Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகம்: இரண்டு எதிர்க்கட்சிகளின் எதிர்காலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு எதிர்க்கட்சிகளின் எதிர்காலம்

 
spacer.png

ராஜன் குறை 

சில மாநிலங்களில் ஆட்சி செய்தாலும், தேசிய அளவில் முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும், தமிழ்நாட்டில் முதன்மை எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.கவுக்கும் கடந்த சனிக்கிழமை - 2021அக்டோபர் 16 - முக்கியமான நாள். காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட செயற்குழு, அதிருப்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று அன்று கூடியது. அ.இ.அ.தி.மு.க கட்சி தொடங்கப்பட்டு பொன்விழா காணும் நேரம் அதன் முன்னாள் (தற்காலிக) பொதுச்செயலாளர் சசிகலா, ஜெயலலிதா சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தி அந்தக் கட்சியின் மீது உரிமைகோரும் தன் அரசியல் செயல்பாட்டை தொடங்கினார்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை தலைவர் யாரென்று தெரியும்; அது நடைமுறையில் ராகுல் காந்திதான். ஆனால், அவர் பதவி விலகி அவருடைய அன்னை சோனியா காந்தி தற்காலிக பொறுப்பேற்றுள்ளார். கட்சியின் கட்டமைப்பு பெரிதும் பலவீனமடைந்துள்ளது என்பதால் உட்கட்சி தேர்தல்களுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டில் கட்சியின் அனைத்து மட்டத்திலான அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அ.இ.அ.தி.மு.கவைப் பொறுத்தவரை கட்சியின் கட்டமைப்பு நன்றாகத்தான் உள்ளது. சட்ட மன்றத்தில் அறுபத்தாறு உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், தலைமைதான் ஜெயலலிதாவுக்குப் பின் தொடர்ச்சி அறுபட்ட குழப்பத்தில் இருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால் காங்கிரஸில் தலைவர் கட்சியைத் தேடுகிறார் அல்லது புதிதாகக் கட்டமைக்க விரும்புகிறார். அ.இ.அ.தி.மு.கவில் கட்சித் தலைவரைத் தேடுகிறது அல்லது புதிதாக உருவாக்க விரும்புகிறது.

இந்த நிலை இந்தக் கட்சிகளுக்கு எப்படி உருவானது, அதன் ஆழ்ந்த அரசியல் சித்தாந்த உட்பொருள் என்ன என்பதைப் பரிசீலிப்போம்.

spacer.png

காங்கிரஸ் தலைமையும் கட்சியும்

காங்கிரஸ் இந்தியாவின் பழம்பெரும் அரசியல் கட்சி. இந்தியாவில் மக்களாட்சி வேரூன்ற வழிவகை செய்த கட்சி. அது தொடக்கத்தில் வலுவான மாநில அமைப்புகள், அவற்றில் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள், அவர்கள் தேர்வு செய்யும் மத்திய தலைமை என்றெல்லாம் உட்கட்சி ஜனநாயகத்துடன் செயல்பட்டது. காந்தி ஆதரித்த பட்டாபி சீதாராமையாவே கட்சித் தேர்தலில் தோற்று சுபாஷ் சந்திர போஸ் தலைவரானது வரலாறு. “பட்டாபியின் தோல்வி என்னுடைய தோல்வி” என்று காந்தி கூறியது பிரபலமானது. பல்வேறு கருத்தியல் போக்குகளும் காங்கிரஸினுள் முரண்பட்டு விவாதித்து வந்தன. பெரியார் போன்ற பலர் வெளியேறி தனி அமைப்பு கண்டார்கள் என்றாலும், கட்சிக்குள்ளேயே கருத்து மாறுபாடுகளுடன் பலர் தொடரவும் செய்தார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு நேரு காலத்தில் கூட, அவர் கட்சித் தலைவர்களின் கருத்துகளை அனுசரித்தே நடக்க வேண்டியிருந்தது. ஆனால் தேர்தல்கள் தொடர்ந்து நடைபெறும்போது மக்களிடம் வாக்குகளைப் பெற வேண்டியது முக்கிய பணியாகியது. அப்போது தலமட்ட கட்சி அமைப்பு மட்டுமின்றி, வசீகரமான மக்கள் செல்வாக்குள்ள தலைமையும் அவசியம் தேவையென்றானது. நேரு மக்களைக் கவர்ந்திழுக்கும் வசீகரமிக்க வெகுஜன தலைவராக இருந்தது காங்கிரஸ் ஆட்சி வலுவாக நடைபெற உதவியாக இருந்தது. அவரால் இந்தியாவின் ஒற்றுமை, கலப்பு பொருளாதாரம், அறிவியல் வளர்ச்சி என்று கருத்தியல் ரீதியாகவும் வலுவான லட்சியங்களை வடிவமைக்க முடிந்தது. ஒரு கட்சியின் முக்கிய தேவைகள் இந்த மூன்றும்தான்:

