Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கச்சத் தீவு விவகாரத்தில் நடந்தது என்ன? - இந்தியாவால் மீட்க முடியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கச்சத் தீவு விவகாரத்தில் நடந்தது என்ன? - இந்தியாவால் மீட்க முடியுமா?

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
28 நிமிடங்களுக்கு முன்னர்
 

யாழ்ப்பாணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

யாழ்ப்பாணம்

இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் நெடுந்தீவிற்கும் இடையில் அமைந்துள்ள மிகச் சிறிய தீவான கச்சத் தீவை மீட்க வேண்டுமென அடிக்கடி குரல்கள் எழுகின்றன. அந்தத் தீவை இந்தியா தாரைவார்த்துக் கொடுத்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. உண்மையில் இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?

இதில் பாக் நீரிணைப் பகுதி என்பது இலங்கையின் வடக்கு கடற்கரைக்கும் இந்தியாவின் தென்கிழக்குக் கடற்கரைக்கும் இடைப்பட்ட பகுதியே பாக் நீரிணை எனப்படுகிறது. 1755லிருந்து 1763வரை சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்த ராபர்ட் பாக்கின் பெயர்தான் இந்த நீரிணைக்குச் சூட்டப்பட்டிருக்கிறது. பாக் நீரிணைப் பகுதியை ஒரு கடல் என்றே சொல்ல முடியாது. பவளப் பாறைகள், மணல் திட்டுகள் அதிகம் இருப்பதால் இந்தப் பகுதியில் பெரிய கப்பல்கள் செல்ல முடியாது.

இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவிலிருந்து 10.5 மைல் தொலைவிலும் பாக் நீரிணைப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு மிகச் சிறிய தீவுதான் கச்சத்தீவு. இதன் பரப்பு சுமார் 285 ஏக்கர். இதன் அதிகபட்ச அகலமே 300 மீட்டர்கள்தான். மனிதர்கள் யாரும் வசிக்காத இந்தத் தீவில் புனித அந்தோணியார் தேவாலயம் ஒன்றும் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இந்தக் கோவிலில் இந்தக் கோவிலில் ஒரு வாரத்திற்கு வழிபாடு நடப்பது வழக்கம். 1983ல் இலங்கையில் இனப் பிரச்னை ஏற்பட்ட பிறகு இந்த வழிபாடு தொடர்ச்சியாக நடப்பது தடைபட்டது. 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சீனிக்குப்பன் படையாச்சி என்பவர் இந்த ஆலயத்தைக் கட்டியதாகவும் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் இந்தக் கோவிலில் பூசைவைப்பார் என்றும் கெஸட்டியர் சொல்கிறது. இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் பிரிட்டிஷார் இந்தத் தீவை, வெடிகுண்டுகளை வெடித்துப் பயிற்சி செய்யப் பயன்படுத்தினார்கள்.

கச்சத்தீவின் உரிமை யாருக்கு?

ராமநாதபுரம் ராஜாவின் ஜமீன்தாரி உரிமைகளை வைத்தே 1974வரை கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், இது தொடர்பான எல்லா ஆவணங்களும் புதுதில்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன. அவை தற்போது ரகசிய ஆவணங்களாகப் பராமரிக்கப்படுகின்றன. 1902ல் இந்தத் தீவை அவருக்கு இந்திய அரசு வழங்கியது. அவருடைய ஜமீனுக்காக அவர் வழங்க வேண்டிய பெஷ்குஷ் (குத்தகைத் தொகை) இந்தத் தீவையும் உள்ளிட்டே கணக்கிடப்பட்டது. இந்தத் தீவைச் சுற்றி மீன் பிடிக்கும் உரிமை, தீவில் மேய்ச்சல் உரிமை, வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும் உரிமை ஆகியவற்றை ராமநாதபுரம் ராஜா குத்தகைக்கு விட்டிருந்தார்.

