Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவல் சர்வதேச புக்கர் பரிசின் பரிசீலனைப் பட்டியலில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவல் சர்வதேச புக்கர் பரிசின் பரிசீலனைப் பட்டியலில்

பெருமாள் முருகன்

பட மூலாதாரம்,PERUMAL MURUGAN

 
படக்குறிப்பு,

பெருமாள் முருகன்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 14 மார்ச் 2023, 13:07 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சர்வதேச புக்கர் பரிசின் பரிசீலனைப் பட்டியலில் பெருமாள் முருகன் எழுதிய பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Pyre நாவல் இடம்பெற்றுள்ளது. தமிழில் எழுதப்பட்ட நாவல் ஒன்று இந்தப் பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதல் முறை.

சர்வதேச புக்கர் பரிசு ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு மொழியில் எழுதப்பட்டு, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பிரிட்டனிலும் அயர்லாந்திலும் பதிப்பிக்கப்படும் சிறுகதைத் தொகுப்பிற்கோ, நாவலுக்கோ வழங்கப்படுகிறது. பரிசைப் பெறும் நாவலுக்கு விருதுத் தொகையாக 50 ஆயிரம் பவுண்டுகள் வழங்கப்படும். அதை கதாசிரியரும் மொழிபெயர்ப்பாளரும் சமமாகப் பகிர்ந்து கொள்வார்கள்.

 

சர்வதேச புக்கர் பரிசு அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, அந்தப் பரிசுக்கான பரிசீலனைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் நாவல்களின் பட்டியல் வெளியிடப்படும். அது Longlist என அழைக்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெறுவதே, மிகப் பெரிய கௌரவமாகக் கருதப்படுகிறது.

 

2023ஆம் ஆண்டின் சர்வதேச புக்கர் விருதுக்கான பரிசீலனைப் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 11 மொழிகளில் எழுதப்பட்ட 13 நாவல்கள் இந்த முறை அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தமிழில் எழுதப்பட்டு மொழிபெயர்க்கப்பட்ட Pyre, சீன மொழியில் எழுதி மொழிபெயர்க்கப்பட்ட Ninth Building, ஸ்வீடிஷ் நாவலான A System So Magnificent It Is Blinding உள்ளிட்ட நாவல்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தமிழ், பல்கேரியா, கேடலான் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட புனைவுகள் இந்த பரிசீலனைப் பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதல்முறை.

பெருமாள் முருகனின் 'பூக்குழி' நாவல் கல்கி வார இதழில் தொடராக வெளிவந்த ஒரு நாவல். காலச்சுவடு இதனை நூலாக வெளியிட்டது.

தனது கிராமத்தைவிட்டு வெளியேறி வேலைபார்க்கும் இளைஞனான குமரேசன், தான் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் வசிக்கும் சரோஜாவைக் காதலித்து, திருமணம் செய்துகொள்கிறான். இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். சரோஜா பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்.

பெருமாள் முருகன்

ஒரு கட்டத்தில் தன் சொந்த ஊருக்கு குமரேசன் சரோஜாவை அழைத்து வருகிறான். கடுமையான ஏழ்மையில் வாழ்ந்தாலும் ஜாதிப் பெருமிதத்துடன் வாழும் குமரேசனின் தாயார், இந்தத் திருமணத்தை ஏற்கவில்லை. தன் தாயிடமும் ஊராரிடமும் தனது மனைவியின் ஜாதியைச் சொல்லாமல் தொடர்ந்து மறைத்து வருகிறான் குமரேசன். ஒரு தருணத்தில் சரோஜாவின் ஜாதி தங்களைவிட சமூகப் படிநிலையில் கீழே உள்ள ஜாதி எனத் தெரிந்துவிட, ஊரே அவளைக் கொல்ல முயல்கிறது. பிறகு சரோஜாவும் குமரேசனும் என்ன ஆனார்கள் என்பதே இந்த நாவலின் மீதிக் கதை.

"ஆணவக் கொலைகளில் பல கோணங்கள் உண்டு. ஆண் - பெண் ஆகிய இருவரில் யார் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எதுவும் நடக்கலாம். கடைசியில் அந்தப் பெண் என்ன ஆனாள் என்பதைத் தெளிவில்லாமல், நம்பிக்கையூட்டும்விதமாக முடித்திருப்பேன். நான் இந்த நாவலைக் கல்கியில் தொடராக எழுதிக்கொண்டிருந்தபோதுதான் தருமபுரியில் இளவரசனின் மரணம் நிகழ்ந்தது. ஆகவே, இந்த நாவல் புத்தகமாகும்போது, அதை இளவரசனுக்கே சமர்ப்பித்தேன்" என பிபிசி தமிழிடம் கூறினார் பெருமாள் முருகன்.

தமிழில் எழுதப்பட்ட நாவல் இந்தப் பட்டியலில் இடம்பெறுவது தமிழுக்கே மிக முக்கியமான விஷயம் என்கிறார் அவர். "நம் படைப்புகளை ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் கொண்டு செல்லும்போது மட்டும்தான் இப்படியான அங்கீகாரம் கிடைக்கும்.

அந்த அளவுக்கு தகுதியும் தரமும் நம்மிடம் உள்ளது. ஆனால், அப்படிக் கொண்டுசெல்வதில் நம்மிடம் பெரும் சுணக்கம் இருக்கிறது. அதைக் கடந்து கொண்டுசென்றால் இம்மாதிரியான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்" என்கிறார் பெருமாள் முருகன்.

பெருமாள் முருகன்

'பூக்குழி' நாவலை அனிருத் வாசுதேவன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, முதலில் பென்குயின் வெளியிட்டது. பிரிட்டனில் இதனை புஷ்கின் பிரஸ் வெளியிட்டது.

