Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறம் வெல்லும்..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அறம் வெல்லும்..?
 
'BigBOSS' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் விக்ரமன் அடிக்கடி உச்சரித்த ‘அறம் வெல்லும்’ என்ற வார்த்தைகள் மக்களிடத்தில் இப்பொழுது அதிகம் பரீட்சயமான வார்த்தைகளாகியுள்ளன. ஆனால், போட்டியின் முடிவு ரசிகர்கள் பலருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
உண்மையில் 'அறம்' தோற்பதில்லை. அது தோற்கடிக்கப்படுகிறது என்று மக்களுக்கு புரியவைப்பதற்கே ஒரு ‘விடுப்பு’ நிகழ்ச்சி தேவைப்படுகிறது. இது தான் இன்றைய நிதர்சனம். புதிய ஒழுங்கு.
'அறம்' தோற்றல் என்பது புது விடயம் அல்ல. இது அரசியல், வணிகம், சட்டம், சமூகம், ஊடகம் என எல்லா மட்டங்களுக்கும் பொருந்தும். அடிப்படியில் அறத்தைத் தோற்கடிக்கும் தந்திரம் ஆதிக்க சக்திகளின் மூலோபாயம் என்றாலும், அதனை நிறைவேற்றும் கருவிகளாக மக்களே (சமூகமே) விளங்குகின்றனர்.
'BigBOSS' இல் விக்ரமன் தோற்றதால் 'அறம்' தோற்றதா? அல்லது தோற்கடிக்கப்பட்டதா..? என்று விவாதிப்பதற்கான பதிவு இல்லை இது. அல்லது விக்கிரமன் அறத்தின் காவலனா? இல்லையா ? என்று பகுப்பாய்வதும் இப்பதிவின் நோக்கமல்ல.
ஆனால், ‘அறம்’ மக்கள் பலத்தால் தோற்கடிக்கப்படுகிறது என்பதே சமகால பொது விதி. இந்நிலையில், ‘அறம்’ பற்றிய சொல்லாடலின் குறியீட்டு அடையாளமாக ‘விக்கிரமன்’ பெயர் புழக்கத்தில் உள்ளதால், சமூகப் பிறழ்வுகள் குறித்து மக்கள் மனங்களில் ஒரு சிந்தனைத் தூண்டலைச் செய்வதற்கான தருணமாக இது அமையலாம் என்ற ஒரு புள்ளியான நம்பிக்கையின் வெளிப்பாடே இப்பதிவு.
கணிசமானவர்கள், BigBOSS என்ற கள்ளுக்கொட்டிலுக்குள் கூடியிருந்து கள்ளடிச்ச போதையில், 'ஊடக அறம்' எது? என்று வகுப்பெடுத்துக்கொண்டு இருப்பீர்கள். ஆகவே, நானும் கள்ளுக்கொட்டிலுக்கு வெளியில் நின்று கள்ளடிச்சுப்போட்டு வந்திருக்கிறன். போதை உள்ளவர்களோடு போதையில் தானே உரையாடவேண்டும்.
அறத்தைக் காக்கும் கடமையும், பொறுப்பும் கொண்டு செயற்படவேண்டிய வெகுஜன ஊடகங்கள் (Mass Media), மக்களை எப்பொழுதும் ஒரு போதை மயக்கத்தில் வைத்துக்கொள்ளும் வித்தையில் கைதேர்ந்தவர்களாக உள்ளன. இவ்வித்தையில் தமிழக ஊடகங்களைப் பொறுத்தமட்டில் நான் முந்தி.. நீ முந்தி.. என்று ஒரு பிரகடனப்படுத்தப்படாத ஊடகப் போர் நடை பெற்றுவருகிறது. அது எப்படியோ போகட்டும். ஆனால், “…அதி உச்சமான ரசனை மிக்கவர்கள் ஈழத்தமிழர்கள், எச்சங்களுக்கு எல்லாம் கைதட்டமாட்டார்கள்..” என்ற ஒரு காலத்து நிலை மாற்றம் கண்டு, இன்று எச்சங்களை மட்டுமே தலையில் தூக்கிக் கொண்டாடும் இனமாக ஈழத்தமிழினமும் மாறியிருக்கிறது.
