Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் சடுதியாக அதிகரித்துள்ள பாடசாலை இடை விலகல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் சடுதியாக அதிகரித்துள்ள பாடசாலை இடை விலகல்கள்

By DIGITAL DESK 2

13 NOV, 2022 | 03:50 PM
image

(ஆர்.ராம்)

 

“இந்த ஆண்டில் தற்போது வரையில் 519மாணவர்கள் இடைவிலகியுள்ளதோடு இதில் வலிகாமம் கல்வி வலயம் முதலிடத்திலுள்ளது”

 

வடக்கு மாகாணத்தில் பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளது. வடமாகாண கல்வித் திணைக்களத்தின் தகவல்களுக்கு அமைவாக, பாடசாலைகளில் இருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு 485ஆகவும், 2021ஆம் ஆண்டு ஆயிரத்து 105 ஆகவும், இந்த ஆண்டில் தற்போது வரையில் 519 ஆகவும் உள்ளது.

வடக்கு மாகாணத்தில் 2020 ஆம் ஆண்டு ஆகக்கூடுதலாக மடு கல்வி வலயத்தில் 94 பேர் பாடசாலையிலிருந்து இடைவிலகியிருந்த நிலையில், மன்னார் கல்வி வலயத்தில் 72 பேரும், கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தில் 52 பேரும், கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தில் 51 பேரும், முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 48 பேரும் இடைவிலகியுள்ளனர்.

அத்துடன், இவ்வாறு இடைவிலகியவர்களில் ஆண் மாணவர்கள் அதிகம் என்பதோடு 10ஆம் மற்றும் 11ஆம் தரங்களைச் சேர்ந்தவர்களே இதில் அதிகமாகவும் காணப்படுகின்றனர்.

அதேநேரம், 2021ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் ஆகக் கூடுதலாக கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தில் 181 பேரும் வலிகாமம் கல்வி வலயத்திலிருந்து 148 பேரும், மன்னார் கல்வி வலயத்திலிருந்து 135 பேரும், கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திலிருந்து 119 பேரும் இடைவிலகியுள்ளனர்.

03.jpg

இவ்வாறான நிலையில், இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில், வலிகாமம் கல்வி வலயத்தில் 123பேரும் வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 110 பேரும், மன்னார் கல்வி வலயத்தில் 101 பேரும் இடைவிலகியுள்ளனர்.

போர் நிறைவுக்கு வந்து ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் வடக்கில் 38 ஆயிரத்து 321 மாணவர்கள் வடமாகாணப் பாடசாலைகளில் இருந்து இடையில் விலகியிருந்தனர். இருப்பினும், அதற்குப் பின்னரான காலத்தில் அவ்விதமான பாரிய இடைவிலகலொன்றை வடக்கு மாகாணம் சந்தித்திருக்கவில்லை. ஆனால் தற்போது, மாணவர்களின் இடைவிலகல் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்திருக்கின்றது. 

காரணங்கள் என்ன? 

 உலகை அச்சுறுத்திய கொரோனா பரவல் இதற்கு பொதுப்படையான காரணமாக கூறப்படுகின்றது. அத்தோடு, நாட்டில் நீடித்த அரசியல் ஸ்திரமற்ற தன்மையும், பொருளாதார நெருக்கடிகளால் ஏற்பட்டுள்ள உணவுப்பற்றாக்குறை மற்றும் அத்தியாவசியச் செலவீனங்கள் அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள வறுமை ஆகியனவும் இதர காரணங்களாக அமைகின்றன. 

மேற்படி காரணங்களால், “பாடசாலைகள் ஒழுங்காக நடைபெறாமையும், மெய்நிகர் வழியிலான கற்றல் செயற்பாடுகளின் தோல்வியும் விளிம்புநிலைப்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைகளை விட்டு விலகுவதற்கு காரணமாகின்றன” என யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை குறிப்பிடுகின்றார்.