இந்த நாவலை, பிற மொழிகளுக்குக் கொண்டு செல்வதில் முக்கியப் பங்கு வகித்தவர் 'பூக்குழி' நாவலை தமிழில் வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளரான கண்ணன்.

"எந்த ஒரு படைப்பும் இந்தியாவில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பிரசுரமானாலும் இந்தப் பட்டியலில் இடம்பெற வாய்ப்பில்லை. அந்தப் படைப்பு பிரிட்டனிலும் அயர்லாந்திலும் பதிப்பிக்கப்பட வேண்டும். ஆகவே, இது தனியாக நடக்காது. புரொஃபஷனல்கள் இந்த முயற்சியில் இணைய வேண்டும். பதிப்புரிமைகள் சரியான முறையில் விற்கப்பட வேண்டும். அப்படிச் செய்யும்போதுதான் இதுபோன்ற பரிசுப் பட்டியலில் இடம்பெற முடியும்" என்கிறார் கண்ணன்.

2022ஆம் ஆண்டு மே 1ஆம் தேதியிலிருந்து 2023 ஏப்ரல் 30ஆம் தேதி வரை வெளியான 134 புத்தகங்களில் இருந்து இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து 6 புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டு (Shortlist) ஏப்ரல் 18ஆம் தேதி லண்டன் புத்தகக் கண்காட்சியில் அறிவிக்கப்படும்.

மே 23ஆம் தேதி லண்டனில் நடக்கும் விழாவில் தி இன்டர்நேஷனல் புக்கர் பரிசைப் பெறும் புத்தகம் அறிவிக்கப்படும். கடந்த ஆண்டு கீதாஞ்சலி ஸ்ரீ எழுதி, டெய்சி ராக்வெல் மொழிபெயர்த்த Tomb of Sand நாவலுக்கு இந்தப் பரிசு கிடைத்தது. இந்தியில் எழுதப்பட்ட நாவல் ஒன்றுக்கு இந்தப் பரிசு கிடைத்தது, அதுவே முதல் முறை.

https://www.bbc.com/tamil/articles/c80xly7wp96o

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புக்கர் பரிசு பரிசீலனையில் 'பூக்குழி' நாவல்: இதை எழுத தூண்டியது எது? - எழுத்தாளர் பெருமாள் முருகன்

பெருமாள் முருகன் பேட்டி
 
படக்குறிப்பு,

எழுத்தாளர் பெருமாள் முருகன்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சர்வதேச புக்கர் விருதின் நெடும் பட்டியலில் தமிழ் எழுத்தாளரான பெருமாள் முருகனின் பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இடம்பெற்றிருக்கிறது.

இந்நிலையில், அந்த நாவல், தன்னுடைய இலக்கியப் பயணம், தன் மீது தாக்கம் செலுத்திய படைப்புகள், அரசியல் பார்வைகள், மாதொருபாகன் பிரச்னை ஆகியவை குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார் பெருமாள் முருகன். அந்தப் பேட்டியிலிருந்து.

கேள்வி: எழுத்துலகுக்குள் நீங்கள் எப்படி வந்தீர்கள்? உங்கள் பின்னணி என்ன? ஆரம்பக்கட்டத்தில் உங்களை எழுதத் தூண்டியவர்கள் யார்?

பதில்: எழுத்துக்கான பின்னணி என்று எனக்கு ஏதும் கிடையாது. நான் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னுடைய தலைமுறைதான் முதன்முதலாக பள்ளிக்கூடம் சென்று எழுத்தறிவு பெற்றவர்கள்.

 

என்னுடைய பரம்பரையிலேயே யாருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. எங்கள் குடும்பத்தில் பள்ளிப் படிப்பை முடித்து உயர் கல்விக்குப் போன முதல் ஆள் நான்தான். ஆகவே, என் எழுத்துக்கான பின்னணி குடும்பத்திலிருந்து வந்ததாகச் சொல்ல முடியாது.

ஏழெட்டு வயதிலிருந்தே எனக்கு வாசிப்பில் ஆர்வம் இருந்தது. ஆனால், படிப்பதற்கு புத்தகங்கள் கிடைக்காது. பாடப் புத்தகங்கள் மட்டும்தான் கிடைக்கும். அவற்றை மனப்பாடம் செய்துவிடுவேன். என் அம்மா வீட்டிற்கு வாங்கிவரும் பொருட்கள் கட்டிக் கொடுக்கப்படும் பேப்பர்களை வாசிப்பேன். அந்த ஆர்வம் எதிலிருந்து வந்தது என்பது எனக்குத் தெரியவில்லை.

என்னுடைய பெரியம்மா வீட்டில் ராணி, குமுதம் போன்ற இதழ்களை வாங்குவார்கள். அதைப் படிப்பதற்காகவே நான் அங்கே செல்வேன். அப்படித்தான் என் வாசிப்பு ஆர்வம் வந்தது. அதிலிருந்துதான் எழுத்து மீதும் ஆர்வம் வந்தது.

கேள்வி: சர்வதேச புக்கர் விருதுப் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றிருப்பது குறித்து எப்படி உணர்கிறீர்கள். விருது கிடைக்கும் பட்சத்தில் அது உங்களுக்கு என்ன மாதிரியான வெற்றியாக இருக்கும்?

பதில்: இந்த மாதிரி ஒரு சர்வதேச விருதுப் பட்டியலில் என் நாவல் வந்திருப்பது எதிர்பாராத விஷயம். நான் இதை எதிர்பார்க்கவில்லை. எவ்வளவு வலுவான படைப்பாக இருந்தாலும் அதை ஆங்கிலம் வழியாக உலகிற்குக் கொண்டு சேர்ப்பது முக்கியம்.

