Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோய்வாய்பட்ட தந்தையை மூன்று கிலோ மீட்டர் தோளில் சுமந்து சென்ற மகன்: காரணம் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நோய்வாய்பட்ட தந்தையை மூன்று கிலோ மீட்டர் தோளில் சுமந்து சென்ற மகன்: காரணம் என்ன?

 

நோய்வாய்பட்ட தந்தையை மூன்று கிலோ மீட்டர் தோளில் சுமந்து சென்ற மகன்

42 நிமிடங்களுக்கு முன்னர்

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பழங்குடிகளான காணி இன மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு செல்ல முறையான சாலை வசதி செய்யப்படாததால் மலை வாழ் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் சாலை வசதி இல்லாததால் நோய்வாய்பட்ட தந்தையை காப்பாற்ற அவரது மகன் மூன்று கிலோமீட்டர் தூரம்  தோளில் மருத்துவமனைக்கு சுமந்து சென்ற நிலையில் உரிய நேரத்திற்கு சென்று சேராததால் தந்தை உயிரிழந்தார்.  

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பேச்சிப்பாறை அணைக்கு அருகே பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. இதனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு திடீரென உடல் நல குறைவு  ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இயலாத நிலை உள்ளது.

உடல் நலம் பாதிக்கப்பட்ட நபரை சில கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்று அங்கிருந்து வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு செல்லும் நிலை தான் உள்ளது. 

 

 

தந்தையை மருத்துவமனைக்கு தோளில் சுமந்து சென்ற மகன்

சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த பேசிப்பாறையை அடுத்த  கோலஞ்சிமடம் பழங்குடியின குடியிருப்பைச் சேர்ந்த வேலு என்பவருக்கு திடீரென சர்க்கரை நோயால் உடல் நிலை மோசமானது. அவரை ஆம்புலன்ஸ் அல்லது வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முறையான சாலை வசதி இல்லாததால்  அவருடைய மகன் விக்னேஷ் தந்தையை காப்பாற்ற 3 கிலோமீட்டர் தூரம்  தோளில் சுமந்து ஆற்றை நடந்தே கடந்து சென்று பின்னர் ஒரு காரில் ஏற்றி பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

வேலுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சாலையில் வசதி இல்லாததால் நோய் வாய்ப்பட்ட தந்தையை  உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு  கொண்டு செல்ல முடியாமல் உயிரிழந்துவிட்டார். எனவே கோலஞ்சிமடம் பழங்குடியின காணி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உடனடியாக மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என உயிரிழந்த வேலு மகன் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

‘அப்பாவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆற்றை கடந்தேன்’

தந்தையை தோளில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வேலுவின் மகன் விக்னேஷ்  பிபிசி தமிழிடம் பேசுகையில்,  “என் அப்பா சர்க்கரை நோயால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அவதிப்பட்டு வந்தார். ஆனால் திடீரென உடல் நிலை மிகவும் மோசமானது.

அப்பாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு போதிய சாலை வசதி இல்லாததால் தனி ஆளாக தோளில் சுமந்து எப்படியாது என் அப்பாவை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ஆற்றை கடந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சுமந்து  சிகிச்சைக்காக  பேச்சிப்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் என் அப்பா உயிரிழந்தது பரிசோதித்த  மருத்துவர்கள் சொல்லி தெரியவந்தது. இவ்வளவு சிரமப்பட்டு உரிய நேரத்தில் கொண்டு வந்து சேர்க்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு உள்ளது.

என் அப்பாவை போன்று பல முதியவர்கள் பழங்குடியின காணி குடியிருப்பில்  உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். எனவே நாங்கள் வசிக்கும் பகுதியில் அவசர காலத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனம்  சென்று வரும் அளவு மட்டுமாவது  முறையான சாலை  அமைத்து  தர வேண்டும்,” என விக்னேஷ் கோரிக்கை வைத்தார்.

 

விக்னேஷ்

 

படக்குறிப்பு,

விக்னேஷ்

கடையல் பேரூராட்சியின் சரியான திட்டமிடாததால் கைவிட்டு போன பாலம்

இது குறித்து உயிரிழந்த வேலுவின் சகோதரர் சௌந்தரராஜன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “மோதிரம் மலையில் இருந்து ஆற்றை கடந்து செல்ல அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக பாலம் மழையால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் நிரந்தர பாலம் அமைப்பதற்கு கடந்த 2013 ஆம் ஆண்டு 60 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. ஆனால் கடையல் பேரூராட்சியின் அப்போதைய நிர்வாகம் பாலம் கட்டும் இடத்தை சரியாக திட்டமிடாமல் மாற்று இடத்தில் பாலம் அமைக்க முடிவு செய்திருந்தனர்.

புதிய பாலம் கட்டுவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். பாலம் கட்ட பேரூராட்சி நிர்வாகம் தேர்வு செய்திருந்த இடம் சரியானதாக இல்லாததால் அப்போதைய மாவட்ட ஆட்சியர் பாலம் கட்டும்திட்டத்தை ரத்து செய்தார். அன்றில் இருந்து இதுவரை புதிய பாலம் அமைக்கப்படவில்லை.

மேலும் கோலஞ்சி மடம் குடியிருப்புக்கு செல்லும் சாலை வசதியும் ஏற்படுத்தப்படவில்லை இதனால் நோயால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் உள்ளது.” என்றார்

நடுவழியில் அடர்ந்த காட்டு பகுதியில் பிரசவிக்கும் கர்ப்பிணி பெண்கள்

பழங்குடியின மக்கள் சந்திக்கும் அடிப்படை பிரச்னைகள் குறித்து  மோதிரமலை கிராம சபை தலைவர் ரகு பிபிசி தமிழிடம் பேசுகையில், “குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மோதிர மலையை சுற்றி சுமார் 14 மலை கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின காணி இன மக்கள்  குடும்பங்கள் வசித்து வருகிறோம்.

