Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச மனித உரிமை பிரகடனம் இலங்கையில் தாக்கம் செலுத்தியிருக்கிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச மனித உரிமை பிரகடனம் இலங்கையில் தாக்கம் செலுத்தியிருக்கிறதா?

download-12-3-300x156.jpgஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கு அக்கறையுள்ள எவருக்கும், எழுபத்து நான்கு வருடங்கள் குறுகிய காலம் அல்ல! வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இலங்கையின் ஆட்சியாளர்கள், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு மேலாக தமிழர்களையும், சர்வதேச சமூகத்தையும் முட்டாளாக்குவதற்கான வழிகளை மட்டுமே தேடுகிறார்கள் என்பதே யதார்த்தம்-உண்மை.

உலகெங்கிலும் உள்ள கொடூரமான மனித உரிமை மீறல்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று, சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்துவதற்கான போராட்டங்களுக்கு எதிரான ஒடுக்குமுறையாகும்.

1-9-300x169.jpg 2-7-300x169.jpg 3-6-270x300.jpg

4-6-214x300.jpg

சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் எழுபத்தி நான்காவது (74) ஆண்டு நிறைவு – டிசம்பர் 10 ஆம் திகதி  அன்று கொண்டாடப்படும். இந்த கொண்டாட்டம் நடைபெறும் அதேவேளையில், எழுபத்தைந்தாவது (75) ஆண்டின் கொண்டாடத்திற்காக –  ஐக்கிய நாடுகள் சபை முதல் நாடுகள் ரீதியாக, அரசு சார்பற்ற நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் கொண்டாடுவதற்கு ஒழுங்குகள் நடைபெற்று வருகின்றது.

மனித உரிமைகள் பற்றிய கருத்து மேலை நாடுகளில் பிறக்கவில்லை என்பதை வரலாற்றாசிரியர்களும் அறிஞர்களும் வெளிப்படுத்துகிறார்கள்! பண்டைய கிரீஸ் மற்றும் ரோமில் அதன் தோற்றத்தை பலர் கண்டறிய முயற்சிக்கின்றனர். இருப்பினும், “சைரஸ் மனித உரிமைகள் சாசனம்” 1878 இல் பாபிலோன் நகரில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டதையே இன்று உலகின் முதல் மனித உரிமைகளின் முதல் பிரகடனமாகக் கருதுகின்றனர்.

கி.மு 539 அக்டோபர் 4ல், ஈரானிய (பாரசீக) வீரர்கள் அப்போது ஈராக் தலைநகரான பாபிலோனுக்குள் நுழைந்தனர் (பாபிலோனியா). இந்த இரத்தமில்லாத போர் பாபிலோனில் தலைமுறை தலைமுறையாக அடிமைகளாக இருந்த அனைவர்களையும் விடுவித்தது என்று கூறப்பட்டது. நவம்பர் 9 ஆம் திகதி ஈரானின் சைரஸ் அரசர் (பாரசீகம்) பாபிலோனுக்குச் சென்று, “மனித உரிமைகளின் சைரஸ் சாசனம்” என்று அழைக்கப்படும் சுடப்பட்ட களிமண் பீப்பாயில் (சிலிண்டர்) பொறிக்கப்பட்ட ஒரு பிரகடனத்தை வெளியிட்டார்.

ஈரானில் முகமது ரெசா பலாவி என்று அழைக்கப்படும் ஷா அரசர் காலத்தில், சைரஸ் சிலிண்டர் பிரபலமடைந்தது.1968 ஆம் ஆண்டு தெஹ்ரானில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது மனித உரிமைகள் மாநாடு நடைபெற்ற வேளையில் ஈரான் அரசனான ஷா “சைரஸ் சிலிண்டர் மனித உரிமைகளின் நவீன உலகளாவிய பிரகடனத்தின் முன்னோடி” என்று அறிவித்தார்.இன்றும், இங்கிலாந்தில் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் கண்காட்சி கூடத்தில் இது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. (படம் – சைரஸ் சிலிண்டர் லண்டன் பிரிட்டிஷ் கண்காட்சி கூடத்தில் )

ஐ.நா.வும் மனித உரிமை பிரகடனமும்

ஐ. நா. சாசனம் 26 ஜூன் 1945 அன்று சான் பிரான்சிஸ்கோவில் நடந்த ஐ.நா மாநாட்டில் 50 நாடுகளால் கையெழுத்திடப்பட்டது. ஆனால் ஐ.நா அதிகாரபூர்வமாக 24 அக்டோபர் 1945 அன்று ஐந்து பெரிய நாடுகளான  பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், அமெரிச்கா, சோவியத் யூனியன் (இன்று ரஷ்யா) மற்றும் சீனா (இன்றைய சீனக் குடியரசு அல்லது தைவான்) ஐ. நா. சாசனத்தை அங்கீகரித்தது. ஐக்கிய நாடுகள் சபை அக்டோபர் 24ஐ  ஐ.நா.தினமாகக் கொண்டாடுகிறது.

