Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழந்தமிழ் மறத்தியரும் ஈழத்தமிழ் மறத்தியரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பழந்தமிழ் மறத்தியரும் ஈழத்தமிழ் மறத்தியரும்

- பேராசிரியர் அறிவரசன்

பழந்தமிழ் மறத்தியர், நாட்டுக்காகக் தம் வீட்டிலிருந்து ஆடவரைப் போர்க்களத்திற்குத் தயங்காமல் அனுப்பினர். ஆயினும். அவர்கள் களம் சென்று போர் செய்தார் அல்லர். இன்று, ஈழத்தில், பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்துப் போரியல் நிகழ்வுகளிலும் தம் ஆற்றலைக் காட்டுகின்றனர். வீட்டளவில் நின்ற பழந்தமிழ் மறத்தியரின் வழிவந்த ஈழத்தமிழ்ப் பெண்கள், இன்று புலிகளாய் மாறிப் போர்க்களத்தில் நிற்கும் திறம், வியந்து பாராட்டுதற்குரியது. பழந்தமிழ் மறத்தியர் தம் மாண்பு குறித்தும் இன்றைய ஈழத்துப் பெண்களின் ஏற்றம் குறித்தும் இக்கட்டுரையில் காணலாம்.

மனையுறை மகளிர்:

வீட்டின் நீங்கி வெளியே சென்று பொருளீட்டுதல். போர் உடற்றுதல் முதலிய வினைகளை ஆடவரே மேற்கொள்ள வேண்டும்: மகளிர் வீட்டளவில் தங்கி, வீட்டுவினைகளை மட்டுமே ஆற்ற வேண்டும் என்பதை,

“வினையே ஆடவர்க் குயிரே வாள்நுதல்

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்”

(குறுந்தொகை - 135)

எனும் குறுந்தொகைப் பாடல் குறிப்பிடுகின்றது “மனையுறை மகளிர் என்னும் தொடர், மனையில் தங்கியிருப்பதற்கு மட்டுமே மகளிர் உரிமை படைத்தவர்கள் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இக்கருத்தை,

“மனைக்கு விளக்காகிய வாள்நுதல்”

(புறநானூறு - 314)

என்ற புறநானூற்றுப் பாடல் தொடரும் உறுதி செய்கின்றது. அதாவது மனையகத்தே உறைவதும் மனைக்கு விளக்காகத் திகழ்வதுமே மகளிர்க்கு உரியன என்று வரையறுக்கப் பட்டிருந்ததற்குச் சங்க இலக்கியங்கள் சான்றாக உள்ளன.

“முனைக்கு வரம்பாகிய வெல்வேல் நெடுந்தகை”

(புறநானூறு - 314)

என்னும் புறநானூற்றுத் தொடர், அடுகளம் சென்று போரிடத் தக்கோர் ஆடவரே என்று கருத்து அக் காலத்தில் நிலவியதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

மறக்குடிப் பெண்கள்:

பழந்தமிழகத்தில் வாழ்ந்த மறக்குடிப் பெண்கள் போர்க் களத்திற்கு ஆடவரைப் போக்குவதில் தயக்கம் காட்டினாரல்லர்: உள்ளம் கலங்கினார் அல்லர் என்பதைப் பொன்முடியார், ஓக்கூர் மாசாத்தியார், காக்கை பாடினியார், பூங்கணுத்திரையார் போன்ற புலவர்கள் பாடிய புறப்பாடல்களால் அறியலாம். ஆயினும். அன்றையப் பெண்கள் தாங்களே கலன் ஏந்திக் களம் சென்று தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தவில்லை, அதற்கான வாய்ப்பு அற்றை நாளில் அவர்களுக்கு வழங்கப்பட வில்லை என்பதை அறிய முடிகிறது.

பெண்ணின் கடமை:

தமிழினத்தாய் ஒருத்தியின் கூற்றாகப் பொன்முடியார் பாடிய ஒரு புறப்பாடல் இங்குக் கருதத்தக்கது.

“ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்

களிறு எறிந்து பெயர்தல்

காளைக்குக் கடனே”

(புறநானூறு - 312)

மகனைச் சான்றோன் ஆக்குவதும் அவனுக்கு வேல்வடித்துக் கொடுப்பதும் நன்னடை நல்குவதும் ஆண்களது கடமை எனச் சொன்ன தாய், மகனை வயிற்றில் சுமந்து பெற்று வளர்ப்பது மட்டுமே பெண்ணாகிய தனக்கு விதிக்கப்பட்ட கடமை என்பதை உணர்த்தினாள். போர்க்களம் புகுந்து பொருவதும் பகைவரை அழித்து வெற்றியுடன் மீள்வதும் ஆடவர்க்கே விதிக்கப்பட்ட கடமை என்பதையும் அந்தத் தாய் குறிப்பாக உணர்த்தினாள்.

இலக்கணத்தை மாற்றிய ஈழம் :

“மக்கள்” எனும் சொல், ஆண்,பெண் ஆகிய இருபாலர்க்கும் பொதுவான சொல்லாகும். சென்றனர். கண்டனர், வந்தனர் முதலிய வினை கொண்டு முடிந்தாலும் “மக்கள்” எனும் சொல் ஆண்களைக் குறிக்கிறதா? பெண்களைக் குறிக்கிறதா? இருபாலரையும் இணைத்துக் குறிப்பிடுகிறதா? என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை. “மகப்பேறு நிகழ்ந்த இடத்தில் மக்கள் நால்வர் இருந்தனர் எனச் சொல்லும்போது” “மக்கள்” எனும் பொதுச் சொல் பெண்களைக் குறிப்பிடுவதை அறியலாம். ஏனென்றால், மகப்பேறு நிகழுமிடத்தில் ஆண்கள் இருப்பது வழக்கமல்ல: பெண்கள் இருப்பதுதான் இயற்கை என்னும் நடைமுறைக்கேற்ப மக்கள் எனப்பட்டோர் பெண்களே என அறிய முடிகிறது.

“ஆயிரம் மக்கள் போர் செய்தனர்” என்னும் தொடரில் “மக்கள்” எனும் இருபாற் பொதுச் சொல். ஆண்களையே குறிப்பதாக “நன்னூல்” என்ற தமிழ் இலக்கண நூலின் காண்டிகை உரையாசிரியர் குறிப்பிடுகிறார். போரிடுதல் பெண்களுக்கு உரிதல்ல: ஆண்களுக்கே உரியது எனற் கருத்தின் அடிப்படையிலேயே மேற்கண்டவாறு பொருள் சொல்லப்பட்டது.

அந்தக் கருதுகோள் இந்தக் காலத்தில், ஈழமண்ணில் மாற்றப்பட்டு விட்டது. இன்றைய ஈழத்தில் “ஆயிரம் மக்கள் போர் செய்தனர்” என்னும் தொடரில் “மக்கள்” எனும் பொதுச் சொல் எவரைக் குறிப்பிடுகிறது என்பதைச் சொல்ல முடியாது. ஏனென்றால். இன்று ஈழவிடுதலைப் போர்க்களத்தில் ஆண்களும். பெண்களும் நிகராக நிற்கின்றனர்.

பழைய புறநானூறு :

பழந்தமிழ் மறத்தி ஒருத்தி நாட்டைக் காக்கத் தந்தையைப் போர்க்களத்திற்கு அனுப்பினாள். அவன் வீரச்சாவடைந்தான். நேற்றுக் கணவனைக் களத்திற்கு அனுப்பினாள்: அவனும் களம் பட்டான். ஆனாலும் அவள் கலங்கவில்லை. இன்றும் போர்ப் பறை கேட்டுத் தன்மகனை - ஒரே மகனை இளம் பிள்ளையை அழைத்துக் கையில் வேலைக் கொடுத்துக் களத்திற்கு அனுப்பினாள் என ஓக்கூர் மாசாத்தியார் என்ற பெண்பாற் புலவர் மறத்தி ஒருத்தியின் மாண்பினைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.

