Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனக்கப்பலின் வருகை ! சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் அயலுறவுக் கொள்கையில் மீளாய்வு தேவை !! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனக்கப்பலின் வருகை ! சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் அயலுறவுக் கொள்கையில் மீளாய்வு தேவை !! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

By Rajeeban

30 Aug, 2022 | 10:07 AM

image

சிறிலங்கா சென்று திரும்பியுள்ள சீனாவின் யுவான் வாங் - 5 கப்பல் விவகாரம், சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மீளாய்வு செய்ய வேண்டிய உடனடித் தேவையை காட்டுகிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளதோடு, உண்மையில் சிறிலங்கா யாருக்கு விசுவாசம் என்பதனையும் இவ்விடயம் வெளிக்காட்டியுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஓகஸ்ற் 22ம் நாள் இக்கப்பல் இலங்கைத் துறைமுகமான அம்பாந்தோட்டையிலிருந்து  புறப்பட்டு விட்டாலும், இவ்விவகாரம் சிறிலங்கா தொடர்பில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பாதுகாப்பு - இராஜதந்திர நிலையில் கவலையினை ஏற்படுத்தியிருந்தது.

99 ஆண்டுகால குத்தகையில் சீனத்தின் கைகளில் அம்பாந்தோட்டைத் துறைமுகம் இருப்பது முக்கியமான மூலோபாய விளைவுகளைக் கருக்கொண்டிருக்கும் நிலையில், பன்னாட்டுச் சட்டம், இறைமை, பொருளியல் அச்சுறுத்தல் ஆகியவை பற்றி ஆய்வு நடத்த பெல்ஜியம்-பிரசெல்ஸில் உள்ள உலகப்புகழ் பெற்ற கடல்சார் சட்டநிறுவனம் ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமர்த்தியிருந்தது. அந்நிறுவனம் சமர்பித்திருந்த ஆய்வறிக்கையின் (https://tgte-us.org/wp-content/uploads/2022/08/Expert-Opinion_Hambantota-Port-Project.pdf) அடிப்படையில் யுவான் வாங் - 5 கப்பல் விவகாரம் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரவிக்கப்பட்டுள்ளதாவது,

கப்பல் நிறுத்தப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகம் இந்தியாவிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது சீனத்தின் 99 ஆண்டுக் குத்தகையில் உள்ளது. அமெரிக்க உதவிக் குடியரசுத் தலைவர் மைக் பென்ஸ் 2018ஆம் ஆண்டு சீனம் பற்றி ஆற்றிய முக்கிய உரையில், அம்பாந்தோட்டை சீனப் படைத் தளமாகக் கூடும் என்று எச்சரித்தார். அம்பாந்தோட்டை இருக்குமிடம் முக்கியமான வணிகத் தடங்களை ஒட்டி இருப்பதும், இந்தியாவுக்கு நெருக்கத்தில் இருப்பதும் மைக் பென்சின் கவலை நியாயம் எனக் காட்டுகிறது.  

