Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான், அண்ணாமலை கருத்து: தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத் திட்டம் தேவையற்றதா? கள நிலவரம் கூறுவது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீமான், அண்ணாமலை கருத்து: தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத் திட்டம் தேவையற்றதா? கள நிலவரம் கூறுவது என்ன?

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
சீமான்

இந்தியாவில் ஆண்டுக்கு நூறு நாட்கள் வேலை வாய்ப்பை அளிக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுத்திவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் மனித உழைப்பை வீணடிப்பதாகவும் இதனால் வேளாண்மை பாதிக்கப்படுவதாகவும் தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் கூறுவது சர்ச்சையாகியிருக்கிறது. இந்தத் திட்டம் உண்மையில் வீணா?

தமிழ்நாட்டில் நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர்தல் குறித்து, விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் கட்சியினருடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

அப்போது அவர் பேசும்போது, "விவசாயத்தை வாழ வைக்க வேண்டுமென்றால் 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டும். மனித ஆற்றலை உழைப்பில் ஈடுபடுத்தி, உற்பத்தியைப் பெருக்கி, லாபத்தை ஈட்டுகின்ற நாடு எதுவோ அதுதான் வாழும், வளரும். மனிதனை உழைப்பிலிருந்து வெளியேற்றிவிட்டு, சோம்பி இருக்க வைத்து கூலி கொடுப்பதென்பது மிக ஆபத்தான போக்கு. வேளாண்மைக்கு ஆட்களே வரலைனா எதுக்கு தனி பட்ஜெட்னு கேக்குறேன். அது ஏமாற்றுதானே..

இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டதல்லவா, எத்தனை மரங்கள் வைத்திருக்கிறீர்கள், எத்தனை குளங்கள், சாலைகளை சீரமைத்திருக்கிறீர்கள்... பல்லாங்குழி ஆடுவது, சீட்டாடுவது, பொரணி பேசுவது இதுக்கு தண்டமா சம்பளம்.. விவசாயம் சுத்தமாக அழிந்து போய்விட்டது" என்று குறிப்பிட்டார்.

சீமானின் இந்தப் பேச்சே பெரும் விவாதமான நிலையில், பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையும் இந்தத் திட்டம் குறித்த மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தது, சர்ச்சையை மேலும் அதிகரித்தது.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையிடம் சீமான் கூறியது குறித்துக் கேட்டபோது, "சீமான் சொன்ன கருத்தை நாம் முழுவதுமாக நிராகரிக்க முடியாது. கேரளாவில் சிறு, குறு விவசாயிகளுக்கே அந்த வேலையைத் தருகிறார்கள். மத்திய அரசு பணம் கொடுக்கிறது. மாநில அரசின் வேலை அதை எப்படி புதுமையாக செயல்படுத்த வேண்டும் என்பதுதான். சீமான் கருத்தில் உள்ள நியாயம் என்னவென்றால், புதுமையாக செய்யாமல் வேற எப்படியோ பண்றாங்க என்பதுதான்" என்று குறிப்பிட்டார்.

இந்த தலைவர்களின் கருத்துகளை அடுத்த நூறு நாள் வேலைத் திட்டம் குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விவாதங்கள் நடைபெறத் துவங்கியுள்ளன.

நூறு நாள் வேலைத் திட்டம் என்பது என்ன?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சிக் காலத்தில் 2005 ஆகஸ்ட் 23ல் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு தரப்படும்.

இந்தத் திட்டத்தில் பணியாற்றுபவர்களைப் பயன்படுத்தி சாலைகள், குளங்கள், கால்வாய்கள் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும். கிராமப் பஞ்சாயத்துகளே இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஒருவருக்கு அவர் வசிக்குமிடத்திலிருந்து ஐந்து கி.மீட்டருக்குள் வேலை வழங்கப்பட வேண்டும்.

ஒருவர் இந்த வேலைக்கு விண்ணப்பித்து 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்படாவிட்டால், அவருக்கு ஊதியத்தை அளிக்க வேண்டும். ஆகவே, வேலை என்பது வாய்ப்பாக அல்லாமல், இந்தச் சட்டத்தின் மூலம் உரிமையாக மாற்றப்பட்டது.

