Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்ஷக்களின் வீழ்ச்சியின் பாடங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ஷக்களின் வீழ்ச்சியின் பாடங்கள்

 

political.jpg

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது வெளிநாட்டு தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவரது குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர்,“ராஜபக்ஷக்களை மக்கள் தெரிவுசெய்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்யமுடியும்? மக்கள் விரும்பவில்லையானால் அவர்களை விரட்டுவார்கள்.சகல ராஜபக்ஷக்களும் கூண்டோடு விரட்டியடிக்கப்படுவார்கள்” என்று குறிப்பிட்டார். தற்போது நேர்காணலின் அந்த குறிப்பிட்ட பகுதியின் பதிவு சமூக ஊடகங்களில் பரவலாக உலாவருகிறது.

03__1_.jpg

கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து ராஜபக்ஷக்கள் அரசியலில் பங்கேற்று வந்தபோதிலும், ஒரு குடும்பமாக அவர்கள் அரசியலில் மட்டுமீறிய ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது 2005நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவின் வெற்றியேயாகும்.

அதற்கு பிறகுதான் அவரது சகோதரர்களும் பிள்ளைகளும் நெருங்கிய உறவினர்களும் அரசியலில் தீவிரமாக செல்வாக்கு செலுத்தத்தொடங்கினார்கள். ஆட்சிமுறையினதும் அரச இயந்திரத்தினதும் சகல கிளைகளிலும் அவர்கள் தங்கள் கொடுக்குகளை பரவியிருக்கிறார்கள்.

ஆட்சியதிகாரம் என்பது தங்களது தனிப்பட்ட சொத்து என்பது போன்று அவர்கள் நடந்துகொண்டார்கள். இலங்கை அரசியல் முன்னரும் சில குடும்பங்களின் செல்வாக்கின் கீழ் இருந்துவந்திருக்கின்ற போதிலும் ராஜபக்ஷக்கள் போன்று நாகரிக உலகம் அருவருக்கத்தக்கதாக அதிகாரவெறியுடனும் சொத்துக்களைக் குவிக்கும் பேராசையுடனும் குடும்ப ஆதிக்க அரசியலை அந்த குடும்பங்கள் நிலைப்படுத்தவில்லை.

இலங்கையில் இதுகாலவரையில் பதவியில் இருந்திருக்கக்கூடிய அரசாங்கங்களில் ராஜபக்ஷ அரசாங்கமே உச்சபட்ச ஊழல் மோசடிகளும் அதிகார துஷ்பிரயோகமும் சட்டத்தின் ஆட்சியின் சீர்குலைவும் கொண்டதாக அம்பலப்படுத்தப்பட்டு நிற்கிறது. அரசியலுக்கும் ஆட்சிமுறைக்கும் கெடுதியாவை எவையோ அவையெல்லாவற்றினதும் சின்னங்களாக ராஜபக்ஷக்களை நாடும் மக்களும் உலகமும் அடையாளப்படுத்துகின்றன.

ராஜபக்ஷக்களை மக்கள் விரும்பவில்லையென்றால் கூண்டோடு விரட்டியடிக்கப்படுவார்கள் என்று கூறிய மஹிந்தவின் கண் முன்னாலேயே அவர் கட்டியெழுப்பிய “குடும்ப சாம்ராச்சியம்” இன்று நிர்மூலமாகியிருக்கிறது. அவர் அதைக் கூறியபோது இவ்வளவு விரைவாக அந்த விரட்டியடிப்பு நடக்கும் என்று அவரோ அல்லது வேறு எவருமோ எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

01.jpg

தங்களின் செல்வாக்கை பல வருடங்களுக்கு அசைக்கமுடியாது என்ற அசட்டுத்துணிச்சலுடனான நம்பிக்கை ராஜபக்ஷக்களுக்கு இருந்தது. இலங்கையில் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைக் கொண்ட தலைவராக விளங்கிய மகிந்த இன்று எங்கே இருக்கிறார் என்பதே மக்களுக்கு தெரியாமல் இருக்கிறது.

