Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடிக்கான கடிதம், 13ம் திருத்தம், இலங்கை-இந்திய ஊடகங்களின் நிலைப்பாடுகள். - யோ.திருக்குமரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1

india_srilanka_china1.jpg

தினக்குரலின் பொங்கல் வெள்ளி இதழ் (14.01.2022) தனது தலைப்பு செய்தியாக, (கொட்டை எழுத்துக்களில்) பின்வரும் செய்தியை தீட்டியிருந்தது: “மோடிக்கான கடிதம் முற்றாக மாற்றம்” கடிதம் இறுதியாக்கப்பட்டு, தினங்கள் கழிந்த நிலையில், மேற்படி ‘கொட்டை எழுத்தை’, ‘தலைப்பு செய்தியாக’ வாசிக்கும் வாசகனில், மேற்படி செய்தி பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்துவதாகவே இருக்கும். ஆனால், இதனைவிட அடுத்த அடியே, செய்தியாளரின் மரண அடி கொடுக்கும் அவாவினை பேசுவதாய் இருந்தது: “இதனை செய்தது தமிழரசு கட்சியே – சுமந்திரன்”

கிட்டத்தட்ட, மூன்று பத்திகளாக (Columns) ஓடிய, 71 வரிகொண்ட, மேற்படி செய்தியில், சுமந்திரனால் ஆற்றப்பட்டதாக கூறப்படும் கூற்றை, முழுமையாக வாசித்து பார்த்தால், இக்கூற்றின் 71 வரிகளில், கடைசி ஆறே ஆறு வரிகள் மாத்திரமே இக்கடித தயாரிப்பில் தமிழரசு கட்சி இடைநடுவே ஈடுபட தொடங்கியது என்பதும், இடைநடுவே ஏற்பட்ட அத்தகைய பங்களிப்பை தொடர்ந்து, கடித அமைப்பின் நோக்கம் - அதன் கோரிக்கை – அதன் தலையங்கம் - இவை மாற்றம் கண்டன என்பனவும், மேற்படி செய்தியில் சுமந்திரன் ஆற்றிய கூற்று கூறப்பட்டிருந்தது.

 

அதாவது, இந்நீண்ட அறிக்கையின் கடைசி மூன்றே மூன்று வரிகளில் மாத்திரமே தமிழரசு கட்சி, அறிக்கையில், இடைநடுவே செய்த, நோக்கம்-கோரிக்கை–தலையங்கம் வெளிப்படுத்தப்பட்டு இருந்தன. தமிழரசு கட்சி போன்ற கட்சியானது இடைநடுவே சேர்ந்த பின், - இம்மாற்றங்கள், எதிர்ப்பார்க்கக்கூடிய ஒன்றே. இது ஒரு புறம் இருக்க, இதன் மிகுதி பகுதியான, 65 வரிகளும் பின்வரும் விடயங்களை விஸ்தாரமாக விவாதித்தன.

 

i. அதாவது, அரசால் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள உள்@ராட்சி மன்றங்களின் பதவிகால நீடிப்பும் அதனுள் அடங்கி இருக்கும் ஜனநாயக விரோத செயல்கள் குறித்த நிலைப்பாடு.
ii. ராஜபக்~ ஆட்சி மேலும் நீடிக்கப்படாது முடிவுக்கு கொண்டுவர வேண்டிய தேவைப்பாடும் அது பொறுத்த தமிழரசு கட்சியின் நிலைப்பாடு.
iii. 13வது திருத்த சட்டத்தின் எல்லைப்பாடுகள் - அதன் முழுமையான அமுலாக்கம் - அதற்கு மேலாக - ஓர் அர்த்தமுள்ள அதிகார பகிர்வின் தேவைப்பாடு என்பனவும் இவற்றை உள்ளடக்கும் உட்பட மோடிக்கான கடிதமானது இக்கோரிக்கைகளை உள்ளடக்கிய விதங்கள் குறித்ததும் ஆகும்.

 

ஆனால், தினக்குரலானது, கிட்டத்தட்ட ஆறு நீண்ட பந்திகளாக விரியும் மேற்படி செய்திகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, கடைசி பந்தியின் கடைசி ஆறே ஆறு வரிகளை, சிக்கென பிடித்து தனது கொட்டை எழுத்துகளால், மேற்படி செய்தியை, தனது தலைப்பு செய்தியாக்கியுள்ளது. விடயம்: இது தற்செயலாக நடக்கும் ஓர் நிகழ்ச்சி அல்ல என்பதே. இங்கே திட்டமிட்ட, ஓர் நுண் அரசியலின் செயற்பாட்டை நாம் பார்க்க கூடியதாக உள்ளது என்பது தெளிவு. தமிழர் கூட்டமைப்புக்குள், ஒரு வித குத்துவெட்டை உருவாக்கும் நோக்கம் கொண்டு இப்படியான தலைப்பு செய்தி இடப்பட்டுள்ளதோ என்று ஐயப்படுவதற்கு இங்கே வழியுண்டு. அதாவது சுமந்திரனை இலக்கு வைத்து அடிக்கும் அவா ஒரு புறமாய் இங்கே இருக்க, என்றாலும், மோடிக்கு கடிதம் எழுதுவதற்காக ஒன்று கூடியுள்ள கூட்டமைப்பின் ஒன்று திரள்வுக்கிடையே பிளவுகளை தோற்றுவிக்கும் நுண் அரசியலின் நோக்கம் இங்குள்ளதோ என்ற கேள்வி இங்கே எழுவதும் தவிர்க்க முடியாததாகின்றது. அதாவது, கிட்டத்தட்ட சில மாதங்களின் முன்னர் தினக்குரலின் சார்பாக பேராசிரியர் சூரிய நாராயணனை, யதீந்திரா பேட்டி கண்ட விதத்திலேயே, தற்போதைய மேற்படி செய்தியும் உள்நோக்கம் கொண்டு தலைப்பு செய்தியாக பிய்த்தெடுக்கப்பட்டு அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்வுக்குள்ளாக்கப்பட்டு பிரசுரமாகியுள்ளதா என்ற கேள்வியும் எழவே செய்கின்றது.

 

சூரிய நாராயணனின் பேட்டியின் போது, யதீந்திரா, பேராசிரியர் சூரிய நாராயணனிடம் தமிழர் கோரிக்கையின் பின்னடைவுக்கு காரணம் பிராமணர்கள் தான் என்பது குறித்து கேட்டுவிட்டு (சீண்டிவிட்டு) பதிலை எதிர்ப்பார்க்கையில், சூரிய நாராயணன் “தான் ஒரு பாலகாட்டு பிராமணன்” என்பதனையும், ‘இதனை உங்கள் நண்பர்களிடமும் கூறி வையுங்கள்’ என்று ஏட்டிக்கு போட்டியாக பதிலளித்த விதமும், பேட்டி எடுத்தவரின் மன அடிதளத்தில் மறைந்து கிடந்த சீண்டிவிடும் மனோபாவத்தையும் இது கோடிட்டு காட்ட தவறவில்லை. ஓர் இந்திய எதிர்ப்புணர்வை, திட்டமிட்ட ரீதியில், தூண்டிவிடும் செய்கை, காலம் காலமாக, தமிழ் அரசியலில் தேங்கி இருந்தாலும், இது இங்கே மேற்படி சீண்டலால் கச்சிதமாக தோற்றுவிக்கப்படுகின்றதோ போன்ற ஐயப்பாடே ‘இக்கொட்டை எழுத்து’ பிரசுரத்தாலும் ஏற்பட செய்கின்றது எனலாம். இச்செயற்பாடுகளுக்கு, ‘தினக்குரல்’ ஓர் பத்திரிகை என்றளவில், ஒரு புலம்பெயர் சந்தை அதற்கு கைகொடுக்கும் என்பதனை விட, மேற்படி செயற்பாட்டிற்கு, சந்தையை மீறிய, ‘ஒரு புலம்பெயர் அரசியலும்’ மேற்படி செயற்பாட்டிற்கு தோதாக அமைந்து பக்கபலமாய் நிற்கின்றதா என்பதிலேயே ‘இக்கொட்டை எழுத்து’ செய்தி உள்ளடக்கும் நுண் அரசியல் ஆகின்றது. அதாவது, ஒரு புலம்பெயர் அரசியலால் தூண்டுவிக்கப்படக்கூடிய தீர்க்கமான ஓர் நுண்அரசியலின் வெளிப்பாடு, தனது நீண்ட ஒரு தொடர்பாடலை கொண்டே, இங்கே, இயங்குவதாய் உள்ளது எனலாம்.

