Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுத்தச் செலவினத்தால் வீணாக அழிகின்றது நாட்டின் பெருவளம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தச் செலவினத்தால் வீணாக

அழிகின்றது நாட்டின் பெருவளம்

நாட்டில் தொடரும் யுத்தம் காரணமாகவும் யுத்தத்துக்காக அரசினால் செலவிடப்படும் பெருந்தொகை நிதி காரணமாக வாழ்க்கைச் செலவும் அதிகரிக்க நேர்வதாலும் இந்நாட்டின் பொதுமக்கள் இன்று வாழ்க்கையுடன் போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் யுத்தத்தை முன்னெடுத்துச் செல்ல முயலும் அரசின் போக்குக்கு ஆதரவளிக்காது, யுத்தத்தை நிறுத்தி சமாதான வழியில் பிரச்சினைக்குத் தீர்வுகாண நாட்டின் பொதுமக்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமெனக் கூற விழையும் வகையிலான இக்கட்டுரை கலாநிதி குமார் ரூபசிங்க வினால் எழுதப்பட்டதாகும்.

கடந்த 8ஆம் திகதி வெளியான "ராவய' பத்திரிகையில் பிரசுரமாகியுள்ள அக்கட்டுரையின் தமிழ் வடிவம் இங்கு தரப்படுகிறது.

தர்க்க ரீதியில் நோக்குமிடத்து யுத்தம் என்பது எவருக்கும் அவசியமானதொன்றல்ல. யுத்தம் பெரும் பயங்கரம்மிக்கதும் அழிவுகளை ஏற்படுத்த வல்லதுமாகும். ஆதலால் எவரும் சரி, தத்தமது மனச்சாட்சியின் ஒப்புதலுடன் யுத்தத்தை விரும்பப் போவதில்லை. ஆனால் துரதிஷ்டவசமாக யுத்தத்தின் மூலம் பெருந்தொகை நிதி வளத்தைத் தேடிக் கொள்ளும் வாய்ப்பு ஒரு சில தரப்பினருக்குக் கிட்டி வருகின்றது. மனித உயிர்களின் மரணத்தின் மூலம் பணம் சம்பாதிக்கும் தரப்பினர் என இவர்களை அடையாளப்படுத்துவது பொருத்தமானதொன்றே. இத்தகைய ஆயுத வியாபாரிகள் சட்டபூர்வமான விதத்திலும் மற்றும் சட்டபூர்வமற்ற விதத்திலும், ஆயுத தயாரிப்பின் மூலமும் குறிப்பாக சிறிய ரக ஆயுதங்களின் ஆயுத வியாபாரத்தின் மூலமும் பெருந்தொகைப் பணத்தை இலாபமாக ஈட்டிக் கொள்கின்றனர். பெரும்பாலும் இவர்கள் ஆயுத மோதல்களில் சம்பந்தப்படும் இருவேறு தரப்புக்களுக்குமே தமது ஆயுதங்களை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டிச் செயற்படுகின்றனர்.