1. வலுவான வேர்மட்ட கட்சி அமைப்பு

2. வசீகரமான தலைமை

3. கருத்தியல் வலிமை

இவை மூன்றுக்கிடையே சில உள்முரண்களும் உண்டு. வசீகரமான தலைமை மற்ற இரண்டையும் புறமொதுக்கும் சாத்தியம் உண்டு. வெகுஜன ஈர்ப்புமிக்க தலைவர்கள் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தினாலும், உட்கட்சி ஜனநாயகத்தை மதிக்க வேண்டியது கிடையாது. மேலிட முடிவுக்கு அனைவரும் கேள்வி கேட்காமல் கட்டுப்படும் மேலிட கலாச்சாரம் (ஹை கமாண்ட் கல்ச்சர்) வலுவாகிவிடும். கருத்தியலும் முக்கியத்துவம் இழந்துவிடும்.

spacer.png

காங்கிரஸ் கட்சி நேருவுக்குப் பின் அவர் மகள் இந்திரா காந்தி என்ற வாரிசு தலைமை முறைக்கு மாறியது இந்த வெகுஜன ஈர்ப்பினை கருதித்தான். இதை வெகுஜன இறையாண்மை (Popular Sovereignty) என்று அழைக்கிறோம். இந்திரா காலத்தில் மூத்த தலைவர்கள் அவரது சோஷலிஸ போக்கினை எதிர்த்து கட்சியைப் பிளந்தார்கள். இந்திராவே தேர்தல் களத்தில் வென்றார். அதன் பிறகு காங்கிரஸில் மேலிட கலாச்சாரம் வலுவானதாக மாறியது. இந்திரா கொலையுண்ட தருணத்தில், அவர் மகன் ராஜீவ் காந்தி உடனே பிரதமரானதும் காங்கிரஸ் திட்டவட்டமாக வெகுஜன இறையாண்மை, வாரிசு தலைமை என்ற மாதிரியைப் பின்பற்றியது தெளிவானது. அப்போதும் காங்கிரஸில் கருத்தியல் ரீதியான விவாதமும், தெளிவும் இருந்தது. மெள்ள, மெள்ள அது குழம்பத் தொடங்கியது. சோஷலிஸ பாதையா, சந்தைப் பொருளாதாரமா என்ற கேள்வி வலுப்பெற தொடங்கியது. இந்த நிலையில்தான் ராஜீவ் காந்தியும் கொலையுண்டார். அந்த அனுதாப அலையில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபோது வெகுஜன ஆதரவில்லாத நரசிம்ம ராவ் பிரதமரானார். அந்த நேரத்தில் தாராளவாதமும், உலகமயமாக்கலும் இன்றியமையாத தேவையாகியது; அதை நரசிம்ம ராவ் முன்னின்று நடத்தினார். வெகுஜன கவர்ச்சியில்லாத தலைமை, கருத்தியல் பாதை மாற்றம் / தடுமாற்றம் இரண்டும் சேர்ந்து காங்கிரஸைப் பெரிதும் பலவீனப்படுத்தியது.