சர்வதேச மனித உரிமை பிரகடனம் அல்லது  சாசனம்  1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையால், பாரிஸில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அன்றிலிருந்து  இந்த நாள் “சர்வதேச மனித உரிமைகள் தினமாக” உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச மனித உரிமை பிரகடனம் அல்லது  சாசனம்  முப்பது சாரங்களைக் கொண்டுள்ளது.சாரம் 1 மற்றும் 2 இன் தத்துவக் கோரிக்கையை கோடிட்டுக் காட்டுகின்றன.மேலும் மனிதர்கள் சமமான கண்ணியத்தில் சுதந்திரமாக பிறக்கிறார்கள் மற்றும் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் அனைத்து உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கு உரிமையுடையவர்கள் என்பதை வலியுறுத்துகின்றன. சாரம்  3 முதல் 21 வரையிலான குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் மற்றும் சாரம்  22 முதல் 27 வரை பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் பற்றி கூறுகின்றன.28 மற்றும் 29 சாரம்களின் முடிவு ஜனநாயக சமூகத்தில் தனிநபரின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை வலியுறுத்துகிறது.இறுதியாக, சாரம் 30ல்  குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை அழிக்கும் நோக்கில் எதையும் செய்ய ஒரு நபர் அல்லது குழுவிற்கு எந்த உரிமையும் உள்ளது என்று விளக்கப்படக்கூடாது என்று எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கிறது.

சிறிலங்காவில் மனித உரிமை தினம் ஒவ்வொரு வருடமும் வந்து செல்கிறது.ஆனால் சர்வதேச மனித உரிமை பிரகடனம் சிறிலங்காவில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா? 2009 மே மாதப் போரின் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனவர்களுக்காக விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல் அடிப்படையில் அரசாங்கம் என்ன செய்துள்ளது? யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் இன்று என்ன நடக்கிறது? தெற்கில் – 1971 மற்றும் 80களின் பிற்பகுதியில் ஜே.வி.பி.யின் எழுச்சியின் போது இடம்பெற்ற காணாமல் போனவர்கள் – ஜே.வி.பி.யின் தலைவர் ரோஹண விஜேவீர உட்பட பலர் தன்னிச்சையாக கொல்லப்பட்டது பற்றி என்ன செய்துள்ளார்கள்.

யுத்தம் முடிவடைந்து பதின்மூன்று வருடங்களுக்குப் பின்னரும் – நில அபகரிப்பு, கட்டாய மத நினைவுச்சின்னங்களை நடுதல், கட்டாயக் குடியேற்றம் மற்றும் பல அழிவுகள் வடக்கு மற்றும் கிழக்கில் தற்பொழுதும் தொடர்கின்றன. சிலர் கூறுவது போல், தமிழ் மக்கள் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து காப்பாற்றப்பட்டிருந்தால், இன்றும் ஏன் இந்த மோதலும், பாகுபாடும், துன்பமும் தொடர வேண்டும்? போர் உச்சகட்டத்தில் இருந்த காலத்தில் சர்வதேச சமூகத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் என்னவாயிற்று?

மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் தலைமைத்துவம் தொலைநோக்குப் பார்வையும் அர்ப்பணிப்பும் இல்லாதபோது, இலங்கையில் உள்ள மக்களின் இதயங்களிலும் மனங்களிலும் அதை ஊக்குவிக்காதபோது, குடிமக்கள் தங்கள் பிறப்புரிமைகளை நிலைநிறுத்துவதற்கு எந்த விலை கொடுத்தாலும் குரல் எழுப்புவார்கள் என  உறுதியளிக்கப்பட்டுள்ளது.மனித உரிமைகள் வயது, பாலினம், இனம், இனம், மதம், தேசியம் மற்றும் பிராந்திய வேறுபாடுகள் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சுதந்திரம், கண்ணியம், சமத்துவம் மற்றும் நீதியை உத்தரவாதம் செய்கிறது.