அம்பாந்தோட்டைத் துறைமுகம் சீனத்தின் குத்தகையில் இருப்பது முக்கியமான மூலோபாய விளைவுகளைக் கருக்கொண்டிருப்பதாகும். 2017ம் ஆண்டு, 99 ஆண்டுக் குத்தகை ஒப்பந்தம் ஒப்பமிடப்பட்டதைத் தொடர்ந்து பன்னாட்டுச் சட்டம், இறைமை, பொருளியல் அச்சுறுத்தல் ஆகியவை பற்றி ஆய்வு நடத்த பிரசெல்ஸில் உள்ள புகழ் பெற்ற கடல்சார் சட்ட நிறுவனம் ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமர்த்தியது. அம்பாந்தோட்டைத் துறைமுகம் ஆசியாவிலிருந்து ஐரோப்பாவுக்குச் செல்லும் முதன்மையான கடல் வழியிலிருந்து 10 கடல்மைல்களுக்குள் முக்கிய அமைவிடம் கொண்டிருப்பது கடல்சார் பட்டுப்பாதையில் அருமையான வாய்ப்பாகிறது. இது வணிக மற்றும் முதலீட்டுத் தூண்களுக்கப்பால் புவிசார் அரசியல் தன்மையும் மூலோபாயம் மற்றும் பாதுகாப்பு வகைப் பரிமாணமும் கொண்டதாகும்.  சீன அயலுறவுத் துறை அமைச்சர் வாங் லி 2015இல் சிறிலங்காவை 'கடல்சார் பட்டுப்பாதையில் மிளிரும் முத்து' என்று வர்ணித்தார் என்பதையும் ஆய்வு எடுத்துக்காட்டியது.
2013ஆம் ஆண்டு சீனாவும் சிறிலங்காவும் தங்கள் உறவை மூலோபாயம் வகைக் கூட்டுறவாகத் தரமுயர்த்திக் கொண்டன. இன்னுங்கூட நெருக்கமான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கும் உட்கட்டமைப்புத் திட்டங்களில் சீன ஈடுபாட்டைக் கூடுதலாக்குவதற்கும் அழைப்பு விடுக்கும் கூட்டறிக்கையில் ஒப்பமிட்டன. முந்தைய சந்தர்ப்பங்களில் சிறிலங்கா அரசு ஒரு சீன நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புத்  துறைமுக நகரம் வர அனுமதி வழங்கிய போது இந்தியா எதிர்வினை ஆற்றியது. 
2016 ஏப்ரல் 7ம் நாள் சீனாவும் சிறிலங்காவும் ஒப்பமிட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை இருநாடுகளும் தம்மிடையே வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒத்துழைப்புத் துறைகளில் பாதுகாப்பு, இடர்காப்பு தொடர்பான சிக்கல்களையும் குறிப்பிடுவதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.  சிறிலங்கா அதிகாரமளிப்பதைப் பொறுத்து அம்பாந்தோட்டையை இராணுவ நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதற்கான கூறுகள் இந்த உடன்படிக்கையில் உள்ளன எனக் கூறப்படுகின்றன. ஆயினும் உடன்படிக்கையின் இரசகியத்தன்மை காரணமாக, அம்பாந்தோட்டைத் துறைமுகம் இராணுவப் பயன்பாட்டிலிருந்து முறைப்படி விலக்குப் பெற்றுள்ளதா இல்லையா என்று உறுதியாகத் தெரியவில்லை என ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் பொதுத்தளத்தில் கிடைக்கும் திட்ட ஆவணத்தில் இப்படியொரு கூறு இடம்பெறவில்லை என்று ஆய்வறிக்கை அழுத்தமாகச் சொல்கிறது. ஆனால் உடன்படிக்கையிலோ (வேறு திட்ட ஆவணத்திலோ) இந்தக் கூறு உள்ளபடியே இடம்பெற்றாலும் கூட, சிறிலங்கா நலிந்து மெலிந்து சார்புநிலைப்பட்டிருப்பதால், இப்படியொரு கூறு செயல்திறமிக்கதாக இருக்குமா எனபது கேள்விக்குரியதே என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுவான் வாங் கப்பலின் வருகையை ஒருமுறை நடக்கும் நிகழ்வாகப் பார்க்க முடியாது. இந்த வருகை அம்பாந்தோட்டை சீனத்துக்கு எதிர்காலத்தில் மூலோபாய வகையில் காலூன்ற வழியமைத்துக் கொடுத்துள்ளது. இந்தியாவின் முன்னாள் அயலுறவுச் செயலரும் பாதுகாப்பு ஆலோசகருமான திரு சிவசங்கர மேனன் 'அம்பாந்தோட்டையில் முதலீடு செய்வதை நியாயப்படுத்த ஒரே வழி தேசிய பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் மக்கள் விடுதலை இராணுவத்தை உள்ளே கொண்டுவரமுடியும் என்பதே' என்றார்.
சிங்களத்தின் இந்திய எதிர்புணர்வு
