Jump to content

இன்னும் பத்து வருடங்களின் பின்னர்? - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பத்து வருடங்களின் பின்னர்? - யதீந்திரா

 

அரசியல் பற்றி பேசுவதற்கும், அரசியலை சரியாக பேசுவதற்கும் இடையில் மலையளவு வேறுபாடுண்டு. அரசியலை எவர் வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகலாம் – ஒரு மரக்கறிக்கடையில் இருப்பர், இறைச்சிக்கடையில் இருப்பவர், ஏன் யாசகம் செய்பவரும் பேசலாம். இவ்வாறு பேசுபவர்கள் ஒவ்வொருவரும் அவர்களின் விருப்பு வெறுப்புக்களின் வழியாகவே அரசியலை புரிந்துகொள்வார்கள். அதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு. ஆனால் ஒரு சமூதாயத்தின் எதிர்காலம் தொடர்பில் சிந்திப்பவர்கள் சாமாணியர்கள் போன்று அரசியலை, தங்களின் விருப்பு வெறுப்புக்களிலிருந்து நோக்க முடியாது. அரசியலை சரியாக புரிந்துகொள்ள முற்படுவதென்றால் என்ன? கடந்தகால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு, நிகழ்காலத்தை அணுகுவதும், அதிலிருந்து எதிர்காலத்தை கையாளுவதற்கான வாய்ப்புக்களை தேடுவதும்தான் சரியானதொரு அரசியலாக இருக்க முடியும்.

ஆனால் யுத்தம் முடிவுற்று பதின்மூன்று வருடங்கள் சென்றுவிட்ட பின்னரும் கூட, தமிழ் அரசியல் சூழலில் இடம்பெறும் உரையாடல்களில் அரசியல் முதிர்சியை காணவில்லை. அனைவருமே, அதே பழைய சகதிக்குள்ளேயே மூழ்கிக்கிடக்கின்றனர். இப்போதும் துரோகி, ஒட்டுக்குழு, காட்டிக்கொடுப்பாளர், இப்படியான சொற்களைகளையே கேட்க முடிகின்றது. தமிழரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய பின்னர், நேற்றுவரையில் ஒன்றாக பயணித்தவர்களை நோக்கி, எதுவித குற்றவுணர்வுமின்றி, காட்டிக்கொடுத்தவர்கள், சந்திகளில் நின்று கொலை செய்தவர்களென்று சாதாரணமாக கூறமுடிகின்றதென்றால், தமிழ் சமூகத்தின் அரசியல் முத்திர்சியை என்னவென்பது! கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ளும் ஒரு சமூகம் இவ்வாறான போக்கை ஒரு போதுமே ஆதரிக்காது. இ;வ்வாறான சொற்களை பயன்படுத்த முற்படும் அரசியல்வாதிகளை கண்டிக்கும் போக்கை எங்குமே காணமுடியவில்லை. கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட துரோகி, காட்டிக்கொடுப்பாளர் போன்ற சொற்களின் வழியாக தமிழர்கள் சாதித்தது என்ன? நமக்குள் நாமே வெறுப்பையும் விரோதங்களையும் வளர்த்ததை தவிர, வேறு எதனை சாதிக்க முடிந்தது?

முக்கால் நூற்றாண்டு கால அரசியல் அனுபவம் நமக்குண்டு. அதற்கு முற்பட்ட, பொன்னம்பலம்களின் காலத்தை இந்தக் கட்டுரை கருத்தில்கொள்ளவில்லை. இந்த முக்கால் நூற்றாண்டில் நாம் கற்றுக்கொண்டதென்ன? செல்வநாயகம் தொடக்கம் சம்பந்தன் வரையில் பல்வேறு கோரிக்கைகள் காலத்திற்கு காலம் உச்சரிக்கப்பட்டிருக்கின்றது. தமிழ் புதிய புலிகள் தொடக்கம் தமிழீழ விடுலைப் புலிகள் வரையிலான ஆயுத விடுதலைப் போராட்ட அனுபவங்கள் நமக்கு ஏராளமான விடயங்களை கற்பித்திருக்கின்றது. தமிழரசு கட்சி மேடைகளில் ஒலித்த துரோகி தியாகிக் கதைகள் பின்னர், ஆயுத விடுதலை இயக்கங்களின் மத்தியில் துப்பாக்கிக் குண்டுகளின் வழியாக தீர்த்துக் கொள்ளப்பட்டது. ஆங்கிலப் புலமைகொண்ட, அப்புக்காத்து அரசியல்வாதிகள் பின்னர், சிறிலங்கா இராணுவத்தின் எண்ணிக்கையை விடவும் அதிகமானவர்களை கொண்டிருந்த தமிழ் ஆயுத இயக்கங்கள் அனைத்தினதும் இறுதி அடைவு என்ன? இன்று தமிழர்கள் வந்து சேர்ந்திருக்கும் இடத்தையெண்ணி பெருமைப்பட என்ன இருக்கின்றது? ஆனால் நாம் கடந்துவந்த பாதை நமக்கு போதுமான படிப்பினைகளை தந்திருக்கின்றது. இதிலிருந்து கற்றுக்கொள்வது மட்;டும்தான் நாம் செய்ய வேண்டியதாகும்.

