Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13 படும்பாடு

 13 படும்பாடு

♦️வீரகத்தி தனபாலசிங்கம்

இலங்கை அரசாங்கத் தலைவர்கள் வழமையாக கூறுகின்ற ஆனால், தவறாமல் மீறி வந்திருக்கின்ற ஒரு உறுதிமொழியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் யாழ்ப்பாணத்தில் கடந்தவாரம் தைப்பொங்கல் விழாவில் வழங்கியிருந்தார்.

“அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை ஒரிரு வருடங்களில் கட்டங்கட்டமாக அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தும். வடக்கில் மாத்திரமல்ல, தெற்கிலும் முதலமைச்சர்கள் அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரினார்கள்” என்று அவர் கூறினார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு கடந்த மாதம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் மகாநாட்டைக் கூட்டிய விக்கிரமசிங்க அதன் முதற்சுற்றையடுத்து தமிழ் அரசியல் தலைவர்களுடன் தனியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்த சூழ்நிலையில் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டிருக்கிறது. 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பது இலங்கையின் நலன்களுக்கு உகந்தது என்று ஏற்கெனவே பல தடவைகள் கூறிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொழும்புக்கு வருவதற்கு முன்னதாக இந்த உறுதிமொழி ஜனாதிபதியிடமிருந்து வந்ததிருப்பதும் கவனிக்கத்தக்கது.

கடந்த மாதத்தைய மகாநாட்டுக்கு பிறகு தமிழ் தேசிய கூட்டமைப்பு விக்கிரமசிங்கவுடன் நான்கு தடவைகள் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இறுதியாக பொங்கலுக்கு நான்கு நாட்கள் முன்னதாக அவர்கள் பேசினார்கள். இறுதி அரசியல் இணக்கத்தீர்வொன்று குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்துகின்ற அதேவேளை, அவசியமான ஒரு முதற்படியாக, (1987 ஜூலை இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையை அடுத்து கொண்டுவரப்பட்ட) 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூட்டமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டது.

அது மாத்திரமல்ல, வடக்கு, கிழக்கில் தமிழர்களின் நிலங்கள் படையினராலும் அரசாங்க திணைக்களங்களினாலும் சுவீகரிக்கப்படுதல், நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனார் விவகாரம் போன்ற உடனடிப் பிரச்சினைகளுக்கும் துரிதமான தீர்வைக் காணும் விடயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவேண்டும் என்று கூட்டமைப்பு ஒரு வார காலக்கெடுவையும் விதித்தது.

ஆனால், அந்த விவகாரங்களில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் ஜனாதிபதிக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் ஒரு முட்டுக்கட்டை நிலையை அடைந்திருக்கின்றன. இந்த இடைப்பட்ட நாட்களில் கூட்டமைப்பிலும் பிளவு ஏற்பட்டு புதிய கூட்டணி அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் இனப்பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துடன் எதிர்காலப் பேச்சுவார்த்தைகளில் தமிழ்த்தரப்பு பங்கேற்று எந்த கோலத்தில் இருக்கும் என்ற கேள்வியும் எழுகிறது.

ஜனாதிபதியின் பொங்கல் விழா உறுதிமொழி குறித்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்போவதாக கடந்த காலத்தில் பல ஜனாதிபதிகள் கூறினார்கள். தேசிய இனப்பிரச்சினைக்கு அது ஒரு தீர்வு அல்ல. ஆனால், குறைந்தபட்சம் அரசியலமைப்பில் ஏற்கெனவே இருப்பதையாவது அவர்களால் நடைமுறைப்படுத்த முடியும். அதைக்கூட அவர்கள் செய்யவில்லை” என்று கூறியிருக்கிறார்.

