Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1400 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாம் பிறக்க காரணமான முகமது நபியின் யாத்திரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1400 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாம் பிறக்க காரணமான முகமது நபியின் யாத்திரை

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,எடிசன் வெய்கா
  • பதவி,பிபிசி நியூஸ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்
இஸ்லாமிய மதம் உருவாக காரணமாக இருந்த முகமது நபி மாற்று கருத்துகளை வரவேற்றாரா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மதங்களுக்கு எப்போதுமே தமது பிறப்பைப் பற்றிய கதைகள் தேவைப்படுகின்றன.

இஸ்லாம் மதத்தைப் பொறுத்தவரையில், அதன் துவக்கபுள்ளி முகமது நபியும் (571 - 632) அவரைப் பின்பற்றும் மக்களும் மெக்காவிலிருந்து மெதினாவிற்கு இடம்பெயர்ந்த ஹிஜ்ரா என்று அழைக்கப்படும் இடம்பெயர்தல் காலகட்டம். இந்த இரண்டு நகரங்களுமே இன்றைய சௌதி அரேபியாவில் இருக்கிறது.

மெக்காவிலிருந்து மதினா 500கிமீ தொலைவில் இருக்கிறது. அந்தப் பயணத்தை மேற்கொள்ள அவர்களுக்கு 12 நாட்கள் தேவைப்பட்டது.

அப்போது முகமது நபி மக்களிடையே மரியாதைக்குரிய ஒரு மதத் தலைவராக உருவாகியிருந்தார். அவரை அல்லாவின் தூதராக மக்கள் கருதினர். யூத மதத்திலும் கிறிஸ்துவ மதத்திலும் பல சீர்த்திருத்தங்களை உருவாக்கிய முகமது நபி, பல தெய்வ வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்த மதங்களை எதிர்த்தும் வந்தார்.

 

அது முகமது நபியின் சொந்த ஊரில் அவருக்குப் பல சிக்கல்களை ஏற்படுத்தியது.

கொள்கை பிடிப்பு மிக்கவராக இருந்த முகமது நபி, மதீனாவிலிருந்த தலைவர்களின் அழைப்பின் பெயரில் அந்நகரத்திற்குச் செல்வதற்கான முயற்சியை முன்னெடுத்தார்.

இடம்பெயர்தல் நடைபெற்ற காலகட்டத்தில் முகமது நபிக்கு 50 வயதுக்கு மேல் ஆகியிருந்தது. அதேபோல் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னதாக ஹிஜ்ரா (இடம்பெயர்தல்) நடைபெற்றதாகவும் கிரிகோரியன் கால அட்டவணை கூறுகிறது.

மெக்காவில் அப்போது இஸ்லாமியர்கள் அதிகமாக துன்புறுத்தப்பட்டனர் என்றும் அங்கே அதிகளவில் சண்டை, சச்சரவுகள், வன்முறை ஆகியவை நடைபெற்றன எனவும் மானுடவியிலாளர் பிரான்சிரோசி காம்போஸ் பார்போசா கூறுகிறார்.

அவர் மேலும் கூறுகையில், “மதினாவில் இருந்த ஒரு பகுதி மக்கள் இஸ்லாமியராக மதம் மாறியிருந்தனர். அவர்கள் முகமது நபியிடம் சென்று தங்களது பிரச்னையைத் தீர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

குறிப்பாக அங்கே ஏற்கெனவே யூதர்களுக்கும் உருவ வழிபாடு செய்து வந்தவர்களுக்கும் இடையே நிறைய பிரச்னைகள் நடைபெற்று வந்தன,” என்று கூறும் அவர் “அங்கே வெவ்வேறு மதங்களைப் பின்பற்றி வந்த மக்களுக்கிடையே நிகழ்ந்த பிரச்னைகள் தீர்ந்து சமாதானம் நிலவியதற்கு முகமது நபியின் வருகை முக்கியக் காரணமாக அமைந்தது,” என்றும் குறிப்பிடுகிறார்.

