நாசாவின் ஆர்டெமிஸ் 2 நிலவு திட்டம் - சந்திரனில் தரையிறங்காமல் 10 நாட்கள் என்ன செய்யும்? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் த.வி.வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் 2026 ஏப்ரல் 1 நிலவரப்படி, ஆர்டெமிஸ் II விண்ணேவு வாகனம் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில், எல்சி-39பி ஏவுதளத்தில் நிறுத்தப்பட்டும், அதில் எரிபொருள் நிரப்பப்பட்டும் தயாராக நிற்கிறது. அதே ஏவுதளம் தான் ஒருகாலத்தில் நில் ஆர்ம்ஸ்ட்ராங்கை வரலாற்றுப் பயணத்துக்கு அனுப்பியது. இந்தப் பயணத்தில் செல்லவிருக்கும் நான்கு குழு உறுப்பினர்களும் தனிமைப்படுத்தலில் உள்ளனர். 2026 பிப்ரவரியில் திட்டமிட்டிருந்த ஏவுதலைத் தள்ளிவைக்கச் செய்த தொழில்நுட்பச் சிக்கல்கள் இப்போது தீர்ந்துள்ளன என்று தெரிகிறது. வானிலை ஒத்துழைத்தால், 2026 ஏப்ரல் 2 இந்திய நேரப்படி அதிகாலை 3:54 மணிக்கு ஏவுதல் நடைபெறலாம். இது வெற்றி பெற்றால், 53 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்கள் தாழ் விண்வெளி பாதையைத் தாண்டிச் செல்லும் முதல் பயணமாக அமையும். பூமிக்குப் மிக அருகிலுள்ள அண்டை உலகத்துக்குத் திரும்பும் முயற்சிக்கு இது புதிய தொடக்கமாக இருக்கும். 2026 மார்ச் 31 வரை, சுமார் 650 மனிதர்கள் விண்வெளிக்கு சென்றுள்ளனர். அவர்களில் 24 பேர் மட்டுமே சந்திரப் பகுதிக்குச் சென்றுள்ளனர். அந்த 24 பேரில் 12 பேர் சந்திரனில் தரையிறங்கி கால் பதித்தவர்கள்; மற்ற 12 பேர் சந்திரனைச் சுற்றி வந்தவர்கள். மீதமுள்ள பெரும்பாலானவர்கள் பூமிக்கு அருகே தாழ் விண்வெளிப்பாதையில் தான் பயணம் செய்துள்ளனர். சுமார் நூறு முதல் இரண்டாயிரம் கிமீ உயரம் வரை பூமியை சுற்றியுள்ள பகுதி தான் தாழ் விண்வெளி பகுதி. 1972 டிசம்பரில் அபோல்லோ 17 நிலவிலிருந்து திரும்பிய பிறகு மனிதர்கள் யாரும் தாழ் விண்வெளியை தாண்டிச் செல்லவில்லை. ஆர்டெமிஸ் II கடந்த ஐம்பது ஆண்டுகளில் முதன் முறையாக மனிதர்களை ஏந்தி அந்த எல்லையைக் கடந்து செல்லும். நாசாவின் புதிய, மிக வலிமையான ஏவூர்தி அமைப்பான ஸ்பேஸ் லாஞ்ச் சிஸ்டம் (Space Launch System) நான்கு விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும். ஏவூர்தி மேலே எழும் தருணம், உந்தி (booster) பிரியும் தருணம், பின்னர் ஓரியன் (Orion) விண்கலம் மேல்நிலையிலிருந்து விடுபடும் தருணம் என ஒவ்வொரு கட்டத்திலும் உலகம் மூச்சை அடக்கி கவனிக்கும். இந்தப் பயணத்தின் இன்னொரு சிறப்பு, அது பல்வேறு பின்னணியுள்ள விண்வெளி வீரர்களை உள்ளடக்கிய குழுவை கொண்டுள்ளது ஆகும். இதில் சந்திரப் பயணத்துக்குச் செல்லும் முதல் கருப்பின விண்வெளி வீரர், முதல் பெண் விண்வெளி வீரர், மேலும் ஆழ்விண்வெளிக்குச் செல்லும் முதல் கனடியர் ஆகியோர் உள்ளனர். நிலவில் தரையிறங்காது பட மூலாதாரம்,Getty Images ஆனால் ஒரு விஷயம் தெளிவு: இந்தப் பயணம் சந்திரனில் தரையிறங்குவதற்கல்ல. சந்திரனைச் சுற்றி பலமுறை வலம் வரவும் இல்லை. இது