இறுதியாக ஜனாதிபதியுடன் நடத்திய சந்திப்பில் கூட்டமைப்பு உடனடியாக முன்னெடுக்கப்படக்கூடிய ஐந்து விசேட செயற்பாடுகளை குறிப்பிடும் ஆவணம் ஒன்றைக் கையளித்தது. தேசிய காணி ஆணைக்குழுவையும் மாகாணப் பொலிஸ் படையையும் அமைத்தல்; மாகாணசபைகளிடம் இருந்து எடுக்கப்பட்ட அதிகாரங்களை மீளக்கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்; பாடசாலைகளையும் வைத்தியசாலைகளையும் நிருவகிப்பதற்கு தேவையான நிருவாக அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குதல் போன்ற கோரிக்கைகளே அந்த ஆவணத்தில் உள்ளன. முதலில் அவர்கள் அந்த செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். அல்லாவிட்டால், அரசாங்கத்துடன் வெறுமனே பேச்சுவார்த்தைகளை தொடருவதில் அர்த்தம் எதுவுமில்லை என்றும் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

ஆனால், ஜனாதிபதி தமிழ் தலைவர்கள் எதிர்பார்ப்தைப் போன்று துரிதமாக அந்த செயற்பாடுகளை முன்னெடுக்கத் தயாராக இல்லை அல்லது அவரால் முடியவில்லை. ஓரிரு வருடங்களில் கட்டங்கட்டமாக 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதைப் பற்றியே அவர் பேசுகிறார். அதேவேளை, தமிழர்களின் அக்கறைக்குரிய உடனடிப் பிரச்சினைகள் தொடர்பிலாவது குறைந்தபட்சம் முன்னேற்றம் ஏற்படாதபட்சத்தில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைளில் தொடர்ந்து பங்கேற்பதை தமிழ்த் தலைவர்களினால் தங்கள் மக்கள் மத்தியில் நியாயப்படுத்தமுடியாது என்பதும் உண்மையே.

அதுவும் ஊள்ளூராட்சி தேர்தல்களில் தனியாக போட்டியிடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியான இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்ததை அடுத்து இறுதியாக எஞ்சியிருந்த பங்காளிக் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கமும் (ரெலோ) தமிழீழ மக்கள் விடுதலை கழகமும் (புளொட்) வேறு கூட்டணியை அமைத்திருக்கும் பின்புலத்தில் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தரை தமிழ் அரசியல்வாதிகள் மிகுந்த எச்சரிக்கையுடனேயே நடந்துகொள்வர் என்பதில் சந்தேகமில்லை. ஒரு தேர்தலை எதிர்நோக்கவிருக்கும் நிலையில் ஏட்டிக்குப் போட்டியாக விமர்சனங்களைச் செய்வதற்கு அவர்கள் வாய்ப்புக்களை தேடிக்கொண்டிருப்பார்கள்.

தமிழ் அரசியல் சமூகத்துக்கிடையில் ஏற்பட்டிருக்கும் புதிய பிளவை தனக்கு அனுகூலமான முறையில் பயன்படுத்திக் கொள்வதில் ஜனாதிபதி விக்கிரமசிங்க அவதானம் செலுத்தத் தவறமாட்டார் எனலாம். அதனால்தான் போலும் முதலில் இலங்கையின் 75 வது சுதந்திரதினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்துப் பேசிய அவர் இப்போது 13 வது திருத்தத்தை ஒரிரு வருடங்களில் கட்டங்கட்டமாக  நடைமுறைப்படுத்துவது பற்றி யாழ்ப்பாணத்தில் கூறியிருக்கிறார்.

ஜனாதிபதி கூட்டிய மகாநாட்டில் பங்கேற்ற அரசியல் கட்சிகள் 13  வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் யோசனைக்கு எந்த எதிர்ப்பையும் வெளிக்காட்டவில்லை. இந்தியாவினால் இலங்கை மீது  பலவந்தமாக திணிக்கப்பட்டதே அந்த திருத்தமும் மாகாண சபைகளும் என்பதே சிங்கள அரசியல் சமுதாயத்தின் பொதுவான அபிப்பிராயமாக இருந்துவரும் நிலையில் தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் மத்தியில் அந்த திருத்தம் தொடர்பில் முன்னைய காலகட்டங்களுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அளவுக்கு ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கின்ற சூழ்நிலையை அனுகூலமான முறையில் விக்கிரமசிங்க பயன்படுத்துவதே விவேகமானது. ஆனால், அதற்கான அரசியல் துணிவாற்றல் அவரிடம் இருக்கவேண்டும்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற வேளைகளில் எல்லாம் ‘நாடு பிளவடையப் போகின்றது’ என்று கூச்சலிட்டு சீர்குலைப்பதையே வழக்கமாகக் கொண்ட கடும்போக்கு சிங்கள அமைப்புக்கள் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அண்மைக்காலமாக அமைதியாக இருந்தன. ஆனால், அவை மீண்டும் தலைகாட்டத் தொடங்குகின்றன.