இதற்கு முன்பாகவே 1880 ஜூலையில் முகமது அப்துல்காதர் மரைக்காயர் என்பவரும் முத்துச்சாமிப் பிள்ளை என்பவரும் ராமநாதபுரம மாவட்ட துணை ஆட்சியர் எட்வர்ட் டர்னர் பெயரில் ஒரு குத்தகைப் பத்திரத்தைப் பதிவுசெய்தார். சாயம் தயாரிப்பதற்காக 70 கிராமங்களிலும் 11 தீவுகளிலும் வேர்களைச் சேகரிக்க இந்த குத்தகை உரிமை வழங்கியது. அந்த 11 தீவுகளில் கச்சத் தீவும் ஒன்று. 1885ல் இதே மாதிரியான இன்னொரு குத்தகைப் பத்திரம் கையெழுத்தானது. 1913ல் ராமநாதபுரம் ராஜாவுக்கும் இந்தியவுக்கான வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தக் குத்தகைப் பட்டியலிலும் கச்சத்தீவின் பெயர் இடம்பெற்றிருந்தது. அதாவது, இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளையும் ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசு கச்சத்தீவை இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்ததே தவிர, இலங்கையின் ஒரு பகுதியாகக் கருதவில்லை. 1948 செப்டம்பர் ஏழாம் தேதி மெட்ராஸ் எஸ்டேட் (அபாலிஷன் அண்ட் கன்வர்ஷன் இன்டு ரயத்வாரி) சட்டத்தின் கீழ் சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டபோது கச்சத்தீவு சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியானது.

1972ல் தமிழ்நாடு அரசால் பதிப்பிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட கெஸட்டியர், கச்சத்தீவை ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாகக் காட்டுகிறது. கச்சத்தீவின் சர்வே எண் 1250. இருந்தபோதும், கச்சத்தீவு ஒரு சர்ச்சைக்குரிய பகுதி என்ற வகையிலேயே அந்த விவகாரத்தை அணுகியது இலங்கை அரசு.

பிரச்னை துவங்கியது எப்போது?

கச்சத்தீவு யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை 1920களிலேயே துவங்கிவிட்டது. பாக் நீரிணை - மன்னார் வளைகுடா பகுதிகளில் எல்லையை வரையறுப்பதற்காக 1921 அக்டோபர் 24ம் தேதி கொழும்பு நகரில் சென்னை மாகாண அதிகாரிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தக் கட்டத்தில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட சுங்க வரிக்கான முதன்மை கலெக்டர் ஹார்ஸ்பர்க், கச்சத் தீவு இலங்கைக்கு வரும்படி எல்லையை வகுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாநாட்டை நிறுத்திவிடலாம் என்று சொன்னார். இதை ஏற்காத இந்தியக் குழு, வேண்டுமானால் அந்தப் பகுதியின் மீன்பிடி உரிமையை மட்டும் தருவதாகச் சொன்னது. ஒப்பந்தமும் கையெழுத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை காலனி அலுவலகம் ஏற்கவில்லை. ஆகவே சட்டரீதியாக இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கே வரவில்லை.

 

கோப்புப்படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

கோப்புப்படம்

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகும் இந்தப் பிரச்னை அவ்வப்போது எழுப்பப்பட்டது. இருந்தபோதும் இந்திய அரசு இந்த விவகாரத்தில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. 1967ல் தி.மு.க. பெரும் எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்களவைக்கு அனுப்பியது. இதற்குப் பிறகு பெரிய அளவில் இந்த விவகாரம் அவையில் எழுப்பப்பட்டது. அப்போதெல்லாம் பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி, ஜனசங்கம் ஆகியவை தி.மு.கவுக்கு ஆதரவளித்தன. 1968 மார்ச்சில், ஒரு ஒத்திவைப்புத் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிரஜா சோஷலிஸ்ட் கட்சியால் கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த காலகட்டத்தில், இந்த விவகாரத்தைக் கண்டுகொள்வதில்லை என்ற போக்கையே கடைபிடித்தது மத்திய அரசு.

