Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காமராஜர் என்ற தமிழ்நாடு கண்டடைந்த கிங் மேக்கரின் கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காமராஜர் என்ற தமிழ்நாடு கண்டடைந்த கிங் மேக்கரின் கதை

  • எம்.ஏ.பரணிதரன்
  • பிபிசி தமிழ்
9 மார்ச் 2021
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்
காமராஜ்

பட மூலாதாரம்,TWITTER

இன்று காமராஜர் நினைவு நாள். மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து, மாநிலத்தின் முதல்வராகி, பல அதிகாரப் பதவிகள் தேடி வந்தபோதும், அந்த அரியணைகளை ஏற்காமல் பிறரை அவற்றில் அமர வைக்கும் அதிகாரம் மிக்கவராக அந்த காலத்தில் வலம் வந்தவர் ஒருவர் வாழ்ந்தார் என்றால் அதற்கு முதல் உதாரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த காமராஜரை குறிப்பிடலாம்.

இவரது படிப்பு வெறும் ஆறாம் வகுப்பு மட்டுமே. 16ஆம் வயதில் காங்கிரஸ் கட்சியின் கடைக்கோடி தொண்டனாக அரசியல் பாதையை தேர்வு செய்த காமராஜ், 36 வயதை நிறைவு செய்யும் முன்பே காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவரானவர்.

ஒன்பது வருட சிறை வாழ்க்கை, ஒன்பது வருட முதல்வர் என மாறுபட்ட அரசியல் அனுபவங்களை வாழ்வில் கண்ட அவர், தனது வாழ்காலத்திலேயே காங்கிரஸ் கட்சியில் காமராஜ் அணி, ராஜாஜி அணி என இரு அணிகள் இயங்கும் அளவுக்கு தனக்கென தீவிர ஆதரவாளர்களைக் கொண்ட தலைவராக விளங்கினார்.

மெட்ராஸ் மாகாணத்தின் மூன்றாவது முதல்வராக 1954ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டுவரை என ஒன்பது ஆண்டுகளுக்கு பதவி வகித்த காமராஜ் அரசியலில் விட்டுச் சென்ற நினைவலைகள் இன்றைய அரசியல் உலகில் பல தலைவர்களுக்கும் படிப்பினையாக கருதப்படுகிறது. காமராஜ் முதல்வர் பதவியில் இருந்தபோது அவர் நிறைவேற்றிய திட்டங்கள், எளிமையான அவரது வாழ்க்கை பல தளங்களில் பதிவாகியிருக்கின்றன. அவற்றில் அதிகம் காணப்படாத சில அரிய தகவல்களை இந்த கட்டுரையில் வழங்க முற்பட்டிருக்கிறோம்.

அந்தக்கால மெட்ராஸ் மாகாணத்தின் மதுரைக்கு தெற்கே 48 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விருதுபட்டியில் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி, ஒரு நாடார் சமூக குடும்பத்தில் குமாரசுவாமிக்கும் சிவகாமியம்மாளுக்கும் மகனாக பிறந்தார் காமராஜ். அப்போதைய ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது இந்த விருதுப்பட்டி.

பிறந்தவுடன் காமாட்சி என்ற பெயருடன் அழைக்கப்பட்ட காமராஜின் பெயர் பின்னர் காமராஜ் என மாற்றப்பட்டது. குமாரசுவாமி, சிவகாமியம்மாள் தம்பதிக்கு காமராஜுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தையின் பெயர் நாகம்மாள்.

பிரம்படியால் கல்வியில் குறைந்த ஆர்வம்

காமராஜின் பள்ளிப்பருவம் வரவேற்புக்குரியதாக இருக்கவில்லை. தனது ஐந்து வயதில் அவர் படித்த ஆரம்பப்பள்ளி வாத்தியாரிடம் பிரம்படி வாங்கிய அனுபவங்கள் கடுமையானதாக இருந்தது. இதனால், அந்த பள்ளியில் இருந்து முருகய்யா என்பவர் நடத்தி வந்த இடைநிலைப்பள்ளியில் காமராஜை அவரது பெற்றோர் சேர்த்தனர்.

அங்குதான் தமிழ் மொழியில் எழுதவும் தெளிவாக பேசவும் காமராஜுக்கு வாய்ப்பு அமைந்தது. அந்த காலத்தில் விருதுப்பட்டியில் இருந்த ஒரே உயர் பள்ளி க்ஷத்ரிய வித்யாலயா. நாடார் சமூகத்துக்கு பிள்ளைகளுக்கு இலவச கல்வி, பிடி அரசி வழங்கும் வழக்கத்தை அந்த பள்ளி நிர்வாகம் கொண்டிருந்தது. அந்த பள்ளியில் 1910-11 கல்வியாண்டில் சேர்ந்தார் காமராஜ்.

வ.உ. சிதம்பரனார், சுப்ரமணிய சிவா, சுப்ரமணிய பாரதி போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் வந்தே மாதரம் முழக்கத்தால் கவரப்பட்ட காமராஜ், 1915ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி, தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தி இந்தியாவுக்கு திரும்பியபோது காமராஜின் சுதந்திரப்பற்றும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்ட உணர்வும் தீவிரமாகியது.

அரசியல் பிரவேசத்தை தூண்டிய சம்பவம்

ஜாலியன்வாலா பாக்

பட மூலாதாரம்,BERNARD GAGNON

1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் ரெளலட் சட்டத்துக்கு எதிராக திரண்ட மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தேசம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அந்த சம்பவம், தனது தீவிர அரசியல் பிரவேசம் குறித்து காமராஜை சிந்திக்கத் தூண்டியது.