அண்ணாமலை

பட மூலாதாரம்,K.ANNAMALAI/TWITTER

முதல் முறையாக 2006 பிப்ரவரி 2ஆம் தேதி இந்தியாவின் 200 மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 2007 ஏப்ரல் 1ஆம் தேதி மேலும் 130 மாவட்டங்களுக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இங்கே கிடைத்த வெற்றியை அடுத்து 2008 ஏப்ரல் 1ஆம் தேதி இந்தத் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

வேலைவாய்ப்பை வழங்குவதோடு, கிராமப்புற பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை அளிப்பது, கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம்பெயர்வதைத் தடுப்பது, சமூக சமத்துவத்தை உறுதிசெய்வது ஆகியவை இந்தத் திட்டத்தின் பிற நோக்கங்களாக அமைந்தன.

மத்திய அரசு இந்தத் திட்டத்தை "உலகின் மிகப் பெரிய சமூகப் பாதுகாப்பு மற்றும் பொதுப் பணித் திட்டம்" வர்ணித்தது. உலக வங்கி 2014ஆம் ஆண்டில் வெளியிட்ட உலக வளர்ச்சி அறிக்கையில் "ஊரக வளர்ச்சிக்கான மிக சிறந்த உதாரணம்" எனக் குறிப்பிட்டது.

உண்மையில் இந்தத் திட்டம் புதுமையான ஒரு திட்டம் அல்ல. 1970களில் இருந்தே மகாராஷ்டிர மாநிலத்தில் இதுபோன்ற ஒரு வேலை உறுதித் திட்டம் செயல்பாட்டில் இருந்ததுவந்தது. அந்தத் திட்டத்தின் பல்வேறு அம்சங்களை மேம்படுத்தியே இந்தத் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் வடிவமைக்கப்பட்டது.

2008ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் 50 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெற்றுவருகின்றன.

தமிழ்நாட்டில் ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்

தமிழ்நாட்டில் 2006 பிப்ரவரி 2ஆம் தேதி கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் முதற்கட்டமாக இந்தத் திட்டம் துவங்கப்பட்டது. 2007ல் மேலும் நான்கு மாவட்டங்களிலும் 2008லிருந்து மாநிலம் முழுவதும் இந்தத் திட்டம் அமலுக்கு வந்தது. தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலமோர் கிராமத்தைத் தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தத் திட்டம் துவங்கப்பட்டபோது ஒரு நாளைக்கு 80 ரூபாய் கூலி வழங்கப்பட்டு வந்தது. தற்போது 2021ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 273 ரூபாய் ஒரு நாளைக்கு கூலியாக வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை திறன்சாரா உழைப்புத் தொழிலாளர்களுக்கான முழு ஊதியத்தையும் மத்திய அரசே தருகிறது. கட்டுமான செலவினம், திறன் சார்ந்த தொழிலாளர்களுக்கான சம்பளம் ஆகியவற்றில் மத்திய அரசு 75 சதவீதத்தையும் மாநில அரசு 25 சதவீதத்தையும் தருகின்றன.

சீமானின் கருத்து சரியா?

நூறு நாள் வேலை திட்டம் குறித்து சீமான் தெரிவித்த கருத்துகளுக்கு துவக்கத்திலிருந்தே இடதுசாரிக் கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவந்தன.

இது குறித்து பிபிசியிடம் பேசிய தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும் சி.பி.எம்மைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ. லாசர், சீமானின் கருத்து எந்த விதத்திலும் அடிப்படை ஆதாரமற்ற கருத்து என்று தெரிவித்தார்.

"1980களின் துவக்கத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு வருடத்தில் 11 மாதம் வேலை இருக்கும். அந்த நாட்களில் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதே கடினம். நிலம் வைத்திருப்பவர்கள் தொழிலாளர்களின் வீட்டிற்கே சென்று, முன்பணம் கொடுத்துவிட்டுச் செல்வார்கள்.