சந்திரனின் மறுபுறம் சென்று, மீண்டும் பூமிக்குத் திரும்பும் பத்து நாள் "ஆற்றல் தேவையற்ற திருப்பு" (free-return) பயணம். இதன் பொருள் எளிது. விண்கலம் சந்திரனருகே சென்றாலும் தரையிறங்காது; அதைச் சுற்றி வளைந்து திரும்பும். "ஆற்றல் தேவையற்ற திருப்பு" என்றால், சந்திரனின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி விண்கலத்தின் பாதையை மாற்றுவது. பூமிக்கு நேராக செலுத்துவது. அதாவது பூமியிலிருந்து நிலவுக்குச் செல்ல ஏவூர்தியை இயக்கி ஆற்றலைச் செலவிடும்; ஆனால் திருப்பு பயணத்தில் ஆற்றல் தேவையில்லை. பெருமளவு எரிபொருள் செலவிட வேண்டியதில்லை. கயிற்றில் கட்டிய பந்தை சுழற்றிவிட்டு கையை விடும்போது அது புதிய திசையில் பாய்வது போல, சந்திரனின் ஈர்ப்பு விசை விண்கலத்தைப் பிடித்து சுழற்றி பூமி நோக்கித் திருப்பி வீசும். பட மூலாதாரம்,Getty Images குழுவினர் யார் யார்? குழுவின் தலைவர் ரீட் வைஸ்மேன். அவர் கேப்டன். இறுதி முடிவுகளை எடுப்பார். குழுவை ஒருங்கிணைப்பார். பாதுகாப்பை கவனிப்பார். விக்டர் க்ளோவர் பைலட். விண்கலத்தை இயக்கம் பொறுப்பு அவருடையது. குறிப்பாக, பூமியின் பாதையிலிருந்து சந்திர நோக்கி தள்ளும் முக்கிய ஏவூர்தி இயக்கம் அவரால் கையாளப்படும். சில சோதனைகளில் அவர் ஓரியான் விண்கலத்தை தானே ஒட்டி சோதனை செய்வார். கிறிஸ்டினா கோக் மிஷன் சிறப்புப் பணியாளர். அவர் உடல்நலச் சோதனைகள், உயிர் ஆதரவு அமைப்புகளின் கண்காணிப்பு, சந்திரனின் புகைப்படங்கள், மேற்பரப்புக் குறிப்புகள் போன்றவற்றில் கவனம் செலுத்துவார். நீண்டகால விண்வெளிப் பயண அனுபவம் அவருக்கு உதவும். ஜெரமி ஹான்சன் மற்றொரு சிறப்புப் பணியாளர். ஏவுதலுக்குப் பிறகு தண்ணீர் சுத்திகரிப்பு அமைப்பு, அவசர உபகரணங்கள், விண்கல கருவிகளின் செயல்பாடு குறித்த பரிசோதனைகள் ஆகியவற்றில் பங்கெடுப்பார். அவர் கனடிய விண்வெளித் திட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மாற்றுக் குழுவினரும் தயாராகவே இருப்பார்கள். ஆண்ட்ரே டக்ளஸ், மூன்று நாசா வீரர்களில் யாருக்கேனும் பதிலாகப் பணியாற்றத் தயாராக இருப்பார். ஜெனிஃபர் சைடி-கிபன்ஸ், கனடிய உறுப்பினருக்கான மாற்றாக இருப்பார். ஏவுதலுக்கு முன் இறுதிக் கட்டத்தில் டக்ளஸ் முதன்மைக் குழுவினரை இருக்கைகளில் பாதுகாப்பாக அமர்த்த உதவுவார். விண்கலத்தின் கதவை மூடி தாழ் செய்யும் பொறுப்பும் அவருக்கே. சைடி-கிபன்ஸ் விண்கலத்தின் உள்ளே உள்ள அமைப்பு கருவி போன்றவற்றை சரிசெய்வார். விண்கலம் ஏவப்பட்டு நிலவை நோக்கிய பயணத்தில் உள்ள போது அவர் மிஷன் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து குழுவுடன் நேரடியாகப் பேசுவார். மாற்றுக் குழுவின் பணி, அவசர நேரத்தில் உடனே களமிறங்கத் தயாராக இருப்பதுதான். விண்கலத்துக்குள் வாழ்வு பட மூலாதாரம்,Getty Images ஓரியன் விண்கலம் சிறியது. ஒரு மாருதி ஆம்னி வேன் அளவு மட்டுமே. வேனில் உள்ள இருக்கைகளை எல்லாம் அகற்றிவிட்டு உள்ள இடத்தை கற்பனை