அந்த சம்பவம், தேசத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்களை தீவிரமாக்க, காந்தி வகுத்த அகிம்சை போராட்ட உத்தியால் இந்திய இளைஞர்கள் ஈர்க்கப்பட்டார்கள். அதில் ஒருவராக இருந்த காமராஜ், 1919ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். காந்தியின் ஒத்துழமையாமை இயக்கத்தில் பங்கெடுத்தபோது, காமராஜுக்கு வயது, வெறும் 18 மட்டுமே.

இந்த காலகட்டத்தில்தான் காமராஜின் தீவிர அரசியல் கவனத்தை திசை திருப்ப அவரை தனது மகள் வழி மூத்த பேத்தி மங்கலத்துக்கு திருமணம் செய்து வைக்க சிவகாமியம்மாள் முடிவெடுத்தார். ஆனால், வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாதவராகவே தனது ஆயுளை நிறைவு செய்தார் காமராஜ்.

காந்தியுடன் முதல் சந்திப்பு

காமராஜ்

பட மூலாதாரம்,TWITTER

காங்கிரஸ் கட்சியில் காமராஜ் சேர்ந்த இரண்டு ஆண்டுகளில் சுதந்திர இந்தியா இயக்கத்தை முன்னெடுக்கும் நோக்குடன் மதுரை வந்த காந்தியை அவர் சந்தித்தார்.

காங்கிரஸ் கட்சியில் ஆரம்பப்பொறுப்பு

அது 1922ஆம் ஆண்டு. சாத்தூர் தாலுகாவில் ஈ.வெ.ராமசாமி தலைமையில் நடந்த கட்சிக்கூட்டத்தில் மெட்ராஸ் பிரசிடென்ஸி காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக காமராஜ் தேர்வானார். அந்த மாநாட்டின் துவக்க விழா செயலாளராகவும் காமராஜ் இருந்தார். அடுத்த ஆண்டு கள்ளுக்கடை முற்றுகை போராட்டத்தில் காமராஜ் கலந்து கொண்டார்.

1927ஆம் ஆண்டு சென்னை எழும்பூரில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 43ஆவது வருடாந்திர மாநாடு நடந்தது. அங்குதான் முதல் முறையாக ஜவாஹர்லால் நேரு, சத்தியமூர்த்தி ஆகியோரை சந்தித்தார் காமராஜ். முதல் சந்திப்பிலேயே நேருவை தனது சொந்த ஊரான விருதுநகரில் ஒரு கட்சி மாநாட்டில் பங்கேற்க சம்மதிக்க வைத்தார் காமராஜ்.

1929ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சைமன் ஆணையத்துக்கு எதிராக ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களை திரட்டிப் போராடியது, காமராஜின் ஆளுமை திறனை நேரு அங்கீகரிக்க காரணமாக இருந்தது.

உப்பு சத்தியாகிரகமும் முதல் சிறைவாசமும்

காமராஜ்

பட மூலாதாரம்,TWITTER

1930ஆம் ஆண்டில் காந்தி, பிரிட்டிஷ் அரசு நிர்வாகம் கொண்டு வந்த உப்பு சட்டத்தை எதிர்த்து உப்புச்சத்தியாகிரகத்தை தொடங்கினார். தமிழ்நாட்டில் அந்த போராட்டத்தை வழிநடத்திய ராஜாஜியுடன், திருச்சி முதல் வேதாரண்யம் வரை தொண்டர்கள் சென்றனர். அந்த போராட்டத்தில் தமது ஆதரவாளர்களுடன் பங்கெடுத்த காமராஜ் கைதானார். 1930ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி கைதான காமராஜுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் அலிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். எனினும், 1931ஆம் ஆண்டில் நடந்த காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின்படி அவர் 1931ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இதுவே, காமராஜ் தனது அரசியல் பொதுவாழ்வில் எதிர்கொண்ட முதலாவது சிறைவாசம்.

கட்சியில் தொடங்கிய செல்வாக்கு

அது 1931ஆம் ஆண்டு. சத்தியமூர்த்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மாகாண கூட்டம் நடந்தபோது, ராமநாதபுரத்தின் சார்பில் கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினராக காமராஜ் தேர்வானார். இதுவே காங்கிரஸ் கட்சியில் காமராஜுக்கு கிடைக்க முக்கியமான முதலாவது அரசியல் பதவியானது.

இந்த காலகட்டத்தில் காந்தி-இர்வின் ஒப்பந்தம் வெற்றிகரமாக அமையாததால் லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் அதிருப்தியுடன் காந்தி வெளியேறினார். அப்போது தடை உத்தரவுக்கு எதிராக காமராஜ் செயல்படாதபோதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை பிரிட்டிஷ் அரசு கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தது. பிறகு அவர் 1933ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி விடுதலையானார். இது காமராஜின் இரண்டாவது சிறைவாசமானது.

