Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவசரகாலச் சட்டம்: எதிர்காலத்தின் கொடுபலன்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவசரகாலச் சட்டம்: எதிர்காலத்தின் கொடுபலன்கள்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

அவசரகால நிலையை ஜனாதிபதி மீண்டும் நடைமுறைப்படுத்தி, ‘இலங்கையை வழமை’க்குக் கொண்டு வந்துள்ளார். வன்முறை, அரசின் அடக்குமுறை, அரசசார்பற்ற நபர்களின் வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு இடையேயான சிக்கலான தொடர்புகளை, அவசரகால சட்டமும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் இலங்கை குறித்த அனுபவத்தில் முன்னிற்கின்றன.  

இலங்கையின் கொடூரமான நடவடிக்கைகள், வன்முறைச் சுழற்சியை மேம்படுத்தி, ஜனநாயக சமூகத்தின் சமூக மற்றும் அரசியல் கட்டமைப்பை அழிக்க வழிவகுத்தன. தீவின் வடக்கு, தெற்கில் உள்ள அரச அதிகாரிகளால், கட்டுப்பாடற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தியதானது, ஏராளமான மரணங்கள், காணாமல்போதல்கள் போன்றவற்றுக்கும் அரசு மீதான பெருகிவரும் ஏமாற்றம், பாதிக்கப்பட்ட சமூகங்களின் தொடர்ச்சியான பின்னடைவுக்கு வழிவகுத்தது. 

அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துவது, அரசியலமைப்பு உரிமைகளை சீர்குலைத்துள்ளது என்பது நிதர்சனமாகது. பெரும்பாலும் பயங்கரவாத சூழலை நிலைநிறுத்துகிற போது, சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை இல்லாது போகிறது. 

இந்த அதிகாரங்கள், பாதுகாப்புதுறைசார் உறுப்பினர்களிடையே அடக்குமுறைக்கான கட்டற்ற பயன்பாட்டுக்கும், தண்டனை இன்மைக்குமான கலாசாரத்தை வளர்க்க உதவியுள்ளன. 

1958இல் இலங்கை அரசாங்கம் முதன்முதலில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்திய காலத்திலிருந்தே, அவசரகால அதிகாரங்கள் என்ற போர்வையின் கீழ், சர்வாதிகார அதிகாரத்தை பல ஆண்டுகளாக இலங்கை அனுபவித்தது. 

இலங்கை மிக நீண்ட காலமாக, அவசரகால ஆட்சியின் பிடியில் உள்ளது. 1983ஆம் ஆண்டு முதல், இடையில் சில குறுகிய இடைவெளிகளுடன், அண்மைய நாள் வரை அனைத்து ஆண்டுகளிலும் நீடித்தது.

இதன் வரலாற்று வளர்ச்சியை நோக்குவதாயின், இந்த அவசரகால அதிகாரங்களைத் தூண்டுவதற்கு  மூன்று காரணிகள் காரணமாக இருக்கின்றன. 

முதலாவதாக, இடதுசாரிக் கட்சிகளால் உந்தப்பட்ட தொழிற்சங்கங்கள்; 1940களின் பிற்பகுதியிலிருந்து 1960கள் வரை, உயிர்ப்புடன் இருந்தன. தொழிலாளர் உரிமைகளுக்காக இவை நடத்திய போராட்டங்களைக் கையாள்வதற்கு, இலங்கை அரசாங்கங்களால் இயலவில்லை. எனவே, அரசாங்கத்தை பொதுப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றத் தூண்டியது. இது, அவசரகால விதியை சட்டபூர்வமாக்கியது. 

அரசாங்கத்தின் கண்ணோட்டத்தில், உணவு விநியோகம், போக்குவரத்து, தகவல் தொடர்பு சேவைகள் போன்ற பொதுச் சேவைகள், நாட்டில் உயிர்வாழ்வுக்கு இன்றியமையாதவை; மற்றும், அவற்றைப் பாதுகாப்பது அவசரகாலச்சட்டம்; இதன்மூலம், சிவில் உரிமைகளை மீறுவது நியாயமானது. 

1968ஆம் ஆண்டளவில், பல அரசாங்கத் துறைகள் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டன. வேலை நிறுத்தம் செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கையை இது எளிதாக்கியது. 

