Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்மார்ட் வாட்ச் போன்ற கருவிகள் அணிவது விழிப்புணர்வா, மந்தை மனநிலையா? ஐஐடி ஆய்வு கூறுவது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்மார்ட் வாட்ச் போன்ற கருவிகள் அணிவது விழிப்புணர்வா, மந்தை மனநிலையா? ஐஐடி ஆய்வு கூறுவது என்ன?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
உடல்நலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிட்னெஸ் வாட்ச் உள்ளிட்ட ஸ்மார்ட் கருவிகள் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான கட்டுரை இது.

 

ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட உடலில் பொருத்தக்கூடிய மின்னணு கருவிகளை வாங்குகிறவர்கள், 'ஹெர்டு மெண்டாலிட்டி' என்று சொல்லப்படும் 'மந்தை மனநிலை' காரணமாகவே இவற்றை வாங்குவதாக ஐஐடி நடத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

 

நாள்தோறும் உடல் நலம் காட்டும் மின்னணு கருவிகளைப் பயன்படுத்தும் 400க்கும் மேற்பட்டோரிடம் சேகரித்த தகவல்களைக் கொண்டு ஆய்வு நடத்திய ஐஐடி ஆய்வாளர்கள், பொருட்களை வாங்குவோர் ஆன்லைன் மதிப்புரைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாகச் சொல்கிறார்கள்.

இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு உள்ளிட்ட விவரங்களைக் காட்டும் வகையில் செயல்படும் ஸ்மார்ட் வாட்ச், உடற்பயிற்சி செய்யும்போது அணியும் சென்சார் கருவிகள், நெற்றியைச் சுற்றி அணியப்படும் 'ஸ்ட்ரெஸ் ரிலிவர்' கருவி என பலவிதமான கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன.

பலரும் இதுபோன்ற கருவிகளை வாங்கவேண்டும் என்று முடிவு செய்வதற்கு 'மந்தை மனநிலை'தான் காரணமாக அமைகிறது என்றும் உடலியக்கங்களை துல்லியமாகக் கணிக்க இந்த கருவிகள் உதவும் என்றும் அவர்கள் நம்புவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  கொரோனா ஊரடங்கு காலத்தில் இதுபோன்ற கருவிகளை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தினர் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆய்வாளர்கள் சௌமியா தீக்ஷித், அஞ்சலி பத்தனியா மற்றும் கவுஹர் ரசூல் ஆகியோர் நடத்திய ஆய்வின் முடிவுகள் Journal of marketing communications என்ற மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்விதழில்(peer reviewed journal) வெளியாகியுள்ளது.

பிபிசி தமிழிடம் பேசிய ஆய்வாளர் சௌமியா தீக்ஷித் ஆரோக்கியம் சார்ந்த கருவிகளைப் பயன்படுத்துபவர்கள் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட நபர்களாக இருந்தனர் என்றார். தினசரி வாழக்கையில் ஸ்மார்ட் கருவிகளைப் பயன்படுத்துவது ஒரு பழக்கமாகப் பலருக்கும் மாறியுள்ளது என்றார் அவர்.

சௌமியா தீக்ஷித்

பட மூலாதாரம்,SOWMIYA DIXIT

 
படக்குறிப்பு,

சௌமியா தீக்ஷித்

''கொரோனா காலத்தில் இருந்த அச்சம் தற்போது இல்லை என்றபோதும், கருவிகளை உடலில் அணிந்திருக்கும்போது உடனுக்குடன் தங்களது ஆரோக்கியம் பற்றிய தகவல்கள் கிடைப்பது தங்களுக்கு உதவுவதாகக் கூறுகிறார்கள்.

அவற்றில் உடல் நல மானிகள் (fitness trackers), ஸ்மார்ட்வாட்ச்கள், அணியக்கூடிய சென்சார்கள் மற்றும் அணியக்கூடிய மருத்துவ சாதனங்கள் ஆகியவை அடங்கும்.

இவற்றில் பல்ஸ் ஆக்சிமீட்டர் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவைக் கண்காணிக்க கொரோனா காலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. உடல் நலம் தொடர்பான தரவுகள், விழிப்பூட்டல்கள்(alerts), நினைவூட்டல்கள்(reminders) மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள்( personalized recommendations) போன்ற அம்சங்களை இந்த கருவிகள் தருகின்றன,''என்றார்.

ஆன்லைன் மதிப்புரைகளை நம்பி ஆரோக்கியம் சார்ந்த கருவிகளை பலரும் வாங்கியுள்ளதாக கூறுகிறார்கள் ஆய்வாளர்கள் அஞ்சலி பத்தனியா மற்றும் கவுஹர் ரசூல்.