களத்தில் உன் மகன் புறமுதுகிட்டான் என்று சிலர் சொல்லக் கேட்ட பழந்தமிழ் மறக்குடி முதியவள் ஒருத்தி, செவியில் விழுந்த சொல்லால் சீற்றம் கொண்டாள். “புறங்காட்டினான் மகன் என்பது உண்மையானால் அவனுக்குப் பாலூட்டிய மார்பினை அறுப்பேன்” எனச் சூளுரைத்தாள். கையில் வாளெடுத்தாள்: களம் நோக்கிக் கடுகினாள். வடுப்பட்டு வீழ்ந்து கிடந்த பிணங்களை வாளாற் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள்: மகனைப் பிணமாகக் கண்டாள்: அழுகை பொங்கியது. ஆயினும் சிலர் சொன்னது போல் அல்லாமல் மகன் மார்பில் விழுப்புண்பட்டு மாண்டான் என்பது கண்டு உவகை கொண்டாள்: அவனை ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனள். இப்படிப் பழந்தமிழ் முதியவள் ஒருத்தியின் மறப்பண்பைக் காக்கைப் பாடினியார் எடுத்துக் காட்டுகிறார்.

புதிய வரலாறு :

பழந்தமிழ் மறத்தியரின் உணர்ச்சி குறித்துப் பழைய புறநானூற்றில் பதிவுகள் உள்ளன என்றாலும் பழந்தமிழகத்தில் பெண்கள் போர்க்கோலம் பூண்டு. செருக்களம் சென்று படைக்கலன் ஏந்திப் போரிட்டதாகவோ வெற்றி பெற்றனர் அல்லது விழுப்புண்பட்டுக் களத்தில் வீழ்ந்தனர் என்பதாகவோ வரலாறு இல்லை.

இன்று தமிழீழத்தில் இலக்கணம் புதிதாக எழுதப்படுகிறது “மக்கள் போரிட்டனர்” என்றால் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் களத்தில் போரிட்டனர் என்று பொருள் கொள்ளத்தக்க நிலை ஏற்பட்டுள்ளது. பெண்களும் களப்புலிகளாய், கரும்புலிகளாய் அனைத்து நிலைகளிலும் ஆண்களுக்கு நிகராகப் பங்குபற்றினர், பழைய வரலாற்றில் மாற்றம் செய்யப்பட்டுப் புதிய வரலாறு படைக்கப்படுகிறது. பழைய புறநானூறு போற்றப்பட்டுப் புதிய புறம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

புதிய புறம் :

போரியல் வரலாற்றில் ஈழத்தில் நிகழ்ந்துள்ள போற்றத்தக்க மாற்றத்தைப் பின்பவரும் பாடல் விளக்குகிறது.

“விளங்கிழை மகளிர் வீறுடன் சென்றுபோர்க்

களங்களில் மறத்தினைக் காட்டுதல் வியப்பே.

அண்ணனைக் கொழுநனை

அருஞ்சிறு மகனைத்

திண்ணிய உளத்துடன் செருக்களம் அனுப்பிய

மறத்தியர் குறித்தும் இனப்பழியாகப்

புறப்புண் பட்டான் மகன் எனில் அவனை

வளர்க்க ஊட்டிய மார்பினை அறுப்பதாய்

உரைத்த மகளிர் உணர்ச்சி குறித்தும்

பழைய புறநா னூற்றில் பதிவுகள்

உண்டென் றாலும் மகளிர் போர்க்களம்

சென்று பொருநராய் நின்ற தாக

வரலா றில்லை: வளர்தமிழ் ஈழப்

பெண்கள் புலிகளாய்ப் பெரும்

போர்க் களங்களில்

திண்ணிய நெஞ்சுடன் திறல்மிகக் காட்டி

மாற்றார் தம்மைத் தோற்றோடச் செயும்

ஆற்றல் அறிந்தனம் அவர்தமைப்

போற்றல் நம்கடன் பொலிக பொலிகவே”

(அறிவரசன் கவிதைகளிலிருந்து)

வாழ்க தமிழ் மறம்!

-தென் செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.