Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுவராஜ் சிங் பிறந்தநாள்: மறக்க முடியாத 4 போட்டிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுவராஜ் சிங் பிறந்தநாள்: மறக்க முடியாத 4 போட்டிகள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,விவேக் ஆனந்த்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்
யுவராஜ் சிங், கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோப்புப் படம்

பேட்டிங்கில் நடுவரிசையில் களமிறங்க வேண்டும்; தேவைப்பட்டால் ஆட்டத்தில் பந்துவீசவேண்டும்; அற்புதமாக ஃபீல்டிங் செய்ய வேண்டும்;  ஃபினிஷராகவும் இருக்க வேண்டும்; அது மட்டுமல்ல இடதுகை பேட்ஸ்மேனாகவும் இருக்க வேண்டும்.

இந்த எல்லாத் துறையிலும் அந்த நபர் கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். 

 இப்படி ஒரு 'ஆல்ரவுண்டரை' இந்தியா தேடியது; தேடிக்கொண்டே இருக்கிறது; இனி வரும் காலங்களிலும் தேடக்கூடும். 

இந்தியாவுக்குத் தேவையான அந்த 'அற்புத ஆல்ரவுண்டர்' பணியை சில வீரர்கள் சில காலம் செய்திருக்கிறார்கள். ஆனால் அதில் குறிப்பிடத்தக்கவர்; இந்தியாவின் உலகக் கோப்பை கனவுகள் நனவாக துருப்புச் சீட்டாக இருந்த ஒரு நபர் யுவராஜ் சிங். 

 

அது 2000, அக்டோபர் மாதம். கென்ய தலைநகர் நைரோபியில் ஐசிசி நாக் அவுட் டிராஃபி நடந்தது.  சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியில் 19 வயது இளம் காளை யுவராஜ் சிங் இடம்பெற்றிருந்தார். 

முதல் போட்டியில் கென்யாவுடன் மோதியது இந்திய அணி. கென்யா அணி நிர்ணயித்த இலக்கை யுவராஜ் சிங் பேட்டிங் செய்ய வேண்டிய அவசியமே இன்றி கச்சிதமாக வென்று முடித்தது கங்குலி படை.  காலிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது இந்தியா. முதலில் பேட்டிங் செய்தது இந்தியா. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு படையில் கிளென் மெக்ராத், ப்ரெட் லீ, ஜேசன் கில்லஸ்பி, இயான் ஹார்வீ என நட்சத்திர பட்டாளமே இருந்தது.  இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் சச்சின், கங்குலி, டிராவிட்  ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் வரிசையாக பெவிலியனுக்கு நடையைக் கட்ட, 19 வயது யுவராஜ் சிங் களம்புகுந்தார். 

யுவராஜ் சிங், கிரிக்கெட்
 
படக்குறிப்பு,

கோப்புப் படம்

சர்வதேச போட்டியில் அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டுகள் தெறித்து கோல்டன் டக் ஆகி நடையை கட்டியிருக்க வேண்டியவர். ஆனால் ஹார்வி வீசிய பந்து ஸ்டம்பை தகர்க்காமல் சென்றது.  அடுத்த பந்தை ஹார்வீ ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசினார். நேர்த்தியான ஒரு ஷாட் ஆடினார் யுவராஜ். பந்து பௌண்டரி கோட்டை தொட்டது. இப்படித்தான் சர்வதேச போட்டியில் தனது ரன் கணக்கை தொடங்கினார்.

ஆம்.

ஒரு சிறு பின்னடைவை சந்தித்தாலும் அடுத்தமுறை நாலு கால் பாய்ச்சலில் இலக்கை நோக்கி பாய்வது யுவராஜ் ஸ்டெயில்.  அந்த போட்டியில் யுவராஜ் அடித்தது 84 ரன்கள். அதில் 12 பௌண்டரிகள் அடக்கம். யுவராஜ் அதிரடியால் இந்தியா பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை காலிறுதியில் வீழ்த்தியது. அவரே ஆட்டநாயகன் விருதை பெற்றார். 

