Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு நேர்காணல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு நேர்காணல்

எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு நேர்காணல்

 தமிழ் இலக்கியத்தின் மறுக்கமுடியாத எழுத்தாளர்களில் முக்கியமானவர் ஜெயமோகன் அவர்கள். தமிழ் மொழியின் உச்சத்தை தொட்டவர் என்று சொல்லப் பொருத்தமானவர். தமிழிலும் மலையாளத்திலும் மிகப்பெரிய வாசகப்பரப்பு இவருக்கு உண்டு. புனைவின் எல்லா தளங்களிலும் அவரது எழுத்துக்கள் காத்திரமாக பேசப்படுகின்றன. zoom செயலி ஊடாக நடாத்தப்பட்ட இந்த நேர்காணல் பின்பு எழுத்துருவாக்கப்பட்டது . 

WhatsApp-Image-2021-10-02-at-00.20.46-1-

கேள்வி: மிக நீண்ட காலமாக ஈழத்து இலக்கிய சூழலையும் அதன் போக்குகளையும் அவதானிப்பவர் என்றவகையில்; அவை நகர்ந்து சென்றிருக்கின்ற செயற்பாட்டு இயங்கியலை எப்படிப்பார்க்கிறீர்கள்?

பதில் : ‘ஈழ இலக்கியம்;ஒரு விமர்சனப் பார்வை’ எனும் தலைப்பில் பத்துவருடங்களுக்கு முன்பே ஒரு தொகுப்பை எழுதியிருக்கிறேன்.அதற்கு பிறகு தற்காலம் வரை தொடரான ஈழத்து இலக்கியம் குறித்த பார்வை எனது எழுத்துக்களில் வெளிப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இருந்து முக்கியமான ஈழத்து எழுத்தாளர்கள் ஒவ்வொருவர் பற்றியும் குறைந்தபட்சம்  ஒரு விமர்சனக் கட்டுரையாவது எழுதியிருக்கிறேன். என் பார்வைகளை அந்த அடிப்படையில்தான் முன்வைக்கிறேன்

ஈழ இலக்கியத்திற்கு சில சிறப்பு வாய்ப்புகள் இருக்கின்றன. இரு கலாச்சாரங்கள் உரையாடிக்கொள்ளும் விளிம்பு என்பது படைப்பிலக்கியத்துக்கும் பண்பாட்டு ஆய்வுக்கும் மிக முக்கியமான ஒரு வாய்ப்பு. உதாரணமாக குமரி மாவட்டத்திற்கும் கேரளத்துக்கும் நெருக்கமான ஒரு தொடர்புண்டு. மலையாளத்தோடும் அதன் கலாச்சாரத்தோடும் பேசுகிற வாய்ப்பு குமரிமாவட்டத்துக்கு  இருக்கிறது. ஆகவே இங்கே இயல்பாகவே நவீன இலக்கியத்தின் தீவிரமான ஒரு தளம் இருந்துகொண்டிருக்கிறது

அதைவிட பெரிய வாய்ப்பு ஈழ இலக்கியத்துக்கு உள்ளது. நீங்கள் எதிர்கொள்வது முற்றிலும் வேறொரு மொழியையும் பண்பாட்டையும். ஆனால்  இது வரைக்கும் சிங்கள இலக்கியத்திற்கும் ஈழ இலக்கியத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. எழுபது ஆண்டுகள் பார்த்தால் எந்த உரையாடலுமின்றி தங்களை தனிமைப்படுத்தி ஒதுங்கிக் கொண்டு ஈழ இலக்கியம் செயல்பட்டிருக்கிறது. திறந்த மனதோடு சிங்கள கலாச்சாரத்தையும் பௌத்த மதத்தையும் நோக்கி உரையாடுவதற்கான எந்த முயற்சியும் ஈழ இலக்கியத்தில் இடம்பெறவில்லை.

இரண்டாவதாக வட்டாரப் பண்பாடுகள் இலக்கியத்துக்கு முக்கியமானவை. தமிழிலக்கியத்தில் இப்படிப்பட்ட வட்டாரப் பண்பாடுகளே தனித்தன்மை கொண்ட இலக்கியத்தை உருவாக்கியிருக்கின்றன. உதாரணம் கி.ராஜநாராயணனும் ஜோ.டி.குரூசும். வெறும் ஐம்பது கிலோமீட்டர் இடைவெளிதான். இருவர் நிலங்களுக்கும் நடுவே. ஆனால் முற்றிலும் வேறு வேறான இரண்டு வாழ்க்கைச்சூழல்கள் அவை. அது இலக்கியத்துக்கு மிகப்பெரிய வாய்ப்பு.

ஈழத்தில், ஒரு தீவில் இருக்கும் கலாச்சாரம் மற்றைய  கலாச்சாரத்தோடு ஒப்பிடுகையில் பெரிய வேறுபாட்டோடு அமையும். அப்படி வெவ்வேறு சிறிய நிலப்பரப்புகள் உருவாக்க கூடிய தனித்த வாழ்க்கைமுறையை ஒரு புனைவு வாய்ப்பாக ஈழத்து படைப்பாளிகள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. வட்டாரப்பண்பாடு குறைவாகவே ஈழத்து எழுத்தில் வந்துள்ளது.

அதற்கான காரணம் என்னவென்றால், பொதுவாக ஈழத்தில் ஆரம்பத்திலிருந்து இலக்கியம் என்பது ஒரு வகையான அரசியல் நடவடிக்கை எனும் எண்ணம் உருவாகியிருக்கிறது. அந்த எண்ணம் எழுத்தாளர்கள் எழுதவரும் போதே உருவாகி வந்துவிடுகிறது. எழுத வருபவனை இலக்கியத்தின் சாரம் அரசியலே என்று சொல்லி, பொதுவான அரசியல்களத்திற்கு இழுத்து விட்டுவிடுகிறார்கள். அது எல்லாருக்கும் தெரிந்த, எல்லாருக்கும் பொதுவான களம். அங்கே எல்லாரும் சொல்வதன் இன்னொரு கோணத்தைத்தான் அவனும் சொல்ல முடியும். விளைவாக அவன் அறிந்த வாழ்க்கையின் நுட்பங்கள் படைப்பாகத் திரண்டு வரக்கூடிய பரிணாமம், அவனுக்குரிய அகப்படிமங்களுடைய வளர்ச்சி நிகழாமல் போய்விடுகிறது.

மறுபடியும் மறுபடியும்  அரசியலில் எது சரி,எது தவறு, முஸ்லிம்தேசியமா, தமிழ் தேசியமா என்ற அன்றாட விஷயங்களுக்குள்ளேயே அவனை  மூழ்கடித்துவிடுகிறது அச்சூழல். அதையே அத்தனைபேரும் திருப்பித் திருப்பி எழுதி ஒருவருடைய மூச்சை இன்னொருவர் சுவாசிப்பதைப் போல குறுகிய மனோநிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.

பாருங்கள், நான் இந்த விமர்சனத்தை சொன்னவுடன் எல்லோரும்சேர்ந்து என்னை திட்ட ஆரம்பித்துவிடுவார்கள். ஈழத்து இலக்கியம் சிங்களர்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஜெயமோகன் சொல்கிறார் என்று கூச்சலிடுவார்கள். ஈழத்தவர்களுக்கு எழுதத்தெரியவில்லை என்கிறார் என்பார்கள். அதுதான் அரசியல் மனநிலை.

இந்த தலைமுறையாவது இதிலிருந்து வெளியே வந்து, இலக்கியம் என்பது மனிதனுடைய வாழ்க்கைச் சிக்கல்களுக்குள், மானுட உள்ளத்திற்குள், வரலாற்று ஆழத்திற்குள் செல்வதற்கான வழி என்பதை பரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

கேள்வி: தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி என இன்று வரை எழுதிக் கொண்டிருக்கும் ஈழத்து எழுத்தாளர்களை முன்னிறுத்தி பல உரையாடல்களை நிகழ்த்தியிருக்கிறீர்கள். ஈழத்து போரிலக்கியம் என்பதை எவ்வாறு அணுகுகிறீர்கள் ?

பதில் :  போர் சார்ந்த இலக்கியமே ஈழத்தில் அனேகமாக உருவாகவில்லை என்பது தான் உண்மை.  ஈழத்தில் முப்பது ஆண்டுகாலம்  பெரிய உள்நாட்டு போர் நடந்திருக்கிறது. எவ்வளவு வலுவான படைப்புகளை உருவாக்கியிருக்கவேண்டும். பெயர் சொல்லுங்கள் பார்ப்போம்.

போரிலக்கியத்திற்கென உலக இலக்கியத்தில் ஒரு பெரிய மரபு, ஒரு பெரிய தளம் இருக்கிறது. போர் என்பது இலக்கியத்தை பொறுத்த அளவில் மனிதனுடைய உச்சகட்ட சாத்தியங்கள் மற்றும் தோல்விகள் இரண்டுமே வெளிப்படக்கூடிய ஒரு பெரிய வெளி. டால்ஸ்டாயின் படைப்புகள் முதல் ஐரோப்பாவின் உலகப் போர் பற்றிப் பேசும் படைப்புகளின் களம் மிகப்பெரியது. பிரபல வணிக எழுத்திலேயே மகத்தானவை என்று சொல்லத்தக்க ஏராளமான எழுத்துக்கள் உள்ளன. holocaust literature என்ற பெயரில் ஒரு தனி இலக்கிய வகைமையாகவே அது உள்ளது.

ஈழத்தில் முப்பது ஆண்டுகால போர் எப்படி எழுதப் பட்டிருக்கிறது என்று பார்த்தால்  ஏமாற்றமே. ஏன் போர் எழுதப்படவேண்டும்? மனிதனுடைய உச்சகட்ட எல்லைகள் என்னவென்று பார்க்கக்கூடிய சந்தர்ப்பங்களை  பஞ்சம், போர் ஆகியவை வழங்குகின்றன. மனிதனுடைய அடிப்படையான conflict என்னவென்று ஆராய்வதற்கான இடத்தை அளிக்கின்றன. ஈழத்து இலக்கியத்தில் இதை பயன்படுத்திஇருக்கிறார்களா? அப்படி பயன்படுத்திய படைப்பு எது?.