சீமான்

ஆனால், விவசாயத் தொழல் அதற்குப் பிறகு படிப்படியாக குறைய ஆரம்பித்துவிட்டது. மேலும் எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு நவீனமாக்கப்பட்டவுடன் வேலை வாய்ப்பு மேலும் குறைந்தது. இப்போது உழவில் துவங்கி கதிரடிப்பு, மருந்து தெளிப்பது, நாற்று நடுவது போன்ற எல்லாமே எந்திரமயமாகிவிட்டது. இந்த நிலையில் தொழிலாளர்களுக்கு வருடத்திற்கு 50 நாட்கள்கூட விவசாய வேலை கிடைப்பது கடினமாகிவிட்டது.

இந்தப் பின்னணியில்தான் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 100 நாள் வேலை என்று சொன்னாலும்கூட தமிழ்நாட்டில் 50 நாட்கள்கூட வேலைகிடைப்பதில்லை. நிலைமை இப்படியிருக்கும்போது, சீமானின் கருத்து சுத்தமாக பொருத்தமற்றது" என்கிறார் அவர்.

இந்தத் திட்டத்தில் ஊதியத்தை வழங்குவதில் ஊழல் இருப்பதாக பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தாலும் இதற்கான ஆதாரம் எதையும் அவர் வழங்கவில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஊதியம் வழங்குவதில் முறைகேடுகளைத் தடுக்க, 2016ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி முதல் சம்பளமானது தேசிய மின்னணு நிதி மேலாண்மை முறையைப் (Ne-FMS) பயன்படுத்தி நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து வேலை செய்யும் 90.41 லட்சம் தொழிலாளர்களில் 89.62 லட்சம் தொழிலாளர்களின் ஆதார் எண்கள் இந்த வேலைத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த நூறு நாள் வேலைத்திட்டத்தின் காரணமாக தமிழ்நாட்டில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதாக சீமான் தெரிவித்திருந்தார். ஆனால், 2021 -22ஆம் ஆண்டுக்கான விவசாய நிதிநிலை அறிக்கையின்படி பார்த்தால், 2016ஆம் ஆண்டிலிருந்து விவசாய உற்பத்தி தொடர்ந்து அதிகரித்திருக்கிறது. (பார்க்க அட்டவணை).

அட்டவணை

பட மூலாதாரம்,TNDIPR

தமிழ்நாட்டில் விவசாயம் வளர்ந்து வருகிறதா?

அப்படியானால், தமிழ்நாட்டில் விவசாயம் எந்த பாதிப்பும் இன்றி வளர்ந்து வருகிறதா என்றால், இல்லை என்பதுதான் பதில். ஆனால், அதற்கான காரணங்கள் வேறு. இந்தியாவிலேயே மிக வேகமாக நகர்மயமான மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு.

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் வசிப்பவர்களில் 48.45 சதவீதம் பேர் நகர்ப்புறங்களில் வசிக்கிறார்கள். இந்தியாவிலேயே அதிக சதவீத மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கும் மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்திருக்கிறது.

ஆகவே, விவசாயத்திற்கான நிலப்பரப்பு தமிழ்நாட்டில் தொடர்ந்து சுருங்கி வருகிறது. தமிழ்நாடு அரசின் விவசாயத்திற்கான 2007-2008ஆம் ஆண்டின் கொள்கை விளக்கக் குறிப்பு இதனை தெளிவாகக் குறிப்பிடுகிறது.

1980-81ல் மொத்த விளை நிலப் பரப்பில் தானியங்கள் 57 சதவீதப் பரப்பில் பயிரிடப்பட்டன. இது 2004-2005ல் 46 சதவீதமாகக் குறைந்தவிட்டது. நகரமயமாதல், தொழில்மயமாதல், தண்ணீர் கிடைக்காமை ஆகியவையே விவசாய நிலங்கள் சுருங்குவதற்கும் விவசாயம் சுருங்குவதற்கும் மிக முக்கியமான காரணமாக இந்த கொள்கை விளக்கக் குறிப்புச் சுட்டிக்காட்டுகிறது.