செய்யுங்கள்- அதுதான் விண்கலத்தில் உள்ள வாழிடம். அந்த இடத்தில் தான் நெருக்கி முட்டியடித்து நான்கு பேரும் பத்து நாட்கள் உறங்கவும், சாப்பிடவும், வேலை செய்யவும், கழிவறையைப் பயன்படுத்தவும் வேண்டும். அதற்கு உள்ள வாழ்விட இடம் சுமார் 330 சதுரஅடி மட்டுமே. சுவற்றில் பொருத்தப்பட்ட படுக்கை பைகளில் புகுதந்து தூங்க வேண்டும். மேலும் இந்த விண்கல வாழ்விடத்தில் ஆறு ஜன்னல்கள், மேலும் கதிர்வீச்சு ஆபத்து வந்தால் பாதுகாப்பாக ஒளிந்துகொள்ளும் இடம் ஆகியவை உள்ளன. இது சர்வதேச விண்வெளி நிலையத்தைப் போல வசதியானதல்ல. ஆனால் பயணம் குறுகிய காலம் என்பதால் சமாளிக்க முடியும். குழுவினர் பூமியின் எந்த நேரமண்டலத்தையும் பின்பற்றமாட்டார்கள். ஜி.எம்.டி, ஐ.எஸ்.டி. ஈ.டீ.டி (GMT, IST, EDT) எதுவும் இல்லை. அவர்கள் மிஷன் எலாப்ஸ்டு டைம் (Mission Elapsed Time) என்ற முறையைப் பயன்படுத்துவார்கள். ஏவுதல் நடந்த அந்தக் கணம் டி-பிளஸ்-பூச்சியம். அதிலிருந்து நாட்கள், மணிநேரங்கள், நிமிடங்கள் என்று அனைத்தும் கணக்கிடப்படும். மிஷன் கட்டுப்பாட்டு மையமும் இதே முறையைப் பின்பற்றும். தினசரி நடைமுறை திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கும். காலையில் கண்விழித்ததும் எல்லா வாழிட அமைப்புகளும் சரியாக செயல்படுகிறதா என சோதனை செய்யவேண்டும். பிறகு விண்கலம் செல்லும் திசையை சரிநோக்கி ஏதேனும் பிழை திருத்த செயல்கள் தேவை என்றால் அவற்றை மேற்கொள்ள வேண்டும். மருத்துவக் கண்காணிப்பு பரிசோதனைகள், அவசர நிலை பயிற்சிகள் போன்றவையும் மேற்கொள்ள வேண்டும். மேலும் காற்று சுத்திகரிப்பு , தண்ணீர் சுத்திகரிப்பு, கழிவறை அனைத்தும் சரியாக இயங்குகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். உடற்பயிற்சி கட்டாயம். ஒவ்வொருவரும் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் எதிர்ப்பு பயிற்சி செய்வார்கள். ரோயிங், ஸ்குவாட், டெட்லிஃப்ட் போன்ற பயிற்சிகள் குறைந்த ஈர்ப்பு விசையின் தாக்கத்தை எதிர்க்க உதவும். பயணத்தில் ஒரு நாள் முழுமையான ஓய்வுக்கு ஒதுக்கப்படும். மற்ற நாட்களில் உணவு, சுகாதாரம், இடமாற்றம், எடை இல்லாத நிலையில் நடமாடும் பயிற்சி, ஊடகத் தொடர்பு ஆகியவை இடம் பெறும். பட மூலாதாரம்,Getty Images விண்கலத்தில் உணவு அனைத்தும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்டவை. புதிய உணவுப்பொருட்கள் இல்லை; குளிர்சாதனமும் இல்லை; முழு சமையலறையும் இல்லை. உணவுத் துகள் நொறுக்குகள் விழாதபடி கெட்டியாக உள்ள உணவு தான் கொண்டு செல்வார்கள். குறைந்த தண்ணீரில் பயன்படுத்தும்படி, பத்து நாட்களுக்கு கெடாதபடி பதப்படுத்தப்பட்டுள்ளது. மாக்கரோனி சீஸ், காய்கறி க்விச், பார்பிக்யூ மாட்டிறைச்சி, டோர்டில்லா, குக்கீ, கேக் போன்ற 189 விதவிதமான உணவுகளையும் காப்பி உட்பட பத்துக்கும் மேற்பட்ட பானங்களையும் இந்த பயணத்துக்காக நாசா தெரிவு செய்துள்ளது. வீரர்களின் விருப்பம் மற்றும் ஊட்டச்சத்து தேவையை வைத்து தேர்ந்தெடுத்துள்ளது. உணவு