Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவை மேலும் 3 கொரோனா அலைகள் தாக்க வாய்ப்பு: இந்தியாவுக்கு அதனால் என்ன பாதிப்பு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவை மேலும் 3 கொரோனா அலைகள் தாக்க வாய்ப்பு: இந்தியாவுக்கு அதனால் என்ன பாதிப்பு?

சீனா கொரோனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மணி நேரங்களுக்கு முன்னர்

சீனாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டு, உலகையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடக்கிப் போட்டிருந்த கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மீண்டும் குறிவைத்துள்ளது. அடுத்த 4 மாதங்களுக்குள் 3 கொரோனா அலைகள் சீனாவைத் தாக்கக் கூடும் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார். 

2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர் படிப்படியாக உலகம் முழுவதும் பரவியது. 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் பாதிப்பு தென்படத் தொடங்கிய சிறிது காலத்திலேயே நாடு முழுவதும் வெகுவேகமாக பரவிவிட்டது. அதன் உச்சக்கட்டமாக ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா  தொற்றுக்கு இலக்காகி வந்தனர்.

பொது முடக்கம், கொரோனா பரிசோதனை, கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்துதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுமூச்சாக அமல்படுத்தப்பட்ட போதிலும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. 

அதிவேகத்தில் பெருகிவிட்ட கொரோனா நோயாளிகளை கையாள முடியாமல் நாட்டின் ஒட்டுமொத்த மருத்துவக் கட்டமைப்பும் திணறிப் போனது. நாடு முழுவதும் ஆங்காங்கே மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு, மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஆகிய பிரச்னைகள் எழுந்தன.

 

குறிப்பாக, அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் மருத்துவக் கட்டமைப்பின் பலவீனம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. படுக்கைகள், மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் திண்டாடிய வீடியோக்கள் வெளியாகி காண்போரை கலங்கடித்தன.

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா, நமக்கு ஆபத்தா?
 
படக்குறிப்பு,

கோப்புப் படம்

பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த, சிறந்த மருத்துவக் கட்டமைப்பு கொண்ட அமெரிக்காவும்,  ஐரோப்பிய நாடுகளும் கூட கொரோனா வைரசை சமாளிக்க முடியாமல் திண்டாடி விட்டன.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அளித்துள்ள தரவுகளின்படி, உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரே நாளில் சுமார் 13.5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைக்காகவும், நிவாரணப் பொருட்களை வாங்கவும் மக்கள் ஆயிரக்கணக்கில் நீண்ட வரிசைகளில் காத்திருந்ததை காண முடிந்தது. 

ஐரோப்பிய நாடுகளில், மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லாததால், கொரோனா நோயாளிகள் பலரும் ஆங்காங்கே பூங்காக்களில் சிகிச்சை பெற நேரிட்டது. சில இடங்களில் கொரோனா நோயாளிகள் தங்களது வீட்டில் இருந்தே படுக்கைகளை கொண்டு வந்து பயன்படுத்தியதும் கூட நடந்தேறியது.  பல இடங்களில் விளையாட்டு மைதானங்கள் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டன.

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா, நமக்கு ஆபத்தா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோப்புப் படம்

ஆய்வகம் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளை முழுமையாக முடித்து கொரோனா தடுப்பூசியை முதல் நாடாக பிரிட்டன் அங்கீகரித்து, மக்களுக்கு பயன்பாட்டிற்கு விட்டது. அதனை பின்பற்றி, உலகின் பிற நாடுகளும் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் துரிதமாக செலுத்த தலைப்பட்டன.

ஆக்ஸ்போர்ட் கண்டுபிடிப்பான கோவிஷீல்டு, உள்நாட்டிலேயே தயாரான கோவாக்சின் தடுப்பூசிகளைக் கொண்டு, அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கிய இந்தியா, அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளையும் பெருமளவில் பயன்படுத்தியது. 