இன்றைய உலக நிலை

இன்று உலகின் போராயுத உற்பத்தியில் "லொக்ஹீட் மார்டின்' மற்றும் "பொயின் அன்ட் றெய்தன்' என்ற இணை நிறுவனமே முதலிடம் வகித்து வருகின்றது. உலகின் போர் எதிர்ப்பு அமைப்பின் யுத்த விருப்புக்கு எதிரான பிரிவின் தொடர்பாளரான "சைமன் ஹரக்' என்பவரின் கூற்றுப்படி, யுத்த மனோபாவத்தைத் தூண்டிவிடும் அணுகுமுறை முதன்முதலில் அமெரிக்காவினாலேயே கடைக்கொள்ள ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிய வருகின்றது. உண்மையில் அத்தகைய நோக்கம் யுத்தத்தின் மூலம் இலாபம் ஈட்டிக் கொள்வது என்றல்லாது, இலாபம் ஈட்டிக்கொள்வதற்காக இரு தரப்புக்கள் மத்தியில் யுத்த உணர்வைத் தூண்டி விடும் விதத்திலானதேயாகும். இத்தகைய அமெரிக்காவின் இக்கொள்கை நிலைப்பாட்டை வளர்க்கும் விதத்தில் பலதரப்பட்ட நாடுகளில் இடம்பெறும் தேர்தல்களில், தமது கொள்கை நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்க முன்வரும் தரப்புக்களுக்கு நிதி உதவியைக்கூட வழங்கும் அணுகுமுறை பின்பற்றப்படுவது இத்தகைய ஆயுத வியாபார நிறுவனங்களிடையே பொதுவில் காணத்தக்கதோர் இலட்சணமாகும். அந்த வகையில் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா மேற்கொண்ட யுத்த நடவடிக்கைகள் மூலம் அமெரிக்கப் பேராயுத வர்த்தகர்கள் பெருமளவிலான பணத்தை இலாபமாக ஈட்டியுள்ளனர் என்பது நாமெல்லோரும் அறிந்த விடயமே. அமெரிக்காவுக்கு மேலதிகமாக பிரிட்டன், ரஷ்யா, செக்கோசிலேவேக்கியா மற்றும் இந்தியா போன்ற மேலும் பல நாடுகளும் பேராயுதங்கள் மற்றும் போரில் பயன்படுத்தப்படும் பல்வகை தளபாடங்கள் என்பவற்றை உற்பத்தி செய்து வருகின்றன.

உலக நாடுகள் வருடமொன்றுக்கு ஆயிரம் பில்லியன் (ஒரு லட்சம் கோடி) வரையான அமெரிக்கடொலரை யுத்தத்துக்காகச் செலவு செய்து வருகின்றன எனக் கணக்கிடப்பட்டுள்ளது. கிடைக்கும் தகவல்களின் படி இன்றைய காலகட்டத்தில் உலகின் சகல பாகங்களிலும் பரிமாறிக்கொள்ளப்படும் சிறு போராயுதங்களின் பெறுமதி ஐயாயிரம் கோடி அமெரிக்க டொலர் வரையிலாகும் எனவும் தெரிய வருகின்றது. உலகில் இன்று உள்நாட்டு மோதல் களிலும், பிறிதொரு வெளிநாட்டுடனான யுத்தம் என்ற வகையிலும் ஈடுபட்டு வரும் 49 நாடுகளில் 46 நாடுகளில் முக்கியமான பாவனை என்ற வகையில் இத்தகைய போராயுதங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்றைய காலகட்டத்தில் தென்ஆசிய வட்டகை நாடுகளில் மனித வாழ்க்கை என்பது பாதுகாப்பற்ற பெரும் உயிர் அச்சுறுத்தல் நிலையிலேயே இருந்து வருகிறது. இவை தவிர இத்தகைய மோதல்கள் காரணமாக இழப்புக்களுக்கு முகம்கொடுக்க நேரும் சாதாரண பொதுமக்களின் குடும்பங்கள் மற்றும் பாதிப்புக்களுக்கு உட்படும் தரப்புக்களுக்கு ஏற்படும் இழப்புகள் என்பவை எந்த வகையிலும் கணக்கிட இயலாத அளவுக்கு விசாலமானவையாகும். ஆனால், ஆயுத விற்பனைகளில் ஈடுபடும் தரப்பினர் தாம் ஈட்டும் இலாபம் காரணமாக யுத்தம் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் பொருள் இழப்புகள் குறித்து எவ்வித அக்கறையும் செலுத்துவதில்லை.

இலங்கை சம்பவங்களின்

தொடர் வரிசைகள்

சிறு போராயுதங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் முடிவுப்படி இலங்கை பாதுகாப்புப் படைகளிலிருந்து தப்பிச் சென்ற 52 ஆயிரம் வீரர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பைக் கைவிட்டுசென்ற ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் அவ்விதம் பாதுகாப்புப் படைகளிலிருந்து தப்பிச்சென்ற வேளையிலும், விடுதலைப் புலிகள் அமைப்பைக் கைவிட்டுச் சென்ற வேளையிலும் ஒன்றில் தம்மிடமிருந்த ஆயுதங்களை உரிய தரப்பினர்களிடம் கையளித்துவிட்டோ அல்லது ஆயுதங்களைத் தம்முடன் எடுத்துக் கொண்டோ சென்றுள்ளனர். அந்த வகையில் மூன்று இலட்சம் வரையிலான ஆயுதங்கள் சட்டவிரோதமான விதத்தில் இந்நாட்டின் சிவில் சமூகத்தைச் சேர்ந்த தனிநபர்களது கைகளில் சிக்கிக் கொண்டுள்ளன எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தைக் கணக்கில் எடுத்து அதன் அடிப்படையில் சிந்திப்போமானால் இலங்கையில் குற்றங்களும், கூலிக்கு மனிதர்களைப் படுகொலை செய்யும் சம்பவங்களும் மலிந்து காணப்படுவது குறித்து ஆச்சரியப்படுவதில் அர்த்தமில்லை.