போரைப்பற்றிப் பேசினால் மட்டும் அது போர் இலக்கியம் கிடையாது. போர் என்பது எங்கே நடக்கிறது ? எந்தப்போரிலும்  முதலில் பிரச்சாரப் போர்தான் நடக்கும்.  எதிரிகளை கட்டமைத்து உச்சகட்ட வெறுப்பு உருவாக்கப்படும். போலிச்செய்திகளும் மிகைச்செய்திகளும் உண்டுபண்ணப்படும். மிகையுணர்ச்சிகள் கட்டமைக்கப்படும். அதற்கான சொற்கள் உருவாகும்.அச்சொற்களை ஒருவன் பயன்படுத்தினாலே அவன் எழுத்தாளன் அல்ல.

உதாரணமாக, சிங்களக்காடையர் என்ற ஒரு வார்த்தையை எதிரியை குறித்து உருவாக்கி விடுவார்கள். அதே மாதிரி தங்கள் தரப்பிலும் மிகைச்சொற்களை உருவாக்குவார்கள். உதாரணம் மாவீரர். இச்சொற்களை நிராகரிப்பவனே எழுத முடியும். மிலேச்சன், காஃபிர், அஞ்ஞானி போன்று மதக்காழ்ப்பு நிறைந்த சொற்களுக்கும் இவற்றுக்கும் வேறுபாடில்லை.

அந்த பிரச்சாரத்துக்கான அரசியல் தேவை என்ன, போர்க்களத்தேவை என்ன என்பதை பற்றி நான் பேசவரவில்லை. ஆனால் எழுத்தாளன் இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பானென்றால் அவன் எழுத்தாளனே அல்ல. அவன் அதற்கு மேல் இருக்க வேண்டும். அவன் தனக்கான பார்வையுடன் இருக்கவேண்டும்.

ஆனால் ஈழத்திலிருந்து எழுதியவர்கள் பெரும்பாலும் போர்சார்ந்த பிரச்சாரத்தின் பகுதியாகவே எழுதியிருக்கிறார்கள். அவர்களால் போரையே முற்று முழுதாக எழுத முடியவில்லை. போர் என்பது என்ன? சாராம்சங்கள் வெளிப்படக்கூடிய இடம், hyper dramatic நிகழ்வுகளின் களம், அடிப்படை அறக்கேள்விகள் உருவாகும் சூழல் . அதையெல்லாம் எழுதுவதே இலக்கியம். பிரச்சாரம் செய்வது அல்ல.

சரி, பிரச்சாரமே ஆனாலும்கூட  போரின் பிரம்மாண்டமான சித்திரத்தை கொடுக்க கூடிய நாவல் எதுவென்று கேட்டாலும் பதில் இல்லை. போரினால் மாற்றமடைந்த  விழுமியங்களையும் சமூக மாற்றங்களையும் போரின் விளைவான  மனிதத் துயரத்தையும் எழுதிய பெரும் படைப்பு என்னவென்று கேட்டாலும் பதில் எதுவுமே இல்லை. போரை வெறுமே நம்பகமான விரிவான காட்சி விவரிப்பாக அளித்த நாவல் எது என்றாலும் பதில் இல்லை.

ஈழத்துப் போரைப்பற்றி இன்னும்கூட படைப்புகள் வரலாம்.  போர் என்பதுஒரு பெரிய வாய்ப்பு . இன்றைக்கு ஈழத்து இலக்கியத்தின் வெற்றிகள் எல்லாமே புலம்பெயர் இலக்கியத்தில் தான்இருக்கிறது.

DSC_6920-1-300x224.jpg

கேள்வி: டால்ஸ்டோய் உங்கள் ஆதர்சங்களில் ஒருவர் . மனித மனங்களின் ஊடாட்டங்களை எழுதியவர். இவ்வகையில் ரஷ்ய இலக்கியம் ஒரு உச்சத்தை தொட்டுவிட்டது என்று கருதுவோமாயின், அது  பிரெஞ்சு இலக்கியத்தினுடைய தொடக்கத்தை தழுவியிருந்தது என்ற கருத்தும் இருக்கிறது. டால்ஸ்டாய்,தஸ்தாயோவ்ஸ்கிக்கு பிறகு ரஷ்ய இலக்கியத்தில் உன்னதமான படைப்புகள் எழுந்திருக்கிறதா என்பதில் மாற்றுப்பார்வையும் இருக்கத்தான் செய்கிறது. இக்கருத்தை எப்படிப்பார்க்கிறீர்கள்?

பதில்: உலக நவீன இலக்கியத்தை பொதுவாக வகுக்கும் போது செவ்வியல் யதார்த்தத்தின் யுகம் என்று டால்ஸ்டாய், தஸ்தயோவஸ்கி ஆகியோரின் காலத்தை சொல்லலாம். செக்காவ் , துர்கனேவ் இரண்டு  பேரும் டால்ஸ்டாய் அளவு  மிகத் தரமாக வேறொரு கோணத்தில் எழுதியிருக்கிறார்கள். பேரிலக்கியங்கள் படைத்தவர்க்ளாக டால்ஸ்டாய் மற்றும் தஸ்தயோவஸ்கி இருப்பதால் இவர்கள் இருவருடைய இடமும் ஒரு படி குறைவாகத்தான் தெரிகிறது.

ரஷ்ய இலக்கியத்தில் தொடர்ந்து டால்ஸ்டாய் யிலிருந்து மிகயீல் ஷோலக்கோவ், ஷோல்செனித்ஸின், போரிஸ் பார்ஸ்டநாக் வரைக்கும் ரஷ்யப் பெருநாவல் மரபு தொடர்ந்தது என்று தான் சொல்வேன். பிறகு அதன் தொடர்ச்சி ஜேர்மனியில் நிகழ்ந்தது. தாமஸ் மன் முதல் குந்தர் கிராஸ் வரை classical realism என்பது தொடர்ந்து வளர்தபடியேதான் இருந்தது. உலக இலக்கியத்தில் அது ஓர் உச்சத்தை அடைந்து நின்று விட்ட பிறகு, அடுத்து நவீனத்துவ அலை எழுந்தது.

டால்ஸ்டாய்க்கும் டாஸ்டாயெவ்ஸ்கிக்கும் காலந்தால் முந்திய முன்தொடர்ச்சி என்னவென்று பார்த்தால் French, British realism ஆகியவற்றைச் சொல்லவேண்டும். ஜார்ஜ் எலியட் போல முக்கியமான படைப்பாளிகள் பிரிட்டிஷ் யதார்த்தவாதத்தில் உண்டு. அதிலிருந்தும் பெரிய படைப்பாளிகள் எழுந்து வந்திருக்கிறார்கள். டால்ஸ்டாய்க்கு சமகாலத்தவர்கள். உதாரணமாக, நான் அடிக்கடி குறிப்பிடுகிற மேரி கொரெல்லி எழுதிய தி மாஸ்டர் கிறிஸ்டியன் அற்புதமான, ஏன் டால்ஸ்டாய் எழுதியிருக்கக்கூடிய உயர்தர நாவல்.ஆனால் பெரிதாகபேசப்படவில்லை. பிரிட்டனில் அவர்களின் யதார்த்தவாதத்திற்கும் தொடர்ச்சி நவீனத்துவக் காலகட்டம் வரை உண்டு.

கேள்வி: ஈழத்தின் போரிலக்கியங்களை தாண்டி மனித வாழ்க்கையைப் பேசிய பிற இலக்கியங்கள் தமிழக சூழலில் அதிககவன ஈர்ப்பை பெறவில்லை. அவர்கள் போரை மாத்திரம் பேசி போருக்குள் இருக்கக் கூடிய அரசியல் விமர்சனங்களை மாத்திரமே முன்வைத்தார்கள்.போரைத்தவிர்த்து ஈழத்தில் எழுதப்பட்ட படைப்புகள் தமிழக வாசிப்புச்சூழலில் கவன ஈர்ப்பினை பெறாமைக்கான காரணம் இருட்டடிப்பா ? அல்லது காரணங்கள் உள்ளனவா?

பதில்: நல்ல உதாரணமொன்றினூடாக இதனை விளக்க முடியும்.  ஒரு நகரத்தை ஒரு பறவையொன்று மேலிருந்து பார்ப்பதை போல மொத்த வரலாற்றையும் ஆசிரியன் தனக்குரிய உயரத்திலிருந்தே பார்க்க வேண்டும்.கீழே இருக்கக்கூடிய தரப்புக்களில் ஒன்றாக அவன் ஆகிவிடக்கூடாது. அப்படி அவன் ஒரு தரப்பை ஒலித்தால் அது உயர்ந்த இலக்கியம் அல்ல. அது ஏற்கனவே இருக்கும் விவாதங்களில் ஒரு குரல். அது எந்த விவாதத்தையும் உருவாக்க முடியாது.

அந்த ஒட்டுமொத்தமான பார்வையையே தரிசனம் என்கிறோம். அது நிகழ்ந்தால் மட்டுமே ஒரு படைப்பு கவனிக்கப்படுகிறது. ஈழத்து வாழ்க்கையின் எளிய சித்திரங்களோ, அங்குள்ள சமூகச்சூழலை காட்டும் படைப்புகளோ இங்கே ஏன் வாசிக்கப்படவேண்டும்? இங்குள்ளவர்களுக்கு அந்தப்படைப்புகள் அளிப்பது என்ன என்பதுதானே முக்கியம்?

போர் பற்றிய எழுத்துக்கள் கவனிக்கப்படுவது இயல்பு. ஏனென்றால் போர் இங்கே நிறைய பேசப்பட்டிருக்கிறது. ஒரு தலைமுறைக்காலம் செய்திகளில் அடிபட்டிருக்கிறது. ஆகவே போரிலக்கியத்தைக் கொஞ்சம் கூடுதலாகக் கவனிக்கிறோம்.

போர் பற்றிய எழுத்துக்களில் தேவகாந்தனுடைய கனவுச்சிறை நாவல் எனக்குள் விரிந்த சித்திரத்தை உருவாக்க முயற்சித்தது. ஆனால் அதன் கலைத்தன்மை குறையுடையது. அது பலசமயம் எளிமையான விவரிப்பாகவே சென்றது.  ஈழத்திலிருந்து ஒட்டுமொத்தப் பார்வையுடன் போரை அணுகி எழுதும் பெருநாவல்கள் வரும் என்று காத்திருக்கிறேன். நீங்களே கூட எழுதலாம்.