சிறிலங்கா கடுமையான பொருளியல் நெருக்கடியில் சிக்கியிருக்க, இந்தியாதான் கிட்டத்தட்ட 3.5 பில்லியன் உதவி வழங்கியது. தமிழர்களுக்கு நேராக உதவி அனுப்பும்படி இந்தியத் தலைமையமைச்சர் மாண்புமிகு நரேந்திர மோதியையும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலினையும் தமிழர்கள் கேட்டுக் கொண்டார்கள். சிறிலங்கா அரசுக்கு உதவி செய்யும் போது உதவிக்கு நிபந்தனையாக 1987ம் ஆண்டின் இந்திய இலங்கை உடன்படிக்கையைச் செயலாக்கும் படியும், குறிப்பாக சிறிலங்காவின் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய வதிவிடமாக அங்கீகரிக்கும் படியும் கோர வேண்டும் என்பது தமிழர் கோரிக்கை. ஆனால் இந்திய அரசினர் நமக்குத் தெரிந்த வரை எவ்வித நிபந்தகனைகளும் இல்லாமல் தமது நல்லெண்ணத்தின் வெளிப்பாடாய் நேராக சிறிலங்கா அரசுக்கே தமது உதவியை அனுப்பி வைத்தனர். 
இராஜதந்திர அவதானிகளின் பார்வையில், யுவான் வாங்-5 கப்பல் வருகையில் முகமை பெறுவது சீனக் கப்பல் வந்தது என்பதன்று, அதற்கு சிறிலங்கா எப்படி எதிர்வினை ஆற்றியது என்பதே. யுவான் வாங்-5 வர அனுமதிக்கும் சிறிலங்காவின் முடிவு சில வட்டாரங்களில் நியாயப்படுத்தப்படுகிறது; எப்படியென்றால், சர்வதேசய நாணய நிதியம் (ஐஎம்எவ்) மீட்சியுதவி பெறுவதற்கு, சீனாவிடம் பட்டுள்ள கடனை மீள்கட்டமைக்க அந்த நாட்டுடன் பேச வேண்டும், ஆகவே சிறிலங்கா சீனத்தைப் பகைத்துக் கொள்ள முடியாது. மேலும் சிங்களரின் ஆதிக்கத்தில் உள்ள சிறிலங்காவின் அதிகார வர்க்கம் கருத்தியலாக சீனத்தின் பக்கம் சாய்ந்துள்ளது என்றும் நியாயப்படுத்துகின்றனர். சிங்கள அரசியல் சமூகத்தில் இந்திய எதிர்ப்புணர்ச்சி அதை விடவும் ஆழமாக உள்ளது என்பதே உண்மை. 
அனைத்து சிங்களக் குழந்தைகளுக்கும் கற்றுத்தரப்படும் தொன்மைக்கால சிங்களப் புராணமாகிய மகாவம்சம் இந்தியர்களைப் படையெடுப்பாளர்களாகச் சித்திரிக்கிறது. இந்தியாவுக்கு எதிராகப் போர் மூண்ட போதெல்லாம், சிறிலங்கா எப்போதுமே இந்துவல்லாத பாகிஸ்தானையும் பௌத்தச் சாய்வுள்ள சீனத்தையுமே ஆதரித்திருப்பது வரலாறு. 1971இல் இந்திய-பாகிஸ்தான் போரின் போது இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுக்க சிறிலங்காவின் கொழும்பு வானிலையத்தை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டது. 1987ஆம் ஆண்டு கொழும்பில் இந்தியாவுக்கு எதிர்நகர்வாக பம்பாய் வெங்காயத்துக்கும் மைசூர் பருப்புக்கும் 'பெரிய வெங்காயம்' என்றும் 'சிவப்புப் பருப்பு' என்றும் பெயர் மாற்றப்பட்டது. இந்திய எதிர்ப்புணர்ச்சி கட்சி எல்லைகளைக் கடந்து பரவி நிற்கிறது. 99 ஆண்டு அம்பாந்தோட்டை குத்தகைக்கு ஒப்பமிட்டது கோத்தாபய இராஜாக்சே ஆட்சியல்ல, 'நல்லாட்சி'யின் தூண்கள் மைத்திரிபால சிறிசேனாவும் ரணில் விக்கிரமசிங்கருமே. 
சீனத்துரும்பு சீட்டு
ஒரே சீனம் என்ற கொள்கையில் சிறிலங்கா உறுதியாக இருப்பதாகவும் அண்மையில் 'நான்சி பெலோசி தாய்வான் பயணம் தொடர்பாக தானாக ஒரு நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளார்' என்றும் அண்மையில் ரணில் கீச்சிடுகை (டுவீட்) செய்ததும் கருத்துரைத்ததும் இந்தக் கட்டத்தில் தேவையற்றது. இது சிறிலங்காவினது சீன ஆதரவுச் சாய்வின் தெளிவான வெளிப்பாடாகும். இந்தியாவிடம் சலுகை பெற சீனத்துடன் மேலும் கூட்டாளியாகும் அச்சுறுத்தலைப் பயன்படுத்தி சிறிலங்கா சீனச் 'துரும்பை' ஆடுகிறது. எப்போதுமே சிறிலங்கா ஒரே நேரத்தில் 'இந்தியக் கறியையும் சீனக் சூப்பும்' உண்ண விரும்புகிறது. சிறிலங்கா இந்தியாவிடமும் சீனத்திடமும் நட்புக் கொண்டிருப்பதாக எப்போதும் சொல்லிக் கொள்கிறது. 