1969ல் லண்டனில் காமன்வெல்த் மாநாடு நடந்தபோது, இலங்கைப் பிரதமர் டட்லி சேனநாயகவும் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் நிலைமை மோசமாகும் வகையில் எதையும் செய்வதில்லை என ஒப்புக்கொண்டனர். மேலும், புனித அந்தோணியார் திருவிழாவின்போது, சாதாரண உடையணிந்த காவலர்களே அங்கு நிறுத்தப்படுவார்கள் என்பதையும் இருதரப்பும் ஏற்றுக்கொண்டனர்.

ராமநாதபுரம் ஜமீனின் ஆவணங்களைக் காட்டி தி.மு.க. அரசு கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம் என்று கூறினாலும் மத்திய அரசு அதனை ஏற்கவில்லை. ஒருகட்டத்தில், அந்தத் தீவின் மீதான வரலாற்று உரிமை இந்தியாவிடம் இருந்ததா என ஆராயும்படி இந்திரா காந்தி தெரிவித்தார். ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு கருத்தை முன்வைத்தனர். 1973வாக்கில் கச்சத்தீவு மீதான உரிமையை இந்தியா விட்டுவிட முடிவுசெய்ததுபோலத் தெரிந்தது.

இதையடுத்து, தனது சட்ட அமைச்சரான செ. மாதவனுடன் இந்திரா காந்தியைச் சந்தித்த முதலமைச்சர் மு. கருணாநிதி கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை எழுத்து பூர்வமாகவும் பிரதமரிடம் அளித்தார் மு. கருணாநிதி. மாநில அரசு சேகரித்த ஆதாரங்களின்படி, "கச்சத்தீவின் மீது இலங்கை அரசானது ஒருபோதும் இறையாண்மை செலுத்தியதில்லை என்பதைச் சுட்டி்ககாட்ட போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. அநாதி காலம் தொட்டே தமிழ்நாடு கடற்கரையில் முத்து, சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜா உள்ளிட்ட தென்னிந்திய ஆட்சியாளர்களுக்கே உரியதாக இருக்கிறது என வரலாற்று ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ராமநாதபுரம் ராஜா இலங்கை அரசுக்கு எந்தக் காலத்திலும் வாடகையோ, ராயல்டியோ செலுத்தியதில்லை" என முதலமைச்சர் மு. கருணாநிதி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

1970களில் இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கும் இலங்கையின் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயகவுக்கும் நல்ல நட்புறவு இருந்தது. "கச்சத்தீவு தொடர்பான பேச்சு வார்த்தை ஒரு கட்டத்தில் முறிந்துபோனது. அந்தத் தீவின் மீது இந்தியாவுக்கு இருக்கும் உரிமையை விட்டுத்தர வேண்டாம் என்று இந்திய அதிகாரிகளின் குழு பிரதமர் இந்திரா காந்தியிடம் வலியுறுத்தியது. உடனே சிறிமாவோ இந்திரா காந்தியைத் தொடர்புகொண்டு, தனக்கு உதவும்படி கோரினார். இல்லாவிட்டால் தனக்கு அரசியல் எதிர்காலமே இல்லாமல் போய்விடும் என்று சொன்னார். சிறிமாவோவின் சிக்கலான சூழ்நிலையைப் புரிந்துகொண்டார் இந்திரா காந்தி. இந்திய அதிகாரிகள் ஏதும் சொல்வதற்கு முன்பாகவே ஒப்பந்தத்தை முடிவுசெய்யும் வகையில் அதில் தலையிட்டார்" என இந்த ஒப்பந்தத்தின் பின்னணி குறித்து Ethnicity Versus Nationalism: The Devolution Discourse in Sri Lanka நூலில் குறிப்பிடுகிறார் பார்த்தா கோஷ்.

இந்தப் பின்னணியில்தான், 1974 ஜூன் 28ஆம் தேதி இந்திய அரசும் இலங்கை அரசும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக்கோடு வரையறுக்கப்பட்டது. கச்சத் தீவு இலங்கைக்குச் செல்லும்படி இந்தக் கோடு வரையறுத்தது. இருந்தபோதும், அங்கே மீன் பிடிக்கும் உரிமையும் யாத்ரீகர்கள் அந்தத் தீவுக்கு விசா இன்றி செல்லும் உரிமையும் பாதுகாக்கப்பட்டிருந்தன.

