்ந்த குழந்தையை நாங்கள் வளர்க்க வேண்டும் என்றால் எதைக் கற்றுக்கொடுத்தாலும் சமத்துவமாகக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு அம்மா சமையலறை ஆசிரியராக தொழிற்படும் சமூக அமைப்பே இங்கு பெரும்பான்மையாக நிலவுகின்றது. ஆனால் எதிர்காலம் அப்படியானதல்ல, ஆணோ பெண்ணோ இருவருக்கும் குடும்பம் என்ற அமைப்பில் தொடர்ந்து வாழ எல்லா அடிப்படை வேலைகளும் சுமையின்றி கற்றுக்கொடுக்கப் பட வேண்டும். வீட்டு வேலைகள் கற்றுக்கொடுக்கிறோம் என்று அடித்து மிதித்துக் கற்றுக்கொடுப்பதல்ல. அம்மாக்கு கொஞ்ச வேலை செய்து தாறீங்களா? என்று கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொடுக்க வேண்டும். அப்பாவும் அம்மாவும் இணைந்து அவர்கள் நடத்துகின்ற மாதிரியான வேலைப்பகிர்வுடனேயே எதிர்காலக் குழந்தைகள் இருப்பார்கள் என்ற சிந்தனை தவறு. ஆணும் பெண்ணும் சமமாக வளர்க்கப்படும் சமூகத்திலேயே வன்முறைகள் குறையும், ஆண்களும் பெண்களும் பாதுகாப்பாக இருப்பார்கள். தினமும் உரையாடும் குடும்பத்திற்கு இடையில் அன்பு பெருகும். உறவுகள் அர்த்தமுள்ளதாய் நம்பிக்கை உள்ளதாய் மாறும். இது ஓர் அடிப்படை வாழ்க்கைத் தேர்ச்சி. இப்படியாக ஒவ்வொரு உரையாடலும் வளர்த்துச் செல்லப்பட வேண்டும். குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் உரையாடல்களில் கேள்வி கேட்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அவை உற்சாகப்படுத்தப்பட வேண்டும். அதன் மூலமே தன்னம்பிக்கையும் துணிச்சலுமுள்ள மாணவர்கள் உருவாகுவார்கள்.

மேலே குறிப்புகளாக உள்ள பல பகுதிகளும் இன்னும் விரிவாக தனித்த ஆக்கங்களாக எழுதப்பட வேண்டியவை. மேலும் இவை தற்போதைய சூழ் நிலையில் ஒரு உரையாடலுக்கான வாய்ப்பை உருவாக்க கூடியவை. இந்தக் கருத்துக்களின் மேலான உங்கள் பார்வைகளையும் அபிப்பிராயங்களையும் எழுதுவதன் மூலம் இந்த உரையாடலை இன்னும் ஆழப்படுத்த உதவுங்கள். மாணவர்களுக்கான முதற் பள்ளிக்கூடமாக வீட்டை நீட்டிக்கச் செய்வதன் தடைகளை எழுதுங்கள், புதிய சாத்தியமான எண்ணக்கருக்களை பகிருங்கள்.

