Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாதவனின் தி ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட்: பஞ்சாங்க வானியலுக்கும் இன்றைய வானியலுக்கும் என்ன வேறுபாடு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாதவனின் தி ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட்: பஞ்சாங்க வானியலுக்கும் இன்றைய வானியலுக்கும் என்ன வேறுபாடு?

  • க. சுபகுணம்
  • பிபிசி தமிழ்
27 ஜூன் 2022
புதுப்பிக்கப்பட்டது 28 ஜூன் 2022
 

மாதவன் கூறியது போல் பஞ்சாங்கம் இன்றைய ராக்கெட் அறிவியலைப் பேசுகிறதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

சமீபத்தில் சென்னையில் 'ராக்கெட்ரி: நம்பி விளைவு' என்ற திரைப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய நடிகர் மாதவன், இந்தியாவின் செவ்வாய் கிரகத்திற்கான விண்வெளி திட்டத்தைப் பற்றிப் பேசியது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

அந்த செய்தியாளர் சந்திப்பில், ஒரு செய்தியாளர் "நம் நாட்டில் தான் விஞ்ஞான சாஸ்திரம், வானியல், நட்சத்திரம், கோள்கள் அனைத்தும் அந்தக் காலத்திலேயே இருந்துள்ளது. அதற்கும் பஞ்சாங்கத்திற்கும் இன்றுள்ள ராக்கெட்ரிக்கும் ஏதும் தொடர்புள்ளதா?" என்று கேட்கிறார்.

அதற்குப் பதிலளித்த நடிகர் மாதவன், "நாம் மேற்கொண்ட மார்ஸ் மிஷனுக்காக அமெரிக்கா, நாசா, ரஷ்யா, சீனா, ஐரோப்பா போன்ற நாடுகள் பலமுறை 800 மில்லியன், 900 மில்லியன் என்று செலவழித்து, 30-ஆவது முறை, 32-ஆவது முறையில் தான், அதிநவீன இன்ஜின் தொழில்நுட்பத்தின் மூலமாக, செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்புவதில் வெற்றி பெற்றார்கள்.

ஆனால், இந்தியாவிடம் இருக்கும் இன்ஜின் மிகச் சிறியது. அவர்களுடைய விண்கலம் செல்லும் தொலைவை விடக் குறைவாகத்தான் செல்லும்.

அப்படியிருக்கும்போது, 2014ஆம் ஆண்டில், நம்பி நாராயணின் மருமகன் அருணன் மங்கள்யான் திட்டத்தின் இயக்குநராக இருந்தபோது, எந்த நேரத்தில், எந்த நொடியில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தைச் செலுத்தினால், செவ்வாய் கிரகத்தை செயற்கைக்கோள் சென்றடையும் என்பது பஞ்சாங்கத்தில் இருக்கும் 1000 வருடங்களுக்கு முன்பே கணித்து வைத்த செலஸ்டியல் வரைபடத்தைப் பயன்படுத்தி இந்தியா அனுப்பியது.

பஞ்சாங்க வானியல் வரைபடத்தைப் பார்த்து, பூமியைச் சுற்றி, நிலவைச் சுற்றி என்று ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி, ஒரு விளையாட்டு பொம்மையைப் போல் செவ்வாய் கிரகத்திற்குத் தட்டிவிட்டார்கள். அந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாகத் தனது வேலையைச் செய்தது.

இப்போதும் செவ்வாய் கிரகத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும் அந்த செயற்கைக்கோள் சாத்தியமானதற்கு நம்முடைய பஞ்சாங்கம் தான் காரணம்," என்று தெரிவித்திருந்தார்.

இதற்காக சமூக ஊடகங்களில் கேலி செய்யப்பட்டபோது, நடிகர் மாதவன் தன்னுடைய ட்விட்டர் பதிவில், "ஆல்மனாக் என்பதை தமிழில் பஞ்சாங்கம் என்று குறிப்பிட்டதற்கு எனக்கு இது தேவை தான். இந்த அளவுக்கு எனக்குத் தெரியாமல் இருந்துள்ளது. இருப்பினும் இரண்டே இன்ஜின்களை வைத்து செவ்வாய் கிரகத்தைச் சென்றடையும் திட்டத்தைச் சாத்தியப்படுத்திய சாதனையை நம்மால் மறுத்துவிட முடியாது. விகாஸ் இன்ஜின் ஒரு ராக்ஸ்டார்," என்று குறிப்பிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