அந்த விஷயத்தை எனது பதிப்பாளரான காலச்சுவடு கண்ணன் சிறப்பாகச் செய்தார். என்னுடைய புத்தகம் என்று இல்லை, காலச்சுவடில் வெளியிடக்கூடிய அனைத்து எழுத்தாளர்களுடைய நூல்களையுமே ஆங்கிலத்தில், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் கொண்டு செல்கிறார். அதில் வெற்றிபெறும் படைப்புகள் கவனம் பெறத்தான் செய்யும்.

அதுபோல பலருடைய படைப்புகளை நாம் ஆங்கிலத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமென நினைக்கிறேன். அப்படி கொண்டு சென்றால், உலகில் உள்ள பல மொழி இலக்கியங்களுக்கு நிகராக தமிழ் இலக்கியம் இருக்கும்.

அதற்கான வாய்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளன. என்னுடைய படைப்புகள் அப்படிச் சென்றதால் கவனம் பெற்றிருக்கிறது. என்னுடைய புத்தக மொழிபெயர்ப்பு அமெரிக்காவுக்கு சென்றதால், அந்நாட்டின் நேஷனல் புக் அவார்டின் நெடும் பட்டியலில் பூனாச்சியும் மாதொரு பாகனும் இரண்டு முறை இடம்பெற்றிருந்தன. அதெல்லாம் மிகப் பெரிய விஷயம்.

பெருமாள் முருகன் பேட்டி

என்னுடைய படைப்புகள் ஆங்கிலத்தில் செல்ல ஆரம்பித்த சில காலத்திலேயே அந்தப் படைப்புகள் ஆங்கில வாசகர்களுக்கு ஈர்ப்புடையதாக இருக்கிறது என்பதைக் கண்டுகொள்ள முடிந்தது.

2004ஆம் ஆண்டிலேயே என்னுடைய இரண்டு நாவல்கள் ஆங்கிலத்தில் வெளிவந்தன. வெளியிட்டது ஒரு சிறிய பதிப்பகம்தான் என்றாலும், அது கவனிக்கப்பட்டது. நிறைய மதிப்புரைகள் வெளியாயின. 2010க்குப் பிறகு பல படைப்புகள் அதுபோல வெளியாகின. அது பரவலான வாசகர்களைச் சென்றடைந்தபோது, எனக்கு மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்தது.

உலகம் முழுவதும் புகழ்பெற்ற படைப்புகளைப் பார்த்தால், அதற்கு நிகரான படைப்புகள் தமிழில் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

கேள்வி: உங்களுடைய ஒவ்வொரு நாவலுக்கும் பின்னால், ஒவ்வொரு சிறுகதைக்கும் பின்னால் ஒரு தூண்டுதல் இருக்கும். பூக்குழி என்ற இந்த நாவலை எழுத் தூண்டியது எது?

பதில்: இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஏற்பட்ட சமூகச் சூழல்தான் இதற்குக் காரணம். அதற்குப் பிறகுதான் ஆணவக் கொலை குறித்து ஊடகங்களில் பேச்சுகள் வர ஆரம்பித்தன. அரசியல் கட்சிகளும் அந்தத் தருணத்தில் பேச ஆரம்பித்தன. முதலில் கௌரவக் கொலை என்று சொன்னார்கள். பிறகு ஆணவக் கொலை என்று ஆனது. ஒட்டுமொத்த சமூகமும் அந்தச் சொல் மாற்றத்தை ஏற்றுக்கொண்டது.

இதற்குப் பிறகு, சாதி மாறி காதலிப்பவர்களைத் துன்புறுத்துபவர்கள் பற்றிய செய்திகள் வெளிப்படையாக வர ஆரம்பித்தன. இதற்கு முன்பாக இதெல்லாம் நடக்காமல் இல்லை. பல காலமாக நடந்த விஷயம்தான் இது.

19, 20ஆம் நூற்றாண்டுகளில் இதுபோல சாதிக்கு வெளியில் காதலித்தவர்கள் இங்கே வாழ முடியாது என்பதால் கப்பலேறிச் சென்று, வெளிநாடுகளில் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களாக வேலை பார்த்திருக்கிறார்கள்.

இதுபோன்று பல சம்பவங்கள், எங்கள் கிராமம் சார்ந்தே தெரியும். இதிலிருந்து ஒரு விஷயத்தை எடுத்து ஏன் எழுதக்கூடாது என்று தோன்றியது. அந்தத் தருணத்தில் கல்கியின் ஆசிரியராக இருந்த வெங்கடேஷ், வட்டார வழக்கில் ஒரு நாவலைத் தொடராக எழுத முடியுமா என்று கேட்டார்.

நான் வெகுஜன பத்திரிகைகளில் தொடர்கதை எழுதியதில்லை. நிறைய கட்டுப்பாடுகள் இருக்குமென நினைத்துத் தயங்கினேன். ஆனால், அப்படி கட்டுபாடுகள் ஏதும் இல்லை என்று சொல்லி அவர் ஊக்கப்படுத்தினார். அந்த நேரத்தில் தர்மபுரியில் இளவரசன் - திவ்யா பிரச்னை தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. ஆகவே, அந்தத் தருணத்தில் இந்தக் கதையை எழுத ஆரம்பித்தேன்.

பெருமாள் முருகன் பேட்டி

கேள்வி: நாவலையோ, சிறுகதையையோ எழுதும்போது முதல் வரைவையே பதிப்பிப்பீர்களா அல்லது தொடர்ந்து செம்மைப்படுத்துவீர்களா?

