Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பணக்கார நாடான கத்தாரில் ஏன் இந்த அளவுக்கு வறுமை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பணக்கார நாடான கத்தாரில் ஏன் இந்த அளவுக்கு வறுமை?

கத்தார் வறுமை

பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஸ்டேடியங்களை கட்டும்போது உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை கத்தார் குறைத்தே சொல்வதாக ஐஎல்ஓ கூறுகிறது.

8 மணி நேரங்களுக்கு முன்னர்

கத்தாரில் ஏழ்மையை காண்பதும் அதைப் பற்றிப் பேசுவதும் எளிதான காரியமல்ல. அதைப் பற்றிப் பேசுபவர்களும் மிகவும் கவனமாகவே பேசுகிறார்கள்.

"இது மிகவும் கடினமான பிரச்னை. முதலில் உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நிர்வாகம் இதில் மிகவும் கண்டிப்பாக உள்ளது," என்று தன் பெயரை வெளியிட விரும்பாத ஒரு டாக்சி டிரைவர் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.

கத்தார் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று. ஆனால் அங்கும் வறுமை உள்ளது. அது பற்றி இங்கு வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. ஏழ்மை இங்கு அதிக அளவிற்கு மறைக்கப்பட்டிருப்பதே அதற்குக் காரணம்.

வெளிநாட்டு தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட, மிகவும் தொலைதூர இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் வழக்கமாக வரும் பகுதிகளிலிருந்து வெகு தொலைவில் உள்ளனர்.

 

முக்கியமாக எண்ணெய் மற்றும் எரிவாயு மூலம் கிடைக்கும் வருமானம் காரணமாக கத்தாரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 180 பில்லியன் டாலர்களாக உள்ளது. பாலைவனத்தில் பெரிய அளவிலான கட்டுமானத் திட்டங்களில் வேலை செய்ய பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இங்கு ஈர்க்கப்படுவதற்கு இதுவே காரணம்.

கத்தாரில் சுமார் 30 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் இதில் 3.5 லட்சம் அதாவது மொத்த மக்கள் தொகையில் 10% மட்டுமே கத்தார் குடிமக்கள். மீதமுள்ளவர்கள் வெளிநாட்டினர்.

மேற்கத்திய நாடுகளில் இருந்து வரும் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு கத்தார் அதிக ஊதியம் மற்றும் சிறந்த சமூக பாதுகாப்பை வழங்குகிறது.

கத்தார் வறுமையை ஒழித்துவிட்டது என்று அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து வந்துள்ள பெரும்பாலான குடியேறியவர்களுக்கு உண்மை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.

"இந்தியா, நேபாளம், வங்கதேசம் அல்லது பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வருபவர்களில் பெரும்பாலானவர்கள் படிக்காதவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆங்கிலமும் அவ்வளவு நன்றாகப் பேச வராது.

இருப்பினும் தங்கள் சொந்த நாட்டை விட இங்கு அவர்களின் வாழ்க்கைத் தரம் சிறப்பாக உள்ளது. ஆனால் முக்கியமான விஷயம் குறைந்தபட்ச ஊதியம் தொடர்பானது. வீட்டிற்கு பணம் அனுப்பும்பொருட்டு, ஆறு பேர் கொண்ட அறையில் அவர்கள் வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளது,” என்று பாகிஸ்தான் டாக்சி டிரைவர் கூறினார்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பொதுவாக தென்கிழக்கு ஆசியாவிலிருந்து வரும் உயர் திறன் தேவைப்படாத வெளிநாட்டுத் தொழிலாளர்களிடையே வறுமை பரவலாக உள்ளது.

அதிகமான பாகுபாடு

கத்தார் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் பல சலுகைகளுடன் கூடவே ஆண்டுக்கு பல்லாயிரக்கணக்கான டாலர்களை சம்பாதிக்கும் நாட்டில், திறன் தேவைப்படாத பெரும்பாலான தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்திற்கு அதாவது மாதத்திற்கு 275 டாலர்களுக்கு(சுமார் ரூ. 22,377) வேலை செய்கிறார்கள்.