ஈழத்து இலக்கியத்தில் சாதனை என்று சொல்லவேண்டுமென்றால்  அ. முத்துலிங்கம் மற்றும் ஷோபா சக்தி இருவரும்தான் . அவர்களைப் பற்றி தமிழகத்தில் நான் விரிவாக எழுதியிருக்கிறேன். பல்வேறு விமர்சகர்கள் எழுதியிருக்கிறார்கள். சுந்தர ராமசாமிக்கோ அசோகமித்திரனுக்கோ அவ்வளவு விமர்சனம் எழுதப்படவில்லை.

முத்துலிங்கம் ஷோபா சக்தி இருவரும் போரிலக்கியம் படைத்தவர்கள் அல்ல. அவர்கள் எழுதியது பெரும்பாலும் புலம்பெயர்வு பற்றித்தான். அப்படியென்றால் எங்கே இருட்டடிப்பு?

ஈழத்தில் எழுதப்படும் எல்லா படைப்புகளையும் ஒரே போல தமிழர் கொண்டாட வேண்டிய அவசியம் கிடையாது. இங்கே இலக்கிய அளவுகோல்கள் உண்டு. அந்த அளவுகோல்களின்படி முக்கியமாக கருதப்படுபவர்களே பேசப்படுவார்கள். எதையாவது எழுதி, அதை தமிழகத்தோர் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்த்து கொண்டாடப்படாமையால் ஏமாந்தவர்கள்தான் தாங்கள் இருட்டடிக்கப்படோம் என்கிறார்கள். ஈழத்திலிருந்து வரும்  நல்லபடைப்புகள் இங்குள்ள இலக்கியச்சூழலில் கவனிக்கப்படும்.

போரிலக்கியத்தை விட புலம்பெயர் எழுத்துதான் ஈழத்தின் சாதனை. போரை எழுதியவர்கள் போரிட்ட தரப்புகளின் பிரச்சாரங்களுக்கு ஆட்பட்டு எழுதினார்கள். புலம்பெயர்ந்து சென்றவர்கள் தங்கள் அனுபவங்களை எழுதினார்கள். அதை நேர்மையாக சொன்னார்கள். புது உலகங்களை சந்திக்கும் போது அது உருவாக்கும் கலாச்சார முரண்பாடுகளை எதிர்கொண்டு தங்கி வாழும் போராட்டத்தை எழுதினார்கள். ஆகவே அவை இலக்கியமாயின.

அவர்களில் முதன்மையானவர்கள் அ.முத்துலிங்கம், ஷோபாசக்தி. அடுத்தபடியாக   பொ.கருணாகரமூர்த்தி, ஆ.சி.கந்தராசா, நோயல் நடேசன், கலாமோகன்  போன்ற புலம் பெயர் எழுத்தாளர்கள் இங்கு பேசப்பட்டிருக்கிறார்கள்.  புதிதாக எழுதக்கூடியவர்களும் கூட பேசப்பட்டிருக்கிறார்கள். சயந்தனின் ஆதிரை   இங்கே ஒரு செவ்வியல் நாவலுடைய அந்தஸ்த்தோடு படிக்கப்பட்டது.

அதன் பிறகு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்து எழுதும் அகரமுதல்வன், பிரிட்டனில் புலம்பெயர்ந்திருக்கும் அனோஜன் பாலகிருஷ்ணன் என பலர் கவனிக்கப்பட்டிருக்கிறார்கள். விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்ட போது ஈழத்திலிருந்து வந்த மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் பற்றி ஒருஆண்டு முழுவதும் பேசப்பட்டிருக்கிறது. அவரைப் பற்றி விமர்சன நூல்கள் வெளியிடப்பட்டன. ஈழக் கவிதையின்  சாதனையாளர்களான சு.வில்வரத்தினம், திருமாவளவன் பற்றியெல்லாம் பேசப்பட்டிருக்கிறது.

இலங்கையில் இருந்து எழுதிய எல்லா முக்கியமானஎழுத்தாளர்களை பேசியிருக்கிறோம். தரமான எந்த படைப்பாளியும் மறைக்கப்பட்டதில்லை. தமிழ்நாட்டில் இலக்கியம் என்பது அதிகபட்சம் ஒரு இலட்சம் பேருக்குள் புழங்கும்  ஒன்றாகத்தான் இன்றைக்கு இருக்கிறது. இங்கு சுந்தரராமசாமியும்  , தி.ஜானகிராமனும் கூட சிறுவட்டத்திற்குள்தான் பேசப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் புதுமைப்பித்தனுக்கு ஒரு நினைவுச்சின்னம் கிடையாது. அவர் பெயரை தெரிந்த ஒருலட்சம் பேர் இங்கே இல்லை. அந்த யதார்த்தத்தை ஈழத்தவர் புரிந்துகொள்ள வேண்டும்.

புதுமைப்பித்தனையே கண்டுகொள்ளாத தமிழகம் ஈழத்து எழுத்தாளர்களை ஒட்டுமொத்தமாக கொண்டாடவேண்டும், இல்லையேல் அது இருட்டடிப்பு என்று சொல்வது அபத்தம். இங்கு மேதைகளே இருட்டில் தான் இருக்கிறார்கள். இங்கே உள்ள தரமான எழுத்தாளர்கள், இலக்கிய முன்னோடிகளுக்கு எவ்வளவு கவனம் அளிக்கப்பட்டிருக்கிறதோ அதை விட சற்று அதிகமாக தான் ஈழத்து இலக்கியமுன்னோடிகளுக்கும் இளம் படைப்பாளிகளுக்கும்  அளிக்கப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை.

கேள்வி: ஈழத்திலிருந்து மிகத்தீவிரமான விமர்சன இலக்கியம் தோற்றம் பெற்றிருக்கிறது. பேராசிரியர்களான  கைலாசபதி,கா.சிவத்தம்பி, எம்.ஏ.நுஃமான் போன்றவார்கள் மிக்க்காத்திரமாக இயங்கியிருக்கிறார்கள். ஈழத்திலிருந்து வெளிவந்த விமர்சன இயக்கம் பற்றிய உங்கள் மனோநிலை எவ்வாறானது?

பதில்: சில தருணங்களில் வரலாறு ஒரு வகையாக அமைந்துவிடுகிறது. அதற்கு பல சமயம் காரணங்களைச் சொல்லமுடியாது.பிரபல இலக்கிய சூழல்தான் மக்களால் படிக்கப்படக்கூடியது.  நான் சொல்வது சுமார் ஒரு லட்சம் பேரைக்கொண்ட இலக்கிய வட்டத்தைப்பற்றி. இங்கே சில விஷயங்கள் ஏன் அப்படி அமைகின்றன என்பதை நம்மால் காரிய காரணத்தால் விளக்கமுடியாது.

தமிழில் இலக்கியவிமர்சனம் இலக்கியம் என்னும் சிறிய வட்டத்துக்குள் நிகழ்வது. அது  இருபெரும் போக்குகளை கொண்டுள்ளது. ஒன்று அழகியல் மதிப்பீடுகளை மட்டும் முன்வைக்கக்கூடிய ஒருதரப்பு. அத்தரப்பின்படி இலக்கியம் என்பது மொழியால் உருவாக்கப் படக்கூடிய ஒரு கட்டுமானம். வாழ்க்கையின் நுட்பங்கள்சார்ந்து அதை படிக்க வேண்டும். மானுட உளவியல், உறவுநுட்பங்கள், சமூகவியல் நெருக்கடிகள் மற்றும் ஆன்மீக வினாக்கள் சார்ந்து அதை வாசிக்கவேண்டும். அது வரலாற்றுத்தருணங்கள் சார்ந்து மதிப்பிடப்படவேண்டும்.

வ.வே.சு.அய்யர்,  ரா.ஸ்ரீதேசிகன் போன்றவர்கள் அதற்கு முன்னோடிகள் . அதற்கு பிறகு க. நா.சு, சி.சு.செல்லப்பா. அடுத்த தலைமுறையில் சுந்தர ராமசாமி, வெங்கட் சுவாமிநாதன். அதன் பின்னர் வேதசகாயகுமார், ராஜமார்த்தாண்டன். அப்படி ஒரு மரபு இங்கே இருக்கிறது. இங்கே அதுதான் மைய மரபு.

இதற்கு மாற்றாகவும் இணையாகவும் வலுவான மரபொன்று இந்தியாவிற்கு வெளியே ஈழத்திலிருந்து கைலாசபதி, சிவத்தம்பி போன்றோரால் எழுதப்பட்டது. அதன் தொடர்ச்சியே எம்.ஏ.நுஃமான். அவருக்குப்பின்  அடுத்த தலைமுறையில் ஈழத்து  விமர்சனப்பரப்பு முன்செல்லவில்லை. ஆனால் கைலாசபதி முதலியோர் முன்வைத்த முற்போக்கு இலக்கிய விமர்சன மரபுடன் விவாதித்துத் தான் தமிழகக்தின் அழகியல்  விமர்சனத்தரப்பு உருவாகியிருக்கிறது. தமிழகத்து முற்போக்கு விமர்சகர்களான சி.கனகசபாபதி முதல் அ.மார்க்ஸ் வரையிலானவர்கள் இன்றைக்கும் கைலாசபதி சிவத்தம்பியைத்தான்  முன்னோடிகளாகவும் அடித்தளமாகவும் கொண்டிருக்கிறார்கள்.

கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரைப் பற்றி நான் விரிவாக எழுதியிருக்கிறேன்.நான் அழகியல் விமர்சனத்தின் தரப்பைச் சேர்ந்தவன். எதிர்காலத்திலும் இலக்கிய சிந்தனை என்பது இரு பிரிவுகளாகத்தான் இருக்கும். ஒன்று இலக்கியத்தில் அரசியலையும் அது சார்ந்த கருத்தியலையும் முதன்மையாகப் பார்க்கின்ற முற்போக்குப் பார்வை. இன்னொன்று அழகியல் பார்வை.