எனது கணிப்புச் சரி என்றால், அடுத்த நிகழ்ச்சிக்கு (Season க்கு) கனடாவில் இருந்தும் ஒரு போட்டியாளர் உள்வாங்கப்படலாம். நாமும் Facebook ஐக் கதறவிட்டு வாக்கு வேட்டையில் இறங்கக்கூடும். அதன் பின்னர் Pearson விமான நிலையத்தில் மாலை, பொன்னாடை, தாரை-தப்பட்டைகளோடு அப்போட்டியாளரை விழா எடுத்து வரவேற்போம்.
கழுதையாக இருந்தாலும், தமிழகத் தொலைக்காட்சியின் வாசம் பட்டால் குதிரையாகிவிடும் என்ற நம்மவர்களின் ‘அக்கரை’ மோகம், நம்மத்தியில் உள்ள திறமையாளர்களை தரக்குறைவாக இழிவு செய்யும் நிலைக்குத் தள்ளியுள்ளது. எனினும், திறமையாளர்களுக்கு பெரிய தளங்களில் அங்கீகாரம் கிடைப்பதை இப்பதிவு குறை கூறவில்லை. ஆனால், தமிழ்நாட்டு மண்ணில் அங்கீகரிக்கப்பட்டாலே, நாம் நம்மவர்களின் திறமைகளை அங்கீகரிப்போம் என்ற நிலையைத்தான் குறைகூறக் கடமைப்பட்டுள்ளோம்.
இந்நிலையில், கேளிக்கை விநோதங்களின் மைய்யமாக, மக்களை வசியம் செய்யும் பெருச்சாளிகளாக, ஊடகங்கள் பெருவளர்ச்சி காண்பதில் மக்களே பங்காளிகளாக விளங்குகின்றனர் என்பதை மக்கள் உணர்வதில்லை. எனவே, விடுப்பு, விறுவிறுப்பு, விசித்திரம் என்று நாடுகிற மக்கள் கூட்டத்துக்கு தேவைப்படும் தீனியை அள்ளிக் கொடுக்கும் ஊட்டிகளாக, இவ்வூடகங்கள் விஸ்வரூபம் பெற்றுள்ளன. மாறாக சமூகத்துக்கு உண்மையைச் சொல்கிற, விழிப்புணர்வை ஊட்டுகிற ஊடகங்களையும் / ஊடகர்களையும் புறக்கணிக்கும் பழக்கத்தையும் இது போன்ற கேளிக்கை மைய்யங்களே உருவாக்கி வைத்துள்ளன.
ஆனால், சமூகத்தில் மாற்றங்களை உருவாக்க விரும்பி ஊடகக் கற்கையை பயின்றும், பயிற்சியைப் பெற்றும், அதற்குரிய மதிப்பும் மரியாதையும், வெகுமதியும் கிடைக்காமல், அரச - தனியார் நிறுவனங்களில் கிடைத்த தொழிலைச்செய்கிற வழக்கமும் பழக்கமாகிவிட்டது.
ஒரு நுகர்வோனின் பலவீனமே, வியாபாரியின் பெரும்பலம். இந்த சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே சந்தைப்படுத்தலின் மூலோபாயம் (Marketing Strategy) வகுக்கப்படுகிறது. அதனை தமிழகத்து தொலைக்காட்சிகள் செவ்வனே செய்து வருகின்றன. ஆனால், பார்வையாளர்களும், பங்காளிகளும் இங்கு மக்களே என்பதே அடிப்படை. தாம் நிர்ணயம் செய்கிற இலக்கை, தமக்கு சேதாரம் இல்லாமல், மக்கள் எனும் கருவிக்கொண்டு இயக்குபவனே இங்கு ஆட்ட நாயகன். இது தெரியாமல் தன் பணத்தை, நேரத்தை, வாழ்வை விரயம் செய்கிறவனே ரசிகன் என்ற பங்காளி.
