Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உதறல்-சப்னாஸ் ஹாசிம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

உதறல்-சப்னாஸ் ஹாசிம்

சப்னாஸ் ஹாசிம்

 

ஓவியம் : எஸ்.நளீம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு அச்சமற்ற மனித நடமாட்டத்தை சந்தைக்கூச்சலை வாகன நெரிசலை, பாடசாலை சிறுவர்களை அவர்கள்  கண்டிருந்தனர். அநுராதபுரத்தில் ஆங்காங்கே இருந்த புத்தர் சிலைகளைச் சுற்றியிருந்த வெண் அலரிப்பூக்கள் பகலிலும் மணத்துக்கிடந்தன. சில இடங்களில் பாதை தடுப்புகள் போடப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்பட்டன. நீண்ட நாள் பசி, வயிறு ஒட்டி அடியிலிருந்து பிழம்பாய் எரிவது மூக்கு நாசிவரை சுட்டது. வேறு வழியின்றி ஒரு முஸ்லிம் ஹோட்டலை பார்த்து உள்ளே முதலாளியிடம் ஒரு சிலர் நிலைமையைப் புரியவைக்க அவர்களில் ஒருவனுக்கு அவசரமாய் அடைத்துக்கொண்டு வந்திருந்ததில் ஒதுங்கப் போனான். கழிவறையில் மஞ்சள் சுவர் பூச்சு போலக் கசந்து ஒழுகியதும் அந்த இடம் எரியத் துவங்கியது. ஒரு வாளி நிறையத் தண்ணீர் எடுத்துக் குறியைத்தணிய விட்டான்.

“முதல்ல போய் சாப்பிடுங்கோ புள்ளையாள்..” .

முதலாளி பேசுவதிலே ஆள் காத்தான்குடியென்று தெரிந்திருந்தது. பேச்சிலேயே அக்கறையும் வாஞ்சையும் கலந்திருந்தது.

“புள்ளையள் யாழ்ப்பாணத்தில இருந்து தப்பி வாறாக. கேக்கிறத்த குடுமகன்..” என வேலை பார்ப்பவர்களிடம் அவரது ஏவல் சத்தமாகவிருந்தது. பெரிய உள் கடையில் ஒரு பெரிய மேசையைச்சுற்றி பத்து கதிரைகளும் புத்தகப்பைகளும் குந்தியிருந்தன. இடைக்கிடை ஒருவன் மட்டும் ஒருவாளித்தண்ணீரோடு ஒதுங்கப் போனான். தாகம் தீரும் பத்து முழிகள் வெளுத்தன. யுத்தம் மீள மூண்டதில் புலிகள் கிழக்கிலிருந்த பொலிஸ் நிலையங்களை தாக்கி கைப்பற்றியிருந்தனர். அதனால் மட்டக்களப்பு கல்முனை வழியாக அக்கறைப்பற்றுக்கு செல்வதில் சிரமமும் அச்சமுமிருந்தது. கடை முதலாளியின் யோசனைப்படி பத்து பேரும் கண்டிக்கு செல்வதென முடிவாகியது. அன்றிரவு வேனில் கடிகார டிக் டிக் சத்தமும் ஆஸ்த்துமா இளைச்சலும் பல ரகமான குறட்டை வீசலும் நிறைந்திருந்தன. பலநாளாக கண்களில் தேங்கிய தூக்கமென்பதால் பைகளுக்கு மேலே கண்டபடி அசந்திருந்தனர்.அவர்கள் கடந்துவந்த கடுமையான நாட்களை, நினைத்தாலே தசைகளுக்குள் சுள்ளெனும் உதறலை அசைபோடாமலில்லை.

000000000000000000000000000

“இந்த கண்றாவி வீடிய விட்டுட்டு எப்படா சிகரெட்டுக்கு மாறுற..”.

“இருக்கிற பிரச்சினைக்குள்ள ஒனக்கு சிகரெட் தேவப்படுது எலா…”.