தென்னாசிய வட்டகை நாடுகளில் யுத்தத்தைத் தூண்டிவிடும் தரப்பினர்களின் செயற்பாடுகளால் ஏனைய நாடுகளைவிட கடுமையான பாதிப்புக்கு உள்ளான நாடு என இலங்கையை அடையாளப்படுத்திவிட முடியும். இலங்கையின் பாதுகாப்புச் செலவீனத்தை இந்நாட்டின் சராசரி தேசிய உற்பத்தி விகிதத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அது தென்னாசிய வட்டகை நாடுகளில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியிலும் அதிகூடிய போர்ச் செலவினமாகும். கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய இலங்கையின் வருடாந்த பாதுகாப்புச் செலவினம் பத்தாயிரம் கோடி ரூபாவையும் தாண்டியுள்ள தாகத் தெரியவருகின்றது. கடந்த காலகட்டத்தில் உலகில் ஏற்பட்ட யுத்த அணுகுமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு அமைய யுத்தத்தை உக்கிரமடைய வைக்கும் குறிக்கோளுடன் செயற்படுவோர், யுத்தத்தைத் தூண்டிவிடுவோர் போன்ற தரப்புகள் யுத்தங்களை நவீனமயப்படுத்தும் விதத்தில் நவீன ரக போராயுதங்களை உற்பத்தி செய்து வருவதால் யுத்தத்துக்குப் பெருந்தொகை நிதியை மேலதிகமாகச் செலவிடவேண்டி நேர்கிறது. கடந்த பத்தாண்டுகள் கால இடைவெளிக்குள் இலங்கையின் பாதுகாப்புச் செலவீனமாக ஏறக்குறைய நாற்பதாயிரம் கோடி ரூபாய் வரை செலவிட நேர்ந்துள்ளது. யுத்தத்துக்காகச் செலவிடப்படும் நிதியை, நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்குச் செலவிட முடிந்திருந்தால் நாட்டுக்கு அதனால் பெரிய அளவில் நன்மை கிட்டியிருந்திருக்கும் என்பதை எவரும் சிந்தித்துப் பார்க்கின்றவர்களாகத் தோன்றவில்லை.

