Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக்கு வாய்ப்பான மக்கள் எழுச்சி சூழ்நிலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக்கு வாய்ப்பான மக்கள் எழுச்சி சூழ்நிலை

வீரகத்தி தனபாலசிங்கம்

சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கை முன்னென்றும் கண்டிராத பொருளாதார அனர்த்தத்துக்கு இன்று முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது. கூரையைப் பிரித்துக்கொண்டு வானளாவ தினமும் உயர்ந்துகொண்டே செல்லும் வாழ்க்கைச் செலவினாலும் அத்தியாவசிய பொருட்களுக்கு நிலவும் படுமோசமான தட்டுப்பாட்டினாலும் திணறும் மக்கள் வீதிகளில் இறங்கி செய்யத்தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள்,அவற்றுக்கு இன்று வரை ஒரு அரசியல் வழிகாட்டலோ தலைமைத்துவமோ கிடைக்காவிட்டாலும் கூட, ஒரு அரசியல் புரட்சியின் சில  பரிமாணங்களை எடுத்திருக்கின்றன.இலங்கையின் இன்றைய இடர்நிலைக்கு அரசியல் சமுதாயம் முழுவதையும் குற்றஞ்சாட்டும் ஆர்ப்பாட்டக்காரர்கள் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை வேண்டிநிற்கிறார்கள்.

   அத்தகைய மாற்றத்தை கோருகின்ற அவர்கள் முன்வைக்கின்ற அரசியல் முழக்கங்கள்  நாட்டு மக்கள் மத்தியில் அரசியல் சிந்தனைகளில் வரவேற்கத்தக்க ஒரு மாற்றத்தை நிச்சயம் கொண்டுவரவேண்டும்.அத்தகைய மாற்றம் இலங்கை இன்று முகங்கொடுக்கின்ற அரசியல்,பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கான அடிப்படைக் காரணிகளை இல்லாதொழிப்பதற்கு வழி வகுக்கவேண்டும்.

   அந்த கோணத்தில் நோக்கும்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக் கோரிக்கை அதிமுக்கியமான ஒன்றாகும். நாம் அனுபவிக்கின்ற பெருவாரியான நெருக்கடிகளுக்கு காரணமாக இருக்கின்ற இன்றைய ஆட்சிக்கட்டமைப்பின் நடுநாயகமாக விளங்கும்  மட்டுமீறிய அதிகாரங்களுடன் கூடிய ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதன் மூலம் ஒப்பீட்டளவில் முன்னேற்றகரமான ஜனநாயக ஆட்சிமுறையொன்றுக்கு வழிவகுக்க வாய்ப்புக்கள் தோன்றமுடியும்.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை வைத்துக்கொண்டு ஜனநாயக மாற்றம் எதையும் செய்வது அறவே சாத்தியமில்லை என்பது கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலகட்டத்தின் ஊடான எமது அனுபவமாகும்.

   நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு இப்போது 44 வயது. அதை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கும் அதே வயது.1978 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கம்  இந்த ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பைக் கொண்டுவந்த நாள் தொடக்கம் எதிரணி அந்த ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டும் என்றே வலியுறுத்தியது.இதில் அன்று திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் முன்னின்றன. ஆனால்,அக்கட்சிகள் அது தொடர்பில் முனைப்பான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை.வெறுமனே தேர்தல்களின்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்போம் என்று கூறுவதுடன் சுதந்திர கட்சி நின்றுவிட்டது.

   நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியின் படுமோசமான பாதகங்கள் குறித்து பெருவாரியான அரசியல் விவாதங்கள் பொதுவெளியில் இடம்பெற்றிருந்தாலும் கூட, அன்றைய காலகட்டத்தில் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டுமென்பது ஒரு வெகுஜனக்கோரிக்கையாக கிளம்பவில்லை.ஜெயவர்தனவுக்குப்  ரணசிங்க பிரேமதாச 1989 ஜனவரியில் ஜனாதிபதியாக வந்ததையடுத்து அவருடன் ஒரு சில வருடங்களுக்குள் முரண்பட்டுக்கொண்ட முன்னாள் அமைச்சர்கள் காமினி திசாநாயக்க,லலித் அத்துலத்முதலி போன்றவர்கள் ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிராக கிளம்பினார்கள். ஜெயவர்தன ஜனாதிபதியாக இருந்தபோது அமைதியாக இருந்த இவர்கள் பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில்தான் அந்த ஆட்சிமுறையின் பாதகங்களை கண்டுபிடித்தவர்கள் போன்று நடந்துகொண்டார்கள். அதனால் அவர்களாலும் கூட ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிராக வெகுஜன அலையொன்றை கிளம்பச்செய்யமுடியவில்லை.