ரயில் தண்டாவாளக்கேடர்களை அறுத்துக் குறுக்காகவும் நீளப்பாட்டிலும் வைத்து மண்ணைத் தோண்டிய மடுவிலிருந்து மூட்டை மூட்டையாகக் கட்டி குறுக்காகச் சுவரைப் போல எழுப்பித் துப்பாக்கி முனை மட்டும் வெளியே நீட்டத் தக்க இடைவெளியோடு அந்தப் பங்கரை பதுங்குவதெற்கென இயக்கத்தினர் கட்டுவதை வேடிக்கை பார்த்தபடி நின்றவர்களுக்குக் கொண்டு வந்த பீடி தீர்ந்து போனது சலிப்படித்தது. அடிவானைத்தொட சூரியன் யாழ்கோட்டையின் சுவர்களுக்குள் வழக்கமான பங்கருக்குள் பதுங்கிக்கொள்ள ஆங்காங்கே மின் குமிழ்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கருந்தவளையின் கண்களைப்போலப் பளிச்சென்றன.

“அடேய். புதினம் பாக்குறியள் என்ன..”.

பங்கருக்குள்ளிருந்து குரலும் கண்களும் வெளியே நீண்டன.

“இல்ல அண்ணா, நாங்க படிக்க வந்த, சும்மா சுத்திப்பாப்பம் எண்டு…”

சொன்ன இழுவையான பதிலில் அமிழ்ந்து மூடியிருந்த குரலை அவர்களில் ஒருவன் எச்சிலை திரட்டி விழுங்கி சரிப்படுத்தியபடியிருந்தான்.

“எந்த ஊரடா நீங்கள்.?..”.

“அக்கரைப்பற்று ண்ணா…”

