Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆப்கன் தாலிபனுக்கு தண்ணி காட்டும் "துணிச்சலான" பள்ளத்தாக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கன் தாலிபனுக்கு தண்ணி காட்டும் "துணிச்சலான" பள்ளத்தாக்கு - இந்த வரலாறு தெரியுமா?

  • பால் கெர்லே & லூசியா பிளாஸ்கோ
  • பிபிசி நியூஸ்
 
பஞ்ஷிர் பள்ளத்தாக்கு

பட மூலாதாரம்,ALAMY

காபூலில் இருந்து சுமார் முப்பது மைல்களுக்கு அப்பால் குறுகிய நுழைவு வாயிலைக் கொண்ட ஒரு பள்ளத்தாக்குப் பகுதியில் தாலிபனை எதிர்க்கும் ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானின் கொந்தளிப்பான சமகால வரலாற்றில் பஞ்ஷிர் பள்ளத்தாக்குப் பகுதி இப்படிக் கவனிக்கப்படுவது முதன் முறையல்ல. 1980-களில் சோவியத் ஒன்றியத்துக்கும், 90களில் தாலிபன்களுக்கு எதிராகவும் வலிமையான எதிர்ப்பு அரணாக திகழ்ந்திருக்கிறது.

தற்போது அங்குள்ள ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணி (NRF) என்ற ஆயுதக் குழு சமீபத்தில் இந்தப் பள்ளத்தாக்கின் வலிமையை உலகுக்கு நினைவூட்டியது.

"சோவியத் ஒன்றியத்தின் செம்படை அதன் வலிமையைக் கொண்டு எங்களை தோற்கடிக்க முடியவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு தாலிபன்களும் இந்தப் பள்ளத்தாக்கை கைப்பற்ற முயன்றனர்; ஆனால் தோற்றுப் போனார்கள்" என பிபிசியிடம் தெரிவித்தார் NRF குழுவின் வெளியுறவு விவகாரங்களுக்கான தலைவர் அலி நசாரி.

எங்கிருக்கிறது பஞ்ஷிர் பள்ளத்தாக்கு?

நீண்ட, ஆழமான மற்றும் தூசி நிறைந்த இந்தப் பள்ளத்தாக்கு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் வடக்கே தென்மேற்கு முதல் வடகிழக்கு வரை சுமார் 120 கிமீ நீண்டுள்ளது. இது உயரமான மலைச் சிகரங்களால் பாதுகாக்கப்படுகிறது.

மலைச் சிகரங்கள் பள்ளத்தாக்கின் தரைப் பகுதிக்கு மேலே சுமார் 10 ஆயிரம் அடி வரை உயர்ந்து நிற்கின்றன. அவை இங்கு வாழும் மக்களுக்கு இயற்கையான பாதுகாப்பு அரணாகத் திகழ்கின்றன.

இங்கு செல்வதற்கு ஒரேயொரு குறுகிய சாலை மட்டுமே உள்ளது. அதுவும் பெரிய பாறைகளூடே வளைந்து நெளிந்து செல்லும் பஞ்ஷிர் நதிக்கு இடையே செல்கிறது.

"இந்தப் பள்ளத்தாக்கு குறித்த ஒரு புராணப் பார்வை உள்ளது. அது ஒரேயொரு பள்ளத்தாக்கு மாத்திரமல்ல. அதற்குள் நீங்கள் நுழைந்து பார்த்தால், 21 துணைப் பள்ளத்தாக்குகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும்" என்று கூறுகிறார் ஷாகிர் ஷெரீபி. இவர் குழந்தைப் பருவத்தில் பஞ்ஷிர் பள்ளத்தாக்குப் பகுதியில் வாழ்ந்தவர். தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் வந்த பிறகு அங்கிருந்து வெளியேறிவிட்டார்.

வரைபடம்

இந்தப் பள்ளத்தாக்குத் தொடர்ச்சியில் உள்ள முக்கியப் பள்ளத்தாக்கின் கடைசி முனையில் 4,430 மீட்டர் நீளம் கொண்ட அஞ்சோமன் என்ற ஒரு கணவாய் உள்ளது. அதன் வழியாக இந்துகுஷ் மலையை அடையலாம்.

மகா அலெக்சாண்டர் மற்றும் டேமர்லேன் ஆகிய நாடோடி அரசர்களின் படைகள் இந்த வழியைப் பயன்படுத்தின.