________________.__________________.jpg

பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை

”தமது பிள்ளைகள் பாடசாலைக்கல்வியிலிருந்து இடைவிலகுவதற்கு பெற்றோர்கள் வறுமையை காரணம் காண்பிக்கின்றார்கள். ஆனால் வடக்கைப் பொறுத்தவரையில், பாடசாலைகளின் பழைய மாணவர்கள், புத்திஜீவிகள்

 சமூகம், புலம்பெயர் தரப்புக்கள் கற்றல் செயற்பாடுகளுக்காக பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன” என்று அவர் தெரிவிக்கின்றார்.

“வடமாகாணத்தில் மத்தியதர வகுப்பினரின் எண்ணிக்கை சுருக்கமடைந்த நிலையில் அவர்கள் தொழிற்படையாக மாறிவிட்டனர். இதானல் வருமானத்திற்கு அப்பாலான பெறுமானம் குறைவடைந்துவிட்டது. அதனை வறுமையாக கொள்ள முடியாது” என்றும் அவர் கூறுகின்றார்.

“தமிழர் வரலாற்றில் சங்ககாலம் முதல் புலவன் எப்போதும் வறுமையுடன் தான் இருக்கின்றான். ஆக, அறிவு, செல்வத்துடன் இணைந்து இருக்கவில்லை. வறுமையுடன் தான் இருக்கின்றது” என்ற முன்னுதாரணத்தினையும் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை சுட்டிக்காட்டுகின்றார்.

ஆகவே, “வடமாகாண கல்விச் சமூகம் பெற்றோர்களையே வலுப்படுத்த வேண்டும். புறச்செயற்பாடுகளில் கரிசனைகளைக் கொண்டிருக்கும் பெற்றோர்களை அடையாளப்படுத்தி அவர்கள் மத்தியில் விழுமிய மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும்” என்று அவர் பரிந்துரைகிறார்.

“பாடசாலைகள், ஆசிரிய சமூகத்தினைக் கடந்து, பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் தான் பிள்ளைகளின் கல்விக்கான பொறுப்பினை ஏற்று கற்றல் செயற்பாடுகளில் அவர்களை பங்கேற்கச் செய்வதற்கான உந்துதலைச் செய்ய வேண்டியவர்களாக உள்ளனர். வீட்டுப்பின்புலம் தான் மாணவர்களின் கல்வியில் பெரும்பங்கைக் கொண்டிருக்கின்றது” என்றும் அவர் வலியுறுத்துகின்றார்.

“பாடசாலைகளை தரமுயர்த்துவதன் பேரில் நடைபெறும் தேசிய பாடசாலை ஆக்குதல் செயற்பாடுகளால், சதாரண பாடசாலைகளில் கற்றலில் ஈடுட்டிருக்கும் மாணவர்களுக்கு இயல்பாகவே மனக்கவலைகளும், மனோரீதியான மாற்றமும் இடைவிலகலில் தாக்கம் செலுத்துகின்றன” என்றும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

01.jpg

அதேவேளை, “க.பொ.த.சதாரண தரத்தில் 33சதவீதமானர்கள் சித்தியடையாது விட்டாலும் அவர்கள் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பங்கள் காணப்படுவதால் இடைவிலகலை சதகமாக பார்க்கின்ற தரப்பினரும் உள்ளனர்” என்று குறிப்பிடுகின்றார். யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வியியற்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஆனந்தமயில் நித்திலவர்ணன்.

“மாணவர்களாக இருக்கும்போதே வருமான மீட்டுவதற்கு கிராமங்களில் பல்வேறு தொழில்கள்  காணப்படுகின்றன. அவ்வாறான தொழில்களில் மாணவர்கள் ஈடுபடுகின்றபோது பெற்றோர்களும் அதற்கு ஆதரவளிக்கின்றமை கல்வி மீதான நாட்டத்தினை குறைப்பதற்கு காரணமாகின்றது” என்று அவர் தெரிவிக்கின்றார்.  