“முஸ்லிமே…? “

கேள்விகளைச் சுருக்கமாக முடித்துவிட்டு பீடிக்குறைகளை சாஷ்டாங்கமான முகமனைப்போலக் காலுக்கு கீழே நசுக்கியவுடன் தங்களது அறையை நோக்கி வேகமாக அவர்களிருவரும் நடக்கத்துவங்கியதில் யாழ்ப்பாணக் கோட்டையைச் சுற்றிலும் புலிகள் பல பங்கருகளை கட்டுகிற சப்தங்கள் தெளிவாகக்கேட்டன. முந்தைய இரவில் பூத்திருந்த வெண் அலரி வாசம் வழியெங்கும் கும்மென்று அடைத்திருந்தது. ஆங்காங்கே ஆயுதங்களோடு ஆட்கள் சுதந்திரமாகச் சுத்தி திரிவதை கோட்டை மேலிருந்த இராணுவத்தினரும் பார்த்தபடியிருந்தனர். தொன்னூறுகளில் இலங்கை ஜனாதிபதியாகவிருந்த ரணசிங்க பிரேமதாசா புலிகளோடு செய்திருந்த யுத்த நிறுத்தக் காலத்தில் புலிகள் பல அரண்-சுவர்களையும் பதுங்கு குழிகளையும் அமைக்கத்துவங்கியிருந்தனர். இது தெரிந்திருந்தும் இராணுவத்தரப்பு தங்கள் வீரர்களை அமைதியாக இருக்கும் படியே கட்டளையிட்டிருந்தது. பேச்சுவார்த்தை பிற்காலகட்டத்தில் இலங்கை பாதுகாப்புத்தரப்பு ஆயுதங்களைத் தவிர்க்கச்சொன்னதில் புலிகள் அதிருப்தியடைந்திருந்தனர். இந்தக்காலத்தில் தான் கிழக்கிலிருந்து நிறைய மாணவர்கள் யாழ்நகருக்கு கல்விகற்க வந்திருந்தனர். அறையை அடைந்ததும் வெளியே இருளைக்கவிழ்க்க போராடும் மஞ்சள் விளக்கை அணைத்துக் கொண்டனர். அவர்கள் தங்கியிருந்த அறைக்கு அடுத்தாற்போல் தான் உரிமையாளரும் குடியிருந்தார். சாப்பாடு தங்குமிடத்தோடு சேர்த்து மாதவாடகை உரிய நாளில் வங்கிக்கணக்கிற்கு வந்துவிடுமென்பதால் அவரும் தொந்தரவு தருவதில்லை. அவர் பிள்ளைகள் அறைக்குள் அடிக்கடி இவர்களோடு விளையாட வருவது அவருக்கு அவ்வளவு பிடிப்பாக இல்லை. வெளியே சண்டை மூளும் நாட்களில் குண்டுகளுக்குப் பயந்து பதுங்கும் குழிகள் வேறு வேறாக அமைக்கப்பட்டிருந்தன. வேறான வாயிலோடு கொல்லைப்புறத்தை பிரிக்கும் பெரிய சுவரில் இருந்த ஜன்னல் மட்டுமே தொடர்பாடலுக்கென்றிருந்தது. யாழில் ஒரே கிணற்றுக்காக ஒரே கோயிலுக்காக ஒரே தேநீர்க்கடைக்காகப் போராடியது போல ஒரே பங்கருக்காகவெனப் பஞ்சமர் போராட்டங்கள் வீதிக்கு இறங்கியிருக்க முடியாது தான். அன்றிரவே மீண்டும் போர் துவங்கியது. சரமாரியாகக் குண்டுகள் அதிர தீட்டால் பிரிந்திருந்த பங்கருகளில் ஒரே மரணபீதி ஒரே வியர்வையென அடைத்திருந்தது. அவர்களிருவரும் எப்படியாவது ஊருக்குச் செல்வதென முடிவெடுத்து வழக்கமாகச் சாப்பிடப்போகும் முஸ்லிம் கடை முதலாளியிடம் பேசிப் பார்த்தனர். அந்தக் கடைமுதலாளிக்கு