1933ஆம் ஆண்டில் கவர்னர் சர் ஜான் ஆண்டர்சனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகவும் அவரை கொல்ல துப்பாக்கிக்கு ஏற்பாடு செய்ததாகவும் காமராஜ் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், அந்த சம்பவத்தில் அப்ரூவர் ஆனவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த நேரத்தில் காமராஜ் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்தார் என்பதை நிரூபிக்க ஆதாரமில்லாததால் அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இதேபோல, விருதுநகர் காவல் நிலையத்தை வெடிவைத்து தகர்க்க தனது நண்பர்கள் முத்துசாமி, மாரியப்பாவுடன் சேர்ந்து முயன்றதாக காமராஜ் மீது மற்றொரு வழக்கை காவல்துறையினர் தொடர்ந்தனர். அந்த வழக்கும் அடிப்படையற்றது என காமராஜின் வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசஃப் நிரூபித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் பொதுச்செயலாளர்

காமராஜ்

பட மூலாதாரம்,TWITTER

1936ஆம் ஆண்டில் சத்யமூர்த்திக்கும் சி.என். முத்துரங்க முதலியாருக்கும் இடையே கட்சித் தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவிய வேளையில், ராஜாஜி ஆதரவு பெற்ற சத்தியமூர்த்திக்கு வெற்றி கிட்டியது. அப்போது கட்சியின் பொதுச்செயலாளராக காமராஜை நியமித்தார் சத்தியமூர்த்தி. அந்த பதவியைத் தொடர்ந்து 1936இல் மாநிலத்தில் நேரு சுற்றுப்பயணம் செய்தபோது அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு காமராஜுக்கு கிடைத்தது.

காமராஜின் களப்பணியை நேரடியாகவே நேரு அப்போது அறிந்தார். 1937ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்கு காமராஜ் தேர்வானார்.

14 ஆண்டுகளாக தொடர் கட்சித் தலைவர்

1940இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தபோது, பிராமணர் அல்லாத ஒருவர் கட்சிக்கு தலைவராக வேண்டும் என்பதில் ராஜாஜி மற்றும் சத்யமூர்த்தி அணியினர் உறுதியாக இருந்தனர். இதனால் ராஜாஜி பரிந்துரைப்படி சுப்பையாவை தலைவர் பதவிக்கு முன்னிறுத்த சத்தியமூர்த்தியை இணங்க வைக்க ராஜாஜி முற்பட்டார். ஆனால், முனிசாமி பிள்ளை, ருக்மணி லக்ஷ்மிபதி குமாரசாமி ராஜா போன்றோர் தலைவராக வேண்டும் என காமராஜ் விரும்பினார். கடைசியில் ராஜாஜியும் முத்துரங்கா முதலியாரும் சுப்பையாவை பரிந்துரைக்க, சத்யமூர்த்தி காமராஜை தலைவர் பதவிக்கு முன்னிறுத்தினார். அப்போது முதல் 1954ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக காமராஜ் 14 ஆண்டுகளுக்கு நீடித்தார்.

வழிகாட்டியை இழந்த காமராஜ்

காமராஜ்

பட மூலாதாரம்,TWITTER

காமராஜ் சிறையில் இருந்த காலத்தில் அவரது அரசியல் குருநாதரும் வழிகாட்டியுமான சத்தியமூர்த்தி 1943ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி காலமானார்.

1942ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி பாகிஸ்தான் பிரிவினை தேசத்தை உருவாக்க பிரிட்டிஷ் நிர்வாகத்திடம் ஜின்னா கேட்டுக் கொண்டார். அந்த திட்டத்தை எதிர்த்த ராஜாஜி, 1944ஆம் ஆண்டு தனது திட்டத்தை முன்வைத்தார். அது காங்கிரஸ், முஸ்லிம் லீக் இடையிலான உடன்பாடு தொடர்பானது. போருக்குப் பிறகு எங்கெல்லாம் முஸ்லிம் மக்கள் அதிகமாக உள்ளனரோ, அவர்களின் சம்மதப்படி தேசப்பிரிவினைக் கோரிக்கை முடிவு செய்யப்படும். இதுபோன்ற அம்சங்கள் நிறைந்த திட்டம் "ராஜாஜி ஃபார்முலா" என அழைக்கப்பட்டது.

ஆனால், காமராஜ் உள்பட காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலான தலைவர்கள் ராஜாஜி திட்டத்தை ஏற்கவில்லை. இதனால், 1943ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி ராஜாஜி, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகினார்.

1945இல் காமராஜ் சிறையில் இருந்து வெளி வரவும், காங்கிரஸ் கட்சிக்குள் ராஜாஜி மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்த நிகழ்வும் ஒரு சேர நடந்தது. ஆனால், ராஜாஜியின் உறுப்பினர் சேர்ப்பு நிகழ்வை காமராஜ் தள்ளி வைத்துக் கொண்டே வந்தார். இதனால் இரு தலைவர்களுக்கும் இடையிலான பனிப்போர் அதிகமாகியது. கடைசியில் அப்போதைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மவுலானா ஆசாத், அருணா ஆசிஃப் அலி, சர்தார் படேல் ஆகியோர் காமராஜிடமும் ராஜாஜியுடனும் சமாதனம் பேச தொடர்பு கொண்டனர். இதையடுத்தே இரு தரப்பும் சமரசமாகினர்.

கிங் மேக்கர் ஆன வரலாறு

அது 1946ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல். சாத்தூர் தொகுதியில் 30,998 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற காமராஜ், தமிழ்நாடு முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என காந்தியுடன் ஆலோசனை நடத்தினார். தொடக்கத்தில் ராஜாஜி அல்லது பட்டாபி சீதாராமையாவின் பெயரை நினைவில் வைத்திருந்த காந்தி, டி. பிரகாசத்தின் முன்மொழிவை விரும்பவில்லை.