 

இவ்வகையில், அண்மையில் 13வது திருத்தம் தொடர்பிலும், தமிழ்தேசிய கேள்விகள் தொடர்பிலும் அனைத்துலக ஈழத்தமிழர் வெளியிட்டுள்ள மக்களவை அறிக்கையானது (10.01.2022:தமிழன்) இதனுடன் நெருக்கமாய் இணைத்து, ஒப்பிட்டு பார்க்க கூடியதே. மிக நீண்ட, இம்மக்களவையின் அறிக்கையானது, 13வது திருத்த சட்டத்தை முழுமையாக நிராகரிக்கின்றது என்பதே மேற்படி அறிக்கையின் இரண்டு வரி சுருக்கமாகும். இவ் அடிப்படையில் பார்க்கும் போது, இதற்கு நேர் முரணாக, 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த கோரும், மோடிக்கான கடிதம் என்பது மேற்படி மக்களவை அறிக்கை முன்வைக்கும் நிலைப்பாட்டோடு நேரடியாக முரணுறுகிறது என்பது தெளிவு. இச்சூழ்நிலையிலேயே பின்வரும் இரு கேள்விகள், தினக்குரலின் மேற்படி ‘கொட்டை எழுத்து’ செய்தியில் எழுவதாய் உள்ளன.

i. ஒன்று, மேற்படி தலைப்பு செய்தியாக வடிவமைக்கப்பட்ட பிரசுரமானது, தனது தனிப்பட்ட சந்தை தேவைக்காக அல்லது இது போன்ற தனிப்பட்ட பொருளியல் தேவைக்காக, அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒரு ‘சிண்டுமுடிப்பை’ ஏற்படுத்தும் நோக்கு கொண்டு பிரசுரிக்கப்பட்டுள்ளதா?
ii. அல்லது, மேற்படி ‘தலைப்பு செய்தியானது’, புலம்பெயர் அரசியலை முன்னெடுக்கும் அல்லது நடைமுறைப்படுத்தும் ஒரு அரசியல் அவாவின் பின்னணியில் இயங்குவதாய் உள்ளதா?

மேற்படி இரு கேள்விகளும், இக் கொட்டை எழுத்து தலைப்பு செய்தி, விரும்பியோ விரும்பாமலோ, அரசியல் அவதானிகளிடையே இன்று, ஆழமாய் எழுப்பாமல் இல்லை. சுருக்கமாய் கூறினால், குறித்த ஒரு அரசியலையும், அதனடியாய் பிறந்த சிண்டு முடிப்புக்கான தனது அவாவையும், இத்தலைப்பு செய்தி உள்ளடக்குகின்றதா என்பதே கேள்வியாகின்றது. அதாவது, ஒரு முள்ளிவாய்க்கால், ஒரு கைதிகள் நிலவரம், ஒரு காணாமல் போனோரின் அவலங்கள் என காலங்காலமாய் முடிவற்று தொடரும் எண்ணற்ற தமிழர் பிரச்சினைகளை பின்னணியாய் கொண்டு பார்க்குமிடத்து இந்நுண் அரசியலின் செயற்பாடும் நோக்கமும், அரசியல் தளத்தில், விஸ்தாரமாக வாதிக்கப்படுவதும் ஆராயப்படுவதும் தேவையான ஒன்றாகின்றது. போதாததற்கு, மலையகத்தை “சேமிப்பு சக்தியாக” கொள்ளும் நடைமுறையையும் இங்கே சேர்த்து கவனத்தில் கொள்ளும் போது, இத்தேவைப்பாடானது, என்றை விட, இன்று, அதிகரிக்கவே செய்கின்றது என்பதிலும் கருத்துபேதம் இல்லை.

2

சுயநிர்ணய உரிமையை கோருவது என்பதின் உண்மையான அர்த்தப்பாடு, 13ஐ நிராகரிப்பதுதான், என்பது (ஒரு பிரிவினரால்) முன்வைக்கப்படும் தேசிய கோட்பாடாக, மிக தெளிவாக பரிணமிப்பதாக உள்ளது. உதாரணத்திற்கு மேற்குறிப்பிட்ட மக்களவை அறிக்கையையே எடுத்து நோக்குவோமானால், அதனது கூற்று பின்வருமாறு அமைந்து கிடக்கின்றது:

“… 13ம் திருத்தம் … … அரசியல் தீர்வை வழங்குவதற்கான “தொடக்க புள்ளியாக” கூட கருத முடியாது… … 13வது திருத்தம், ஈழத் தமிழர் தேசத்தின் அத்தியாவசிய கூறுகளை சிதைக்கும் மாகாண முறைமையை வழங்குவதோடு இச்சட்டமூலம் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்தை நிரந்தரமாக… (பிரித்து) … இங்குள்ள சுயாட்சி முறையை முற்றாக இல்லாதொழிக்கும் நோக்கம் கொண்டது…”

“… தமிழ் அரசியல்வாதிகள், 13ஐ, ஒரு ஆரம்ப புள்ளியாக கூட இல்லை என்பதை உணர்ந்து… அரசியல் தீர்வை அனைத்துலகத்திடமும் முன்வைக்க வேண்டும்…” (தமிழன்:10.01.2022)

3

ஆனால், இப்படியாக, 13ஐ நிராகரிக்கும் வேலைத்திட்டம் என்பது எமது தமிழ் அரசியலுக்கு ஒன்றும் புதுமையானதல்ல. விக்னேஸ்வரன், நிலாந்தன் முதல் யோதிலிங்கம்-திபாகரன் வரையிலும், எண்ணற்ற, பல்வேறு வகைப்பட்ட அரசியல் முகங்களால், வௌ;வேறு வடிவங்களாலும் வார்த்தைகளாலும் இவை காலந்தொட்டு முன்னெடுக்கப்பட்டே வந்திருக்கும் ஓர் அரசியல் செயற்பாடாகத்தான் இது இருக்கின்றது. இவ்வேலைத்திட்டமானது, அடிப்படையில், மேலே கூறியபடி, 13ஐ நிராகரிக்க வேண்டிய அவசியத்தை முன்னிலைப்படுத்துவதாய் அமைகின்றது. இருந்தும், சுய நிர்ணய உரிமையை கோருவது பல்வேறு தரப்பினருக்கும் (சுமந்திரன் உட்பட) பொதுவானதுதான் எனினும், இதன் நடைமுறை சாத்தியப்படுத்தல், சில தரப்பினரை பொறுத்தவரை, வேதனை தரும் வகையில் கனவு நிலை சார்ந்ததாகவே அமைந்து போகின்றது. மேலும், இதுவே சிக்கலை தோற்றுவிக்கும் விடயமுமாகிறது.