ஒரு பொருளை வாங்குவதற்கு முந்தைய காலங்களில் மக்கள் தங்களுக்குத் தெரிந்த நபர்களிடம் விசாரிப்பார்கள் அல்லது தங்களுக்கு நெருக்கமானவர்கள் ஒரு பொருளைப் பயன்படுத்தியிருப்பதாகவும், அது பலன் தருவதாகவும் சொன்னபிறகு வாங்குவார்கள். தற்போது ஆன்லைன் மதிப்புரைகளை மக்கள் நம்புகிறார்கள். வாய்வழி உத்தரவாதம் என்பது தற்போது ஆன்லைன் மதிப்புரையாக உருமாறியுள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அஞ்சலி பத்தனியா

பட மூலாதாரம்,ANJALI PATHANIYA

 
படக்குறிப்பு,

அஞ்சலி பத்தனியா

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி காவியா(24) தினமும் தான் 10,000 அடிகள் நடப்பதை ஸ்மார்ட் வாட்ச் காட்டுவதால் தனக்கு ஊக்கம் அதிகரிப்பதாகச் சொல்கிறார். பல நாட்கள் ஸ்மார்ட் வாட்ச்சில் தனது இலக்கை எட்டுவதற்காக நடந்த அனுபவமும் இவருக்கு உள்ளது. ஐ டி பொறியாளர் சந்தியா தன்னுடைய ரத்தஅழுத்தத்தை சோதனை செய்வதற்காக பிட்னெஸ் ஸ்ட்ராப் ஒன்றை அணிந்துள்ளார்.

அதிவேகமாக உடற்பயிற்சி செய்யும்போது தனக்கு இந்த கருவியில் காட்டும் தரவு தனது வேகத்தைக் குறைப்பதற்குப் பயன்படுகிறது என்கிறார். ''அலுவலக வேலையில் மூழ்கி இருந்தாலும், இந்த கருவியில் காட்டும் ரத்த அழுத்த தரவு எனக்கு உடனடியாக ஓய்வு தேவை என்பதை உணர்த்துகிறது. ஆனால், சில பிரச்சினையான சூழலில், அழுத்தம் அதிகரிப்பதைப் பார்ப்பதால் இன்னும் அது அதிகமாகிறது,''என்கிறார் சந்தியா.    

ஸ்மார்ட் கருவிகளை பயன்படுத்துவதால் பல விதங்களில் நன்மை இருப்பதாக கருதும் மருத்துவர் ராஜ்குமார், ஒரு சிலருக்கு பதற்றம் ஏற்படுகின்றது என்பதால், கருவிகளை முற்றிலும் புறக்கணிக்கமுடியாது என்றும் தொடர் பயன்பாடு என்பது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது என்றும் கூறுகிறார்.

தன்னிடம் பரிசோதனைக்காக வருபவர்கள் பலரும் தற்போது வீட்டில் தங்களது ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்டவற்றைச் சோதனை செய்துவிட்டு வருவதாகக் கூறுகிறார்.

''நவீன கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. பலரும் வீடுகளில் அதனைப் பயன்படுத்துவது மிகவும் சாதாரணமாகிவிட்டது. ஸ்மார்ட் வாட்ச் அல்லது ஒரு செயலியில் நீங்கள் தரவுகளை உடனுக்குடன் பார்ப்பதோடு, தரவுகளைச் சேமித்துவைத்துக்கொள்ளலாம் என்பதால், கடந்த ஒருவாரத்தில் உங்கள் உடல்நலன் எவ்வாறு இருந்தது என்பதை ஒரு நொடியில் பதிவிறக்கம் செய்யமுடியும். ஒரு சிலர், இதுபோன்ற தரவுகளை எனக்கு அனுப்பி, உடலியக்கத்தில் மாற்றம் அதிகமாகத் தென்படுகிறது, நான் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளலாமா என்று கேட்பார்கள்,''என்கிறார் மருத்துவர் ராஜ்குமார்.

உடல்நலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சில நோயாளிகள் ஸ்மார்ட் கருவிகளில் கிடைக்கும் தரவுகளை அடிக்கடி பார்த்து அழுத்தத்திற்கு ஆளானால், கருவிகளை சில நாட்களுக்குப் பயன்படுத்தவேண்டாம் என்று பரிந்துரைத்த அனுபவமும் உண்டு என்கிறார் அவர்.

ஆனால் தற்போதைய நவீன உலகத்தில், ஸ்மார்ட் உடலியக்கக் கருவிகளைப் பயன்படுத்துவது மிகவும் பெருகிவிட்டது என்றும் நோயாளிகள் தங்களது உடல்நலன் குறித்த மாறுதல்களை தாங்களாவே பார்ப்பதால், உடல்நலன் மீதான அக்கறையும் அதிகரித்துள்ளது என்றும் மருத்துவர் ராஜ்குமார் கருதுகிறார்.

''தற்போது பல செயலிகள் வந்துவிட்டன. ஒரு காலத்தில் மருத்துவரிடம் செல்வதற்கு ஸ்கேன், ரத்தபரிசோதனை, எக்ஸ்ரே என பலவற்றையும் கையில் எடுத்துசெல்லவேண்டும். ஆனால் செயலிகளில் நீங்கள் பதிவு செய்துவிட்டால், நீங்கள் எடுக்கும் பரிசோதனைகளின் முடிவுகள் அனைத்தும் அதில் சேமிக்கப்படும். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அறுவை சிகிச்சையின் தாக்கம் என பல தகவலும் உடனடியாக தெரியும் என்பதால், மருத்துவர்களுக்கும் இது பயனுள்ளதாக உள்ளது,''என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/articles/cq525ejwdn8o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.