2019 மாவீரர் நாள் அறிக்கையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கூறியது போல, சீனத்துக்கும் இந்தியாவுக்கும் போட்டி கடுமையாகும் போது சிறிலங்காவால் இந்த ஆட்டம் ஆட முடியாமற்போகும். யுவான் வாங்-5 இதைக் காட்டி விட்டது. சிறிலங்காவின் உண்மையான சார்பை அம்பலமாக்கி விட்டது. ஆகஸ்டு 15ஆம் நாள் நடந்த இன்னொன்றையும் கவனித்தாக வேண்டும்: சீனம் கட்டிக் கொடுத்த பாகிஸ்தானியக் கப்பல் வங்கதேசத்தில் நுழைய அனுமதிக்கப்படாத நிலையில் சிறிலங்காவுக்கு வருகை தர அனுமதிக்கப்பட்டது.  
சிறிலங்காவின் நட்டுப்புநாடல்ல ! தமிழ்நாட்டு சட்டசபை
சிறிலங்கா நட்பு நாடென்று இந்தியாவும் என்றும் பறைசாற்றுகிறது. ஆனால், 2013 மார்ச்சு 27ஆம் நாள் தமிழ்நாடு சட்டப்பேரவை இயற்றிய தீர்மானம் கூறுவது போல், இந்தியா சிறிலங்காவை 'நட்பு நாடு' என்று சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு அறிவுரைக் கழகத்தின் முன்னாள் உறுப்பினர் பிரம்ம செல்லானி கூறியது போல், 'வங்குரோத்து நிலையில் உள்ள சிறிலங்கா போன்ற ஒரு சிறிய நாடு தனது வணிகத் துறைமுகமாகிய அம்பாந்தோட்டையில் சீன வேவுக்கப்பல் ஒன்றுக்கு வரவேற்பளித்து இராஜதந்திர வகையில் புது தில்லியின் முகத்தில் அறைந்ததாகும்.  அத்துடன் இச்சம்பவம் இந்தியாவின் சுரத்தற்ற அயலுறவுக் கொள்கையை மட்டுமல்லாமல், தன் மூலோபாய பின்தளத்திலேயே இந்தியாவின் செல்வாக்கு சரிவதையும் நினைவூட்டுவதாக உள்ளது.'  
இந்தியாவும் ஈழத்தமிழரும் 
இலங்கைத்தீவின் கடலோரத்தில் மூன்றிலிரு பங்கில், குறிப்பாக இந்தியாவுக்கு நெருக்கமான பகுதிகளில், தமிழர்கள் வாழ்கின்றனர். கருத்தியல், வரலாறு, பண்பாடு ஆகிய எல்லா வகையிலும் தமிழர்கள் இந்தியாவுடன் நட்புறவு கொண்டவர்கள். தமிழர்கள் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவிற்குள்ள நியாயமான நலன்களையும் அறிந்திருக்கின்றார்கள். தமிழ்த் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிராபாகரன் 2008ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில், இந்தியாவுடன் தமிழர்கள் நட்புறவு நிலைநாட்ட விரும்புகின்றார்கள் என்று கூறினார். இவ்வழிநின்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 2013ஆம் ஆண்டு 100,000 மக்களின் பங்கேற்புடன் முரசறைந்த தமிழீழம் சுதந்திர சாசனத்தில் கூறியது போல், குடியாட்சிய முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிமுறை கொண்ட எல்லாத் தேசங்களுடனும் தமிழீழம் நெருங்கிய உறவுகள் பேணி வரும். இந்திய மக்களுடன் தோழமை காட்டும் வகையிலும், இந்தியப் பெருங்கடல் வட்டாரத்தில் அமைதியும் இடர்காப்பும் காத்து வளர்க்கும் வகையிலும் தமிழீழம் இந்தியாவுடன் சிறப்பு உறவு அமைத்துக் கொள்ளும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் நிகழ்வுபூர்வமான தமிழீழ அரசு நடத்தி வந்த போது, இலங்கைத்தீவு நாட்டின் கடலோரத்தில் கணிசப் பகுதி அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த போது, இராணுவ வல்லமை கொண்ட எந்த சீனக் கப்பலும் சிறிலங்கா வந்ததில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.    
இலங்கைத் தீவு குறித்து இந்தியா தன் வெளியுறவுக் கொள்கையை மீள்மதிப்பாய்வு செய்யவேண்டிய உடனடித்தருணமாக இன்றைய சூழல் உள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

https://www.virakesari.lk/article/134642

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.