Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்த கட்டம்: ‘அரகலய’வுக்கு ஆப்படித்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கட்டம்: ‘அரகலய’வுக்கு ஆப்படித்தல்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

இலங்கை, இன்று ஒரு முட்டுச்சந்தில் நிற்கிறது. புதிய ஜனாதிபதியின் வருகை எதையுமே மாற்றிவிடப் போவதுமில்லை; இலங்கையில் ஜனநாயகம் மலரப்போவதும் இல்லை. 

முன்னெவரையும் விட, மிக மோசமான சர்வாதிகாரியாகத் தன்னால் இயங்கவியலும் என்பதை, ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற 24 மணி நேரத்துக்குள் நிரூபித்துள்ளார்.  ரணில் மீதான, ‘மீட்பர்’, ‘ஜனநாயகத்தின் காவலர்’ போன்ற விம்பங்கள் உடைந்து, சுக்குநூறானது நல்லது. இருந்தாலும் இன்னமும் அதைத் தாங்கி நிற்போர் உண்டு. 

வரலாறு காணாத மக்கள் எழுச்சியொன்றை இலங்கை கண்டுள்ளது. இது அதிகாரபீடங்களை அசைத்துள்ளது. மக்கள் எழுச்சி குறித்த நம்பிக்கைகளை விதைத்துள்ளது. மக்களால் அதிகாரத்தில் உள்ளவர்களை அகற்றவியலும் என்பதை, இந்த ‘அரகலய’ செய்து காட்டியுள்ளது. 

இது ஆபத்தானது என்று அதிகார வர்க்கம் அறியும்; அரசியல்வாதிகள் அறிவார்கள். இவர்கள் இருவரையும் நம்பியுள்ள ஏவல் வர்க்கமும் அறியும்; இவர்கள் எல்லோரையும் ஆட்டுவிக்கும் ‘சர்வதேச சமூகமும்’ அறியும். 
எனவே, போராட்டத்தை மழுங்கடித்தலும் சேறுபூசலும் அவதூறுபரப்புதலும் அவசியமாகிறது. அதன்மூலமே, போராட்டத்தை வலுவிழக்கவும் நம்பிக்கை இழக்கவும் செய்ய முடியும். அதற்கான கட்டமே, இப்போது அரங்கேறுகிறது. இந்தப் போராட்டத்தையும் அதுசார்ந்து உருவாகியுள்ள உரையாடல்களையும், அவசரமாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதே அதிகாரவர்க்கத்தின் விருப்பமாகும். இதில், ஆளும் எதிர்க்கட்சி, ரணில் ஆதரவு, ரணில் எதிர்ப்பு, கோட்டா ஆதரவு என்ற எந்த வேறுபாடும் இன்றி, அதிகாரவர்க்கத்தினர் ஒன்றுபட்டு உள்ளனர்.  

image_968e248874.jpg

மூன்று அடிப்படையான தேவைகளுக்காக, இந்தப் போராட்டத்துக்கு முடிவு கட்டவேண்டும் என்று அதிகாரத்தில் உள்ளோர் விரும்புகிறார்கள். 
முதலாவது, அதிகாரவர்க்கம் சவாலுக்கு உள்ளாவதை எப்போதும் விரும்புவதில்லை. தன்னைச் சவாலுக்கு உட்படுத்துவோரை, எப்படியும் பழிவாங்கியே தீருவது என்பது அதிகாரத்தின் குணம். 

இலங்கையில், கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்ற விடயங்கள், அதிகாரவர்க்கத்தின் நலன்களுக்கு எதிரானவை. இப்போராட்டங்கள் தொடருமிடத்து, அதிகாரத்தின் இருப்பே கேள்விக்கு உள்ளாகும். இதனால், ‘அரகலய’வைச் சரிக்கட்டுவது  தவிர்க்கவியலாதது. 

எல்லாவற்றிலும் மேலாக, இன்னுமொருமுறை இவ்வாறானதொரு போராட்டத்தை, இலங்கையர்கள் தொடங்காமல் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு, இவர்களுக்குப் ‘பாடம் புகட்ட வேண்டும்’; இதுதான் அதிகார வர்க்கத்தின் மனநிலை.  

இரண்டாவது, இலங்கையின் அண்மைக்கால மாற்றங்கள், புதிதாக ஏற்படுகின்ற அரசாங்கம், போராட்டக்காரர்களுடன் பேசவேண்டியதன் தேவையை உருவாக்கியது. இதன்மூலம் அரசாங்கமும் பாராளுமன்ற உறுப்பினர்களும் போராட்டக்காரர்களுக்கும் மக்களுக்கும் பதில்சொல்லக் கடப்பாடு உடையவர்களாகினார்கள். இது அதிகாரத்துக்கு உவப்பானதல்ல. 