பொருளாதார நெருக்கடியில் இருந்துவிடுபட நிவாரணம் கோரி வீதிகளில் இறங்கி மக்கள் செய்யத்தொடங்கிய போராட்டம் நாளடைவில் முக்கியமான அரசியல் கோரிக்கைகளை வலியுறுத்தும் மக்கள் கிளர்ச்சியாக மாறியது. ராஜபக்ஷக்கள் அரசியல் பதவிகளை விட்டு முற்றுமுழுதாக வெளியேறவேண்டும் என்பதும் அந்த கோரிக்கைகளில் ஒன்று.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மக்களின் வீதிப்போராட்டங்கள் தீவிரமடையத்தொடங்கியதை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்;ஷவின் அரசாங்கத்துக்கு நெருக்குதல்கள் அதிகரித்தன.

ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலகவேண்டும் என்று மக்கள் கோரினார்கள். இந்த மக்கள் போராட்டங்களின் உலகறிந்த சின்னமாக கொழும்பு காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ அரசியல் கிராமம் விளங்குகிறது. ஜனாதிபதி வேறு வழியின்றி அமைச்சரவையை பதவி விலகுமாறு கேட்டதையடுத்து சகல அமைச்சர்களும் (ராஜபக்ஷக்கள் உட்பட) ஏப்ரல் 4 ல் பதவி விலகினார்கள்.

ஆனால், பிரதமர் மஹிந்த தொடர்ந்தும் பதவியில் இருந்தார். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுவதாக இருந்தால் கூட தானே பிரதமர் என்றும் அவர் விதண்டாவாதம் பேசினார். ஆனால், மே 9 பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையில் இருந்து கட்டவிழ்த்துவிடப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களும் குண்டர்களும் காலிமுகத்திடல் ‘அறகலய’ போராட்டக்காரர்கள் மீது மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை அடுத்து நாட்டின் பல பாகங்களிலும் வன்முறைகள் வெடித்தன.

அதற்கு பிறகு மஹிந்தவினால் தொடர்ந்தும் பிரதமர் பதவியில் இருக்கமுடியவில்லை. சகோதரர் கோட்டாபயவுக்கு பதவிவிலகல் கடிதத்தை அனுப்பிவிட்டு அலரிமாளிகையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வெளியேறி திருகோணமலை கடற்படை முகாமில் குடும்பத்தவர்களுடன் தஞ்சமடைய வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.பொதுஜன பெரமுன அரசியல்வாதிகள் பலரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. ராஜபக்ஷக்களினால் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் உள்ள அவர்களின் பரம்பரைச் சொத்துக்களைக் கூட காப்பாற்ற முடியவில்லை.

02__1_.jpg

மூன்று தசாப்த கால உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டவந்த ‘போர் நாயகன்’ என்று துதிபாடப்பட்ட கோட்டாபய வன்முறைகளை கட்டுப்படுத்த முடியாமல் கையறுநிலையில் இருந்தார்.

எந்தவொரு ராஜபக்ஷவும் இல்லாத அரசாங்கம் ஒன்றுக்கு இவ்வளவு விரைவாக தலைமை தாங்கவேண்டிவரும் என்று அவர் நினைத்துப் பார்த்திருக்கவே மாட்டார். பலம்பொருந்திய - துணிவாற்றல் கொண்ட ஒரு ஆட்சியாளர் நாட்டுக்கு அவசியம் என்று வலியுறுத்தி சிங்கள பௌத்த தேசியவாத சக்திகள் அதிகாரத்துக்கு கொண்டுவந்த ஒரு ஜனாதிபதி மிகவும் பலவீனமானவராக - தன்னுடன் முரண்பட்ட முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவைக் கூட பிரதமராக பதவியேற்க வருமாறு கேட்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இறுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக கோட்டாபய நியமிக்கவேண்டியேற்பட்டது.

