Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயமோகன்: ஜெகந்நாதரின் தேர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயமோகன்: ஜெகந்நாதரின் தேர்

 

ஏப்ரல் 22, ஜெயமோகன் பிறந்த நாள். ஜெயமோகனின் 60வது வயது தருணத்தை ஒட்டி வெளிக்கொண்டுவரப்படும் சிறப்பிதழுக்காக அ.முத்துலிங்கத்தால் எழுதப்பட்ட கட்டுரை இது. ஜெயமோகன் பிறந்த நாளை ஒட்டி வெளியிடப்படுகிறது.

spacer.png

சில வருடங்களுக்கு முன்னர் ஜெயமோகன் கனடா வந்திருந்தபோது நான் அவரை 'ஜகர்னட்' (Juggernaut) எனக் குறிப்பிட்டேன். பிரம்மாண்டமான, நிறுத்த முடியாத விசை என்று பொருள். ஜெகந்நாதர் என்ற வார்த்தையிலிருந்து ஆங்கிலத்துக்குப் போன சொல் இது. பூரி ஜெகந்நாதருடைய ரத யாத்திரை 12ஆம் நூற்றாண்டிலிருந்து பிரபலமானது. தேர் புறப்பட்டால் பெரும் விசையுடன் நிற்காமல் செல்லும். அதைக் குறித்துத்தான் அந்தச் சொல் உருவானது என ஆங்கில அகராதி சொல்கிறது. 

ஆரம்பத்திலிருந்து ஜெயமோகனின் எழுத்து அப்படித்தான் இருக்கிறது. அவர் 'வெண்முரசு' நாவலைத் தொடங்கியபோது பலர் அந்த முயற்சி பாதியில் நின்றுவிடும் என்றே எதிர்பார்த்தார்கள். ஆனால், ரதம் நிற்கவில்லை. தொடர்ந்து 6 வருடம் 7 மாதங்கள் எழுதப்பட்டு 26.000 பக்கங்கள் எட்டப்பட்ட பின்னர், அனைத்துலகிலும் படைக்கப்பட்ட ஆகப் பெரிய நாவலாக வெண்முரசு, நிறைவுக்கு வந்தது. இந்த நீண்ட ஓட்டத்திற்கு பின்னர் ஜெயமோகன் ஓய்வெடுப்பார் எனப் பலர் நினைத்தார்கள். ஆனால், தொடர்ந்து ஒரு நாளைக்கு ஒன்று, இரண்டு என நூறு சிறுகதைகள் எழுதினார். பின்னர் நாவல்கள், குறுநாவல்கள் என ஓயாமல் எழுதிய வண்ணமே இருக்கிறார்.

ஜெயமோகனை நான் அறிந்தது கடிதம் மூலம்தான். நான் அப்பொழுது ஆப்கானிஸ்தானில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னுடைய கதை ஒன்று அந்த நாட்டின்  பின்னணியில் 'இந்தியா டுடே'யில் பிரசுரமானது. ஜெயமோகன் அதுபற்றி எழுதினார். அவருடைய கதைகள் வெளியானால் நான் அவருக்கு எழுதுவேன். ஒரு வித்தியாசம், அவருடைய கடிதம் நாலு பக்கத்துக்குக் குறையாமல் இருக்கும். என்னுடையது அரைப் பக்கத்தைத் தாண்டாது. அவை ஆனந்தமான நாட்கள்.

அப்பொழுதுதான் மின்னஞ்சல் வசதி தமிழில் வந்திருந்தது. ஒரே கொண்டாட்டம். தமிழில் இ’ எழுத்து வராது. ஆகவே அந்த எழுத்து வராத வார்த்தைகளாகப் பார்த்து ஒருவருக்கு ஒருவர் எழுதுவோம். எனக்கு பகல், அவருக்கு இரவு ஒரு மணி, இரண்டு மணியாக இருக்கும். அவர் எழுப்பிய ஒரு கேள்வி நினைவுக்கு வருகிறது. ‘கடைசியாக கூட்டுக்கு வரும் பறவை வென்றதா? தோற்றதா?’ இந்த விவாதம் தொடர்ந்தது. கடைசிவரை விடை கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில் அருண்மொழி அவரிடம் போய்த் தூங்குங்கள்’ என்று கடைசி எச்சரிக்கை விடுவார். அப்பொழுது ஜெயமோகனுக்கு  வாசகர்கள் குறைவு. ஆகவே முழு ராச்சியத்தையும் நான் கைப்பற்றியிருந்தேன். ஒருமுறை கடிதத்தில் அவர் முழுச் சிறுகதை ஒன்றை எழுதி அனுப்பிவிட்டார். உண்மைக் கதை. தேவ கடாட்சம் என்ற ரவுடி பற்றியது. அந்தக் கதை இன்றுவரை பிரசுரமாகவில்லை என்றே நினைக்கிறேன். 