“தரம் ஒன்றிலிருந்து தரம் ஒன்பது வரை கொண்ட பாடசாலைகள் இயங்குகின்றன. இவற்றிலிருந்து தரம் ஆறுக்காக ஒருபகுதி மாணவர்கள் பிற பாடசாலைகளில் தம்மை இணைத்துக்கொள்ளுகின்ற போதும் எஞ்சியவர்களில் 50சதவீதமானவார்கள் எந்தவொரு பாடசாலையிலும் தம்மை இணைத்துக்கொள்ளாத நிலைமைகள் காணப்படுகின்றன” என்று அவர் கூறுகின்றார்.

“ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையிலான ‘இடைவினை உறவு’ குறைவடைந்துள்ளமையால் மாணவர்களுடன் அதிபர், ஆசிரியர்கள் நெருக்கமற்ற நிலையில் இருக்கின்றனர். இதனால் தொடர்ச்சியாக தாழ் அடைவுகளை பெற்றுக்கொண்டிடு கல்வி மீதான வெறுப்பில் உள்ள மாணவர்களை  தொடர்ந்தும் கற்றல் செயற்பாடுகளில் உள்ளீர்க முடியாத கையறு நிலைமை காணப்படுகின்றது” என்றும் அவர் குறிப்பிடுகின்றார். 

அரச பொறிமுறைகள்  தோல்வி

இதேவேளை, பாடசாலை மாணவர்களின் இடைவிலகலைத் தடுப்பதற்காக காணப்படுகின்ற அரச பொறிமுறைகள் நடைமுறையில் தோல்விகண்டு விட்டன என்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் ஆனந்தமயில் நித்திலவர்ணன் சுட்டிக்காட்டுகிறார்.

“பாடசாலையில் இருந்து மாணவர்கள் இடைவிலகினால் அவர்களை மீளிணைப்பதற்காக வலயக் கல்வி பணியகத்திலும், பிரதேச செயலகத்திலும் தலா ஒவ்வொரு அலுவலர்கள் உள்ளனர். ஆனால், இந்த அலுவலர்களின் செயற்பாடுகள் வெறுமனே சம்பிரதாய பூர்வமானதாக இருக்கின்றது” என்று அரச பொறிமுறையை அவர் கடுமையாகச் சாடுகின்றார்.

“கட்டாயக்கல்விக்குழு உள்ளிட்ட கட்டமைப்புக்கள் காணப்பட்டாலும், கொரோனாவின் பின்னரான காலத்தில் ஏற்பட்டுள்ள சடுதியான இடைவிலகல் நிலைமைகளை அவதானித்து, அதற்காக விசேட நிலைமைகளின் கீழான செயற்பாடுகளை கல்வி அமைச்சோ, ஆளுநர் அலுவலகமோ, அல்லது அரசசார்பற்ற நிறுவனங்களோ முன்னெடுக்கவில்லை” என்றும் அவர் விசனம் தெரிவிக்கிறார்.

“இடைவிலகும் மாணவர்கள் தொடர்பில் பாராமுகமான நிலைமைகள் நீடிக்குமாக இருந்தால் சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற சமூக விரோத சக்திகள் இடைவிலகும் மாணவர்களை கருவியாக பயன்பாடுத்துவதற்காக அதிகளவான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, இவ்வாறனவர்களை வன்முறைக்குழுக்கள், போதைப்பொருள் விற்பனையாளர்கள், முகவர்கள் இலகுவாக கையள்வதால் அவர்கள் நாளடைவில் சமூகத்திற்கு பேராபத்தானவர்களாக மாறிவிடுவார்கள்” என்ற எச்சரிக்கையையும் அவர் விடுக்கின்றார்.