புலிகளிடத்தில் செல்வாக்கிருந்தது. புலிகளின் தளபதியொருவர் மூலமாக வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து தந்திருந்ததில் அவர்களோடு சேர்த்து மொத்தம் பத்து மாணவர்கள் ஏறியிருந்தனர். உண்மையில் அவர்களில் நால்வர் இலங்கை பொலிஸ் பிரிவில் பணியாற்றிய முஸ்லிம்கள். கடைமுதலாளியினால் ஏற்கனவே திட்டமிட்டபடி அவர்கள் தங்கள் சீருடைகளை புதைத்து விட்டு இவர்களோடு மாணவர்களாகப் புத்தகங்களை பகிர்ந்து பிரித்து வாங்கியபடி பயணத்தில் சேர்ந்திருந்தனர். வேனில் நன்கு தெரிந்தவர்கள் போலத் தங்களைக்காட்டிக்கொள்வது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. மாற்றுவீதிகளின் வழியே வேன் மத்திம வேகத்தில் செல்ல முன் விளக்குகளை மங்கலாய்க்கியிருந்தார் ட்ரைவர். பத்துக்கனவுகளெல்லாம் இல்லை; உயிர் வாழும் பிரயாசைகள் மட்டும் ஜன்னலிலிருந்து வெளியே தொங்கிக்கொண்டிருந்தன. இயக்கச்சியிலிருந்து ஆனையிறவுப்பாதைக்கு வேன் போகாமல் கோவில்வயல் வைரவர் கோவில்வரைக்கும் வந்து விட்டிருந்தார்கள். அங்கிருந்து கால்நடையாக ஆனையிறவுக்கு வர விடிந்திருந்தது. எதிரில் இருந்த இராணுவ முகாமில் சோதனைக்காக நின்றிருந்தனர். முன்னால் நீண்ட வரிசை. வரிசையிலிருந்து யாரோ ஒருவர் அடையாளம் காட்டுபவர்களை அடித்து இழுத்து சென்ற சிப்பாய்களின் பூட்ஸ் சத்தம் அச்சுறுத்தியது. தாகம் நீண்டு நாக்கிலிருந்து அடித்தொண்டை வரை வறண்டு வெடித்திருந்தது. அவர்களில் ஒருவன் சிங்களம் சரளமாகப் பேசத்தெரிந்தவன் என்பதால் புத்தகப்பைகளை காட்டி நிலைமையை விளக்கிப்பேச பைகளை ஒவ்வொன்றாகச் சோதனையிட்டனர். ஒவ்வொரு பையிலும் புத்தகங்களும் கழுவாத ஆடைகளும் சுருட்டிக்கிடந்தன. ஒவ்வொரு பையாகச் சோதனைக்கு நீட்டிவிட்டு வரிசையாகக் காத்திருந்தனர். திடீரென இருவரின் பின் முழங்காலில் உதை விழ முட்டி அடிபடக் கீழே சரிய துவக்குகள் லோட் ஆகின. ஒரு பைக்குள் இருந்து டிக் டிக் என்ற சத்தம் வந்ததும் சுதாகரித்த இராணுவ சிப்பாய்களுடன் இன்னும் சிலரும் வந்து சேர கவனமாக அந்த பையைத் திறந்து பார்த்தனர். அவர்களை விடவும் அந்தக் குழுவிலிருந்த மாணவர்களுக்கே திடுமென்றிருந்தது. தெரியாத பொலிஸில் இருந்த சிலரோடு சேர்ந்து தாங்களும் இரையாகிவிடுவோமென்ற அச்சம் மூள வியர்த்த கழுத்துகளும் பொத்தான் திறந்த நெஞ்சுப் பகுதிகளும் அதிகாலை வெயிலில் பளபளத்தன. உள்ளே இருந்த மேசைக்கடிகாரத்தை வெளியே எடுத்துத் துருவிச் சோதனை செய்தபின்னர் அவர்கள் பத்துப் பேரையும் செல்ல அனுமதித்தனர்.