இந்த நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே, பாராளுமன்றின் மீஉயர் தன்மை பற்றிப் பேசி, அதிகாரத்தை அவர்கள் தமக்குள் பகிர்ந்து கொண்டார்கள். அரசாங்கமோ பாராளுமன்றோ, தமது செயல்களுக்குப் பொறுப்புச் சொல்லும் ஓர் ஏற்பாட்டை விரும்பவில்லை. இதனால், ஏதாவதொரு வழியில் போராட்டக்காரர்களை வீட்டுக்கு அனுப்புவது தவிர்க்க இயலாததாகும். 

இல்லாவிட்டால் விரும்பியோ - விரும்பாமலோ, போராட்டக்காரர்களுடன் பேச வேண்டியிருக்கும். இதை எப்படியாவது இல்லாமல் செய்துவிட, அதிகாரவர்க்கம் துடிக்கிறது. சட்டரீதியாகவும் சட்டத்துக்கு முரணாகவும் அதிகாரவர்க்கம் இதைச் செய்து முடிக்கும். இதை அடுத்த சிலவாரங்கள் நிகழவுள்ள காட்சிகள் உறுதிப்படுத்தும். 

மூன்றாவது, சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்றுக் கொள்வதாயின் இலங்கை ஏராளமான கட்டமைப்பு மாற்றங்களைச் செய்தாக வேண்டும். இக்கட்டமைப்பு மாற்றங்கள் இலங்கையில் எஞ்சியிருக்கின்ற சமூகப் பாதுகாப்பையும் இல்லாதொழிக்கவல்லவை. இலவசக் கல்வி, இலவச மருத்துவம் உள்ளிட்ட சமூகநலத் திட்டங்களை இல்லாதொழித்து, தனியார்மயத்தை ஊக்குவித்து, அரசதுறையை புனர்நிர்மாணம் செய்வதன் பெயரால் வேலையிழப்புகள் என அனைத்தையும் செய்வதன் ஊடே, சர்வதேச நாணய நிதியத்தை நாட முடியும். வலுவான மக்கள் போராட்டம் உயிர்ப்புடன் இருக்கும்வரை இது சாத்தியமில்லை. ஏனெனில் மக்கள் இதை எதிர்ப்பார்கள். எனவே, ‘அரகலய’வை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். 

சர்வதேச நாணய நிதியம் கோருகின்ற ‘அரசியல் ஸ்திரத்தன்மை’ என்பது, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, கட்டமைப்பு மாற்றங்களை எதுவித எதிர்ப்பும் இன்றி நடைமுறைப்படுத்தத் தேவையான சூழலாகும்.அதாவது, சர்வதேச நாணய நிதியமும் மேற்குலகமும் கோருகின்ற ஸ்திரத்தன்மை என்பதன் பொருள், போராட்டக்காரர்களை வீட்டுக்கு அனுப்புவதும் மக்கள் எதிர்ப்பேதும் தெரிவிக்காமல் அமைதிகாப்பதை உறுதிப்படுத்துவதுமே ஆகும். 

இன்று, மூன்று போக்குளைகளையும் காணக்கிடைக்கிறது. முதலாவது, அரச ஊழியர்கள் (பொலிஸார், இராணுவத்தினர், ஏனையோர்) சட்டத்தை நிலைநாட்டுவது என்பதன் போர்வையில், மக்களுக்கு எதிரான வன்முறையைப் பயன்படுத்துகிறார்கள். ஒருவாரத்துக்கு முன்னர்வரை போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக இருந்தவர்கள் எல்லாம், இன்று சட்டம்-ஒழுங்கு பற்றி வகுப்பெடுக்கிறார்கள். 

இந்த மாற்றம் என்பது, கோட்டாவை வீட்டுக்கு அனுப்பப் போராடியபோது, இளைஞர்கள் வீரர்களாகவும் நாயகர்களாகவும் தெரிந்தார்கள். இன்று அவர்கள் பயங்கரவாதிகளாகத் தெரிகிறார்கள். இதே குரலே பாராளுமன்றிலும் ஒலிக்கிறது. 

இரண்டாவது போக்கு, அதிகார வர்க்கத்தினர் இன்று வெளிப்படையாகவே வன்முறையை ஆதரிக்கிறார்கள். போராட்டக்காரர்கள் மீது வன்முறை ஏவப்படுவதை நியாயப்படுத்துவதோடு அது தேவையானது என்றும் முன்மொழிகிறார்கள்.

 இவ்வாறு கோருபவர்கள் தங்கள் வாழ்நாளில் வன்முறைக்கு ஆளாகாதவர்கள். இலங்கைச் சமூகம் எவ்வாறு ஒரு வன்முறைச் சமூகமாக மாறியிருக்கிறது என்பதும் மூன்று தசாப்தகால யுத்தம் வன்முறைக்கும் காணாமலாக்கப்படுதலுக்கும் சித்திரவதைக்கும் மௌன அங்கிகாரத்தை வழங்கியுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. 