மே 9 மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகினார். ஜூன் 9 இன்னொரு சகோதரரும் நாட்டை இன்றைய வங்குரோத்து நிலைக்கு கொண்டுவந்த சூத்திரதாரிகளில் ஒருவருமான முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்துவிலகினார். ஜூலை 9 கோட்டாபய மக்கள் கிளர்ச்சிக்கு முகங்கொடுக்கமுடியாமல் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறி இன்னமும் அடையாளம் தெரியவராத ஒரு இடத்தில் தங்கியிருக்கிறார். இலங்கை கடற்பரப்பில் கடற்படைக்கப்பல் ஒன்றில் அவர் இருப்பதாக அல்லது இராணுவ முகாம் ஒன்றில் இருப்பதாக செய்திகள் அடிபட்டன.

00.jpg

அயல் நாடொன்றுக்கு சென்றிருக்கும் ஜனாதிபதி இன்றைய தினம் நாடு திரும்புவார் என்று பி.பி.சி.க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பின்னர் தான் அவ்வாறு தவறுதலாக கூறிவிட்டதாக மறுப்புக் கூறினார். பிரபலமான சர்வதேச ஊடகத்துக்கு அவ்வாறு கூறிவிட்டு பின்னர் அவர் பின்வாங்கியதன் பின்னணியில் உள்ள சூட்சுமம் என்னவோ?

ஜூலை 9 இலங்கையின் அரசியல் வரலாற்றில் நிலையான இடத்தைப் பெற்றுவிட்டது. நாட்டின் நாலா பகுதிகளிலும் இருந்து தற்போதைய போக்குவரத்து நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தலைநகர் கொழும்பில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜனாதிபதியை மாளிகையில் இருந்து வெளியேறச் செய்திருக்கிறார்கள்.

அவர் பதவி விலகுவதாக சபாநாயகர் மூலமாக நாட்டுக்கு அறிவித்தார்.பதவிவிலகல் கடிதத்தில் நேற்றைய தினம் ஜனாதிபதி கைச்சாத்திட்டதாகவும் அந்த கடிதம் சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. எதிரணி அரசியல் கட்சிகள் ஜனாதிபதியும் பிரதமரும் பதவிவிலகவேண்டும் என்று வெறுமனே கோரிக்கைகளை முன்வைத்தனவே தவிர, அதை நடைமுறையில் சாத்தியமாக்கியிருப்பது மக்கள் சக்தியேயாகும்.

ஜனாதிபதி மாளிகையும் ஜனாதிபதி செயலகமும் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையும் இப்போது ஆட்சியாளர்களின் கைகளில் இல்லை.மக்கள் இன்று ஐந்தாவது நாளாக அவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அங்கெல்லாம் மக்கள் நடந்துகொள்கின்ற முறை அவர்கள் தங்கள் போராட்டத்தின் வெற்றி காரணமாக ஒரு பரவசத்தில் இருப்பதையே வெளிக்காட்டுகிறது.

69இலட்சம் மக்களின் ஆணை தனக்கு இருப்பதால் பதவி விலகவேண்டிய தேவை தனக்கு இல்லை என்றும் பதவிக்காலத்தின் எஞ்சிய இரு வருடங்களுக்கும் அதிகாரத்தில் இருக்கப்போவதாகவும் தோல்வி கண்ட ஒரு ஜனாதிபதியாக தான் விலகிச்செல்ல விரும்பவில்லை என்றும் கூறிக்கொண்டிருந்த கோட்டாபய மக்களின் கோரிக்கைக்கு இணங்க முன்கூட்டியே பதவியில் இருந்து விலகியிருந்தால் எஞ்சியிருந்த கௌரவமாவது மிஞ்சியிருக்கும். மக்களின் எதிர்ப்புக்கு பயந்து ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறிச் சென்ற இலங்கையின் முதல் ஆட்சியாளர் என்ற அபகீர்த்தியை இறுதியில் அவர் சம்பாதித்திருக்கும் பரிதாப நிலை. மக்கள் தேர்தல்களில் அரசியல்வாதிகளுக்கு வழங்கும் ஆணை ஒரு வழிப்பாதையல்ல.மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அக்கறையுடன் செயற்படுவதே அந்த ஆணைக்கு தாங்கள் தொடர்ந்தும் உரிமை கோருவதற்கான தகுதியை கொடுக்கும் என்பதை அரசியல்வாதிகள் பொதுவில் விளங்கிக்கொள்வதில்லை.