யுவராஜ் சிங், கிரிக்கெட்
 
படக்குறிப்பு,

கோப்புப் படம்

அந்த காலகட்டத்தில் வலுவான அணிகளுக்கு எதிராக இந்தியா தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்தது. ஆகவே அந்த வெற்றி இந்தியாவுக்கு அவசியமாய் இருந்தது.  போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணித்தலைவர் கங்குலி, யுவராஜ் சிங் இந்த போட்டியை ஆடிய விதம் அதிசிறப்பானது. இது இந்திய கிரிக்கெட் அணியின் தன்னம்பிக்கையை பல மடங்கு  உயர்த்தியிருக்கிறது என்றார்.  ஆம். முதல் ஆட்டத்திலேயே அரை சதம் அடித்து ஆட்ட நாயகன் விருது வென்ற யுவராஜ் பின்னாளில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 27 முறை ஆட்டநாயகன் விருது வென்றார்.  அவரை விட அதிகமுறை ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய வீரர்கள் கங்குலி, கோலி, சச்சின் மட்டுமே. 

மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேனாக களமிறங்கும் யுவராஜ் சிங், சர்வதேச போட்டிகளில் தனது நிதானமான இடது கை சுழற்பந்து வீச்சில் பல பேட்ஸ்மேன்களை திணறடித்திருக்கிறார்.

யுவராஜ் சிங், கிரிக்கெட்
 
படக்குறிப்பு,

கோப்புப் படம்

பந்துவீச்சில் அபாரம்

அபாரமான சிக்ஸர்களுக்கும் ஃபீல்டிங்குக்கும் அறியப்படும் யுவராஜ் சிங் உண்மையில் பந்துவீச்சிலும் இந்திய அணிக்கு குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். ஒட்டுமொத்தமாக சர்வதேச அரங்கில் 148 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 161 இன்னிங்சில் பந்து வீசி 111 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். கங்குலிக்கும் தோனிக்கும்  பல போட்டிகளில் அவர் முக்கிய துருப்புச் சீட்டாக விளங்கினார். குறிப்பாக 2011 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் வலையில் ஏகப்பட்ட பேட்ஸ்மேன்கள் வீழ்ந்தனர்.

யுவராஜ் சிங், கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோப்புப் படம்

யுவராஜ் - தோனி இணை 

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் (2000) தொடர் நாயகன் விருது பெற்ற யுவராஜ் சிங், 2007 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல மிகப்பெரிய பங்காற்றினார். 2011 உலகக்கோப்பையில் இந்தியாவை இறுதி வரை அழைத்து வந்ததில் மிகப்பெரிய பங்கு அவருடையது.

கிளென் மெக்ராத், முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், ஷேன் பாண்ட், ஃபிளின்டாஃப், காலிமோர், வாசிம் அக்ரம், சோயிப் அக்தர், பிரெட் லீ, ஸ்டெயின், ஸ்டூவர்ட் பிராட், மலிங்கா உள்ளிட்ட சிறந்த பந்துவீச்சாளர்களை சந்தித்திருக்கிறார் யுவராஜ்.

2007-ல் டிராவிட் விலகியபிறகு தோனி கேப்டனாகவும், யுவராஜ் சிங் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். தோனி - யுவராஜ் சிங் இணையின் காலகட்டத்தில் இந்திய அணி பல உச்சங்களை அடைந்தது.

யுவராஜ் சிங், கிரிக்கெட்
 
படக்குறிப்பு,

கோப்புப் படம்

2007 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங்கின் அதிரடி ஆட்டம் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற உதவியது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக அவர் அரை சதம் விளாசியிருந்தார். 2011 உலகக்கோப்பையில் நான்கு அரை சதம் மற்றும் சென்னையில் ஒரு சதம் உட்பட 362 ரன்களை குவித்தார். மேலும் 15 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த உலகக்கோப்பைத் தொடரில் நான்கு முறை ஆட்டநாயகன் விருதை வென்றார். 2011 உலகக்கோப்பையின் தொடர் நாயகனும் அவர்தான். 1996-ல் இலங்கையின் அரவிந்த டி சில்வா மற்றும் 1999-ல் தென்னாப்பிரிக்காவின் லான்ஸ குளூஸ்னர் ஆகியோருக்கு பிறகு உலகக்கோப்பை தொடரொன்றில் நான்கு ஆட்டநாயகன் விருது வென்றவர் யுவராஜ் சிங் மட்டுமே. 2011 உலகக்கோப்பைக்கு பிறகு அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 30. மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னர் சில மாதங்களிலேயே அவர் கிரிக்கெட் விளையாடத் துவங்கினார். புற்றுநோய் வந்தபிறகும் தனது விடாமுயற்சி மற்றும் நம்பிக்கை மூலம் சிறப்பாக விளையாட முயற்சிசெய்தார். அவருக்கு இந்திய அணியிலும் இடம் கிடைத்தது.தனித்துவமான பேட்டிங் ஸ்டெயிலுக்கும் இமாலய சிக்ஸர்களுக்கும் பெயர் பெற்ற யுவராஜ் பலமுறை பேட்டிங்கில் இந்திய அணிக்கு தெம்பூட்டியவர். அதில் குறிப்பிடத்தக்க நான்கு ஆட்டங்கள் இவை. 

