Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முட்டுச்சந்தியில் முனகும் தேசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முட்டுச்சந்தியில் முனகும் தேசம்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

மக்கள் போராட்டங்களின் வீரியம் என்னவென்பதை இலங்கையர்களும் குறிப்பாக அரசியல்வாதிகளும் உணர்ந்த தருணம் மகத்தானது. ஆனால் இலங்கை அரசியலில் பேரிடர்கள் வரிசைகட்டி நிற்கின்றன. எதிர்கட்சித் தலைவர் ஒருபேரிடர் என்றால் சபாநாயகர் இன்னொரு பேரிடர். எதிர்கட்சிகளும் பாராளுமன்றும் இதன் தொடர்ச்சி. இந்தப் பின்னணியிலேயே இந்நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிகளை மக்கள் தேடவேண்டியிருக்கிறது.

ஹிட்டலராகத் தன்னை உருவகித்துக் கொண்டவர் இறுதியில் கோமாளியாகி நாட்டை விட்டுத் தப்பியோட நேர்ந்திருப்பது அவல நகைச்சுவை. இதை சாத்தியமாக்கிய பெருமை போராட்டக்காரர்களையே சாரும். கடந்த 9ம் திகதி மக்கள் திரள் உறுதியானதும் இறுதியானதுமான செய்தியைச் சொல்லிவிட்ட பிறகும் அரசியல்வாதிகளின் நடத்தையானது யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. இதுவே இலங்கையின் இன்றைய முக்கியமான நெருக்கடி.

இன்று முனைப்படைந்திருக்கின்ற அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான வலுவோ, மனஉறுதியோ, புத்தாக்கக் கற்பனையோ எந்தவொரு அரசியல்வாதியிடமும் இல்லை. அதேவேளை அரசியல்வாதிகள் கூட்டாக பாராளுமன்றத்திற்கு வெளியே ஒரு தீர்வை மக்கள் தேடிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பலர் இப்போது பாராளுமன்றத்தை இயங்க அனுமதியுங்கள், ஜனநாயக முறையில் தீர்வைத் தேடுங்கள் என்று பாடம் எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த நடத்தை புதிதல்ல. கடந்த மேமாதம் 9ம் திகதி பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவிவிலகி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றபோது பொருளாதாரப் பிரச்சனையைத் தீர்க்க ரணிலுக்கு அவகாசம் கொடுக்கச் சொல்லியும் போராட்டக்காரர்களை அமைதியாக இருக்கும்படியும் கோரியவர்கள் தான் இவர்கள்.

இன்று இலங்கை ஒரு புரட்சிகர மாற்றத்தை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இது தாராண்மைவாத ஜனநாயக விழுமியங்களில் ஊறித்திளைத்தவர்களுக்கு உவப்பானதாக இல்லை. போராட்டக்காரர்கள் அமைதி காக்க வேண்டும், வன்முறையைப் பயன்படுத்தக் கூடாது. சாத்வீகப் போராட்டத்தால் அனைத்தும் சாத்தியம் என்று தொடர்ந்து சொல்லிவருகிறார்கள். ஆனால் இலங்கை நிலவரம் சொல்லும் செய்தி வேறுவகைப்பட்டதாகவே இருக்கிறது.

அமைதியான போராட்டக்காரர்களின் மீது வன்முறையை ஏவியது யார் மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல் அதிகாரக்கதிரைகளில் அமர்ந்திருப்பது யார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம், கண்ணீர்ப்புகைப் பிரயோகம், நீர்த்தாரைப் பிரயோகம் என அனைத்து வழிகளிலும் அடக்குமுறைகளை ஏவுவோர் யார். இந்தக் கேள்விகளுக்கான விடையை முதலில் தேடுவோம். பின்னர் போராட்டக்காரர்களுக்கு அறம் பற்றியும் அகிம்சை பற்றியும் பாடமெடுக்கலாம்.

இன்று இலங்கை மூன்று நெருக்கடிகளை எதிர்நோக்குகிறது. முதலாவதும் அடிப்படையானதுமான சட்டம் ஒழுங்கு சார்ந்த நெருக்கடி இரண்டாவது இதற்கு அடிப்படையான அரசியல் நெருக்கடி, முன்றாவது பொருளாதார நெருக்கடி. இதில் கவனிக்கவேண்டியது யாதெனில் மூன்று மாதங்களுக்கு முன்னர் ஒரு பொருளாதார நெருக்கடியாக வெளிப்பட்ட இலங்கையின் சூழலானது பின்னர் அரசியல் நெருக்கடியாகி இன்று சட்ட ஒழுங்கு சார்ந்த நெருக்கடியாகியுள்ளது. இந்த சட்ட ஒழுங்கு நெருக்கடி இரண்டு பரிமாணங்களை உடையது.