இந்திய மக்களவையில் இது தொடர்பாக விளக்கமளித்த அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரண் சிங், "இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருப்பதன் மூலம் கடந்த காலத்தில் இரு தரப்பினரும் அனுபவித்தது போலவே மீன் பிடிக்கும் உரிமை, கப்பல்களைச் செலுத்தும் உரிமை, யாத்திரை செல்லும் உரிமை ஆகியவை எதிர்காலத்திலும் தொடரும்" என்று குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தத்தின் ஐந்தாவது பிரிவு இதைப் பற்றி விளக்கமாகக் கூறுகிறது. "இதுவரை இருந்ததைப் போலவே இந்திய மீனவர்களும் யாத்ரீகர்களும் கச்சத்தீவுக்கு வந்துபோக முடியும். இதற்காகப் பயண ஆவணங்களையோ விசாவையோ இலங்கை கேட்காது" என்கிறது அந்தப் பிரிவு. இருந்தபோதும் அதில் மீன் பிடி உரிமைகள் குறித்து சொல்லப்படவில்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பப்பட்டபோது, அந்த பாரம்பரிய உரிமை மாறாது என்று பதிலளித்தார் ஸ்வரண் சிங்.

 

யாழ்ப்பாணம் முதல் கச்சத்தீவு வரை

பட மூலாதாரம்,SCREENGRAB/GOOGLE MAPS

 

படக்குறிப்பு,

எங்கே உள்ளது கச்சத்தீவு?

இந்த ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார் முதலமைச்சர் மு. கருணாநிதி. இந்த கடல்சார் ஒப்பந்தம் மாநில அரசின் உரிமைகளை கடுமையாக பாதித்தாலும் அந்த ஒப்பநத்தத்தின் ஷரத்துகளை மாநில அரசுடன் மத்திய அரசு விவாதிக்கக்கூட முன்வரவில்லை என்று குறிப்பிட்டார் மு. கருணாநிதி. பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த காலத்திலும் பிரதமரையும் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளையும் சந்தித்த அவர், கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது அதனை இலங்கைக்குக் கொடுக்கக்கூடாது என்று வாதிட்டார். அதை மீறி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், 1974 ஜூன் 29ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த விவாகரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஒப்பந்தத்தின் ஷரத்துகளை மறுபரிசீலனை செய்யும்படி மத்திய அரசிடம் கேட்டார் மு. கருணாநிதி.

இந்த நிலையில், 1976ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இரண்டாவது ஒப்பந்தம் இது தொடர்பாக கையெழுத்தானது. அதன்படி, "இந்திய மீனவர்களும் அவர்களது மீன் பிடிப் படகுகளும் இலங்கைக் கடல் பகுதியிலும் இலங்கையின் பிரத்யேக பொருளாதார மண்டலப் பகுதியிலும் இலங்கையின் அனுமதியில்லாமல் மீன்டிபிடிக்க மாட்டார்கள்" என்று கூறியது இந்த ஒப்பந்தத்தின் ஷரத்து. நெருக்கடி நிலை காலகட்டத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

தீர்வு என்ன?

1974 மற்ரும் 1976ஆம் ஆண்டு ஒப்பந்தங்களின்படி கச்சத்தீவு முழுமையாக இலங்கைக்கு அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், அந்தப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது, மீனவர்களைக் கைதுசெய்து, படகுகளைப் பறிமுதல் செய்வது ஆகியவை தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த விவகாரத்திற்கு சில தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. 1. கச்சத் தீவையும் அதனைச் சுற்றியுள்ள கடற் பகுதிகளையும் இந்தியா இலங்கையிடமிருந்து நீண்ட கால குத்தகைக்கு எடுப்பது. இதற்கு உதாரணமாக தீன் பிகா விவகாரம் சுட்டிக்காட்டப்படுகிறது. தீன் பிகாவின் மீதான இறையாண்மை உரிமை இந்தியாவிடம் இருக்கிறது. ஆனால் நீண்ட காலக் குத்தகையின் கீழ் அந்தப் பகுதியை வங்க தேச மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