பதில்: திரும்பத் திரும்ப அதைத் திருத்த மாட்டேன். ஒரு முறை எழுதிவிட்டால், 10 நாள் இடைவெளி விட்டு மீண்டும் படித்துப் பார்ப்பேன். திரும்ப சேர்க்கத் தோன்றும். சிலவற்றை மாற்றத் தோன்றும். அந்தத் திருத்தங்களைச் செய்வேன். அவ்வளவுதான்.

ஏனென்றால், நான் எழுத ஆரம்பிப்பதற்கு முன்பாகவே என்ன எழுதப்போகிறோம் என்பது முழுவதும் உருவம் பெற்றுவிடும். அதற்குப் பிறகுதான் நான் எழுத ஆரம்பிப்பேன். எழுதும்போது சில மாற்றங்கள் வரும், புதிதாக கதாபாத்திரங்கள் உருவாகும். சில எதிர்பாராத உரையாடல்கள் வரும். ஆனால், ஒரு முழுமையான வடிவம் முன்பே வந்துவிடும். ஆகவே முதல் முறை எழுதும்போதே, ஒரு செம்மையான வடிவமாக இருக்கும். ஆகவே இரண்டாவது முறை திருத்துவது மிக மேலோட்டமானதாகத்தான் இருக்கும். அதுவே போதுமானது.

கேள்வி: உங்களுடைய படைப்புகள் மொழிபெயர்ப்பார்கள் மூலமே பிற மொழிபெயர்ப்பாளர்களைச் சென்றடைகிறது. இந்த மொழிபெயர்ப்பு என்பது எப்படி நடக்கிறது. நீங்கள் மொழிபெயர்ப்பாளர்களைத் தேர்வு செய்கிறீர்களா அல்லது அவர்கள் உங்களை அணுகுகிறார்களா அல்லது பதிப்பாளர்கள் முடிவுசெய்கிறார்களா?

பதில்: இது பல விதங்களில் நடக்கும். என்னுடைய படைப்புகளில் முதன்முதலில் கூளமாதாரியும் நிழல்முற்றமும்தான் ஆங்கிலத்தில் வெளிவந்தன. அதை மொழிபெயர்க்கத் தேர்வு செய்தவர் வ. கீதா.

நான் கூளமாதாரி எழுதுவதற்கு முன்பே, அதன் ஒரு பகுதியைப் படித்துவிட்டு, இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம் என்றார். நான் அதை எழுதி முடிக்க சில காலம் எடுத்துக்கொண்டேன். அவர் அதற்கிடையில் நிழல் முற்றம் நாவலை மொழிபெயர்த்துவிட்டார்.

அதற்குப் பிறகு மாதொருபாகன் வெளிவந்தவுடன் படித்துவிட்டு, அனிருத்தன் வாசுதேவன் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதாக இருந்தால் நான் செய்கிறேன் என்றார். அதேபோல செய்தார். தொடர்ந்து ஐந்து நாவல்களை அவர் மொழிபெயர்த்தார்.

பெருமாள் முருகன் பேட்டி

சில நேரங்களில் பதிப்பாளர் கண்ணன் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு சில பேரைப் பரிந்துரைத்து, அந்தப் பணி நடந்ததும் உண்டு. நந்தினி, நந்தினி கிருஷ்ணன் ஆகியோர் அப்படித்தான் செய்தார்கள்.

ஆங்கிலத்தில் இதுபோல நாம் தேர்வுசெய்யலாம். ஆனால், மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் அந்தந்தப் பதிப்பாளர்களே மொழிபெயர்ப்பாளர்களைத் தேர்வுசெய்கிறார்கள்.

கேள்வி: வட்டார வழக்கில் ஒரு நாவலை எழுதிய பிறகு அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது பல கடினமான தருணங்கள் இருக்கும். அப்போது மொழிபெயர்ப்பாளர்களுடன் எப்படிப் பணியாற்றுகிறீர்கள்?

பதில்: நிறைய மொழிபெயர்ப்பாளர்கள் என்னுடன் பேசுவார்கள். அல்லது மின்னஞ்சல் மூலமாகத் தொடர்புகொள்வார்கள். அவர்கள் மொழிபெயர்க்கும்போது சந்தேகம் ஏற்படக்கூடிய இடங்கள், சொற்கள் ஆகியவற்றைக் குறித்து வைத்துக்கொள்வார்கள். அதற்குப் பிறகு மொத்தமாகக் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்வார்கள்.

எனது படைப்பு இத்தாலியில் மொழிபெயர்க்கப்பட்டது. அந்த மொழிபெயர்ப்பாளர் இந்தியா வந்தபோது என்னைச் சந்திக்க நாமக்கல்லுக்கே வந்தார். அவர் பெரிய பட்டியலையே எடுத்து வந்தார். அந்த சந்தேகங்களையெல்லாம் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொண்டார். அதேபோல, செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டபோதும் இதுபோலத்தான் நடந்தது.

கேள்வி: உங்களுடைய நிறைய படைப்புகள் வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. உங்களுடைய முந்தைய தலைமுறைக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இடையில் என்ன நடந்தது? இது எப்படி சாத்தியமானது?

பதில்: என்னுடைய அனுமானத்தின்படி பார்த்தால், புத்தகச் சந்தை விரிவடைந்திருக்கிறது. ஆர்.கே. நாராயணன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர். ஜெமினி ஸ்டுடியோவுக்கு ஒரு திரைக்கதையை தமிழில் எழுதிக் கொடுத்திருக்கிறார் என அசோகமித்திரன் ஓரிடத்தில் கூறுகிறார்.