முதற்பரிமாணம் அரசின் வகிபாகம் குறித்தது. அரசபடைகளினதும் காவற்றுறையினதும் நடத்தை பற்றியது. இரண்டாவது பரிமாணம் போராட்டக்காரர்களின் செயற்பாடுகள் பற்றியது. இவ்விரண்டு பரிமாணங்களும் ஏதோவொரு வகையில் ஒரு உடன்பாட்டுக்கும் ஒத்திசைவுக்கும் வந்தாக வேண்டும். இன்று இவ்விரண்டும் வெவ்வேறுபட்ட நேரடி முரண்பாட்டுக்கு வழிசெய்யக்கூடிய இலக்குகளால் முன்னகர்த்தப்படுகிறது. இந்நிலை விரைவில் மாற்றமடைய வேண்டும். இல்லாவிடில் இரத்தம் சிந்துவது தவிர்க்கவியலாதாகி விடும்.

இவ்விரு பரிமாணங்களும் ஒத்திசைவாகச் செயற்பட அரசியற்தலைமைகளிடையே விரிந்த பார்வையும் போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் பற்றிய அக்கறையும் அவசியம். துரதிஸ்ட வசமாக இலங்கையின் அரசியற் தலைமைகளிடையே இதைக் காணக் கிடைக்கவில்லை. இக்கட்டுரை எழுதி முடிக்கும்வரை ஜனாதிபதி பதவி விலகவில்லை. விலகுவதற்கான சாத்தியக்கூறுகளும் தெரியவில்லை. தனது ஜனாதிபதிக் கனவை ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றியுள்ளார். இனிப் பிரச்சனை அக்கதிரையில் எவ்வளவு காலம் குந்தியிருப்பது என்பதைப் பற்றியதே.

இலங்கையின் இன்றைய நிலவரம் பல வழிகளில் அரபுவசந்தைத்தை நினைவூட்டுகிறது. அதிலிருந்து நாம் சில பாடங்களைக் கற்றுக் கொண்டு முன்செல்லவியலும். இலங்கையின் நிகழ்வுகள் பலருக்கு அதிர்ச்சியூட்டுவது போலவே 2011இன் அரபுலகக் கிளர்ச்சிகள் பலருக்கு வியப்பூட்டின் சிலருக்கு அதிர்வூட்டின. ஓவ்வொரு தனிமனிதரதும் நிறுவனத்தினதும் வர்க்கம், கருத்தியல், அரசியல் நிலைப்பாடு என்பவற்றுக்கமைய எதிர்வினைகள் வேறுபட்டன.

துனீசியாவை உலுக்கிய வெகுசனக் கிளர்ச்சி, மீள எகிப்தில் நிகழ்ந்தபோது, தொற்றக்கூடியதாகத் தோன்றிய அச் சமூக ஒழுங்கீனத்தைப்; பரவவிடின் அது தமக்கு நட்பான மத்திய கிழக்கு ஆட்சிகளை நிலை குலைத்து, மத்திய கிழக்கிலும் அப்பாலும்  தமது மூலோபாய நலன்களைக் கெடுக்கலாம் என்பதால், அமெரிக்காவினதும் மேற்கு ஐரோப்பாவினதும் ஆட்சிகள் அதைக் கடுமையாகக் கருத்திற் கொண்டன. இது இன்றைய இலங்கைக்கும் பொருந்தும்.

கடந்த ஒரு தசாப்தகாலமாக உலகெங்கும் இவ்வாறான மக்கள் போராட்டங்கள் நடந்துள்ளன. எதிர்ப்புக்கள் பொதுசன அதிருப்தியை வெளிப்படுத்துவன. அவை தம்மளவிற் புரட்சியின் வித்துக்களாகா என்பதும் அதைப் புரட்சிகரத் தன்மையுடையதாக மாற்றுவது அவசியம் என்பதே நாம் கற்றுக் கொள்ளக்கூடியது.

அண்மைக்காலங்களில் ஐரோப்பாவெங்கும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. எனினும், அரசாங்கங்கள் மாறியும், அவை அரசாங்கங்கக் கொள்கைகளில் புறக்கணிக்கத்தக்க தாக்கத்தையே விளைத்தன. கிரேக்கத்தின் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்த நிகழ்வுகள் சிறிது நம்பிக்கையூட்டின, அது நீண்டகாலம் நிலைக்கவில்லை. அதேபோல பொருளதார நெருக்கடியின் விளைவால் ஆர்ஜென்டீனா, லெபனான் போன்ற நாடுகளில் முற்போக்கான மாற்றங்கள் நிகழ்ந்தபோதும் ஆளும் வர்க்கத்துக்குச் சவால் விடுத்து முதலாளிய அரச இயந்திரத்தை எதிர்கொண்டு சமூக மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய  ஒரு வெகுசன அமைப்பு உருவாக, எதிர்ப்பியக்கம் இன்னும் வெகுதூரம் செல்லவேண்டி இருக்கிறது என்பதே இவ்வனுபங்கள் சொல்லும் பாடமாகும்.