உதாரணமாக, விக்னேஸ்வரன் அவர்கள், வட மாகாண சபையின் முதலமைச்சராக பதவியேற்றது முதல் இன்று, மேற்படி, உலக மக்களவை, தமது அறிக்கையில் கூறி வைத்ததற்கிணங்க, “ஒரு நகர சபைக்குள்ள சுயாதீன அதிகாரங்கள் கூட மாகாண சபைக்கு இல்லை” என்பதனை நிரூபிக்கும் பொருட்டு மாகாண சபை செயற்பாடுகளை வினைத்திறனற்றதாக மாற்றுவதில் மும்முரம் காட்டியும், “இரட்டை நகர் ஒப்பந்தங்களை” பறந்து, பறந்து செய்வதற்கூடு, பிரச்சினைகளை, உலக மயமாக்குகிறேன் என்ற கோதாவில் செயற்பட்ட விதங்களும், தமிழர் அரசியல் பரப்பில் மறக்கமுடியாத விடயங்கள்தான். மறுபுறமாய், துரதிர்ஸ்டவசமாக, மக்களின் இருப்புநிலை என்பதும் இவ் அசியலின் கனவு நிலையோடு கைக்கோர்க்க முடியாமல் போனது என்பதும் கடந்த அல்லது நமது காலங்களில் நாம் பார்க்க கூடிய ஒன்றாகவே இருக்கின்றது.

உதாரணமாக, மாகாண சபை தேர்தலில் பெரும் வெற்றி வாகை சூடியிருந்த விக்னேஸ்வரன் கடந்த பாராளமன்ற தேர்தலில், தட்டு தடுமாறி பாராளமன்றத்துக்குள் நுழைந்துக் கொண்டதையும் எமது அரசியலானது பிரதிபலிக்காமல் இல்லை. இதற்கு நேர் எதிர் முரணாக, அங்கஜன் மிக வலு சுலபமாக வெற்றி வாகை சூடி பாராளமன்றத்துள் புகுந்ததும், தொடர்ந்து விக்னேஸ்வரனின் கொரோனாவுக்கான ‘சுக்கு காப்பி’ கோரிக்கை தமிழ் மக்களால் பாராளமன்ற தேர்தலை போலவே, ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டு தூக்கியெறியப்பட்டதும், எம் கண் முன்னே நிகழ்ந்த காட்சிகளே ஆகும். இவ் வேதனையான சூழ்நிலையே, அண்மையில் வடக்கில் நடந்தேறிய ஒரு கருத்தரங்கிலும் மிக ஆழமாக பிரதிபலிக்க செய்தது. இக்கருத்தரங்கில் ………… கருத்துரைத்த திரு.வித்தியாபரன் அவர்கள் இதனையே வேறொரு மொழியில் பின்வருமாறு கூறியிருந்தார்:

“கடந்த தேர்தலில் கிட்டத்தட்ட 43000 வாக்குகளை வெற்றிலை சின்னத்துக்கு போட்டவர்களுக்காகவா எமது இளைஞர்கள் சயனைட் குப்பிகளை கழுத்தில் அணிந்து கொண்டு திரிந்தனர்” என்பது அவரது கேள்வியின் அடிப்படையானது. தொடர்ந்தாற்போல் அவர், “எமது மக்கள் களைத்து விட்டார்கள்” என்ற உண்மையினை கூறாமல் விடவும் இல்லை.

கேள்வி: மக்களை இப்படியாக களைக்க செய்தது – யார் அல்லது எது என்பதுவேயாகும். அதாவது, கனவு நிலை அரசியலா, எமது மக்களை இப்படி களைக்க செய்துள்ளது, என்பதுவே வினாவாகின்றது. அதாவது, நடைமுறைகளை நிராகரிப்பதன் மூலம் ஏற்படக் கூடிய பாதகங்களையும், விளைவுகளையும் மேற்படி உரை, ஒரு வகையில் பிரதிபலிக்க தவறவில்லை என சுருக்கமாக கூறலாம். இதனையே வேறு வார்த்தையில் கூறினால், நடைமுறைகளை நிராகரிக்கும் செயற்பாடு என்பது, பாரிய பின்னடைவுகளை, காலந்தோறும், எமது அரசியல் பரப்பில், மீள மீள அரங்கேற்றி வந்தாலும், அவற்றிலிருந்து கற்பதற்கான செயற்பாடு அல்லது ஏற்பாடு உள்ளதா என்ற கேள்வியே இங்கே எழக்கூடிய அடிப்படை கேள்வியாகின்றது. இதற்கு ஓர் சிறு உதாரணமாக சுமந்திரனின் அறிக்கை (தலைப்பு செய்தியாக!), பிரசுரமாகிய அதே தினக்குரல் இதழில் (14.01.2022) ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றும் அதே முதல் பக்கத்திலேயே, அருகருகாய், பிரசுரமாகியிருந்தது:

“நான் இரண்டு தடவைகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். 1999 இ;ல் சந்திரிக்கா மீது குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டது. அதனால் முடிவும் மாறியது. அதன் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் என்னை தோற்கடிப்பதற்கு பிரபாகரனே தீவிரமாக செயற்பட்டார்”

இது உண்மையாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால், இது உண்மை என்றால், சதுரங்கத்தில் நகர்த்தப்படும் காய்கள், அதற்குரிய நடைமுறை விதிகளில் இருந்து பிறழ்வுபடும் போது ஆட்டங்களின் தோல்வியை அவை நிச்சயித்து தீர்த்து விடுகின்றன எனும் உண்மையினை இது மீண்டும், மீள ஒரு தடவை நிரூபிப்பதாய் உள்ளது எனலாம்.

4

மேற்படி கருத்தரங்கில் உரையாற்றிய ஆய்வாளர் நிலாந்தன் அவர்கள் தமிழர் கோரிக்கையானது தனது வெற்றி இலக்கை அடைய ஓரணியில் நிற்பது அதிமுக்கிய தேவை என்ற வகையில் தன் வாதத்தை அமைத்திருந்தார். தமிழர் ஓரணியில் நிற்க வேண்டும் என கூறிய அவர் அது எந்த அணி என்பதனை, அவர் தனது உரையின் போது தவிர்த்துக் கொண்டார், என்பதனையும் கூறி ஆக வேண்டும். இருந்தும், சுமந்திரன்-கனக ஈஸ்வரன் போன்றோரின் அண்மித்த அமெரிக்க பயணத்தை நாம் கவனத்தில் கொள்ளும் போதும், தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் அண்மித்த இந்தியா நோக்கிய நகர்வுகளை ஊன்றி கவனிக்கும் போதும், நிலாந்தனின் ஓரணியில் நிற்க வேண்டும் என்ற கூற்று அந்நியம் கொள்வதாய் இல்லை என்பது தெளிவு.

இரு தோணியில் கால் வைப்பது ஆகாது என்பது பொதுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அரசியலில் இந்நடைமுறையானது சகஜமானதுதான் என்பதனை பாகிஸ்தான், துருக்கி முதல் தென்னிலங்கை வரை கடைபிடிக்கும் சாத்தியப்பாடான நகர்வுகளாகின்றன. அனால் இவற்றை எந்த விகிதாசாரத்தில், எந்த நம்பகத் தன்மையோடு, எத்தகைய நடைமுறை நகர்வுகளோடு கைக் கொள்கின்றார்கள் என்பதிலேயே வித்தியாசமும், வெற்றியும், சாதகமும், தோல்வியும் பிறப்பெடுக்கின்றன எனலாம். மறுபுறத்தில், “ஓரணியில்” என்ற கூற்று இலங்கை சூழலில் சாத்தியப்படக் கூடிய ஒன்றுதானா என்பதுவும் இங்கே கேள்வியாகின்றது. இவை நடைமுறை நகர்வுகளின் நுணுக்கமான அவதானங்களை கோருகின்றது.