வெண்முரசு கொடுத்த ஆச்சரியங்கள் கணக்கில் அடங்கா. வியாச மகாபாரதத்தில் 50 பக்கம் வரும் பகுதி, வெண்முரசில் 1000 பக்கங்களாக விரிந்திருக்கும். நூற்றுக்கணக்கான புது உவமைகள். ஓர் உவமை மீண்டும் பயன்படுத்தப்பட்டது கிடையாது. பல நூறு புதிய சொற்களும், சொல் தொடர்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பிறவிநூல், தீச்சொல், அறப்புதல்வி, பிழையீடு, மொழிமீட்சி, நீராட்டறை, மணத்தன்னேற்பு என்று சொல்லிக்கொண்டேபோகலாம். வியாசர் சொல்லாமல்விட்ட பல தகவல்கள் கிடைக்கின்றன. திருதராஷ்டிரன் என்ன உணவருந்தினான்? கோதுமை அப்பமும், பருப்பு மாமிசம் சேர்த்த கூட்டும். எப்படிப்பட்ட படைக்கலன்களை பயன்படுத்தினார்கள்? 12,000 அம்புகளை நொடியில் செலுத்தக்கூடிய பொறிவிற்கள் தயார் நிலையில் இருந்திருக்கின்றன.  இளமையிலேயே வளைத்துக் கட்டப்பட்டு வளர்ந்த மூங்கில் விற்கள் மேல் அமைக்கப்பட்ட வண்டிகள். சாலையில் சக்கரங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகள் வண்டியில் பயணிப்பவர்களை அடைவதே இல்லை. இப்படி பலவிதமான தொழில்நுட்ப உச்சங்களைப் பற்றிய விவரங்கள் வெண்முரசில் கிடைக்கின்றன.

நான் பாகிஸ்தானிலும் பின்னர் கென்யாவிலும் அவருடன் தொடர்பில் இருந்தேன். 'விஷ்ணுபுரம்' வெளிவந்த பிறகு அவர் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது. முதல் 20 பக்கத்தைப் படித்துவிட்டு புத்தகத்தைக் கீழே வைத்துவிடுவேன். பிரமிப்பு தாங்க முடியவில்லை. முடிந்துவிடுமோ எனப் பயந்துகொண்டு மெதுமெதுவாக வாசித்தேன். அற்புதமான நாவல் என்று கண்டுபிடித்த முதல் பத்துப் பேர்களில் நானும் ஒருவனாக இருப்பேன். கனடாவில் இருந்து கடிதம் எழுதினேன். அவர் ஒரு  கேள்வி கேட்டார் ‘கென்யா முத்துலிங்கமும் நீங்களும் ஒருவரா?’ ஓம்’ என்றேன். பின்னர் கனடாவுக்கு வந்தார். அவருடைய  முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால் இருவருக்கும் மறக்க முடியாத நாட்கள். நயாகரா அருவியையும்,  இலைகள் நிறம் மாறும் அதிசயத்தையும் பார்த்து சிறு குழந்தைபோல ரசித்தார். அப்பொழுது மீசை வைத்து இளம் நடிகர்போலவே இருப்பார். வெளிநாட்டவர்களுக்கு அறிமுகம் செய்யும்பொது ’தமிழில் நோபல் பரிசு பெறப்போகும் எழுத்தாளர்’ என்று அப்போதே கூறினேன். அவர் வருகை ஞாபகமாக தபால் தலை ஒன்று வெளியிட்டு அதை ஒட்டி பல கடிதங்களை இந்தியாவுக்கும் வெளிநாட்டு நண்பர்களுக்கும் அனுப்பிவைத்தோம். 

