Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்றம் ஓன்றே வழி -ஜூட் பிரகாஷ்

Featured Replies

மாற்றம் ஓன்றே வழி

#GoHomeGota2022

1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்….

கொள்ளுபிட்டியில் இருந்த restaurant ஒன்றில் எனது Bachelor Party நடந்து கொண்டிருந்தது. எல்லாம் பம்பலாகப் போய்க் கொண்டிருந்த பொழுதில், நண்பன் ஒருவன் “எனக்கு இப்ப தமிழீழம் வேணும்” என்று திடீரென்று உரக்கக் கத்தத் தொடங்கினான்.

அளவுக்கு அதிகமான மதுவின் போதையும், அபரிதமான தமிழ் இனப்பற்றும் தலைக்கேறிய நண்பன், “தமீழீழம் வேணும்” என்று உரக்கக் கத்த, ஆமிக்கும் பொலிஸுக்கும் பயத்தில் நண்பர்கள் அவனை அடக்க முயன்றார்கள். தமிழில் தமிழீழம் கேட்ட நண்பனோ இப்பொழுது “I want Tamil Eelam Now” என்று ஆங்கிலத்திலும் கேட்கத் தொடங்கினான்.

 

Restaurant இற்கு வெளியே, காலி வீதியில், ஆமியின் செக் பொயின்ட் வேறு இருந்தது. அதையும் சுட்டிக் காட்டி, ஆளைப் பயப்பிடுத்தித் தமிழீழக் கோரிக்கையை அடக்கலாம் என்றால், தமிழீழ நண்பனோ “மட தங் தமிழீழம் ஓனே” என்று சிங்களத்தில் கத்தி சும்மா இருந்த ஆமியை சீண்டிப் பார்க்க முயன்றான். 

 

என்னுடைய தலைமுறைக்கும், அதற்கு முந்தைய தலைமுறைகளிற்கும் தமிழீழம் என்பது வெறும் கனவு மட்டுமல்ல, அது எங்கள் ஆத்மாவில் ஆழமாக விதைக்கப்பட்ட விதை. என்னதான் மூடி மறைத்தாலும் எல்லோருக்குள்ளும் இந்தத் தனித் தமிழீழக் கனவு உறங்கிக் கொண்டுதான் இருக்கிறது. என்னை கேட்டால் நான் மரணிக்கும் போது தமிழீழ மண்ணில் மரணிக்க வேண்டும் என்பதே எனது இறுதி ஆசை என்று இன்றும் சொல்வேன், என்றும் சொல்வேன்.

 

ஆனால், தமிழீழம் நோக்கிய எங்களது கனவுப் பயணம் பல்வேறு காரணிகளால் தோற்கடிக்கப்பட்டு, 2009 ஆம் ஆண்டு மே மாதமளவில் முழுமையா மெளனிக்கப்பட்டே விட்டது. அதற்குப் பிறகு தமிழீழம் பற்றி கதைப்பவன் எல்லாம் விசரன்கள் பைத்தியக்காரன்கள் என்ற கேலிக்குரியவர்களாகி விட்டோம். தனித் தமிழீழம் என்பது கிட்டத்தட்டச் சாத்தியப்படாத ஒரு கருப்பொருளாகவே மாற்றப்பட்டு விட்டது. 

யுத்தம் முடிவடைந்த கடந்த 13 வருடங்களில், எங்கள் அரசியல்வாதிகளாலோ, சர்வதேசத்தாலோ, ஏன் யுத்தத்தை முடிக்க முன்னின்று உதவிய இந்தியாவோலோ, எங்களுக்கு எந்த தீர்வையும் பெற்றுத்தர முடியவில்லை. எங்களுக்கு கிடைத்த மாகாண சபைகளையும், மாநகர சபைகளையும் கூட எங்களால் திறம்பட நடாத்தி எங்களது மக்களுக்கு குறைந்தபட்ச விமோசனத்தை வழங்கக் கூட எங்களால் முடியவில்லை. 