________________________________________

சிரேஷ்ட விரிவுரையாளர் ஆனந்தமயில் நித்திலவர்ணன்

இவ்வாறான நிலையில், மாணவர்களின் இடைவிலகல் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு எட்டப்பட வேண்டுமாக இருந்தால், ஆரம்பக்கல்வி ஊடாக வலுவான அடித்தளமிடப்பட வேண்டும் என்கிறார், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கற்பித்தலில் 25வருடங்களுக்கு மேலான அனுவத்தினைக் கொண்டிருக்கும் சிரேஷ்டத்துவமானவர்.(பெயர் குறிப்பிட விரும்பவில்லை) 

அவர், தனது நேரடி அனுபவங்களின் அடிப்படையில் மாணவர்கள், பெற்றோர்கள், அதிபர் மற்றும் ஆசிரியர்கள், கல்வித்துறையினர் ஆகிய நான்கு தரப்பினரிடத்திலும் மாணவர்கள் இடைவிலகலுக்கான காரணங்களை கண்டறிந்துள்ளார். அவையாவன, 

 * போர் காரணமாக, பொதுக்கல்வி ஊடாகவோ அல்லது தொழில்நுட்பக் கல்வி ஊடாகவோ மாணவர்கள் வாழ்க்கைத் திறனைப் பெற்றுக்கொண்டிருக்கவில்லை. அத்துடன் பொதுக்கல்வி முழுமையாக நிறைவடைந்த பின்னரேயே தொழில்நுட்பக் கல்வி ஆரம்பிக்கப்படுகின்றது. இதனால் பலமான பின்னடைவுகளையே ஏற்படுகின்றமை.

* மூன்று தசாப்தப் போர் காரணமாக 13வருட கால பாடசாலைக் கல்வியை பெற்றவர்களாக பெற்றோர்கள் இல்லாத நிலையில் பாடசாலைக் கல்விக் கலாசாரத்தினை வீடுகளில் பேணக்கூடிய அளவிற்கு பெற்றோர்கள் இல்லாமையால் தமது பிள்ளைகளை வழிநடத்தக்கூடிய ஆற்றலில்லாது இருப்பதோடு தமது பிள்ளைகளுக்கான ஊட்டத்தினையும், கல்வியை வழங்கக்கூடிய அளவிற்கு வருமானத்தினை தேடக்கொள்ள முடியாதவர்களாகவும் உள்ளமை.

* பெற்றோர்கள் பெண்பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு திருமணம் செய்து அனுப்புவதற்கு தீர்மானிப்பதாலும் ஆண்பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாலும் கா.பொ.த. சதாரண தரம் மற்றும் உயர்தரத்தின் முற்பகுதில் கற்றலில் நாட்டமின்மையை ஏற்படுத்துகின்றமை. 

* கல்வியாலேயே எமது சமூகம் முன்னேற்றம் அடையும் என்ற அடிப்படையான நீண்ட அபிலாஷைகள் இல்லாது சபாடிகள், சமூகத்தின் ஏனையவர்களுடன் ஒப்பிட்டுப்பார்த்து நடக்கின்ற கலாசாரமொன்று பின்பற்றப்படுகின்றமை.

* பிறந்தது முதல், அகதிமுகாம்களில் வாழ்ந்து வந்திருக்கக்கூடிய பிள்ளைகளுக்கு அவர்களது கடந்தகாலத் தலைமுறைகள் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த நெருக்கமான பாடசாலையாக இருந்தாலும் கூட அவர்களால் அப்பாடசாலைக் கலாசரத்திற்குள் தம்மை இணைத்துக்கொள்ள முடியாதுள்ளமை.

முதலாம் இரண்டாம் தரங்களை உள்ளடக்கிய முதன்மைநிலை ---1, மூன்றாம் நான்காம் தரங்களை உள்ளடக்கிய முதன்மைநிலை 2, ஐந்தாம் தரத்தைக் கொண்ட முன்மை நிலை- 3 ஆகிய கட்டங்களில் அத்தியாவசிய கற்றல் விடயங்களை முறையாக காண்கானித்து வழங்குதல் அவசியமாகின்றபோதும்  முதன்மை நிலை ஆசிரியர்களில் அதிகளவானவர்கள் தொண்டர் ஆசிரியர்களாக இருப்பதால் குறித்த கற்றல் செயற்றிட்டங்களை முன்னெடுப்பத்தில் சிக்கலான நிலைமைகள் நீடிக்கின்றமை.