புத்த பகவான் இந்துவாகவே பிறந்தார் என்பதை இலங்கையில் சிலர் இன்றுவரை உணரவில்லை.ஒரு கடற்படை அரசியல் பிரமுகர் தன்னை புத்த சாசனத்தின் பாதுகாவலராக சித்தரிக்க முயற்சிப்பது முற்றிலும் அரசியல் நோக்கத்திற்காகவே. சமத்துவத்திற்கு மதிப்பு கொடுக்காது, மதுவின் சுவை உட்பட மாட்டுக்கறியையும் மற்ற அசைவத்தையும்  சாப்பிடுபவர்,எப்படியாக  புத்த சாசனத்தின் கற்பனையான பாதுகாவலராகதன்னும் இருக்க முடியும்? புத்தபெருமானின் பெயரால் பலர் சிறிலங்காவில் கபட நாடகம்  ஆடுகிறார்கள் என்பதே உண்மை.

நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை

தென்னாபிரிக்காவின் முன்னாள் தலைவர் நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை உலக அரசுகளிற்கு ஓர் அருமையான ஊதாரணமாக இருந்து வருகிறது.எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ள ஒரு மக்கள் எவ்வாறு எண்ணியல் சிறுபான்மையினரை திருப்திப்படுத்தலாம், மற்றும் இணைந்து வாழலாம் என்பதை உலகுக்கு முன்னுதாரணமாக விளங்கியவர் நெல்சன் மண்டேலா.

இவ்வாறான அரசியல் – சகவாழ்வு சிறிலங்காவின் அரசியல் தலைவர்களுக்கு நியாயமானதும், சமத்துவமானதுமான, தீர்வைக் காண்பதற்கான மனவலிமை இல்லாதது மட்டுமன்றி, இலங்கையில் உள்ள பௌத்த மேலாதிக்கம் சகவாழ்வை திட்டவட்டமாக நிராகரிக்கிறது.

தென்னாபிரிக்காவில் – 2001ல், இனவெறிக்கு எதிரான ஐ.நா. உலக மாநாட்டின் போது,  எங்கள் அமைப்பான ‘தமிழ் மனித உரிமைகள் மையம் – TCHR’ தென்னாபிரிக்க அமைச்சர்களையும் முக்கிய புள்ளிகளையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.அவர்கள் எம்மினால் ஒழுங்கு செய்யப்பட்ட கண்காணிப்பில்  எங்களுடனான  ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தினர் அன்றைய தென்னாபிரிக்காவிற்கான இலங்கைத் தூதரக ஊழியர்கள் மற்றும் இன்றைய எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்லவும் எமது கண்காணிப்பை பார்வையிட்டனர்.அவர்கள் வடக்கு, கிழக்கு நிலைமைகள் பற்றிய விடயத்தில்  என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில், கிரியெல்ல, தான் தமிழர்களுக்கான ஒரு அரசியல் தீர்வொன்றை முன்னெடுப்பதாக அன்று  என்னிடம் கூறியது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது.இப்போது இருபத்தி இரண்டு வருடங்கள் கடந்தும் இவ் இனப்பிரச்சினைக்கான தீர்வு எங்கே?

ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கு அக்கறையுள்ள எவருக்கும், எழுபத்து நான்கு வருடங்கள் குறுகிய காலம் அல்ல! வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இலங்கையின் ஆட்சியாளர்கள், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு மேலாக தமிழர்களையும், சர்வதேச சமூகத்தையும் முட்டாளாக்குவதற்கான வழிகளை மட்டுமே தேடுகிறார்கள் என்பதே யதார்த்தம்-உண்மை.

சுயநிர்ணய உரிமை

உலகெங்கிலும் உள்ள கொடூரமான மனித உரிமை மீறல்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று, சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்துவதற்கான போராட்டங்களுக்கு எதிரான ஒடுக்குமுறையாகும்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையிலும்  ICCPRல் – மற்றும் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை – ICESCR சாரம் 1 (ஒன்று) கூறுவது என்னவெனில், “எல்லா மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உள்ளது.அந்த உரிமையின் மூலம் அவர்கள் தங்கள் அரசியல் அந்தஸ்தை சுதந்திரமாக நிர்ணயம் செய்து, தங்கள் பொருளாதார, சமூக மற்றும் கலாசார வளர்ச்சியை சுதந்திரமாகப் பின்பற்றுவார்கள்.

நடைமுறையில் படிப்படியாக சாரம் 1 வலுவிழந்து வருகிறது. இது மனித உரிமை சபையின் நிகழ்ச்சி நிரலில் அறவே கிடையாது, ஏனெனில், பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இந்த சாரம் ஒன்று பல சர்ச்சைகளை ஏற்படுத்துகிறது.