உலகம் முழுவதுமே கோர தாண்டவமாடிய கொரோனாவின் தாக்கம், தடுப்பூசி பயன்பாட்டிற்குப் பிறகே மெல்லமெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியது. கொரோனா பரவல் இனி கட்டுக்குள் இருக்கும் என்பதை உறுதிப்படுத்திய பிறகே இந்தியா உள்பட ஒவ்வொரு நாடும் பொது முடக்க கட்டுப்பாடுகளை படிப்படியாக விலக்க முன்வந்தன. அதன் தொடர்ச்சியாக, இன்று பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு விட்டதால், மக்கள் கிட்டத்தட்ட இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர் என்றே சொல்லலாம். 

கொரோனாவை கட்டுப்படுத்த சீனா கடைப்பிடித்த வழிமுறை

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா, நமக்கு ஆபத்தா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோப்புப் படம்

உலகமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருக்கையில், சீனாவைப் பொருத்தவரை ஒப்பீட்டளவில் நிலைமை மேம்பட்டதாகவே இருந்தது.

அமெரிக்கா, இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான கொரோனா பாதிப்புகள் கண்டுபிடிக்கப்படும் போது, சீனாவில் அந்த எண்ணிக்கை மிகவும் சொற்பமாகவே இருந்தது. அதற்கு மிக முக்கிய காரணம், ஜீரோ கோவிட் பாலிசி என்ற பெயரில் சீனா கண்டுபிடித்த மிகக் கடுமையான கட்டுப்பாடுகளே.

அதன்படி, ஓரிருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டாலே, அந்த பகுதி முழுமையாக சீல் வைக்கப்பட்டது. பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டன. உணவு விற்பனை அல்லாத மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அந்த பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ச்சியாக பல நாட்கள் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பிறகே இந்த கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. 

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா, நமக்கு ஆபத்தா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோப்புப் படம்

கட்டுப்பாடுகளை கைவிட்ட சீனா

தினமும் லட்சக்கணக்கில் கொரோனா பாதிப்புகளை கண்ணுற்ற உலகின் பிற நாடுகள் அதில் இருந்து மீண்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கையில் சீனாவிலோ கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் தொடரவே செய்தன. இதனால் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி இல்லாமல் போகவே, அது வேலைவாய்ப்புச் சந்தையிலும் எதிரொலித்தது. சீனாவில் இளைஞர்களிடையே வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது.

இதனால் ஜீரோ கோவிட் பாலிசி என்ற கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் ஆங்காங்கே கிளர்ச்சியில் இறங்க அரசு  இறங்கிவந்தது. கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொண்ட சீன அரசு, மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க உதவும் செல்போன் செயலி பயன்பாட்டையும் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நிறுத்திவிட்டது. 

சீனாவில் மீண்டும் உச்சத்தில் கொரோனா பரவல்

ஜீரோ கோவிட் பாலிசி தளர்த்திக் கொள்ளப்பட்டதுமே சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. அங்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒரே நாளில் 2,097 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது ஒப்பீட்டளவில் குறைவானதாக தெரிந்தாலும், சீனாவில் கடந்த ஏப்ரல் மாத உச்சத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம்தான்.

கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு, கொரோனா பரிசோதனைகள் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டதை சுட்டிக்காட்டும்  நிபுணர்கள், உண்மையில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். 

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா, நமக்கு ஆபத்தா?
 
படக்குறிப்பு,

சீனாவில் கொரோனா பரவல் குறித்த ஜான்ஸ் ஹாகின்ஸ் பல்கலைக் கழகம் வெளியிட்ட தரவு.