   13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவடையும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரிக்கை செய்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மகாநாயக்க தேரர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். ராஜபக்சாக்களின் விசுவாசிகளாக செயற்பட்டுவந்தவீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்ற அரசியல்வாதிகள் தற்போது பிரிந்து தனியாகக் கூட்டணிகளை அமைத்து உள்ளூராட்சி தேர்தல்களை எதிர்நோக்கத் தயாராகியிருக்கிறார்கள்.

தென்னிலங்கை மக்களின் வெறுப்புக்குள்ளாகியிருக்கும் அத்தகைய அரசியல்வாதிகள் மீண்டும் ஆதரவைப் பெறுவற்கு அவர்களுக்கு பழக்கப்பட்டுப்போன நச்சுத்தனமான இனவாதப் பிரசாரத்தையே ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள் என்பது நிச்சயம். முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகரவும் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக உறுதியளிப்பதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு ஆணை கிடையாது என்றும் காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் பாராளுமன்றத்தில் கூறியிருக்கிறார். நாளடைவில் மேலும் பல சிங்கள கடும்போக்கு சக்திகள் வெளிக்கிளம்புவதைக் காணக்கூடியதாக இருக்கும்.

கடந்த 36 வருடங்களாக மாகாண சபைகள் நடைமுறையில் இருந்துவருகின்ற போதிலும், அரசியலமைப்பில் உள்ளவாறு அவற்றுக்குரிய அதிகாரங்களை வழங்குவதற்கு ஏதுவாக 13  வது திருத்தம் உருப்படியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. உண்மையில் இது ஒரு அரசியலமைப்பு மீறலாகும். அதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று வலியுறுத்துகின்ற சக்திகளுக்கும் நடைமுறைப்படுத்துவதாக உறுதிமொழியை வழங்கிவிட்டு அதை மீறிவந்திருக்கின்ற அரசாங்க தலைவர்களுக்கும் இடையில் என்ன வேறுபாடு  இருக்கிறது?

கடந்த முன்றரை தசாப்தங்களாக பதவியில் இருந்துவந்திருக்கும் சகல அரசாங்கங்களுமே திட்டமிட்ட முறையில் 13 வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாதிருப்பதை  உறுதி செய்துகொண்டன என்றுதான் கூறவேண்டும். இதை  இந்திய தலைநகரில் வைத்து முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க ஒரு தடவை வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டார்.  

இந்தியாவிடம் இருந்து வலியுறுத்தல்கள் வந்த சந்தர்ப்பங்களில் 13 வது திருத்தத்துக்கு அப்பால் செல்வது குறித்தும் மகிந்த ராஜபக்ச பல தடவைகள் உறுதியளித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், கோட்டாபய ராஜபக்ச ஒருவர்தான் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக ஒருபோதுமே உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ கூறாதவர். அவரிடம் அந்த அளவுக்காவது ஒரு ‘நேர்மை’ இருந்தது.

இப்போது ஜனாதிபதி விக்கிரமசிங்க அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்போவதாக அதுவும் ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற பலத்தில் ஆட்சியை நடத்திக்கொண்டு கூறுகிறார். இதுவரையில் எந்தவொரு அரசாங்கமும் செய்யாத காரியத்தை அவரின் அரசாங்கம் செய்துகாட்டும் என்று தமிழ் மக்கள் நம்பவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.13 படும்பாடு

______________________

  ( நன்றிவீரகேசரி வாரவெளியீடு)

 

https://arangamnews.com/?p=8602

 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13 படும்பாடு – 2

13 படும்பாடு – 2

   — வீரகத்தி தனபாலசிங்கம் —

   அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை அரசாங்கம் இரு வருடங்களில் கட்டங்கட்டமாக நடைமுறைப்படுத்தும் என்று யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் விழாவில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட அறிவிப்பு கடந்த வருடத்தைய ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சியை அடுத்து சில மாதங்களாக பதுங்கியிருந்த ‘கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகள் மீண்டும் வெளிக்கிளம்புவதற்கு எதிர்பார்த்திராத ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டதை காணக்கூடியதாக இருக்கிறது.

 இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றும் காணாத பொருளாதார நெருக்கடிக்கும் அரசியல் குழப்பநிலைக்கும் காரணமான தவறான ஆட்சிமுறைக்கு பொறுப்பான ராஜபக்சாக்கள் பல வருடங்களாக முன்னெடுத்த பெரும்பான்மையினவாத அணிதிரட்டலுக்கு உறுதுணையாக செயற்பட்ட இந்த சக்திகள் ஜனாதிபதியின் அறிவிப்புக்கு எதிராக வீதியில் இறங்கத்தொடங்கியிருக்கின்றன. பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து தனது கொள்கை விளக்க உரையை விக்கிரமசிங்க நிகழ்த்திய கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குமார் பொலிசாருடன் மல்லுக்கட்டிய வண்ணம் 13 வது திருத்தத்தின் பிரதிகளை தீயில் பொசுக்கினார்கள்.

  முன்னைய ஜனாதிபதிகள் எவரும் முழுமையாக நடைமுறைப்படுத்த முற்படாத சர்ச்சைக்குரிய அந்த திருத்தத்தை விக்கிரமசிங்கவும் நடைமுறைப்படுத்தக் கூடாது என்று பௌத்த உயர் பீடங்களின் மகாநாயக்கர்கள் கூட்டாக அவருக்கு கடிதம் எழுதியிருக்கும் நிலையில் ஒட்டுமொத்தத்தில் மகாசங்கத்தின் முழுமையான ஆதரவு பாராளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட பிக்கு குழுவினருக்கு இருந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

  தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கக்கூடிய சகல முயற்சிகளையும் எதிர்த்துவரும் கடும்போக்கு சிங்கள் தேசியவாத சக்திகளின் ‘முன்னரங்கப் படைகளாக’ பிக்குமார் செயற்பட்டுவருவது தென்னிலங்கை அரசியலில் பாரம்பரியமான ஒரு போக்காகும். இலங்கையை பாதிக்கும் எந்தப் பிரச்சினையும் இந்தப் போக்கை மாற்றிவிடாது.

  மகாசங்கத்தின் நிலைப்பாடுகளில் பெரும்பாலும் நியாயப்பாடு இருக்கும் என்ற ஒரு (தவறான) நம்பிக்கை சிங்கள பௌத்த சமுதாயத்தில் வேரூன்றியிருப்பது சிங்கள அரசியல்வாதிகள் தங்களுக்கு அனுகூலமான முறையில் பிக்குமாரை அரசியல் விவகாரங்களில் பயன்படுத்த உதவுகிறது. என்னதான் இவர்கள் 2500 வருடகால பௌத்த பாரம்பரியம் பற்றி பேசினாலும் இலங்கையில் பௌத்தம் அடிப்படையில் அரசியல் மதமாகவே இருக்கிறது. ஆனால், மற்றைய சிங்கள அரசியல்வாதிகளுடன் ஒப்பிடும்போது ஜனாதிபதி விக்கிரமசிங்க வெளிவெளியாக மகாசங்கத்தை தூண்டிவிடுகின்ற அரசியலைப் பேசுபவராக பெரும்பாலும் அடையாளம் காணப்பட்டவரல்ல.

  ஆனால், அவர் தேசிய இனப்பிரச்சினைக்கு தற்போதைய அரசியலமைப்பு ஏற்பாடுகளின் வரையறைக்குள் அரசியல் தீர்வு காண்பதற்கான தனது முயற்சிகளை கடும்போக்கு தேசியவாத சக்திகளினதும் மகாசங்கத்தினதும் எதிர்ப்புக்களையும் மீறி முன்னெடுக்கக்கூடியவராக துணிவாற்றலை வரவழைத்துக் கொள்வார் என்று நம்புவது கஷ்டமாக இருக்கிறது.