கேள்வி:  இலங்கையில் வளர்ந்து வந்த முற்போக்கு விமர்சன மரபானது இலக்கியத்தில் ஏற்படுத்திய கருத்தியல் பாதிப்பும் இடதுசாரித் தத்துவங்கள் சார்ந்து இலக்கியப் படைப்புகளுக்கு போடப்பட்ட நிபந்தனைகளும் இலக்கியத்தை கட்டுப்படுத்தினவா?  அந்தகட்டிலிருந்து புலம்பெயர்ந்து சென்றோர் தம்மை விடுவித்துக்கொண்டதனால் தான் அவர்களால் முழுமையான இலக்கியங்களை படைக்க முடிந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?

பதில்: எழுத்தாளன் என்பவன் அரசியல் செயற்பாட்டாளனின் பினாமி அல்ல. அவன் அரசியல்வாதி அல்ல. அரசியல் சிந்தனையாளன் கூட அல்ல. அவன் அதற்கு ஒரு படி மேல்தான். ஆனால் முற்போக்கு இலக்கிய விமர்சனம் என்ன சொல்லிக் கொண்டு இருக்கிறதென்றால் நீ கட்சியில் ஓர் உறுப்பினராக இரு, அல்லது முற்போக்கு இலக்கிய இயக்கத்தில் ஒரு பகுதியாக இரு. அதற்குமேல் போகாதே. அதை ஏற்பவனே அங்கே இருக்கமுடியும்.

அவர்களுக்கு அமைப்பு தான் முக்கியம். ஒட்டுமொத்தமான கருத்தியல் இயக்கமே முக்கியம். தனியான பார்வைக்கு இடமில்லை.  ஓர் எழுத்தாளன் அவனுடைய அந்தரங்கம் என்ன சொல்கிறதோ அதை எழுதவேண்டும். மாறாக இயக்கம் என்ன சொல்கிறதோ அதையே சொல்ல வேண்டும் என்றால் அவன் எழுதுவதன் தரம் என்ன?

என்னைப்பொறுத்தவரை எழுத்தாளன் என்பவன் தன்னுடைய subconscious ஐ எழுதவேண்டியவன். தன் மனதின் அடியில் இருக்கும் சமூகக்கூட்டுமனத்தை அவன் எழுதவேண்டும். அந்த சமூகக்கூட்டுமனத்தின் பிரதிநிதி அவன் அவன் வெளிப்படுத்துவது அவனை அல்ல, அவனுடைய காலகட்டத்தையும் அவனுடைய பண்பாட்டையும்தான். இந்த உணர்வுதான் கம்பனுக்கும் இருந்திருக்கும். அதனால் தான் அவர் ‘சரண் நாங்களே” என்கிறார்.

இந்த முற்போக்கு விமர்சனம் எழுத்தாளனைச் சிறியவனாக காண்கிறது. அவன belittle செய்கிறது. இங்கே எழுதப்பட்ட முற்போக்கு விமர்சனங்கள் அனைத்தையும் அப்படியே ஒட்டுமொத்தமாக நினைவுகூர்ந்து பாருங்கள். அதில் தொண்ணூறு சதவீதம் எழுத்தாளர்களைக் கண்டிக்கின்றவையாகவே இருக்கும். அல்லது எழுத்தாளரை தங்கள்  கட்டுப்பாட்டில் வைக்கும் நோக்கம் கொண்டவையாக இருக்கும்

எதிரிகள் என நினைக்கும் எழுத்தாளர்களை அவதூறும் வசையும் கொண்டு தாக்குவார்கள். தங்கள் தரப்பு எழுத்தாளர்களை ரொம்பவும் தூக்கி விட்டுவிடக்கூடாது என்கிற கவனத்துடன் இருப்பார்கள்.  நம் தரப்பை சரியாக சொல்லியிருக்கிறாரா இல்லையா? அது மட்டும் தான் அவர்களின் அக்கறை. ஆகவே முற்போக்கு இலக்கிய தரப்பால் திட்டப்படாத எழுத்தாளர்கள் இருக்கமாட்டார்கள். அவர்களுடைய எதிர்முகாமானாலும் அவர்களின் சொந்த முகமானாலும்.

ஒரு எழுத்தாளனுக்கு  பத்தொன்பது அல்லது இருபது வயதில்   Creative thinking வந்துவிடும். அவன் தனக்கே உரிய குரலை முன்வைப்பான். அப்போது அவனை சராசரியாக உள்ள எல்லோரும் சேர்ந்து அடிப்பார்கள், திட்டுவார்கள், நக்கல் பண்ணுவார்கள். ‘நீ என்ன பெரிய ஆளா?’ என்பார்கள். அங்கேதான் அவன் அரசியல்சார்ந்து பேச ஆரம்பிக்கிறான். அந்த இடம் முக்கியமானது. அதுதான் பொறி. அதில் சிக்கக்கூடாது. தன் படைப்பை அவன் எழுதி விட்டால் அரசியல் சார்ந்த எதிர்வினைகளை பொருட்படுத்தாமல் போய்க்கொண்டே இருக்க வேண்டும்.

ஈழத்தில் விமர்சகர்கள் எல்லாரும் பேராசிரியர்கள். அதிகாரம் கொண்டவர்கள். ஆகவே அங்கே எழுத்தாளர்கள் அவர்களிடம் பணிவாக இருந்தனர். கலாநிதி என்பதெல்லாம் என்ன? சர்வ சாதாரணமான பட்டம் மட்டும்தானே? ஓர் எழுத்தாளனுக்கு இருக்கும் வரலாற்று இடம் அதற்கும் மேலானது.

ஓர் எழுத்தாளன் அனைவருக்கும் மேலானவனாக, அனைத்தையும் பார்ப்பவனாக இருக்கவேண்டும். அவன் சிங்களவனாகவோ , தமிழனாகவோ, புலியாகவோ  புலி எதிர்ப்பவனாகவோ, முஸ்லிமாகவோ, இந்துவாகவோ இருக்கமுடியாது. அதற்கு மேலே இருக்கவேண்டும். அவன் காலத்தைப் பார்ப்பவனாக இருப்பது அந்நிலையில்தான். விமர்சகன் கீழே இருக்கிறான். அவன் காலத்தின் சிக்கல்களுக்குள் இருக்கிறான். எல்லா விமர்சனங்களும் அந்தந்த காலம்சார்ந்தவை மட்டும்தான். முப்பதாண்டுகளில் எந்த விமர்சனமும் காலாவதியாகிவிடும்.படைப்பு காலம்தாண்டி நிலைகொள்ளும். அந்த உணர்வு எழுத்தாளனுக்கு வேண்டும்.

கேள்வி: பின்நவீனத்துவம் தனியான முகத்தினை இலக்கியச்சூழலில் மிகத்தீவிரமாக பரப்பியிருக்கிறது. பின்நவீனத்துவம் சார்ந்ந ‘பெருவெளி’ போன்ற தனித்துவமான இதழ்கள் இலங்கைச்சூழலில் வெளிவந்தும் இருக்கின்றன. அவை சார்ந்த விமர்சனங்களும் இங்கு நிரம்பியிருக்கின்றன.  பின்நவீனப்பார்வையில் சூழலைக் கட்டுடைத்து, பொதுச் சூழலை மறுத்து, உரையாடலை தொடங்குகின்ற எழுத்துக்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: நான் இதைப் பற்றி நிறையவே பேசியிருக்கிறேன். தமிழில் பின்நவீனத்துவம் பற்றி பேசியவர்களில் பெரும்பாலானவர்களுக்கு பின்நவீனத்துவம் பற்றிய புரிதல் கிடையாது. அவர்களில் பலர் கல்வியாளர்கள். சிலர் எளிமையான இலக்கிய அரசியல் பார்வைகொண்டவர்கள். புதிதாக என்ன இருக்கிறதோ அதை போய் பிடித்துகொள்வது மாத்திரம் தான் அவர்கள் அறிந்தது. எது fashion ஆக இருக்கிறதோ, மேலைநாட்டில் என்னசொல்லப்படுகிறதோ அதையே தாங்களும் பேசவேண்டும் என நினைப்பவர்கள். சிலர் தங்களுக்கென ஓர் இடம் வேண்டும் என்று புதிதாக எதையாவது சொல்லமுற்படுபவர்கள். முறையான முழுமையான புரிதல் இல்லாமல் உதிரிச்செய்திகளாக அறிந்தவற்றைப் பேசி பெரிய குழப்பத்தை இவர்கள் உண்டுபண்ணிவிட்டார்கள்.

ஐம்பதாண்டு காலம் ஐரோப்பாவில் உருவாகிய ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைப் பார்வையைத்தான் நவீனத்துவம் என்கிறார்கள். நவீனத்துவத்தின் சிந்தனைமுறை என்ன? ஒன்று, எல்லாவற்றையும் global ஆக சொல்ல வேண்டும். பொதுமையான பார்வை நோக்கிச் செல்லவேண்டும்.  உலகச் சராசரி வேண்டும்.  இரண்டு, தர்க்கபூர்வ அணுகுமுறை. உணர்வுகளையும் கற்பனைகளையும்கூட தர்க்கபூர்வமாகவும் புறவயமாகவும் சொல்லவேண்டும்.  அறிவியல் பூர்வமான அணுகுமுறை வேண்டும். மூன்று, இலக்கிய வடிவம் என்பது கச்சிதமானதாகவும் சரிவிகிதத்தன்மை கொண்டதாகவும்  இருக்கவேண்டும். வடிவ ஒருமையே இலக்கியப்படைப்பின் அழகியல்.தமிழில் புதுமைப்பித்தன் முதல் சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் வரை அனைத்து படைப்பாளிகளிலும் நவீனத்துவ அழகியலே உள்ளது.

அந்த நவீனத்துவப் போக்குக்கு எதிர்ப்பாக, அதற்குப்பிந்தையதாக உருவான சிந்தனைப்போக்கையே பின்நவீனத்துவம் என்கிறோம். அது ஒரு குறிப்பிட்ட கருத்துநிலை அல்ல. ஒரு குறிப்பிட்ட அழகியல் அல்ல. ஒரு குறிப்பிட்ட அரசியலும் அல்ல. நவீனத்துவத்தைக் கடந்த எல்லாமே பின்நவீனத்துவம்தான். அது ஒரு பொதுப்போக்கு. ஒரு டிரெண்ட்.