5

ஓர் இந்திய நிராகரிப்பின் முதற்படி என்பது, நடைமுறையில், 13ஐ நிராகரித்தலே என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. மிக அண்மையில் கூட மன்னார் பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவரும் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் திரு.சிவகரன் அவர்களும் இக்கூற்றையே வேறு வார்த்தைகளில் கூறியிருந்தார்:

“13வது திருத்தத்தை நடைமுறையில் கோருவது தேவையில்லாத ஒன்று. இதனை தீர்வுக்கு ஆரம்ப புள்ளியாக கூட கருத முடியாது”

கூடவே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடித வரைபு குறித்து கூறுகையில், அவர் பின்வருமாறு கூறி நின்றார்;:
“13வது திருத்தத்தின், நடைமுறையை, கோரி எழுதுவதால், இந்திய நலனை பேணி விட முடியாது” (16.01.2022:தினக்குரல்)

இக்கூற்றுக்களின் பின்புலம் எந்த அரசியல் சார்ந்தது என்பதனை விளக்க தனியாக ஒரு விரிவுரை நடத்த தேவையில்லை. ஆனால், நடைமுறையோ இக்கூற்றுக்களில் இருந்து வெகுதூரம் விலகி பயணித்து செல்வதாகவே இருக்கின்றது.

6
அதாவது 13ஐ நிராகரிக்கவும், அதற்கூடு ஒரு இந்திய பாத்திரத்தை நிராகரிப்பதும், எப்படி ஒரு புலம்பெயர் அரசியலால், அழுத்தமாக முன்வைக்கப்படுகின்றதோ, அதே திணுசில் அல்லது அலைவரிசையில், இலங்கையின் அதிகார மையங்களும் 13ஐ நிராகரிக்க முற்படுவது வேடிக்கையாகின்றது. அதாவது, புதிய அரசியலமைப்பின் தோற்றப்பாடு என்பது பல்வேறு நோக்கங்களை அடிப்படையாக கொண்டு இயங்கினாலும், சென்ற அரசியலமைப்புகளினூடு தோற்றுவிக்கப்பட்ட, ஒரு 13வது திருத்த சட்டத்தை நிராகரித்து கொள்ளவும், அதற்கூடு, ஓர் இந்திய தலையீட்டை அப்புறப்படுத்திக் கொள்ளவும் வழி செய்யக் கூடும் என்பதுவும், தென்னிலங்கையின் பல்வேறு அரசியல் ஆய்வாளர்கள், ஏற்கனவே கூறப்பட்டு வந்துள்ள ஒரு விடயமாகும். (எமது விக்னேஸ்வரன் ஐயா உட்பட).

இவை, விடயங்களின் முக்கியத்துவங்களையும், தீர்மானகரமான நகர்வுகளின் சாரங்களையும் சுட்டிக் காட்டுவதாய் உள்ளன. இவை, எம்மை மீளவும் எமது சூழலுக்கு அல்லது எமது யதார்த்தத்திற்கு, நெருக்கமாக–மிக நெருக்கமாக கொண்டு வந்து சேர்ப்பதாய் உள்ளன.

7

அமெரிக்கா ஒரு புறமும், இந்தியா மறுபுறமும், இடைநடுவே சீனத்தின் வரவுகளும்- இலங்கை விவகாரங்களை (சரியாக கூறினால் சிறுபான்மையினரின் விடயங்களை) மேலும் சிக்கலாக்கி விடுகின்றன. (கூடவே மத்திய கிழக்கின் மறைமுக கரங்களையும் ஊன்றி கவனிக்கும் போது). இதனாலோ என்னவோ பேராசிரியர் கணேசலிங்கன் கூட மேற்படி கருத்தரங்கில் பின்வருமாறு கூறியிருந்தார்: “நீங்கள் இந்தியாலிருந்து அமெரிக்காவை தொடப்போகின்றீர்களா அல்லது அமெரிக்காவிலிருந்து இந்தியாவை தொடப்போகின்றீர்களா என்பதனை நிச்சயித்து கொள்ளுங்கள்” என. அதாவது இரண்டின் தொடர்பாடல்களும் தேவை எனக் கூறவரும் அவர், அதே வேளை, எதற்கு முக்கியத்துவம் தரப் போகின்றீர்கள் என்பதனையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் என்பதே அவர் கூறவரும் விடயமாகின்றது. இது மிகப் பெரிய கேள்வியாகின்றது. ஏனெனில், இக்கேள்வியானது, தென்னிலங்கை எங்கே காலூன்றி நிற்கின்றது என்ற கேள்விக்கு எம்மை இட்டுச் செல்வதாய் அமைகின்றது. இதற்கான பதில் எப்போதுமே எளிதில் கண்டுப்பிடிக்க முடியாதபடி, மறைத்தே வைக்கப்பட்டிருக்கின்றது-அதிகமான சந்தர்ப்பங்களில்.

8

india_srilanka_china2.jpg

இது ஒருபுறமிருக்க பேராசிரியரின் கூற்றானது, 13வது திருத்தம் சம்பந்தமாக ரவிகரனின் கூற்றோடும், கூடவே, உலக மக்களவை அறிக்கையோடும் முரண்படுவதாகவே தெரிகின்றது. இந்தியாவை கத்தரித்துவிடுதல் என்பது பல சக்திகளின் நெடுநாளைய ஆசையாக இருந்து வந்துள்ளது என்ற உண்மையை ஓர் அண்மைக்கால இந்திய ஆய்வாளர் விரிவான முறையில் எழுதியே இருந்தார். இவ்வகையில், அண்மித்த சீன வரவு தொடர்பிலும், சீனத்தூதுவரின் மூன்று தின யாழ் விஜயம் தொடர்பிலும், தூதுவரின் வடக்கின் பல்வேறு கேந்திர நிலையங்களுக்கான விஜயம் தொடர்பிலும் - நல்லூர் ஆலயம் முதல், சேது சமுத்திரம் - மற்றும் கச்சை தீவு – மணலை தீவு வரையிலான அவரது விஜயங்கள் குறித்தும் இந்திய ஆய்வாளர்கள் விரிவாக ஆராய்ந்தே உள்ளனர் எனலாம். அண்மித்த ஓர் இணைய வழி கலந்துரையாடலின் போது திரு.கோலால ஸ்ரீனிவாஸ் அவர்கள் விஸ்தாரமாக மேற்படி உண்மைகளை வாதிக்க பின்வாங்கவில்லை. இதன் போது ஓர் அடிப்படை கேள்வியையும் அவர் எழுப்ப தவறினார் இல்லை. அதாவது இவ்விஜயங்களின் முக்கியத்துவம் ஒருபுறம் இருக்க, இவ்விஜயங்களுக்கான ஒழுங்குகள் என்பன யாரால் செய்யப்பட்டது அல்லது எதற்காய் தோற்றுவிக்கப்பட்டது, யாருடைய கோரிக்கையின் பின்னணியில் இவ்விஜயங்கள் மேற்கொள்ளபட்டன, என்பது அவரது கேள்விகளின் சாரமாகியது.

இவற்றின் பின்னணி அல்லது வேர் எவை அல்லது யாவை என்பது போன்ற மிக கனதியான கேள்வியை அவர் பங்கேற்றாளர்கள் முன்னிலையில் முன்வைக்க தவறவில்லை. (புதிய தலைமுறை:நேர்படபேசு நிகழ்ச்சி: இனியவனின் கலந்துரையாடல்). மேற்படி கலந்துரையாடலில் திரு.சுமந்திரன் அவர்களும் பங்கேற்றார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க ஒன்றே. திரு. கோலால ஸ்ரீனிவாஸ் அவர்கள், சீன தூதுவரின் மேற்படி கேந்திர முக்கியத்துவங்களுக்கான விஜயமானது, சீனம், இந்தியாவினை சவாலுக்கு இழுப்பது – அல்லது – சீனம் இந்தியாவிற்கு ஓர் எச்;சரிக்கை விடுப்பது–என்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் அத்தகைய செயற்பாட்டினை ஊக்குவிக்கும் ஓர் சக்தியாக அல்லது காரணியாக அவர், இலங்கை ஆட்சியாளர்களை இனங்காண முற்பட்டார், என்பதிலேயே அவரது கூற்றின் முக்கியத்துவம் அடங்கி போகின்றது எனலாம். அத்தகைய பரிணமிப்புக்களை இலங்கைக்கு தருவதற்கான ஒரு பின்னணியை வேறு வல்லரசுகள் வழங்க கூடும் என்பதுவும் மேற்படி தர்க்கங்களின் தொடர்ச்சியாகின்றது. அதாவது, சுருக்கமாய், மிக சுருக்கமாய் கூறுவோமானால் மேற்படி கோலால ஸ்ரீனிவாசனின் கருத்துப்படி இப்பிராந்தியத்தில் வல்லரசுகளின் போட்டி என்பது முன்னரே கூறியபடி தன் உச்ச நிலையை தொட்டாற் போல் தோன்றுவதாய் உள்ளது. அதாவது, வடக்கு நோக்கிய சீன வரவு என்பது, தென்னிலங்கை மாத்திரமல்லாமல், ஏனைய வல்லரசுகளும், சம்பந்தப்பட்ட ஒன்றே என்பது, கோலால ஸ்ரீனிவாசன் முன்வைக்ககூடிய முடிவாகின்றது.