ஆகவே ஆர்.கே. நாராயணன் தமிழில் எழுதத் தெரிந்தவர்தான். இருந்தபோதும் அவர் ஆங்கிலத்தில் எழுதுவதையே தேர்வு செய்தார். ஆங்கிலத்தில் எழுதினால்தான் நீங்கள் முழுநேர எழுத்தாளராக இருந்து வாழ முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், 1990களுக்குப் பிறகு மொழிபெயர்ப்புகளுக்கு ஒரு சந்தை உருவாகியிருக்கிறது.

உலகமயமாக்கம் நடந்த பிறகு எல்லா சமூகங்களுக்கும் தம் பண்பாடு, தம் மொழி, கலாசாரம் ஆகியவற்றைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆகவே எல்லோருமே தங்கள் பண்பாட்டையும் வேரையும் தேடக் கூடியவர்களாக மாறினார்கள்.

அப்படித் தேடுவது ஆங்கிலத்தில் சாத்தியமானபோது, ஆங்கில எழுத்துகளுக்கான சந்தை அதிகரித்தது. அதேபோல, ஒவ்வொரு மொழியிலும் புத்தகச் சந்தையின் மதிப்பு கூடியிருக்கிறது. அதனால்தான், இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன.

பெருமாள் முருகன் பேட்டி

கேள்வி: இதுபோன்ற வாய்ப்புகள் முன்பே இருந்திருந்தால், இந்த எழுத்தாளர்கள் எல்லாம் உலகப் புகழ் பெற்றிருப்பார்கள் என்று கருதக்கூடிய தமிழ் எழுத்தாளர்கள் யார் என நினைக்கிறீர்கள்?

பதில்: நிறைய பேரை அப்படிச் சொல்ல முடியும். சிறுகதைகளை எடுத்துக்கொண்டால் உலகத் தரத்திற்கு எழுதியவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.

புதுமைப்பித்தன், கு.பா.ரா. போன்றவர்களின் எழுத்துகள் அவர்களது சமகாலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால், மிகுந்த கவனம் பெற்றிருக்கும். அதேபோல, நாவல்களை எடுத்துக்கொண்டால் முதல் நாவலே சிறப்பான நாவல்தான்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் இப்போதும் சுவாரஸ்யமான நாவலாக இருக்கிறது. அது ஆங்கிலத்தில் வந்திருந்தால் மிகப் பெரிய கவனம் பெற்றதாக மாறியிருக்கும். அம்மாதரி ஒரு பட்டியலை எடுத்தால அது நீண்ட பட்டியலாக இருக்கும்.

கேள்வி: நீங்கள் எழுத வரும்போது உங்களை மிகவும் பாதித்த எழுத்துகள் யாருடையவை?

பதில்: அப்படி குறிப்பாகச் சொல்லக்கூடிய படைப்புகள் ஏதும் இல்லை. சினிமாவிலும் எழுத்திலும் நான் எல்லோருடைய படைப்புகளையும் வாசிப்பேன். சில படைப்புகள் பிடிக்கும். சில பிடிக்காது.

குறிப்பாக நான் கற்றுக்கொண்ட படைப்பாக ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், ஆர். சண்முகசுந்தரத்தின் படைப்புகளைச் சொல்லலாம். அவர் திருப்பூர் மாவட்டம் கீரனூரைச் சேர்ந்தவர். அவர் இந்தப் பகுதியின் வாழ்வை எழுதியவர்.

1950களுக்குப் பிறகுதான் இந்தப் பகுதி சற்று நீர்வளம் மிக்கதாக மாறியது. அதற்கு முன்பாக இது முழுக்க முழுக்க முல்லை நிலம்தான். அந்த வாழ்க்கையை ஆர். சண்முகசுந்தரம்தான் எழுதியிருந்தார். நாகம்மாள், சட்டி சுட்டது என இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். 150 நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.

அவருடைய நாவல்களைப் படிக்கும்போது, என் தாத்தா, பாட்டி சொல்லும் விஷயங்கள் அதில் இருந்தன. அதில் கற்றுக்கொள்வதற்கு எனக்கு நிறைய இருந்தன. அவருடைய தொடர்ச்சியைத்தான் நான் எழுத வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. நான் எழுத ஆரம்பித்தபோதே இந்த உணர்வு வந்துவிட்டது.

பெருமாள் முருகன் பேட்டி

கேள்வி: நாவல், சிறுகதை, கவிதை ஆகிய மூன்றில் உங்களுக்கு ரொம்பவும் வசதியாக இருப்பது எது?

பதில்: அணுக்கமானது என்றால் கவிதைதான். நான் சிறுவயதில் இருந்தே கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். கொஞ்சாம் பின்னால்தான் சிறுகதை, நாவல்களை எழுத ஆரம்பித்தேன். அதற்குப் பிறகும் நான் தொடர்ந்து கவிதை எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.

கவிதையைப் பொறுத்தவரை, மிகப் பெரிய மன அழுத்தத்தில் இருந்து விடுபட கவிதைதான் உதவுகிறது. நாவலும் சிறுகதையும் எழுத பயிற்சி வேண்டும். சில ஒழுங்குகள் தேவை. ஆனால், கவிதை இயல்பாகத் தோன்றக் கூடியது. அந்தத் தருணத்தில் எழுதி வைத்தால் போதும். ஆகவே அதுதான் எனக்கு மிக நெருக்கமானது.

கேள்வி: மாதொரு பாகன் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அப்போது நடந்த சம்பவங்கள், அந்தச் சம்பவங்களுக்குப் பிறகான உங்கள் எழுத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியதா?

பதில்: மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தத் தாக்கம் எனக்கு மட்டுமல்ல, தமிழ் எழுத்தாளர்கள் அனைவருக்குமே ஏற்பட்டிருக்குமென நினைக்கிறேன். அதற்குப் பிறகு தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளில் சாதிப் பெயரைப் பயன்படுத்தவே பயந்தார்கள்.