ஒருபுறம் மண்டல் கமிஷன் தாக்கத்தில் உத்தரப்பிரதேசம், பிகார் போன்ற முக்கிய மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர் நலன் - சோஷலிஸ நோக்குகொண்ட லோஹியாவத கட்சிகள் வலுப்பெற்றன. மற்றொருபுறம் அதற்கு எதிராக இந்துத்துவ மீட்புவாத நோக்கும், பனியா பெருமுதலீட்டு ஆதரவும் கொண்ட பாரதீய ஜனதா கட்சி வலுவடைந்தது. காங்கிரஸுக்கு சோனியா தலைமையேற்று அது மீண்டும் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைத்தாலும், சோனியா பிரதமராகாமல், மன்மோகன் சிங் என்ற பொருளாதார நிபுணரைப் பிரதமராக்கியதில் கட்சித் தலைமையின் வெகுஜன இறையாண்மை பிம்பம் சிதைவடைந்தது. இது காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து பலவீனப்படுத்தியது. தி.மு.க உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் ஆதரவுடன் பத்தாண்டுகள் கூட்டணி ஆட்சி செய்தது காங்கிரஸ். ஆனால், எதிர்முனையில் நரேந்திர மோடி என்ற வெகுஜன பிம்பத்தை கட்டமைத்த பாரதீய ஜனதா கட்சி, தனது பாசிச பெரும்பான்மைவாத கருத்தியலின் அடிப்படையில் ஆட்சியைப் பிடித்துவிட்டது.

இப்போது காங்கிரஸ் கட்சியில் ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் மாறும் சாத்தியம் இருக்கிறது. மீண்டும் மக்கள்நல கொள்கைகள், கூட்டாட்சி தத்துவம் என முற்போக்கான கருத்தியலை ராகுல் ஆதரிக்கிறார். ஆனால், பத்தாண்டுகளில் பல மாநிலங்களிலும் பலவீனமடைந்துவிட்ட கட்சி அமைப்புகளைப் பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. காங்கிரஸின் மூத்த தலைவர்களுக்கும், ராகுல் காந்திக்கும் பிற இளைய தலைவர்களுக்கும் உள்ள தலைமுறை இடைவெளியைச் சரிசெய்ய வேண்டியுள்ளது. இந்தச் சவால்களைச் சந்தித்து, மாநிலக் கட்சிகளுடன் வலுவான கூட்டணியை உருவாக்கினால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியும்.

spacer.png

அ.இ.அ.தி.மு.க சந்திக்கும் நெருக்கடி - தலைமையே கட்சி

அண்ணாவின் பெயரில் கட்சியைத் தொடங்கிய எம்.ஜி.ஆருக்கு தி.மு.கவுடன் பெரிய கொள்கை வேறுபாடெல்லாம் கிடையாது. தி.மு.க விலக்கிய “தெய்வீகம், தேசியம்” போன்ற புனித குறியீடுகளை எம்.ஜி.ஆர் சேர்த்துக் கொண்டார். அதன் மூலம் திராவிட அடையாளத்துக்குள் சற்றே மீட்புவாத நோக்குகொண்ட ஜாதீய சக்திகளை இணைத்துக் கொண்டார். ஒன்றிய அரசுடன் சமரச நோக்கை மேற்கொண்டார். அவசர நிலையை ஆதரித்தார். தி.மு.க எதிர்ப்பையே மையப்படுத்தினார். வேர் மட்டத்திலிருந்து தி.மு.கவை எதிர்ப்பவர்கள், அ.இ.அ.தி.மு.கவில் இணைந்தனர். தி.மு.கவின் சிதைந்த ஆடிப் பிரதிபலிப்பாக (Distorted Mirror Image) அண்ணா தி.மு.க இருந்தது. வேர்மட்ட, தலமட்ட அமைப்புகள் உண்டு. ஆனால், உட்கட்சி ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. எம்.ஜி.ஆர் ஒன்று என்றால் மற்றவர்களெல்லாம் பூஜ்யம் என்பதே சூத்திரம். முழுக்க முழுக்க வெகுஜன இறையாண்மையை நம்பிய கட்சி.