விரிவான விவாதத்துக்குப் பிறகு பட்டாபி சீதாரமையாவை ஆதரிக்க ஒப்புக் கொண்ட காமராஜ், ராஜாஜியும் அவரை ஆதரிக்க கேட்டுக் கொள்ளுமாறு காந்தியிடம் வற்புறுத்தினார். ஆனால், டி. பிரகாசம், முதல்வர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்ததால் அவரே மெட்ராஸ் மாகாண முதல்வராக 1946ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி ஆனார். இருப்பினும் ஓராண்டுக்கு உள்ளாகவே நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பிரகாசம் தோல்வி அடைந்தார். அதைத்தொடர்ந்து காமராஜ் ஆதரவுடன் ஓ.பி. ராமசாமி ரெட்டியார் 1947ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி மாகாண முதல்வரானார்.

காந்தியின் படுகொலையும் இந்திய சுதந்திரமும்

காந்தி

பட மூலாதாரம்,TWITTER

இந்த காலகட்டத்தில் இந்தியாவின் விடுதலைக்குப் பிந்தைய அதிகார மாற்றலை மேற்கொள்ளும் அதிகாரியாக மவுன்ட் பேட்டனை பிரிட்டன் பிரதமர் அட்லீ நியமித்தார். அதன்படியே 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய விடுதலை அறிவிக்கப்பட்டு அதிகார மாற்றல் நடவடிக்கையை மவுன்ட் பேட்டன் நடைமுறைப்படுத்தினார். ஒரு புறம் இந்திய சுதந்திரம், மறுபுறம் பாகிஸ்தான் பிரிவினை மற்றும் அதையொட்டி நடந்த வன்முறை, வகுப்புவாத கலவரங்களை தடுக்கும் முயற்சியில் காந்தி ஈடுபட்டிருந்தார். ஆனால், 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி காமராஜுக்கு பேரிடியாக இருந்தது.

1949ஆம் ஆண்டு ஓ.பி. ராமசாமி ரெட்டியாருக்கு அடுத்தபடியாக குமாரசாமி ராஜா, மெட்ராஸ் பிரசிடென்சி முதல்வரானார். அதில் காமராஜின் பங்கு மிகப்பெரியதாக இருந்தது. அவரது பதவிக்காலத்தில்தான் இந்தியாவுக்கு 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி குடியரசு ஆனது.

இதன் பிறகு 1950ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவராக நான்காவது முறையாக காமராஜ் பதவியேற்றார்.

இந்திய அரசியலமைப்பின்படி, சுதந்திர இந்தியாவின் முதலாவது தேர்தல் 1952ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் இருந்தபோதும், தேர்தலில் அதனால் பெரும்பான்மை பலத்தைப் பெற முடியவில்லை. மொத்தம் உள்ள 375 இடங்களில் 152இல் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றது. காமராஜின் கருத்துகளை ஏற்காமல் கம்யூனிஸ்ட் கட்சிகளின் முயற்சியால் உருவான ஆறுக்கும் மேற்பட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டது. அதில் இருந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி, அரசின் தலைமை பதவியை ராஜாஜி வகிக்க வேண்டும் என குரல் கொடுத்தார்.

இதனால் காமராஜ், 1952ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விலகினார். பிறகு பி. சுப்பராயன் மாநில தலைவரானபோதும் எட்டு மாதங்கள் மட்டுமே அவரால் அப்பதவியில் நீடிக்க முடிந்தது. அதன் பிறகு மீண்டும் காங்கிரஸ் கட்சி மாநில தலைவராக காமராஜும், இந்திய காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக ராஜாஜியும் நியமிக்கப்பட்டனர். 1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்வரை அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றினர்.

ராஜாஜியின் வீழ்ச்சி

சிறந்த உணவு திட்டமிடல் நிர்வாகியாகவும் கம்யூனிஸ்டுகளை சமாளிக்கக் கூடியவராகவும் ராஜாஜி அறியப்பட்டபோதும், அவரது சில முடிவுகள் சொந்த கட்சி உறுப்பினர்களாலேயே எதிர்க்கப்பட்டது.

இந்திய விடுதலைதான் காங்கிரஸின் நோக்கம். அது நிறைவேறி விட்டதால், காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என ராஜாஜி முழக்கமிட்டார். பிறகு சிக்கன நடவடிக்கையாக சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் நிலம் ஒதுக்கீடு, காந்தியின் கொள்கைக்கு எதிரானது என்பதால், அதை வழங்கக்கூடாது என்று அவர் உத்தரவிட்டார்.

எல்லாவற்றுக்கும் உச்சமாக, கல்வித்துறை அமைச்சருடன் கலந்தாலோசிக்காமலேயே புதிய குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் ராஜாஜி. அப்போது அவருக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பு, ஒன்று குலக்கல்வி திட்டத்தை ராஜாஜி கைவிட வேண்டும் அல்லது முதல்வர் பதவியை துறக்க வேண்டும் என்ற இரு வாய்ப்புகளை அவருக்குத் தந்தது. கடைசியில், தனது திட்டத்தை எதிர்ப்பது, தன்னையே எதிர்ப்பது போல எனக்கூறி தனது பதவியை 1954ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி ராஜிநாமா செய்தார் ராஜாஜி.

சென்னையை தக்க வைத்த காமராஜ், ராஜாஜி

முன்னதாக, ராஜாஜி ராஜிநாமா செய்த காலத்தில், மெட்ராஸ் மாகாணம், மொழி அடிப்படையில் பிரிக்கப்படவில்லை. இதனால், மெட்ராஸ் நகரை ஆந்திர பிரதேசத்துடன் இணைக்கும் தனி திட்டத்துக்கு எதிராக நேருவின் ஆதரவை காமராஜும் ராஜாஜியும் பெற்றனர்.