"வரலாற்று ரீதியாக, பஞ்சிர் பள்ளத்தாக்கு சுரங்கங்களுக்குப் பெயர் பெற்றது ஓரளவு மதிப்புகொண்ட கற்கள் உள்பட்ட பல பொருள்கள் இங்கு கிடைக்கின்றன." என்கிறார் லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச வரலாற்று இணை பேராசிரியர் எலிசபெத் லீக்.

இன்று, பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் நீர்மின் திட்டங்களுக்கான அணைகள் மற்றும் காற்றாலைகள் உள்ளன. காபூலில் இருந்து சிக்னல்களைப் பெறும் ரேடியோ அலைகளுக்கான கோபுரம் மற்றும் சாலைக் கட்டுமானங்களுக்கு அமெரிக்கா உதவியிருக்கிறது. பள்ளத்தாக்கின் நுழைவு வாயிலில் இருந்து குறைந்த தூரத்தில் அமெரிக்காவின் பழைய படைத்தளமான பாக்ரம் அமைந்திருக்கிறது. இந்தப் படைத்தளம் 1950-களில் சோவியத் ஒன்றியத்தால் கட்டப்பட்டது.

"துணிச்சலான" மக்கள்

பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் மக்கள் வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தஜிக் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆப்கானிஸ்தானின் முக்கிய மொழிகளில் ஒன்றான டாரி மொழியைப் பேசுகிறார்கள்.

தஜிக் இனத்தவர் ஆப்கானிஸ்தானின் மொத்த மக்கள் தொகையான 3.8 கோடியில் கால் பகுதியினர். ஆனால் பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் யாரும் வடக்கு அண்டை நாடான தஜிகிஸ்தானை பின்பற்றுவதில்லை. மாறாக அவர்கள் தங்கள் சொந்த உள்ளூர் அடையாளங்களைப் பயன்படுத்துவதில் பெருமை கொள்கிறார்கள்.

ஆப்கன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

தாலிபன்களுக்கு எதிரான பஞ்ஷிர் கிளர்ச்சிக் குழு

"பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் துணிச்சலானவர்கள். ஆப்கானிஸ்தானிலேயே மிகவும் துணிச்சலானவர்கள் இவர்கள்தான்" என்கிறார் ஷெரீபி. இவர் மிகச் சமீப காலம் வரை ஆப்கானிஸ்தான் வேளாண் அமைச்சகத்தில் பொது இயக்குநராகப் பணியாற்றி வந்தார். இந்த மக்கள் தாலிபன்களுடன் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாதவர்கள்," என்கிறார் அவர்.

"இவர்களிடத்தில் போர்க்குணத்தின் நேர்மறையான ஒரு பண்பு உள்ளது". பிரிட்டிஷ், சோவியத் மற்றும் தாலிபன்களுக்கு எதிரான வரலாற்று வெற்றிகள் "மக்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது"

2001-ஆம் ஆண்டில் தாலிபன்கள் வீழ்த்தப்பட்ட பிறகு மாவட்டமாக இருந்த பஞ்ஷிர் பள்ளத்தாக்கு மாகாணமாக தகுதி உயர்த்தப்பட்டது. ஆப்கானிஸ்தானில் மிகச் சிறிய மாகாணங்கள் ஒன்றாக மாறியது.

"ஆனால் பஞ்ஷிர் மாகாணமாக மாற்றப்பட்ட முடிவு சர்ச்சைக்குரியதாகவே இருந்தது. 2000-ஆவது ஆண்டுகளின் தொடக்கத்தில் பஞ்ஷிர் போராளிகளுக்கு ஏராளமான வலிமை இருந்தது. அவர்கள் காபூலை மீண்டும் கைப்பற்றுவதற்கு உதவினார்கள். முதன்மையான பங்களிப்பைச் செய்தார்கள்," என்கிறார் ராயல் யுனைட்டட் சர்வீஸஸ் கல்வி நிறுவனத்தின் அன்டோனியோ கியூஸ்டோஸி.

பஞ்ஷிர் பள்ளத்தாக்கின் தலைவர்களுக்கு அரசு மற்றும் ராணுவத்தில் முக்கியப் பகுதிகள் வழங்கப்பட்டன. தன்னாட்சி பெற்ற மாகாணமாகவும், உள்ளூர் ஆளுநர்களைக் கொண்ட ஒரே மாகாணமாகவும் பஞ்ஷிர் திகழ்ந்தது.