இந்தச் சூழ்திலையில், நவம்பர் 2019 இல் அதிகப்படியான பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்த கோத்தாவின் அரசு எங்களுக்கு மீண்டும் ஒரு நீண்ட இருண்ட யுகத்தை கட்டியம் கூறி நின்ற வேளையில் தான், கோத்தா அரசு இலங்கையின் பொருளாதாரத்தை தனது நடவடிக்கைகளால் சிதைத்து முழு நாட்டு மக்களதும் வயிற்றில் அடிக்கத் தொடங்கியது.

இலங்கையின் பொருளாதாரம் அதள பாதாளத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க, சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்து தாமாக வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கினார்கள். எந்தவித அரசியல் கட்சிகளினதும் இயக்கங்களதும் முன்னெடுப்பில்லாமல், சாதாரண மக்கள் தாமாக வீதியில் இறங்கி அமைதியான முறையில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது உலக வரலாற்றில் ஒரு புதுமையான புரட்சியாகவே பார்க்கப்படுகிறது.

சிங்கள ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் இந்தப் போராட்டத்தின் பின்னணியை அவதானிக்கும் பொழுது இது கோத்தா என்ற ஒற்றை நபருக்கு எதிரான போராட்டமாக அல்லலாமல், முழு அரசியல்வாதிகளுக்கும் எதிரான, ஒரு புதிய அரசியல் - சமூக - பொருளாதார மாற்றத்திற்கான கிளர்ச்சியாகவே அவர்கள் இந்த மக்கள் எழுச்சியை முன்னிறுத்துகிளார்கள்.

இலங்கை எதிர்நோக்கும் உடனடிப் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வாக, இந்தப் பிரச்சினைகளிற்கு அடிகோலிய ஜனாதிபதி கோத்தபாய இராஜினாமா செய்ய வேண்டும் என்பது போராடும் மக்கள் விடுத்திருக்கும் அவசர உடனடி கோரிக்கை என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதே வேளை, பன்னெடுங்காலமாக இலங்கையின் தேசிய பொருளாதார வளத்தைச் சுரண்டி தங்கள் குடும்பத்தின் செல்வத்தைப் பல்கிப் பெருக்கிய அனைத்து அரசியல்வாதிகளுக்கும் எதிரான ஒரு குறியீடாகவே “Gota Go Home” என்ற அறைகூவல் எழுகிறது.

இன மதப் பிளவுகளைத் தாண்டி நாங்கள் இலங்கையர்களாக ஒன்றுபட்டு இந்த நாட்டை தூய்மை படுத்துவோம் என்று எங்கள் இளையவர்களும், வீதியில் போராடும் மக்களும் விடுக்கும் அழைப்பை, தமிழ் மக்களாகிய நாங்கள் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதில் எந்த விதத் தவறும் இல்லை.

எண்பதுகளின் இறுதியில், இந்திய ராணுவத்திற்கு எதிராகப் போராடிய விடுதலைப் புலிகளை சிங்கள மக்கள் அன்று தேசிய வீரர்களாவே பார்த்தார்கள். 1990 இன் ஆரம்ப மாதங்களில் இந்திய ராணுவம் இலங்கையை விட்டு வெளியேறி விட, JVP கிளர்ச்சியும் ஒடுக்கப்பட்டு விட, தமிழர்களும் சிங்களவர்களும் கைகோர்த்து, “லொவே சமா.. எக மதயே” என்று பாட்டுப் பாடி, பிரேமதாசாவின் ஆட்சியில் புதிய யுகத்தைப் படைப்பதாக உறுதிமொழியும் எடுத்துக் கொண்டார்கள்.

1981 யாழ்ப்பாண நூலக எரிப்பையும், 1983 கறுப்பு ஜூலையின் அவலங்களையும், அவர்களும் நாங்களும் மறந்து நின்ற நாட்கள் கனகாலம் நிலைக்கவில்லை. இரண்டாவது ஈழ யுத்தம் தொடங்கியதும், பழைய குருடி கதவைத் திறடி கதையாக சிங்கள பேரினவாதம் மீண்டும் தன்னை மகாவம்ச சிந்தனைக்குள் பூட்டி வைத்து தாழ்ப்பாள் போட்டுக் கொண்டது.

