Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற குடியரசுத் தலைவரை நாடும் திமுக: வீண் முயற்சியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற குடியரசுத் தலைவரை நாடும் திமுக: வீண் முயற்சியா?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

ரவி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைத் திரும்பப் பெற வேண்டுமென ஒரு மனுவைத் தயாரித்து அதில் தங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கையெழுத்தையும் பெற்று குடியரசுத் தலைவரிடம் அளிக்க தி.மு.க. முடிவுசெய்துள்ளது. இதன் மூலம் ஆளுநரை மாற்ற முடியுமா?

தமிழ்நாடு ஆளுநரை மாற்ற வேண்டுமென குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அளிக்கவிருக்கும் மனுவில் தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டணிக் கட்சியின் உறுப்பினர்களும் தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயம் வந்து கையெழுத்திட வேண்டுமென தி.மு.கவின் நாடாளுமன்ற குழுத் தலைவரான டி.ஆர். பாலு நவம்பர் ஒன்றாம் தேதியன்று அழைப்புவிடுத்தார்.

இந்த அழைப்பை காங்கிரஸ், மதி.மு.க., சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகள் ஏற்றுக்கொண்டு, அந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளன. நவம்பர் 3ஆம் தேதிவரை இந்த மனுவில் கையெழுத்திடலாம் என தி.மு.க. தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் கன்னியாகுமரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், திருச்சி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், திருவள்ளூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் அண்ணா அறிவாலயத்திற்கு வந்து அந்த மனுவில் கையெழுத்திட்டனர்.

 

நாடாளுமன்ற உறுப்பினர் கூறியது என்ன?

இந்த மனுவில் கையெழுத்திட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "ஆர்.எஸ்.எஸ்சின் தலைமையிடமாக தமிழ்நாடு தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்சின் கொள்கைகளைப் பரப்புபவராகவே ஆளுநர் செயல்பட்டு வருகிறார். சட்டமன்றத்தில் எந்த மசோதாவை இயற்றி ஆளுநரிடம் கொடுத்தாலும் அதற்கு ஒப்புதல் வழங்குவது கிடையாது. எப்படி பேச வேண்டும் என்பதே அவருக்குத் தெரியவில்லை. மொழிப் பிரச்சனையை தமிழ்நாட்டில் கிளப்புகிறார். அவரை உடனடியாக தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி செய்யாத பல மாநிலங்களில் அம்மாநில ஆளுநர்கள் மாநில அரசுகளுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் இணை ஆட்சி நடத்த முற்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டும் அளவுக்கு அங்கே மோதல் உச்சகட்டத்தில் இருந்து வருகிறது. அதேபோல, தெலுங்கானாவிலும் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கும் முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் இடையே மோதல் உச்சகட்டத்திலேயே இருந்து வருகிறது.

இந்த நிலையில்தான் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் அறிக்கை ஒன்றை விடுத்திருந்தன. அதில், "சனாதனம், ஆரியம், திராவிடம், பட்டியலின மக்கள், திருக்குறள் குறித்து அவர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கின்றன. ஆளுநர் தனிப்பட்ட ஆன்மீக நம்பிக்கைகள் குறித்து நமக்கு எந்த விமர்சனமும் இல்லை; அது பற்றி கவலைப்படவுமில்லை. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு, பழமைவாத நச்சரவங்களை நாட்டில் நடமாட விடுவது அவருக்கும் அழகல்ல;

அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல. அவர் உதிர்க்கும் அபத்தவகைப்பட்ட கருத்துகளுக்கு எதிராகப் பலராலும் சொல்லப்படும் விளக்கங்களை அவர் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. தன்னை மாற்றிக் கொண்டதாகவும் தெரியவில்லை. வழக்கம் போல, தனது பேச்சுகளைத் தொடர்ந்து கொண்டே வருகிறார் ஆளுநர். தன்னைத்தானே இந்திய நாடாளுமன்றமாக, தன்னையே உச்சநீதிமன்றமாக, தானே இந்தியாவின் குடியரசுத் தலைவர் என - இன்னும் சொன்னால், இந்திய நாட்டின் மன்னராகவே அவர் நினைத்துக் கொண்டு பேசத் தொடங்கி இருக்கிறார்." என்று அதில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

 

ஸ்டாலின்

பட மூலாதாரம்,DIPR

இந்த நிலையில்தான், ஆளுநர் மீதான எதிர்ப்பை வலுப்படுத்தும் வகையில் அவரை நீக்க வேண்டுமென குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க முடிவுசெய்திருக்கிறது தி.மு.க. இந்த மனுவில், ஆளுநர் எப்படி அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார் என்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அவர் தொடர்ந்து செயல்படுவதையும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்காதது குறித்தும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

எதிர்ப்புக்குக் காரணம் என்ன?

தி.மு.க. இதில் தீவிரமாக இருப்பதற்கு என்ன காரணம் என்ன என்று கேட்டபோது,

"ஆர்.என். ரவிதான் காரணம். அவர் ஆளுநர் வேலையைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்படியானால், அவர் அந்த வேலைக்குப் பொருத்தமானவர் இல்லை என்றுதானே பொருள்? அதனால்தான் மாற்றச் சொல்கிறோம்" என்கிறார் தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டைன்டீன்.

