Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரத்தத்தில் இஸ்லாமாபாத்.........

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

19411445842.jpg

ஜுலை 11, 2007. கடைசி கடைசியாக ஓர் ஆட்டம் ஆடிப் பார்த்துவிடலாம் என்று அப்துல் ரஷீத் காஜி முடிவு செய்தபோது, லால் (என்றால் சிவப்பு) மசூதி முற்றிலுமாகச் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. கூரைக்கு மேலே ஹெலிகாப்டர்கள். நிறைமாத கர்ப்பிணி மாதிரி அசைந்து, நகர்ந்து வரும் பீரங்கிகள். ராணுவம் உள்ளே வராது; காட்டுவதெல்லாம் வெறும் பாவ்லா என்றுதான் அந்த வினாடி வரை நினைத்திருந்தார்கள்.

பாகிஸ்தானின் சூழ்நிலை அப்படி. அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் இந்திரா காந்தி ராணுவத்தை அனுப்பிய மாதிரி இஸ்லாமாபாத்தில் முஷாரஃப் செய்துவிட முடியாது. நிற்கவைத்துக் கழுவிலேற்றிவிட ஒரு மாபெரும் கூட்டம் எப்போதும் தயாராக இருக்கிற தேசம். 19411445894.jpg

தவிரவும், அவர்கள் தனிநாடு கேட்கிற கோஷ்டியல்ல. இஸ்லாமியச் சட்டமான ஷரியத்தை, தேசத்தின் பொதுச்சட்டமாக்கக் கோருகிறவர்கள். ஒரு முஸ்லிம் நாடு முஸ்லிம் சட்டங்களையே தேசியச் சட்டமாக்குவதில் என்ன பிரச்னை? மத்தியக் கிழக்கில் அத்தனை பேரும் அப்படித்தானே செய்கிறார்கள்? ஒரு குல்லா கிடையாது, தாடி கிடையாது, நீள அங்கி கிடையாது. அமெரிக்கனைப் போல கோட் சூட் போட்டு, எப்போது பார் ஜார்ஜ் புஷ்ஷோடு கைகுலுக்கிக்கொண்டு என்ன இந்த ஆசாமி இத்தனை கேவலமாக நடந்து கொள்கிறானே என்கிற கோபம்.

பாகிஸ்தான் அடிப்படைவாதிகளுக்கு முஷாரஃப்பைப் பிடிக்காமல் போனதற்குக் காரணங்கள் பல. அமெரிக்க நிர்ப்பந்தத்தால் அவர் அல் காயிதா, லஷ்கர் இ தொய்பா போன்ற இயக்கங்களுக்குக் கிடுக்கிப்பிடி போட்டு, பல தீவிரவாத முகாம்களைச் சூறையாடி, லஷ்கர் தலைவர்களை அடிக்கடி கைது செய்து, அடிப்படைவாதிகள், மதவாதிகளின் 'ஆசீர்வாதங்களை' நிறைய சேகரித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த ஆள் தேறமாட்டார் என்கிற முடிவுக்கு அவர்கள் வந்து பலகாலமாகிவிட்டது. என்ன செய்து துரத்தலாம் என்று செயல்திட்டங்களை வரிசைப்படுத்தியதில், ஷரியத்தை தேசியச் சட்டமாக்குவதில் தொடங்குவது நல்ல லாபமளிக்கும் என்று தோன்றியது. முக்கியமாக, இதனை மக்கள் எதிர்க்கமாட்டார்கள். முஷாரஃப் எதிர்த்தால், அவரை காஃபிர் (இறைநம்பிக்கை அற்றவர்) என்று சொல்லிவிடலாம். சுலபம்.

இங்கேதான் ஆரம்பித்தது. லால் மசூதி, பாகிஸ்தானில் உள்ள பல்லாயிரக்கணக்கான மசூதிகளுள் ஒன்று. புராதனமானதெல்லாம் இல்லை. 1965_ல்தான் கட்டப் பட்டது. சிவப்புச் சுவர்களும் சிந்தனைச் சிற்பிகளும். வழிபாட்டுக்கு ஓரிடம். கல்விக்கு இரண்டு இடங்கள். ஒரு மதரஸா ஆண்களுக்கு. இன்னொன்று பெண்களுக்கு.