பலர் என்னிடமே சொன்னார்கள். என்னிடமும் அந்த சம்பவம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்கு முன்பு சாதி சார்ந்தும் மதம் சார்ந்தும் கடவுள் பற்றியும் இயல்பாக எழுதிக்கொண்டிருந்தேன். இனிமேல் அப்படி எழுத முடியாது என்பது மட்டுமல்ல, வாழவே முடியாது என்ற நிலை ஏற்படும்போது அது தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்காது.

என்னுடைய படைப்புகள் அடுத்தடுத்த பதிப்புகள் வெளியானபோது சாதிப் பெயர்கள், ஊர்ப் பெயர்களை எல்லாம் நீக்கிவிட்டேன் அல்லது மாற்றிவிட்டேன். இப்போது புதிய படைப்புகளில் சாதிப் பெயரை பயன்படுத்துவதே இல்லை. அதுபோக, என்னுடைய புதிய படைப்புகளில் அசுர இனத்தைப் பற்றி எழுதுவதாகத்தான் கூறுகிறேன். குமராசுரன், மங்காசுரி என்றுதான் பெயரை வைக்கிறேன். அப்படி எழுதினால் சுதந்திரமாக எழுத முடியும் எனத் தோன்றுகிறது.

கேள்வி: இந்தப் பிரச்னை எழுந்தபோது பிற எழுத்தாளர்கள் குறிப்பாக தமிழ் எழுத்தாளர்களின் எதிர்வினை என்னவாக இருந்தது?

பதில்: தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் உலக அளவிலும் பெரும் எதிர்வினை இருந்தது. அந்த எதிர்வினைகள்தான் என்னை மீட்டுக் கொண்டு வந்தன என நினைக்கிறேன். நான் வாழ்ந்த நாமக்கல் பகுதியில் பெரிய ஆதரவுத் தளம் உருவாகவில்லை.

ஆதரவாக இருந்தவரும் அஞ்சும் சூழல்தான் இருந்தது. அவர்களுக்கு ஆபத்து வந்துவிடும் என்பதால், வெளிப்படையாகக் கருத்து சொல்ல வேண்டாம் என்றுகூடச் சொன்னேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் இதை பெரிய அளவுக்கு எடுத்துச் சென்றார்கள். நிறைய கூட்டங்கள் நடத்தினார்கள். ஊடகங்கள் ஆதரவாக இருந்தன.

அதே நேரம், இதெல்லாம் நாவலே இல்லை என்று சொல்லக் கூடியவர்களும் இருந்தார்கள். கேரளாவில் தமிழ்நாட்டைவிட அதிகமான கூட்டங்கள் நடந்திருக்கின்றன. அந்த அளவுக்கு ஆதரவு இருந்தது.

பெருமாள் முருகன் பேட்டி

பட மூலாதாரம்,PERUMAL MURUGAN

கேள்வி: தமிழில் தீவிரமாக எழுதும் எழுத்தாளர்களில் சினிமாவை, தமிழ்ச் சமூகத்தின் ஒரு அங்கமாக அணுகியவர்களில் மிக முக்கியமானவர் நீங்கள். அதுகுறித்து நாவல், சிறுகதை, கட்டுரைகள் என எழுதியிருக்கிறீர்கள். சினிமாவை நேர்மறையாக அணுகுகிறீர்கள். அந்தப் பார்வை எப்படி உருவானது?

பதில்: என் தந்தை ஒரு திரையரங்கில் கடை வைத்திருந்தார். அதனால், சிறு வயதிலிருந்தே எனக்கு சினிமா பார்க்கும் வாய்ப்பு இருந்தது. அதில் எனக்கு ஆர்வமும் இருந்தது. திரைப்படத்திற்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் உள்ள தொடர்பு சிறு வயதிலேயே எனக்குப் புரிய ஆரம்பித்தது.

மனஓசை என இடதுசாரி பத்திரிகை ஒன்று இருந்தது. அதில் சுரேஷ் என்று ஒரு தோழர் இருந்தார். அவர்தான் திரைப்படங்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்ற பார்வையை உருவாக்கிக் கொடுத்தார். திரைப்படங்களை விட்டுவிட்டு தமிழ்ச் சமூகத்தைப் பார்க்க முடியாது.

எடுத்துக்காட்டாக எனது அப்பா. திரைப்படங்களை விட்டுவிட்டு எனது தந்தையை நினைத்துப் பார்க்கவே முடியாது. அவர் வாழ்வோடு சினிமா அவ்வளவு கலந்திருந்தது. நானும் என் படைப்புகளில் காலத்தைச் சொல்வதற்கு சினிமாவையே பயன்படுத்துவேன். மாதொரு பாகன் எந்தக் காலம் என்று கேட்பார்கள். அதை உன்னிப்பாகக் கவனித்தால், அது ஸ்ரீவள்ளி படம் வெளிவந்த காலம் என்பது புலப்படும்.

கேள்வி: தமிழ் சமூகத்தில் சினிமா எம்மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனக் கருதுகிறீர்கள்?

பதில்: தமிழ்ச்சமூகத்தின் சிந்தனை முறையை சினிமா பெரிய அளவுக்கு பாதித்திருக்கிறது. 2000க்கு அப்புறம் ஏற்பட்ட பாதிப்பும் அதற்கு முந்தைய பாதிப்பும் வெவ்வேறானது. இப்போது உலகத் திரைப்படங்களை பார்க்கும் வாய்ப்பு எளிதாகக் கிடைக்கிறது.