இதன் பிறகு 1952ஆம் ஆண்டில் ராஜாஜி தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த பிறகு, ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த முதல் மக்களவை பொதுத்தேர்தலில் காமராஜுக்கு 46.77 வாக்குகளும் ஜி.டி. நாயுடுவுக்கு 34.73 சதவீதமும் வாக்குகள் கிடைத்தன.

அப்போது ராஜாஜி ஏற்படுத்திய வெற்றிடத்தை உணர்ந்த காங்கிரஸ் மேலிடம், மாநிலத்தின் முதல்வராக காமராஜ் இருந்தால் அது கட்சியின் வளர்ச்சிக்கு உதவும் என நம்பியது. இதைத்தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் சி. சுப்பிரமணியத்துக்கு ஆதரவாக 41 வாக்குகளும் காமராஜுக்கு ஆதரவாக 93 வாக்குகளும் கிடைத்தன.

1954 - முதல் அமைச்சரவை

மாநில முதல்வராக பதவி ஏற்கும் முன்பு ஒரு உறுதிமொழியை கட்சித் தொண்டர்களிடம் இருந்தும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்தும் பெற்றுக் கொண்டார் காமராஜ். 1957ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதிவரை அவரது அமைச்சரவை இருந்தது. உள்கட்சி அளவில் நடந்த முதல்வருக்கான தேர்வில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி. சுப்பிரமணியம் ராஜாஜியின் ஆதரவாளர் என்றபோதும், அவரை அழைத்து அவருக்கு நிதியமைச்சர் பதவியைக் கொடுத்தார் காமராஜ்.

காமராஜ் முதல்வராக இருந்தபோது அவர் எம்எல்ஏ ஆக பதவி வகிக்கவில்லை. அவர் எம்எல்சி ஆக இருந்தார். இதனால் பின்வாசல் வழியாக முதல்வர் பதவிக்கு வந்தவர் காமராஜ் என்ற விமர்சனம் வலுத்தது. அப்போது காலியாக இருந்த வட ஆற்காட்டில் உள்ள குடியாத்தம் தொகுதியில் போட்டியிட விரும்பினார் காமராஜ். இடதுசாரி கட்சிகளைத் தவிர வேறு யாரும் காமராஜை எதிர்க்கவில்லை. திராவிடர் கழகம், திமுக ஆகியவை காமராஜை ஆதரித்தன. அவருக்கு ஆதரவாக அந்த கட்சிகளின் நாளேடுகளில் கட்டுரைகள் வெளியிடப்பட்டன.

1957இல் மெட்ராஸ் மாகாணத்துக்கு நடந்த பொதுத்தேர்தலில் சாத்தூர் தொகுதியில் இருந்து தேர்வான காமராஜுக்கு 36,400 வாக்குகள் கிடைத்தன. அப்போது 205 சட்டமன்ற தொகுதிகளில் 151 இடங்களில் காங்கிரஸ் வென்றது.

1957ஆம் ஆண்டு, ஏப்ரல் 13ஆம் தேதி இரண்டாவது முறையாக தொடர்ந்து முதல்வரானார் காமராஜ். இரண்டாவது அமைச்சரவையிலும் காமராஜ் நீங்கலாக ஏழு பேர் இடம்பிடித்தனர்.

1962ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் சாத்தூர் தொகுதியிலேயே போட்டியிட்ட காமராஜுக்கு, மொத்தம் பதிவான 1,01,991 வாக்குகளில் 49,950 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்வதந்திரா கட்சி வேட்பாளர் பி. ராமமூர்த்திக்கு 33,506 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் ராமசாமி ரெட்டியாருக்கு 2,811 வாக்குகளும் செல்லாத வாக்குகள் 3,044 என்றும் பதிவானது.

அந்த தேர்தலில் மொத்தம் இருந்த 206 தொகுதிகளில் 136 இடங்களில் காங்கிரஸ் பெற்றது. அதுவரை ஏழு பேரை மட்டுமே தனது அமைச்சரவையில் சேர்த்து வந்த காமராஜ், மூன்றாவது அமைச்சரவையில் எட்டு பேரை தனது அமைச்சரவையில் கொண்டிருந்தார்.அந்த அமைச்சரவையில் கே. காமராஜ் நீங்கலாக, ஆர். வெங்கட்ராமன், எம். பக்தவத்சலம், ஜி. பூவராகவன், என். நல்லசேனாபதி சர்க்கரை மன்றடியார், பி. கக்கன், வி. ராமையா, ஜோதி வெங்கடாச்சலம், எஸ்.எம். அப்துல் மஜித் ஆகியோர் இருந்தனர்.

தோல்வி முகத்தில் காங்கிரஸ்

காமராஜ்

பட மூலாதாரம்,TWITTER

தமிழ்நாட்டில் 1957ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும்போது இரண்டு சதவீத வாக்குகளை காங்கிரஸ் கட்சி கூடுதலாகப் பெற்றபோதும், அதில் அக்கட்சி 13 இடங்களை பறிகொடுத்திருந்தது. சி.என். அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம், முந்தைய தேர்தலில் பெற்ற 15 இடங்கள் என்ற நிலையைக் கடந்து இம்முறை 50 எம்எல்ஏக்களுடன் சட்டமன்றத்துக்குள் நுழைந்தது.