இச்சூழ்நிலையிலேயே 13வது திருத்தத்தின் நிராகரிப்பு என்ற அரசியலும் எம்மிடை வந்து சேர்கின்றது. அதாவது, 13ஐ நிராகரித்தல் என்ற கோரிக்கையானது,(அல்லது இந்தியாவை கத்தரித்தல் என்ற கோரிக்கையானது) தீர்க்கமான ஒரு அரசியல் வெளிப்பாடாக மாத்திரம் இராது, வல்லரசு போட்டிகளின் கயிற்றிழுப்பில் ஓர் சர்வதேச பரிமாணத்தை அடைந்து கொள்வதாக இன்று அமைந்து விடுகின்றது. இக்காரணத்தினாலேயே, சுமந்திரனின் அமெரிக்க வரவழைப்பும், இந்தியாவை கத்தரிப்பது என்பதும் ஒன்றுக்கொன்று தொடர்புபட்ட விடயங்களா என்ற கேள்வியை இந்திய ஆய்வாளர்கள் வௌ;வேறு விதங்களில் இன்று எழுப்ப தொடங்கியுள்ளனர். இதன் உண்மை பொய்மை நாம் அறியாதது.

இருந்தும், அமெரிக்காவில் இருந்து வந்ததும் வராததுமாய் இடம்பெற்ற, முக்கிய நகர்வுகளின் தலையானது, இந்திய பயணத்தை தமிழ் தரப்பு பின் தள்ளிப் போட முடிவு செய்தது என்பதேயாகும். இப்படியாக பின்தள்ளி போட்டதற்காக, கூறப்பட்ட காரணங்களை “போலிக்காரணங்கள்” என இலங்கையின் தமிழ் ஆய்வாளர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளனர். (உதாரணம்:பேராசிரியர் கணேசலிங்கன் கட்டுரை) மறுபுறத்தில், இவ்இந்திய “கத்தரிப்பின்” பின்னணி வேர்கள் யாவை என்பதனையும் ஆய்வாளர்கள் ஏற்கனவே அலச முற்பட தயங்கினர் இல்லை எனலாம். குறிப்பாக, மேற்படி கத்தரிப்பில், அமெரிக்க செல்வாக்கு அல்லது புலம்பெயர் செல்வாக்கு பாத்திரம் வகித்ததா–வகிக்கின்றதா என்பதே அவர்கள் எழுப்பும் கேள்வியின் அடி நாதமாகின்றது. இதனை அடுத்து வந்த, ஓர் சூழ்நிலை பின்னணியிலேயே, மோடிக்கு கடிதம் அனுப்புவதற்கான தயாரிப்புகளும் இடம்பெற்றதாய் அமைந்தன. அதாவது, ஆரம்பத்தில் இந்திய பயணத்தை பிற்போட்ட பிறகு, மீள இப்போது தமிழர் பிரச்சினையில் இந்தியாவை மீள் ஈடுபாடு கொள்ள செய்ய கோருவது என்பது நடந்தேறியது. ஒருவகையில், இச்சமாச்சாரங்கள் அனைத்தும் தர்க்க ரீதியானதே என்றும் கூறலாம். ஏனெனில் கடந்த யாழ்பாண பல்கலைகழக நினைவேந்தல் முதல் பொத்துவில்-பொலிகண்டி வரையிலான ஊர்வல முன்னெடுப்புகள் வரை ஏதோ ஒரு வகையில் இந்தியாவின் அழுத்தங்களும் நகர்வுகளும் ஏதோ ஒரு வழியில் பிரயோசனமானதாகவே இருந்துள்ளன.

ஆனால், இதற்காக, இந்தியா தன்னலன் கருதாமல் விடயங்களை முன்னெடுக்கின்றது என நம்பிக் கொள்வது என்பது, எம்மை நாம் ஏமாற்றுவதற்கு ஒப்பானதாகவே இருக்கும், என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை. உண்மையை கூறினால், அண்மைக்காலங்களில் இந்தியா, இலங்கை தமிழர் பிரச்சினையில் தன்னலனை சம்பந்தப்படுத்திக் கொள்ளாமல் என்றுமே இருந்ததில்லை என இந்திய ஆய்வாளர்களே இன்று பகிரங்கமாய் அறிவிக்க துவங்கியுள்ளனர் எனலாம். (பார்க்க:கேர்னல் ஹரிகரன்). அப்படியென்றால், இம்முரணை எப்படி நாம் கையாள்வது என்பது இன்றைய கேள்வியாகின்றது.

இத்தகைய ஓர் பின்னணியிலேயே பேராசிரியர் கணேசலிங்கன், 13வது திருத்தம் என்பது தமிழர் பார்வையிலும், இந்திய பார்வையிலும் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படக் கூடியதுதான் என்று கூறுகின்றார். அதாவது இந்திய பார்வையில் 13வது திருத்தம் ஒரு மேடை (Pடயவகழசஅ) எனவும் தமிழர் பார்வையில் தீர்வுக்கான ஒரு முடிவு எனவும் அர்த்தப்பட்டு வந்திருக்கின்றது என அவர் அபிப்பிராயப்படுவார். உண்மையாக இருக்கலாம். ஏனெனில், கடந்த ஜெனிவா கூட்டத்தொடரின் போதும் சரி – அல்லது அண்மைக்கால சிங்கிரில்லாவின் இலங்கை விஜயத்தின் போதும் சரி : இந்தியா, தனது இரு தளங்களாக (அல்லது அடிப்படைகளாக), தமிழர் பிரச்சினையையும் 13வது திருத்த சட்டத்தையும் மேடையாக்கி கொண்டாலும், பின்னணியில், திருகோணமலையின் எண்ணை குதங்கள் அமைந்து போவதோ அன்றி அதானி குடும்பத்தினர் எண்ணை அகழ்வுக்காக மன்னாரை சுற்றி மோப்பம் பிடிப்பதோ தவிர்க்க முடியாததாகின்றது. இருந்தும், இவ் அணுகுமுறை, ஒரு மேற்கத்தைய நலனுக்கு சாதகமானதா அல்லது பாதகமானதா என்பதே ஆய்வாளர்கள் இன்று எழுப்பும் அடிப்படை கேள்வியாகின்றது. அதாவது, ஞருயுனு பின்தள்ளப்பட்ட நிலையில் யுருமுருளு இல் இந்தியா இணைத்துக் கொள்ளப்படாத ஒரு சூழ்நிலையில், கயிற்றிழுப்பின் தன்மைகள், இன்று, மாற்றமடைந்ததாய் உள்ளன.