மானுடவியிலாளர் பிரான்சிரோசி காம்போஸ் பார்போசா `ஸா பாலோ` என்ற பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். "Hajja, hajja: the pilgrimage experience" என்ற புத்தகத்தையும் அவர் எழுதியுள்ளார்.

முகம்மது நபி

பட மூலாதாரம்,PUBLIC DOMAIN

 
படக்குறிப்பு,

முஹமது நபிக்கு அடுத்து இஸ்லாமிய மதத்தை வழிநடத்தியவரான கலிஃப் உமர், ஹெகிராவை தொடக்கமாகக் கொண்ட நாட்காட்டியை நிறுவியிருப்பார்.

வரலாற்று ஆய்வின்படி பார்த்தால் ஹிஜ்ரா என்பது, முதல் இஸ்லாமியர்கள் மதினாவிற்கும், எத்தியோப்பா-எரித்ரியாவிற்கு இடையே அமைந்துள்ள அபிசீனியா என்ற இடத்திற்கும் இடம்பெயர்ந்த பயணத்தைக் குறிக்கிறது,” என்கிறார் மதங்கள் தொடர்பாக ஆய்வு செய்யும் விஞ்ஞானி அட்டிலா குஸ். ‘The Constitution of Medina’ என்ற புத்தகத்தை எழுதியுள்ள இவர் ’சா பாலோவில்’ உள்ள பாண்டிஃபிசியல் கத்தோலிக்க பல்கலைகழகத்தில் (Pontifical Catholic University) பேராசியராகவும் இருக்கிறார்.

ஆனால் அதேநேரம் வரலாற்று நிகழ்வான ஹிஜ்ரா இந்த காலகட்டத்தில்தான் நடைபெற்றது என்பதை ஒருமித்த கருத்துடன் இதுவரையில் யாரும் ஒப்புகொள்ளவில்லை.

இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவது, அக்காலத்தில் காலத்தைக் கணக்கிடும் முறை இன்றைய முறையிலிருந்து மிகவும் வேறுபட்டது.

இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், ஹிஜ்ராவிலிருந்து துவங்கும் நாட்காட்டியைப் பயன்படுத்தும் இஸ்லாமியர்கள், சந்திரனின் கால அட்டவணையைப் பின்பற்றுகிறார்கள். இது இன்றைய பெருவாரியான உலகில் பயன்படுத்தப்படும் கிரிகோரியன் நாட்காட்டியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

கிரிகோரியன் நாட்காட்டி புழக்கத்திற்கு வந்தே 440 ஆண்டுகள்தான் ஆகின்றன. அதற்கு முன்னர் முரண்பாடுகளைக் களைவதற்காக அதில் அவ்வபோது பல மாறுதல்கள் செய்யப்பட்டன. எனவேதான் இந்த நாட்காட்டியை கொண்டு துல்லியமான காலகட்டத்தைக் குறிப்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கிறது.

“மேலும் பல காலமாக இந்நிகழ்வுகள் அனைத்தும் செவிவழிச் செய்திகளாகவே சொல்லப்பட்டு வந்தன. ஒருவர் இது இந்தத் தேதியில் நடந்தது என்று கூறினால் மற்றொருவர் இல்லை இது மற்றொரு தேதியில் நடந்தது என்று கூறுவார். இதுதான் இந்த குழப்பத்திற்குக் காரணம்,” என்கிறார் குஸ்.

622ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி ஹிஜ்ரா நடைபெற்றது என்று கூறுபவர்கள் உள்ளனர். ஜூலை மாதம் 15ஆம் தேதி அல்லது 16ஆம் தேதி என்றும், செப்டெம்பர் மாதம்தான் ஹிஜ்ரா நடைபெற்றது என்று கூறுபவர்களும் உள்ளனர்.

ஆனால் சூரிய அட்டவணையான கிரிகோரியன் நாட்காட்டியைவிட குறுகிய நாட்காட்டியைப் பின்பற்றும் இஸ்லாமிய வழக்கின்படி ஹிஜ்ரா 1,444 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது.

இஸ்லாமிய மதம் உருவாக காரணமாக இருந்த முகமது நபி மாற்று கருத்துகளை வரவேற்றாரா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹிஜ்ரா என்றால் என்ன?