லால் மசூதியின் நிறுவனத் தலைவரான மௌலானா அப்துல்லாவுக்கு அந்நாளில் அரசு மட்டத்தில் மிகுந்த செல்வாக்கு உண்டு. ஜியா உல் ஹக் அதிபராக இருந்தபோது, அவருக்குக் கிட்டத்தட்ட ஞானகுருவாக இருந்தவர். ஐ.எஸ்.ஐ.யின் பல அதிகாரிகள் தினசரி ஒரு ரவுண்டு வந்து சலாம் போட்டுவிட்டுப் போவார்கள். என்ன பிரயோஜனம்? அரசியல் சங்காத்தம் அத்தனை உத்தமமில்லையே? ஏதோ காரணத்துக்காக அவரைப் போட்டுத் தள்ளிவிட்டார்கள். இன்றுவரை வெளியில் வராத கேஸ் அது.

19411445855.jpgஅப்துல்லா இறக்கும்வரை ஒரு சிறந்த தொழுகைத் தலமாகவும் கல்விக்கூடமாகவும் மட்டுமே இருந்த இடம் அது. அவருக்குப் பின் பொறுப்புக்கு வந்த அவரது மகன் அப்துல் ரஷீத் அதன் முகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற ஆரம்பித்தார். ஆரம்பகாலங்களில், ஜீன்ஸ் பேண்ட், டீ ஷர்ட் எல்லாம் அணிந்துகொண்டு அமெரிக்க ராப் பாடல்களை முணுமுணுத்துக்கொண்டே ஸ்டைலாகத் திரிந்த அதே அப்துல் ரஷீத். எப்படி அவர் நீண்ட தாடியும் பாரம்பரிய அங்கியுமாக மாறினாரோ, அதே மாதிரி லால் மசூதிக்கு வந்து போகிறவர்களையும் மாற்றினார்.

இனி ஐ.எஸ்.ஐ. சங்காத்தம் கிடையாது. அரசியல்வாதிகள் சங்காத்தம் அறவே கிடையாது. அல் காயிதா வரலாம். லஷ்கர் வரலாம். ஹிஸ்புல் முஜாஹிதீன்கள் வரலாம். மதரஸாவில் குர் _ ஆன் மட்டுமல்ல, குண்டு வீசவும் கற்றுத் தரப்படும். துள்ளி விளையாடும் குழந்தைகளுக்குத் துப்பாக்கிப் பயிற்சி தரப்படும். மேற்கத்திய மோகத்தில் மூழ்கித் திளைக்கும் ஆட்சியாளர்களை ஒழுங்கு பண்ண வேறு வழி கிடையாது.

மசூதியைத் தலைமையகமாகக் கொண்டு அப்துல் ரஷீத் காஜியின் தனி அரசாங்கம் அப்போது ஆரம்பித்ததுதான். பக்கபலமாக அவரது சகோதரர் அப்துல் அஜீஸ் (இவரும் ஒரு காஜி) உடன் இருந்தார். என்ன இருந்தாலும் தந்தையைக் கொன்றதற்குப் பழிவாங்கும் வேட்கை அடங்காமல் இருந்தபடியால், ஓர் ஆட்டம் ஆடிப்பார்த்துவிடுவது என்கிற முடிவுடன்தான் இந்தச் சகோதரர்கள் களத்தில் இறங்கியிருந்தார்கள்.

தமது வசீகரிக்கும் குரல் வளத்தைக் கொண்டு கொத்துக் கொத்தாக மக்களை அவரால் ஈர்க்க முடிந்தது. கட்டுப்படுத்தவும் முடிந்தது. இஸ்லாமாபாத் முழுவதும் பிரசங்கங்கள் நிகழ்த்தப்பட்டன. ‘எல்லா கசுமாலங்களையும் விட்டொழித்து இஸ்லாத்துக்குத் திரும்பு. வாக்மேன் கேட்காதே. காதலிக்காதே. கெட்டுப்போகாதே. சீறும் பாம்மை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே. இறைவன் ஒருவரே. அவரை மட்டும் நம்பு. அப்புறம் ஒசாமா. நல்லவர். சாது. நம்மை வழிநடத்த வந்தவர். மற்றபடி, அரசாங்கம் சொல்வதை எல்லாம் நீ கேட்கத் தேவையில்லை. மசூதிக்கு வா. நான் உனக்கு நல்வழி காட்டுகிறேன்.’