ஆகவே, நூறு நாள் வேலைத்திட்டம் அமலாக்கப்படுவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் விவசாய நிலப்பரப்பும் அதனைச் சார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துவிட்டது. ஆகவே விவசாயத்திலிருந்து கிடைக்கும் வேலைவாய்ப்பும் வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்த நிலையில்தான், இந்த 100 நாள் வேலைத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, நாடு முழுவதுமே விவசாயத் தொழிலாளர்களின் கூலி உயர்ந்திருப்பதாக பொருளாதார நிபுணர்கள் ஷான் த்ரேவும் அமர்த்தியா சென்னும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

விவசாயம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இந்தியாவில் 1990க்கும் 2005க்கும் இடையில் கிராமப்புற உழைக்கும் மக்கள் புறக்கணிக்கப்பட்டனர். தனிநபர் வருவாய் உயர்வதில் விவசாயத்திற்கு எந்தப் பங்கும் இல்லாமல் போனது. விவசாய தொழிலாளர்களின் வளர்ச்சி படிப்படியாக தேக்கமடைந்தது. கிராமப்புற வேலைவாய்ப்புக் கொள்கை முன்னுரிமையை இழந்தது. 2005ல் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகுதான் அரசின் முன்னுரிமை மாறியது. கிராமப்புற மக்களின் கூட்டு பேர சக்தியும் அதிகரித்தது" என்கிறது ஷான் த்ரேவும் அமர்த்தியா சென்னும் இணைந்து எழுதிய An Uncertain Glory புத்தகம்.

தவிர, இந்த சட்டமானது பெண்கள் பெருமளவில் வேலைவாய்ப்பில் ஈடுபடுவதை ஊக்குவித்தது என்பதையும் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. பிஹார், இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், மேர்குவங்கம் போன்ற மாநிலங்களில் பெண்கள் விவசாய வேலைகளில் இடம்பெறுவது மிகக் குறைவாகவே இருக்கும். இங்கு பெண்களுக்கான வேலை வாய்ப்பும் மிகக் குறைவு. ஆனால், இந்தத் திட்டம் மாற்றியது.

இந்தத் திட்டம் அறிமுகவதற்கு முன்பாக விவசாய வேலையில் சம்பளம் அதிகரிப்பது என்பது வெறும் 0.04 சதவீதம் என்ற நிலையிலேயே இருந்தது. அறிமுகமான பிறகு ஆண்களுக்கு 1.21 சதவீதமும் பெண்களுக்கு 4.34 சதவீதமும் ஊதியம் அதிகரித்தது. ஆகவே, இந்தத் திட்டம் நடைமுறையில் இருப்பதால் விவசாயத் தொழிலாளர்களின் ஊதியம் தொடர்ந்து அதிகரித்துவந்துள்ளது என்பதையும் இந்தப் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.

தமிழ்நாட்டில், 2014 - 15ல் ஒரு விவசாயத் தொழிலாளரின் ஊதியம் 334.3 ரூபாயாக இருந்தது 2019-20ல் 410 ரூபாயாக உயர்ந்தது.

நூறு நாள் வேலைத் திட்டத்தைப் பொறுத்தவரை, ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 100 நாட்கள் வழங்க வேண்டுமென்பது சட்டம். ஆனால், 50 நாட்கள் கிடைத்தாலே அதிகம் என்கிறார்கள் தொழிலாளர் சங்கத் தலைவர்கள். 60 நாள் வேலை கிடைக்கிறது என்று வைத்துக்கொண்டால்கூட, ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 16,380 ரூபாய் மட்டுமே இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும். சராசரியாக மாதத்திற்கு 1375 ரூபாய் மட்டுமே கிடைக்கும்.

ஆனால், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதில் சில குறைகள் இருப்பதை லாசர் ஒப்புக்கொள்கிறார்.

"இந்தத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் வேலையைக் கண்காணிக்க வேண்டும் என்பதை யாரும் ஒப்புக்கொள்வார்கள். இந்தத் திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர் என இரண்டு பேரை நியமிக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் பஞ்சாயத்துத் தலைவருக்கோ, அதிகாரிகளுக்கோ நெருக்கமானவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஆகவே இவர்களால் யாரையும் கேள்வி கேட்கவும் முடியாது. வேலை வாங்கவும் முடியாது. இது மாற வேண்டும்" என்கிறார் லாசர்.

https://www.bbc.com/tamil/india-58822739

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.