மூன்றாவது, கடந்தவாரம் போராட்டக்காரர்கள் மீது ஏவப்பட்ட வன்முறையைப் பார்த்து, பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அரசாங்கத்தின் செயலைக் கண்டித்துள்ளனர். இவர்கள் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, சிறுபான்மையினர் மீது வன்முறை தொடர்ச்சியாக ஏவப்பட்டபோது, கண்டும்காணாமல் இருந்தவர்கள். 

இவ்வாறானதொரு செயலை இலங்கை அரசாங்கம் செய்வது, வெட்டக்கேடானது என்றும் இவை சர்வதேச அரங்கில் இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்றும் அறிக்கைகளையும் கருத்துகளையும் வெளியிட்டுள்ளனர். 

இன்றுவரை, ‘அரச பயங்கரவாதம்’ என்ற சொற்பதத்தைக் கவனமாகத் தவிர்ப்பவர்களே இவர்கள்தான். இப்போதைய கூற்றுகள் எழுப்புகிற கேள்வி யாதெனில்,  நீண்டதுயிலில் இருந்து இப்போதுதான் இவர்கள் எழுந்தார்களா அல்லது, இது தெரிந்தெடுத்த மறதியா?

இலங்கை புதியதொரு திசைவழியில் பயணிப்பதற்கான வாய்ப்பை இன்னொருமுறை தவறவிடுகிறது என்றே தோன்றுகிறது. இலங்கையைப் பீடித்துள்ள சிங்கள - பௌத்த பேரினவாதமும் அதிகார துஷ்பிரயோகமும் ஊழலும், இலங்கையின் முன்னேற்றகரமான பாதைக்குத் தொடர்ந்து குழிபறிக்கின்றன.  

மேற்சொன்ன மூன்று போக்குகளுக்குமான அடிப்படை என்ன? மக்களின் நீண்ட போராட்டத்தின் பின்னரும் இவ்வாறான குறுந்தேசியவாத நிலைப்பாடுகள் ஏன் முனைப்படைகின்றன என்பது, ஆழ விசாரிக்கப்பட வேண்டியவை. இவை, ஆழ விசாரிக்கப்படாமல் இலங்கை ஒரு நாடாக முன்செல்லவியலாது. 

இலங்கையர்கள் ஒரு சமூகமாகத் தங்களுக்குள் சில கேள்விகளைக் கேட்டாக வேண்டும். இந்தப் போராட்டத்தின் வெற்றிக்கு உரிமையுடையவர்கள் அரசியல்வாதிகள் அல்லர். தொடர்ச்சியான வன்முறைக்கும் துன்பத்துக்கும்  ஆளாகியும் தொடர்ச்சியாகக் களத்தில் நின்ற இளைஞர்களே ஆவார்.
அவர்களின் தியாகமே இதை சாத்தியமாக்கியது. அவர்கள் தங்களுக்காக மட்டும் போராடவில்லை. நம் அனைவருக்காகவும் நமது எதிர்காலத்துக்காகவுமே போராடினார்கள்; போராடுகிறார்கள். இன்று நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் அவர்களை, நாம் பாதுகாக்கப் போகிறோமா அல்லது நாம் உண்டு; நமது வேலையுண்டு என்று இருக்கப் போகிறோமா? 

மக்களால் தெரிந்து பாராளுமன்றுக்கு அனுப்பப்பட்டோர், தொடர்ந்தும் மக்கள் விரோதமாக இயங்குவதை அனுமதிப்பதா? நாங்கள் அனுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய எமது நிலைப்பாடு என்ன? எப்போது நாம், அவர்களை கேள்வி கேட்கப் போகிறோம்? அவர்களைத் தொடர்ந்தும் தெரிவுசெய்து, எமது குழந்தைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கப் போகிறோமா?

இந்த நெருக்கடியிலும் பெற்றோல், டீசல் மாபியாக்களும் மிகப்பெரிய கறுப்புச் சந்தையும் உருவாகியிருக்கிறது. இதை நாம் எவ்வாறு அனுமதித்தோம்? ஏன் கேள்வி கேட்க மறுத்தோம்? நெருக்கடியிலும் சமூகப் பொறுப்பின்றி சுயநலமாக இயங்கும் ஒரு சமூகம் விடிவுக்கு தகுதியானதா?

‘அரகலய’ தொடங்கியது முதல், நான் வலியுறுத்தியவற்றில் ஒன்று நியாயத்துக்கும்  உரிமைக்கும் நீதிக்குமான போராட்டத்தில் ஒருகணம் கண்ணயர்ந்தாலும் பாசிசம் எனும் கொடுந்தண்டனை எம்மை வந்து சேரும் என்பதாகும். நாம் கண்ணயர்ந்தோமா இல்லையா என்பதை, அடுத்து இலங்கையில் அரங்கேறும் காட்சிகள் கோடுகாட்டும்.  
 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அடுத்த-கட்டம்-அரகலய-வுக்கு-ஆப்படித்தல்/91-301411

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.