9
இச்சூழ்நிலையிலேயே, 13வது திருத்தத்தின் அகற்றல் என்பது இந்தியாவின் அகற்றல் என்பதனை நோக்காக கொண்ட ஒரு செயற்பாட்டில் இயங்குவதாக உள்ளது. இக்கூற்றில் உண்மை இருக்கலாம். ஏனெனில் 13வது திருத்தசட்டம் என்பது சர்;வதேச சட்ட விதிகளுக்கு உட்பட்டதால், இந்தியாவின் பிரசன்னத்தை அல்லது இந்தியாவின் பங்கேற்பை அல்லது இலங்கையிலான இந்தியாவின் ஸ்தானத்தை அங்கீகரிப்பதாகவே-(சர்வதேச ரீதியாக)-இருக்க கூடும். இதில் உண்மை இருக்கலாம். எனவேதான் இந்திய அகற்றல் என்பது, 13வது திருத்த சட்டத்தின் அப்புறப்படுத்தலை, தன்முன் நிபந்தனையாக கோருகின்றது. இதற்கேற்றாற் போலவே கேள்வியும் வடிவமைக்கப்படுகின்றது – கஜேந்திரகுமாரின் அரசியலா அல்லது சுமந்திரனின் அரசியலா என.

10
இலங்கை போன்ற ஒரு மிக சிறிய நாட்டில், அதிலும் முக்கியமாக, ஒரு கேந்திர ஸ்தானத்தில், புவியியல் ரீதியாக, தன்னை இருத்திக் கொண்டிருக்கும் ஒரு நிலைமையில், மிக சிறிய நாட்டிற்குள் இயங்ககூடிய அல்லது இருக்க கூடிய அரசியல் சக்திகள், வல்லரசுகளின் அழுத்தங்களினாலும் செல்வாக்குகளினாலும் பந்தாடப்படுவது தவிர்க்க முடியாததாகின்றது. உதாரணமாக, இலங்கை அரசை எடுத்துக் கொண்டால் கூட, அதனது விருப்பு-வெறுப்புகள்” கூட இவ் அரசுக்கு முற்றுமுழுதாய் “உரித்தானதொன்று” எனக் கூறிவைத்துக் கொண்டாலும், உண்மை நிலைமையோ வேறு விதமாய் இருக்கின்றது. உதாரணமாக நாட்டைச்சுற்றி ‘நாடகமாடி’, வட்டமடித்த சீன உரக்கப்பலுக்கு ஈற்றில் நட்டஈடு வழங்கப்பட்டதும், உரம் இறக்கப்பட்டதும் ஓர் நாடகம் என்று கொண்டால் கூட, அத்தகைய நாடகத்தை அரங்கேற்ற இலங்கை நிர்பந்திக்கப்பட்டு போனதா என்பதே கேள்வியாகின்றது. அதே போன்று துறைமுக நகரின் திறப்பு விழாவை அல்லது அங்கே இடம்பெறக் கூடிய முதலீடுகளையும் எடுத்துக் கொண்டாலும், சீனம் துறைமுக நகரை ஆரம்பித்து வைத்தது என்னவோ உண்மை என்றாலும், ஒரு கட்டத்திற்கு அப்பால், அதில் இடப்பட்ட கூடிய முதலீடுகள் சம்பந்தமாய் கூற முற்பட்டது, சீனம் அல்ல–ஆனால், அமெரிக்காவே என்பது ஆழமாய் அவதானிக்கத்தக்கதே.

ஓர் அரசின், நிலைமையே இவ்வாறு இருக்கும் போது நாட்டின் சிறுபான்மை இனங்கள் அதுவும் குழுக்களாக, சிதறுண்டு பிரிந்து போய் கிடக்கும் நிலையில் - அவர்கள் அழுத்தங்களை தாண்டி அல்லது அழுத்தங்களுக்கு தப்பி கருமமாற்றுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. இவ்வகையில் எமது மெல்கம் ஆண்டகையின் கூற்றுக் கூட சற்று அவதானிக்கத்தக்கதே. உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பானது இவ்அரசை எவ்விதம் ஆட்சிக்கு கொண்டுவந்தது என்பதனை ஜெப மந்திரம் போல அவர் காலங்காலமாய் இன்று உச்சரிக்க தொடங்கியுள்ளார். இச்செப உச்சரிப்பினை போன்றே, இவ் அரசை ஆட்சிக்கு கொண்டு வந்ததில், புலம் பெயர் அரசியலின் பங்களிப்பும் குறைந்தது என்று கொள்வதற்கில்லை.

இவ் அரசை ஆட்சிக்கு கொண்டுவருவதன் மூலம், இலங்கையில் ஒரு ஜனநாயக விரோத ஆட்சியை கட்டவிழ்த்து விட்டு, அது சர்வதேச மனித உரிமை சாசனத்தை சிதைக்குமாயிருக்கும் என்ற அடிப்படையில், சர்வதேசம் ஓடிவந்து, உடனே தலையிட்டு, தமிழருக்கு நீதி வழங்கி, அவர்கள் கேட்பதை எல்லாம் வழங்கி எம்மை கௌரவித்து விடும் என்பதே இவ் அரசியலின் எதிர்பார்ப்பு. ஆனால் இப்படியாக எதிர்பார்ப்புக்கள் எதிர்ப்பார்ப்புக்கள் என விழலுக்கு இரைத்த நீரானதுதான் எமது கடந்த காலம் கூறி நிற்கும் செய்தியாகின்றது. இவ்வகையில், மேலே கூறியபடி ரணிலின் கூற்று கூட, ஒரு சிறு உதாரணமாக ஆகக்கூடும். அதாவது ஆட்சிகள் அரங்கேறின –வீழ்ந்தன–சிறுபான்மை குழுக்களின் அந்தந்த அழுத்தங்களும், அவையவைக்கு, கொடிபிடித்து, பின் தோன்றி மண்ணுள் புதைந்தன. ஆனால், நாம் அறிய மறைப்பது, அவற்றின் பின்னாலேயே வல்லரசுகளின் வேர் ஆணித்தரமாக பற்றி பிடித்திருந்தது, என்பதனையே. இச்சூழ்நிலையிலேயே உலகத் தமிழர் பேரவையின் 13ஐ நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதே சாரத்திலான தினக்குரலின், சிண்டு முடிந்து விடும் கொட்டை எழுத்து செய்தியும் காணக்கிட்டுகின்றது.

11
இவற்றின் அடிப்படையிலேயே, வடக்கை நோக்கிய அண்மைக்கால சீன திரும்பலையும் நாம் ஆழ்ந்து அவதானிக்க வேண்டியுள்ளது. சீனத்தின் வரவை ‘நிராகரிக்கும் பார்வைகளும்’, சீனத்தின் வரவை ‘கையாண்டு பயன்படுத்த போகிறேன்’ என்ற பார்வைகளும் எம்மிடை உண்டு. இப்பின்னணியில், சீனத்தின் வரவென்பது, சீன நலன் சார்ந்தது என்பதனை விட இந்நகர்வுகளில் அமெரிக்க-இலங்கை நலனும் மறைமுகமாக செயற்பட்டு ஒன்றாக நிற்கின்றதா – அல்லது வேறு விதமாய் கூறினால்,இந்திய நலன் அகற்றப்படும் ஒரு திட்டத்தின் ஒரு பகுதியா இது என்ற கேள்வியும் இன்று முன்னிலை நோக்கி நகராமல் இல்லை.

இவ்வகையிலேயே இந்திய-அமெரிக்க கூட்டுறவு குறித்து கூறப்பட்ட திரு.கணேசலிங்கன் அவர்களின் கூற்று மீள மீட்டு பார்க்கத்தக்கது: கூறுவார்: “நீங்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியாவை தொட போகின்றீர்களா அல்லது இந்தியாவில் இருந்து அமெரிக்காவை தொட போகின்றீர்களா என்பதனை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்” என. அவரது கருத்து பிரகாரம், அமெரிக்க-இந்திய கூட்டுறவு சர்வதேச பரப்பில், எப்படி இருந்தாலும், “பிரதேசம்” என்று வரும் போது முரணுற்றதாய் அமையக் கூடும் என்பதே. இந்த அடிப்படையிலேயே, இந்திய நலன்களை இலங்கையில் இருந்து அகற்ற, ஒரு சீன நலன் பாவிக்கப்படுகின்றதா (ஒரு கட்டம் வரையிலும்) என்ற கேள்வி முன்னிலை நோக்கி நகர்கின்றது. (துறைமுக நகர் போன்று). இது தொடர்பில், விரிவாக ஆய்ந்துள்ள இந்திய ஆய்வாளர்கள், ஊடகங்களில், பாகிஸ்தானின் உதாரணத்தை சுட்டிக்காட்ட விடாமலும் இல்லை.