இலங்கை பொருளாதார ரீதியில் மட்டுமன்றி, சலக துறைகளிலும் 90வீத தன்னிறைவை எட்டியுள்ளது எனப் பெருமை பாராட்டிக் கொள்ளப்பட்டாலும் நாட்டின் மாணவர்களுக்குத் தரமும் வசதி வாய்ப்புக்களும் கொண்ட கல்விக்கூடங்கள் வாய்த்துள்ளனவா என்பது கேள்விக்குரியதொன்றே. அடிப்படை ஆரம்பக் கல்விக்கு அவசியமான புத்தக வகை மாணவர்களுக்குப் போதிய அளவில் கிட்டுவதில்லை. அதேபோன்று மாணவர்கள் முறையாகத் தமது கல்வியை ப்பெறுவதற்கு அவசியமான ஆசிரியர்களுக்குப் பெரும் பற்றாக்குறை நிலவிவருகின்றது. அதேபோன்று நாட்டின் சுகாதார சேவைகளின் தரமும் இவற்றுக்கு எந்த வகையிலும் மேம்பாட்டதல்ல. வைத்தியசாலைகளில் இன்று சமாளிக்க இயலாத அளவுக்கு நோயாளர்கள் நிரம்பிவழிகின்றனர். அதுமட்டுமன்றி இந்நாட்டின் பொதுமக்களுக்கு அவசியமான அடிப்படை மருத்துவ வசதிகளும் கிட்டுவதில்லை. கர்ப்பிணிப் பெண்கள்கூட தமக்கான மாதாந்த "கிளினிக்'குகளுக்குச் செல்வதற்கும் குழந்தைப் பேற்றுக்காகத் தம்மை வைத்தியசாலைகளில் தங்கியிருக்க அனுமதி பெறுவதற்கும் நீண்ட வரிசைகளில் காத்திருக்கவேண்டிய சிரமமான நிலையே இன்று நாட்டில் நிலவுகின்றது. வைத்தியசாலைகளில் நோயாளர் தங்கிச் சிகிச்சை பெறுவதற்கு அவசியமான கட்டில் வசதிகளும் போதிய அளவு கிடையாது. இவ்விதம் தமது அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக்கொள்ள இயலாது அவலமுறும் இந்நாட்டின் சாதாரண பொதுமக்களே, நாட்டின் பாதுகாப்பு என்பதை முன்னிலைப்படுத்தி இவ்விதம் போராயுதங்களைக் கொள்வனவு செய்ய அரசு செலவிடும் பெருந்தொகை நிதியின் சுமையையும் சுமக்க வேண்டி நேர்வது பெரும் கவலைக்குரியதொரு விடயமாகும்.

புள்ளி விவரங்கள் வெளிப்படுத்தும்

உண்மைகள்

அந்த வகையில் கடந்த 1993ஆம்ஆண்டுமுதல் 2007ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் இலங்கை அரசு நாட்டின் யுத்தச் செலவீனம் என்ற வகையில் செலவிட்ட நிதித்தொகை எத்தகைய விகிதத்தில் அதிகரித்து வந்துள்ளன என்பதனைக் கீழ்க்காணும் புள்ளிவிவரங்கள் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.

ஆண்டு யுத்தத்துக்கான செலவீனம்

1983 170 கோடி ரூபா

1986 600 கோடி ரூபா

1995 2400 கோடி ரூபா

1996 3800 கோடி ரூபா

1998 5600 கோடி ரூபா

2001 6300 கோடி ரூபா

2004 5600 கோடி ரூபா

2005 5600 கோடி ரூபா

2006 6930 கோடி ரூபா

2007 13,960 கோடி ரூபா

மேற்குறிப்பிடப்பட்டுள்ள செலவினங்கள் இலங்கையின் வரவு செலவுத்திட்ட அறிக்கைக்கு அமைய திரட்டப்பட்டவையாகும்.

லேசர் கதிர்களால் வழிகாட்டப்படும்

தாக்குதல் குண்டுகள்

ஒரு "மிக் 29' ரக தாக்குதல் விமானத்தின் பொதுவான விலை 15 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது இலங்கை நாணயத்தின் பெறுமதிப் படி சுமார் 167 கோடி ரூபாவாகும். இத்தகைய "மிக் 29' ரக விமானங்களை இலங்கை அரசு ரஷ்யா விடமிருந்து 7 முதல் 10 ஆண்டுகள் காலத்துள் தவணைமுறை அடிப்படையில் , அந்த விமானங்களின் உண்மையான விலை விவரங்களைப் பகிரங்கப்படுத்தாத விதத்தில் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளத் தயாராகி வருகின்றது. "சண்டே ரைம்ஸ்' பத்திரிகையில் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்த பத்தியை எழுதிவரும் இக்பால் அத்தாஸால் வெளிப்படுத்தப்பட்ட மேற்குறித்த தகவல்கள் கடந்த மே மாதம் 20ஆம் திகதிய "சண்டே ரைம்ஸ்' பத்திரிகையில் வெளியாகியுள்ளன. அரசின் இந்தச் செயற்பாடு "முதலில் போரிடுவோம். பின்னர் பணம் செலுத்வோம்' (ஊடிஞ்டட் ணணிதீ ச்ணஞீ ணீச்தூ டூச்ட்ஞுணூ) என்பதற்கு ஒப்பானது எனவும் அப்பத்திரிகையில் விமர்சிக்கப்பட்டுள்ளது. இதில் மேலுமொரு சிக்கல் உள்ளதாகக் கருத முடிகிறது. இத்தகைய வர்த்தகக் கொடுக்கல் வாங்கல் விடயத்தில், அடுத்து பதவிக்கு வரும் எந்தவோர் அரசும்கூட இதற்கான கொடுப்பனவுகளைச் செலுத்தி முடிக்க வேண்டிய நிலை ஏற்படுமென்பதே அந்தச் சிக்கல் நிலையாகும்.