வெவ்வேறு வடிவங்களில் நாம் படங்களைப் பார்க்கத் துவங்கிவிட்டோம். ஆனால், 2000க்கு முன்பு முழுக்க முழுக்க திரையரங்கில்தான் பார்க்க வேண்டும். அதனால், முக்கிய சிந்தனைகளை தமிழ்ச் சமூகத்தில் உருவாக்குவதில் பங்காற்றியிருக்கிறது.

திராவிட இயக்கமாக இருந்தாலும் சரி, தேசிய இயக்கமாக இருந்தாலும் சரி, அவர்கள் திரைப்படங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தினார்கள். ஒரு பக்கம் பராசக்தி, மறக்க முடியுமா போன்ற படங்கள். மற்றொரு பக்கம் திருவிளையாடல், திருவருட்செல்வர் போன்ற படங்கள். இந்த இரு வகையான முரண்கள் நமது சமூகத்தில் இருந்த முரண்கள்தான். அவைதான் திரையுலகில் பிரதிபலித்தன.

கேள்வி: ஒரு கட்டம்வரை வெகுஜன சினிமாவை புறக்கணிப்பது அல்லது எதிர்மறையாகச் சித்தரிப்பது தமிழ் இலக்கிய உலகில் பரவலாக இருந்தது. ஆனால், இப்போது பல எழுத்தாளர்கள் வெகுஜன சினிமாவோடு இணைந்து செயல்படுகிறார்கள். இது எப்படி நடந்தது?

பதில்: சினிமாவை இகழ்வது என்பது ஒரு வகையில் அன்று இருந்த திராவிட இயக்க தாக்கத்திற்கு எதிரான, நடுத்தர வர்க்கம் சார்ந்த மனநிலை. 1930,40களில் பல எழுத்தாளர்கள் திரைத்துறையில் இயங்கியிருக்கிறார்கள். மணிக்கொடி எழுத்தாளர்களில் புதுமைப்பித்தன் எழுதியிருக்கிறார். பி.எஸ். ராமைய்யாவின் பல எழுத்துகள் படமாகியிருக்கின்றன. ஆர்.சண்முகசுந்தரம்கூட ஒரு படத்திற்கு வசனம் எழுதியதாகச் சொல்கிறார்கள்.

1950களுக்குப் பிறகுதான் திரைப்படங்களை மோசமாகப் பார்க்கும் பார்வை உருவானது. அது திராவிட இயக்க எதிர்ப்பு மனநிலைதான். 1990களுக்குப் பிறகு மீண்டும் மாற்றம் வந்துவிட்டது. சிறு பத்திரிகை சார்ந்த அந்த மனநிலை உடைந்துவிட்டது.

கேள்வி: நீங்கள் எழுதிய நாவல்களில் உங்கள் மனதுக்கு நெருக்கமான நாவலாக எதைக் கருதுகிறீர்கள்.

பதில்: 2000இல் எழுதி வெளிவந்த கூளமாதாரிதான் என் மனதுக்கு நெருக்கமான நாவல். எனது சிறு வயது வாழ்க்கை, அந்த கிராமம் ஆகியவற்றை அதில் சொல்ல முடிந்தது.

1930களில் இருந்து 80கள் வரை இந்த கொங்குப் பகுதி எப்படி இருந்தது என்பதை அதில் சொல்ல முடிந்தது. மானாவாரி விவசாயம் சார்ந்த அந்த வாழ்க்கைக்குள் இருக்கக்கூடிய சாதி, உறவு முறை, அகந்தை போன்ற பிரச்னைகளை அதில் பேசினேன்.

என் இளம் வயது வாழ்க்கையை, எனது இளம் வயது கிராமத்தை அதில் பதிவு செய்திருக்கிறேன். என் இளம் வயதில் நான் பார்த்த கிராமம், எனது 20 வயதுக்குப் பிறகு மாறிவிட்டது. என் மனதில் சுமந்துகொண்டிருந்த நிலப்பரப்பை என்ன செய்வது எனத் தெரியவில்லை. சில சிறுகதைகளை எழுதிப் பார்த்தேன். எனக்குத் திருப்தியாக இல்லை.

இந்த நாவல் எழுதியபோதுதான் எனக்குள் இருந்த நிலப்பரப்பை எழுத்தில் கொண்டுவந்துவிட்டதாகத் தோன்றியது. அந்த நிலப்பரப்பு உயிருடன் இருப்பதான உணர்வு ஏற்பட்டது.

பெருமாள் முருகன் பேட்டி

கேள்வி: உங்களுடைய பல கதைகளில் வெளிப்படையாகவோ உள்ளடங்கியோ சாதி என்பது ஒரு முக்கியமான அம்சமாக இருக்கிறது. இயல்பாகவே அப்படி அமைகிறதா. இல்லை சாதியின் தாக்கத்தைச் சுட்டிக்காட்ட வேண்டுமென்றே அதைச் செய்கிறீர்களா?

பதில்: 1980களில் மாணவனாக இருந்தபோது மார்க்சிய ஈடுபாடு எனக்கு இருந்தது. 90களில் பெரியார், அம்பேத்கர் பற்றிய பேச்சு பரவலாக எழுந்தது. அவர்களை வாசிக்க ஆரம்பித்தேன். இந்த வாசிப்புகள்தான் சாதியைப் பற்றிய கவனத்தை எனக்குள் ஊட்டியவை.

அதற்குப் பிறகு நான் படித்த இலக்கியங்கள் என் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. குறிப்பாக அதீன் பந்தோபத்யாயவின் நீலகண்ட பறவையைத் தேடிய நாவல். அந்த நாவலை படித்தபோது எனக்கு பெரும் பிரமிப்பு ஏற்பட்டது.