சட்டப்புலமை, ஆங்கிலப் புலமை, இராணுவ ஆற்றல் இவையனைத்தும் இருந்தும்தானே நாம் தோல்வியுற்றிருக்கின்றோம். அப்படியானால் இவற்றையும் தாண்டி அரசியலில் சிந்திக்கும் திறன் அவசியமென்பதைத்தானே, கடந்தகாலம் நமக்கு கற்றுத்தருகின்றது.

ஏனெனில் அவைகளின் மூலம் அரசியல் சவால்களை வெற்றிகொள்ள முடியுமென்றால், ஏற்கனவே நாம் அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டல்லா இருந்திருக்க வேண்டும். இன்றைய தமிழ் தேசிய அரசியலை உற்றுநோக்கினால் ஒரு விடயம் தெளிவாகும். அதாவது, நமது அனைத்து உரையாடல்களும் தோல்விக்கு விளக்கமளிப்பதாகவும், மற்றவர்களை குற்றம்சாட்டுவதாகவுமே இருக்கின்றது. ஒரு கட்சியை பிறிதொரு கட்சி குற்றம்சாட்டுவது போன்றே, மறுபுறம், அரசாங்கத்தை குற்றம்சாட்டுவது, இந்தியாவை குற்றம்சாட்டுவது, அமெரிக்காவை குற்றம்சாட்டுவது. கடந்த பதின்மூன்று வருடகால அரசியலை உற்றுநோக்கினால் இதனைத் தவிர வேறு எதனையும் நம்மால் காணமுடியாது.

முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்த குற்றச்சாட்டுக்கள், இப்போது முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான குற்றச்சாட்டுக்களாக மாறியிருக்கின்றது. முதலில் ஒரு உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, ஈழத் தமிழர்கள் மீது எவருக்கும் தனியான பிரியங்கள் இல்லை. அப்படி தனியான ஈடுபாடு தமிழர்கள் மேல் இருந்திருந்தால், முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்திருக்காது. ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பகுதிக்குள் யுத்தம் இடம்பெற்றால் மக்கள் கொல்லப்படுவார்கள் என்பதை எவருமே அறியாமல் இருக்கவில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முடிவுக்கும் தீர்மானத்திற்கு முன்னால், ஏனைய அனைத்து விடயங்களும் இரண்டாம் பட்சமாகியது.

ஆனால் விடுதலைப் புலிகளின் முடிவுக்கு முன்னர் உலகம் சில எச்சரிக்கைகளை யாருவழங்காமலும் இருக்கவில்லை. புலிகளுக்கு முன்னால் இருந்த ஒரேயொரு தெரிவை புலிகள் நிராகரித்த போது, மற்றவர்கள், அவர்களுக்கு முன்னாலிருந்த ஒரேயொரு தெரிவை எடுத்தனர். இதில் ராஜபக்சக்கள் ஒரு கருவி மட்டும்தான். அதனை ராஜபக்சக்கள் புரிந்துகொள்ள தவறியபோது, அவர்களுக்கான நெருக்கடி ஆரம்பித்தது. இன்று பயங்ரவாதத்தை வெற்றிகொண்டதாகவும், பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு உலகிற்கே ஆலோசனை வழங்க முற்பட்ட கோட்டபாய ராஜபக்சவின் நிலையென்ன என்பதை அனைவருமே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது, ஒரு புலம்பெயர் தமிழ் புத்திஜீவி, மேற்குநாட்டு ராஜதந்திரி ஒருவருடனான உரையாடலின் போது, பரிமாறப்பட்ட விடயமொன்று வெளியாகியிருந்தது. அதாவது, மகிந்த ராஜபக்ச மேற்குலகிற்கு எதிரான நிலைப்பாடுடைய ஒருவர். அவர் முன்னெக்கும் யுதத்தை ஏன் ஆதரிக்கின்றீர்கள்- இதற்கு அந்த ராஜதந்திரி வழங்கிய பதில். இப்போது ராஜபக்ச, பிரபாகரனை பார்த்துக் கொள்ளட்டும், பின்னர் நாம் ராஜபக்சவை பார்த்துக் கொள்வோம்.