தயாரிப்பும் எளிது. பாக்கெட்டில் நீரை சேர்த்து சூடாக்கினால் போதும். உணவு தயார். ஒவ்வொருவருக்கும் திட்டமிட்ட காலை, மதியம், இரவு உணவு மற்றும் தினமும் இரண்டு சுவையூட்டப்பட்ட பானங்கள் மட்டுமே ரேஷன் போல வழங்கப்படும். உடல் தூய்மையும் சுகாதாரமும் அடிப்படையாக அமையும். பத்து நாட்களும் குளியல் இல்லை. ஈரத் துணிகள், உடல் துடைப்புத் துணிகள், கழுவ வேண்டாத ஷாம்பு ஆகியவற்றைப் பயன்படுத்துவார்கள். கழிவறை கழிவுகளை மூடிய பையில் சேகரித்து விண்வெளியில் வீசி எரிந்து விடுவார்கள். உடை மாற்றமும் குறைவாகவே இருக்கும்; எடை வரம்புகள் காரணமாக மிக சில உடைகள் மட்டுமே எடுத்து செல்வார்கள். பத்து நாள் பயணம் ஏவுதலுக்குப் பிறகு 15 முதல் 20 நிமிடங்களில் விண்கலம் விண்வெளியை அடைந்துவிடும். பாதையை அடைந்ததும், குழுவினர் முதன்முறையாக ஓரியான் விண்கலத்தை தாமே சுயமாக இயக்கி சோதனை செய்வார்கள். இது புவி அருகாமை சோதனை (proximity operations demonstration). இதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், விண்கலம் திரும்ப முடியும். பைலட் விக்டர் க்ளோவர் கட்டுப்பாட்டை எடுத்துச் செயல் திறனைச் சோதிப்பார். இதே கட்டத்தில் கழிவறை, தண்ணீர் அமைப்பு, உயிர் ஆதரவு ஆகியவையும் இயக்கப்பட்டு, ஆழ்விண்வெளி வாழ்வின் முதல் உண்மையான சோதனை தொடங்கும். இரண்டாம் நாளில், விண்கலத்தில் உள்ள ஏவூர்தி இயக்கப்படும். இதில் கிடைக்கும் ஆற்றல் ஓரியனை நிலவை நோக்கித் தள்ளும். இதை trans-lunar injection burn என்பார்கள். இது நடந்துவிட்டால், மீண்டும் பூமிக்கு திரும்பிப் போக முடியாது. நிலவை வட்டமிட்டு தான் பூமிக்கு திரும்ப முடியும். மிஷன் கட்டுப்பாட்டு மையம் ஒவ்வொரு அளவையும் நுட்பமாகக் கண்காணிக்கும். விண்கலம் எந்த பாதையில் செல்கிறது என கணிக்கும். பட மூலாதாரம்,Getty Images மனித வரலாற்றில் இதுவரை சென்ற மிகத் தொலைவு என்னும் புதிய சாதனையை எட்டும் தருணம் பயணத்தின் ஐந்தாம் அல்லது ஆறாம் நாட்களில் நிகழும். அபோல்லோ 13 தான் இதுவரை மனிதனை ஏற்றி அதிக தொலைவு சென்ற விண்கலம். பூமியிலிருந்து 4 லட்சம் கிலோமீட்டர் தொலைவு சென்று சாதனை படைத்தது. இந்த பயணம் இந்த சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்கிறார்கள். ஆறாம் நாள் பயணத்தின் முக்கிய தருணம். ஓரியன் விண்கலம் சந்திரனின் மறுபுறம் வளைந்து செல்லும். அப்போது அது சந்திர மேற்பரப்பிலிருந்து சுமார் 6,400 முதல் 9,600 கிலோமீட்டர் தூரத்துக்குள் வரும். ஒரு ரூபாய் நாணயத்தை நீட்டிய கையில் வைத்தால் தெரியும் அளவு தான் பூமியிலிருந்து பார்த்தால் சந்திரனின் காணும் அளவு. நிலவை நெருங்கும் நேரத்தில் பயண குழுவினருக்கு கால்பந்து அளவில் நிலவு தென்படும். பூமியிலிருந்து சந்திரனின் மறுபுறம் பார்க்க முடியாததால், மறைத்த முகத்தைப் பார்ப்பதற்கான அரிய வாய்ப்பு. சுமார் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை குழுவினர் புகைப்படங்கள், வீடியோக்கள், குறிப்புகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்வார்கள். அந்த