குறிப்பிட்ட அந்தப் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பான விமர்சனங்களின் அடிப்படையில் இத்தகைய தாக்குதல் விமானங்களை அரசு இத்தகைய பெரும் விலை செலுத்தி வாங்கி விடுவதால் மட்டும் இலங்கை விமானப்படையால் இலங்கையின் வான் பாதுகாப்புக் கட்டமைப்பை முழுமையாக சாதகமான வகையில் பாதுகாத்து நடைமுறைப்படுத்திவிட இயலாது. குறிப்பிட்ட இவ்வகை தாக்குதல் விமானங்களைப் பயன்படுத்தி குறிப்பிட்டதொரு இலக்கின் மீது வெற்றிகரமாகத் தாக்குதல் மேற்கொள்ளப்படவேண்டுமானால், "ராடர்' தொகுதிகள் மூலம் உஷ்ணத்தின் வழி செல்லும் சக்திமிக்க "லேசர்' கதிர்களால் மூலம் வழிநடத்திச் செல்லப்படத்தக்க ஏவுகணைத் தொகுதிகள் அவசியமாகின்றன. அத்தகைய ஏவுகணைத் தொகுதியொன்றின் சாதாரண விலை ஏறத்தாழ 30 ஆயிரம் அமெரிக்க டொலர்களாகும். இதற்கு மேலதிகமாக, நவீன ரக 29 யூ.பி. பயிற்சி "மிக்' தாக்குதல் விமானங்கள், அதற்குத் தேவைப்படும் மேலதிக உதிரிப் பாகத் தொகுதிகள், யூ.ஏ.வி. ரக ஆள்களற்ற தானியங்கி கண்காணிப்பு விமானங்கள் மற்றும் புதிய ரக உலங்கு வானூர்திகள் போன்றவையும் கொள்முதல் செய்யப்படவேண்டியுள்ளன.

இவற்றைவிடத் தற்போது இலங்கை விமானப்படை வசமிருக்கும் உலங்கு வானூர்திகள் முற்றுமுழுதாகப் புதுப்பிக்கப்படவேண்டுமென உரிய தரப்பினர்களுக்கு உரிய அதிகாரிகளால் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்கான செலவினம் 14 கோடி 50 லட்சம் அமெரிக்க டொலர்களாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில் இது, விடுதலைப் புலிகளது வான்படைப் பலத்தை முடக்கிவிடுவது தொடர்பாக செலவிடப்படவுள்ள பாரிய யுத்த உபகரணங்கள் கொள்வனவு செய்யப்படும் விதத்திலான ஆயுத வியாபாரமே யாகும்.