இரண்டாவதாக, இந்திய மீனவர்களுக்கு உரிமம் அளித்து கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க அனுமதிப்பது. 1974, 76ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையிலும்கூட, கச்சத் தீவு மற்றும் அதனை ஒட்டிய கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துவரும் நிலையில், இம்மாதிரி ஒரு உரிமத்தை வழங்குவது அந்தப் பகுதியில் மீன் பிடித்தல் தொடர்பாக எழுப்பப்படும் சிக்கல்களுக்கு ஒரு தீர்வாக அமையும்.

https://www.bbc.com/tamil/india-61617165

  • கருத்துக்கள உறவுகள்

இதே கிந்திய, சொறி சிங்களத்துக்கு கூட்டி கொடுப்தது 13இலும் நடந்து உளது.

வெளியிடப்பட்ட ஒப்பந்தத்தை விட, வேறு இரு இரகசிய ஒப்பந்தங்கள் இருக்கிறது, ஹிந்தியை சொறி சிங்கலதுக்கு இடையில்.

இதை வைத்தே, சொறி சிங்கள மற்ற மாகாண சபைகள் பெயருக்கு இயங்கினாலும், வடக்கு முற்றாக முடக்கி உள்ளது.      
      
வடக்கு கிழக்கு தற்காலிக  இணைப்பை துண்டித்தும் இந்த இரகசிய ஒப்பந்தங்களை  கொண்டு.

இதனாலேயே சொறி சிங்களத்தை, கிந்தியா வேறு எந்த அழுத்தத்தையும் கொண்டு வரமுடியாது.

கிந்தியா பலதடவை கெஞ்சுவதும் இதனால் தான். ஹிந்தியை கெஞ்சுவது வெளியில் காட்ட.

 உண்மையில் கிந்தியா, தமிழர் சிங்களத்தின் விருப்பின் படியே தீவின் அங்கமாக இருக்க்கலாம் என்ற நிலையையே 13 இனால் கொண்டு வந்து உள்ளது. அதாவது சிங்களத்தின் விருப்பம்.  

  • கருத்துக்கள உறவுகள்

கச்சத்தீவை மீட்பது குறித்த தமிழக முதலமைச்சரின் கருத்து சாத்தியமற்றது

கச்சத்தீவை மீட்பது குறித்த தமிழக முதலமைச்சரின் கருத்து சாத்தியமற்றது

 

மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் கடலட்டை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் கடலட்டை சார் தொழிலில் ஈடுபடுகின்றவர் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து தீர்வுகளை காணும் நோக்கிலான கலந்துரையாடல் ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பூநகரி பிரதேச செயலக மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது பூநகரி பிரதேச செயலாளர், மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் கடற்றொழில் சார்ந்த திணைக்கள அதிகாரிகள் மற்றும் மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் கடற்றொழில் சார்ந்த சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.

தமிழகத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி அவர்களிடம் தமிழக முதலமைச்சர் கச்சத்தீவை மீட்ப்பதற்குரிய பொருத்தமான நேரம் இதுவென கோரிக்கை விடுத்திருந்தார். எனவே இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் அவர்களின் கருத்தை நான் மறுக்கா விட்டாலும் தமிழக முதலமைச்சரின் கருத்து சாத்தியமற்றது. இந்தியாவின் தமிழக மக்கள் முதலமைச்சருக்கு அழுத்தத்தை கொடுத்திருக்கலாம் அதற்காக முதலமைச்சர் அவர்கள் இவ்வாறான கருத்தை தெரிவித்திருக்கலாம். அதில் அவரின் கருத்து உண்மையாக இருக்குமாக இருந்தால் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருப்பார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு இணக்கப்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தின் பா.ஜா.கா தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு கச்சத்தீவால் யாருக்கு அதிக லாபம் கிடைக்கிறது என்று சட்டப்பூர்வமாக கடிதமொன்றை அனுப்ப உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
 