  ஜனாதிபதி விக்கிரமசிங்க அவரது மாமனார் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசியல் பாதையை பெருவிருப்புடன் பின்பற்றுபவர்; தனது பேச்சுக்களில் அவரின் அணுகுமுறைகளை அடிக்கடி புகழ்ந்து பேசுபவர். 1987 ஜூலையில் இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பிறகு அதன் தொடர்ச்சியாக மாகாணசபைகளை அறிமுகப்படுத்துவதற்கு 13 வது அரசியலமைப்பு திருத்தத்தை எதிரணி அரசியல் கட்சிகளினதும் சிங்கள தேசியவாத சக்திகளினதும் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலும் கூட ஜெயவர்தன பாராளுமன்றத்தில் நிறைவேற்றினார்; சமாதான உடன்படிக்கையை விரும்பாத தனது பிரதமர் பிரேமதாசவைக் கொண்டே அந்த திருத்தச் சட்டமூலத்தை சபையில் சமர்ப்பிக்கவைத்தார்.

  வடக்கு, கிழக்கில் இந்திய அமைதி காக்கும் படையின் பிரசன்னம், அன்றைய இந்திய அரசாங்கத்தின் நெருக்குதல்கள், இனநெருக்கடியில்  இந்தியாவின் நேரடித் தலையீட்டை அவர் எதிர்த்து நிற்பதற்கு சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஆதரவு இல்லாதமை என்று பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்காக இது காலவரையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் மாகாணசபைகள் முறையாவது (பெருவாரியான போதாமைகளுக்கு மத்தியிலும்) இன்று வரை நிலைத்து நிற்பதற்கு எதிரணியினரை மாத்திரமல்ல தனது அரசாங்கத்துக்குள் இருந்த எதிர்ப்பாளர்களையும் சமாளிப்பதில் ஜெயவர்தன காட்டிய ஒருவித துணிச்சலே காரணமாகும். அவரின் அரசியலை நியாயப்படுத்துவதாக இதை அர்த்தப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.

   தமிழ் தலைவர்கள் அரசாங்கங்களுடன் செய்துகொண்ட முன்னைய ஒப்பந்தங்கள் எல்லாமே கைவிடப்பட்ட நிலையில் 13 வது திருத்தத்தில் மாத்திரம் கைவைப்பதற்கு அரசாங்கங்கள் துணிச்சல் கொள்ளாததற்கு சமாதான உடன்படிக்கையே பிரதான காரணம் என்ற போதிலும், அதிகாரப் பரவலாக்கத்துக்கான ஒரு அடிப்படை அலகாக மாகாணங்கள் அமையக்கூடியதாக இருந்தது (முன்னைய ஒப்பந்தங்களை எதிர்த்த வரலாற்றைக் கொண்ட) ஜெயவர்தனவின் அரசாங்க காலத்தில் என்பதும் அதற்கு வழிவகுத்த 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்து அவரின் மருமகன் சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு பேசப்புறப்பட்டதும் உண்மையில் ஒரு விசித்திரம்தான்.

  பாராளுமன்ற கட்சிகளின் இரண்டாவது சுற்று மகாநாட்டை ஜனவரி 26 ஆம் திகதி கூட்டிய ஜனாதிபதி விக்கிரமசிங்க 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் தனது யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரதிநிதிகளுக்கு பதிலளிக்கும்போது ஒன்றில் அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது பாராளுமன்றத்தில் 22 வது அரசியலமைப்பு திருத்தத்தை தனிநபர் சட்டமூலமாகக் கொண்டுவந்து அதை ஒழிக்கவேண்டும் என்று கூறியதுடன் பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்துவைத்து தான் நிகழ்த்தவிருந்த கொள்கை விளக்க உரையில் இது தொடர்பில் முறைப்படியான அறிவிப்பு ஒன்றைச் செய்வதற்கு வசதியாக யோசனைகளை சுதந்திரதினத்துக்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு கட்சிகளைக் கேட்டுக்கொண்டார்.