முந்தைய தேர்தலில் எங்கெல்லாம் காங்கிரஸ் தோற்றதோ அங்கெல்லாம் 1962ஆம் ஆண்டு தேர்தலில் தீவிரமாக பிரசாரம் செய்தார் காமராஜ். அதில் திமுக வென்ற 15 தொகுதிகளில் 14 இடங்களை மீட்டது காங்கிரஸ். ஒரு இடத்தில் மட்டும் திமுக பொருளாளர் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார். இருந்தபோதும், அந்த தேர்தலில்தான் 50 இடங்களில் திமுக வென்று தனது வாக்கு சதவீதத்தை பெருக்கிக் கொண்டது.

என்னதான் தமது அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தினாலும், பெருவாரியான மக்களின் கவனம் திமுகவை நோக்கி திரும்புவதை கவனித்தார் காமராஜ். ஆட்சி, அதிகாரத்தில் தங்களின் கவனத்தை காங்கிரஸார் செலுத்துவதாகக் கூறிய அவர், அதே ஈடுபாட்டை மக்கள் சேவை மற்றும் வீழ்ச்சியை சந்திக்கும் கட்சியை மீட்பதிலும் கொண்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் காமராஜ்.

அந்த முடிவுக்கு அச்சாரமாக தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு, கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் நேரடியாகவே களமிறங்கினார் காமராஜ். அவரது இந்த திடீர் நடவடிக்கை, காங்கிரஸ் கட்சியில் ஆட்சியிலும் பதவியிலும் உள்ள தலைவர்களும் அரசுப் பொறுப்பை உதறி விட்டு கட்சியை வலுப்படுத்தும் முயற்சிக்கு வித்திட்டது. இதுவே, பிரபலமாக காமராஜ் திட்டம் அல்லது கே திட்டம் என்று அழைக்கப்பட்டது.

கே-திட்டமும் காமராஜின் விளக்கமும்

1963ஆம் ஆண்டில் ஹைதராபாதில் நடந்த கட்சி மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய காமராஜ், கே-திட்டத்துக்கு நேருவின் ஒப்புதலை பெற்றதாக தெரிவித்தார். அப்போது அவர், ஆட்சியும் அதிகாரமும் கட்சியில் உள்ள எந்தவொரு தனி நபரின் சொத்தாக இருக்கக் கூடாது. அந்த வகையில், எந்தவொரு தனி நபரும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு பதவியிலும் தொடருவது கட்சிக்கு எந்த பயனையும் தரப்போவதில்லை என்று கூறினார்.

தனது ராஜிநாமா முடிவைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கிராமம், கிராமமாக சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுடன் முழு நேரத்தை செலவிட்டு கட்சியை ஆணி வேர் அளவில் வலுப்படுத்தப்போவதாக காமராஜ் தெரிவித்தார்.

1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி, டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் பேசிய நேரு, காமராஜ் வகுத்த திட்டம் இதுவரை எந்தவொரு கட்சியும் சிந்திக்காத, ஈடு இணையற்ற திட்டம் என்று புகழாரம் சூட்டினார். கே-திட்டம், தமிழ்நாடுக்கு மட்டுமின்றி இந்தியா முழுவதும் விரிவடைய வேண்டும் என்று அவர் விரும்பினார். அடுத்த இரு வாரங்களில் காங்கிரஸ் ஆளும் மத்திய, மாநில அரசுகளில் யாரெல்லாம் பதவி விலகுவார்கள், கட்சியை வலுப்படுத்துவார்கள் என்ற பட்டியலை வெளியிட்டார் நேரு.

அதன் விளைவாக, அப்போது மத்தியில் அமைச்சர்களாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி (உள்துறை), மொரார்ஜி தேசாய் (நிதித்துறை), ஜெகஜீவன் ராம் (அஞ்சல் துறை), எஸ்.கே. பாட்டீல் (உணவுத்துறை), கோபால் ரெட்டி (வானொலி ஒலிபரப்பு), ஸ்ரீ மாலி (கல்வி) மற்றும் மாநிலத்தில் முதல்வர்களாக இருந்த காமராஜ் (தமிழ்நாடு), பட்நாயக் (ஒரிசா), சி.பி. குப்தா (உத்தர பிரதேசம்), பினோதானந்த்ஜா (பிஹார்), மந்த்லாய் (மத்திய பிரதேசம்) ஆகியோர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு முழு நேர கட்சிப்பணிக்கு திரும்பினார்கள்.

தற்கொலைக்கு சமம்: பெரியார் விமர்சனம்

காமராஜ்

பட மூலாதாரம்,TWITTER

1963ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காமராஜ் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தபோது, அவருக்கு திராவிடர் கழக தலைவர் ஈ.வெ. ராமசாமி ஒரு தந்தி அனுப்பினார். அதில், காமராஜின் முடிவு அவருக்கு மட்டுமின்றி தமிழக மக்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பானது என்று ஈ.வெ.ரா குறிப்பிட்டார்.

காமராஜின் ராஜிநாமாவுக்குப் பிறகு தமிழக முதல்வராக பக்தவத்சலம் பதவியேற்றார். அவரது அமைச்சரவை 1963ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி பதவியேற்றது.

காமராஜின் அதிரடி அறிவிப்பாலும் செயல்பாடுகளாலும் நெகிழ்ச்சி அடைந்த நேரு, அவர்தான் அகில் இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால், தொடக்கத்தில் அதை ஏற்க மறுத்த காமராஜ், நேருவின் மூன்று மாத அழுத்தத்துக்குப் பிறகு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக 1964ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பதவியேற்றார்.