000000000000000000000000000

காடுகள் வழியாகக் கவனமாக ஒரு ஆள் முன்னே செல்லத் தனித்தனியாக ஒரு எறும்பு நிரையைப் போல மனிதர்களும் புத்தகவடுக்குகளும் மேசை கடிகார டிக் டிக் சத்தமும் விரைந்து கொண்டிருந்ததில் புதிதாக இழுத்து எறியும் மூச்சு சப்தமும் சேர்ந்திருந்தது. அதில் ஒருவனுக்கிருந்த ஆஸ்த்துமா இளைச்சல் மற்றவர்களுக்குப் புத்தகப்பைக்கு மேலே ஒரு சுமையை ஏற்றியது போலிருந்தது. மூன்று நாட்கள் மாறி மாறிப் பல புலிகளின் காவலரண்களுக்கு நடக்கவேண்டியிருந்தது. அதே சோதனைகளும் அதே கேள்விகளும் திரும்பத் திரும்ப வந்தன.

“முஸ்லிமோ..” .

“படிக்க வந்த நீங்களோ..”.

“ஓமந்தை வரப் போகலாமப்பன்…”.

புலிகளின் காவலரண்களில் தங்க கிடைத்த எல்லா நாட்களும் அவர்களுக்குச் சோதனையாயிருந்தன. செட்டிக்குளம் காவலரணில் அவர்களுக்குத் தங்குவதற்கென மரங்களடர்ந்த காட்டில் அருகருகேயான நான்கு மரங்களைச் சுற்றி வேயப்பட்ட புடவையினுள் அவர்கள் தங்கவைக்கப்பட்டனர். பல இடங்களில் தொடரும் சண்டைகளில் இடம்பெயர்ந்த குடும்பங்களும் தங்களுக்கு போதிய அளவு பெரிய சதுரப்புடவைச்சுவரினுள் தங்கியிருந்தனர். குழந்தைகளுக்காகப் புகைந்திருந்த அடுப்புக்கருகலும் துண்டிக்கப்பட்ட உடலங்கங்களிலிருந்து வரும் அழுகைச்செருமலும் பத்து புத்தக மூட்டைகளை கொளுத்துவதுபோலவிருந்தன. வயோதிபர்கள், பெண்கள், குழந்தைகள் ஊனமுற்றவர்களோடு வரிசையில் நின்று சாப்பாட்டு பொட்டலங்களை வாங்கக்கூச்சமாக இருந்தது. இப்படித்தான் ஊரிலும் ஆயுதக் குழுக்களைத் தாக்கும் வான் ஹெலிகாப்டர்களுக்குப் பயந்து சிதறிய படைகளின் ஆயுதங்களைப் பொறுக்கி கொல்லைப்புறங்களில் புதைத்தபோதும் யார் பணத்தை யார் புதைப்பதென்று கூச்சமாயிருந்திருக்கும். திரும்பவும் விடிய முன்னரைப் போல வேறொரு ஆள் ஆயுதத்தோடு முன்னே செல்ல அதே எறும்புவரிசை கால்கள் விறைத்தபடி முன்னேறின. புதிய ஆள் சாரத்தை தூக்கி கட்டியிருந்தான். அவன் கெண்டைச்சதையில் ஒரு துண்டு இருக்கவில்லை. அவன் கால்களை இழுத்து இழுத்து நடந்தாலும் இதுவரை முன்னே வழித்துணையாக வந்தவர்களில் அவனே வேகமாக நடந்தான். பனை வடலிகளும் வேப்பம் பற்றைகளும் கள்ளிச்செடிகளும் குளக்கரைகளும் கண்ணிவெடி புதைக்கப்பட்ட முட்புதர்கள் மண்டிய நீரேரிகளுமென அவர்கள் நிற்காமல் கடக்கவேண்டியிருந்தது. இரண்டு நாட்கள் நீண்ட பயணத்தில் கால்கள் நடுங்கி அந்த உதறல் தலை வரை எழும்பியிருந்தது. இன்னும் சில மைல்களில் இராணுவ முகாம் வந்துவிடுமென்பதால் அந்த ஆளிடம் அவர்கள் விடைபெறவேண்டியிருந்தது.

“நாங்கள் தான் சண்டையெண்டு அழியிறம். நீங்களாவது படியுங்கோடா…”.

திரும்பிப்பார்க்காத அந்த இழுவைக்கால்கள் துப்பாக்கியோடு சாரத்தை உயர்த்திய ஆளை மறைத்துவிடும் படி விரைவாக நடந்திருந்தன. அங்கிருந்து நடந்து வந்து வழக்கமான சோதனைச்சாவடிகள் பலவற்றை தாண்டி ஒரு மரக்கறி லாரியில் பத்து பேரும் மொத்தமாக ஏறியிருந்தனர். அதற்குப் பிறகு அநுராதபுரம் வரை அவர்களை ஏற்றியபடியால் அவர்களையும் லாரியையும் வழக்கத்திற்கு மேலதிகமாகச் சோதனை செய்தனர். லாரி ட்ரைவரை கடைசியாக அனுராதபுரத்தில் வழியனுப்பியபோது அதில் ஓரிருவர் அழுதேவிட்டனர். கருணை என்பது குப்பிவிளக்கின் சுடர் போலச் சினுங்காமல் எங்காவது ஒரு மூலையில் எரிந்து கொண்டிருப்பது தான்.