அனைவரும் இதில் கையெழுத்திட்ட பிறகு, இந்த வாரத்திற்குள்ளாகவே டி.ஆர். பாலு தலைமையில் ஒரு குழு குடியரசுத் தலைவரைச் சந்தித்து இந்த மனுவை அளிக்கப்போவதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், குடியரசுத் தலைவரிடம் முறையிடுவதன் மூலம் இதைச் சாதிக்க முடியுமா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு மாநிலத்தின் ஆளுரை குடியரசுத் தலைவர்தான் நியமிக்கிறார். குடியரசுத் தலைவருக்கு விருப்பம் இருக்கும்வரை ஆளுநர் அந்தப் பதவியில் நீடிக்கலாம். ஆனால், குடியரசுத் தலைவர் என்பது மத்திய அமைச்சரவையையே குறிக்கிறது. ஆகவே, மத்தியில் ஆளும் அரசுதான் மாநிலங்களில் ஆளுநர்களை நியமிக்கிறது.

"இப்படி செய்வதன் மூலம் ஆளுநரை நீக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், இது ஒரு அரசியல்ரீதியான அழுத்தம். நாகாலாந்தில் இம்மாதிரி ஒரு அழுத்தத்தால்தான் அவர் அங்கிருந்து இடம் மாற்றப்பட்டார். ஆகவே, அரசியல் ரீதியான அழுத்தம் என்பது மிக முக்கியம்" என்கிறார் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியான ஹரி பரந்தாமன்.

 

 

திரெளபதி முர்மூ

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதுவரையிலான தி.மு.க. ஆட்சியின்போது உஜ்ஜல் சிங், கே.கே. ஷா, பி.சி. அலெக்ஸாண்டர், சுர்ஜித் சிங் பர்னாலா, சென்னா ரெட்டி, கிருஷண்காந்த், பாத்திமா பீவி, மீண்டும் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோர் ஆளுநர்களாக இருந்துள்ளனர். ஆனால், ஆர்.என். ரவியுடன் ஏற்பட்ட மோதலைப் போல வேறு யாருடனும் தி.மு.க. ஒரு ஆளும்கட்சியாக முரண்பட்டதில்லை.

புரோஹித்தை எதிர்த்துப் போராடிய திமுக

இதற்கு முந்தைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக் காலத்தில் தன்னிச்சையாக ஆய்வுகளை மேற்கொண்டபோது, அதற்கு தி.மு.க. கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது பன்வாரி லால் புரோஹித்தான் ஆளுநராக இருந்தார் என்றாலும், விரைவிலேயே அவர் மாற்றப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி ஆர்.என். ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் இருப்பது, பல்வேறு கூட்டங்களில் பங்கேற்று மதம், கலாச்சாரம், மொழி தொடர்பான கருத்துகளை முன்வைப்பது போன்றவற்றில் ஆளும் தி.மு.கவிற்கும் ஆளுநருக்கும் பிரச்சனைகள் நீடித்து வருகின்றன.

தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சுமார் 20 சட்டங்களுக்கு இதுவரை தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை.

https://www.bbc.com/tamil/india-63503078

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆளுநரை நீக்கக்கோரும் தி.மு.க. மனுவில் ஆர்.என். ரவி மீது சரமாரி குற்றச்சாட்டு

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

ஆர்.என்.ரவி

பட மூலாதாரம்,R.N.RAVI

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை நீக்கக் கோரும் தீர்மானத்தை இந்தியக் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைத்துள்ளது தி.மு.க. இந்தத் தீர்மானத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை அப்பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமெனக் கோரி, தி.மு.கவின் கூட்டணிக் கட்சியினர் கையெழுத்திட்ட மனு ஒன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவில் ஆளுநர் ரவி மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கேரளாவிலும் பல நாட்களாக மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் ஆளுநர் ஆரிஃப் முகமது கானை மாநில பல்கலைக்கழகங்களின் ஒரே வேந்தராக இருப்பதில் இருந்து நீக்க கேரள இதுடசாரி அரசு இன்று முடிவு செய்துள்ளது. ஆளுநரை பதவியில் இருந்து நீக்குவதற்கான அவசர சட்டம் அல்லது சிறப்பு உத்தவரைக் கொண்டு வர பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை வாக்களித்துள்ளது.

"அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் மாநிலத்தின் பெயரளவிலான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால் மாநில அரசின் செயல்பாடுகளை அவரது பெயரில் முன்னெடுக்க வேண்டியுள்ளது. ஆகவே மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கொள்கை அளவிலும் செயல்பாட்டளவிலும் எதிர்ப்பது மக்களாட்சிக்கு சாவுமணி அடிப்பதாகும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கையுடன் ஓர் ஆளுநர் இப்படி வெளிப்படையாக முரண்படுவதையோ, சட்டப்பேரவை இயற்றும் சட்டங்களுக்கு காலவரையின்றி ஒப்புதல் தராமல் இருப்பதையோ மதச்சார்பின்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதையோ கற்பனையில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

 

ஆளுநரின் அப்படிப்பட்ட செயலால் தமிழ்நாட்டில் எதேச்சதிகார சூழல் நிலவுகிறது.