மாபெரும் படைப்பான  வெண்முரசின் ஆரம்பத்திலும் நிறைவிலும் எனக்கு ஒரு தொடர்பு உண்டு. 2013 டிசெம்பரில் வெண்முரசு  அறிவித்தல் வந்தபோது நான் ஜெயமோகனுக்கு கடிதம் எழுதினேன். ’இது நியாயமா? இதை முடிக்கும்போது நான் உயிருடன் இருப்பேனா தெரியாது.’  ஆறு வருடம் 7 மாதம் தொடர்ந்து எழுதினார். கடைசி அத்தியாயம் எழுதி அவர் ஓய்ந்த நாள் 13 ஜுலை 2020. தொலைபேசியில் அவரை அழைத்து வாழ்த்தினேன். அன்றுதான் கண்ணன் பிள்ளைத் தமிழ் எழுதி வெண்முரசை அழகான நிறைவுக்குக் கொண்டுவந்திருந்தார். அவர் மனதிலே பூரண திருப்தியும் அமைதியும் நிலவிய நேரம். 

வியாசர் பாரதம் சொல்லச் சொல்ல, விநாயகர் ஒரு தந்தத்தை முறித்து கையை எடுக்காமல் மேரு மலையில் எழுதினார் என்பது ஐதீகம். நாளுக்கு  ஒரு அத்தியாயம் என்ற முறையில் நிறுத்தாமல்  எழுதி முடித்தது சாதனை இல்லாமல் வேறு என்ன?  அது மாத்திரமல்ல, வியாச பாரதத்தை நீட்டியும் அகலித்தும் ஆழமாக்கியும் எழுதப்பட்டது இது. பல மடங்கு பெரியது. வியாசரே பிரமித்துப்போகும் அளவுக்குப் புதிய தகவல்களைக் கொண்டது. 

இதிலே உள்ள அற்புதம் என நான் நினைப்பது முன்னரே அறிவித்துவிட்டு விண்கலம்  அனுப்புவதுபோல 10,000 வாசகர்கள் வாசித்து அதன் பாதையைத் தொடர தினமும் எழுதிப் பதிவிட்டதுதான். கம்பருக்கோ, வால்மீகிக்கோ, வியாசருக்கோ எழுதியதை மீண்டும்  சரிபார்த்து  திருத்தும் வாய்ப்பு  இருந்தது.  இங்கே அது கிடையாது. எழுதியது எழுதியதுதான். முன்னர் எழுதியதைப் பின்னர் புத்தகமாக்குவதுதான் மரபு. இது புத்தகமாகவே எழுதப்பட்டது. முன்னுக்குப் பின் முரண் இல்லை. அசுர சாதனை,  மனிதப் பிரயத்தனத்துக்கு அப்பாற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.  

கனடாவில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் அலிஸ் மன்றோவை நான் நேர்காணல் செய்திருக்கிறேன். இவரை 'சிறுகதைகளின் அரசி' என்று சொல்வார்கள். நாவல்களுக்கு நோபல் பரிசு கொடுப்பார்கள்; ஆனால் சிறுகதைகள் மட்டுமே எழுதி நோபல் பரிசு பெற்ற ஒரே எழுத்தாளர் இவர்தான். ஒரு சிறுகதை எழுத 6 – 8 வாரங்கள் எடுப்பதாக இவர் என்னிடம் சொல்லியிருக்கிறார். ஒருமுறை ஆறு மாதம் தொடர்ந்து எழுதிய சிறுகதை ஒன்றை அப்படியே தூக்கி வீசிவிட்டார். அதனுடைய அடிநாதம் சரியாக அமையவில்லையாம். சில சிறுகதைகளை முடிக்க முடியாமல் துண்டு துண்டாக வெட்டி வேறு சிறுகதைகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். ‘சிறுகதை அரசி’ 15 தடவைக்கு மேல்  தன் படைப்பைத்  திருத்தியிருக்கிறார். இந்தப் பின்னணியில் பார்த்தால் நாளுக்கு ஒன்று என தொடர்ந்து 100 சிறுகதைகள் படைத்த ஜெயமோகனுடைய சாதனையை எதனுடன் ஒப்பிடுவது?  இவருடைய சிறுகதைகள் சாதாரணமானவை அல்ல. அவை எல்லாமே உலகத் தரத்தை மேலும் ஒரு படி உயர்த்தக் கூடியவைதான். 

இங்கேதான் நாம் பாரதி சொன்னதை நினைத்துப் பார்க்க வேண்டும். ‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை; திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.’  பாரதிக்கு  இருந்த பெரும் ஆதங்கம் இதுதான். அவருடைய எழுத்து வெளி உலகத்திற்குப் போய்ச் சேரவில்லை. புதுமைப்பித்தனின் படைப்புகளை உலகம் அறியவில்லை. அதற்கான முயற்சிகளையும் பெரிதாக ஒருவரும் முன்னெடுக்கவில்லை என்பதுதான் துயரமான உண்மை. 