நேரத்தில் பூமியுடன் வானொலி தொடர்பு 30 முதல் 50 நிமிடங்கள் துண்டிக்கப்படும். இது பதட்டமான, அமைதியான இடைவெளியாக இருக்கும். குழுவினர் முழுவதும் தங்களின் திறமையையே நம்ப வேண்டிய நிலை. அடுத்த நான்கு நாட்களில் விண்கலம் மீண்டும் பூமியை நோக்கி வரும். வேகம் தொடர்ந்து அதிகரிக்கும். இறுதி நாளில் ஓரியன் விண்கலம் வினாடிக்கு சுமார் 11 கிலோமீட்டர் வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும். வெப்பமும் அழுத்தமும் கடுமையாக இருக்கும். பின்னர் பராசூட்டுகள் திறக்கும். விண்கலம் கலிபோர்னியா அருகிலுள்ள பசிபிக் பெருங்கடலில் இறங்கும். மீட்பு குழுக்கள் விண்வெளி வீரர்களையும் விண்கலத்தையும் மீட்டெடுப்பார்கள். Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form ஆபத்துகளும் சவால்களும் இந்தப் பத்து நாள் பயணத்தில் நான்கு பேர் மிகக் குறுகிய இடத்தில் வாழ வேண்டும். உறக்கம், உணவு, உடற்பயிற்சி, வேலை, அனைத்தும் திட்டமிட்டபடி நடக்க வேண்டும். இதற்கு பொறுமையும் மன வலிமையும் வேண்டும். பூமியின் பாதுகாப்பு வளையத்துக்கு அப்பால் கதிர்வீச்சு ஒரு முக்கிய ஆபத்து. சூரியத்தில் ஏதேனும் அசாதாரணச் செயற்பாடு ஏற்பட்டால், சூரிய வானியலாளர்கள் அதை கவனித்து அறிவிப்பார்கள். சூரியக் காற்று, கொரோனல் மாஸ் ஈஜெக்ஷன் போன்றவற்றையும் கண்காணிப்பார்கள். கடுமையான சூரிய நிகழ்வுகள் ஏற்பட்டால், குழுவினர் பொருள் சேமிப்புப் பைகளைப் பயன்படுத்தி தற்காலிகப் பாதுகாப்பு கவசத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். விண்கலத்தின் உயிர் ஆதரவு அமைப்புகள் புதிதாக வடிவமைக்கப்பட்டவை. காற்றைச் சுத்தப்படுத்தும் அமைப்பு, நீர் மீள்சுழற்சி அமைப்பு, கழிவுகளை மூடி வெளியேற்றும் கழிவறை இவை அனைத்தும் பிழையின்றி செயல்படவேண்டும். இந்த கருவிகளை இதுவரை மனிதர்களுடன், பூமியிலிருந்து இவ்வளவு தொலைவில் சோதனை செய்வது இதுதான் முதன் முறை. சிறிய பழுதும் பெரிய சிக்கலாக மாறலாம். சந்திரனைச் சுற்றும்போது விண்கலம் பூமியின் பார்வைக்குப் அப்பால் சென்று விடும். அப்போது வானொலி தொடர்பு இயலாது. திரும்பும்போதும், வளிமண்டலத்தில் அதிக வெப்பம் உருவாகும் நேரத்தில் பிளாஸ்மா அடுக்கு காரணமாக வானொலி தொடர்பு மீண்டும் துண்டிக்கப்படும். அதன் பின்னர் பராசூட்டுகள் திறந்து நீரில் இறங்கும். செய்தி தொடர்பு துண்டிக்கப்பட்ட இந்த தருணங்கள் திக் திக் தருணங்கள். இவை விண்வெளிப் பயணத்தில் புதிதல்ல. ஆனால் இவ்வளவு தொலைவில், அனைத்தையும் ஒருசேரச் சந்திப்பது இது தான் முதன்முறையாக இருக்கும். நிலவுடன் மனிதனின் இரண்டாம் தேன்நிலவின் தொடக்கமே இந்தப் பயணம். (கட்டுரையாளர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்) படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9vlg0dvvvlo
By
ஏராளன் · Just now 1 min
Archived
This topic is now archived and is closed to further replies.