“தற்போதைய கொரோனா பரவல் அதிகரிப்பு வரும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதி வரை நீடிக்கக் கூடும். அதனைத் தொடர்ந்து, ஜனவரி 21-ம் தேதி முதல் சீனப் புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாட, பணிபுரியும் இடங்களில் இருந்து கோடிக்கணக்கான சீனர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள். சுமார் ஒரு வார காலம் நீடிக்கும் இந்த கோடிக்கணக்கான மக்களின் இடப்பெயர்வு கொரோனா இரண்டாம் அலைக்கு வழிவகுக்கலாம். 

புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு பிப்ரவரி இரண்டாம் பாதியில் இருந்து மார்ச் முதல் பாதி வரை சொந்த ஊரில் இருந்து பணிபுரியும் இடங்களுக்கு சீனர்கள் பயணப்படுவார்கள். இந்த நேரத்தில் கொரோனா மூன்றாவது அலை வரக்கூடும்,” என்று தொற்றுநோயியல் நிபுணரான வூ சூன்யு கூறுகிறார்.

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா, நமக்கு ஆபத்தா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோப்புப் படம்

சீனாவில் இந்த ஆண்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்க நேரிடும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் அண்மையில் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில்,  வூ சூன்யு கருத்து மிகுந்த கவனம் பெற்றுள்ளது. 

அமெரிக்காவைச் சேர்ந்த தொற்றுநோயியல் நிபுணரும், உலக சுகாதார அமைப்பின் கொரோனா மருத்துவ நிபுணர் குழு உறுப்பினருமான எரிக் ஃபைகல்-டிங்கின் கணிப்பு அச்சம் தருவனவாக உள்ளது. “அடுத்த 90 நாட்களில் சீன மக்கள் தொகையில் 60 சதவீதம் அதாவது உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாகக் கூடும், இதனால் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கக் கூடும்”என்பது அவரது கணிப்பு. வேகமாக அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளை சமாளிக்க முடியாமல் சீன மருத்துவமனைகள் திணறும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அவர், “இது தொடக்கம்தான்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

உலகிற்கே நிவாரணம் தந்த கொரோனா தடுப்பூசிகள் சீனாவிற்கு பலன் தரவில்லையா?

சீனாவில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அரசு கூறுகிறது. எனினும், 80 வயதிற்கும் அதிகமானோரில் பாதிக்கும் குறைவாகவே 3 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். கொரோனாவால் கடும் பாதிப்புகளுக்கு இலக்காவது இந்த வயதுப் பிரிவினரே. 

சீனாவில் மக்களுக்கு போடப்பட்ட அனைத்து தடுப்பூசிகளுமே உள்நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டவை ஆகும். கொரோனாவை எதிர்கொள்வதில் மற்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளைக் காட்டிலும் அவை குறைந்த செயல்திறனையே வெளிப்படுத்தியுள்ளன. ஆகவேதான், 90 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின்னரும் கூட, கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டதும் கொரோனா வைரஸ் மீண்டும் அதிவேகத்தில் பரவத் தொடங்கியுள்ளது. 

கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.  படுக்கைகள் பற்றாக்குறையாகி விட்டதால், மருத்துவமனைகளுக்கு வெளியே கார்களில் வைத்தே பலருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. காரில் இருக்கும் நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றப்படும் காட்சிகள் சீன சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குவிக்கும் சீனர்கள்

சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியிருப்பதால் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர். கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் காய்ச்சல் மருந்தான ஐபுபுரூஃபென் மற்றும் குளிர்கால மருந்துகள், கொரோனா பரிசோதனை உபகரணங்களை சீனர்கள் அவசரஅவசரமாக வாங்கி சேமிப்பில் வைக்கின்றனர். 

வீட்டு வைத்தியத்தில் உதவும் எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற விட்டமின் சி நிரம்பிய கனிகள் எந்த கடையிலும் கிடைப்பதில்லை. இணையவழி வர்த்தக நிறுவனங்களிலும் கூட இருப்பு இல்லை. குளிர் மற்றும் காய்ச்சல் மருந்துகள், விட்டமின்கள், வலி நிவாரணிகளை மக்கள் வாங்கிக் குவிப்பதால் பெரும்பாலான மருந்துக்கடைகளில் அவை முற்றிலுமாக தீர்ந்துவிட்டன. அவற்றை அடுக்கும் அலமாரிகள் காலியாக காட்சி தருகின்றன.