நவீனத்துவ காலகட்டத்தின் அடிப்படை என்பது அறிவியல்தான். அறிவியல் மதத்தின் நம்பிக்கைகளில் இருந்து மனிதர்களை விடுவித்தது. அதன்பின் அதுவே ஒரு நவீன மதம் போல ஆகியது. அது எல்லாவற்றையும் புறவயமாக வரையறை செய்ய முயன்றது. அதன் விளைவாக அதீதநிலைகளை மறுத்தது. மீறல்களை மறுத்தது. உன்னதங்களை மறுத்தது. மனிதனின் கீழ்மைகள், உச்சங்கள் ஆகியவற்றை பேசாவிட்டால் கலை இல்லை. மீறல்கள் வழியாகவே கலையும் இலக்கியமும் சிந்தனையும் முன்னகர்கின்றன. ஆகவே அறிவியலையும் அதை அடிப்படையாகக்கொண்ட நவீனத்துவத்தையும் மறுத்து பின்நவீனத்துவம் எழுந்தது.

எந்த ஓர் இறுக்கமான கட்டமைப்பும் மையம் கொண்டிருக்கும். மையம் அதிகாரமாக மாறியிருக்கும். அறிவியலும் அவ்வாறு ஓர் இறுக்கமான அமைப்பாகவும் மையமான அதிகாரம் கொண்டதாகவும் ஆகியது. அறிவியலை அடிப்படையாகக்கொண்ட நவீனத்துவத்திற்கும் அவ்வியல்புகள் உருவாயின. பின்நவீனத்துவம் என்பது மையம் சார்ந்த சிந்தனைகளை மறுப்பது. விளிம்புகள், சிறு வட்டாரங்கள் ஆகியவற்றை கருத்தில்கொள்வது. அதாவது பின்நவீனத்துவம். நவீனத்துவத்தின் மூன்று அடிப்படைகளுக்கும் எதிரானது,  அவற்றைக் கடந்துசெல்வது அது

பின்நவீனத்துவம் என்பது ஆபாசமாகவோ கலகத்தன்மைகொண்டதாகவோ இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.அது சிதறுண்டதாகவோ வடிவற்றதாகவோ இருந்தாகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.  ஐரோப்பாவில் உருவாகும் பின்நவீனத்துவம் அப்படியே இந்தியாவுக்கு வரவேண்டிய அவசியம் என்ன? இந்தியாவில் இந்தியாவுக்கான பின்நவீனத்துவமே உருவாகமுடியும். நவீனத்துவம் இந்தியாவில் சிந்தனையிலும் கலையிலும் எவற்றை எல்லாம் தவிர்த்ததோ, எதையெல்லாம் சுருக்கியதோ அதையெல்லாம் சென்றடைவதும் பின்நவீனத்துவம்தான்.

இந்தியாவின் புராணமரபு, நாட்டார் மரபு, செவ்வியல்மரபு எல்லாவற்றையும் தள்ளி வைத்து விட்டு ஒரு சமநிலையான கூறுமுறையை இங்கே நவீனத்துவம் உருவாக்கியது. புறவயமான அறிவியல் பார்வையால் அவற்றை எல்லாம் ஒடுக்கியது. அவை எல்லாவற்றையும் திறந்து விடுவது பின்நவீனத்துவம்தான். வரலாற்றையும் புராணத்தையும் மறுஆக்கம் செய்வதும், புதியவரலாறுகளை கற்பிதம் செய்வதும் பின்நவீனத்துவம்தான்.

ஐரோப்பியத் தத்துவ சிந்தனையில் லாஜிக்கல் பாஸிட்டிவிசம் என்னும் புறவயவாதம் ஏ.ஜே.அயர் போன்றவர்களால் முன்வைக்கப்பட்டது. அதுதான் நவீனத்துவத்தின் தத்துவப் பார்வை. தூய தர்க்கத்தை, புறவய அணுகுமுறையை முன்வைப்பது அது. அது இலட்சியவாதம், மீபொருண்மைவாதம் எல்லாவற்றையும் நிராகரித்தது. எல்லாவகையான கனவுகளையும் நிராகரித்தது. அதை பின்நவீனத்துவம் நிராகரிக்கவேண்டியிருந்தது. ஏனென்றால் லாஜிக்கல் பாஸிட்டிவிசம் என்பது ஒரு நிராகரிப்பே ஒழிய அதனால் உருவாக்கப்படுவது என ஒன்று இல்லை.

பின்நவீனத்துவம் இன்று பின்னகர்ந்துவிட்டது. அதற்கு மேலே புதிய சிந்தனைகள் வந்துவிட்டன. நவசரித்திரவாதமும் ஏற்பியல் கொள்கைகளும் இன்று பேசப்படுகின்றன. பின்நவீனத்துவம் இலக்கியத்தில் இருந்த நவீனத்துவ  இறுக்கத்தை உடைக்க எழுந்த ஓர் அலை. உடைத்த பின் அதன் பணிமுடிவடைந்தது. இன்றைய சவால்களே வேறு. இதுதான் பின்நவீனத்துவம் என்ற பெயரில் ஐரோப்பாவின் பின்நவீனத்துவ இலக்கியப்படைப்புகளை நகல்செய்வதோ அங்குள்ள பின்நவீனத்துவ சிந்தனையாளர்கள் சொன்ன கருத்துக்களை நாமும் சொல்லிக்கொண்டிருப்பதோ அபத்தமானது.

DSC_6509-300x214.jpg

கேள்வி: எழுத்தாளர்கள் சிலர் மிக சொற்ப காலத்துக்குள் ஒரு படைப்புக்கான தூண்டலைக் கொண்டு எழுதிவிட்டு எழுத்துத் துறையில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறா‌ர்கள். தொடர்ச்சியாக இயங்குபவர்களுடைய காத்திரமற்ற படைப்புகளை மிகுதியாக பேசுகிறார்கள். அபூர்வமாக எழுதிய நல்ல எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இந்நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: இலங்கையில் மிக அதிகமான படைப்புகளை கொண்டு வந்தவர் செங்கை ஆழியான் தான் இல்லையா? இன்றைக்கு ஈழ இலக்கியத்தில் அவருக்கு எந்த இடமும் கிடையாது. நிறைய எழுதினால் தான் ஒருஎழுத்தாளரை முக்கியமானவராக கருதுவார்கள் என்றால் அவர்தானே பேசப்பட்டிருக்கவேண்டும். ஆகவே அதிகமாக எழுதினால் மோசமான படைப்புகள் பேசப்படும் என்பது சரியல்ல.

அதேசமயம் தரமான எழுத்து குறைவாகவே எழுதப்படும் என்பதும் அபத்தமானது. குறைவாக எழுதியமையாலேயே ஓர் எழுத்து தரமானது என்று சொல்வது அறிவின்மையே அன்றி வேறல்ல.  உலக எழுத்தாளர்களில் மாஸ்டர்ஸ் என்று சொல்லப்படக்கூடியவர்கள் எல்லாருமே நிறைய எழுதியவர்கள் தான். டால்ஸ்டாய், டாஸ்டாயெவ்ஸ்கி, பால்ஸாக், தாமஸ் மன் எல்லாருகே எழுதிக்குவித்தவர்கள்.

நீங்கள் சிலபேர் எழுத்தை விட்டே போனார்கள் என்று சொல்கிறீர்கள் இல்லையா? அவர்களுக்கு வாழ்க்கைப்பிரச்சினைகள் இருந்ததனால் எழுதாமல் ஆனார்கள் என்கிறீர்கள். எல்லா வாழ்க்கைப்பிரச்சினையும் அசோகமித்திரனுக்கும் இருந்தது. எழுதுவதற்கு தாள் இல்லாமல் அச்சகத்தில் வெட்டிவீசப்பட்ட தாள்களில் எழுதினார். பூங்காக்களில் கூட்டம் வருவதற்கு முன் காலையில் போய் அமர்ந்து எழுதினார். தன்னுடைய கடைசித் துளி creativity வரைக்கும் தமிழுக்கு கொடுத்து விட்டுபோயிருக்கிறார். அதைத் தானே நாம் மதிக்க வேண்டும்.

எழுதும் அளவுக்கு தம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள தெரியாதவர்கள்,  எழுத்தில் மூழ்கும் அளவுக்கு அர்ப்பணிப்பு இல்லாதவர்கள் கொஞ்சமாக எழுதிவிட்டு காணாமலாகிவிடுவார்கள். உண்மையில் எழுத்தைவிட அவர்களுக்கு வேறேதோ முக்கியமாக இருந்திருக்கும். ஆகவே எழுத்தை கைவிட்டிருப்பார்கள். தொழில், வேலை, வருமானம், குடும்பம் என்று எவ்வளவோ இருக்கும். அதையெல்லாம் அடைந்தபின் திரும்பி வந்து தாங்கள் எழுதிய உதிர்ப்படைப்புகளுக்கு அங்கீகாரம் வேண்டும் என்று கோருவார்கள். அசோகமித்திரன் நிறைய எழுதியவர். வாழ்க்கையையே இலக்கியத்துக்காக அளித்தவர். அவருக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் தங்களுக்கும் வேண்டும் என்பார்கள். குறைவாக எழுதியதை பெரிய தகுதியாகச் சொல்பவர்கள் இவர்கள்தான்.

தமிழில் மௌனி, சம்பத் எல்லாம் குறைவாக எழுதியவர்கள்தான். அவர்களின் எழுத்து அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. குறைவாக எழுதியதனால் எவரும் புறக்கணிக்கப்பட்டதில்லை. நிறைய எழுதியதனால் எவரும் ஏற்கப்பட்டதுமில்லை.

கேள்வி: கவிதை என்பது மீமொழியாலானது. மொழிக்குள் செயல்படும் தனிமொழி என்றுசொல்லியிருக்கிறீர்கள். தமிழ் பரப்பில் இன்று வருகிற ‘பாரம் குறைந்த’ கவிதைகள் மொழிக்குள் செயல்படும் தனிமொழி என்னும் அம்சம் கொண்டிருக்காமல் பொதுமொழியிலேயே உள்ளன. அவை மீமொழி எனும் விஷயத்தில் குறைவான படிநிலையோடு வெளிவருவது போன்று தோன்றுகிறது. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: கவிதை எப்போதுமே மீமொழியில்தான் இயங்குகிறது. ஆகவேதான் தமிழ் தெரிந்தால் மட்டும் கவிதையை வாசிக்கமுடிவதில்லை. அந்த மீமொழியும் தெரிந்தால்தான் வாசிக்கமுடிகிறது.