2020 ஆம் ஆண்டில் சர்ச்சைக்குரிய கஃபாலா (ஸ்பான்சர் செய்யப்பட்ட ஆட்சேர்ப்பு) முறையை முடிவுக்குக் கொண்டு வந்த முதல் அரபு நாடு கத்தார். கூடவே குவைத்துக்குப் பிறகு நாடு முழுவதும் ஒரே மாதிரியான குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்திய இரண்டாவது நாடும் அதுதான்.

கஃபாலா அமலில் இருந்தபோது, ஒரு ஊழியர் தனது வேலையை அனுமதியின்றி மாற்றினால், அவர் குற்றவியல் வழக்கு, கைது மற்றும் நாடு கடத்தலை எதிர்கொண்டார். ஸ்பான்சர்கள்  சிலநேரங்களில் அவர்களது பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்து வைத்துக்கொள்வதால்,வேறு வழியின்றி அவர்கள் இந்த நாட்டில் காலவரையின்றி தங்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

பெரும்பாலான புலம்பெயர்ந்தோர் வேலை வாய்ப்பு கட்டணமாக ஆட்சேர்ப்பு நிறுவனங்களுக்கு 500 முதல் 3,500 டாலர்கள் வரை (ரூ. 40,000 முதல் ரூ. 2.84 லட்சம்) செலுத்த வேண்டியிருந்தது. இதற்காக அவர்கள் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் அவர்களது நிலைமை மேலும் கடினமானது.

தொழிலாளர் சட்டங்களை சீர்திருத்துவதன் ஒரு பகுதியாக கத்தார், ஒப்பந்தத்தை முடித்த ஊழியர்கள் தங்கள் வேலையை மாற்ற அனுமதிக்கும் சட்டத்தை இயற்றியது. மேலும் ஊழியர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்யும் நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

கத்தாரில் கட்டுமானத் தொழிலாளர்களின் நிலை சர்ச்சைக்குரிய விஷயமாக உள்ளது. இருப்பினும் இந்த தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டு வருவதாக கத்தார் கூறுகிறது.

ஆனால் இந்த சீர்திருத்தங்கள் இருந்தபோதிலும், ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் போன்ற மனித உரிமை அமைப்புகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கத்தாரில் நுழைவதற்கும் தங்குவதற்கும் வேலைவாய்ப்பிற்கும் தங்கள் முதலாளிகளையே இப்போதும் நம்பியிருப்பதாக குற்றம் சாட்டுகின்றன. அதாவது ஊழியர்களின் குடியிருப்பு, பணி அனுமதிகளைப் புதுப்பிக்கும் ரத்து செய்யும் உரிமை இன்னும் முதலாளிகளிடம் உள்ளது.

"தங்கள் பக்கம் எந்தத் தவறும் இல்லாதபோதும் தொழிலாளர்களிடம் எந்த ஆவணங்களும் இல்லாமல் இருக்கிறது. தொழிலாளர்களின் விண்ணப்பங்கள் மீது முதலாளி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இதன் விளைவை தொழிலாளர்கள் சந்திக்க வேண்டியுள்ளதே தவிர முதலாளிகள் அல்ல,” என்று ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் 2020 அறிக்கை கூறுகிறது.  

தொழிலாளர்கள் இப்போதும் சட்டவிரோதமான, தண்டனை வடிவத்தில் ஊதிய வெட்டுக்களை எதிர்கொள்கின்றனர் என்று கடந்த ஆண்டு இந்த அமைப்பு கூறியது. மேலும், நீண்ட நேரம் உழைத்தாலும் சம்பளம் இல்லாமல் மாதக்கணக்கில் கஷ்டப்படவேண்டியுள்ளது.

வேலைகளை மாற்றக்கூடாது என்று நிறுவனங்கள் இப்போதும் ஊழியர்கள் மீது அழுத்தம் கொடுக்கின்றன," என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவிக்கிறது.

நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் காரணமாக பெரும்பாலான வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலை நிலைமைகள் மேம்பட்டுள்ளன என்று கத்தார் அரசின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் கூறினார்.