  ஆனால், எந்த கட்சியுமே யோசனைகளை அனுப்பவில்லை.13 வது திருத்தத்தை எதிர்க்கின்ற கட்சிகள் மாத்திரமல்ல, ஆதரிப்பதாக கூறுகின்ற கட்சிகளும் கூட அதைச் செய்யவில்லை.

  தைப்பொங்கல் அறிவிப்புக்கு பிறகு 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் தனது யோசனை குறித்து மீண்டும் கூறுவதற்கு ஜனாதிபதிக்கு இரு முக்கிய சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஒன்று சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை. மற்றையது பாராளுமன்றத்தில் கடந்த புதன் கிழமை நிகழ்த்திய கொள்கை விளக்க உரை. இரண்டிலுமே அவர் 13 வது திருத்தம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. இனநெருக்கடியை தீர்க்கவேண்டிய அவசியம் குறித்து தனது வழமையான பாணியில் கருத்துக்களை வெளியிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

 “ஆர்.சம்பந்தனும் நானும் 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டோம். நம் இருவருக்கும் பொதுவான கனவொன்று உண்டு. நாம் இருவரும் பாராளுமன்றத்தில் இருக்கின்றபோதே இனநெருக்கடிக்கு நிலைபேறான தீர்வைக் காணவேண்டும் என்ற அந்த கனவு பற்றி அன்று முதல் இன்று வரை நாம் கலந்துரையாடுகிறோம். முயற்சி செய்கிறோம். முன்னைய அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. ஆனால் இம்முறை எவ்வாறாயினும் அதனை வெற்றியடையச் செய்வதற்கு நாம் எதிர்பார்க்கிறோம். அதற்காக உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பை நாம் எதிர்பார்க்கிறோம்.

 “பெருந்தோட்டத்துறைக்காக பாரியளவு சேவையாற்றிய சௌமியமூர்த்தி தொண்டமானும் நானும் ஒன்றாக அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டோம். நாம் இருவரும் பெருந்தோட்ட மக்களின் நலன்களுக்காக ஒன்றாக இணைந்து செயற்பட்டோம். தற்போது பெருந்தோட்ட மக்களின் சட்டரீதியான அனைத்து உரிமைகளையும் நாம் வழங்கியிருக்கிறோம். ஆனாலும் பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் தொடர்பாக பல்வேறு சிக்கல்கள் இன்னமும் எஞ்சியிருக்கி்ன்றன. இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நாம் பெருந்தோட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம்” என்று  அவர் பாராளுமன்ற உரையில் கூறினார்.

  மேலும், ஒற்றையாட்சிக்குள் அதிபட்ச அதிகாரப்பரவலாக்கத்தைச் செய்து இனநெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என்று கூறிய ஜனாதிபதி போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விசேட அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அதிகாரப் பரவலாக்கல் செயன்முறையை உரியமுறையில் நடைமுறைப்படுத்த குறிப்பிட்ட சில சட்டங்களுக்கான திருத்த வரைவுகள் தயாரிக்கப்படும். இதற்கான முயற்சிகள் பாராளுமன்றத்தின் தேசிய சபை ஊடாக முன்னெடுக்கப்படும்.

மாகாணசபை மற்றும் மத்திய அரசாங்கத்துக்கிடையில் ஒருங்கிணைப்பு பணிகளை முறைமைப்படுத்துவதற்காக மாவட்ட அபிவிருத்தி சபைகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படமாட்டாது. மத்திய அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் காரணமாக கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் குறைவடைந்துள்ளதாக கூறப்படும் மாகாணங்களின் அதிகாரங்களை நடைமுறைப்படுத்த புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