ஹிஜ்ரா என்ற சொல்லுக்கு சரியான அர்த்தம் பிரிதல் அல்லது விலகுதல். “சிலரிடமிருந்து, ஏதாவது ஒன்றிடமிருந்து, ஓரிடத்திலிருந்து ஒருவர் தன்னைத் தானே விலக்கிக் கொள்வது என்று பொருள். இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் மற்றும் முகம்மது நபிகளின் கூற்றுபடி ஹிஜ்ரா என்பது தீமையிலிருந்து விலகிச் செல்வது எனப் பொருள் கொள்ளபடுகிறது. அந்தத் தீமையென்பது தீமையும் அநீதியும் நிறைந்த சமூகம் என்று கருதப்படுகிறது,” என்கிறார் ஆய்வாளர் குஸ்.

அதேபோல் ஹிஜ்ரா என்பது உடலளவில் இடம்பெயர்தல் மட்டுமல்ல அது மனதளவிலும் ஆன்மிகத்தை நோக்கித் தங்களைக் கொண்டு செல்லுதல் என்பதாகவும் கருதப்படுகிறது.

கடவுளால் தடைசெய்யப்பட்ட விஷயங்களிலிருந்து தங்களை விலக்கிக் கொள்வதும் கடவுளால் பாவம் என்று சொல்லப்பட்டவற்றில் இருந்து தங்களை விலக்கிக் கொள்வதுமே இஸ்லாமியர்களின் உண்மையான புலம்பெயர்தலாகக் கருதப்படுகிறது, என்கிறார் குஸ்.

“நீதியற்ற, சமத்துவமற்ற, வேற்றுக் கருத்துகளை வெறுக்கும் சமூகத்தை வீழ்த்துவதுதான் ஹிஜ்ராவின் உள்ளர்த்தம்,” என்கிறார் அவர்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் வரலாற்றில் பல்வேறு மதங்கள் தோன்றுவதற்கு இடம்பெயர்தல்கள் ஒரு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது.

மோசஸ் தன்னுடைய மக்களை எகிப்திலிருந்து விடுவித்து வாக்களிக்கப்பட்ட நிலத்திற்கு வழிநடத்திச் சென்றார்.

பெத்லஹேமில் நடந்துகொண்டிருந்த ஒரு கணக்கெடுப்பில் தம்மைப் பதிந்து கொள்வதற்காக யோசெப்பு அங்கு சென்றார். அதனால் தான் இயேசு கிறிஸ்து அங்கு பிறந்தார். பின்னாளில் மத பிரசாரகராக மாறி பல இடங்களுக்குச் சென்றார்.

அதேபோல் தன்னுடைய 29 வயதில் அரண்மனை வாழ்விலிருந்து விடுபட்டு அலைவுறும் துறவு வாழ்கை மேற்கொண்ட சித்தார்த கௌதமர்தான் பின்னாளில் புத்தராக மாறினார். புத்த மதம் தோன்றுவதற்கும் அவரே காரணமாக அமைந்தார்.

மானுடவியலாளர் பிரான்சிரோசி பார்போசா கூறுகையில், “மதங்களுக்கு இடையே நிலவும் பல்வேறு ஒற்றுமைகளை நாம் காண முடியும். குறிப்பாக அடக்குமுறைகளில் இருந்து விடுபட்டு வரும் மக்கள் தங்களுக்கு விருப்பமான மதத்தையும் ஆன்மிக வழிகளையும் பின்பற்றுவதற்கு சிறந்த வழிகளைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர்,” என்கிறார்.

துன்பத்தில் உழலும் மக்களுக்கு கடவுள் காட்டும் ஒருவித சமிஞ்கையாகவே மக்கள் இதைக் கருதுகின்றனர். அனைத்து மத ரீதியான அனுபவங்களும் புனித நூல்களும் இதைத்தான் குறிக்கின்றன. குர்ஆனுக்கும் முந்தைய புனித நூல்களான தோரா, பழைய ஏற்பாடான, தாவீதின் சங்கீதங்கள் அகியவற்றை நம்புவதும் இஸ்லாத்தில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இவை அனைத்திலும் பல முக்கிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன,” என்கிறார்.