spacer.png

எம்.ஜி.ஆர் தன்னுடைய அரசியல் வாரிசு யார் என்பதை முற்றிலும் தெளிவாக அறிவிக்கவில்லையென்றாலும், குறியீட்டு ரீதியாக ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தியிருந்தார் எனலாம். மேலும் அவருடைய செல்வாக்கே திரைப் பிம்பமாகத்தான் என்பதால், திரையில் அவருடன் முக்கிய படங்களில் நடித்த ஜெயலலிதாவை அவருடைய வாரிசாக மக்கள் ஏற்பது சுலபமாக இருந்தது. அவர் மனைவி ஜானகியும் நடிகை என்றாலும் அது வெகுகாலம் முன்பு என்பதாலும், பொதுவெளியில் ஜானகி முன்னிறுத்தப்படாததாலும் ஜானகி அணியால் ஜெயலலிதா அணியுடன் போட்டியிட முடியவில்லை. கட்சி ஜெயலலிதா தலைமையில் ஒன்றுபட்டது. அப்போதும்கூட ஜெயலலிதாவால் கட்சியை வெற்றி பெறச் செய்திருக்க முடியுமா என்பது ஐயம்தான். அவர் காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்ததால், தேர்தல் பிரச்சாரத்தின்போது ராஜீவ் காந்தி தமிழக மண்ணில் இலங்கை தமிழர்களால் கொல்லப்பட்டது மிகப்பெரிய அனுதாப அலையையும், தி.மு.க எதிர்ப்பையும் உருவாக்கியதில் முதல்வரானார். அவருடைய 1991-96 ஆட்சிக்காலத்தில் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்து பொருளாதாரத் தாராளமய / உலகமயமாக்கலை நிகழ்த்தியதில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்தது அவரது ஆட்சிக்கும், கட்சிக்கும் உதவியது. எம்.ஜி.ஆரைவிட மோசமான எதேச்சதிகாரியாக மாறினார். அவர் முகத்துக்குத்தான் ஓட்டு என்று கட்சியினரே நம்பியதால் பொது மேடைகளில் மந்திரிகள், தலைவர்கள் அனைவரும் அவர் காலில் விழுவது விதியாகவே மாறியது.

spacer.png

பாஜக கைப்பற்றிய கட்சி

கட்சியினரெல்லாம் அடிமைகள், தி.மு.க எதிர்ப்பைத் தவிர கொள்கை, கருத்தியல் எதுவும் கிடையாது என்ற நிலையில் ஜெயலலிதா முதல்வராகவே மரணமடைந்தபோது யார் அவருக்கு வாரிசு என்ற கேள்வி எழுந்தது. ஜெயலலிதாவுடன் இணைபிரியாமல் முப்பதாண்டுகள் வாழ்ந்து, உடன்பிறவா சகோதரி என்றழைக்கப்பட்டு, அவருடன் சேர்ந்து சதிசெய்து ஊழல் செய்ததாக குற்றமும் சாட்டப்பட்ட சசிகலா கட்சியிலும், ஆட்சியிலும் ஜெயலலிதாவின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்தவர். பொதுவெளியிலும் அவருடன் எப்போதுமே சேர்ந்து காணப்பட்டவர். எனவே, அவர் ஜெயலலிதாவின் வாரிசாக தலைவராவதும், முதல்வராவதும் இயல்பானதாகவே இருந்திருக்கும். பொதுக்குழுவும் அவரை தேர்வு செய்து அவர் காலில் விழுந்து அவரை தலைமைப்பொறுப்பு ஏற்கும்படி கெஞ்சியது காணொலிக் காட்சிகளாக காணக்கிடைக்கிறது.