  13 வது திருத்த நடைமுறைப்படுத்தல் என்ற சொல்லைப் பயன்படுத்துவதை தனதுரையில் தவிர்த்துக்கொள்வதில் விக்கிரமசிங்க மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொண்டார். அரசியலமைப்பில் மூன்றரை தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக இருந்துவரும் திருத்தம் ஒன்றின் நடைமுறைப்படுத்தல் பற்றி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பேசமுடியாத அளவுக்கு அதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற ஆதரவில் ஆட்சியை நடத்திக்கொண்டு 13 வது திருத்தத்தின் முழுமையான நடைமுறைப்படுத்தல் பற்றி பேசுவதில் உள்ள பொருத்தப்பாட்டை ஜனாதிபதி முன்கூட்டியே உணர்ந்திருக்கவில்லையா? அல்லது அவரே கூறுவது போன்று எதிர்வரும் மாதங்களில் மேலும் தீவிரமடையக்கூடிய பொருளாதார நெருக்கடியில் இருந்து கவனத்தைத் திருப்பும் ஒரு தந்திரோபாயமாக அதைச் செய்தாரா என்று கேட்கவேண்டியிருக்கிறது.

  எது எவ்வாறிருந்தாலும், முன்னரும் இந்த பத்தியில் குறிப்பிடப்பட்டதைப் போன்று ஜனாதிபதி இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான தனது முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்கக்கூடியதாக இருக்குமோ இல்லையோ கடும்போக்கு சிங்கள தேசியவாதிகள் சமூகங்கள் மத்தியில் குரோதங்களை வளர்க்கும் தங்களது நச்சுத்தனமான பிரசாரங்களை முன்னெடுப்பதற்கான சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. இதைச் சாத்தியமாக்கியதில் அரசாங்கத்திற்குள் இருக்கின்ற சக்திகளுக்கு நிச்சயமாக பங்கு இருக்கிறது எனலாம்.

  தற்போது தோன்றியிருக்கும் சூழ்நிலை 13 வது திருத்தத்துக்கு ஆதரவாக பேசிய அரசியல் சக்திகளையும் ‘அடக்கிவாசிக்க’ வைத்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

  இலங்கை அரசியலில் குறிப்பாக தேசிய இனநெருக்கடிக்கு தீர்வைக் காண்பதற்கான முயற்சிகள் என்று வரும்போது பிரதான அரசியல் விவாதத்தின் திசைமார்க்கத்தை தீர்மானிக்கின்ற வல்லமையைக் கொண்டவையாக கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகள் விளங்குகின்றன.

  இந்த சக்திகளின் பிற்போக்கான பிரசாரங்களை எதிர்த்து பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது முயற்சிகளுக்கு சிங்கள மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு அக்கறை காட்டுவதில்லை. பாராளுமன்றத்துக்கு வெளியே பிக்குமார் போராட்டம் நடத்தியதற்கு மறுநாள் சபையில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகாசங்கத்தையோ சிங்கள பௌத்த சக்திகளையோ மீறி எதையும் செய்யமுடியாது என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும் என்று கூறியதையும் காணக்கூடியதாக இருந்தது.

   இந்த சக்திகளின் முன்னரங்கத்தில் தற்போது நிற்கும் விமல் வீரவன்ச, சரத் வீரசேகர, உதயகம்மன்பில மற்றும் யுத்துகம அமைப்பின் தலைவர் கெவிந்து குமாரதுங்க போன்ற அரசியல்வாதிகள் பிரதான கட்சி ஒன்றுடன் அணிசேராமல் பாராளுமன்றத்துக்கு தெரிவாகக்கூடியளவுக்கு மக்கள் செல்வாக்கைக் கொண்டவர்கள் அல்ல. இனவாதத்தை தவிர அவர்களிடம் வேறு எந்த அரசியல் ஆயுதமும் இல்லை. மகாசங்கத்தின் ஆதரவுடன் இந்த சிறிய எண்ணிக்கையான அரசியல்வாதிகளினால் தேசிய நெருக்கடியில் பிரதான அரசியல் கட்சிகளினதும் தலைவர்களினதும் செயற்பாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பது சிங்கள பௌத்த அரசியல் சமுதாயத்தின் சிந்தனையில் ஒழுக்கநியாயம் இல்லாத ஒரு பாரம்பரியத்தின் வெளிப்பாடேயாகும். இதுவே இன்றுவரை இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றைக் காணமுடியாமல் இருப்பதற்கு பிரதான காரணமாகும்.

 வீரகத்தி தனபாலசிங்கம்

 

 

https://arangamnews.com/?p=8769

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.