அதாவது, பாகிஸ்தானின் இந்திய வெறுப்பை உற்சாகப்படுத்தும் போக்குகளில் அமெரிக்காவினது போக்கு, சீனத்தின் போக்கை விட, ஒரு படி மேலானது என்று எண்ணுபவர்கள் உண்டு. இவர்கள் அண்மித்த யுருமுருளு ஒப்பந்தங்களில் இருந்து இந்தியா புறக்கணிக்கப்பட்டமையும் அல்லது ஞருயுனு ஒப்பந்தங்கள் பின்தள்ளப்பட்டமையையும், உதாரணங்களாக சுட்டிக்காட்ட தவறவில்லை. இதனுடன் கூடவே அண்மைக்கால புட்டினின் இந்திய வருகையையும் கிட்டத்தட்ட 28 ஒப்பந்தங்கள், (இஸ்ரோ அடங்கலாக) விண்வெளி ஒப்பந்தங்கள் செய்து கொண்டமையையும் உதாரணங்களாக காட்டுவர்.

இச்சூழ்நிலையிலேயே மேற்படி ‘கூற்றுக்கள்’ ஒப்புநோக்க வேண்டிய ஒரு யதார்தத்தை சுட்டிக்காட்டி நிற்கின்றன என்பதெல்லாம் இவர்களது வாதமாக இருக்கின்றது. இதனாலேயே சீனத்தின், இந்தியா நோக்கிய விரோத பார்வை அல்லது இலங்கையிலிருந்து சீனத்தின் இந்தியா நோக்கிய சவால் என்பது கவனமாக நோக்கத்தக்கது. கோலால ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்புவது போல் சீன தூதுவர் மூன்று நாள் விஜயமாக வடக்கிற்கு வந்ததும் கேந்திர ஸ்தானங்களை பார்வையிட்டதும் முக்கியமானதல்ல. அவரது பார்வையில் அவற்றை யார் ஒழுங்கு செய்தது என்பதே முக்கியமானது என்கிறார் அவர். சீனத் தூதுவரின் விஜயத்தின் பின்னால் அல்லது இந்தியா நோக்கிய அதனது சவாலின் பின்னால் ஜெயசங்கர் தனது டுவீட்டரில் தெரிவித்திருந்தார்: ‘இந்தியா, இலங்கையுடன் நெருங்கி ஒத்தழைக்கும்’ என்ற ரீதியில் இந்த ஏற்பாடு அல்லது இந்த ‘நிலைமை’ எப்படி, ஏன், தோற்றுவிக்கப்பட்டது என்பதனை அறியாமல், ப10கோள அரசியலில், அடுத்த அடியை எவருமே எடுத்து வைக்க முடியாது என்பது தெளிவு.

இச்சூழ்நிலையிலேயே, பசிலுடனான கலந்துரையாடல் இனிதாக இடம்பெற்று முடிந்ததாகவும் இந்தியா இலங்கையின் நண்பனாக என்றும் இருக்கும் என்ற செய்தியும் வெளிவந்தது. இதனை தொடர்ந்து, இந்தியாவிடமிருந்து 900 மில்லியன் டொலர் உதவி இலங்கைக்கு கிட்டுவதாகவும் அறிவிப்பு நடந்தேறியது. இவை தொடர்பில், லக்ஸ்மன் கிரியெல்லவின் கூற்று பின்வருமாறு பிரசுரமாகி உள்ளது: “இனிமேல் மாகாண சபை தேர்தலை நடாத்துமாறு இந்தியா வலியுறுத்தாது” என்பதாகும். (17.01.2022- வீரகேசரி). அதாவது, ஒரு சீன அழுத்தத்தை காட்டி அல்லது வடக்குக்கான சீன திரும்பலை காரணம் காட்டி, அல்லது, வடக்கில் நின்று இந்தியாவை சவாலுக்கு இழுக்க தூண்டிவிட்டு, அதற்கூடு, இந்தியாவிடமிருந்து பணம் பறிக்கும் ஒரு செயற்பாடு இது என்பதே கிரியெல்லவின் கூற்று முன்வைக்க கூடிய தர்க்கமாகின்றது. ஆனால், இது உண்மையில் நகர்வின் ஒரு முகம். மறுமுகம் தமிழர் பிரச்சினையை இந்தியாவிடமிருந்து கத்தரித்து கொள்ளுவது, என்பதேயாகும். அதாவது இந்தியாவிடமிருந்து பொருளியல் உதவிகளை பெற்றுக் கொள்ளும் போது, தெற்கு, இந்தியாவிற்கு அண்மித்து விட்டது என்ற சித்திரத்தை தமிழர் மத்தியில் ஏற்படுத்தும் ஓர் வேலைத்திட்டமே இதுவாகின்றது என இந்திய ஆய்வாளர்கள் ஒருமித்து குறித்துள்ளனர். அதாவது, சீன ஊடுருவலை முன்னகர்த்தி, பணத்துக்கு பணம்-மறுபுறத்தில், இதற்கூடு, தென்னிலங்கை-இந்திய நெருக்கத்தை காட்சிபடுத்துவதற்கூடு, இந்தியாவை தமிழ் தரப்பினரிடமிருந்து நிரந்தரமாக கத்தரித்து அனுப்புதல்-இவையே இவ் ஆய்வாளர்கள் முன்வைக்கும் சாரம் எனலாம்.
இதில் உண்மை இருக்கலாம் - அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஏனெனில் கடனுக்காக ஏன் இலங்கை உலக வங்கியை நாடாமல், இந்தியாவை நாடியது என்ற கேள்வியை ரணில் விக்கிரமசிங்க தனது றுஐழுN நேர்காணலின் போது எழுப்பியே இருந்தார். அதாவது, இந்தியா நோக்கிய பொருளாதார கோரிக்கை என்பது பொருளாதார ரீதியாக ஒரு தேவைப்பாடு என கூறிக் கொண்டாலும், அதற்கு பின்னாலும் ஓர் நுண் அரசியலின் நகர்வினை நாம் இனங்காணலாம் என்பதே இவ்ஆய்வாளர்களின் கணிப்பாகின்றது.

இவற்றுடன் இணைந்ததாய் 13ஐ அகற்றுதல் அல்லது மோடிக்கான கடிதத்தை சீர்குலைத்தல் என்பதெல்லாம் ஒரே திட்டத்தின் கிளைபிரிப்புகளாக இருக்கின்றனவா, என்பதே, இப்போது எம்மிடை எழும்பும் கேள்வியாகின்றது. சுருக்கமாக கூறினால், மிக மோசமான நிலைமையை எட்டியுள்ள தமிழர்களின் கேள்வி தனக்கு வாய்க்ககூடிய சகல பாதைகளையும் அணுகக்கூடிய ஒரு ஏற்பாட்டைக் கொண்டிருத்தல் வேண்டுமா-இல்லையா என்பதே கேள்வியாகின்றது. ஒன்றையே தேர்ந்து, ஏனைய சகலவற்றையும் நிரந்தரமாக மூடி விடுவது என்பது கணந்தோரும், மாறிவரும் ப10கோள அரசியலில், பொருந்தாத ஒரு விடயமாகின்றது.