spacer.png

1991ஆம் ஆண்டு பிற்பகுதியில் காமினியும் லலித்தும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருந்த தங்கள் சகாக்கள் சிலரையும் சிறிமாவின் சுதந்திர கட்சியையும் சேர்த்துக்கொண்டு ஜனாதிபதி பிரேமதாசவுக்கு எதிராக அரசியல் குற்றப்பிரேரணை(Impeachment Motion) ஒன்றைக் கொண்டுவரும் முறற்சியிலும் ஈடுபட்டார்கள்.அன்றைய பாராளுமன்ற சபாநாயகர் எம். எச். முஹம்மதின் அந்தரங்க ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட அந்த அரசியல் குற்றப்பிரேரணை முயற்சியை பாராளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைத்தது உட்பட தனக்கேயுரித்தான பல தந்திரோபாயங்கள் மூலமாக பிரேமதாச முறியடித்தார்.

   பிரேமதாச 1993 மே தினத்தன்று கொழும்பில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து ஜனாதிபதியாக பதவியேற்ற அன்றைய பிரதமர் டி.  பி. விஜேதுங்க தனது ஒன்றரை வருடகால ஆட்சியில் முன்னைய இரு ஜனாதிபதிகளையும் போன்று ஆட்சிமுறையில்  எதேச்சாதிகாரத்தனமாக நடந்துகொண்டார் என்று கூறுவதற்கில்லை.

   1994  ஆகஸ்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில்  சுதந்திர கட்சி தலைமையிலான பொதுஜன முன்னணி வெற்றிபெற்று திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரதமரானர். மூன்று மாதங்களுக்கும் குறைவான காலமே அந்தப் பதவியில் இருந்த   அவர் 1994 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்துக்குள் ஒழித்துவிடுவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்துக்கொண்டு ஆட்சியதிகாரத்துக்கு வந்த திருமதி குமாரதுங்க  அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு உருப்படியான எந்த அரசியல் சீர்திருத்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை.தனது இரண்டாவது பதவிக்காலத்தின் இறுதியில் (2005 ஆம் ஆண்டில் ) மேலும் ஒருவருடகாலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியில் நீடிக்கமுடியாமல் தன்னை உச்சநீதிமன்ற தீர்ப்பொன்று தடுத்துவிட்டதே என்ற கவலையுடன்தான் அவர் பதவியில் இருந்து இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

   அவருக்குப் பின்னர் 2005 நவம்பர்  ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற மகிந்த ராஜபக்சவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாகவே உறுதியளித்தார்.குறிப்பாக , அந்த தேர்தல் பிரசாரங்களின்போது ஜனதா விமுக்தி பெரமுனவுடன்(ஜே. வி.பி.)செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் அவர் தனது முதலாவது 6 வருட பதவிக்காலத்துக்குப் பிறகு ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு முடிவுகட்டுவதாக உறுதியளித்திருந்தார்.அவரின் இரு பதவிக்காலங்களிலும் ஜனாதிபதி ஆட்சிமுறையை  எந்தளவுக்கு வலுப்படுத்துவதிலேயே அவர் தீவிர கவனம் செலுத்தினார்.