இருப்பினும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், அவசரகாலவிதி ஜூலை 1971 வரை செயற்படுத்தப்படவில்லை. காலப்போக்கில், இன - தேசியவாதம், அரசியல் செயற்பாடுகள் போன்றவை, தொழிற்சங்க நடவடிக்கையை முறியடித்து, அவசரகால அதிகாரங்களை செயற்படுத்துவதற்கு முக்கிய காரணங்களாகின. 

image_cd14e2b16a.jpg

இரண்டாவதாக, ஜே.வி.பியால் தூண்டப்பட்ட பொது வன்முறையைக் கட்டுப்படுத்த, ஆரம்பத்தில் அவசரகாலச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அரசாங்கத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஜே.வி.பி, தனது முதல் ஆயுதக் கிளர்ச்சியைத் தொடங்கியது. நான்கு மாத அமைதியின்மையின் போது, ஐக்கிய முன்னணி அரசாங்கம் அவசரகால சட்ட ஆட்சியைப் பயன்படுத்தியதன் மூலம் பதிலளித்தது.

கிளர்ச்சியாளர்களை, விரைவாகவும் சித்திரவதை மற்றும் சட்டத்துக்குப் புறம்பாக காணாமல் போகச் செய்தல் போன்ற வழிமுறைகள் மூலமாக அடக்குவதற்கு இச்சட்டம் உதவியது. 

1987 முதல் 1990 வரை, ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சியானது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல்களுக்கு மத்தியில் தொடங்கியது. இதனால், அவசரகாலச் சட்டம் தென் பிராந்தியத்திலும் பரவியது. மீண்டும், ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தில், தன்னிச்சையான கைதுகள், தடுப்புகள், மரணதண்டனைகள் ஆகியவற்றின் மூலம் ஜே.வி.பியை நசுக்க முடிந்தது.

தமிழ் மக்களுக்கு எதிரான, பாரபட்சமான அரசாங்கக் கொள்கைகள், சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே நிலவிய பதற்றம் காரணமாகவும் அடிக்கடி எழும் கலவரங்கள் என்பன, அவசரகாலச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான மூன்றாவது மற்றும் பொதுவான காரணங்களாக அமைகின்றன. 

உதாரணமாக, 1956ஆம் ஆண்டின் அரச மொழிச் சட்டத்தை (சிங்களம் மட்டும் சட்டமூலம்) இயற்றுவதற்கு எதிராக, தமிழரசுக் கட்சியால் நடத்திய அமைதியான எதிர்ப்பு, சிங்களக் குண்டர்களால் வன்முறையைச் சந்தித்தது. 

    1972ஆம் ஆண்டு அரசியலமைப்பு, இலங்கையை ஒற்றையாட்சி நாடாக அறிவித்ததன் மூலம், சிங்கள மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தியது. இது, தமிழ் இளைஞர்களை அணிதிரட்டுவதற்கு ஊக்கமளித்தது. 1977 அளவில், தமிழ் பிரிவினைவாத இயக்கம் உருவான நேரம் முழுவதும், இடைவிடாத வன்முறைகள் ஏற்பட்டன. அதற்கு அரசாங்கம் அவசரகால விதியை நாடியது.

இந்தக் கொடூரமான நடவடிக்கைகள், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனவின் கீழ், 1979ஆம் ஆண்டு, 1979ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) (PTA) மூலம் மேலும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. ஒரு தற்காலிக நடவடிக்கையாக இயற்றப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம், ஐக்கிய இலங்கைக்கான அச்சுறுத்தல்களை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் இருந்தது. 

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 6-9 பிரிவுகள், அவசரகாலச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கைது செய்தல், தடுத்து வைத்தல், சொத்துகளைப் பறிமுதல் செய்தல் போன்ற அதிகப்படியான பொலிஸாரின் அதிகாரங்களைப் பிரதிபலிக்கின்றன.

இந்த வரலாற்றுப் பின்புலத்திலேயே, இப்போது ஜனாதிபதி மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ள அவசரகாலச் சட்டத்தை நோக்க வேண்டியுள்ளது. பெருந்தொற்றுக்குப் பின்னர், உலகளாவிய ரீதியில் ஜனநாயகத்தின் பின்னடைவை நாம் கண்டிருக்கிறோம். அதன் சில முக்கிய அறிகுறிகளில், இரண்டு மிகப் பிரதானமாவை; இலங்கைக்கும் பொருந்துபவை! 