ஏனெனில் உலகிற்கு விடுதலைப் புலிகள் ஒரு விடயமல்ல. எனது முன்னைய பத்தியொன்றிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். இறுதி யுத்தத்தின் போது, ஜக்கிய நாடுகள் சபையின் பேச்சாளராக இருந்தவர், கோடன் வைஸ். தனது அனுபவங்களை தொகுத்து ‘கூண்டு’ என்னும் பெயரில் நூல் ஒன்றையும் எழுதியிருந்தார். அவர் 2011இல், வெளிவிவகார சஞ்சிகையில் புலிகளின் இரத்தம் என்னும் தலைப்பில் கட்டுரையொன்றை எழுதியிருந்தார். அதில் அவர் கூறிய விடயமொன்று, உலகை புரிந்துகொள்வதற்கு போதுமானது.

spacer.png

அவர் எழுதுகின்றார், புலிகள் இல்லாத உலகம் முன்னரைவிடவும் இப்போது சிறப்பாக இருக்கின்றது. இவ்வளவுதான், புலிகள் இயக்கதிற்கு உலகம் கொடுத்த இடம். உலகின் பார்வையில் நமது தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் அனைத்தும் பயங்கரவாதமாகும். நாம் நமக்குள் எவ்வாறான புனிதங்களையும் பாதுகாத்துக் கொள்ளலாம், ஆனால் உலகின் பார்வையோ வேறு. விடுதலைப் புலிகள் இயக்கம் வீழ்த்தப்பட்டு, அதன் தலைவர் பிரபாகரன் உயிரிழந்து, பதின்மூன்று வருடங்கள் கழிந்துவிட்ட பின்னரும் கூட, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் புலிகள் அமைப்பை இப்போதும் பயங்கரவாத பட்டிலில்தான் வைத்திருக்கின்றனர். இதிலிருந்து ஒரு விடயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, நமக்குள் நாம் துரோகியென்றும், ஒட்டுக்குழுவென்றும், காட்டிக் கொடுப்பாளர்களென்றும் அடிபட்டுக் கொண்டிருக்கும் போது, உலகமோ அனைத்தையும் பயங்கரவாதமென்னும் ஒரு சொல்லால் தூக்கியெறிந்துவிட்டது.

இன்றைய சூழலில் ஒரு புதிய தலை முறை அரசியலை கையிலெடுக்க வேண்டும். அது அரசியலை மதமாக்காத, கடந்தகாலத்தை கற்றுக்கொள்வதற்காக மட்மே பேசுகின்ற ஒரு தலைமுறையாக இருக்க வேண்டும். கடந்த காலத்தில் ஒரு விடயம் ஆதரிக்கப்பட்டது, ஏற்றுக்கொள்ளப்பட்ட என்பதற்காக, அதனை எல்லாக் காலத்திலும் காவித்திரிய வேண்டுமென்பதல்ல. நிகழ்காலத்தின் தேவைகளோடு ஒரு விடயம் பொருந்தவில்லையாயின், அது பயனற்றது. ஏனெனில் நிகழ்காலம் என்பது மட்டுமே உண்மையானது. ஏனெனில் அது மட்டுமே நம்மிடமுண்டு.

நம்மிடமுள்ள ஒன்றிலிருந்துதான் எதிர்காலத்தை நோக்க வேண்டும். இப்போதும் சிலர் வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பில் பேசுவதுண்டு. வட்டுக்கோட்டைத் தீர்மானமென்பது, 1976ஆம் ஆண்டில், அன்றைய தலைமுறை முன்வைத்த விவகாரம். அதனை கேள்விகளின்றி பிறிதொரு தலைமுறை எதற்காக சுமக்க வேண்டும்? வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்த செல்வநாயகம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, ஒரு தெளிவான புரிதலுடன் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கவில்லை. அடையும் வழிதெரியாமலேயே தனிநாட்டுக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எப்படி அடையப் போகின்றீர்களென்னும் கேள்விக்கு செல்வநாயகம் வழங்கிய பதில், நாங்கள் ஒரு நிலைப்பாட்டை முன்வைக்கின்றோம், அவர்கள் எங்களை வெளியில் வீசிவிடுவார்கள். ஆனால் நடந்ததோ வேறு. செல்வநாயகத்தின் தவறால், ஒரு தலைமுறையே அழிந்து போயிருக்கின்றது ஆனால் செல்வநாயகத்தின் குடும்ப வழித்தோன்றல்களோ நிலத்திலேயே இல்லை.