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா, நமக்கு ஆபத்தா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோப்புப் படம்

சீனாவில் கொரோனா அதிகரிப்பால் உலகிற்கு என்ன பாதிப்பு?

சீனாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி விட்டதால் ஒட்டுமொத்த உலகமும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. ஏனெனில், 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையும், இரண்டாவது பெரிய பொருளாதார வலிமையும் கொண்ட சீனாவிற்கு ஏற்படும் பாதிப்பு உலகம் முழுமையும் எதிரொலிக்கும் ஆபத்து இருப்பதே அதற்குக் காரணம். 

சீனாவில் மீண்டும் வேகமாக பரவி வரும் கொரோனா எதிரொலியாக, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவாக, 2.7 சதவீதமாகவே இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

உள்நாட்டில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க மருந்து, மாத்திரைகள் ஏற்றுமதியை சீனா நிறுத்திவைக்கக் கூடும் என்பதால் உலகின் பிற இடங்களில் அவற்றிற்கு தட்டுப்பாடு வரும் ஆபத்து உருவாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையங்களுள் ஒன்றாக சீனா திகழ்வதால், அங்குள்ள தொழிற்சாலைகள் முடங்குவது பிற நாடுகளிலும் தொழிற்துறையில் மிக மோசமான விளைவுகளை உண்டாக்கும். 

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா, நமக்கு ஆபத்தா?

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ்

எல்லாவற்றிற்கும் மேலாக, “கொரோனா வைரஸ் வீரியத்துடன் பரவிக் கொண்டிருக்கும் போது எந்நேரமும் உருமாறி, உலகின் பிற நாடுகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸின் கூற்று நம்மை பயமுறுத்துவதாக அமைந்துள்ளது. 

“கொரோனா வைரசால் மீண்டும் எழுந்துள்ள அச்சுறுத்தலை சீனாவால் திறம்பட எதிர்கொள்ள முடியும். கொரோனாவை எதிர்க்கும் வல்லமையுடன் சீனா திகழ்வது அந்நாட்டிற்கு மட்டுமல்ல, உலகம் முழுமைக்குமே நன்மை பயக்கும்” என்கிறார் நெட் பிரைஸ்.

https://www.bbc.com/tamil/articles/c03n36zdygyo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ்: சீனாவில் நிரம்பி வழியும் மயானங்கள்; பிணங்களை எரிக்கக் குவியும் கூட்டம்

  • பெட்ரா சிவிக்
  • பிபிசி உலக சேவை
2 மணி நேரங்களுக்கு முன்னர்
crematorium in Beijing on December 20, 2022

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோவிட் பெருந்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் திணறிவருகிறது சீனா. சீனா முழுவதுமுள்ள தகனக் கூடங்களுக்கு இறந்த உடல்கள் அதிக அளவில் கொண்டுவரப்படுவதால், கூட்டத்தைச் சமாளிக்க அவற்றின் ஊழியர்கள் சிரமப்படுவதாகக் கூறுகின்றனர்.

சீன அரசாங்கம் தனது கடுமையான 'ஜீரோ-கோவிட்' நடவடிக்கைகளை நீக்க முடிவு செய்ததை அடுத்து, எரிப்பதற்காகக் கொண்டுவரப்படும் உடல்களின் எண்ணிக்கையைச் சமாளிக்க முடியாமல், சீனா முழுவதும் உள்ள தகனக் கூடங்கள் திணறி வருகின்றன என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி முகமையில் பணிபுரியும் பெய்ஜிங் பத்திரிகையாளர் டேக் காங், டோங்ஜியாவோ பகுதியில் கோவிட் இறப்புகளுக்காக ஒதுக்கப்பட்ட தகனக் கூடம் மற்றும் இறுதிச் சடங்கு மண்டபங்களைப் பார்வையிட்டார்.