இந்த மீமொழி ஒரு சூழலில் கவிஞர்களும் கவிதை வாசகர்களும்சேர்ந்து உருவாக்கிக்கொண்டே இருப்பது. கவிஞன் எழுதுகிறான். கவியுடன் வாசகன் சேர்ந்துகொள்கிறான். கவிஞன் ஒன்றை சொல்லி பலவற்றை உணர்த்துகிறான். அவன் சொன்ன சொற்களிலிருந்து கற்பனையால் முன்னகர்ந்து உணர்த்தப்படுவனற்றை வாசகன் சென்றடைகிறான். அந்த உணர்த்தப்படும் பொருளைத்தான் மீமொழி என்கிறோம்.

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் என்னும் பாரதி வரி உதாரணம். நெஞ்சில் எப்படி பூ மலரும்? அது எப்படி கனல் மணக்கும்? ஆனால் நாம் அந்த சொற்களுக்கு வேறு பொருள் அளிக்கிறோம். அதுதான் மீமொழி.

சிட்டுக்குருவி வீட்டுக்குள் வருவதைப் பற்றி தேவதேவன் ஒரு கவிதை எழுதினார். ஒரு சிறு குருவி.அந்த குருவி வானத்தில்பறந்தபடி கீழே பார்க்கிறது. “அங்கிருந்தும் தவ்வி பாய்கிறது மரணமற்ற பெருவெலளிக்கடலை நோக்கி” என்று அவர் எழுதுகிறார். குருவி சென்று பறக்கும் வானம் மரணமற்ற பெருவெளி என்று அவர் சொல்லும்போது அவர் என்ன சொல்கிறார் என வாசகனுக்கு புரிகிறதே, அதுதான் மீமொழி.

ஆனால் மீமொழியின் இயல்புகள் மாறிக்கொண்டே இருக்கும். ஒருகாலகட்டத்தில் அணிகளால் ஆனது கவிமொழி. மலர்விழிகள், நிலவுமுகம் என்றெல்லாம் சொன்னார்கள். அடுத்து படிமங்கள் வந்தன. தேவதேவனின் அந்தக்குருவி ஒரு  வெறும் குருவி அல்ல, படிமம் என வாசகனுக்கு தெரியும். அடுத்தபடியாக நுண் சித்தரிப்பு வந்தது. ஒரு பைத்தியம் அதிகாலையில் டீ வாங்கிக்கொண்டு செல்வதைப் பற்றிய இசையின் கவிதை நுண்சித்தரிப்புதான்.  அடுத்தபடியாக நேரடியான கவிதை, பிளெயின் பொயட்ரி என்னும் வடிவம் வருகிறது. தேவதேவனின் ‘யாரோ ஒருவன் என்று எப்படிச் சொல்வேன்” ஒரு நேரடியான கூற்று. தெருவில் தூங்குபவனை, கைவிடப்பட்ட பைத்தியத்தை யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன் என்று கவிஞனின் உளம் நெகிழ்கையில் அது கவிதையாகிறது.

இந்தக் கவிதைகள் எல்லாம் நேரடியான மொழியில் அமைந்திருக்கலாம். ஆனால் நேரடியான பொருள் கொண்டவை அல்ல. அந்த மேலதிகப்பொருளையே நாம் மீமொழி என்கிறோம். கவிதை அந்த மீமொழியாலான உரையாடலுக்காகவே முயல்கிறது. அதை புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது.

இன்னும் முன்னால் செல்லலாம். மீண்டும் படிமம் வந்தாலும் வரலாம். யார் கண்டார்கள்? அணிகளும்கூட வரலாம். அடுத்தது என்ன என்று சொல்லும் இடத்தில் விமர்சனம் இருக்க முடியாது. என்ன நிகழ்கிறது, ஏன் இப்படி வருகிறது என்று தான்  விமர்சனம் பார்க்க வேண்டும்.

எனக்கு ஒருஅவதானிப்பு இருக்கிறது. (Parallel editing என்று சொல்லப்படும் சினிமா ஒளிப்படத்தொகுப்பு முறையால் வந்தபின் காட்சி ஊடகம் ஏராளமான படிமங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. ஆகவே கவிதை படிமங்களைக் கைவிட்டு வேறு வகையான கவிதை முறைகளுக்குச் செல்கிறது.

கேள்வி: நீங்கள் கூறிய தேவதேவனின் குருவி பற்றிய கவிதைகளை Robert Frost  இன் A Minor Bird உடன் ஒப்பிடக்கூடியதாய் இருப்பதற்கு காரணம் இரண்டும் பிரஸ்தாபிக்கும் கருத்துகள் ஒன்று என்பதால்தான். ஆனால் வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு கவிஞர்களால் எழுதப்பட்ட கவிதைகள் எதேச்சையாக உருவாகும் ஒப்பிடக்கூடிய படைப்புகளாக இலக்கியத்தில் எந்த அளவு முக்கியத்துவம் பெறுகின்றன?

பதில்: இலக்கியத்தில் கவிதையே உச்சத்தில் இருப்பது. இலக்கியம் என்ற கோபுரத்தின் உச்சிநுனி அது. அங்கே குறைவாகவே இடமிருக்கிறது. முற்றிலும் புதிய விஷயங்களை கவிதை கையாள முடியாது. தேவதேவனோ ரோபர்ட் பொரஸ்டோ சொல்லிக்காட்டிய அவ்வளவு தான் கவிதையால் எழுத முடியும். சங்க இலக்கியத்திலிருந்து இன்று வரைக்கும் கிட்டத்தட்ட ஒரு சிறியவட்டத்தினுள்ளே தான் கவிதைகள் எழுதப்படுகின்றன.

ஆகவே எந்த  இரண்டு கவிஞர்களை எடுத்து பார்த்தாலும் நிறைய அம்சங்கள்பொதுவாகத் தான் இருக்கும். பேசு பொருள்கள் மிகக்குறைவானவை. படிமங்கள் அதைவிடக்குறைவானவை. மழையை வெயிலை பூக்களைப் பற்றிபேசுவார்கள்.ஏனென்றால் அவ்வளவு தான் கவிதைக்குரிய களம். ஆனால் ஒவ்வொருமுறையும் புதிதாகவும் தோன்றும். கூறுமுறையால், சொற்சேர்க்கையால், பார்வையால். அதுதான் கவிதையின் மாயம்.

அதற்குமேல் கவிஞர்களுக்கு சில பொதுத்தன்மைகள் சிந்தனையிலிருந்து உருவாகி வரும். அமெரிக்காவில் உருவான நவீன ஆன்மீகம் என்பது ஆழ்நிலைவாதம் [Transcendentalism] மற்றும் இயற்கை வாதம் [Naturalism] சார்ந்தது. இயற்கையை கடவுளின் இடத்திற்கு வைக்கக் கூடிய ஒரு பார்வை அது. இயற்கையில் தெய்வத்தின் செய்திஅடங்கியிருக்கிறது என நினைகும்  பார்வை. தோரோ, எமர்ஸன் ஆகியோர் அதன் முதன்மைச் சிந்தனையாளர்கள். ராபர்ட் ஃப்ரோஸ்ட் அந்தச் சிந்தனையைச் சேர்ந்தவர். தேவதேவனும் தோராவால் மிகவும் கவரப்பட்டவர்.  ஆகவே அவர்கள் இரண்டு பேருக்கும் இடையில் அந்த ஒற்றுமை இருக்கிறது.

கேள்வி: பாரதி பேசிய கவிதையின் புள்ளிகளை தாண்டி பாரதியை விஞ்சி பேசிய ஆளுமைகள் கவனிக்கப்பட்டார்களா?

பதில்: பாரதி வந்து நூறு ஆண்டுகளைத் தாண்டி விட்டது. ஆக இன்றைக்கு இன்னொருவரை சொல்லும் போது அவர் காலம்கடந்து நிற்பாரா என்ற அடிப்படையிலேயே நாம் பேசமுடியும்.

தமிழின் மகாகவிகளின் வரிசையில் வைத்து பார்த்தால் பாரதிக்கு அங்கே இடமில்லை. இந்தியாவில் நவீனக் கவிஞர்களிலேயே பாரதி  தாகூரைவிட குறைவான கவிஞர்தான் என்பது என்னுடைய கணிப்பு. ஆனால் இதை சொன்னதும் தமிழ் பண்பாட்டு மேல் செலுத்தப்படும் அவதூறு போல  எடுத்துக்கொண்டு இங்கே எழுதியிருக்கிறார்கள். இந்த மதிப்பீட்டை முன்வைத்தாலே கண்ணீர் விடக்கூடிய ஆட்கள் இருக்கிறார்கள்.

பாரதி மரபுக்கவிதை மறைந்து நவீனக்கவிதை தோன்றிய யுகசந்தியில் வந்தவர். மரபிலக்கியத்தில் இருந்து நவீன இலக்கியம் தோன்றும்போது எழுதியவர். ஆகவே அவர் பலவகையில் முன்னோடி. அவருடைய வசனகவிதைதான் புதுக்கவிதையின் தொடக்கம். ஆனால் அது புதிய கவிதை அல்ல. உபநிடதங்களை ஒட்டிய அதே பார்வைதான் அதிலும் உள்ளது.

உரைநடை இலக்கியத்தில் பாரதியின் சாதனை மிகக்குறைவானது. அவருடைய சிறுகதைகளை தாகூரின் சிறுகதைகளுடன் ஒப்பிட்டுப்பாருங்கள். தாகூர் எழுதியவை நவீனச் சிறுகதைகள். பாரதி எழுதியவை பழையபாணி கதைச்சுருக்கங்கள் பாரதி பிரெஞ்சு கற்றவர். மாப்பசானை, விக்டர் ஹ்யூகோவை எல்லாம் வாசித்திருக்கிறாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

தமிழில் நவீன இதழியல் மொழியை உருவாக்கிய சாதனை பாரதியுடையது என்று சொல்லலாம். மரபான கவிதை பாணியிலேயே அவருடைய நல்ல கவிதைகள் உள்ளன. ஆனால் பாரதியின் பெரும்பாலான மரபுக்கவிதைகள்கூட வழக்கமான செய்யுட்களும் இசைப்பாடல்களும்தான். தூயகவிதை குறைவே.