ஓரு தலைமுறை தெளிவான வேலைத்திட்டமற்று முன்வைத்த கோரிக்கைளை, எதற்காக பிறிதொரு தலைமுறை சுமக்க வேண்டும்? அரசியலை இந்த அப்படையில்தான் இளைய தலைமுறை புரிந்துகொள்ள வேண்டும். அவர் கூறினார் – இவர் கூறினார் என்பதற்காகவெல்லாம் கடந்தகாலத்தின் நிலைப்பாடுகளை நிகழ்காலத்தில் சுமக்க முற்படக் கூடாது.

யுத்தமில்லாத கடந்த பதின்மூன்று வருடங்களை உற்று நோக்கினால் ஒரு விடயம் தெளிவாகும். அதாவது, அரசியல் தீர்வு தொடர்பில் முன்னோக்கி பயணிக்க முடியவில்லை. தமிழர்கள் என்னதான் சத்தங்களை எழுப்பினாலும் கூட. ஒரு கட்டத்திற்கு மேல் போக முடியாதென்னும் நிலைமையே காணப்படுகின்றது. ஏன் முடியவில்லையென்னும் கேள்விக்கு சிலரிடம் இருக்கும் ரெடிமெட் பதில், இந்தியாவிற்கு கரிசனையில்லை. இந்தியாவிற்கு கரிசனையில்லையென்றால், இன்னொன்றை தெரிவு செய்து கொண்டு, தமிழர்கள் முன்னோக்கி செல்வதில் என்ன தடையுண்டு? இந்தியா அதன் நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்த பின்னர், இந்தியாவிற்கு கரிசனையில்லையென்று கூறுவதில் என்ன பொருளுண்டு.

1987இல் இந்தியா காண்பித்த கரிசனை ஏன் பிற்காலத்தில் இல்லாமல் போனது? இதற்கு யார் காரணம்? இந்தியாவின் கரிசனை தொடர்பில் பேசுபவர்கள், மறுபுறம் அதற்கான காரணங்களை முன்வைப்பதில்லை. இன்றைய சூழலில் இந்தியா ஆகக் குறைந்தது, 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் கரிசனையுடன் இருப்பதே பெரிய விடயம். இந்தியாவின் ஆகக் குறைந்த கரிசனையை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாமென்றுதான் தமிழ் தரப்புக்கள் சிந்திக்க வேண்டும். ஏனெனில் அதுவுமில்லையென்றால், தமிழர்களின் நிலைமை வேலியால் விழுந்தவரை மாடு ஏறிமிதித்த கதையாகிவிடலாம். இந்தியாவின் இந்தக் கரிசனை கூட தொடருமென்றும் எதிர்பார்க்க முடியாது.

இருபது வருடங்கள் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகள் வெளியேறின. அமெரிக்க ஆதரவு ஆப்கான் ஜனாதிபதி நாட்விட்டு ஓடிவிட்டார். ஆப்கான் மீண்டும் தலிபான்கள் வசமானது. இது தொடர்பில் ஊடவியலாளர் ஒருவர் அமெரிக்க ஜனதிபதி பைடனை கேட்கின்றார். மீண்டும் தலிபான்களிடம் ஆப்கானிய மக்கள் சிக்குப்பட்டுவிட்டார்களே! அதற்கு பைடனின் பதில் – ஆப்கானியர்களுக்கே, ஆப்கானிஸ்தானில் அக்கறையில்லாவிட்டால், அதற்கு நாம் என்ன செய்வது? – ஆப்கானியர்களுக்காக அமெரிக்க படைகள் செத்துக் கொண்டிருக்க முடியாது. தமிழர்களின் நிலைமையும் இப்படித்தான். விடயங்களை தமிழர்கள் கையாளவிட்டால், இப்போதுள்ள ஓரளவு கரிசனையையும் ஏனையர்கள் கைவிட்டுவிடுவார்கள்.

கடந்த கால அனுபவங்களிலிருந்து சிந்தித்தால் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் மிகவும் கையறு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. இன்னும் பத்து வருடங்களுக்குள் விடயங்களை கையாளாவிட்டால், 13வது திருத்தச்சட்டம் கூட, தமிழர்களுக்கு இல்லாமல் போகலாம். அது அரசியலமைப்பில் இருக்கும், ஆனால், அது அவ்வப்போது உச்சரித்துவிட்டுப் போகும் விடயமாகிவிடலாம். இறுதியில் தமிழர்களுக்கு எதுவுமே இல்லாமல் போகும். தமிழ் தேசிய அரசியலென்பது, இறுதியில், நல்லூர் கோவிலடி அரட்டையாக மாறிப்போகும். ஆண்டுகொரு, ஆர்ப்பாட்டம், சிவில் சமூக அறிக்கையுடன் அரசியல் சுருங்கிப்போகும்.

 

http://www.samakalam.com/இன்னும்-பத்து-வருடங்களின/

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.