பெய்ஜிங்கிலிருந்து பிபிசியிடம் காங் பேசுகையில், "சவப்பெட்டிகள் தொடர்ந்து வெளியே எடுத்துச்

 

செல்லப்பட்டுக் கொண்டே இருந்ததால் ஒன்று அல்லது இரண்டு டஜன் பேர் வெளியே காத்துக்கொண்டிருந்தனர்," என்கிறார்.

இறுதிச் சடங்கு மண்டபங்களைச் சுற்றியிருந்த கடைக்காரர்களிடம் அவர் பேசியபோது, அங்கு தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதாக அவர்கள் கூறினர்.

"வழக்கமாக ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு டஜன் உடல்கள் எரியூட்டப்படுவதற்கு மாறாக தற்போது தினமும் 50 முதல் 100 உடல்கள் வரை எரியூட்டப்படுவதாக அங்கிருந்த ஒருவர் குறிப்பிட்டுக் கூறினார்," என்கிறார் காங்.

2.2 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பெய்ஜிங்கில் மட்டுமே இந்த இறுதிச் சடங்கு மண்டபங்கள் இப்படிப் பரபரப்பாக இல்லை. நாட்டின் வடகிழக்கிலிருந்து அதன் தென்மேற்கு வரை பல இடங்களில் இறப்பு எண்ணிக்கையைச் சமாளிக்க தகனம் செய்யும் ஊழியர்கள் போராடி வருவதாகத் தெரிவிக்கிறது ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம்.

பெய்ஜிங்கின் வடகிழக்கில் 700 கி.மீ. தொலைவில் உள்ள ஷென்யாங் நகரில், இறந்தவர்களின் உடல்கள் ஐந்து நாட்கள் வரை புதைக்கப்படாமல் விடப்படுவதாக ஓர் இறுதிச் சடங்கு மையத்தில் பணிபுரியும் ஊழியர் கூறினார். மேலும், "தகனக் கூடங்கள் இங்கு முற்றிலும் நிரம்பியுள்ளன. இதுபோன்ற ஒரு வருடத்தை நான் பார்த்ததே இல்லை," என்கிறார் அந்த ஊழியர்.

அதேநேரம், கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை விவரிக்கவே முடியாது என்கிறார் காங்.

People waiting in their cars in front of the Dongijao crematorium and funeral home in Beijing

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

பெய்ஜிங்கில் உள்ள டோங்ஜியாவோ தகனக் கூடம் முன்பு இறந்த உடல்களை எரிக்க கார்களில் காத்திருக்கும் மக்கள்

கடந்த திங்களன்று இரண்டு இறப்புகளும் செவ்வாயன்று ஐந்து இறப்புகளுமே கோவிட் காரணமாக ஏற்பட்டன என்கின்றனர் சீன அதிகாரிகள். கடந்த சில வாரங்களில் அதிகாரப்பூர்வமாக கொரோனா இறப்பு பதிவு செய்யப்பட்டது இதுவே முதன்முறை.

பொதுமக்களின் கடுமையான எதிர்ப்புகளுக்குப் பிறகு சில கடினமான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை டிசம்பரில் சீனா நீக்கியது. இதனால் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மக்கள்தொகை கொண்ட சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

சீனா முழுவதும் உள்ள தகனக் கூடங்களில் என்ன நடக்கிறது?

டோங்கிஜாவோ நகருக்கு காங் சென்றுவந்த இரு நாட்களுக்கு பிறகும் சாலையில் இறந்தவர்களைத் தாங்கிச் செல்லும் வாகனங்கள் மற்றும் கார்கள் அணிவகுத்து நின்றதாக செய்தி வெளியிட்டது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை.

