Jump to content

திருவள்ளூர் பள்ளி மாணவி சந்தேக மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் - முழு விவரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருவள்ளூர் பள்ளி மாணவி சந்தேக மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் - முழு விவரம்

7 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பள்ளி மாணவி சந்தேக மரணம்

தமிழ்நாட்டின் திருவள்ளூரில் உள்ள பள்ளி மாணவி உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உள்ளூர் காவல் நிலையம் கூறியதைத் தொடர்ந்து மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை விசாரணை மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) சத்ய பிரியா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழச்சேரியில் அரசு உதவி பெறும் தனியார் மகளிர் மேல் நிலைப்பள்ளி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். இதில் திருத்தணி அருகே தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய தம்பதியின் மகள் இந்த பள்ளியின் விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல விடுதியில் இருந்து பள்ளிக்கு புறப்பட்ட மாணவி, மற்ற மாணவிகள் காலை உணவு அருந்தச் சென்ற நேரத்தில் தமது அறையில் தூக்கிட்ட நிலையில் கிடந்தார். இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவம் இடத்துக்கு வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்ய அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, மாணவி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார் என்று மட்டுமே தகவல் கூறப்பட்டதாக மாணவியின் உறவினர்கள் தெரிவித்தனர். அவரது நிலை தொடர்பாக பெற்றோருக்கு முறைப்படி பள்ளி நிர்வாகம் தெரியப்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டது.

 

இதையடுத்து மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகக் கூறி அவரது சொந்த ஊரான தெக்கலூரில் மாணவியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சாலைகளில் கற்களால் தடுப்புகளை அமைத்து அரசு பேருந்துகளை சிறைப் பிடித்தனர்.

இந்த நிலையில், மாணவி உயிரிழந்த தகவல் அவரது சொந்த கிராமத்தில் பரவியதை தொடர்ந்து அவரது உறவினர்களும் கிராமத்தினரும் பள்ளி வளாகத்தை நோக்கி வரத் தொடங்கினர். இதையடுத்து முன்னெச்சரிக்கையாக காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து போலீசார் பெருமளவில் கிராமத்தில் குவிக்கப்பட்டனர்.

வட்டார வருவாய்த்துறை அலுவலர் அர்ஷத் பேகம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சாரதி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு

 

சாலை மறியல் மாணவி மரணம்

இதற்கிடையே, மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பபள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் மாணவியுடன் தங்கி இருந்த சக மாணவிகள், விடுதி காப்பாளர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யப் பிரியா மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கல்யாண் நேரடியாக தனித்தனியே விசாரணை மேற்கொண்டார்கள்.

மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து விடுதியில் தங்கிப் படிக்கும் மற்ற மாணவிகளின் பெற்றோரும் பல்வேறு கிராமத்திலிருந்து அங்கு வந்தனர். யாரையும் பள்ளி வளாகத்துக்குள் போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால் சக மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியதால், விடுதியில் தங்கியிருந்த மற்ற சக மாணவிகளை பெற்றோருடன் விடுதி நிர்வாகம் அனுப்பி வைத்ததது.

சிபிசிஐடிக்கு மாற்றம்

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்ய பிரியா, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி பள்ளிகளில் ஏதாவது மாணவர்கள் உயிரிழக்க நேர்ந்தால் அந்த வழக்கை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும். அதன் அடிப்படையில் மாணவி உயிரிழந்த வழக்கை முதல் கட்டமாக சந்தேக மரண வழக்காக பதிவு செய்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுகிறோம். இதுவரை நடத்திய விசாரணையில் மாணவியை மாடியில் இருந்து தள்ளியோ மாடியில் இருந்து விழுந்ததாகவோ தெரிய வரவில்லை. அதற்கான காயங்களோ வேறு அறிகுறியோ அவரது உடலில் இல்லை. தூக்கிட்டதாலேயே அவர் இறந்துள்ளார். சிபிசிஐடி விசாரணைக்கு பிறகே மற்ற விவரங்கள் தெரிய வரும்," என்று கூறினார். 

https://www.bbc.com/tamil/india-62292201

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருவள்ளூர் மாணவி மரணம்: பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு

5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

திருவள்ளூர் மாணவி மரணம்

திருவள்ளூரில் உயிரிழந்த பள்ளி மாணவியின் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், முறையான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்று கூறி 'உடலை வாங்க மாட்டோம் என்று மாணவியின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

என்ன நடந்தது?

திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு காவல் எல்லைக்கு உட்பட்ட கீழச்சேரி பகுதியில் இயங்கும் தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி விடுதியில் தங்கி பயின்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஜூலை 26) காலை மாணவி சடலமாக மீட்கப்பட்டார்.

மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார் திருவள்ளூர் மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மப்பேடு காவல் துறையினர் இதனை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.

இதனிடையே காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா, திருவள்ளூர் எஸ்பி கல்யாண் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் பள்ளி மற்றும் விடுதியில் ஆய்வு செய்தனர். அவர்களுடன், தடயவியல் வல்லுநர் குழுவும் ஆய்வு செய்தது. பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

 
 

திருவள்ளூர்

திருவள்ளூர் சிபிசிஐடி ஆய்வாளர் திரிபுரசுந்தரி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து சிபிசிஐடி அதிகாரிகள் நேரில் வந்து பள்ளி மற்றும் விடுதியில் மாணவி உயிரிழந்த இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும், பள்ளி விடுதி காப்பாளர்களிடம் மாணவியின் ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களிடமும் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அதிவிரைவு படை போலீசார் மருத்துவமனை வளாகம் முழுவதும் குவிக்கப்பட்டனர்.

உறவினர்கள் போராட்டம்

இந்நிலையில் இன்று காலை மாணவியின் உடல் உடற்கூறு ஆய்வு நடைபெற்றது. நீதிமன்ற அறிவுறுத்தல் படி உடற்கூறாய்வு முழுமையான வீடியோ பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து உறவினர்களிடம் மாணவியின் உடல் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் மாணவி எப்படி, எதனால், எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் தெளிவுபடுத்த வேண்டும் எனக்கூறி மாணவியின் உறவினர்கள் உடலை பெற்றுக்கொள்ள சமாதிக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

மேலும் போலீசாரின் விசாரணை முன்னேற்றத்தை முறையாக தெரிவிக்காவிட்டால் மாணவியின் உடலை வாங்கிக் கொள்ள மாட்டோம் என்றார்கள். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு இருந்தார்கள். அதேபோல் அதிவிரைவு படை போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.

உறவினர்கள் குற்றச்சாட்டு

முன்னதாக மாணவியின் உடலை வாங்க மறுத்து செய்தியாளர்களிடம் பேசிய உறவினர் ஒருவர், "மாணவி உயிரிழப்பதற்கு முன்பு இரவு 9 மணிக்கு அவர் பெற்றோருடன் தொலைபேசியில் நல்லபடியாக பேசினார். ஆனால் காலை மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்கள். எப்படி? எதனால்?

'எதற்காக தற்கொலை செய்து கொண்டார்?' என்பது குறித்து தற்போது வரை முறையாக யாரும் தெரிவிக்கவில்லை. விசாரணை முன்னேற்றத்தை முறையாக தெரிவிக்காவிட்டால் மாணவியின் உடலை நாங்கள் வாங்கிக் கொள்ள மாட்டோம்" என்றார்.

 

மாணவியின் உறவினர் ரேவதி

 

படக்குறிப்பு,

மாணவியின் உறவினர்

சமரச பேச்சுவார்த்தை

இதற்கிடையில் காவல்துறை உயர் அதிகாரிகள், வருவாய் துறையினர் உள்ளிட்டோர் மாணவியின் பெற்றோர் மற்றும் சகோதரரிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்கள். மாணவி தற்கொலைக்கு உரிய விளக்கம் வேண்டும், தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என பெற்றோர்களின் கோரிக்கை முழுவதையும் நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததை அடுத்து மாணவியின் உடலை பெற்றோர்கள் பெற்றுக்கொள்ள சம்பந்தம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மாணவியின் உடலை அவரது சொந்த ஊரான தெக்களூர் கிராமத்திற்கு நல்லடக்கம் செய்ய போலீஸ் பாதுகாப்போடு எடுத்துச் சென்றனர்.

முன்னதாக பள்ளி மற்றும் விடுதியில் ஆய்வு செய்த திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், "இந்த வழக்கு விசாரணை வெளிப்படை தன்மையாக நடந்து வருவதாகவும், தம்முடைய கவனத்திற்கு வந்தவுடன் இந்த வழக்கில் துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது" என்றும் தெரிவித்திருந்தார்.

https://www.bbc.com/tamil/india-62302187

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.