1. 2002 - நாட்வெஸ்ட் கிரிக்கெட் கோப்பை

இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பெற்ற வெற்றிகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் போட்டி இது. நாட்வெஸ்ட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின. இங்கிலாந்து 325 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கைத் துரத்தியது இந்தியா.

யுவராஜ் சிங், கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோப்புப் படம்

2000 -2002 நாட்வெஸ்ட் தொடருக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தொடர்ந்து இந்திய அணி சேஸிங்கில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. இந்திய அணி சச்சின் டெண்டுல்கரை சேஸிங்கில் மலைபோல நம்பியிருந்த காலகட்டத்தில், நாட்வெஸ்ட் கோப்பையை வெல்லும் முனைப்போடும் இந்தியா இலக்கைத் துரத்தியது.

ஆனால் 146 ரன்களில் 5 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. அப்போது யுவராஜ் சிங் மற்றும் கைஃப் ஜோடி சேர்ந்தனர். யுவராஜ் சிங் 63 பந்தில் 69 ரன்கள் எடுத்தார். கைஃப் 87 ரன்கள் எடுத்தார்.  326 ரன்கள்  எனும் இலக்கை துரத்தி  இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று கிரிக்கெட் உலகை அதிர வைத்தது இந்தியா.

2. ஆறு பந்தில் ஆறு சிக்ஸர்

2007 உலகக்கோப்பை டி20 தொடரின்  லீக் சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 12 பந்துகளில் அரை சதம் கடந்து உலக சாதனை படைத்தார் யுவராஜ் சிங். 16 பந்துகளில் 58 ரன்கள் எடுத்திருந்த யுவராஜை ஃபிளின்டாஃப் அவுட் செய்தார். ஆட்டத்தின் 18-வது ஓவரில் ஃபிளின்டாஃப் பந்தில் இரண்டு பவுண்டரிகள் விளாசிய யுவராஜ் சிங், 19-வது ஓவரில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஆறு பந்துகளிலும் ஆறு சிக்ஸர்கள் விளாசி தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார்.

யுவராஜ் சிங், கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோப்புப் படம்

3. உலகக் கோப்பை காலிறுதி ஆட்டம், 2011

1992, 1996, 1999, 2003 உலகக்கோப்பைகளில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. குறிப்பாக சொல்லவேண்டுமெனில் 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தான் இந்தியா கோப்பையை பறிகொடுத்தது.  1999, 2003, 2007 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாவை வென்றிருந்த நிலையில் 2011  உலகக்கோப்பையையும் வெல்லும் முனைப்பில் இருந்தது ஆஸ்திரேலியா. காலிறுதியில் இந்தியாவை சந்தித்தது.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. ஹாடின், கிளார்க் விக்கெட்டை யுவராஜ் சிங் வீழ்த்த, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 260 ரன்கள் எடுத்தது ஆஸி.

இந்தியா 187/5 என்ற ஸ்கோரில் இருந்தபோது ரெய்னாவும் யுவராஜ் சிங்கும் ஜோடி சேர்ந்து இந்தியாவை வெற்றிபெற வைத்தனர். யுவராஜ் சிங் 65 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.

யுவராஜ் சிங், கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோப்புப் படம்

யுவராஜ் சிங்கின் இன்னிங்ஸால் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவின் வெற்றிப்பயணம் முடிவுக்கு வந்தது. அது பாண்டிங் கேப்டன்சியை ராஜினாமா செய்வதற்கும்  வழிவகுத்தது.

4. யுவராஜ் சிங் 150*

2017-ம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தது இங்கிலாந்து. கட்டாக்கில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, வோக்ஸின் அபார பந்துவீச்சில் 25 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது. நான்கு ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இடம்பெற்ற யுவராஜ் சிங் தோனியுடன் இணைந்து ஒரு மெகா இன்னிங்ஸ் விளையாடினார். 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 381 ரன்கள் குவித்தது. யுவராஜ் சிங் 127 பந்துகளில் 150 ரன்கள் குவித்தார். தோனி 122 பந்துகளில் 134 ரன்கள் எடுத்தார்.