000000000000000000000000000

கண்டி முஸ்லிம் ஹோட்டலில் நூற்றியெட்டாம் அறையில் அவர்கள் தங்கியிருந்தனர். பலநாள் கழித்து ஒரு உற்சாகம் தேறியிருந்தது. அது கண்டி பெரஹர காலம் என்பதால் ஊர்வலம் போகும் வீதிகள் மின்விளக்கு சோடனையில் கிறக்கமாயிருந்தன. அலங்காரப்பந்தல்களும் தென்னோலைத் தோரணங்களும் சந்திக்குச் சந்தி வைக்கப்பட்டு பார்வையாளர் நிற்கும் இடங்களில் கயிறுகள் பின்னப்பட்டிருந்தன. அரச பௌத்த உற்சவமென்பதால் தலதா மாளிகையையும் அதனைச் சுற்றிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. திறந்த ஜன்னலிருந்து அடிக்கும் குளிர் காற்றை முகரவெனத் தலைகள் எட்டிப் பார்த்தபடியிருந்தன. விடிந்தால் ஊருக்குப் போகமுடியும் என்கிற சுலபமான வாயிலைக் குளிர்ந்த நம்பிக்கையை அவர்கள் அடிக்கடி திறந்து பார்த்துக்கொண்டிருந்தனர். உதறி நடுங்கும் கால்களை ஆறப்போட்டுத் தொடைகளை நீவி நீண்டு படுத்திருந்தனர். கண்கள் மட்டும் வீடுவரை நீண்டிருந்தன. ஒரு வழி போலச் செம்மையாக ஒரு பளிங்கு போல அதைவிடச்செம்மையாக நாளையை அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். கதவு படாரென்று திறந்து இரண்டு துண்டுகளாகப் பறந்து விழச் சில கொமாண்டோக்கள் ஆயுதங்களோடு உள்ளே திடுதிப்பென்று பாய்ந்தனர். இருண்ட சீலைகளை தலையில் கட்டி கறுப்பு நிறத்தை முகத்தில் பூசியிருந்தனர்.

“வேச மவனுகளா…”.

ஆடை கழட்டப்பட்டு எல்லோரும் நிர்வாணமாக்கப்பட்டனர். சுன்னத் செய்யப்பட்ட குறிகளைக் கண்டதும் அவர்களின் தீவிரம் தணிந்திருந்தது. ஆண்குறி மையவாதம் இங்கே மட்டும் உயிர்ப்பிச்சை அளித்திருந்தது. இப்படித்தான் எல்லாச் சோதனைச்சாவடி களிலும் அறுக்கப்பட்ட குறிகளுக்கு மரியாதை இருந்தது. நீண்ட நாட்கள் வெயிலில் கிடந்த கருமையும் அழுக்கும் பெரிய முடிச்சுகளைப் போலவிருந்த பைகளின் நடமாட்டமும் புலனாய்வுத்துறையின் காதுகளைச் சீவியிருக்க வேண்டும். பெரஹர உற்சவத்திற்கு குண்டடிக்கும் புலிகளோவென அவர்கள் சந்தேகப்பட்டிருக்க வேண்டும். நீண்ட சோதனையின் பின்னர் அவர்கள் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டனர்.

“படிக்க…?”. “யாழ்ப்பாணத்திற்கு..?”.

சிப்பாய்கள் ஆச்சரியப்பட்டனர். பயத்தில் சிலருக்கு மூத்திரம் கொதித்தபடி வந்திருந்தது. இப்போது மூடிய ஜன்னல், உடைந்த கதவோடு டிக் டிக் சத்தம், ஆஸ்த்துமா இளைச்சலோடும் மூத்திர நெடியோடும் அவர்கள் படுத்திருந்தனர். அந்தக் குளிரிலும் வியர்த்த பிசுபிசுப்பு தரையில் அங்கங்களை ஒட்டிக் கிடக்கச்செய்தது.

மறுநாள் ஐந்து மணிக்கு அக்கறைப்பற்று பஸ்ஸை பிடிப்பது வரை அவர்களின் உதறல் நிற்கவே இல்லை.

சப்னாஸ் ஹாசிம்-இலங்கை

 

https://naduweb.com/?p=17718

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் என்பது ஒவ்வொருவர் பார்வையில் வேறுபடுகின்றது ........!  😢

நன்றி கிருபன்.....! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.