பஞ்சாங்கம் இந்தியாவுக்கு மட்டுமானதில்லை

நடிகர் மாதவன் கூறுவதைப் போல் மங்கள்யான் திட்டத்தில் பஞ்சாங்கம் பயன்படுத்தப்பட்டதா, பஞ்சாங்கத்தில் செலஸ்டியல் வரைபடம், ராக்கெட் ஏவுவதற்கான அறிவியல் போன்றவையெல்லாம் பேசப்பட்டுள்ளனவா என்பதைப் பற்றியும் பஞ்சாங்கத்தின் பின்னணி பற்றியும் அறிந்துகொள்ள ஓய்வுபெற்ற அணுத்துறை விஞ்ஞானியும் ப்ரேக்த்ரூ சயின்ஸ் சொசைட்டியின் செயற்குழு உறுப்பினருமான டாக்டர்.வெங்கடேசனிடம் பேசினோம்.

அவர், "பஞ்சாங்கம் என்பதன் அடிப்படையில் இருக்கக்கூடிய நாட்காட்டி முறைக்கும் க்ரிகோரியன் நாட்காட்டி என்றழைக்கப்படும் நாட்காட்டி முறைக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

அது, தினசரி வானியல் நிகழ்வுகளைக் கண்காணித்து, கிரகங்கள், நட்சத்திரங்கள், சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம், அதேபோல் நிலவின் உதயம் மற்றும் அஸ்தமனம், அதன் வளர்பிறை, தேய்பிறை ஆகியவற்றைக் கணக்கிடுவதன் மூலம் மட்டுமே உருவாக்கப்பட்டது.

 

மாதவன் கூறியது போல் பஞ்சாங்கம் இன்றைய ராக்கெட் அறிவியலைப் பேசுகிறதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அப்போது மனிதர்களால் பார்க்க முடிந்தது ஐந்து கிரகங்களை மட்டுமே. ஆகையால், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று அவற்றுக்குப் பெயரிட்டனர். அதுபோக, ஞாயிறு என்று சூரியனையும் திங்கள் என்று நிலவையும் அடையாளப்படுத்தினர்.

இவற்றை அடிப்படையாக வைத்து, இந்திய நாகரிகங்களில் செய்யப்பட்ட கணிப்புகள் மற்றும் கண்காணிப்புகளின் மூலமாகச் செய்யப்பட்ட கணக்கீடுகள் ஆகியவை, ஏற்கெனவே, கிரேக்க, ரோம, அரேபிய நாகரிகங்களைப் போன்றவற்றோடு பரிமாறிக் கொள்ளபட்டுள்ளன. அவற்றில் இத்தகைய அறிவுப் பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. யுவான் சுவாங் போன்ற அறிஞர்கள் வருகையின்போது, அரசர்கள் வருகையின்போது உடன் வரும் பண்டிதர்களுடன் பரிமாறிக் கொள்வது என்று, நம்மிடமிருந்து மற்ற நாகரிகங்கள் வானியல் கண்காணிப்பு முறைகளைப் பெற்றுக் கொள்வதும் மற்ற நாகரிங்களிடம் இருந்து நாம் நாகரிகங்கள் பெற்றுக் கொள்வதும் நடந்துள்ளன.

ஆகவே பஞ்சாங்கம் என்பது இங்கு மட்டுமே இருக்கக்கூடிய பிரத்யேகமான விஷயமல்ல. உலகம் முழுக்கவுள்ள நாகரிகங்கள் முக்காலத்தில் இத்தகைய வானியல் கண்காணிப்பு மற்றும் கணக்கீடுகளைச் செய்துள்ளார்கள்.

 

மாதவன் கூறியது போல் பஞ்சாங்கம் இன்றைய ராக்கெட் அறிவியலைப் பேசுகிறதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இன்று பஞ்சாங்கம் என்று சொல்லும்போது மக்கள் அதைப் புரிந்துகொள்ளும் விதத்திற்கும் முன்னர் பஞ்சாங்கம் என்ற பெயரில் இருந்த அறிவுத் தொகுப்புக்கும் வேறுபாடு உள்ளது.

எப்போது மழை வரும், வேளாண்மையில் விதைகளை விதைப்பதற்குச் சரியான நேரம் எது என்பனவற்றை முடிவு செய்வதற்கு, எந்தக் காலகட்டத்தில் போருக்குச் சென்றால் வசதியான சூழல் நிலவும் என்பனவற்றைப் போல, காலநிலை மற்றும் பருவநிலைகளைப் புரிந்துகொண்டு பயன்பாட்டு அடிப்படையில் செயல்பட பஞ்சாங்கம் உதவியது.