12

மறுபுறமாய் நாட்டின் பொருளாதார நெருக்கடி உட்பட பல்வேறு நெருக்கடிகளும் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டு போவதும் தெளிவு. மறுபுறத்தில் தேர்தல் காலம் நெருங்க நெருங்க குண்டுகள் வெடிக்கலாம் - பல்வேறு அதிசயங்கள் அரங்கேற்றப்படலாம் என அண்மையில் ஒரு எதிர்கட்சி அரசியல்வாதி குறிப்பிட்டிருந்தார். போதாதற்கு இன்று சுதந்திர கட்சி களமிறக்கி விடப்பட்டுள்ளது மாத்திரமல்ல-முன்னைய ஜனாதிபதி கைது செய்யப்படலாம் போன்ற திகில் நிறைந்த அறிவிப்பும், அரசை நோக்கிய மக்களின் கோபங்களில் இருந்து அரசை விடுவிக்கும் அல்லது மக்கள் கட்டியெழுப்பக்கூடிய எதிர்ப்பலைகளை சிதைத்து விடும் என்பதெல்லாம் இன்றைய அரசியலின் அரிச்சுவடிகளாகின்றன. கூடவே, பொருளாதார நெருக்கடி அல்லது தொழிற்சங்கங்களின் ‘தனித்தனியான’ வேலை நிறுத்தங்கள்-இவை அனைத்தையும் காரணமாக்கி வேறொரு அரசியலை நோக்கி நாடு கொண்டு செல்லப்படலாம் என்பதும் விமர்சகர்களின் கணிப்பாக இருந்து வருகின்றது. இத்தகைய ஒரு பின்னணியில் தமிழ் தலைமைகள் நிதானமாக தமது அடுத்த காலடியை எடுத்து வைக்க கோரப்படுகின்றனர்.
இருந்தும் என்னவோ தமிழ் அரசியல் சூழ்நிலை என்பது, என்றும் போல் இன்றும் கனவு நிலை சார்ந்தே தொழிற்பட துவங்கியிருக்கின்றது. திரு.கஜேந்திரகுமாரின் நிலைப்பாட்டின்படி 13வது திருத்தத்தை அமுல் செய்ய கோருவதன் மூலம் ஒரு சதி இடம்பெறுகிறது என்றும் (14.01.2022:தினக்குரல்) சிவகரனின் கருத்துப்படி 13வது திருத்தம் ஆரம்ப புள்ளியாக கூட இல்லை என்பதுவும் ஒரு புறத்து தர்க்கமாகின்றது.

இதற்கு அடித்தளமாக அமைவது அல்லது துவக்கி வைத்த பெருமையை கொண்டு இயங்குவது, உலக மக்கள் பேரவையே என்றால் மிகையாகாது. அவர்களது பார்வையில் ஏற்கனவே குறிப்பிட்டாற் போல 13ஆனது ஒரு ஆரம்ப புள்ளியாக கூட இருக்க முடியாது. இதன் பிரதிபலிப்பையே தினக்குரலின் ‘சிண்டு முடிக்கும்’ தலைப்பு செய்தியிலும் காணலாம். இது, எம்மவர்க்கு ஆக்கபூர்வமானதா என்பதே கேள்வியாகின்றது. சுருக்கமாக கூறினால் புலம்பெயர் அரசியலின் ஒரு பிரிவு, செலுத்தும் தாக்கத்தின் விளைவு தமிழ் அரசியலில் இப்படியாகத்தான் இருக்கின்றது. ஆனால் புலம் பெயர் அரசியலின் இவ் அரசியல் கோரிக்கைகள் - இலங்கை வாழ் தமிழ் மக்களின் அபிலாசைகளுடனோ அல்லது வாழ்க்கை யதார்த்தங்களுடனோ தொடர்புபட்டிருக்கின்றனவா அல்லது காலம் காலமாய் இயங்கிவரும் கனவு நிலைக்கு பலம் சேர்ப்பதாய் உள்ளதா என்பதே பிரச்சினையாகின்றது. “கிடுக்கி பிடி” என்றும் “மரணப் பொறி” என்றும் கனவு காண்பது எளிதானதுதான் என்றாலும் நடைமுறை கோருவது என்பது அல்லது அதன் யதார்த்தத்தில் கால் பதிப்பது என்பது சற்று சிரமமானது என்பது தெளிவு. பொருளாதார உதவியை இந்தியாவிடம் கோருவதன் பின்னணியில் ஒரு பொருளியல் தேவை இருக்க கூடும் என்றாலும் ரணில் கேட்டவாறு இவர்கள் ஏன் இதனை ஒரு உலக வங்கியிடம் கேட்கவில்லை என்ற மர்மத்தின் தெளிவு தேடலிலேயே, ‘இந்நடைமுறையில் கால் பதிப்பது’ என்ற அம்சமும் அடங்கி போகின்றது எனலாம்.

இதே தினத்தில் சபை முதல்வர் முன்வைக்கும் கேள்வியான “சர்வதேசத்துடன் பேசுகின்ற தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அரசாங்கத்துடன் பேச முடியாதா?” என்று கேட்டிருப்பதும் இவ்வகை ‘மர்மங்களுடன்’ ஒன்று சேர்த்து வாசிக்க தக்கதுதான். அப்படி வாசிக்கும் போது, உலக வங்கியை தாண்டி, இந்தியாவிடம் பொருளியல் உதவியை நாடுவது கிரியெல்லவின் மொழியில், “இனிமேல் மாகாண சபை தேர்தலை நடாத்துமாறு இந்தியா வலியுறுத்தாது”. என்ற நோக்கின் அடித்தளமாக இருக்கலாம், என்றாகின்றது. ஆனால், அதை விட, இந்திய ஆய்வாளர்கள் அபிப்பிராயப்படி மேற்படி கோரிக்கையை முன்வைப்பதில், இந்திய செல்வாக்கினை அல்லது இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியா சட்டப10ர்வமாக ஈடுபடுதலை நிரந்தரமாக கத்தரித்து எறியும் ஓர் திட்டத்தின் பகுதியாகவும் இருக்கலாம்.

ஓர் புலம்பெயர் வாழ்வானது, உற்பத்தி செய்யக் கூடிய ஒரு புலம் பெயர் அரசியலின் தர்க்கம் இவ்வகையில் அல்லது எத்தகையதாய் இருக்கும் என்ற ஒரு நிர்ணயிப்பை கோரும் ஒரு காலக்கட்டம் இன்றாக இருக்கின்றது. ஐடீஊ அனுசரனையில் நடந்தேறும் அல்லது இன்று தமிழ் வின்னில் பெரிதும் முன்னிலைப்படுத்தப்படுகின்ற ‘மரபுதிங்கள்’ பெருவிழாவாகட்டும் அல்லது பிராண்டன் நகரசபை ப10ங்காவில் தமிழின படுகொலையை நினைவுப்படுத்தும் ‘நினைவுதூபியாகட்டும்’ -இவை புலம்பெயர் வாழ்வுக்கு அத்தியாவசியமானதாக கூட இருக்கலாம். அல்லது, பொங்கல்-தீபாவளி வாழ்த்துபாவை மழலை தமிழில் உச்சரித்து மகிழும் சர்வதேச தலைவர்களின் நகர்வு உச்சி குளிர்வதாகவும் இருக்கலாம். ஆனால் நடைமுறை வித்தியாசப்படுகின்றது. முக்கியமாக இலங்கை தமிழர்களின் வாழ்வுநிலை வித்தியாசப்படுகின்றது. இதில் காலூன்றாமல், அல்லது காலூன்ற முடியாமல், பின், எம் மக்கள் ‘களைத்து விட்டனர்’ என கதைப்பதெல்லாம் துரதிர்ஸ்டவசமாக பிரயோசனமற்ற செயலாகவே அமையக்கூடும் எனலாம்.

https://geotamil.com/index.php/78-2011-02-25-12-30-57/7071-13?fbclid=IwAR3aY0FGl1r6KKMlSgXw52dxvHWpW1aedAFczxL9odqBGDDbQHawxnfBhM0

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.