தொடர்ந்து தகனம் செய்யப்பட்ட உடல்கள் காரணமாகச் சூழ்ந்திருந்த புகைக்கு மத்தியிலும் டோங்கிஜாவோ பகுதிக்கு வெளியே சுமார் 30 வாகனங்கள் காத்துக்கிடந்தன. அங்கிருக்கும் தகனக் கூடங்களுக்கு வெளியே தங்களது அன்புக்குரியவர்களின் மிச்சங்களுக்காகக் காத்திருக்கும் குடும்ப உறுப்பினர்களைக் காண முடிகிறது.

சில தகன மேடைகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கி வருவதாக ப்ளூம்பெர்க் மற்றும் ஸ்கை நியூஸ் ஆகிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

"சமீபத்திய நாட்களில் கொண்டுவரப்பட்ட உடல்களின் எண்ணிக்கை முன்பைவிட பல மடங்கு அதிகம்" என்று சீனாவின் தென்மேற்கில் உள்ள சோங்கிங்கில் உள்ள ஒரு தகனக் கூடத்தின் ஊழியர் ஏ.எஃப்.பி-யிடம் கூறினார்.

Relatives carry a picture frame of a loved at a crematorium in Beijing on December 20, 2022.

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதுமட்டுமல்லாது, பல தகனக் கூடங்களில் உடல்களை வைப்பதற்கான குளிர்பதனக் கிடங்குகள் நிரம்பிவிட்டதாகக் கூறுகிறார் பெயரைத் தெரிவிக்க விரும்பாத ஊழியர் ஒருவர், "இது கோவிட் தொடர்பானதா என்பது குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. அப்படியிருந்தால் இதுகுறித்து நீங்கள் பொறுப்பான தலைவர்களிடம் கேட்க வேண்டும்," என்கிறார்.

வேகமெடுக்கும் கொரோனா பரவல்

"கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாக பரிசோதனை முடிவினை பெற்ற தங்களது உறவினர்கள் இறந்துவிட்டதாகக் கூறும் நபர்களிடம் பேசினேன். இதில் கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால், அவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் கோவிட் காரணமாக எந்தவித அதிகாரப்பூர்வ இறப்பும் பதிவுசெய்யப்படவில்லை. கோவிட் இறப்புகளை சீனா கணக்கிடும் விதம் கொஞ்சம் தந்திரமானது," என்று காங் கூறினார்.

2019இன் பிற்பகுதியில் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தொடங்கியதில் இருந்து சீனா 5,242 கோவிட் இறப்புகளையே பதிவு செய்துள்ளது. இது உலகளாவிய கணக்கின்படி மிகக் குறைவான இறப்பு எண்ணிக்கை ஆகும்.

ஆனால், கோவிட் பாதிப்புக்குப் பிறகு நிமோனியா அல்லது சுவாசக் கோளாறு ஆகியவற்றால் இறப்பவர்களின் கணக்கு மட்டுமே கோவிட் இறப்புகளாகக் கருதப்படும் எனச் சீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

"கோவிட் பாதிக்கப்பட்ட பின் மாரடைப்பு அல்லது இதய நோய் ஏற்பட்டு இறப்பு ஏற்பட்டால் அது கோவிட் இறப்பு என்ற வகைப்பாட்டில் வராது" என்று பீக்கிங் பல்கலைக்கழக தலைமை மருத்துவமனையின் தொற்று நோய் பிரிவு தலைவர் வாங் குய்கியாங் கூறினார்.

தற்போதைய கோவிட் அலைக்கு மத்தியில் வைரஸின் புதிய கொரோனா வைரஸ் திரிபுகள் உருவாகக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

"வைரஸின் பரவும் திறன் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும் திறன் ஆகிய இரண்டும் ஒரே சமயத்தில் அதிகரிக்கும் என்பது ஒப்பீட்டளவில் சாத்தியமில்லை" என்று சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அதிகாரி சூ வென்போ கூறினார்.