இஸ்லாமிய சமூகத்தைப் பொறுத்தவரை முகமது நபியின் இடம்பெயர்தல் இயக்கம்தான் இஸ்லாமிய கலாச்சாரமும் நாகரீகமும் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது எனக் குறிப்பிடுகிறார் குஸ்.

“பல்வேறு மத அடையாளங்களை வேறுபடுத்திப் பார்த்து, தெளிவு பெற ஹிஜ்ரா நிகழ்வுதான் காரணமாக அமைந்தது. ஒரு தெய்வ வழிபாட்டிற்கும் பல தெய்வ வழிபாட்டிற்கும் இடையே அது வேறுபடுத்திக் காட்டியது. குறிப்பாக ஒரு தெய்வ வழிபாட்டாளர்களான இஸ்லாமியர்களை, யூதர்களிடமிருந்தும், கிறிஸ்துவர்களிடமிருந்தும் தனித்துக் காட்டியது,” என்றும் வாதிடுகிறார் குஸ்.

மேலும் அவர் கூறுகையில், “இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனில் சமூக போதனைகள் துவங்குகின்றன. அதன் தொனி, சமூக நெறிமுறைகள் சார்ந்ததாய் இருக்கிறது. ஒரு மனிதர் சமூகத்திலும் குடும்பத்திலும் மற்ற நபர்களிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த போதனைகள் அதில் இருக்கின்றன.

வியாபாரிகளும், வணிகர்களும், விவசாயிகளும் எப்படி நடந்துகொள்ள வேண்டும், ஓர் அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்பன போன்ற விதிகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன,” என்கிறார்.

இஸ்லாமிய மதம் உருவாக காரணமாக இருந்த முகமது நபி மாற்று கருத்துகளை வரவேற்றாரா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மதீனா

அறிஞர்களைப் பொறுத்தவரை, மதீனா ஒரு மாதிரி நகரமாக உருவெடுத்தது.

“மதீனா அப்போது அறம் சூழ்ந்த ஒரு நகரின் அடையாளமாக, அநீதி நிகழாத இடமாக விளங்கியது,” என்கிறார் குஸ்.

அதேபோல் மானுடவியலாளர் பார்போசா கூறுகையில், “மெதினாவில் மக்கள் குடியேறிய காலகட்டத்தில்தான் குர்ஆன் எழுதப்பட்டு வந்தது. மதீனாவில் ‘வெளிப்பட்ட’ குர்-ஆன் அத்தியாயங்கள், மெக்காவில் வெளிப்பட்டவற்றில் இருந்து வேறுபட்டவை,” என்கிறார்.

“முகமது நபி முதன்முறையாக மதீனாவில்தான் இஸ்லாமியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அரசியலமைப்பாக அமைத்து ஓர் அரசாங்கம் அமைக்கிறார். இதனால்தான் ஹிஜ்ரா யாத்திரை ஒரு முழுமுதல் இஸ்லாமிய சமூகத்திறகான வாயிலாகப் பார்க்கப்படுகிறது,” என்று அழுத்தமாகச் சொல்கிறார் பார்போசா.

இஸ்லாமியர்கள் தங்களுடைய வருமானத்திலிருந்து ஒவ்வோர் ஆண்டும் தங்களுடைய சமூகத்திற்கு அளிக்க வேண்டிய பங்களிப்புகள், ஒவ்வோர் ஆண்டும் மேற்கொள்ள வேண்டிய விரதங்கள் மற்றும் தினமும் மேற்கொள்ள வேண்டிய தொழுகைகள் போன்ற அனைத்து விதிமுறைகளும் இதில் அடக்கம்.

“இதில் பல விஷயங்கள் ஏற்கெனவே மெக்காவில் நடைபெற்று வந்ததுதான். ஆனால் மதீனாவிற்கு வந்தபின் அவை அனைத்தும் முறையான திட்டமிடலுடன் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டன. மத நடைமுறைப்படி இவை நிறுவப்பட்டது மதீனாவில்தான்,” என்று சுட்டிக் காட்டுகிறார் பார்போஸா.