அந்த நாவல் சுதந்திரத்திற்கு முந்தைய ஒரு வங்காள கிராமத்தைச் சொல்லக்கூடியது. அந்த கிராமம் பற்றிய முழுமையான சித்திரத்தை நாம் பார்க்க முடியும். அதற்குக் காரணம் என்னவென்றால் அந்த கிராமத்தில் இருக்கக்கூடிய எல்லா சாதிக்காரர்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுத்து அந்த நாவல் எழுதப்பட்டிருக்கும்.

அதை தமிழ் நாவல்களைப் படிக்கும்போது எனக்கு அந்த உணர்வே ஏற்படவில்லை. ஆர். சண்முகசுந்தரத்தின் நாவலை எடுத்துக்கொண்டால், அது ஒரு தரப்பினரின் வாழ்க்கையை மட்டும்தான் சொல்கிறது. மற்றவர்கள் அந்த கிராமத்தில் வாழ்ந்தார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

சண்முகசுந்தரம் மட்டுமல்ல, வட்டார நாவல்களை எழுதிய பல பேருடைய நாவல்களில் ஒரு சாதிதான் இருக்கும். மற்ற சாதியினர் போகிறபோக்கில் குறிப்பிடப்படுவார்கள். நம் கிராமங்களில் எல்லா சாதியினரும் இருக்கிறார்கள்; அவர்களுக்கு இடையிலான உறவுமுறையைச் சொல்லாமல் எப்படி எழுத முடியும் என்று தோன்றியது. அந்த அடிப்படையில்தான் சாதி குறித்த கவனம் என் எழுத்துகளில் இருக்கிறது.

இப்போதும்கூட எல்லா சாதியினரும் இடம்பெறக்கூடிய முழுமையான படைப்பை நான் முழுமையாகக் கொடுத்துவிட்டதாகச் சொல்ல முடியாது. இனிமேல்தான் அதைச் செய்ய வேண்டும்.

கேள்வி: தமிழ் எழுத்தாளர்கள் சமகால அரசியலை எதிர்கொள்ளும் விதம் குறித்து உங்கள் பார்வையென்ன? பிற மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அரசியல் ரீதியாக எதிர்வினையாற்றுவதற்கும் தமிழ் எழுத்தாளர்களின் எதிர்வினைக்கும் ஒற்றுமையையோ, வேற்றுமையையோ பார்க்கிறீர்களா?

பதில்: 1990க்கு முன்பு பார்த்தால், எழுத்தாளர்களுக்கு அரசியலே கூடாது என்ற எண்ணம் இருந்தது. அப்படி அரசியல் பார்வை இருந்தவர்கள் எழுதியதை பிரசாரம் என்று தள்ளிவிடக்கூடிய நிலை இருந்தது.

1990களுக்குப் பிறகு அது மாறிவிட்டது. தமிழில் தலித், பெண்ணிய எழுத்துகள் வர ஆரம்பித்த பிறகு அரசியல் பார்வை இருந்தால்தான் படைப்பே சிறப்பாக வரும் என்ற நிலை இப்போது வந்துவிட்டது.

அதற்கு முன்பிருந்த நிலையோடு ஒப்பிட்டால், இப்போது அரசியல் பிரச்னைகளுக்கு எதிர்வினையாற்றுவது, பேசுவது ஆகியவை அதிகரித்திருக்கிறது. சமூகத்தில் நடக்கக்கூடிய பிரச்னைகளுக்கு சமூக ஊடகங்களில் உடனடியாக எதிர்வினையாற்றுகிறார்கள். அரசியல் பிரச்னைகளுக்கும் எதிர்வினையாற்றுகிறார்கள்.

தமிழ்ச் சமூகத்தில் ஊடகங்கள் எழுத்தாளர்களின் கருத்துக்கு கூடுதல் மதிப்பு கொடுத்தால், இன்னும் அதிகம் பேச ஆரம்பிப்பார்கள். கேரளாவில் ஒவ்வொரு நிகழ்வுக்கும் எழுத்தாளர்களின் கருத்தைக் கேட்டு, அதைத் தனியாக பிரசுரிப்பார்கள். இங்கே அதுபோல இல்லை.

கேள்வி: 2015இல் மாதொரு பாகன் குறித்து சர்ச்சை எழுந்தபோது, எழுத்தாளர் இறந்துவிட்டதாகக் கூறினீர்கள். இப்போதைய இந்தியச் சூழல் இன்னும் கடுமையாகியிருக்கிறது. நீங்கள் என்ன கருதுகிறீர்கள்...

பதில்: எனக்கு நேர்ந்த தனிப்பட்ட அனுபவங்களை வைத்து எழுத்தாளன் இறந்துவிட்டான் என்று சொன்னேன். ஃப்ரக்ட் சொன்னதைப் போலத்தான். "இருண்ட காலங்களில் பாடல்கள் இருக்குமா? இருக்கும். ஆனால், அது இருண்ட காலங்களைப் பற்றியதாக இருக்கும்" என்றார் அவர். அது போலத்தான் இப்போதும். எழுத்தாளர்கள் வேறு வடிவங்களை முயற்சி செய்கிறார்கள். ஆகவே படைப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஆனால், இந்தக் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வெவ்வேறு வடிவங்களைப் பயன்படுத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக, என்னுடைய பூனாச்சி நாவலை ஒரு வெள்ளாட்டின் கதை என்றுதான் நான் சொல்கிறேன். ஆனால், பலர் அதை ஓர் அரசியல் பிரதியாகத்தான் வாசிக்கிறார்கள். அதுபோலத்தான் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தும் முறை அதிகரித்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

https://www.bbc.com/tamil/articles/cevn9v9plvgo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.