உண்மையில், இங்கே முற்றுமுழுதாகப் பாதிக்கபடுகிற (Vulnerable) தரப்பு, பங்காளியாகவுள்ள பொதுமகனே. ஆனால், அதனை அவன் உணர்வதில்லை. காரணம், ஒரு சாமானியப் பொதுமகனுக்கு பொழுதுபோக்கே முக்கியம். அவனுடைய அன்றாடத் தேவைகளின் பட்டியல் என்பது கேளிக்கை, வேடிக்கை, விடுப்பு என்ற ஆதாயங்களைத் தேடியே அலைகிறது. இதற்கு படித்தவர் /பாமரர் என்ற வேறுபாடு கிடையாது.
எனவே, இவ்வாறான மனோநிலையில் மக்களை வைத்துக்கொண்டாலே போதும், வணிக மூலோபாயமும், அரசியல் மூலோபாயமும் கட்டுக்குள் வந்துவிடும். இது போன்ற பிறழ்வுகள் தமிழகம்/ இந்தியாவில் நெடுங்காலப் பழக்கம் என்றாலும், அண்மைக்காலமாக நம்மவர்கள் மத்தியில் புகுத்தப்பட்டுள்ள சினிமா/ சின்னத்திரை / விடுப்பு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளின் திணிப்பும், அவை நம் சமூகத்தின் மீது செலுத்தும் தாக்கத்தின் அளவும், ஒரு பெரும் சமூகக் கட்டுமானச் சீரழிவையே ஏற்படுத்திவருகின்றன.
இன்று நம்மவர்கள் மத்தியில் ஊடகம் தொடர்பான புரிதலும், அது சார்ந்த செயல்களும் மலினப்பட்டுவருகின்றன. அதன் அடுத்த பரிணாமமாகவே சமகால சமூக ஊடகங்களின் பெருக்கமும், அவை தாங்கி வருகின்ற விடுப்புகளும் மக்களைக் கவர்ந்து வருகின்றன. அவற்றின் அடிப்படை என்பது, மக்களை வசியம் செய்யும் நோக்கமும். அதனூடாகப் பணம் ஈட்டும் வெறியும் கொண்ட செயல்களாக அமைந்துள்ளன. (ஒரு சில விதிவிலக்குகள் உண்டு)
சமூக ஒன்று கூடல்களே இவ்வூடகங்களின் அதிகபட்ச செய்தி மைய்யம் (coverage). கனடாவில் 4 லட்சம் பேர் இருப்பதாக மார்தட்டுகிற நம்மவர் நிகழ்வுகளின் பதிவுகளில் 40 பிரபல தம்பதிகளும்.. 40 வணிகர்களும்... 40 தமிழ் பெண்பிள்ளைகளும் மட்டுமே திரும்பத்திரும்ப 360 கோணத்தில் பதியப்படுகின்றனர் (படம் எடுக்கப்படுகின்றனர்).
உதாரணமாக கனடாவிலும் பெருகியுள்ள சமூக ஊடகங்களில் கணிசமானவை சமூகப்பிரபலங்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நேரலை செய்வதிலும், ஒளிப்படம் எடுப்பதிலும், செய்தியாக்குவதிலும் மும்முரமாக இயங்கி வருகின்றன. அவர்களுக்குள் ஒரு நீயா? நானா? போட்டியும் நடைபெற்று வருகிறது. அத்தோடு கலியாணம், செத்தவீடு என்று முன்பந்தியில் அமர்ந்து நேரலை செய்யும் அளவுக்கு ஊடகங்கள் மலினப்பட்டுள்ளன.
ஆனால், இவ்வாறான ஊடகப் பிறழ்வுகள் தொடர்பிலோ.. ஊடக அறம் பிழைத்ததாகவோ.. யாரும் கவலையோ.. கரிசனையோ ..கொள்ளவில்லை. எனவே, இதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்.. அதனை நாம் கொடுக்கிறோம் என்று குறித்த ஊடகங்களும்.. நியாயம் சொல்ல வசதியாகிவிட்டது.