"சீர்திருத்தங்களைத் திறம்பட செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சீர்திருத்தங்கள் படிப்படியாக அமல்செய்யப்படும்போது சட்டத்தை மீறும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே போகும்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக கத்தார் ஏழு மைதானங்கள், புதிய விமான நிலையம், மெட்ரோ, சாலைகள் மற்றும் ஹோட்டல்களை உருவாக்கியுள்ளது. லுஸால் ஸ்டேடியம் இறுதிப் போட்டிகளுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்டப்பட்டது.

30,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் மைதானங்களை உருவாக்க பணியமர்த்தப்பட்டனர் என்று கத்தார் அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் வங்க தேசம், இந்தியா, நேபாளம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

உலகக் கோப்பைக்கான ஏற்பாடுகளின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.

" 2010 இல் உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் பொறுப்பு கத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த 6,500 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று கத்தாரில் அமைந்துள்ள பல்வேறு நாடுகளின் தூதரகங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன,” என்று பிரிட்டிஷ் செய்தித்தாள் கார்டியன் கூறுகிறது.

ஆயினும் இந்த எண்ணிக்கை, ”கற்பனையானது மற்றும் தவறானது’ என்று கூறி கத்தார் அதை நிராகரித்தது.

இறந்த தொழிலாளர்கள் அனைவரும் உலகக் கோப்பை திட்டங்களில் ஈடுபடவில்லை என்றும் அவர்களில் பெரும்பாலோர் வயது தொடர்பான நோய்கள் அல்லது இயற்கை காரணங்களால் இறந்தனர் என்றும் கத்தார் அரசு கூறுகிறது.

கத்தார் புலம்பெயர் தொழிலாளர்கள்
 
படக்குறிப்பு,

கத்தாரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த நேபாளத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். பின்னர் உடல் அவரது நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

2014 மற்றும் 2020 க்கு இடையில் மைதானத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 37 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். மேலும் அவர்களில் மூன்று பேரின் மரணங்களே வேலை தொடர்பானவை என்று கத்தார் கூறுகிறது.

ஆனால் கத்தார் அரசு அளித்துள்ள எண்கள் உண்மையைப் பிரதிபலிக்கவில்லை என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) கூறுகிறது. கத்தாரில் மாரடைப்பு அல்லது மூச்சுத்திணறல் காரணமாக ஏற்படும் இறப்புகள் வேலை தொடர்பான விபத்துக்களில் கணக்கிடப்படுவதில்லை. இது ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் தீவிர வெப்பநிலையில் அதிக சுமைகளைச் சுமந்து செல்வதாலும் ஏற்படலாம்.

 2021 இல் மட்டும் 50 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 500 பேர் படுகாயமடைந்தனர் என்றும் அதே நேரத்தில் 37,600 தொழிலாளர்கள் சிறிய அல்லது குணப்படுத்தக்கூடிய காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் ILO  தெரிவிக்கிறது.

கத்தார் அரசு வெளிநாட்டுத் தொழிலாளர்களின் இறப்பைக் குறைத்துக்காட்டுவதாகக்கூறும் சில ஆதாரங்களையும் பிபிசி அரபிக் சேவை சேகரித்துள்ளது.

சர்வதேச நெருக்குதல் அதிகமானதை அடுத்து,, ஸ்டேடியம் கட்டும் தொழிலாளர்களின் சிகிச்சை தொடர்பான தனது சீர்திருத்த திட்டங்களின் ஒரு பகுதியாக  கத்தார், இந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் தங்குவதற்கு ஒரு தொழிலாளர் முகாமை கட்டியுள்ளது.

ஆனால் இந்த பல மில்லியன் டாலர் செலவிலான தொழிலாளர் முகாம் தோஹாவிற்கு வெளியே உள்ளது மற்றும் உலகக் கோப்பை போட்டியின் போது தொலைக்காட்சியில் காணப்படும் ஆடம்பர இடங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. மேலும் அங்கு ஊடகங்கள் செல்வதற்கு அனுமதி இல்லை.

(இந்தச் செய்தியில் கத்தாரில் உள்ள பிபிசி நியூஸ் வேர்ல்ட் சிறப்பு  செய்தியாளர் ஜோஸ் கார்லோஸ் கியூட்டோவின் உள்ளீடும் உள்ளது.)

https://www.bbc.com/tamil/articles/c5162r55vr8o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.