அமெரிக்காவில் அலாஸ்கா, ஹவாய் மற்றும் போர்ட்டோ ரிக்கோ மக்கள் சுயநிர்ணய உரிமைக்காக போராடுகிறார்கள். ஐக்கிய இராச்சியத்தில் – வட அயர்லாந்து அரசியல் நெருக்கடி இன்னும் தீர்க்கப்படவில்லை.இதேவேளை, ஸ்கொட்லாந்து வேல்ஸ் ஆகியவை தமது சுயநிர்ணய உரிமைக்காக போராடுகிறார்கள்.பிரான்சில் கோசிக்கா மற்றும் பிரித்தான் மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளைக் கோருகின்றனர். ரஷ்யா மற்றும் சீனாவில் – சேச்சீனிய, தீபேத், ஊகீர் (கிழக்கு துர்கெஸ்தான்) மக்கள் போன்று பலர் தங்கள் சுயநிர்ணய உரிமைக்காக போராடுகிறார்கள்.இத்தகைய சூழ்நிலைகளில், சுயநிர்ணய உரிமை பற்றிய கேள்வி தொடர்பான சர்வதேச சட்டம் சக்தியற்று காணப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஐ.நா.வின் தீர்மானங்கள் மூலமாக எரித்தேரியா, கிழக்கு-திமோர், தெற்கு சூடான் ஆகிய நாடுகள் புதிதாக உருவாகின. கொசோவோ நாட்டின் தோற்றம் என்பது, வெற்றிகரமான ராஜதந்திரம் மட்டுமல்லாது, பெரிய வல்லரசு அல்லது பலம் படைத்த நாடுகள் மூலம் கிடைக்க பெற்ற வெற்றியாகும்.

இத்தனை தடைகளையும் மீறி, மனித உரிமைகளை மீறும் நாடுகளை “பெயரிட்டு வெட்கப்படுதல்” என்ற செயற்திட்டம் மூலம் மனித உரிமைக்காக உண்மையில் உழைக்கும்  நிறுவனங்களும் செயற்பாட்டாளர்களும் வெற்றி கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலர் அரசாங்கங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றால் போல், மிகவும் கபடமாக பாதிக்கப்பட்டவர்களை மனித உரிமை வேலையென கூறி, ஏமாற்றி பெரும் தொகையான பணம் சம்பாதிப்பதையும் நாம் காணக்கூடியதாகவுள்ளது.இது ஒரு சர்வதேச கிறீமினல் குற்றம். இப்படியாக சில வருடங்களாக ஐ.நா.மனித உரிமை சபையில் வேலைகளை மேற்கொண்ட ஒரு தமிழ் நபர், ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையினால், சில வருடங்களிற்கு முன்பு வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவில் தமிழர்களின் ஆள் கடத்தலை ஆய்வு செய்யும் போது, இவை யாவும் சிறிலங்காவில் தமிழர் சனத்தொகையைக் குறைக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரல் என்பது தெளிவாகிறது.இது ஒரு சர்வதேச கிறீமினல் குற்றம். இவற்றின் அடிப்படையில், முதற்கட்டமாக, காவல்துறையும் மற்ற அரசு படைகளும் இடைத்தரகர்களாக தமிழர்களை எந்தவித காரணமுமின்றி அன்றாடம் துன்புறுத்துகின்றனர்.அவர்கள் தினசரி துன்புறுத்தலை எதிர்கொள்ளும் அதேவேளையில், ஆள்கடத்தல்களை புரியும் தொழிலதிபர்களின் மற்றொரு குழு, பெருமளவிலான வெளிநாட்டு அல்லது உள்ளூர் பணத்துடன் மக்களை ஆட்கடத்தலை நோக்கி வேட்டையாடுகிறன்றனர்.இவ்வேளை அரசின் மறைமுறை உதவியோடு, அரசிற்கு நெருக்கமாகப் பணிபுரியும் நபர்கள், போக்குவரத்தை ஏற்பாடு செய்து, தமிழர்களை நடுக்கடலில்  கைவிடுகின்றனர்.இவ் நிலையில் மனிதாபிமான அடிப்படையில் சில நாடுகள் அவர்களை காப்பாற்றுகிறது. தமிழர்கள் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு ஆள் கடத்தலிலும் இது நிரூபணமாகியுள்ளது. தமிழர்களை தங்கள் குடிமக்களாகக் சிறிலங்கா அரசு கருதினால், இந்த விவகாரத்தில் இலங்கை அரசு ஏன் கவனம் செலுத்தவில்லை என்பதுதான் பதில் காணமுடியாத ஒரு கேள்வி.

 ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

சர்வதேச மனித உரிமை பிரகடனம் இலங்கையில் தாக்கம் செலுத்தியிருக்கிறதா? – குறியீடு (kuriyeedu.com)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.