இலங்கையில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது யாதெனில் வெகுசன அதிருப்தி எதிர்ப்புக்களாக வெளிப்படும் அதே வேளை, எதிர்ப்பு என்பது முற்போக்காளர்களின் ஏகபோகமல்ல, எதிர்ப்புக்கள் யாவுமே சாராம்சத்தில் முற்போக்கானவையுமல்ல. அதைவி;ட, ஃபாசிஸவாதிகள் உட்படப், பிற்போக்காளர்களும் வெகுசன அதிருப்தியைத் தமக்கு வாய்ப்பாக்கி யுள்ளனர். அரசியற் பொருளாதார நெருக்கடிக் காலங்களில் பிற்போக்கிற்கும் ஃபாசிஸத்திற்கும் உதவும் விதத்தில் வெகுசன அதிருப்தி உற்பத்தியாகியுமுள்ளது. இடதுசாரி, முற்போக்குச் சக்திகள் பலவீனமாயோ நன்கு ஸ்தாபனப்படாதோ இருக்கும் இடங்களிற், தமது நோக்கங்களை ஒப்பேற்றுமாறு பிற்போக்காளர்கள் மக்களை அணிதிரட்டுகின்றனர்.  20ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஃபாசிஸவாதிகள் அதை வெற்றிகமாகச் செய்துள்ளனர். இந்தப் பாதையை இலங்கை தெரியாமல் இருப்பதை நாம் உறுதிசெய்தாக வேண்டும்.

இப்போது எம்முன்னுள்ள கேள்வி யாதெனில்: விரயமிக்க நுகர்வை ஊக்குவிப்பதுடன் நாட்டைக் கடனுக்குட் தள்ளும் விருத்தி பற்றிய கருத்துகளைக் கொண்ட தற்போதைய கொள்கைகளை விலக்கித் தேசியப் பொருளாதார அடிப்படையில் பொருளாதாரப் நெருக்கடிக்குத் தீர்வை முன்வைப்பதும்ளூ அனைத்துத் தேசிய இனங்களதும் சமத்துவத்தினதும் அதிகரப் பரவலாக்கலினதும்    சுயநிர்ணய உரிமையினதும் அடிப்படையில் தேசிய இனப் பிரச்சனையை  விளிப்பதும்ளூ நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதும் ஏகாதிபத்திய எதிர்ப்பை உயர்த்திப் பிடிப்பதுமான ஒரு அயற் கொள்கையைக் கடைப்பிடிப்பதுமான ஒரு அரசாங்கத்தையும் ஆட்சியை உருவாக்க எம்மால் என்ன செய்யவியலும் என்பதைச் சிந்திப்பதே அவசரமானதும் அவசியமானதுமாகும்.

நிறைவேற்றதிகாரச் சனாதிபதி முறையால் வக்கிரமடைந்த பாராளுமன்ற சனநாயகம் எனும் ஏமாற்று எவ்வாறு நாட்டை அழிவுப் பாதையிற் செலுத்தியுள்ளது என்பதை மக்கள் முன்னெப்போதையும் விட இப்போது உணர்ந்திருக்கிறார்கள். மாற்று அரசியலின் தேவை முன்னெப்போதினும் அவசரமாக நெருக்குகிறது. அதை நோக்கி நகரப் போகிறோமா அல்லது முட்டுச்சந்தியில் மாட்டிச் சீரழியப்போகிறோமா என்பதே வினா.

பாரளுமன்ற அரசியல்வாதிகளின் நம்பகம் வீழ்கையில், அதிகாரத்துக்கும் பதவிக்கும் சொத்துக்கும் ஆவலால் உந்தப்படும் அவர்களின் பச்சையான சந்தர்ப்பவாதம் அரசியல்வாதிகள் மீது மக்களின் வெறுப்பைக் கூட்டியுள்ளது. இத்தகையதொரு அரசியற் குழப்பச் சூழலில் உண்மையாகவே மக்களை நோக்கிய சாத்தியமானதொரு அரசியல் மாற்று இருப்பின், அது வலியதொரு வெகுசன இயக்கத்தின் தோற்றத்துக்கும் மக்களின் நலனுக்கான அடிப்படை அரசியல் மாற்றத்துக்கும் வழிகோலும். மாறாக, நடப்பதேதெனின், மக்களின் விரக்தியைப் பாவித்து ஃபாசிசப் பேர்வழிகள் ஆதாயமடைகின்றனர்.

ஹிட்லர் போன்ற வலியதொரு தலைவர் தேவை என்ற கருத்தை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட பிம்பம் எம் கண்களின் முன்னே சுக்குநூறானதை நாம் அனைவரும் கண்டுள்ளோம். இன்னொரு ஹிட்லருக்கான வேட்டையை சிலர் தொடங்கியுள்ளார்கள். சீரழிந்த அதே பாதையில் பயணிக்கப் போகிறோமா இல்லையா என்பதே நாடு தொடர்ந்தும் முட்டுச்சந்தியில் சீரழியப் போகிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும்.  
 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முட்டுச்சந்தியில்-முனகும்-தேசம்/91-300481

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.