    உள்நாட்டுப்போரின் முடிவுக்குப் பிறகு 2010 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தனது இரண்டாவது பதவிக்காலத்துக்கு போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர் அந்த வருடம் அக்டோபரில் அரசியலமைப்புக்கான 18 வது திருத்தச் சட்டமூலத்தை கொண்டுவந்து நிறைவேற்றினார்.அந்த நேரத்தில் சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மூன்றில் இரண்டு பங்கிற்கு நெருக்கமான ஆசனங்கள் பாராளுமன்றத்தில் இருந்தன.வேறு சில கட்சிகளும் அந்த பிற்போக்கான  திருத்தம் நிறைவேறுவதற்கு ஆதரவளித்தன.

   18வது திருத்தத்தின் மூலமாக சுயாதீன ஆணைக்குழுக்களைச் செயலிழக்கச்செய்து தனது அதிகாரங்களை மேலும் வலுப்படுத்திய மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியொருவருக்கு இருந்த இரு பதவிக்கால வரையறையையும் இல்லாமல் செய்து எத்தனை  பதவிக்காலங்களுக்கு ஒருவர் ஜனாதிபதி தேர்தலில்  தேர்தலில் போட்டியிடுவதற்கு வகைசெய்யும்  ஏற்பாட்டை புகுத்தினார்.போர்வெற்றியையடுத்து தங்களால் முன்னெடுக்கப்பட்ட சிங்கள பௌத்த பெரும்பான்மையினவாத அரசியல் சிங்கள மக்கள் மத்தியில் தங்களுக்கு என்றென்றைக்கும் பேராதரவை உறுதிசெய்யும் என்று நம்பிய அவர் ஆயுள்காலம் வரைக்கும் ஜனாதிபதியாக பதவியில் நீடிக்கமுடியும் என்று நினைத்தார் போலும்.

   ஆனால், தனது இரண்டாவது பதவிக்காலத்தில் 2 வருடங்கள் எஞ்சியிருந்த நிலையில் மூன்றாவது பதவிக்காலத்துக்கு மக்களிடம் ஆணையைப் பெறுவதற்காக 2015 ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலை மகிந்த நடத்தினார். தனது அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களில் ஒருவராகவும் சுதந்திர கட்சியின் செயலாளராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேனவிடம் தான் தோல்விகாணவேண்டியேற்படும் என்று அவர் நினைத்திருக்கமாட்டார்.

spacer.png

   எதிரணியின் பொதுவேட்பாளராக களமிறங்கிய சிறிசேனவும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாகவே நாட்டுமக்களுக்கு வாக்குறுதியளித்தார்.ஆனால் முன்னைய இரு ஜனாதிபதிகளையும்  போன்றே அவரும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமலேயே பதவியில் இருந்து இறங்கினார்.

  சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான  ‘நல்லாட்சி ‘ அரசாங்கத்தின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட 19வது அரசியலமைப்பு திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களை ஓரளவுக்கு குறைத்து பிரதமரையும் பாராளுமன்றத்தையும் வலுப்படுத்தும் ஏற்பாடுகளைக்கொண்டிருந்தபோதிலும், அன்றைய ஆட்சி நிருவாகத்தின் அரசியல் மாச்சரியங்களினால் பயனுறுதியுடையவிளைவுகள் கிட்டவில்லை.நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்ட்ட புதிய  அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளின்போது ஜனாதிபதி சிறிசேன தலைமையிலான சுதந்திர கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படக்கூடாது என்றே வலியுறுத்தின என்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டியதாகும்.

   அதாவது, ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து அதை ஒழிக்கவேண்டும் என்று வலியுறுத்திவந்த ஒரு கட்சி ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதே தனது பிரதான குறிக்கோள் என்று கூறிக்கொண்டு ஆட்சியதிகாரத்துக்கு வந்தவரின் தலைமையின் கீழ் அதே ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு எதிரான யோசனையை முன்வைத்த விசித்திரத்தை நாம் கண்டோம்.

   நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிமுறையின் இலட்சணம் காரணமாக ராஜபக்சாக்கள் மீண்டும் முன்னரைவிடவும் கூடுதல் பலத்துடன் ஆட்சியதிகாரத்துக்கு வரக்கூடியதாக இருந்தது.