மசூதிக்கு உள்ளே நிறைய மறைவிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. பலபேர் வந்து தங்கி பாடம் படித்தார்கள். காஜி சொல்லிக் கொடுத்ததை தட்டாமல் செய்தார்கள். பிரசாரங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கலவரங்கள், எல்லாமே. ஏகே 47 தொடங்கி அத்தனை அதிநவீன ஆயுதங்களையும் ஒரு காப்பி வாங்கி வைத்துக் கொண்டார்கள்.

மக்கள் மத்தியில் லால் மசூதிக்கு ஒரு செல்வாக்கு உண்டாகத் தொடங்கியது. காஜி என்ன சொன்னாலும் கேட்கத் தயாரென்று ஒரு பெரும் கூட்டம் எழுந்து நின்றது. அதுதானே வேண்டும்? ஒரு நாள் சாயந்திரம் திடீரென்று நீதிமன்றம் ஒன்றை ரிப்பன் வெட்டி ஆரம்பித்து வைத்தார் காஜி. இஸ்லாமிய ஷரியத் சட்டங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட நீதிமன்றம் அது. கடுமையான சட்டங்கள். கடுமையான தண்டனைகள். உதாரணத்துக்கு ஒன்று. பஸ்ஸில் பயணம் செய்யும்போது ஓர் ஆணின் கை தவறுதலாக ஒரு பெண்ணின் கையைத் தீண்டிவிட்டால், அவன் கையை தாராளமாக அகற்றிவிடலாம். போதுமா?

கடந்த ஏப்ரல் மாதம் தனியார் வானொலி சேவை ஒன்றைத் தொடங்கினார்கள். பிறகு, வெப்சைட். இஸ்லாமாபாத் முழுவதும் சுற்றிவர ஆரம்பித்தார்கள். துளி சந்தேகம் ஏற்பட்டாலும் போதும், அங்கேயே விசாரணை. அங்கேயே தண்டனை. ஏற்கெனவே பல்வேறு விவகாரங்களில் சிக்கி முழி பிதுங்கி நிற்கும் முஷாரஃபுக்குப் பிரச்னை ஆரம்பித்தது அப்போதுதான். தனியார் நீதிமன்றம், ஷரியத் நீதிமன்றம் என்று என்ன பெயரையும் கொடுக்கலாம். அடிப்படை கட்டப்பஞ்சாயத்துதானே? எப்படி விட்டுவைக்க முடியும்? முஷாரஃபுக்கும் காஜிக்கும் முட்டிக்கொண்டது அந்த நிமிடத்திலிருந்துதான்.

கெடு கொடுத்தார்கள். வாய்தா கொடுத்தார்கள். அன்பாகப் பேசிப் பார்த்தார்கள். அப்புறம் மிரட்டல். ம்ஹ§ம். ஒன்றுக்கும் மசியாததால் கடந்த ஜூலை 11_ம் தேதி வேறு வழியில்லாமல் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியதானது. உள்ளே இருக்கும் பொதுமக்களுக்கு பத்திரமாக வெளியே வரச்சொல்லி அழைப்பு விடுக்கப்பட்டது.

கும்பல் கும்பலாக ஆண்களும் பெண்களும் மசூதியிலிருந்து விரைந்துகொண்டிருந்தார்கள். சிலர் சரணடைவதற்காக. சிலர் தப்பிச்செல்வதற்காக. வெளியே நிலவரம் பார்ப்பதற்காக, கூட்டத்தோடு கூட்டமாக சத்தம் போடாமல் தானும் நடந்து சென்றார் அப்துல் அஜீஸ். சகோதரர் இருவரில் ஒருவர். பத்தடிகூட நடந்திருக்க மாட்டார். ஒரு பெண் காவலாளி அவரைப் பார்த்துவிட்டார். ஒரே அமுக்.