கட்டாய கொரோனா பரிசோதனை விதிமுறை தளர்த்தப்பட்டதால் சீனாவின் கோவிட் தொற்று எண்ணிக்கையைக் கண்காணிப்பது கடினமாக்கியுள்ளது, எத்தனை பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்பதைக் கணக்கிடுவது இப்போது சாத்தியமற்றது என்று அதிகாரிகள் கடந்த வாரம் ஒப்புக்கொண்டுள்ளனர்.

"இறுதிச் சடங்கு ஒன்றிலிருந்தவர்களில் ஒருவர் இறப்புச் சான்றிதழில் மரணத்திற்கான காரணம் கோவிட் எனக் குறிப்பிடப்படாமல் நிமோனியா என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறினார்" என்று காங் கூறினார்.

2023-ல் பத்து லட்சம் இறப்புகள் எனக் கணிப்பு

இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் ஏவல்யூவேஷன் (IHME) எனும் நிறுவனத்தின் புதிய கணிப்பின்படி, கோவிட் கட்டுப்பாடுகள் திடீரென நீக்கப்படுவதால் 2023ஆம் ஆண்டு அதிக பரவல் ஏற்பட்டு உலகளவில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

 

Delivery workers wait outside a pharmacy to pick up orders as coronavirus disease (COVID-19) outbreaks continue in Beijing, December 20, 2022

பட மூலாதாரம்,REUTERS/XIAOYU YIN

 
படக்குறிப்பு,

மருந்து கடைகளுக்கு வெளியே காத்திருக்கும் டெலிவரி நிறுவன ஊழியர்கள்

IHME என்பது அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு சுயாதீனமான உலகளாவிய சுகாதார ஆராய்ச்சி மையமாகும்.

ஏப்ரல் 1, 2023க்குள் 3,22,000 இறப்புகள் வரை ஏற்படும் என்றும், அதே தேதியில் நோய்த்தொற்று உச்சத்தை எட்டும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், ஏப்ரல் மாதத்திற்குப் பிறகும் பரவல் தொடர்ந்து இருக்கும் என ஆய்வு கணித்துள்ளது.

"சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையானது வைரஸின் முந்தைய திரிபுகளைக் கையாள்வதில் பலனளித்தது. ஆனால், ஒமிக்ரான் வகை திரிபுகளில் இது அதிக பலன் தராது," என்று IHME இயக்குநர் கிறிஸ்டோபர் முர்ரே கூறுகிறார்.

ஹாங்காங்கில் சமீபத்தில் ஏற்பட்ட ஒமிக்ரான் பரவல் குறித்த தரவுகளின் அடிப்படையில் இந்த கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

"வுஹானில் ஏற்பட்ட முதல் அலையின் போது பெரிய அளவில் இறப்புகள் எதுவும் பதிவு செய்யப்படாததால், இறப்பு விகிதம் குறித்த தகவல்களைப் பெற ஹாங்காங்கை தேர்ந்தெடுத்தோம்," என்கிறார் முர்ரே.

ஆனால் சீன மருத்துவமனைகள், அடுத்த அலை குறித்து இப்போதைக்கு அச்சப்படவில்லை என்றே தோன்றுகிறது.

பெய்ஜிங்கில் மருத்துவமனை ஒன்றைப் பார்வையிட்ட காங், "பெரிய கூட்டநெரிசலுக்கான அறிகுறிகள் எதுவும் இங்கு காணப்படவில்லை. ஆனால் நிச்சயமாக, பெய்ஜிங்கை வைத்து மட்டும் சீனாவின் ஒட்டுமொத்த நிலையைக் கணக்கிட முடியாது. ஏனென்றால், ஒட்டுமொத்த சீனாவிலும் சிறந்த மருத்துவ கட்டமைப்புகளைக் கொண்டது பெய்ஜிங்தான்," என்கிறார்.

https://www.bbc.com/tamil/global-64049902

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.