இங்கு வசிக்கும்  எங்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. மோதிரமலை மற்றும் சுற்றியுள்ள மலைவாழ் கிராம மக்கள் மருத்துவமனைக்கு 25 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது.

எனவே மோதிரமலை மையமாகக் கொண்டு 108 ஆம்புலன்ஸ் வசதியுடன் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கோரிக்கை ஆனால் இதனை அரசு பலமுறை பரிசீலனை செய்து தற்போது வரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தரவில்லை.

மலை கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் பராமரிக்கப்படாமல் சேதமடைந்துள்ளதால்   108 ஆம்புலன்ஸில் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு  அழைத்து செல்லப்படும்  கர்ப்பிணி பெண்களுக்கு நடு வழியில் அடர்ந்த காட்டு பகுதியில் பிரசவமாகி குழந்தை பிறந்து விடுகிறது. இந்த ஆண்டில் மட்டும் இரண்டு குழந்தைகள் நடுவழியில் ஆம்புலன்ஸில் பிறந்துள்ளன.

பேச்சிப்பாறை மோதிர மலையை இணைக்கும் சாலையில் சேதமடைந்துள்ளதால் வெளி வாகன ஓட்டிகள் தங்கள் கிராமத்திற்கு வர விரும்புவதில்லை என்கிறார்,” ரகு.

"பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களை அரசு தத்தெடுக்க வேண்டும்"

பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பிபிசி தமிழிடம் பேசுகையில், “மோதிர மலை மற்றும் சுற்றுவட்டார மலை கிராமங்களுக்கு செல்லும் சாலை மிக  நீண்ட குறுகிய சாலை. எனவே அந்த சாலையை விரிவாக்கம் செய்து  குறைந்தபட்சம் ஆம்புலன்ஸ் சென்று வர அகலபடுத்த முயற்சி செய்து வருகிறேன்.

வனத்துறை, மின்வாரியம் உள்ளிட்ட துறைகளில் சாலையை சீரமைக்க ஒத்துழைப்பு அளித்தால் நிச்சயம் விரைவில் அந்த பகுதிகளில் ஆம்புலன்ஸ் செல்லும் அளவாவது சாலை விரிவாக்கம் செய்ய முடியும். இதற்காக கடந்த  பத்து ஆண்டுகளாக சட்டமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறேன்.

உங்கள் முதலமைச்சர் திட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் என்கிற அடிப்படையில் மூன்று திட்டங்களுக்கு கோரிக்கை வைத்துள்ளேன். அதில் முதலாவதாக மோதிரமலை சாலை விரிவாக்கம் மற்றும் சாலை சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து துரிதமாக பழங்குடியின காணி இன மக்களுக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான  கடையல்  பேரூராட்சிக்குட்பட்ட மலைவாழ் கிராமங்களை தமிழக அரசு தத்தெடுக்க வேண்டும் என சட்டசபையில் கேட்டுள்ளேன். அப்படி தத்தெடுக்கும் பட்சத்தில் மக்களுக்கு  தேவையான அனைத்து  அடிப்படை வசதிகள் தமிழக அரசு நேரடியாக செய்து கொடுக்கும்  என நம்புகிறோம்,”என்கிறார் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி.

 

 

மாவட்ட ஆட்சியர்

அரசு பரிசீலனை

பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தை எந்த அளவு சென்று சேர்ந்துள்ளது என்பது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் பிபிசி தமிழ் கேட்டதற்கு,  குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மிகப் பெரிய வனப்பகுதி. இது முழுமையாக  வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மலைப்பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின காணி இன மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.

கடந்த சில மாதங்களில் அங்கு வசிக்கும் மக்களுக்கு  தேவையான குடிநீர், இருப்பிடம், மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும்  செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

உடல்நிலை குறைவு காரணமாக மகன் சுமந்து சென்று  தந்தை உயிரிழந்தது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் விசாரணை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில்  கடந்த வாரம் வேலு உடல் நிலை சரியில்லாமல் பேச்சிப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேலு உடல் நிலை மிகவும் மோசமடைந்தால் அவர்களது உறவினர்கள் வேலுவை வீட்டில் வைத்து பார்த்து கொள்வதாக அழைத்து சென்று விட்டனர்.வெள்ளிக்கிழமை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில்  அவர் உயிரிழந்துள்ளார்.

முறையான சாலை வசதி இல்லாததால் வேலுவை உரிய நேரத்தில் சிகிச்சைக்கு அழைத்து வர இயலவில்லை என அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  கடையல் பேரூராட்சிக்கு உட்பட்ட மலைவாழ் கிராம பகுதிகளுக்கு செல்ல சாலை வசதி மற்றும் ஆற்றைக் கடப்பதற்கு பாலங்கள் உள்ளிட்டவைகள் அமைப்பதற்கு அரசிடம் திட்டம் வரைவு அளிக்கப்பட்ட நிதி கோரப்பட்டுள்ளது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் கோரப்பட்டுள்ள திட்ட வரைவு களை அரசு பரிசீலனை செய்து வருகிறது.

மேலும் மின்சாரத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 14 கிலோமீட்டர் கோதையாறு சாலை விரைவில் நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கப்படும். நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டிற்கு வரும்போது சாலைகள் அனைத்தும் முறையாக  பராமரிக்கப்பட்டு போதுமான சாலை வசதிகள் செய்து தரப்படும்.

அதேபோல் அப்பகுதி காணி இன  மக்களின் தொடர் கோரிக்கையான ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தருவது குறித்து மாவட்ட சுகாதாரத்துறையிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த்.

https://www.bbc.com/tamil/articles/clmgn9m2ledo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.