வேடிக்கையொன்றாகக் கருதிக் குறிப்பிடுவ தானால், இது நவீன ரக "மெர்சி டிஸ்பென்ஸ்' காரொன்றை விலைகொடுத்து வாங்கி, மாட்டுவண்டியொன்றின் மீது மோத விட முயலும் வகையிலான செயற்பாடெனவே கொள் ளத்தக்கதாகும். உண்மையில் இத்தகைய நவீன தொழில்நுட்ப ஆற்றல்கள் கொண்டதும், பரிபூரண வலுமிக்கவையுமான யுத்த உபகரணத் தொகுதிகளைக் கொள்வனவு செய்வதானது விடுதலைப் புலிகள் வசமிருக்கும் செக்கோசிலேவேக்கிய தயாரிப்பான சின்இசற் (ஙூடிண த் 143) வகையைச் சேர்ந்த மிகச் சிறிய இலகுரக விமானங்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதற்குப் பொருத்தமானவைதானா என்ற சந்தேகமும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இஸ்ரேல் மற்றும் ஈராக்கில் இடம்பெற்றுவரும் யுத்தத்தின் அனுபவ பாடங்களைப் பின்பற்றிச் செயற்பட விழைவது புத்திசாலித்தனம் மிக்கதாகும். உதாரணமாக இஸ்ரேல் அரசின் வசம் நவீன ரக விமானங்கள், ஆற்றல் வாய்ந்த இராணுவ பலம் மற்றும் சிறப்புமிக்க புலனாய்வுத்துறை போன்ற சாதகமான வசதிகள் இருந்தபோதிலும் அவர்களால் ஹிஸ்புல்லா கெரில்லா குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவோ அல்லது லெபனான் பிரச்சினைக்கான தீர்வை எட்டவோ, அதுவுமல்லாது பலஸ்தீன விடுதலைப் போராளிகளின் எழுச்சியை முடிவுக்குக் கொண்டுவரவோ இற்றைவரை இயலாது போயுள்ளது. தற்போது அமெரிக்கா ஈராக்கில் முகம்கொடுத்து வரும் யுத்தரீதியிலான தோல்வியையும் இதற்குச் சிறந்ததோர் உதாரணமாகக் குறிப்பிட இயலும். ஆரம்பத்தில் இந்த யுத்தத்தை மிகக் குறுகிய காலத்தில் முடிவுக்குக் கொண்டு வந்து விடலாமென அமெரிக்கா கருதியது. அதுவுமன்றி மிகக் குறுகிய காலத்தில் ஈராக்கின் நிர்வாகத்தை ஈராக் தேசிய கவுன்சிலிடம் ஒப்படைத்துவிட முடியும் எனவும் அமெரிக்கா மார்தட்டிக் கொண்டது. ஆனால், இன்று ஈராக், அமெரிக்கா மற்றும் நேசநாடுகளின் படைகளின் மரண பூமியாக மாறியுள்ளது. அந்த வகையில் ஈராக்கில் அண்மைக் காலமாக ஈராக்கிய புரட்சிவாதிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் சிக்கி நாளாந்தம் சுமார் ஐம்பது பேருக்குக் குறையாத பொதுமக்கள் உயிரிழக்க நேர்வது எந்தவகையிலும்ஜீரணிக்க இயலாத துரதிஷ்டவசமான நிலைப்பாடாகும்.

ஆனால், இன்று வரையில் விடுதலைப் புலிகளது இராணுவச் செலவினங்கள் குறித்த எந்தவொரு விவரமும் வெளிவந்ததில்லை. ஆனால், அண்மைக்கால நம்பிக்கையான தகவல்களின் படி விடுதலைப் புலிகளது தேசியப் போராட்டம் தொடர்பான யுத்தச் செலவீனங்களின் மதிப்பீடு களுக்கு அமைய அவர்களது வருடாந்த வருமானம் 25 கோடி முதல் 30 கோடி வரையிலான அமெரிக்க டொலர்களாக இருக்கக் கூடுமெனக் கருதப்படுகிறது. இத்தகைய வருமானத்தின் ஒரு பகுதி விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களது பராமரிப்புக்கும் மற்றும் அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கான அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கும் செலவிடப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது. மீதமுள்ள தொகையில் பெரும்பகுதி அர்களது யுத்த நடவடிக்கை களுக்கு அவசியமான யுத்த உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்தப்படுவதாகவும் தெரியவருகிறது. (ஏதட்ச்ண கீடிஞ்டட்ண் ஙிச்ட்ஞிட) மனித உரிமைகளைக் கண்காணிக்கும் அமைப்பு என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் தகவல்களுக்கமைய விடுதலைப் புலிகள் அமைப் பினால் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வரி அறவிடும் திட்டத்தின் மூலம் வெளி நாடுகளில் வாழும் தமிழ் மக்களிடமிருந்து தமது இறுதிப் போராட்டத்துக்காக நிதி சேரிக்கப்படுவது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. அந்த வகையில் விடுதலைப் புலிகள் வெளிநாடு களில் வாழும் சகல தமிழ்க் குடும்பங்களிடமிருந்து 3ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வீதமும், வெளிநாடுகளிலுள்ள தமிழர்களது வர்த்தக நிலையங்கள் மற்றும் கோயில்கள் என்பவற்றிலிருந்து ஒரு லட்சம் அமெரிக்க டொலர் வீதமும் அறவிட்டுக் கொள்ளக் கூடும். இவற்றின் அடிப்படையில் இதுவரை விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களிடமிருந்து பல பில்லியன் கணக்கான நிதியைச் சேகரித்துக் கொண்டிருக்கக்கூடுமென நான் நம்புகிறேன். இவ்விதம் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களிடமிருந்தும் இந்நாட்டில் வாழும் தமிழ் மக்களிடமிருந்தும் விடுதலைப் புலிகளால் சேகரிக்கப்படும் நிதி வளத்துக்கும் மேலதிகமாகத் தமக்கெனத் தனியான வர்த்தகக் கப்பல் சேவைகளையும் அவர்கள் நடத்தி வருவதன் மூலம் பெருந்தொகை நிதியைச் சேகரித்து வருகின்றனர். இத்தகைய செயற்பாடுகள் மூலமாக விடுதலைப் புலிகளால் சேகரிக்கப்படும் பெருந்தொகை நிதி, தமது யுத்த நடவடிக்கைகளுக்குத் தேவையான கனரக ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக அவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