இதைத் தாண்டி தனிமனித வாழ்வில் அதைப் பயன்படுத்தி எதிர்காலத்தை யூகிக்கும் பாதையில் அதைக் கொண்டு சென்றார்கள். அது அறிவியல்பூர்வமாகச் சாத்தியமில்லாதது. அதை சோதிடம் என்று கூறுகிறோம். அது அறிவியலுக்குப் புறம்பானது.

பஞ்சாங்கத்திலுள்ள பழங்கால அறிவியல் கணக்குகள் தோராயமாக சரியானவைதான். அவை அறிவியல்பூர்வமானவை தான். ஆனால், இங்கிருந்து செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் பாதையைக் கணக்கிடுவதற்கு மங்கள்யான் திட்டத்தில் பஞ்சாங்கம் பயன்படுத்தப்பட்டது என்பது உண்மையில்லை," என்று கூறுகிறார்.

 

மாதவன் கூறியது போல் பஞ்சாங்கம் இன்றைய ராக்கெட் அறிவியலைப் பேசுகிறதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பழங்கால அறிவியலே பஞ்சாங்கம்

மேலும், "இப்படியான ஒரு திரைப்படத்தின் மூலமாக, பஞ்சாங்கத்தை வைத்து தான் செவ்வாய் கிரக பயணப் பாதையைக் கணக்கிட்டார்கள் என்று கூறுவது, தவறான புரிதலைத் தருகிறது. உண்மை என்னவென்றால், பஞ்சாங்கத்தில் கூறப்பட்டிருக்கும் கோட்பாடுகள், கோள்களின் கால, இடமாற்ற கணக்கீடு முறைகள் சரியானவை தான் . ஆனால், துல்லியமானவை அல்ல. ஏனெனில், சூரியன், நிலவு மற்றும் ஐந்தே கிரகங்களைக் கணக்கில் கொண்டு பஞ்சாங்கம் வடிவமைக்கப்பட்டது. அவற்றின் நகர்வுகளையும் அவற்றின் நிலையான நட்சத்திரங்களையும் வைத்து மேற்கொள்ளப்பட்ட பழங்கால அறிவியல் தான் பஞ்சாங்கம்.

ஆனால், இந்தக் காலத்து அறிவியல் அதையெல்லாம் பல மடங்கு தாண்டிவிட்டது. அதுமட்டுமின்றி, ராக்கெட் மற்றும் செயற்கைக் கோளின் எறிதடங்களை முன்னமே துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருப்பார்கள். அதன்படி, ராக்கெட் ஏவப்பட்டு, திட்டமிட்ட பாதையில் பயணிக்கும். இதுகுறித்து நடிகர் மாதவன் கூறியதெல்லாம் சரிதான். ஆனால், ராக்கெட் எறிதடங்களை, செயற்கைக் கோளின் சுற்றுவட்டப் பாதையைக் கண்டறிவதற்கு பஞ்சாங்கத்தைத் தான் பயன்படுத்தினார்கள் என்பது தவறு. அது மிகவும் மேம்படுத்தப்பட்ட நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களின் உதவியோடு மிகத் துல்லியமாகக் கணக்கிடுப்பட்டுள்ளதாகும்.

நாம் பழங்கால வானியலை மதிக்க வேண்டியது அவசியம். இதேபோல், கிரேக்க, ரோம, அரேபிய, சீன நாகரிகங்களில் கூட இருக்கிறது. இவையெல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அவையனைத்தையும் நாம் மதிக்க வேண்டும். ஆனால், இப்போது சீன வானியல், அமெரிக்க வானியல், இந்திய வானியல் என்று தனித்தனியாக இல்லை. உலகளவில் நவீனமயமான மேம்படுத்தப்பட்ட ஒற்றை அறிவியலையே பின்பற்றுகிறோம்.