700 வருடங்களாக கல்கத்தா நூலகம் ஒன்றில் கவனிப்பாரற்று கிடந்த பாரசீக கவிதைப் புத்தகம் ஒன்றை எட்வார்டு ஃபிட்ஸ்ஜெரால்டு என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இன்று உமர் கயாம் உலகம் முழுக்க கொண்டாப்படுவதற்கான காரணம் அந்த மொழிபெயர்ப்புதான். இஸ்மெயில் காதரே எனும் அல்பேனிய எழுத்தாளர் அந்த மொழியில் ஒரு நாவல் எழுதினார். அல்பேனிய மொழி பேசுவோர் உலகத்தில் முப்பது லட்சம் மக்கள்தான். நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆள் கிடைக்கவில்லை. ஆகவே  நாவலை முதலில் பிரெஞ்சில் மொழிபெயர்த்து பின்னர் ஆங்கிலத்தில் மொழிமாற்றினார்கள். அந்த நூலுக்கு சர்வதேச 'புக்கர் விருது' வழங்கப்பட்டது. நோபல் விருதுக்கு அடுத்தபடியாகக் கொண்டாடப்படும் விருது அது. 

ஜெயமோகன் இனி என்ன செய்ய வேண்டும் என்று பலரும் பல கருத்துகளைச் சொல்கிறார்கள்; விவாதிக்கிறார்கள். அவர் பல தலைமுறை வேலையைச் செய்துவிட்டார். 10 பேராசிரியர்கள், 20 எழுத்தாளர்கள், 30  பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய பணியை அவர் தனியொருவராக  செய்து முடித்திருக்கிறார்.  பாரதியார் சொன்னார், திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்று. இன்னமும் உலகம் இலியட்டையும், ஒடிசியையும், ஏனிட்டையும் சேக்ஸ்பியரையும் கொண்டாடுகிறது. ஜெயமோகனின் படைப்புகளுக்கு முன்னர் இவை எல்லாம் மங்கிப்போய் நிற்கின்றன. இவருடைய படைப்புகளை வெளிநாட்டோர் கொண்டாடவேண்டிய நாள் வர வேண்டும். அப்பொழுதுதான் தமிழுக்கு வெற்றி.   

வில்லாளரை எண்ணில் விரற்கு முன் நிற்கும் வீரன்’ என்று இந்திரஜித்தைக் கம்பர் வர்ணிக்கிறார். ஒன்று, இரண்டு, மூன்று என விரல்களை எண்ணும்போது வரும் முதலாவது என்ற அர்த்தமில்லை. விரற்கு முன் நிற்பவர், அதாவது ஒன்று, இரண்டு என எண்ணத் தொடங்கு முன்பே நிற்பவர் ஜெயமோகன்.  உலகப் படைப்பாளிகளில் விரற்கு முன் நிற்பவர். 

பிரம்மாண்டமான நிறுத்த முடியாத விசையாக ஜெயமோகன் தமிழுக்குக் கிடைத்திருப்பது பெரும் வரம். உலக மகா படைப்பான வெண்முரசை நிறைவேற்றிய பின்னரும் தொடர்ந்து எழுதியபடியே இருக்கிறார். எத்தனை விசையோடும் வீச்சோடும் எழுதியும் என்ன பிரயோசனம்? அவருக்கு மலர் வெளியிடுவதோடு கடமை முடிந்ததா? அவரது படைப்புகளை வெளியுலகத்துக்கு எடுத்துச் செல்லவேண்டிய கடமை உள்ளது. வேறு யாரும் செய்யப்போவதில்லை; நாம்தான் செய்ய வேண்டும். அது நாம் தமிழுக்கு செய்யும் சேவை அல்ல; உலகத்துக்கு செய்யும் தொண்டு! 


 

 

https://www.arunchol.com/a-muthu-lingam-on-jeyamohan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெண்முரசு தினமும் பகுதி பகுதியாக வாசித்து வந்து கொண்டிருந்தேன். பின் வீடு மாறியது மற்றும் பல வேளைகளில் அறவே மறந்து விட்டேன்.....இப்போ போய் பார்த்தால் விட்ட இடம் தெரியவில்லை......பிறகு தேடிப் பார்ப்போம்.......!   😢

நன்றி கிருபன்......!  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.