யுத்தம் மென்மேலும் நீடிக்குமானால் நாட்டின் பாதுகாப்புச் செலவீனம் மென்மேலும் பல மடங்குகள் அதிகரிக்கக்கூடும். அதன் மூலம் உருவாகத்தக்க பக்கவிளைவுகளுக்கு எப்போதும் முகம் கொடுத்து "தமது வாழ்நாள் முழுவதும் நலிவடைந்து' இந்நாட்டின் ஒட்டுமொத்தப் பொதுமக்களும் வாழ்க்கையில் தோல்வியடையும் நிலை ஏற்படும் என்பது திண்ணமே.

இந்த யுத்தம் மேன்மேலும் தொடருமானால் இந்நாட்டின் மாணவ சமுதாயத்தின் கல்வி வாய்ப்பு கேள்விக்குரியதொன்றாக ஆகிவிட நேரும். நாட்டின் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் பொதுப் போக்குவரத்து வசதிகள் அற்றுப்போக நேரலாம். ஒட்டுமொத்தமாக நோக்கும்போது இந்த முழு நாடும் நாளுக்கு நாள் உயர்வடையும் இந்த யுத்தச் செலவீனம் காரணமாக வெறுப்புற்று, விரக்தியடைவது மட்டுமல்லாமல் அவர்களது வாழ்க்கை நிரந்தரமாகவே மரணப் பொறியில் சிக்குண்டு சிரமப்படும் நிலைக்குத் தள்ளப்படநேரும். இத்தகைய முறையற்ற ஜீரணிக்க இயலாத நிலையின் மத்தியில், நாட்டின் ஒட்டுமொத்தப் பொதுமக்களும் தேசிய ரீதியில் நிறைவேற்றி முடிக்க வேண்டிய பெரும் பொறுப்பொன்றைக் கொண்டுள்ளனர். இந்த நாட்டின் ஒட்டுமொத்தச் சமுதாயம் இந்நாட்டில் வாழும் காலம் வரையில், அரசின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்குச் சாதகமாகத் தலையசைக்கும் விதத்தில் அரசின் பசப்பு வார்த்தகைகளில் மயங்கி அரசின் நடவடிக்கைள் அனைத்தையும் அனுமதிக்கும் விதத்தில் விட்டேத்திகளாக இனிமேலும் இருத்தலாகாது.

யுத்த உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்குச் செலவிடப்படும் இத்தகைய பாரிய நிதித் தொகை உண்மையில் இந்நாட்டின் பொதுமக்கள் செலுத்தும் வரிப்பணம் மூலம் சேகரிக்கப்படுவதேயாகும். அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு நாம் துணை போவதானது, இந்நாட்டின் எதிர்காலச் சந்ததியினர் நாம் துணைபோகும் இந்தப் பாவச் செயல்களுக்கான பலாபலன்களை எதிர்காலத்தில் அனுபவிக்க வழிவகுக்கும். *

தமிழில்: ராஜா

http://sudaroli.com/pages/special/070720/01.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.