அதேபோல் அக்காலத்திய மதீனாவின் சமூகத்தில் ஜனநாயகக் கோட்பாடுகள் காணப்பட்டதாகக் கூறுகிறார் குஸ். “என்னைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய மதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான உறவைக் குறிக்கும் வகையில் ஹிஜ்ரா யாத்திரை ஓர் அடையாளமாக அமைந்துள்ளது,” என்கிறார் குஸ்.

மதீனாவின் அரசியலமைப்பு சாசனம் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள், மற்றும் அரேபியர்கள் போன்ற அனைத்து தரப்பு மக்களின் சார்பிலும் கையெழுத்திடப்பட்ட ஓர் ஆவணம். இது அங்கே மதங்களுக்கிடையே இருந்த வலிமையான நட்புறவை குறிக்கிறது. 622 – 624 ஆண்டுகளுக்கிடையே இந்த அரசியலமைப்பு சாசனங்கள் எழுதப்பட்டிருக்கலாம் என குஸ்சின் ஆய்வுகள் கூறுகின்றன.

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படையாகக் கூறுவதற்கு மதினாவின் அரசியலமைப்பு சாசனம் ஒரு துவக்கப்புள்ளியாக அமைந்தது. அதேபோல் அப்போதுதான் பல பிரிவுகளைச் சேர்ந்த அரபு மக்கள் ஒன்றிணைந்து அரபு சமூகமாகினர், என்கிறார் அவர்.

“இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, ‘மற்றவர்களின் சுதந்திரத்திற்கு எந்த வகையிலும் இடையூறாக அமையாத வகையில் ஹிஜ்ரா யாத்திரை மூலம் தங்களது சுதந்திரத்தைத் தேடி வந்த மக்கள் ஒரு நல்ல அரசாங்கமும் ஜனநாயகமும் அமைவதற்குக் காரணமாய் அமைந்தனர் என்பதை நம்மால் உறுதிபடுத்திக்கொள்ள முடியும். அதவாது ஏற்கெனவே இருந்த மக்களின் சுதந்திரத்தையும் உறுதி செய்துவிட்டு தங்களின் சுதந்திரத்தையும் அவர்கள் நிலைநாட்டிக்கொண்டனர்,” என்று குஸ் குறிப்பிடுகிறார்.

முகமது நபிக்கு பின் வந்த இரண்டாம் கலிஃபா இஸ்லாமிய நாட்காட்டியில் மேற்கொண்ட குறிப்புகள்தான் ஹிஜ்ரா யாத்திரை இஸ்லாமியர்களின் துவக்கப்புள்ளியாக அமைந்தது என்பதை உறுதி செய்ய உதவியது.

586 - 644 காலகட்டத்தில் வாழ்ந்து வந்த உமர் இப் அல்கடாப் என்பவர்தான் இஸ்லாமியர்களை 634 - 644 ஆகிய காலகட்டம் வரை வழிநடத்தி வந்தார். அதேபோல் ஸ்தாபக தீர்க்கதரசி மறைந்த பின்னர் அடுத்த 7 ஆண்டுகளுக்கு இவர்தான் நாட்காட்டியையும் நிறுவினார்.

“பண்டைய அரபு சமூகத்தில் முறையான நாட்காட்டி என எதுவுமே இல்லை. அவர்கள் எப்போதுமே பல அண்டுகளுக்கு முன்னதாக என்று மட்டுமே அனைத்து நிகழ்வுகளையும் குறிப்பிட்டு வந்தனர். இந்தக் குழப்பத்தைத் தீர்க்கவே கலீஃபா ஹிஜ்ரா காலத்திற்குப் பிறகு முறையான நாட்காட்டி திட்டமிடலை அறிமுகப்படுத்தினார்,” என்று கூறுகிறார் மத ஆய்வாளர் குஸ்.

https://www.bbc.com/tamil/articles/c28z9xkxp83o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.