மறுபுறத்தில் தமிழர்களுக்கு உரிமையும், இனப்படுகொலைக்கு நீதியும் வேண்டி நின்ற அமைப்புக்கள், GTA நகரங்களை குத்தகை எடுத்து விழா நடத்துகின்றன. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அழைக்கப்படும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கையைக் கொண்டு தமது பலத்தை குறித்த அமைப்புகள் பறைசாற்றுகின்றன.
தமிழ் இருக்கைக்காக 3 மில்லையன் டொலர்களை திரட்டும் திறன்கொண்ட சமூகத்தால், போரால் பாதிக்கப்பட்ட சில ஆயிரம் பேருக்கு தீனிபோட வழிபிறக்கவில்லை. திருவிழாவும், தெருவிழாவும் செய்து ஒரு வணிகமயப்பட்ட கட்டமைப்புக்களாக உருமாறியுள்ள அமைப்புக்களின் அறப்பிறழ்வுகள் குறித்து யாருக்கும் கவலை இல்லை.
காரணம், நீங்கள் கண்ணைமூடிக்கொண்டு கேள்வி கேட்காமல் இருப்பதற்கான மேடைகள் வழங்கப்படுவதோடு, உங்கள் கவனம் அவர்கள் மீது திரும்பாமல் வேடிக்கையும் காண்பிக்கப்படுகிறது. முன்வரிசையில் அமர்ந்து படம் எடுக்க கிடைத்த வாய்ப்புக்காக, சம்பந்தப்பட்ட தரப்புக்களின் விளம்பர முகவர்களாக சமூக ஊடகர்கள் தமது ஒளிப்படக்கருவிகளை காணிக்கையாக்கிவிட்டனர்.
ஆக, நம்மைச் சுற்றி எத்தனை அறப்பிறழ்வுகள் உண்டு?. அத்தனை அறப்பிறழ்வுகளின் பின்னால் பங்காளிகளாக யார் உண்டு.? என்ற கேள்விகளை நம் சமூகம் சிந்திக்க வேண்டும். மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தைகள் போல, சுயம் இழந்த சமூகமாக நாம் மாறிவருவது குறித்து நம்மவர்கள் வாய் திறப்பதில்லை. அப்படிக் குரல் கொடுப்போருக்குப் பக்க பலமாகவும் நிற்பதில்லை.
ஆக, இத்தனை அறப்பிறழ்வுகளையும் கண்டுகொள்ளாத சமூகம், கூத்தாடிகள் கூடாரத்தில் அநீதி நடப்பதாக முணுமுணுப்பது வேடிக்கையானது.
எனவே, BigBoss விடயத்தில் தோற்றது விக்ரமன் என்றாலும், வென்றது விஜய் தொலைக்காட்சியே. இனிமேல், தமது நிகழ்ச்சிகளில், செயல்களில், எவ்வித அறத்தையும் பேணவேண்டிய அவசியம் இல்லை என்பதை, மக்களே சொன்னார்கள் அல்லது சொன்னதாகக் காட்டினார்கள் என்ற நியாயம் கற்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் இனி அனைத்து ஊடகங்கள் மத்தியில் வீரியம் பெறும். சமூகமும் அதனை ஏற்றுக்கொண்டு பயணிக்கும். சமூகம் வெறும் குப்பைகளைக் கொட்டும் குப்பை மேடு என்பதை ஊடகங்கள் உறுதியாகப் புரிந்துகொள்ளும். ஆனால், வணிகமும், வணிகனும் வெல்வர்.
எனவே, அறம் தோற்பதில்லை... தோற்கடிக்கப்படுகிறது.. கண்ணை மூடிக்கொண்டிருக்கும் சமூகத்தால்...
(இப்பதிவை இறுதிவரை பொறுமையாகப் படித்தோருக்கு நன்றி🙏. ஏனையோர் அடுத்த விடுப்பைத் தேடிக்கொண்டிருக்கக்கூடும்..🥲)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.