டென்சில் கொப்பேகடுவ, லலித் அத்துலத் முதலி, ரணசிங்க பிரேமதாச, காமினி திஸநாயக்க என்று வரிசையாக சிங்களத் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டும், பூநகரி உட்பட பல ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டும், சிங்கள ராணுவம் தோல்வியின் விளிம்பில் நின்ற நிலையில் தான், சந்திரிகா 1994 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வந்தார்.

தமிழர்களின் உரிமையை மதிக்கிறேன், அவர்களின் பிரச்சினையை தானறிவேன், அவர்களுடன் ஆட்சி அதிகாரத்தை பகிர்வேன் என்று சிங்கள மக்களிற்குப் பகிரங்கமாக அறிவித்து வாக்கு கேட்ட சந்திரிக்கா எடுத்த சமாதான தேவதை அவதாரம், அவருக்கு 62 சதவீத வாக்கு வேட்டைக்கு உதவி அவரை ஜனாதிபதியாக்கியது.

மங்களவின் “சுது நெலும்” இயக்கம் மீண்டும் இன ஒற்றுமைக்கான முன்னெடுப்புக் கோஷங்களில் முனைப்புக் காட்ட, நீலன்- பீரிஸ் அதிகாரப் பகிர்வுத் திட்டம் நம்பிக்கையைத் தந்து கொண்டிருந்த வேளையில் தான் மூன்றாவது ஈழ யுத்தம் தொடங்கியது. 

கடுமையான பொருளாதாரத் தடை, நவாலிப் படுகொலை, யாழ்ப்பாண இடப்பெயர்வு, வன்னியில் தீவிர இராணுவ நடவடிக்கை என்று தமிழ் மக்கள் சொல்லொண்ணாத் துன்பங்களைச் சந்தித்துக் கொண்டிருக்க, சிங்கள பேரினவாதம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறி, யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதை வெடி கொளுத்திக் கொண்டாடியது. 

ஓயாத அலைகள் கொடுத்த அடியும், கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீதான மயிர்கூச்செறியும் தாக்குதலும், சிங்கள இராணுவத்தையும் அரசையும் மீண்டுமொருமுறை தமிழர்கள் முன்னால் மண்டியிட வைக்க, 2001 இல் ரணிலை சிங்களம் தேர்தலில் வெல்ல வைத்து புலிகளுடன் சமாதானம் பேச அனுப்பியது.

புலிகள் அரசோடு நாடு நாடாகப் போய் சமாதானம் பேசிக் கொண்டிருக்க, யாழ்ப்பாணத்துக்கும் மட்டக்களப்புக்கும் படையெடுத்த அரச சார்பற்ற நிறுவனங்கள், இன ஒற்றுமை பற்றி பட்டறைகள் நடத்திக் கொண்டிருக்க, புலிகளின் அடியில் துவண்டு போயிருந்த இலங்கை இராணுவத்தை சத்தமில்லாமல் மீளவும் பலப்படுத்திக் கொண்டிருந்தது சந்திரிக்கா-ரணில் இலங்கை அரசு.

வாக்களிக்கப்பட்ட இடைக்கால நிர்வாகமும் (SIHRN) கிடைக்கவில்லை, சுனாமி புனர்நிர்மாணத்திற்கான PTOMS கட்டமைப்பையும் நீதிமன்றத்தின் துணையுடன் JVP தடுத்து விட, பிளவுண்டு பலவீனமான நிலையில் இறுதி யுத்தத்திற்கு போன புலிகளை எந்த விதமாயினும் அழித்துவிட வேண்டும் என்று மீண்டும் பலமான சிங்கள பேரினவாத சாத்தான் ஓலமிடத் தொடங்கியது.