முதலாவது, அரசாங்கத்தின் நிறைவேற்றுப் பிரிவு, ஜனாதிபதி அரசியல் நிறைவேற்று அதிகாரம், நிர்வாக மற்றும் பாதுகாப்பு இயந்திரங்கள் ஆகியவற்றுக்கு இடையே ஒரு கூட்டணி உருவாகியுள்ளது. அது, புதிய அரச அதிகார மையமாகி, பாராளுமன்றத்தையும் அமைச்சரவையையும் கூட பின்னணிக்கு தள்ளுகிறது. 

இரண்டாவதாக, கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் சட்டபூர்வத்தன்மை மற்றும் நியாயத்துடன் கூடிய கண்காணிப்பு, அனைத்து குடிமக்கள் மீதும் ஒரு பரந்த அரசு கண்காணிப்பு வலையை வீசுவதன் மூலம், தொடர்புத் தடமறிதலுக்காகப் பயன்படுத்தத் தொடங்கியது. இது குறிப்பாகத் தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக என்ற போர்வையில், அரசியல் உரிமைகளைப் பறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. 

இலங்கை நிறைவேற்று அதிகாரத்துவத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 1978ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தனவால் ‘நிறைவேற்று’ ஜனாதிபதி முறை உருவாக்கப்பட்ட போது, அது அனைத்து அதிகாரங்களும் கொண்ட அலுவலகத்தை உருவாக்கியது. நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டமன்ற அதிகாரம் இரண்டையும் ஜனாதிபதி மையப்படுத்திய அதேவேளையில், பாராளுமன்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய மட்டுப்பாடுகளும் சமநிலையாக்கங்களும் அகற்றப்பட்டன. நீதித்துறையும் நிறைவேற்று அதிகாரத்தின் தலைவரான ஜனாதிபதியின் கட்டுப்பாட்டிலும் செல்வாக்கிலும் கொண்டுவரப்பட்டது.

2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில், இரண்டு தடவைகள் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்ததன் மூலம், இந்த அரசியலமைப்பு இன்னும் இலங்கையில் இயங்குகிறது.  

இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயகத்திலிருந்து, புதிய ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கிய மாற்றம் பெருந்தொற்றுக்கு 2020ஆம் ஆண்டு  செப்டெம்பரில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தினூடு உறுதியான வடிவத்தை எடுத்தது. 

இங்கு, 20ஆவது திருத்தத்தின் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன: 

(அ) மட்டுப்பாடுகள் மற்றும் சமநிலையாக்கங்கள்  ஏதுமின்றி, பாராளுமன்றம், நீதித்துறை அல்லது பிற பொறுப்புக்கூறல் நிறுவனங்களில் இருந்து சுயாதீனமாக குடியரசுத் தலைவர் பதவியை அரச அதிகாரத்தின் மத்திய நிறுவனமாக மாற்றுதல்; 

(ஆ) பாராளுமன்றத்தை பெயரளவு சட்டமியற்றும் அமைப்பாக மாற்றி, அதை ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்பட வைத்தல். 

பலவீனமான ஜனநாயகத்தில் இருந்து, நிறைவேற்று தலைமையிலான சர்வாதிகார அரசியல் ஒழுங்கிற்கு விரைவான மாற்றமாக அது இருந்தது. 
நிறைவேற்று அதிகாரத்துவத்தின் இந்த அரசியல் மாதிரியானது, தற்போதுள்ள பாராளுமன்ற மற்றும் அமைச்சரவை அரசாங்கத்தின் கட்டமைப்போடு இணைந்திருத்தாலும் அரசியல் நிறுவனங்களின் படிநிலையில், அமைச்சரவைக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரம் குறைந்துவிடும்.

இது வளர்ந்து வரும் அரச-சமூக உறவுகளின் தன்மையை நிச்சயமாக மறுவரையறை செய்யும். இதன் படிநிலை வளர்ச்சியையே, இலங்கையில் நாம் காண்கிறோம். 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அவசரகாலச்-சட்டம்-எதிர்காலத்தின்-கொடுபலன்கள்/91-305180

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.