    ராஜபக்சாக்கள் தங்களுக்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோதாபய ராஜபக்ச 2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார்.சுமார் 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற அவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக வாக்குறுதியைக் கொடுக்கவில்லை.அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாசவும் கூட அத்தகைய வாக்குறுதியை மக்களுக்கு வழங்கவில்லை.அந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக் கோரிக்கை ஒரு உறங்கநிலையிலேயே இருந்தது. தென்னிலங்கைமக்களும்  அதை பொருட்படுத்தாமல் அதிகாரங்கள் தனது கையிலேயே குவிந்திருக்கவேண்டும் என்ற சுபாவமுடைய ஒருவரையே தங்கள் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்தார்கள்.

   2020 ஆகஸ்ட் பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பொதுஜன பெரமுன ஆட்சிப்பொறுப்பை ஏற்றதன் பின்னர் முதல் செய்த காரியங்களில் முக்கியமானது நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவந்த 19வது திருத்தத்தை இல்லாமல்செய்து 20 திருத்தத்தை கொண்டுவந்ததுதான்.அதன் மூலமாக ஜனாதிபதி கோதாபய முன்னைய ஜனாதிபதிகள் சகலரையும் விட மட்டுமீறிய கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட ஒரு ஆட்சியாளராக விளங்குகிறார்.ஆனால்,அவரது இரண்டரை வருடகால ஆட்சியின் இலட்சணத்தை இன்று நாம் நாட்டின் சகல பாகங்களிலும் வீதிகளில் காண்கிறோம்.தவறான கொள்கைகளை கடைப்பிடித்த காரணத்தினால் நாட்டை வங்குரோத்துநிலைக்கு கொண்டுவந்த ஜனாதிபதியும் அவரது சகோதரர் பிரதமர் மகிந்தவும் பதவிகளில் இருந்து  இறங்கமுடியாது என்று அடம்பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள்.ஆனால் அவர்களை வீட்டுக்கு போகுமாறு மக்கள் நடத்தும் வீதிப்போராட்டங்கள் தினமும் தீவிரமடைந்துகொண்டிருப்பதையே காண்கிறோம்.

   ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் வீடடுக்கு போகுமாறு கேட்கும் மக்கள் போராட்டங்களின்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையையும் ஒழிக்கவேண்டும் என்ற முழக்கங்களும் ஓங்கி ஒலிக்கின்றன. மட்டுமீறிய அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதியொருவரின் தவறான ஆட்சிமுறையினால் இலங்கை அதன் சுதந்திரத்துக்கு பின்னரான வரலாற்றில் படுமோசமான பொருளாதார அனர்த்தத்தில் சிக்கித்தவிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் மக்கள் நிச்சயமாக ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு முழுமையான ஆதரவைத் தருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

  ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவும் சர்வஜனவாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரமும் தேவை.சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவது இன்றைய சூழ்நிலையில்  உசிதமில்லை என்ற தொனியில் பிரதமர் மகிந்த உட்பட பல அரசியல்வாதிகள் கருத்தை வெளியிட்டதையும் அவதானிக்கக்கூடியதாக  இருக்கிறது.ஆனால், ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை அரசியல் வர்க்கத்தினால் உறுதிசெய்யமுடியுமாக இருந்தால், சர்வஜனவாக்கெடுப்பில் மக்கள் அமோகமாக வாக்களித்து அங்கீகாரத்தை வழங்குவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு இதைவிட சிறந்த சந்தர்ப்பம் கிடைக்கப்போவதுமில்லை.ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக் கோரிக்கை முன்னரைப் போல அல்லாமல் இப்போது ஒரு வெகுஜனக்கோரிக்கையாக மாறியிருக்கிறது. பல அபிப்பிராய வாக்கெடுப்புக்களும் அதை தெளிவாக உறுதிப்படுத்துகின்றன.

   அரசியல் சமுதாயம் இந்த அருமையான வாய்ப்பை உறுதியாகப் பற்றிக்கொள்ளுமா அல்லது தவறவிடுமா என்பதே விடைவேண்டி நிற்கும் கேள்வி.

 

 

http://www.samakalam.com/நிறைவேற்று-அதிகார-ஜனாதி-4/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.