அகமது ஷா

பட மூலாதாரம்,GETTY IMAGES

"பொதுவாக மாகாண ஆளுநர்கள் உள்ளூர் மக்களைக் காட்டிலும் மத்தியில் உள்ள அரசாங்கத்துக்கே விசுவாசமாக இருக்க வேண்டும்." என்கிறார் கியூஸ்டோஸி. "ஆனால் பஞ்ஷிருக்கு மட்டும் சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது"

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது

ஆப்கானிஸ்தானில் ஒரே மாதிரியான நூற்றுக்கணக்கான பள்ளத்தாக்குகள் இருக்கின்றன என்கிறார் கியூஸ்டோஸி. ஆனால் காபூலில் இருந்து வடக்கே உள்ள பிரதான சாலைக்கு அருகே இருப்பது பஞ்ஷிர் பள்ளத்தாக்குக்கு "மிகப் பெரிய பாதுகாப்பு முக்கியத்துவத்தை அளிக்கிறது".

காபூலில் இருந்து செல்லும் முக்கியச் சாலையானது தட்டையான சமவெளியை விட்டு மலைகளை நோக்கி மேலே செல்லத் தொடங்கும் பகுதிக்கு அருகே பஞ்ஷிர் பள்ளத்தாக்கின் நுழைவுவாயில் அமைந்திருக்கிறது.

பஞ்ஷிர் பள்ளத்தாக்குக்கு கிடைக்கும் முக்கியத்துவம் பல வலிமையான காரணிகளின் கலவையாகும் என்கிறார் ஷெரீபி.

"பள்ளத்தாக்கில் உள்ள டஜன் கணக்கான யுத்த நிலைகளால் மட்டுமல்ல, மலைகள் சூழ்ந்த புவியியல் அமைப்பால் மாத்திரமல்ல, பஞ்ஷிர் மக்களின் பெருமித உணர்வு மாத்திரமல்ல. இவை அனைத்தும் கலந்திருப்பதுதான் பஞ்ஷிரின் சிறப்பு. தனித்தனியாக இந்தக் காரணிகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் முழுவதும் பல இடங்களுக்குப் பொருந்தும்.

சமீபத்திய சண்டைகளின்போது பஞ்ஷிர் பள்ளத்தாக்கு மிகப்பெரிய ஆயுதக் களஞ்சியமாகச் செயல்பட்டதாகக் கருதப்படுகிறது. பள்ளத்தாக்கை தளமாகக் கொண்ட போராளிகள் கடந்த 20 ஆண்டுகளில் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு புதிய வாழ்க்கைக்குத் திரும்பினர். ஆனால் அங்கு இன்னும் ஆயுதங்கள் கையிருப்பில் உள்ளன" என்கிறார் கியூஸ்டோஸி.

"அதிபராக இருந்த கர்சாய் மற்றும் கனி ஆகியோர் மீதிருந்த நம்பிக்கையின்மை காரணமாக பஞ்ஷிருடன் தொடர்புடைய ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் ஏராளமான துப்பாக்கிகளை இந்தப் பள்ளத்தாக்குகளில் சேகரித்தனர். இப்போதோ அவற்றை தாலிபன்களுக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது"

மகன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அகமது ஷா மசூத் மற்றும் அவரது மகன் அகமது மசூத்

பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் தாலிபன் எதிர்ப்புப் படைக்குத் தலைமை வகிப்பவர் 32 வயதான அகமது மசூத். இவர் 1980 மற்றும் 90களில் எதிர்ப்புப் படைகளுக்குத் தலைமை வகித்த அகமது ஷா மசூத்தின் மகன்.

தனது போராளிகளுக்கு ஆப்கானிஸ்தான் ராணுவம் மற்றும் சிறப்புப் படைகளிடமிருந்து ராணுவ ரீதியிலான ஆதரவு இருப்பதாக மசூத் கூறியுள்ளார்.

"எங்களுடைய தந்தையின் காலத்திலிருந்து நாங்கள் பொறுமையாக சேகரித்த வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன. ஏனென்றால் இந்த நாள் வரக்கூடும் என்று எங்களுக்குத் தெரியும்," என்று வாஷிங்டன் போஸ்ட்டின் கட்டுரையில் மசூத் குறிப்பிட்டுள்ளார்.

மசூத்தின் தந்தை, "பஞ்ஷிரின் சிங்கம்" என்று பட்டப் பெயர் பெற்றவர். சோவியத் மற்றும் தாலிபன் படைகளை விரட்டிய முஜாஹிதீன் தளபதி. பஞ்ஷிர் என்றால் "ஐந்து சிங்கங்கள்" என்று பொருள்.