அஜீஸ் கைதான விவரம் தெரிந்ததுமே லால் மசூதி சூடாகிப் போனது. கலவரம் ஆரம்பமானது. உள்ளிருந்து ஓயாத துப்பாக்கிச் சத்தம். அடிதடி கலாட்டா. தாக்குதலுக்கு பதில் தாக்குதல், பதிலுக்கு பதில் என்று 160 பேர் இறந்துபோனார்கள்.

தலைமை காஜி அப்துல் ரஷீத் உள்பட!

போதாது? ஒரு மதத் தலைவரை எப்படிக் கொல்லலாம் என்று தேசம் முழுதும் கொடிபிடிக்க ஆரம்பித்து, இஸ்லாமாபாத்தில் அவசர நிலைப் பிரகடனம் வரைக்கும் விஷயம் முற்றிப்போனது.

Operation Silence என்று பெயர் வைக்கப்பட்டு பலத்த சத்தம் மற்றும் ரணகளத்துடன் வெற்றிகரமாக முடிவடைந்த இந்த லால் மசூதி விவகாரம், இத்துடன் முடிந்துபோனதாக முஷாரஃப் நிம்மதியாகத் தூங்க முடியாது. சீண்டப்பட்ட பாம்பு போல் துடித்துக் கொண்டிருக்கிறது அல் காயிதா. பாகிஸ்தானில் உள்ள அத்தனை தீவிரவாத இயக்கங்களும் கொலைவெறியில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. எவ்வளவு திமிர் இருந்தால் மசூதி மீது குண்டு போட்டு காஜியையும் அவர் சிஷ்யர்களையும் கொல்வார்கள்? அல் காயிதாவின் தளபதிகளுள் மூத்தவரான டாக்டர் ஐமன் அல்ஜவஹரி விடுத்துள்ள சமீபத்திய அறைகூவல், ‘பழிக்குப் பழி. ரத்தத்துக்கு ரத்தம். முஷாரஃபுக்கு எதிராக பாகிஸ்தானியர்கள் அத்தனைபேரும் அணி திரளவேண்டும். அவரை அடித்துக் கீழே சாய்க்கவேண்டும். தொடங்கட்டும் புனிதப் போர். தொடங்கட்டும் புதிய ஜிகாத்.’19411445846.jpg

செய்யத்தான் போகிறார்கள். ஏற்கெனவே மக்கள் மத்தியில் கடும் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கும் முஷாரஃபுக்கு சந்தேகமில்லாமல் இது கஷ்டகாலம். இப்போது அவரது கவலையெல்லாம் இந்த இயக்கங்கள் பற்றியதல்ல. தன்னுடைய ராணுவம் மற்றும் உளவுத்துறை பற்றியது. ராணுவத்திலும் உளவுத்துறையிலும் எத்தனை சதவிகிதம் தனக்கு ஆதரவு இருக்கிறது என்று அவருக்குத் துல்லியமாகத் தெரியவில்லை. ராணுவத் தலைமைப் பொறுப்பை இறுக்கமாகத் தன் கைக்குள் வைத்துக் கொண்டிருந்தாலும், முதுகு சொறியவாவது கையைத் திறந்தாகவேண்டும்.

ஆட்சிக் கவிழ்ப்பென்பது அங்கிருந்துதான் ஆரம்பமாகும். அவருக்குத் தெரியாததா, அவர் செய்யாததா?

ராஜதந்திர ரீதியில் மக்களைத் திசைதிருப்ப வேறு ஏதாவது விவகாரம் கிடைக்காதா என்பதுதான் அவரது இப்போதைய ஒரே தேடல், ஊடல் எல்லாம். ஆனால், ஒரு மசூதிக்குள் ராணுவம் நுழைந்து காஜியைக் கொன்று நூற்றுக்கணக்கான மக்களையும் கொன்றிருப்பதை அத்தனை சுலபத்தில் பாகிஸ்தானியர்கள் ஜீரணிப்பார்கள் என்று தோன்றவில்லை.

அடுத்த சரவெடியை எப்போதும் எதிர்பார்க்கலாம்.

மருதன்-

குமுதத்திலிருந்து.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.