spacer.png

ஆனால் பாரதீய ஜனதா கட்சி அதை விரும்பவில்லை. அ.இ.அ.தி.மு.கவை முழுவதும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர மோடி விரும்பினார். குருமூர்த்தி போன்ற பார்ப்பன, ஆர்.எஸ்.எஸ் சக்திகளும் சசிகலா முதல்வராவதை விரும்பவில்லை. சசிகலாவை முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்காமல் ஆளுநர் வெளி மாநிலம் சென்றுவிட்டார். குருமூர்த்தியின் தூண்டுதலில் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தினார். ஆனால் அவரால் போதுமான சட்டமன்ற உறுப்பினர்களை ஈர்க்க முடியவில்லை. சசிகலா அவர்களை கூவாத்தூர் என்ற இடத்தில் சொகுசு ஹோட்டலில் தங்க வைத்தார். அப்போதுதான் சொத்துக்குவிப்பு வழக்கில் உறங்கிக்கொண்டிருந்த தீர்ப்பு வெளிவந்து சசிகலா சிறைக்குச் சென்றார். அதற்கு முன்னால் தன் ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு சென்றார். ஆனால் பாரதீய ஜனதா கட்சி எடப்பாடி பழனிசாமியையும் பகிரங்கமாக மிரட்டி தனக்கு பணிய வைத்தது. பாஜக கட்டளைப்படி அவர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து சசிகலாவைக் கட்சியிலிருந்து நீக்கினார். பொதுச்செயலாளர் பதவியையே அவர்கள் சட்ட விரோதமாக அகற்றி தங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று பொதுக்குழு மூலம் நியமித்துக்கொண்டனர்.

spacer.png

மீண்டும் சசிகலா

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் சசிகலா தண்டனை காலம் முடிந்து விடுதலையாகிவிட்டார். பாரதீய ஜனதாவுக்கு ஒரு குழப்பம். பழனிசாமி, பன்னீர்செல்வத்தால் தேர்தலை வெல்ல முடியாது, அவர்கள் வசீகரமான தலைவர்கள் இல்லை என்பது தெளிவாகியது. எதிர்தரப்பில் கலைஞரால் வெகுகாலம் அரசியலில், ஆட்சியில் பயிற்றுவிக்கப்பட்ட அவர் மகன் ஸ்டாலின் தலைவராகிவிட்டார். வலுவான கருத்தியல் அடிப்படை, கட்சி கட்டுமானம், வெகுஜன ஈர்ப்புமிக்க தலைமையாக மு.க.ஸ்டாலின். அவரை எதிர்த்து பாஜகவுக்கு கீழ்படிந்து நடக்கும், சசிகலாவுக்கு துரோகம் செய்த, தங்களுக்குள் முரண்பட்ட இருவர் எப்படி போட்டியிட முடியும் என்ற ஐயம் குருமூர்த்திக்கே எழுந்தது. அதனால் தி.மு.க நெருப்பை அணைக்க சசிகலா என்ற சாக்கடை ஜலத்தைப் பயன்படுத்தலாம் என்று அறிவித்தார். ஆனால், எந்த நாடகத்துக்கும் ஒரு எல்லை உண்டு. பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் மீண்டும் சசிகலாவிடம் செல்ல துணிச்சல் கிடையாது. குருமூர்த்தியா போய் அவமானப்படப் போகிறார்?

இந்த நிலையில் பாஜகவுக்கு இன்னொரு திட்டமும் இருந்திருக்கலாம். அது என்னவென்றால் அ.இ.அ.தி.மு.க தோல்வியடைந்து உடைந்து சிதறும்போது அந்த சிதறல்களை வைத்து பாரதீய ஜனதா கட்சியைத் தமிழகத்தில் தி.மு.கவுக்கு எதிர்க்கட்சியாக உருவாக்கிவிடலாம் என்பதுதான் அது. ஆனால், சட்டமன்றத் தேர்தலும் சரி, உள்ளாட்சித் தேர்தலும் சரி ஒன்றை தெளிவாக்கிவிட்டது. அது அ.இ.அ.தி.மு.கவே இல்லாமல் போனாலும் மக்கள் ஒருபோதும் பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதுதான் அது. திராவிட - தமிழ் அடையாளம் கொண்ட ஒரு கட்சிதான் என்றைக்கு இருந்தாலும் தமிழகத்தில் தி.மு.கவுக்கு மாற்றாக உருவாக முடியும் (இப்போதுள்ள நிலையில் பத்து, பதினைந்து ஆண்டுகள் ஆகலாம்).