ஆப்கானிஸ்தான் ராணுவ தளபதியின் மகனாக அகமது ஷா மசூத் பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் பிறந்தார். காபூல் மற்றும் பஞ்ஷிர் மாகாணங்களின் பல இடங்களில் அவரது உருவப்படம் இன்றும் காணப்படுகிறது. நினைவுச்சின்னங்கள் முதல் விளம்பர பலகைகள் மற்றும் கடை ஜன்னல்கள் வரை அவரது படத்தைக் காணலாம்.

ஆப்கானிஸ்தானின் மக்கள் ஜனநாயகக் கட்சி (PDPA) 1978 இல் அதிகாரத்தை வென்ற பிறகு, ஓராண்டில் சோவியத் ஒன்றியப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தன. அந்தக் காலகட்டத்தில் அகமது ஷா மசூத்தால்தா பஞ்ஷிர் பள்ளத்தாக்கு கம்யூனிச எதிர்ப்பின் மையமாக உருவெடுத்தது.

ஹெலிகாப்டர்

பட மூலாதாரம்,ALAMY

 
படக்குறிப்பு,

பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் சோவியத் படைகள் விட்டுச் சென்ற ஹெலிகாப்டர்

"சோவியத்-ஆப்கன் போரின்போது அவர் கிளர்ச்சியின் முகமாக மாறினார்" என்று லீட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எலிசபெத் லீக் கூறுகிறார்.

"அவர் மக்களை ஈர்த்தார். மேற்கத்திய ஊடகங்களுடன் எப்போதும் தொடர்பில் இருந்தார். சோவியத் ஒன்றியம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்த முக்கிய கிளர்ச்சித் தலைவர்களில் அவரும் ஒருவர். அது அவரை மிகவும் முக்கியமானவராக மாற்றியது.

சோவியத் படைகளுக்கு எதிரான காலகட்டத்தில் மற்றக் கிளர்ச்சித் தலைவர்களிடம் இருந்து மசூத் வேறுபட்டிருந்தார் என்கிறார் கியூஸ்டோஸி.

"அவர் படித்தவர், பிரெஞ்சு மொழி தெரிந்தவர், மென்மையாகப் பேசக்கூடியவர் மற்றும் வசீகரமானவர். மற்ற கிளர்ச்சித் தளபதிகள் கடினமானவர்கள், படிப்பறிவற்றவர்கள் மற்றும் ஆர்வக் கோளாறு கொண்டவர்கள்"

2001-ஆம் ஆண்டு அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாள்கள் முன்னதாக அல்-காய்தா இயக்கத்தால் அவர் படுகொலை செய்யப்பட்டார். பின்னர் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயால் தேசிய நாயகராக அறிவிக்கப்பட்டார்.

ஆயினும் சிலர் ஷா மசூத் ஒரு போர்க்குற்றவாளி எனக் கூறுகிறார்கள்.

ஷா

பட மூலாதாரம்,ALAMY

 
படக்குறிப்பு,

பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் வைக்கப்பட்டுள்ள அகமது ஷா மசூத்தின் படங்கள்

"அகமது ஷா மசூத் ஆப்கானிஸ்தான் போர்களின்போது நடந்த பல உரிமை மீறல்களில் தொடர்புடையவர்" என்று 2005-ஆண்டு மனித உரிமைகள் கண்காணிப்பு விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெல்ல முடியாததா பஞ்ஷிர்?

1980 மற்றும் 1985 க்கு இடையே பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் குறைந்தது அரை டஜன் தாக்குதல்களை சோவியத் ஒன்றியம் நடத்தியது. தரை வழியாகவும் வான் வழியாகவும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் ரஷ்ய வீரர்களுக்கு ஆப்கானிஸ்தான் நிலப்பரப்பு தொடர்பான போதிய அறிவு இருக்கவில்லை. பதுங்கியிருந்து தாக்கும் சண்டைகளில் அவர்கள் அவ்வப்போது சிக்கிக் கொண்டனர்.

இடது, வலது மற்றும் மையப் பகுதியில் இருந்து இருந்து சோவியத் ஒன்றியத்தின் படைகள் "ஆயிரம் காயங்களைப் பெற்றன" என்கிறார் ஷெரீபி. பாறை மறைவில் இருந்து சோவியத் படைகளை நோக்கி சுட்டுக் கொண்டே இருந்த ஒருவரை அவர்களால் ஒருபோதும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. "அது அவர்களைப் பைத்தியமாக்கியது."

தற்போதைய தளபதிகள் சிலர் அந்த சகாப்தத்தின் இறுதியில் இருந்ததாக ஷெரீபி கூறுகிறார்.