பேந்தென்ன, முள்ளிவாய்க்காலில் தமிழ்ச் சனத்தை மகிந்தவின் இலங்கை ராணுவம் கொத்துக்கொத்தாகக் இனப்படுகொலைச் செய்து கொண்டிருக்க, சரணடைந்த போராளிகளை கோத்தாவின் இலங்கை ராணுவம் கண்டபடி சுட்டுக் கொன்று கொண்டிருக்க, பொன்சேகாவோ ஆயிரக்கணக்கில் போராளிகளை காணாமலாக்கிக் கொண்டிருக்க, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வவுனியா தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு இருக்க, சிங்களம் இலங்கை இராணுவத்தின் வெற்றியை பால் சோறு கொடுத்து கொண்டாடிய காட்சிகள் இன்றுவரை எங்கள் மனத்திரையில் இருந்து அகலவே இல்லை. 

அதற்குப் பிறகும், சர்வதேச நிறுவனங்களும் தமிழர் தரப்பும் இலங்கை சர்வதேச போர்க்குற்றங்கள் இழைத்ததை ஆதாரங்களுடன் கத்திக் குழறக் காட்டிக் கொண்டிருக்க, சிங்களமோ போர்க்குற்றம் இழைத்த இராணுவத்தினரையும் தலைமையையும் தேசிய வீரர்களாகவும் மன்னர்களாகவும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய காலமும் அண்மைக் காலம் வரை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. 

இப்படியிருக்க,பொருளாதாரச் சரிவில் தங்களது வாழ்வும் வாழ்வாதாரமும் அழிக்கப்பட்டதால், தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டதால், வீதியில் இறங்கிய சிங்கள மக்களோடு எந்த நம்பிக்கையில் நாங்கள் கை கோர்ப்பது என்று தமிழர்கள் மத்தியில் எழும் அவநம்பிக்கையீனத்தில் அபரிதமான நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால்,

தென்னிலங்கையின் வீதிகளில் இரவில் தன்னெழுச்சியாகக் கூடிய மக்கள் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் விடுக்கும் கோஷங்கள் நாட்கள் செல்லச்செல்ல ஒரு புதிய வித்தியாசமான பரிணாமத்தை எடுக்கத் தொடங்கியதை அண்மைய நாட்களில் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

இனவாதத்தைத் தூண்டி, மதக் கலவரத்தை ஏற்படுத்தி, 2019 இல் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை நடாத்தி, தமிழர்களைக் கொடுமைப்படுத்தி, இந்த ஆட்சியாளர்கள் ஆட்சிக்கட்டிலேறி, நாட்டின் வளத்தைச் சுரண்டி, தங்களது குடும்பத்தைச் செல்வச்செழிப்பாக்கி விட்டார்கள் என்று இன்று தென்னிலங்கை வீதிகளில் சிங்கள மக்கள் சிங்கள மொழியில் கத்தும் சத்தத்தில் YouTube உம் Facebook உம் அலறுகிறது.

அதேவேளை, 

தமிழ் இனப்பற்றோடும், தமிழ் மொழிப்பற்றோடும் வாழ்ந்து கொண்டு, இலங்கையை விட்டு வெளியேற மாட்டோம் என்ற உறுதிப்பாட்டோடு தாயகத்தில் வாழும் தம்பிமார் இந்த ஆர்ப்பாட்டங்களை ஆதரித்து பதிவிடும் தர்க்கரீதியான நியாயமான பதிவுகளும், ஆர்ப்பாட்டங்களில் அவர்களும் கலந்து கொள்வதும் தமிழர் சிந்தனையில் மெல்ல மெல்ல மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறது.