-கிளிநொச்சி நிருபர் சப்தன்-

http://tamil.adaderana.lk/news.php?nid=161692

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கச்சத்தீவு விவகாரம்: "தமிழ்நாடு முதலமைச்சரின் கருத்து சாத்தியமற்றது" - இலங்கை கடல் தொழில் அமைச்சர்

28 மே 2022, 03:55 GMT
 

டக்ளஸ் தேவானந்தா

 

படக்குறிப்பு,

இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

(இன்றைய (மே 28) இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)

கச்சத்தீவை விடுவிப்பது தொடர்பான தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்து சாத்தியமற்றது என, இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளதாக, 'தமிழ் மிரர்' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

சென்னையில் மே 26 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இந்திய பிரதமர் மோதியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கச்சத்தீவை மீட்பதற்குரிய பொருத்தமான நேரம் இதுவென கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சரின் கருத்தை நான் மறுக்கா விட்டாலும், அவரின் கருத்து சாத்தியமற்றது. தமிழ்நாடு மக்கள் முதலமைச்சருக்கு அழுத்தத்தை கொடுத்திருக்கலாம். அதற்காக முதலமைச்சர் இவ்வாறான கருத்தை தெரிவித்திருக்கலாம். அவரின் கருத்து உண்மையாக இருக்குமாக இருந்தால் இந்திய பிரதமர் நரேந்திர மோதி இதனை கூறியிருப்பார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இந்த விடயம் தொடர்பில் ஒரு இணக்கப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கச்சத்தீவால் யாருக்கு அதிக லாபம் கிடைக்கிறது என்று சட்டப்பூர்வமாக கடிதமொன்றை அனுப்ப உள்ளேன்" என தெரிவித்ததாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா - ஜப்பான் இணைந்து இலங்கைக்கு உதவ தீர்மானம்

 

இலங்கை நெருக்கடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருக்கும் இலங்கைக்கு இந்தியாவுடன் ஒன்றிணைந்து உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது என, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில், "டோக்கியோவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே இலங்கைக்கான உதவிகளை வழங்குவது குறித்து இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின்போது இந்திய - பசுபிக் பிராந்தியத்தை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கு இந்தியாவுடன் ஒன்றிணைந்து உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது. ஜப்பானின் அனுசரணையுடன் முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த இரண்டு முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கை அரசினால் இடைநிறுத்தப்பட்ட பின்னரும் ஜப்பான் இலங்கைக்கு உதவ முன்வந்திருக்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு இரண்டு பில்லியன் டாலர் கடனுதவியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இந்தியா ஏற்கெவே இலங்கைக்கு 2.4 பில்லியன் டாலர் பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளது. மேலும், 1.5 பில்லியன் டாலர் உதவியை இலங்கை இந்தியாவிடம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவும் ஜப்பானும் தற்போது இணைந்து இலங்கைக்கு உதவி வழங்க தீர்மானம் எடுத்துள்ளது.

"சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் கொள்கை திட்டமே அவசர தேவை"

 

ரணில் விக்ரமசிங்க

பொருளாதார மீட்சிக்காக சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் கொள்கை திட்டமே அவசர தேவை என, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக, 'தினகரன்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் அடுத்தகட்ட தீர்மானம் குறித்து எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது விசேட உரையாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளதாக அச்செய்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், "நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து பல்வேறு தரப்பினருடன் விரிவுபடுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எமக்கு உதவிபுரிய நாடுகள் உள்ளன.

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றவுடன் பெரும் நிதியுதவினை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் சர்வதேச நிறுவனத்துட ந் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளேன். ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இருவார காலங்கள் உள்ளன.

சர்வதேச நாயண நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்து எமது கொள்கை திட்டங்களை பரிசீலனை செய்து அடுத்தக்கட்ட நகர்வினை முன்னெடுப்பார்கள்.

எரிபொருள். எரிவாயு, உரபிரச்னைக்கு தீர்வு காண உரிய செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன" என தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-61615417

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.