நாட்டை தனது சகோதரர்களுடன் சேர்ந்து வங்குரோத்து நிலைக்கு கொண்டுவந்த ஜனாதிபதி கோட்டாபய தனக்கு இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ஆணை வழங்கிய 69 இலட்சம் வாக்காளர்களும் எரிபொருட்கள் இல்லாமல்ரூபவ் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் மருந்து வகைகள் இல்லாமல்ரூபவ் மின்சாரம் இல்லாமல் திணறிக்கொண்டிருக்கும் இலங்கையர்களுக்குள் தான் அடங்குகிறார்கள் என்பதை நிச்சயம் புரிந்துகொண்டிருக்கவேண்டும்.

இலங்கை மக்கள் இத்தகைய ஒரு மாபெரும் கிளர்ச்சியை முன்னெடுப்பார்கள் என்று அரசியல் வர்க்கத்தின் பெரும்பகுதி ஆரம்பத்தில் உண்மையில் எதிர்பார்க்கவில்லை. ஒரு தசாப்தத்துக்கு முன்னர் அரபு நாடுகளில் எதேச்சாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக மூண்ட மக்கள் கிளர்ச்சிகளை ‘அரபு வசந்தம்’ என்று அழைக்கிறார்கள்.

ஆனால், அந்த வசந்தத்தை எல்லாம் புரட்டிப்போடக்கூடியதாக இலங்கை மக்கள் தங்களுக்கென்று தனியான வசந்தத்தை வெற்றிகரமாக முன்னெடுத்திருக்கிறார்கள். உலகின் வேறு பகுதிகளில் இடம்பெறக்கூடிய மக்கள் கிளர்ச்சிகளின்போது இனிமேல் ‘கோட்டா கோ கம’ போன்ற அரசியல் கிராமங்களை அந்த மக்கள் உருவாக்கக்கூடும்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை இலங்கையில் அறிமுகப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தனக்கு இருந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்ற முடியாதே தவிர, மற்றைய எல்லாவற்றையும் செய்யமுடியும் என்று கூறினார்.

இன்று அவரையும் விட கூடுதல் அதிகாரங்களை தன்வசம் வைத்திருந்த ஜனாதிபதியை மக்கள் சக்தி மாளிகையை விட்டு ஓடவைத்திருக்கிறது என்பதை நேரில் காண அவர் உயிருடன் இல்லை.மக்களின் எழுச்சியின் முன்னால் எந்த அதிகாரமும் நிலைத்து நிற்கமுடியாது. ராஜபக்ஷக்களின் தவறுகள் பற்றி பேசுவதற்கு முன்னால் பலரும் முன்னுக்கும் பின்னுக்கும் பார்த்த காலம் ஒன்று இருந்தது.

ஆனால் இன்று அதே ராஜபக்ஷக்களை வெளியில் காணமுடியவில்லை.கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு வெளிநாடு செல்வதற்கு விமான நிலையம் சென்ற ஒரு ராஜபக்ச பயணிகளின் ஆர்ப்பாட்டம் மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் ஆட்சேபம் காரணமாக திரும்பிச்செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

ராஜபக்ஷக்களின் வீழ்ச்சியில் இருந்து பல அரசியல் பாடங்களை கற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. ஊழல் மோசடிகள், அதிகார துஷ்பிரயோகங்கள்ரூபவ் குடும்ப ஆதிக்க அரசியல் போன்ற தீய போக்குகளுக்கு இடமளிக்காத ஒரு புதிய அரசியல் கலாசாரத்தையே மக்கள் எதிர்பார்கிறார்கள்.

225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக போராட்டக் களங்களில் எழுப்பப்படுகின்ற முழக்கங்கள் இன்றைய அரசியல் வர்க்கம் முழுமையின் மீதும் மக்களுக்கு இருக்கின்ற வெறுப்பை பிரகாசமாக வெளிக்காட்டுகிறது.முறைமை மாற்றத்தை வேண்டி நிற்கும் மக்களின் போராட்டங்களை திசைதிருப்புவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படக்கூடிய ஆபத்தும் இருக்கிறது.அரபு வசந்தம் இடம்பெற்ற நாடுகளில் அந்த மக்கள் கிளர்ச்சிகளினால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் மறுதலையாக்கப்பட்ட நிலைவரமே பெரும்பாலும் இன்று காணப்படுகிறது.