* தரம் ஐந்து புலமைப்பரிசிலுக்காக பரீட்சைகளுக்கு முகங்கொடுக்கும் மாணவர்களான தரம் மூன்றிலேயே தயார்ப்படுத்தல்கள் ஆரம்பமாகுவதால் நிலைபேறான கற்றலை உள்வாங்கச் செய்யமுடியாது குறுகிய கால கற்றல் நினைவாற்றலை உடையவர்களாக மாணவர்கள் மாறிவிடுகின்றனர். மொழி தான் கற்றலின் திறவுகோலாக இருக்கின்ற நிலையில் மொழியை குறுகிய நினைவாற்றலுடன் உள்வாங்கும் மாணவர்களால் ஏனைய படாவிதானங்களில் வினைதிறனாக செயற்பட முடியாத நிலைமை உருவாகின்றமை.

* ஆரம்பக்கல்வியாது திறன்சார்ந்த கற்கையானதாகவே உள்ளது. அது நடத்தைவாதத்தினை மையப்படுத்தியது. ஆனால் கட்டுருவாக்க வாதத்திலேயே தற்போது கற்பித்தல் நிற்கின்றது. புதிய கல்விச் சீர்திருத்தின்போதும் இந்த விடயம் கருத்தில் கொள்ளப்படாமை. 

எந்தவொரு பாடசாலை அதிபர்களும் வினைத்திறன் மிக்க ஆசிரியர்களை ஆசிரிய ஆலோசகர்களாகவோ அல்லது உதவிக்கல்வி பணிப்பாளர்களாகவோ அனுப்பவதில்லை. மாறாக தமக்கு பயனற்றவர்கள் அல்லது பிரச்சினையானவர்கள் உள்ளிட்டவர்களே அப்பதவிகளுக்காக அனுப்பிவைத்தனர். இவ்வாறு வினைத்திறன் குறைந்தவர்கள் பதவிகளுக்கு வந்தமையால் அடைவுமட்டம் குறைந்த பாடசாலைகளை அடையாளம் கண்டு, புத்தாக்கமுடைய முயற்சிகளை அவர்கள் எடுத்திருக்காமை.

02.jpg

* பாடத்திட்டமானது, ஆசிரியர்கள் மாணவர்களை மையப்படுத்தியதாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எங்கோ தயாரிக்கப்பட்டு மாணவர்களை நோக்கி இயந்திரவேகத்தில் அதனை பூர்த்தி செய்யவே ஆசிரியர்கள் முனைந்து செயற்படுகின்றமை.

ஆசிரியர்களிடத்தில் வினாத்தொடுக்கும் மூலோபாய அணுகுமுறையில் காணப்படும் பலவீனமும், நாளடைவில் ஏற்படும் அதிகார மனப்பான்மையும் மாணவர்களுடனான இடைவெளியை ஏற்படுத்துகின்றது. அத்துடன், பெற்றோர் ஊடாக மாணவர்களுக்கு கற்பிக்கும் நடவடிக்கைகளை ஆசிரியர்கள் முன்னெடுக்கின்றமை.

ஆசிரியர்கள் தமது கற்பித்தல் பாடவிதானங்களை பூர்த்தி செய்ய வேண்டுமென்பதில் உள்ள அதீதமான கரிசனையின் அளவு மாணவர்களின் அடைவுமட்டங்களில் காண்பிக்கப்படும் கரிசனையுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளதோடு, பாடசாலைகள் முறையாக நடைபெறாமையால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான இடைவெளிகள் அதிரித்துள்ளமை.