கொஞ்சக் காலம் முன்னர் பஸ் நிலையமொன்றில் ஒரு தாயைச் சந்தித்தேன். அவர் தனது மகள் பாலர் வகுப்பிற்குச் செல்வதாகச் சொல்லிக்கொண்டிருந்தார். “எப்பிடிப் படிக்கிறா?” என்று வழமையான உரையாடலைச் செய்தேன். பிள்ளை இப்ப படிக்கிற பாலர் பாடசாலை ஆசிரியர் பிள்ளையைத் தண்டித்திருக்கிறார். பிள்ளை இதை அடிக்கடி வீட்டில் சொல்லியிருக்கிறார். இதனை அவர் முதல் பெரிதாக எடுக்கவில்லை. அந்தத் தாயின் அம்மா தான் குழந்தையை பள்ளிக்கூடம் கூட்டிச் சென்று கூட்டி வருபவர். ஒரு தடவை பெரிய தடியொன்றினால் குழந்தைக்கு அடிப்பதை அந்தப் பாட்டி பார்த்திருக்கிறார். வீட்டில் இதனைச் சொன்ன போது “உனக்கு ஏனம்மா அடித்தார்கள்?” என்று பிள்ளையைக் கேட்டிருக்கிறார் தாய். அதற்கு அந்தக் குழந்தை, “எனக்கு முன்னால இருந்த பிள்ளை எனக்கு அடிச்சவா, நான் டீச்சரிட்ட சொன்னான், அவா நான் பொய் சொல்லுறானாம் என்று எனக்கு அடிச்சுப் போட்டா”. கவலை தோய்ந்த முகத்துடன், “அம்மா என்ர கண்ணைப் பாருங்கோ, நான் பொய் சொல்லுவனா?” எண்டு கேட்ட பிள்ளையை அந்தத் தாய் கட்டியணைத்து அழுதிருக்கிறார். பிறகு அந்தப் பாடசாலையை விட்டுக் குழந்தையை நிறுத்தியிருக்கிறார். பிறகு வேறு பாடசாலையில் சேர்க்க தெரிவுகளை செய்திருக்கிறார். அந்தத் தாய் குழந்தையின் பள்ளிக்கூடம் என்பதை வெறும் இடமாகவோ, நிர்பந்தமாகவோ விளங்கிக்கொள்ளவில்லை. தன்னுடைய குழந்தை உண்மை சொல்கிறது என்பதை நம்புவதிலிருந்தே குழந்தையினதும் தாயினதும் ஆதாரமான உறவு உறுதியாகிறது. இங்கு அந்தத் தாய் அளித்ததே கல்வி, அந்தக் குழந்தை எழுப்பியதே கேள்வி.

கிரிசாந்

 

https://vithaikulumam.com/2021/08/09/09082021/

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

வீடே பெரும்பாலான குழந்தைகளின் முதற் பள்ளிக்கூடம்.

மிகவும் உண்மை..நான் உறுதியாக நம்பும் விடயங்களில் ஒன்று.. 

சில நாட்களுக்கு முன் ஒரு இணைய வழி கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றியிருந்த பொழுது அங்கு பிரதம பேச்சாளராக வந்திருந்த பங்களாதேஷ் பெண்மனியிடம்(இவர் ஒரு முன்னாள் ஆசிரியர், தற்பொழுது ஒரு தொழிலதிபர், சமூக ஆர்வலர், etc) ஒரு கேள்வி கேட்கப்பட்டது “ who is your role model ?” 

அவர் பின்வருமாறு கூறினார்..

1- முஜிபுர் ரஹ்மான்

2- தனது பல்கலைகழக பேராசிரியர்கள்

3- தனது பெற்றோர், தான் பிறந்து வளர்ந்த குடும்பம்..

இந்த 3வது காரணியைதான் மிகவும் அழுத்தமாகவும், தெளிவாகவும் விளங்கப்படுத்தினார்.. 

அவரது கருத்தும், இங்கே இந்த கட்டுரையில் கூறவரும் விடயமும் ஒன்றுதான்.. பிள்ளைகள் எங்களிடம் இருந்துதான் பழக்கவழக்கங்கள் தொடங்கி  ஆரம்ப கல்வி வரை கற்கிறார்கள்.. பின் பாடசாலைகளில் சேரும் பொழுது அது இன்னமும் மெருகூட்டப்படுகிறது, வழிகாட்டப்படுகிறது.. 

எந்த பிள்ளையால் தனது பெற்றோர் இருவருடனும் உண்மையாகவும் நம்பிக்கையாகவும் தன்னால் இருக்கமுடியும் என நினைக்கமுடிகிறதோ, அந்த பிள்ளைகள் இலகுவில் வழிமாறமாட்டார்கள்..

பகிர்ந்தமைக்கு நன்றிகள்.. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.