அதே மாதம் 5ஆம் தேதி ஒரிசாவில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் திடீரென நேரு உடல் நலம் குன்றிப்போனார். உடல்நிலை மோசமடைந்து வந்த நிலையில், அதே ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி நேரு காலமானார்.

நேரு காலமானதையடுத்து அவர் வகித்து வந்த இந்திய பிரதமர் பதவிக்கு மூத்த அமைச்சரவை உறுப்பினரான குல்ஸாரிலால் நந்தாவை தற்காலிக பிரதமராக அப்போதைய குடியரசு தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் நியமித்தார். ஆனால், லால் பகதூர் சாஸ்திரியை அப்பதவிக்கு நியமிக்கும் எண்ணத்தில் கட்சித் தலைவரான காமராஜ் இருந்தார். ஆனால், அப்போது மொரார்ஜி தேசாய்க்கும் பிரதமராகும் எண்ணம் இருந்தது. இந்த விவகாரத்தில் கருத்தொற்றுமை அடிப்படையில் பிரதமர் பதவிக்கு தகுதியானவரை தேர்வு செய்யும் அதிகாரத்தை காமராஜுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி வழங்கியது.

இதையடுத்து மொரார்ஜி தேசாயிடம் பேசி, லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக்க ஆதரவு தருமாறு காமராஜ் கேட்டார். ஆனால், தனக்கு அதில் விருப்பம் இல்லாதபோதும் கட்சியின் ஒழுங்குக்கு கட்டுப்பட்டு அந்த முடிவை ஆதரித்தார் மொரார்ஜி.

இந்த காலகட்டத்தில் 1965ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. இதைத்தொடர்ந்து பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியுடன் காமராஜ் போர் முனைக்குச் சென்று களத்தில் உள்ள வீரர்களுக்கு உற்சாகமூட்டினர். அந்த போர் தாஷ்கென்ட் உடன்பாட்டில் இந்திய பிரதமரும் பாகிஸ்தான் பிரதமரும் கையெழுத்திட்டதன் மூலம் முடிவுக்கு வந்தது.

அந்த ஒப்பந்தம் கையெழுத்தான சில மாதங்களிலேயே நெஞ்சு வலி காரணமாக லால் பகதூர் சாஸ்திரி காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து பிரதமர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்களாக மொரார்ஜி தேசாய், நந்தா, சவான், ஜெகஜீவன் ராம், எஸ்.கே. பாட்டீல் ஆகியோர் தங்களைத் தாங்களே நியமிக்கும் நம்பிக்கையில் உறுதியாக இருந்தனர். இதில் மொரார்ஜி, ஜெகஜீவன் ராம், எஸ்.கே. பாட்டீல் ஆகியோர் காமராஜின் கே-திட்டத்தின்கீழ் தங்களுடைய அமைச்சரவை பதவியை துறந்தவர்கள்.

ஆனால், காமராஜின் எண்ணம் வேறு விதமாக இருந்தது. அவர் தனது மனதில் அடுத்த பிரதமராக நேருவின் மகளான இந்திரா காந்தியை தேர்வு செய்யலாம் என முன்மொழிந்தார். காமராஜின் முடிவைத் தொடர்ந்து, மொரார்ஜி நீங்கலாக மற்றவர்கள் தங்களுடைய நிலையில் இருந்து பின்வாங்கினர்.

இதையடுத்து கட்சிக்குள்ளாக மொரார்ஜிக்கும் இந்திரா காந்திக்கும் இடையே நிலவிய போட்டியில், இந்திரா காந்திக்கு ஆதரவாக 355 வாக்குகளும், மொரார்ஜிக்கு ஆதரவாக 169 வாக்குகளும் கிடைத்தன.

அந்த வகையில், நேருவுக்குப் பிறகு இந்தியாவின் இரண்டு பிரதமர்களை தேர்வு செய்யக்கூடிய நிலையில், முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருந்தவராக காமராஜ் இந்திய அரசியல் உலகில் அறியப்பட்டார்.

காமராஜின் முதல் தேர்தல் தோல்வி

1967ஆம் ஆண்டு மீண்டும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார் காமராஜ். விருதுநகர் தொகுதியில் அந்த ஆண்டு நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் 82,606 வாக்குகள் பதிவாகின. அதில் காங்கிரஸ் வேட்பாளர் காமராஜுக்கு 32,136 வாக்குகள் கிடைத்தன. ஆனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பி. சீனிவாசனுக்கு 33,506 வாக்குகள் கிடைத்தன.

அந்த காலகட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக காமராஜ் இருந்தார். ஒரு கட்சிக்கூட்டத்தில் பேசிய இந்திரா காந்தி, பொதுத்தேர்தலில் தோல்வியுற்ற ஒருவர், கட்சி தேர்தல்களில் போட்டியிடும் தார்மிக உரிமைகளையும் இழக்கிறார். காரணம், அவர் ஏற்கெனவே மக்களின் மதிப்பையும் நம்பிக்கையையும் இழந்தவராகி விடுகிறார் என்றார்.

இந்திரா காந்தியின் இந்த விமர்சனம் தன்னை மனதில் வைத்தே இருப்பதாக உணர்ந்த காரமாஜ், 1967ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை வழங்கினார். அதன் பிறகு ஓராண்டு கழித்து 1969இல் நடந்த மக்களவை தேர்தலில் நாகர்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் காமராஜ் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் மொத்தம் 5,05,976 வாக்குகள் பதிவாகின. இதில் காமராஜ் பெற்ற வாக்குகள் 2,49,437. அதே ஆண்டு காமராஜின் தாயார் காலமானார்.