நகரப் பாடசாலை நோக்கிய நகர்வுகளும் தொழில்வாய்ப்புக்களை நோக்கிய வேகமான முனைப்பும் அதிகரித்து வருகின்றமை என்பன அவையாகும்.

அதேநேரம், முதலாம் தரம்முதல் ஐந்தாம் தரம் வரையில் உள்ள மாணவர்கள் பாடசாலையை ஒதுக்கி வீதிக்குச் செல்லும் முடிவினை எடுப்பதில்லை. ஆகக்குறைந்தது எட்டாம் தரத்திலேயே பாடசாலைக்கல்விக்கு தாக்குப்பிடிக்க முடியாது வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வருகின்றார்கள். ஆகவே பின்வரும் விடயங்களை நடைமுறைச்சாத்தியமாக்குவதன் மூலம் வலுவான ஆரம்பக்கல்விக்கு அடித்தளமிடலாம் என்றும் குறித்த சிரேஷ்டத்துவமானவர் கோடிட்டுக் காண்பிக்கின்றார். 

கல்வி பற்றிய விழிப்புணர்வு, குடும்பநிர்வாகம், பிள்ளைகளை ஒழுங்குபடுத்தி வளர்ப்பதற்கான வீட்டுக்கலாசாரம் உள்ளிட்ட விடயங்களை கொண்ட விரைவான மேம்பாட்டுத்திட்டமொன்றை உடனடியாகச் செயற்படுத்தல்.

விளிம்புநிலைப்படுத்தப்பட்ட மக்களை மையப்படுத்தி பாடசாலைக் கல்வியை தூண்டுவதோடு அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சியின்மை என்ற பிரதான தடையைக் கடப்பதற்கு நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களை உள்வங்குதல்.

பாடசாலையின் முன்மைநிலைக் காலத்தில் ஆசிரியர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகளை கல்வித் திணைக்களம் விரைந்து முன்னெடுத்தல்.

ஆசிரியர் கற்பிக்கின்றார். மாணவர்கள் விரும்பினால் கற்கலாம் என்ற நிலைக்கு அப்பால் கற்றல் கலாசாரமொன்றை உருவாக்கி சிறுவயதிலேயே மாணவர்களுக்கு பொறுப்பினை வழங்க வேண்டும். அதாவது ஆசிரியர் மையக் கற்பித்தலை கடந்து மாணவர் மைய கற்றலை ஏற்படுத்தல்.

மாணவர்களுக்கு விடயதானம் பற்றிய அடிப்படையறிவு அற்ற நிலையில் இடைவிலகலுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக்கல்வி முறைமையும் தோல்வி கண்டுள்ள நிலையில் அம்முறைமையை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தல். இடைவிலகல் ஆரம்பித்தவுடனேயே தொடர்தேர்ச்சியான மதிப்பாய்வு மற்றும் விழிப்புணர்வு செயற்றிட்டங்களை கல்வித்திணைக்களம் முன்னெடுத்திருக்க வேண்டிய நிலையில் அதில் ஏற்பட்டுள்ள தாமதங்களை விரைந்து சீர்செய்தல்.

ஆகிய செயற்பாடுகள் நிலைமைகளை மேலும் மோசமடைவதைத் தடுப்பதற்கு ஏதுவாக இருப்பதற்கு வழிவகுக்கும்.  

ஆனால் இந்தச் செயற்பாடுகளும் சாவல்கள் மிக்கவை தான். ஏனெனில்  வடக்கில், தரம் ஒன்றில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தரம்1இல் இணையும் மாணவர்களின் எண்ணிக்கையானது 2020ஆம் ஆண்டில் வடக்கின் 5 மாவட்டத்திலும் 16 ஆயிரத்து 820 மாணவர்கள் தரம் 1இல் இணைந்தபோதும் 2021இல் 15 ஆயிரத்து 703 மாணவர்களே தரம் 1இல்  இணைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/139907

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.