மக்கள் எதிர்நோக்குகின்ற உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசைதிருப்பிவைத்திருப்பதற்கு ராஜபக்ஷக்கள் போர் வெற்றியை தாராளமாக பயன்படுத்தினார்கள். தங்களது தவறான ஆட்சியையும் பொதுச்சொத்து சூறையாடல்களையும் மூடி மறைப்பதற்கு அவர்கள் சமூகங்களை பிளவுபடுத்துகின்ற அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் இடையறாது தீவிரமாக முன்னெடுத்தார்கள்.

முன்னைய ஆட்சியாளர்களும் சிங்கள பௌத்த கேடயத்தை தங்களுக்கு அனுகூலமான முறையில் பயன்படுத்தினார்கள் என்றபோதிலும் ராஜபக்சாக்களின் ஆட்சியில் அது உச்சபட்சத்துக்கு போனது. ராஜபக்ஷக்களின் வீழ்ச்சியை சிங்கள பௌத்த பேரினவாத அரசியலின் தோல்வியாகவும் நிச்சயம் பார்க்கவேண்டும்.

சிங்கள மக்களை பேரினவாத அரசியல் சகதிக்குள் அமிழ்த்தி வைத்திருந்தவர்கள் இன்று முழு நாட்டு மக்களையும் அத்தியாவசிய பண்டங்களைத் தேடி வீதிகளில் அலையவிட்டிருக்கிறார்கள். கிடைக்காத எரிபொருட்களுக்காக வரிசைகளில் காத்துநின்ற பலர் மரணமடைந்திருக்கிறார்கள். அடுத்தநாளை எப்படி சமாளிக்கப்போகின்றோம் என்று மக்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். பல தாய்மார் பிள்ளைகளுக்கு ஒருவேளை உண்ணக்கொடுக்க முடியாத அவலத்தில் அவர்களை ஆற்றில் தள்ளிவிட்டு தாங்களும் தற்கொலைக்கு முயற்சித்த பல சம்பவங்கள் பற்றி செய்திகள் வருகின்றன.

04.jpg

சிங்கள பௌத்த தேசியவாதத்தையும் தேசிய பாதுகாப்பையும் முன்னிறுத்தி ராஜபக்ஷக்களை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவருவதில் தீவிர பங்களிப்புச் செய்த சிங்கள கடும்போக்கு அமைப்புக்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வெளிச்சத்தைக் கண்டு ஓடி மறையும் கரப்பான் பூச்சிகள் போன்று பதுங்கியிருக்கிறார்கள்.

அதனால், சகல சமூகங்களையும் ஒருசேரப் பாதிக்கின்ற பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்கும் தவறான ஆட்சியை மூடிமறைப்பதற்கும் இனிமேலும் பெரும்பான்மையினவாத அணிதிரட்டல்களுக்கு இடமளிக்கக்கூடாது. தற்போதைய மக்கள் கிளர்ச்சியின் விளைவாக தோன்றக்கூடிய பதிய அரசியல் சக்திகள் பெரும்பான்மையினவாத அரசியலின் இதுவரையான தீயவிளைவுகளை அடையாளம் கண்டு அதற்கு மீண்டும் இடங்கொடுக்காத வகையில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க முன்வராவிட்டால், இந்த வரலாற்று முக்கியத்துவ கிளர்ச்சியின் பயன்கள் வீணாகிப் போகும்.

பெரும்பான்மையின ஜனநாயக நாடுகளில் தெரிவுசெய்யப்படுகின்ற தலைவர்கள் மக்களைப் பிளவுபடுத்தி சமூகத்தை துருவமயப்படுத்தும் அணுகுமுறைகள் மற்றும் கொள்கைகள் மூலம் மாத்திரம் இனிமேலும் தங்களை பலப்படுத்துவது சாத்தியமில்லை என்பதும் இன்றைய எமது நெருக்கடி உணர்த்துகின்ற இன்னொரு பாடமாகும்.

 

https://www.virakesari.lk/article/131358

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.