தமிழ்நாடு அரசும் சட்டப்பேரவையும் ஆற்றிவரும் பணிகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் அரசின் கொள்கைகளுக்கு எதிராக வெளிப்படையாக பொதுவெளியில் முரண்படுவது, அவருக்கு அனுப்பிவைக்கப்பட்ட முக்கியமான சட்டவரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது என ஆளுநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இது அரசியலமைப்புக்கு எதிரானது. ஒரு சட்டவரைவின் தேவை அல்லது அவசியம் குறித்து ஆளுநர் ஆராய இயலாது. அது சட்டப்பேரவையின் தனியுரிமை. சட்டவரைவு நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டவுடன், அதனை மாநில மக்களின் முடிவாகக் கருதியே செயலாற்ற வேண்டும்.

 

ஆர்.என்.ரவி

பட மூலாதாரம்,TWITTER

தமிழ்நாட்டில் ஆளுநர் தனது முதன்மையான பணியைச் செய்வதில்லை. நீட் விலக்கு சட்ட வரைவு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்டது. அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தினார். இது தொடர்பாக உள்துறை அமைச்சரிடமும் முந்தைய குடியரசுத் தலைவரிடமும் கோரிக்கைவைக்கப்பட்டது. இருந்தபோதும் இந்த சட்டவரைவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், குடியரசுத் தலைவரின் அதிகாரங்களைக் கையில் எடுத்துக்கொண்டு, சட்டவரைவை சட்டப்பேரவைக்கே திருப்பி அனுப்பினார். இது அதிகார வரம்பை மீறிய செயல். இத்தகைய செயல்பாடுகள் ஆளுநரின் பொறுப்புக்கு அழகல்ல. பல்வேறு மொழிகள், மதங்களைச் சார்ந்தவர்கள் அமைதியாக வாழ்ந்துவரும் தமிழ்நாட்டில், ஆளுநர் அடிக்கடி சமுதாயத்தை பிளவுபடுத்தும் வகையில் பேசுகிறார். தான் வகிக்கும் ஆளுநர் பொறுப்புக்கு சிறிதும் பொறுத்தமற்றவகையில் ஆபத்தான, பிளவுபடுத்தும் நோக்கிலான, மதரீதியான கருத்துகளை பொதுவெளியில் பேசிவருகிறார். மக்களின் மனதில் வெறுப்பைத் தூண்டி, சமூகப் பதற்றத்தைத் உண்டுபண்ணும் நோக்கத்துடன் அவரது பேச்சுகள் அமைகின்றன.

உலகின் பிற நாடுகளைப் போலவே, இந்தியாவும் ஒரு மதத்தைச் சார்ந்தே உள்ளது என்று ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். இது இந்திய அரசியலமைப்பை அவமதிப்பதாகும். சனாதன தர்மத்தைப் போற்றுவது, திருக்குறளுக்கு மதச்சாயம் பூசுவது, திராவிட மரபையும் தமிழ்ப் பெருமையையும் விமர்சிப்பது என கருத்துக்களைத் தெரிவித்துவருகிறார்.

 

ஆர்.என்.ரவி

பட மூலாதாரம்,R.N.RAVI

தமிழ்நாட்டு மக்களுக்கு எது நல்லது என முடிவுசெய்ய ஆர்.என். ரவி, தமிழ்நாட்டு தேர்தல்கள் எதிலும் வெற்றிபெறவில்லை என்பதை மறந்துவிடுகிறார். அண்மைக்காலமாக மத்திய அரசின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்கும் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு கைமாறாக ஆளுநர் பதவி தரப்படுகிறது. இவர்களுக்கு ஆளுநர் பொறுப்பை வகிப்பதற்கான அடிப்படை அறிவோ, நேர்மையோ இல்லை. இத்தகைய சீர்கேட்டின் சிறந்த எடுத்துக்காட்டாக ஆர்.என். ரவி விளங்குகிறார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 159வது பிரிவின் கீழ் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்தை அவர் மீறிவிட்டார். மதவெறுப்பைத் தூண்டி, மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்.

சட்டத்தினால் நிறுவப்பட்ட அரசின் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதால், அவரது செயல்பாடுகள் தேசத் துரோகமானவை என சிலர் கருதக்கூடும். தான் ஆளுநர் பொறுப்பை வகிக்கத் தகுதியற்றவர் என்பதை ஆர்.என். ரவி நிரூபித்துவிட்டார். அவர் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும்." என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், 2020ஆம் ஆண்டில் இருந்து ஒப்புதலுக்காக ஆளுநர் வசம் உள்ள 20 சட்டங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. ஹூக்கா பார்களைத் தடை செய்யும் சட்டம், பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிப்பதற்கான சட்டம், வெளிப்படையான டெண்டருக்கான சட்டம், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் போன்ற சட்டங்கள் இன்னும் ஆளுநரின் ஒப்புதலுக்குக் காத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cxe893j85n9o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.