பாரதிக்குப்பின்னரே தமிழில் நவீனகவிதை இயக்கம் ஆரம்பித்தது. என்னுடைய பார்வையில் இரண்டு பேர் அதில் சாதனையாளர்கள். ஒருவர் பிரமிள்.இன்னொருவர் தேவதேவன். கவிதை மட்டுமே என எடுத்துப் பார்த்தால் பாரதியை விட பிரமிள் அதிகமான சிறந்த கவிதைகளை எழுதியிருக்கிறார். அவர்கள் இருவரைவிடவும் தேவதேவனின் கவியுலகம் ஆழமும் விரிவும் கொண்டது.

கேள்வி: அறிவியல் புனைவு சார்ந்து தமிழகச் சூழலில் அதிகம் இயங்கியவர்களில் நீங்கள் முக்கியமானவர். இப்போது அறிவியல் புனைவு தமிழில் எந்த நிலையை ஏற்படுத்திஇருக்கிறது. அதன் வளர்ச்சி எப்பேர்ப்பட்டது என்பது சம்பந்தமாக கூட உங்கள் தளத்தில் நிறையவே விவாதங்களும் எழுந்திருக்கின்றன. அறிவியல் புனைகதை உருவான காலத்தில் இருந்து அவை இப்போது சென்றடைந்திருக்கிற படிநிலை எப்படிப்பட்டது?

பதில்: அறிவியல் கதைகள் அடிப்படையில் மிகுபுனைவுத்தன்மை கொண்டவை. எழுத்தாளன் உருவாக்கும் நவீனக்கனவுகள் அவை. மனிதனின் அகவயமான தேடல்களை, அவற்றின் கற்பனைவீச்சை யதார்த்த தளத்தில் எழுதிவிடமுடியாது. அதற்கு மிகுபுனைவு அதாவது ஃபேண்டஸி தேவை. மிகுபுனைவு நிகழ்வுகளை எல்லாம் குறியீடுகளாக ஆக்கிக்கொள்ள முடியும். மிகுபுனைவு வரலாற்றையும் தொன்மங்களையும் எல்லாம் பயன்படுத்திக் கொள்ளும்.  அவ்வாறே அறிவியலை பயன்படுத்திக் கொண்டால் அதுவே அறிவியல்புனைவு.

அறிவியலை படிமங்களுக்காக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையையும் மனித உள்ளத்தையும் சொல்லக் கூடிய எழுத்து முறையைத்தான் அறிவியல் புனைவு என்று வரையறை செய்யலாம்.

தமிழில் ஏன் அறிவியல் புனைவு வலுவாக வரவில்லை? அதற்குரிய தடை என்ன என்று பார்த்தால் ஒன்று நாம் தமிழில் அறிவியல் படிக்கவில்லை. அறிவியல் கலைச் சொற்கள் தமிழில் மிகக் குறைவு. அறிவியலை தமிழில் யோசிக்கிற பழக்கம் கிடையாது. அப்படி இருக்கையில் தமிழில் அறிவியல்புனைவுகள் உருவாக இயலாது.

இன்னொன்று, வாழ்க்கையின் கேள்விகளையும் ஆன்மிகத்தேடலையும் அறிவியலைப் பயன்படுத்திக்கொண்டு யோசிக்கும் மனநிலை. நமக்கு அது இல்லை. இங்கே நாம் அறிவியல் என்றாலே தொழில்நுட்பம் என்றுதான் அறிந்திருக்கிறோம். தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு அதில் வேலைசெய்கிறோம். அதை நுகர்கிறோம். அறிவியல்கொள்கைகளை புரிந்துகொண்டு அதைச்சார்ந்து வாழ்க்கையைப்பற்றி யோசிப்பதில்லை

திண்ணை இதழில் அறிவியல்புனைகதைகளுக்காக ஒரு போட்டி வைத்தனர். அதன் முன்னோட்டமாக  நான் சில கதைகளை எழுதினேன். அந்தக் கதைகள் விசும்பு என்ற தொகுப்பாக வெளிவந்தன. தொழில்நுட்பம் அறிவியல் அல்ல. தொழில்நுட்ப விந்தைகளை வழக்கமான கதைக்குள் புகுத்தினால் அது அறிவியல் புனைகதை அல்ல. அடிப்படையான கேள்விகளையே எழுதவேண்டும், அதற்கு அறிவியலை கையாளவேண்டும் என்று நான் சொன்னேன். உயிர் என்றால் என்ன?, காலம் என்றால் என்ன??, பிரபஞ்சம் என்றால் என்ன? என்பவை போன்ற வினாக்களை எழுப்பிக்கொள்வதே அறிவியல் புனைகதைகளின் நோக்கம் என்றேன். என் கதைகளை அந்நோக்கிலேயே எழுதினேன். அறிவியல்புனைவு என்றால் உடனே வேற்றுக்கோளங்கள், ரோபோக்கள் என்று போகவேண்டியதில்லை. நம் மரபான அறிவியலைக்கூட எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னேன்.

அதன் பின்னர் அறிவியல் புனைக்கதைகளில் ஒரு மாற்றம் உருவாகியது. தீவிரமாக எழுதக்கூடிய இளைஞர்கள் உள்ளே நுழைந்தார்கள். அதற்கு காரணம் அவர்கள் பின்புலம்தான். இப்போது அறிவியல்புனைவை சுசித்ரா எழுதியிருக்கிறாரென்றால் அவர் முறையாக அறிவியல் கற்ற ஓர் அறிவியல் ஆய்வாளர் என்பதே முதன்மைக்காரணம். சுசித்ரா உயிரியலாளர். சுசித்ரா எழுத வரும் போது உயிர் என்றால் என்ன என்னும் வினாவையே புனைவில் எழுப்பிக்கொள்கிறார்கள் . அரூ என்கிற இணையத்தளம்  தமிழ்  அறிவியல் புனைகதையில் ஒரு மிக்கியமான பாய்ச்சலை நடத்தியிருக்கிறது.

ஆனால் இன்று அறிவியலை எழுதும்போது  அதற்கான தனிமொழியை இங்கு உருவாக்க வேண்டியிருக்கிறது. இங்கே அன்றாடத்தை எழுதக்கூடிய மொழி உள்ளது. அறிவியலை அதில் எழுதமுடியாது. இங்கே ஏற்கனவே எழுதப்பட்ட தத்துவ நூல்களிலிருந்து அறிவியல் மொழியை உருவாக்கவேண்டும். மிகுகற்பனைகளை எழுதிய புனைகதைகளில் இருந்து அந்த மொழியை உருவாக்கவேண்டும். அதற்கு இன்றைக்கு அதிக வாசகர்கள் கிடையாது. தத்துவ அறிமுகம் உடையவர்களே அதன் வாசகர்கள். பொதுவான இலக்கியவாசகர்களும் இலக்கியப்படைப்பாளிகளும் கூட அந்த நவீன அறிவியல்கதைகளை புரிந்துகொள்ள முடியாமல் குழம்பிப்போகிறார்கள்.

உலக இலக்கியத்தில் அறிவியல்புனைவுக்கு மூன்று படிநிலைகள் உள்ளன. ஆரம்பகால அறிவியல்புனைகதைகள் அறிவியலில் உள்ள ஆச்சரியங்களை பயன்படுத்திக்கொண்டு எழுதப்பட்டவை. உதாரணம் ஜூல்ஸ் வேர்ன் போன்றவர்கள். அடுத்த கட்ட அறிவியல்புனைகதைகள் அறிவியலில் இருக்கக்கூடிய சில உருவகங்களை இலக்கிய படிமங்களாக மாற்றிக்கொண்டவை. உதாரணம் ஐசக் அஸிமோவின் ரோபோ அல்லது எந்திரன் பற்றிய கதைகள். அவர் ரோபோ பற்றி எழுதியவை எல்லாம் மனிதனின் சாத்தியக்கூறுகள் பற்றிய கதைகள்தான்.

மூன்றாம்கட்டக் கதைகள்.  Robert Silverberg போன்றவர்கள் எழுதியவை. இக்காலகட்டத்தில் தத்துவம் கேட்ட அடிப்படை கேள்விகளை அறிவியலைக் கொண்டு ஆராய்ந்தனர். உதாரணமாக நான் இந்த பிரபஞ்சத்தை பார்க்கிறேன். அது அறிதல் மட்டும் தான். உண்மையில் அறிபடுபொருள் என் அறிதலுக்கு அப்பால் என்னவாக இருக்கிறது? அங்கே ஏதாவது ஒன்று உண்மையில் இருக்குமா? இந்த மாதிரியான அடிப்படை கேள்விகளை இன்றைய அறிவியல்புனைவுகள் எழுப்பிக் கொள்கின்றன.

ஒருகதை. உயிர்த்துயில் [ஹைபர்னேஷன்] கொள்ளச்செய்யும் என்ஸைம்களை பிரித்து எடுத்துவிடுகிறார்கள். அவற்றை கைதிகளுக்குச் செலுத்துகிறார்கள். ஆயுள்தண்டனைக் கைதிக்கு பத்துமடங்கு அளிக்கிறார்கள். அவருடைய உடல் இயக்கம் பத்துமடங்கு மெதுவாக ஆகிறது. அவருடைய காலமும் பத்துமடங்கு மெதுவானது. இன்னொருவருக்கு இரண்டு மடங்கு அளிக்கிறார்கள். அவருடைய காலம் வேறு. இப்படி ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலத்தில் இருக்கிறான். அப்படியென்றால் காலமென்பது என்ன?

இதைப்போன்ற ஆழ்ந்த வினாக்களுடன் அறிவியல்புனைவுகள் வரவேண்டியிருக்கிறது.

கேள்வி: மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் ஏராளமாக வெளிவந்திருப்பதை பார்க்கிறோம். மொழிபெயர்ப்பு இலக்கியம் மீதான ஒரு கவனமும் இங்கு உருவாகி இருக்கிறது.  மொழிபெயர்ப்புப் படைப்புகள் சரியானபடி செய்யப்பட்டிருக்கின்றனவா?  மொழிபெயர்ப்புச்சூழல்களில் இருக்கின்ற குறைபாடுகளையும், அதற்கான செல்வழிகளையும் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: டால்ஸ்டாயின் படைப்புகளை முதலில் ஆங்கிலத்துக்கும், ஐரோப்பிய மொழிகளுக்கும் சென்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அவை ரஷ்யாவுக்கு தூதர்களாகச் சென்ற ஐரோப்பியர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டவை. வரிக்கு வரி அசலுடன் ஒப்பிடத்தக்கவை. ஆனால் கான்ஸ்டென்ஸ் கார்னெட் [Constance Clara Garnett] அவரை மொழியாக்கம் செய்தபோது அவர் உலகம் முழுக்கச் சென்று சேர்ந்தார்.