மக்களவை உறுப்பினரான காமராஜை மத்திய அமைச்சராக்க இந்திரா காந்தி விரும்பியபோதும், அதை ஏற்க மறுத்த அவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக நிஜலிங்கப்பா பதவியேற்க ஆதரவாக இருந்தார். மேலும், இந்திரா காந்தியின் பல முடிவுகளுக்கு எதிரான நிலையை காமராஜ் கொண்டிருந்தார்.

1969ஆம் ஆண்டில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி இந்திரா காந்தியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் பதவிக்கும் ஒருவரை நியமிக்க காரிய கமிட்டி கேட்டுக் கொண்டது.

ஆனால், இந்த நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றிய இந்திரா காந்தி, கட்சியின் தலைவராக தானே இருப்பதாகவும் நிஜலிங்கப்பாவை நீக்குவதாகவும் அறிவித்தார். இதனால், ஆரம்பகால காங்கிரஸ் ஸ்தாபன காங்கிரஸ் என்ற பெயரில் காமராஜ் தலைமையிலும் இந்திரா காந்தி தலைமையிலான கட்சி காங்கிரஸ் ஆர் என்ற பெயரிலும் இயங்கின. இரு தரப்பும் ஒருவரையொருவர் பரஸ்பரம் பதவி நீக்கம் செய்து கொண்டன.

1969ஆம் ஆண்டில் உச்சத்துக்கு சென்ற இந்த மோதல் அந்த ஆண்டு டிசம்பர் வரை நீடித்தது. கடைசியில் 705 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கமிட்டியில் 446 பேர் இந்திரா காந்தி பக்கம் சேர்ந்தனர். இதையடுத்து அவரது தலைமையிலான காங்கிரஸ் ஆர் என்ற அணியை இந்திய தேசிய காங்கிரஸ் என்று இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

இதைத்தொடர்ந்து காமராஜ், தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் 1971ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் மீண்டும் நாகர்கோவிலில் போட்டியிட்ட காமராஜ், 2,15,324 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எம்.சி. பாலன் 1,14,771 வாக்குகள் பெற்றார்.

காமராஜ் உயிரிழக்கும் வரை இந்த தொகுதியின் எம்.பி ஆக அவர் இருந்தார்.

இந்திராவின் அவசரநிலை ஏற்படுத்திய தாக்கம்

காமராஜ்

பட மூலாதாரம்,TWITTER

1975ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி, ரே பரேலி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட இந்திரா காந்தி, அரசு இயந்திரங்களை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியதாக தீர்ப்பளித்தது. இதையடுத்து இந்திரா காந்தி பதவி விலக வேண்டும் என மொரார்ஜி தேசாய், ஜெய பிரகாஷ் நாராயண் குரல் கொடுத்தனர். இதனால், சிவில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அந்த தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். இதனால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக 1975ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி நள்ளிரவில், இந்திரா காந்தியின் பரிந்துரையின்பேரில் தேசிய அளவிலான அவசரநிலையை பிரகடனப்படுத்தினார் அப்போதைய குடியரசு தலைவர் ஃபக்ருதின் அலி அகமது. உள்நாட்டு இடையூறுகளால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கூறி இந்த அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

அந்த காலகட்டத்தில் ஜெய பிரகாஷ் நாராயண், மொரார்ஜி, சரண் சிங் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், காமராஜ் கைதாகவில்லை. அனைத்து ஊடகங்களும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. சரியாக ஓராண்டுக்கு முன்பு தன்னால் நாட்டின் பிரதமராக அடையாளம் காட்டப்பட்ட இந்திரா காந்தியின் இந்த செயல்பாடுகள், காமராஜுக்கு கடுமையான வலியை தந்தது. ஒரு சில நாட்களில் அவசரநிலை தளர்த்தப்படலாம் என நம்பிய காமராஜுக்கு அடுத்தடுத்து நடந்த அரசியல் கைதுப்படலம் அவரது உடல்நிலையை மோசமாக்கியது. கடுமையான காய்ச்சல், ரத்த அழுத்தம், சர்ச்கரை அளவு அதிகரிப்பு போன்றவற்றால் காமராஜின் உடல்நிலை பலவீனம் அடைந்தது. 1975ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி தனது 73ஆம் பிறந்த நாளை மிக, மிக எளிய முறையில் கொண்டாடினார் காமராஜ். அவசரநிலை காரணமாக தன்னைத்தானே வீ்ட்டுக்குள்ளேயே அடைத்துக் கொண்ட காமராஜ், 1975ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு நெஞ்சு வலியால் காலமானார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, காமராஜுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வை நடத்த உத்தரவிட்டார்.

1976ஆம் ஆண்டு, அவருக்கு குடிமக்களுக்கான உயரிய விருதாக கருதப்படும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. கலை, இலக்கியம், அறிவியல், பொது அங்கீகாரம் ஆகிய துறைகளில் தனித்து விளங்கியதற்காக இறப்புக்கு பிந்தைய அங்கீகாரமாக பாரத ரத்னா விருதை காமராஜுக்கு தருமாறு அப்போதைய குடியரசு தலைவருக்கு பிரதமராக இருந்த இந்திரா காந்தி பரிந்துரை செய்தார்.

https://www.bbc.com/tamil/india-56315052

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.