மறுவளமாக, 

இலங்கை வரலாற்றில் ஏற்பட்டிருக்கும் இந்த அசாதாரண சூழ்நிலையில், சாணக்கியமாகச் செயற்பட்டு, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், அரசியல் யாப்பை மாற்றி அதிகாரப் பரவாலக்கலை வலுப்படுத்தல் போன்றவற்றை அடைய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அரசியல் களத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்று அரசல் புரசலாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளும் ஏதோ ஓரு நல்ல மாற்றம் வரும், இனியாவது வரவேண்டும், என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அகிம்சை வழிப் போராட்டம், ஆயுதப் போராட்டம், ஜனநாயகப் போராட்டம், இராஜதந்திரப் போராட்டம் என்று பல்வேறு வடிவங்களை எடுத்த எங்களது போராட்டம், இன்று தென்னிலங்கையில் எடுத்திருக்கும் இந்த புதிய வகை போராட்டத்தில் இணைந்து பயணித்தும் எங்களது இலக்கை அடைய முயற்சிக்கலாம், முயற்சித்துப் பார்கலாம்.

தோற்பதற்கும் இழப்பதற்கும் ஒன்றுமில்லை என்ற நிலையில் வாழும் நாங்கள், ஏமாந்தும் ஏமாற்றப்பட்டும் பழகிப் போன நாங்கள், புதிய நம்பிக்கையில் புதிய எதிர்பார்ப்பில் புதிய இந்தப் போராட்டத்தில் இணைந்து பயணிப்பதால் எந்தக் கேடும் நமக்கு நடந்து விடப்போவதில்லை. 

வியாபாரத்துறையில் நீண்டு நிலைத்திருந்து வெற்றி கண்ட, சிறந்து விளங்கிக் கொண்டிருக்கும் சர்வதேச நிறுவனங்கள், “Preserve the Core and Stimulate Progress” என்ற சூட்சுமத்தை பயன்படுத்துவதாக வியாபார ஆய்வாளர்கள் கூறுவார்கள். 

அதே போல், எங்களது அடிப்படைக் கொள்கைகளில் இருந்து வழுவாமல், காலவோட்டத்திற்கு ஏற்ப எங்களது போராட்ட வழிமுறையை மாற்றுவதன் மூலம், எங்களது தாயகத்தில் எங்களது இருப்பைத் தக்க வைத்துக் கொண்டு, நீடித்த நிலைத்த கெளரவமான நீதியான சமானதானத்தை (Peace with Justice) அடைய இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த நாங்கள் எங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

சிங்களம் மாற வேண்டும், சர்வதேசம் மாற வேண்டும், இந்தியா மாற வேண்டும், தமிழ்நாடு மாறவேண்டும் என்று எதிரியையும் அந்நிய சக்திகளையும் மாற வேண்டுமென்று எதிர்பார்த்துக் காத்திராமல், நாங்கள் எங்களை மாற்றிக்கொண்டால் எங்கள் தேசமும் எங்கள் மக்களும் சீரும் சிறப்புடனும் கெளரவாக வாழும் காலத்தை நாங்கள் உருவாக்கிக் கொள்ளலாம், atleast உருவாக்கிக் கொள்ளவாவது முயற்சிக்கலாம். 

வரலாறு தந்த, எங்களைக்கு கிடைத்த பல சந்தர்ப்பங்களை நாங்கள் சரியாக பயன்படுத்தாமல் விட்ட தவறை நாங்கள் இன்று அனுபவிக்கிறோம். இனியும், முந்தி அப்படி நடந்தது, அப்ப அவங்கள் அப்படிச் செஞ்சவங்கள், அதை மறக்கேலாது, இதை மறுக்கேலாது என்று பழங்கதை பறைஞ்சு பேக்கதை அலட்டிக் கொண்டிராமல், தாயகத்தில் வாழும் இன்றைய இளைய தலைமுறை காட்டும் புதிய பாதையில் பயணித்து பார்ப்போம்.

இந்த முறை,

தோற்பது யாராக இருந்தாலும்,

வெல்வது நாமாக இருக்க வேண்டும்!

ஜூட் பிரகாஷ்

மெல்பேர்ண்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நன்றாக இருந்தது, சுமந்திரன் ஐயாவின் ஈடுபாடு தான்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.