யுவராஜ் சிங், கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோப்புப் படம்

தோனி - யுவராஜ் சிங் இணை நான்காவது விக்கெட்டுக்கு 256 ரன்களைச் சேர்த்தது. ஆட்டத்தின் 43-வது ஓவரில் யுவராஜ் ஆட்டமிழக்கும்போது 21 பௌண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் விளாசியிருந்தார். புற்றுநோய் பாதிப்புக்கு பின் ஆறு ஆண்டுகள் கழித்து யுவராஜ் அடித்த இந்த சதம்தான் அவரது கடைசி சதம். இந்த போட்டியில் அவர் எடுத்த 150 ரன்கள்தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் யுவராஜ் சிங்கின் அதிகபட்ச ரன். இப்போட்டியில் யுவராஜ் சிங் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 30 வயதிலேயே 250 -க்கும் அதிகமான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றிருத்த யுவராஜ் சிங் புற்றுநோய் பாதிப்புக்கு பிந்தைய இன்னிங்சில் விளையாடிய போட்டிகளோடு சேர்த்து 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 14 சதம், 52 அரை சதம் விளாசியுள்ளார்.

 

யுவராஜின்  உள்ளே - வெளியே ஆட்டம் 

யுவராஜ் சிங் காலத்தில் விளையாடிய சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் வரலாற்றைப் பார்த்தால் யுவராஜ் அளவுக்கு ஃபார்ம் அவுட் ஆனதும் பின்னர் மீண்டும் வந்து 'மேட்ச் வின்னிங்' இன்னிங்ஸ் விளையாடியவர்களும் மிகக்குறைவு. இதனால்தான் யுவராஜ் சிங் அடிக்கடி இந்திய அணியில் உள்ளே - வெளியே ஆட்டம் ஆடியிருக்கிறார். 2012 நவம்பர் முதல் 2014 ஏப்ரல் வரை அவர் இந்திய அணியில் இருந்தார். இந்த காலகட்டங்களில் அவ்வப்போது டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் ஒருநாள் போட்டிகளில் அவர் பெரியளவில் சோபிக்கவில்லை. 2014 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 43 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். ஆனால் இறுதிப்போட்டியில் 21 பந்துகளை சந்தித்து அவர் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். இலங்கை அணியிடம் இந்தியா கோப்பையை இழக்க மிக முக்கிய காரணியாக யுவராஜின் அந்த இன்னிங்ஸ் அமைந்தது. இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்த அந்த ஆட்டத்துக்கு பிறகு யுவராஜ் சிங் 2015 உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. அதன்பின்னர் சுமார் 20 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் தனது கடும் உழைப்பால் இந்திய அணியில் நுழைந்தார்.

யுவராஜ் சிங், கிரிக்கெட்
 
படக்குறிப்பு,

கோப்புப் படம்

இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது டி20 அணியில் யுவராஜ் தேர்வு செய்யப்பட்டிருந்தார். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கடைசி போட்டியில் சேஸிங்கில் யுவராஜ் ஒன்பது பந்தில் ஐந்து ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய அணியின் வெற்றிக்கு ஆறு பந்தில் 17 ரன்கள் தேவைப்பட்டது. ஆண்ட்ரூ டை வீசிய அந்த ஓவரில் முதல் பந்தை பௌண்டரிக்கும் இரண்டாவது பந்தை சிக்சருக்கும் விளாசினார் யுவராஜ். ரெய்னாவின் அபாரமான ஒரு பௌண்டரி மூலம் இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டி20 தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்து வென்றது. நடு வரிசையில் இறங்கக்கூடிய ஓர் இடது கை அதிரடி வீரர், பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் எனும் அம்சத்தை சிறப்பாக பயன்படுத்தி ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கை  முக்கிய துருப்புச்சீட்டாக்கி  உலக கோப்பைகளை வென்றது இந்தியா.  2007, 2011 உலகக் கோப்பைகளுக்கு பிறகு நடந்த  டி20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா வெல்லவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி யுவராஜ் சிங் ஓய்வு பெற்றார். அப்போது இப்படிச் சொன்னார். ''நான் எப்போதும் என்னை நம்புவதை நிறுத்தியதில்லை... எப்போதும் உங்களை நம்புங்கள்.''

https://www.bbc.com/tamil/articles/c72nr32pr11o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.