கார்னெட் மூலத்துக்குச் சரியாக மொழியாக்கம் செய்யவில்லை. நிறைய பகுதிகளை விட்டுவிட்டே மொழியாக்கம் செய்தார். இன்று சரியான மொழியாக்கங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் கார்னெட்டின் மொழியாக்கம் ஆங்கிலத்தில் அழகான நடையில் இருந்தது. சரளமாக வாசிக்க வைத்தது. உணர்ச்சிகளை கொண்டுசென்று வாசகர்களிடம் சேர்த்தது. நமக்கு அத்தகைய மொழியாக்கங்களே தேவை.

இன்றைக்கு இரண்டு வகை மொழியாக்கங்கள் வந்துகொண்டிருக்கின்றன. மூலத்துக்கு விசுவாசமான, ஆனால் வாசிக்கமுடியாத மொழியாக்கங்கள். மூலத்தை நமக்கு அணுக்கமாக ஆக்கும் மொழியாக்கங்கள், ரஷ்ய ஆக்கங்களுக்கு எம்.ஏ.சுசீலா, புவியரசு, நா.தர்மராஜன் போன்றவர்களின் மொழியாக்கங்கள் சிறப்பானவை. சுகுமாரன் மொழியாக்கமும் நன்று. மலையாளத்திலிருந்து குளச்சல் யூசுப், யூமா வாசுகி , நிர்மால்யா மொழியாக்கங்கள் சிறந்தவை.

மொழியாக்கங்கள் உருவாக்கும் இலக்கியப் பாதிப்பு ரொம்ப முக்கியமானது. நம்முடைய அக மொழியை அவை கட்டமைக்கின்றன. நம்  புனைவுமொழியே ஆரம்பகாலத்தில் த.நா.குமாரசாமி போன்றவர்கள் மொழியாக்கம் செய்த வங்கநூல்கள் வழியாகவே உருவானது.

அத்துடன் நாம் மூலத்தில் வாசித்த ஒரு படைப்பை மீண்டும் மொழியாக்கத்தில் வாசிக்கையில் முற்றிலும் புதிய அனுபவத்தை அடைகிறோம். என்னுடைய பத்தொன்பது வயதில் வாசித்த மேரி கெரெல்லியின் மாஸ்டர்கிறிஸ்டியன் நாவலை இன்று சுபஶ்ரீ தமிழில் மொழிபெயர்க்கிறார். அவர்கள் ஏறத்தாழ ஒரு நூறு பக்க அளவு மொழிபெயர்த்ததை படிக்க கிடைத்தது. முதல் முறையாக ஆங்கிலத்தில் படிக்கும் போது வாசித்ததை விட பெரிய அனுபவமாக அமைந்தது. காரணம் அது இப்போது என்னுடைய மொழியில் இருக்கிறது.என்னதான் இருந்தாலும், என்மொழியில வந்தால்தான் நான் முழுதாக படிக்க முடியும். இன்னொரு மொழி, இன்னொரு மொழிதான்.

தன்னால் ஆங்கிலத்திலும் முழுமையாக உணர்ந்து படிக்க முடியுமென்று ஒரு தமிழர் சொன்னால், எனக்கு அதில் சந்தேகம்தான். அல்லது என்னுடைய மனநிலை அப்படியாக உள்ளது. ஆகவே, உலக இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் வரக்கூடியகாலம் வரும்போதுதான் தமிழ் வாழும் என்று சொல்வேன். தமிழில் ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை வரலாற்றின் மொழிபெயர்ப்பு வந்தது. சேப்பியன்ஸ் மனித குல வரலாற்றை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அத்தகைய நல்ல  மொழியில்அமைந்த மொழிபெயர்ப்புகளை பற்றி நாம் இன்னும் அதிகமாக பேசவேண்டிய சூழல் உள்ளது.

வெறும் பத்துபக்கத்துக்கு மேல படிக்க முடியாத நிலையில் உள்ள மொழிபெயர்ப்புகள் பயனற்றவை. பெரும்பாலும் மொழிச்சிடுக்குகளால் அப்படி ஆகிறது. ஆகவே, ஒரு மொழியாக்க நூலை படித்தால்  இதை படிக்கமுடியும் என்னும் உறுதிப்பாட்டை நாம் சகவாசகனுக்கு கொடுக்கவேண்டிய அவசியம்  உள்ளது.

கேள்வி: நீங்கள் வாசித்ததன் அடிப்படையில், மின் இதழ்களினுடைய வருகை இலக்கியச் சூழலில், எவ்வகையான ஒரு போக்கை ஏற்படுத்தி இருக்கிறது?

பதில்: இணைய பத்திரிகை என்னும் வடிவம் பத்திரிகை நடத்த தேவையான மிகப்பெரிய சுமைகளை இல்லாமல்செய்திருக்கிறது.  சொல்புதிது என்ற பத்திரிகையை நான் நடத்திவந்தேன்.  முந்தைய இதழ் விற்ற காசை விற்பனையாளர்களிடமிருந்து வாங்கிச் சேர்த்து எடுப்பது என்பதே பெரும் சவால். பிறகு மேலும் கொஞ்சம்பணம் சேர்த்து , பின் படைப்புகளை சேகரித்து இதழை தயாரிக்கவேண்டும். படைப்புகளைச் செப்பனிட்டு,  பிழைபார்த்து அச்சிட்டு எடுத்து விலாசம் ஒட்டி அனுப்பவேண்டும். விலாசம் ஒட்டி அனுப்புவது  இலேசான வேலை கிடையாது. என்னுடைய மனைவிதான் அதை செய்வார். அதற்கு ஒரு நண்பர் வட்டமும் சுற்றமும் துணை நிற்பது அவசியம். இணையப்பத்திரிகையை ஒரே ஒருவரே நடத்திவிடமுடியும்.

கடந்த இருபது ஆண்டுகளில், நமக்கு கிடைக்கிற மிகப் பெரிய வாய்ப்பு என  சிறுபத்திரிகையை இணையத்தில் கொண்டு வந்ததை குறிப்பிடலாம். ஆக, இன்றைக்கு வந்து கொண்டிருக்கும் இணைய இதழ்களில் எனக்குபெரிய மதிப்பு உண்டு. ஒரு இயக்கமாக அவர்கள் இலக்கியச்செயல்பாட்டை நிலைநிறுத்துகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவற்றில் வரும் முக்கியமான எல்லா படைப்புகளையும் கவனப்படுத்துகிறேன். சி.சு.செல்லப்பா ‘எழுத்து’ வழியாக என்ன செய்தாரோ அதைத்தான் இன்றைக்கு தமிழினி கோகுல் பிரசாத்தும், கனலி விக்னேஷ்வரனும், யாவரும் ஜீவ கரிகாலனும் நீங்களும் கூட  செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். வாழ்த்துகள்.

-குறிப்புகள்

 

ஒரு சிறு குருவி

(தேவதேவன்)

என் வீட்டுக்குள் வந்து
தன் கூட்டை கட்டியது ஏன் ?
அங்கிருந்தும்
விருட்டென்று பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு ?
பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து
விருட்டென்று தாவுகிறது அது
மரத்துக்கு
மரக்கிளையினை
நீச்சல் குளத்தின் துள்ளுபலகையாக மதித்து
அங்கிருந்தும் தவ்வி பாய்கிறது
மரணமற்ற பெருவெலளிக்கடலை நோக்கி
சுரீலென தொட்டது அக்கடலை என்னை
ஒரு பெரும் பளீருடன்
நீந்தியது அங்கே உயிரின் ஆனந்த பெருமிதத்துடன்
நீந்திய படியே திரும்பிப்பார்த்தது வீட்டை
ஓட்டுக் கூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்
வீட்டு அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்.

பைத்தியத்தின் டீ

(இசை)

ஒரு பைத்தியம்

கேரிபேக்கில் டீ வாங்கிக் கொண்டு போவதைப் பார்த்தேன்

பைத்தியத்திற்கு இன்னமும் டீ குடிக்க வேண்டியிருக்கிறது.

இந்த இருபத்திநான்காம்தேதி இரவை

நான்

பைத்தியத்தின் டீ என்பேன்.

தெய்வமே !

இந்த டீ

சூடாறாதிருக்கட்டும்..

சுவை குன்றாதிருக்கட்டும்..

பருகப்பருக பல்கிப்பெருகட்டும்..

 

யாரோ ஒருவன் என்று எப்படிச் சொல்வேன்?

(தேவதேவன்)

குப்பைத்தொட்டியோரம்

குடித்துவிட்டு விழுந்துகிடப்போனை

வீடற்று நாடற்று

வேறெந்தப் பாதுகாப்புமற்று

புழுதி படிந்த நடைபாதையில்

பூட்டு தொங்கும் கடை ஒட்டிப்

படுத்துத் துயில்வோனை

நள்ளிரவில் அரசு மருத்துவமனை நோக்கிக்

கைக்குழந்தை குலுங்க அழுதுகொண்டு ஓடும் பெண்ணை

நடைபாதைப் புழுதியில் அம்மணமாய்

கைத்தலையணையும் அட்டணக்காலுமாய்

வானம் வெறித்துப் படுத்திருக்கும் பைத்தியக்காரனை

எதனையும் கவனிக்க முடியாத வேகத்தில்

வாகனாதிகளில் விரைவோனை

காக்கிச் சட்டை துப்பாக்கிகளால் கைவிலங்குடன்

அழைத்துச் செல்லப்படும் ஒற்றைக் கைதியை

***

நேர்கண்டவர்கள்:ஷாதிர் யாசீன், சாஜித் அஹமட் , சப்னாஸ் ஹாசிம் 

https://vanemmagazine.com/எழுத்தாளன்-என்பவன்-அரசி/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.