இன்று பஞ்சாங்கத்தை வைத்து மங்கள்யான் திட்டத்தைச் சாத்தியப்படுத்தினார்கள் என்று கூறுவது, மக்கள் மனதிலுள்ள சில மூட நம்பிக்கைகளோடு தொடர்புள்ள பஞ்சாங்கத்தை அதாவது சோதிடத்தை போற்றுவதாகிவிடும். ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருப்பதாகச் சொல்வதையும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மங்கள்யான் திட்டத்தைச் சாத்தியப்படுத்தியதையும் தொடர்பு படுத்தியதாகிவிடும். மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கைகளும் வலுப்பட்டுவிடும். அது அறிவியல்பூர்வமற்ற செயல்," என்று கூறினார்.

கலிலியோவும் பஞ்சாங்கமும்

பஞ்சாங்கத்தில் கூறப்பட்ட அறிவியலுக்கும் இப்போதுள்ள அறிவியலுக்குமான வேறுபாடு, அது இப்போதைய கணக்கீடுகளைப் போல் துல்லியமாக இல்லாததன் காரணம் ஆகியவை குறித்து கேட்டபோது, "பஞ்சாங்கத்தின் வானியல் பார்வை, பூமியை மையமாகக் கொண்டிருந்தது. பூமியைச் சுற்றித்தான் சூரியன், நிலவு, செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகியவை சுழன்றன என்ற பார்வையில் வானியல் நிகழ்வுகள் கண்காணிக்கப்பட்டன.

பூமியை மையமாகக் கொண்டது என்பதை அறிவியல்பூர்வமாக மாற்றி சூரியனை மையமாகக் கொண்டு கோள்கள் சுற்றுகின்றன என்பதை கலிலியோ நிரூபித்ததே, வெள்ளி கிரகத்தின் வளர்பிறை, தேய்பிறை வடிவங்களை வைத்து தான். சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் அதன் உள்வட்டத்தில் புதன், வெள்ளி ஆகிய கோள்கள் உள்ளன. பூமிக்கு வெளி வட்டத்தில் செவ்வாய் உள்ளது. ஆக உள்வட்டத்தில் இருக்கக்கூடிய கோள்கள் அவற்றின் சுற்றுவட்டப் பாதையில் சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே வரும்போது, சூரிய ஒளி அதன் மீது படுவதற்கும் சூரியனுக்குப் பின்புறத்தில் இருந்து நாம் பார்க்கும்போது நிலவைப் போல் முழுதாகவோ அல்லது பிறையாகவோ தெரிவதும் வெள்ளி கிரகத்தில் சாத்தியம்.

 

சூரிய மண்டலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கலிலியோ அதை தொலைநோக்கி முலமாகப் பார்த்தார். இப்போதுகூட அதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். நம் கண்களுக்கு முழுதாக இருப்பதைப் போல் தெரியக்கூடிய அந்த வெள்ளி கிரகம், தொலைநோக்கியில் பார்த்தால் வளர்பிறையாகவும் தேய்பிறையாகவும் தெரிவதை, பூமியை மையமாக வைத்துச் சுழலும் கோள்கள் என்ற கோட்பாட்டின் படி விளக்க முடியாது. அப்படி விளக்க முடியவில்லையே என்றபோது தான், கலிலியோ சூரியனை மையமாக வைத்துக் கணக்கிட்டுப் பார்த்தார்.

அப்போது, அதற்கான அறிவியல்பூர்வ விளக்கம் பொருந்தி வந்தது. சூரிய மையக் கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. வெள்ளி பிறையின் தோற்றத்தைச் சரியாகக் கணக்கிடுவதிலேயே புவிமைய கோட்பாடு கணக்கில் தவறும்போது, செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்கான பாதையைக் கணக்கிடுவதிலும் பஞ்சாங்கத்தைப் பயன்படுத்தினால் நிச்சயமாகப் பெரியளவில் வேறுபாடு இருக்கும்," என்று கூறினார் டாக்டர்.வெங்கடேசன்.

மேலும், "நடிகர் மாதவன் நம்பி நாராயணன் போன்ற ஒருவரின் வாழ்க்கையைப் படமாக நடித்திருப்பது மிகவும் பாராட்டத்தக்க விஷயம். அறிவியல் சார் திரைக்கதைகள் வருவது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால், இதுபோன்ற திரைப்படங்களில் நடிப்பவர்கள், அதீத உற்சாகத்தால் அறிவியலைத் தவறாகப் புரிந்துகொள்வதைத் தவிர்த்தால், அத்தகைய போலி அறிவியல் நம்பிக்கைகள் மக்களிடையேயும் அதிகரிப்பதைத் தடுக்கும்," என்று கூறினார்.

https://www.bbc.com/tamil/science-61952289

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.