அதனால் ஒரு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. இதை பாரதீய ஜனதாவாலும் தீர்க்க முடியுமா என்பது தெரியவில்லை. பழனிசாமி குழுவினரால் மீண்டும் சசிகலா காலில் விழ முடியாது; அவர் என்றைக்கு இருந்தாலும் பழிவாங்கி விடுவார் என்ற அச்சம் இருப்பது புரிந்துகொள்ளத்தக்கதுதான். அவர்கள் சிலரை விட்டுவிட்டு பிறரை தன் பக்கம் இழுக்கலாம் என்றால் அதற்கு சசிகலா தன் வெகுஜன செல்வாக்கை நிரூபிக்க வேண்டும். அதற்கு நகராட்சி தேர்தல்கள் உதவுமா என்று தெரியவில்லை. இரட்டை இலையை எதிர்த்துப் போட்டியிடக் கூடாது என்று சசிகலா நினைக்கலாம்.

சட்டம் என்ன சொல்கிறது?

சட்டரீதியாக வழக்கு இன்னும் நீதிமன்றத்தில்தான் இருக்கிறது. சசிகலாவை இடைக்கால பொதுச்செயலாளராகப் பொதுக்குழு தேர்ந்தெடுத்தது சட்டப்படி செல்லுபடியாகும். ஆனால், கட்சி விதிகளின்படி பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுச்செயலாளர் பதவியையே நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்குக் கிடையாது.

எனவே, அ.இ.அ.தி.மு.க கட்சி விதிமுறைகள்படி அடிப்படை உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்கும் தேர்தலை நடத்தி, பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே சட்டரீதியான தீர்வாக இருக்கமுடியும். ஆனால், அப்படி ஒரு தேர்தலை நடத்துவதில் ஏராளமான சிக்கல்கள் தோன்றும். உறுப்பினர் பட்டியலை எப்படிச் சரிபார்ப்பது? எந்த தேதியை அடிப்படையாகக் கொள்வது? ஓட்டளிக்க எத்தனை ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்? இவை போன்ற பல கேள்விகளுக்கு விடை காண வேண்டும். வழக்குகள் பெருகும். அதனால் பேச்சுவார்த்தை மூலம் ஒருமனதாகத் தேர்வு செய்து, வேட்பாளரை அறிவித்து, போட்டியின்றி தேர்ந்தெடுப்பதுதான் சிறந்த வழி.

அந்தப் பேச்சுவார்த்தையை யார் நடத்துவார்கள் என்பதே கேள்வி. சிக்கலைத் தொடங்கிய பாஜகதான் தீர்த்து வைக்க வேண்டும். அதற்கு முதற்படியாக நீதிமன்றம் இரட்டை இலை சின்னத்தை முடக்கலாம். எடப்பாடி பழனிசாமி அணி, கே.சி.பழனிச்சாமி அணி, பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி எல்லாம் தனித்தனி சின்னத்தில் நகராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடலாம். யார் அதிக வாக்குகள் பெறுகிறார்களோ அவரை அனைவரும் சேர்ந்து பொதுச்செயலாளர் ஆக்கலாம்.

இரண்டாண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும்போது தனக்கு எதிராக தேசிய அளவில் ஒரு கூட்டணியை உருவாக்குவதில் தி.மு.க முக்கிய பங்கு வகிக்கும் என்பது பாஜகவுக்குத் தெரியும். எனவே தமிழகத்தில் தி.மு.கவுக்கு ஒரு வலுவான எதிர்க்கட்சியை உருவாக்குவது அதற்கு அவசியமானது. ஒருவேளை அவர்கள் கண்டெடுத்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான புதிய மாநில தலைவர் அண்ணாமலை பாரதீய ஜனதா கட்சியை வளர்த்து எடுத்துவிடுவார் என்று பாரதீய ஜனதா கட்சி நம்பலாம். அப்போது அ.இ.அ.தி.மு.க கட்சியின் நிலை கேள்விக்குறிதான். என்னைப் போன்ற அரசியல் ஆய்வாளர்களுக்கு சுவாரஸ்யமான ஒரு காலமாக இருக்கும்.

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி

 

 

https://minnambalam.com/politics/2021/10/18/5/future-of-two-opposition-political-parties

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.