"தலைமையகத்திலிருந்து சரியான தொடர்பு இல்லாத தொலைதூர நிலைகளில் நிற்க அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அங்கேயே காத்திருந்து வலியை ஏற்படுத்துவது எப்படி என்பது அவர்களுக்குத் தெரியும்.

"ஒரு குறிப்பிட்ட காலத்தில் பள்ளத்தாக்கில் இருந்த ஒரு பகுதியை சோவியத் படைகளால் கைப்பற்ற முடிந்தது. ஆனால் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை." என்கிறார் கியூஸ்டோஸி.

"ஒரு சவாலான பள்ளத்தாக்கில் தங்கியிருப்பதும் அங்கு ஒரு படையை வைத்திருப்பதும் தேவையில்லை என்று ரஷ்யர்கள் கருதினார்கள்" என்று அவர் கூறுகிறார்.

"சோவியத் படையினர் பிரதான வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையைப் பாதுகாக்க விரும்பினர். ஆனால் அருகிலுள்ள மற்ற பகுதிகளில் சண்டை வெடித்தது."

வேறு வழியில்லாமல் பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் ஆயுதங்கள், டாங்குகள் மற்றும் விமானங்கள் ஆகியவற்றைத் துருப்பிடிக்கும் வகையில் விட்டுவிட்டு அவர்கள் வெளியேறினார்கள். சோவியத் யுத்த வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியை அவை இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

பஞ்ஷிரின் வாரிசு

தந்தை அகமது ஷா மசூத் இறக்கும் போது அகமது மசூத்துக்கு 12 வயது. அவர் லண்டனில் படித்தார், சாண்ட்ஹர்ஸ்டில் உள்ள ராயல் மிலிட்டரி அகாடமியில் ஓராண்டும் பயிற்சி பெற்றார்.

"அவர் தனது தந்தையின் வசீகரத்தைக் கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு படையின் தலைவராக அவர் பரிசோதனை செய்யப்படவில்லை." என்கிறார் கியூஸ்டோஸி.

மசூத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

தனது தந்தையின் கல்லறைக்குச் சென்ற அகமது மசூத்

"தேசிய அளவில் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கும் பேச்சுவார்த்தை நடத்துவதற்குமான திறமைகள் அவருக்குத் தேவை. ஏனென்றால் அவர் ஒரு புதிய தலைவர், சில அரசுத் தலைவர்களைப் போல அவரிடம் இழப்பதற்கு பெரிதாக ஏதுமில்லை"

பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் அடுத்து என்ன நடக்கும் என்பதை கணிப்பது மிகவும் கடினம் என்று பேராசிரியர் லீக் கூறுகிறார்.

"அவர் தனது சொந்த பாரம்பரியம் மற்றும் அவரது தந்தையின் வரலாற்று முக்கியத்துவத்தைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறார். சர்வதேசத் தளத்தில் இந்தப் பாரம்பரியத்தை அவர் கொண்டு செல்வதை நாம் காணலாம்."

"ஆனால் இந்த முறை நிலைமை முற்றிலும் வேறுமாதிரி உள்ளது. தாலிபன்கள் அருகேயுள்ள முக்கிய நகரங்கள் அனைத்தையும் கைப்பற்றிவிட்டனர். பள்ளத்தாக்கின் பொருள் விநியோகப் பாதை தடைபட்டிருக்கிறது. அது நிச்சயமாக சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்."

மசூத் இப்போது தனக்கு கூடுதல் தளவாடங்கள் வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.

"தாலிபன் போராளிகள் தாக்குதலைத் தொடங்கினால், அவர்கள் நிச்சயமாக எங்களிடமிருந்து கடுமையான பதிலடியைச் சந்திப்பார்கள். ஆனாலும் எங்களுக்கு படைகளும் தளவாடங்களும் போதுமானதாக இல்லை என்பதை நாங்கள் அறிவோம்," என்று அவர் தனது வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

"எங்களது மேற்கு நாடுகளைச் சேர்ந்த நண்பர்கள் எங்களுக்கு தளவாடங்களை வழங்கும் வழிகளைக் கண்டறியாவிட்டால், அவை மிக விரைவாகத் தீர்ந்துவிடும்"

https://www.bbc.com/tamil/global-58338619?at_custom1=[post+type]&at_custom2=facebook_page&at_custom4=87C91D04-065D-11EC-98D0-B85D16F31EAE&at_custom3=BBC+Tamil&at_medium=custom7&at_campaign=64&fbclid=IwAR3rDQqUSTGIRbkDagdg_3KROEK8ohyMyQs7t4eVjCAO1fWbtqvXEIzpUMs

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.